எழுத்தாளர் டொமினி ஜீவாவுக்கு வயது எண்பத்தியொன்பது!

எழுத்தாளர் டொமினிக் ஜீவா!ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்கள் ஜூன் 27 அன்று தனது  எண்பத்தியொன்பதாவது வயதில் காலடியெடுத்து வைக்கின்றார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில்  எழுத்தாளராக, இதழாசிரியராக, பதிப்பாளராக மற்றும் சமூகப்போராளியாக இவரது பன்முகப்பட்ட பங்களிப்பு எப்பொழுதும் நினைவு கூரப்படும். பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. வளமுடன், நலமுடன் நீண்ட காலம் வாழ்ந்திட வாழ்த்துகிறோம்..

இது பற்றி எழுத்தாளர் மேமன்கவி அவர்கள் பின்வரும் தகவலை முகநூலில் பகிர்ந்துள்ளார். அதனை நாம் இங்கு மீள்பதிவு செய்கின்றோம்.

"எதிர்வரும் 27.06.2016 அன்று தனது 89வது பிறந்த தினத்தை கொண்டாடும் டொமினிக் ஜீவா அவர்களை அன்று காலை 9.30 முதல் 11.30 வரை COLOMBO15. MATTAKULIYA CROW ISLAND BEACH PARK. யில் சந்தித்து நண்பர்கள் அவரை வாழ்த்தலாம். தொலைபேசி யில் வாழ்த்த விரும்பும் நண்பர்கள் அல்லது குறுஞ்செய்தி(தமிழிலோ ஆங்கிலம் இரண்டிலும்) அனுப்பி வாழ்த்த விரும்பும் நண்பர்கள் 94778681464 இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ளலாம்." -
மேமன்கவி-

டொமினிக் ஜீவா அவர்களின் நூல்களை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள இணைப்பு: http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE&uselang=en


நவீன ஈழத்தமிழ் நாடகமும், க.பாலேந்திராவும்...

க.பாலேந்திராமுகநூல் பலரை மீண்டும் நட்பு வட்டத்தினுள் கொண்டு வந்து இணைத்து விட்டது. அவ்விதம் அண்மையில் மீண்டும் முகநூலில் அறிமுகமானவர் க.பாலேந்திரா. பாலேந்திராவை இலங்கைத்தமிழ்க் கலை, இலக்கிய உலகில் அறிந்திராதவர்கள் யாருமே இருக்க முடியாது. முகநூலில் இவரது சந்திப்பு சில நினைவுகளை மீண்டும் ஆழ்மனதிலிருந்து எடுத்து நனவிடை தோய வைத்துவிட்டது.

மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்திற்காக இவரது அவைக்காற்று கலைக்குழு மேடையேற்றிய நாடகங்களின் ஞாபகம் நினைவிலெழுந்தது.

அக்காலகட்டத்தில் இவர் மேடையேற்றிய நாடகங்களில் எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களாகப் பின்வருவனவற்றைக்கூறுவேன்.

1. இந்திரா பார்த்தசாரதியின் 'மழை',
2. டென்னசி வில்லியம்ஸின் 'கண்ணாடி வார்ப்புகள்'.
3. யுகதர்மம்

இவற்றில் 'மழை'யில் பாலேந்திராவும், இவரது மனைவி ஆனந்தராணி பாலேந்திராவும் (அன்று இவரது காதலி) நடித்திருந்தார்கள். 'கண்ணாடி வார்ப்புகள்' நாடகத்தில் நிர்மலா நித்தியானந்தன் , ஆனந்தராணி பாலேந்திரா மற்றும் பாலேந்திரா நடித்திருந்தார்கள். 'யுகதர்மம்' நாடகத்தில் என்னுடன் கட்டடக்கலை பயின்று கொண்டிருந்த ரவிச்சந்திரன் (மட்டக்களப்பு) மற்றும் பல மொறட்டுவைப்பல்கலைக்கழக மாணவர்கள் நடித்துக்கொண்டிருந்தார்கள்.

இலங்கைத்தமிழ்க் கலை, இலக்கிய சூழலில் எனக்கு முதலில் நவீன நாடகம் பற்றிய புரிதலை அறிமுகப்படுத்தியவை பாலேந்திராவின் நாடகங்களே.
குறிப்பாக டென்னசி வில்லியம்ஸின் 'கண்ணாடி வார்ப்புகள்' நாடகத்தை மறக்கவே முடியாது. அதில் வரும் பாத்திரங்கள் நான்குதாம். கணவனால் கை விடப்பட்ட, நல்வாழ்வுக்காகச் சிறு வயதிலிருந்தே ஏங்கும் , தன்னிரு குழந்தைகளின் எதிர்காலத்துக்காகக் கவலையுறும் நடுத்தர வயது அமண்டா (Amanda)  என்னும் தாயாக நிர்மலா நித்தியானந்தன், திடமான மனமற்ற, தாழ்வு மனப்பான்மை போன்ற உளவியற்சிக்கல்களினால் வெளியுலகிலிருந்து ஒதுங்கி வாழும் மென்மையான லாரா (Laura) என்னும் பெண்ணாக ஆனந்தராணி பாலேந்திரா, லாராவின் சகோதரனாக  டாம் (Tom)  என்னும் பாத்திரத்தில் பாலேந்திரா அற்புதமாக நடித்திருப்பார்கள். இன்று கூட இவர்கள் மூவரினதும் அந்நாடகத்திலுள்ள நடிப்பு ஞாபகத்திலிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்பாத்திரங்களின் குணவியல்புகளுக்கேற்ப அவர்கள் திறமையாக நடித்திருந்ததால்தான்.

கவிஞனான டாம் குடும்பச்சுமைகளினாலும், தன் கனவுகளுக்கொவ்வாத வேலையிலும் காலம் தள்ளுவதால் ஏற்படும் உணர்வுகளை பாலேந்திரா திறமையாக வெளிப்படுத்தியிருப்பார். அது போல் டாமின் தாயாராக வரும் நிர்மலா நித்தியானந்தனும் டாமின் நண்பன் ஜிம் வீட்டுக்கு வருகை தரும்போது , அவன் மூலமாவது தன் மகளான லாராவுக்கு நல் வாழ்வு கிடைக்காதா என எதிர்பார்ப்புகளுடன் உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருப்பார். மிகவும் மென்மையான, தாழ்வு மனப்பான்மை மிகவும் அதிகமான , வெளியுலகிலிருந்து ஒதுங்கி வாழும் லாரா பாத்திரத்தில் ஆனந்தராணியும் மனதைத்தொடும் வகையில் நடித்திருப்பார்.

உண்மையில் இதுவரை நான் பார்த்த நாடகங்களில் எனக்கு மிகவும் பிடித்த நாடகம் இந்தக் 'கண்ணாடி வார்ப்புகளே'. குறைவான பாத்திரங்களில் அற்புதமாக மானுட உளவியலை வெளிப்படுத்தும் நாடகப்பிரதியொன்றினைத் தந்ததற்காக டென்னஸி வில்லியம்சையும், தமிழுக்கு அதனை அறிமுகப்படுத்தியதற்காக பாலேந்திராவையும் எவ்வளவுதரம் வேண்டுமானாலும் பாராட்டலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.