எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் ...எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களின் 'ழகரம்' சஞ்சிகை தனது ஐந்தாவது இதழுடன் மீண்டும் தனது பயணத்தைப்பல வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பித்திருக்கின்றது. அரங்கு நிறைந்து நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்கள் பலரையும் (அ.யேசுராசா, ரதன், குரு அரவிந்தன், கற்சுறா, ப.ஶ்ரீகாந்தன், தேவகாந்தன், அருண்மொழிவர்மன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அவ்வை, கவிஞர் சேரன், பி.விக்கினேஸ்வரன், பொன்னையா விவேகானந்தன், தமிழ்நதி, ஞானம் இலம்பேட், கடல்புத்திரன் , சிவகுமார் (கட்டடக்கலைஞர்), கலா ஈஸ்வரன் (கட்டடக்கலைஞர்), திலீப்குமார், என்.கே.மகாலிங்கம் என்று பலரையும் காண முடிந்தது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், இறுதியிலும் சில நிமிடங்களே எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் உரையாடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் இயல்பாக, நீண்ட நாள் அறிந்தவர் ஒருவருடன் உரையாடியது போன்ற உணர்வினை அந்தச்சில நிமிடங்கள் தந்தன. நிகழ்வின் பிரதம பேச்சாளராக அவர் விளங்கினார். சஞ்சிகையின் அட்டைப்பட நாயகனாகவும் அவரே விளங்கினார்.

நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆரம்பத்தில்,  நிகழ்வினைத் தலைமை தாங்கி நடத்திய கவிஞரும் பேராசிரியருமான சேரன் வரச் சிறிது தாமதமாகி விட்டதால் அந்த இடத்தை எழுத்தாளர் கங்காதரன் நிரப்பினார். பின்னர் சேரன் வந்து பொறுப்பேற்றி நிகழ்வினைச் சிறப்பாக வழி நடத்தினார். பொன்னையா விவேகானந்தன், 'காலம்' செல்வம், உமை, ஞானம் இலம்பேட், என்று நிகழ்வில் உரையாற்றிய பலரும் சிற்றிதழ்கள் பற்றிய தமது எண்ணங்களைப்பகிர்ந்து கொண்டார்கள்.

நிகழ்வின் பிரதம பேச்சாளரான எழுத்தாளர் அ.யேசுராசா சிற்றிதழ்கள் பற்றிய தனது உரையில் தனது இலக்கியச் செயற்பாடுகள் பற்றி ஆரம்பத்திலிருந்து விரிவாகவே பல ஆரம்பகாலத்துச் சிற்றிதழ்கள் பற்றி எடுத்துரைத்து உரையினை நிகழ்த்தினார். எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எவ்விதம் 'தீபம்' சிற்றிதழினைத் தனித்துத் தொடங்கினார் என்பது பற்றியும், எவ்விதம் இவ்வகையான சிற்றிதழ்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன என்பது பற்றியும், இவற்றை பேரார்வத்துடன் வாசித்த தமது அனுபவங்களையெல்லாம் விபரித்தார்.
'அலை' பற்றிய தனது உரையில் எவ்விதம் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் ஆழத்தைச் சரியாக உணராமல் இருந்தனர் என்றும். தீண்டாமையை எதிர்த்த அவர்களால் இனப்பிரச்சினையைச் சரியாக உணர முடியவில்லையென்றும், அவ்விதம் தமிழர் தேசியப்பிரச்சினையை உயர்த்திப்பிடித்தவர்களை இனவாதிகளாக அவர்கள் உருவகித்தார்கள் என்றும், ஆனால் 'அலை' இந்த விடயத்தில் தெளிவாக இருந்தது என்பது பற்றியும் குறிப்பிட்டார்.

கணையாழி சஞ்சிகையில் சினிமா பற்றி வெளிவந்த கட்டுரைகளைச் சிலாகித்த யேசுராசாவின் 'தீபம்', 'எழுத்து' , 'கணையாழி' என்று பல் வகைச்சிற்றிதழ்கள் பற்றிய நனவிடை தோய்தல் மிகவும் பயனுள்ள நனவிடை தோய்தலாக அமைந்திருந்தது.

அத்துடன் யேசுராசா அவர்கள் தனது உரையில் ஓவியர் அ.மாற்கு பற்றி , அவரது பயன் கருதாப்பங்களிப்பு பற்றி விரிவாகவே நினைவு கூர்ந்தார். 'அலை' சஞ்சிகை ஓவியர் அ.மாற்குவின் ஓவியங்கள் பலவற்றைப்பிரசுரித்தது பற்றியும் அவர் நினைவு கூர்ந்தார். 'ழகரம் 5' சஞ்சிகையின் பின் அட்டைப்படமும் ஓவியர் மாற்குவின் ஓவியத்தைத்தாங்கி வெளிவந்திருப்பது பாராட்டுதற்குரியது. பொதுவாக விளம்பரம் வாங்கி அதனால் பின் அட்டையை நிரப்பியிருப்பார்கள். ஆனால் 'ழகரம்' அந்த வழக்கத்தை மாற்றி, ஓவியர் மாற்குவைக் கெளரவித்திருக்கின்றார்கள். வாழ்த்துகள்; பாராட்டுகள்.

விழாவின் இறுதியில் ஒரு சில கணங்களுக்குப் புகைப்படம் எடுக்க 'போஸ்' கொடுத்தார். ஆனால் பின்புறம் வெளிச்சமாக இருந்ததால் புகைப்படம் சரியாக வெளிவரவில்லை. நிச்சயம் இதனை எடுத்த நண்பர் சிவகுமார் (கட்டடக்கலைஞர்) அவர்களின் தவறல்ல இது. சிறிது 'ஸ்மார்ட்' குறைந்த எனது அலைபேசியினதும், புகைப்படம் எடுத்த இடமும்தாம் காரணங்கள். என்னால் இயன்றவரைச் சீராக்க முயன்று பார்த்தேன். இவ்வளவுக்குத்தான் முடிந்தது.

'ழகரம் 5' சஞ்சிகை மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கின்றது. சரியான அளவில் , சரியான வடிவமைப்பில் (ஓவியர் கருணாவின் கைவண்ணம் சஞ்சிகையின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது) வெளிவந்திருக்கின்றது. எழுத்தாளர் அ.யேசுராசா கனடா வந்திருக்கும் சமயத்தில், அவரைக்கெளரவிக்கும் வகையில் பொருத்தமாக 'ழகரம்' வெளியாகியிருக்கிறது. ஓரிலக்கிய மலரைப்போல் வெளிவந்திருக்கின்றது. அந்த வகையில் இந்த ஓரிதழ் கூட முக்கியமானதொரு நூலைப்போல் விளங்குகின்றது. அதனால் 'ழகரம் 5' தனியாக, ஓரிலக்கிய மலராகக் கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுகிறது. சஞ்சிகைக்குழுவினருக்கும், இதனைச்சாத்தியமாக்கிய எழுத்தாளர் அ.கந்தசாமிக்கும் வாழ்த்துகள்.

'ழகரம்' சஞ்சிகை பற்றிய தகவல்களை வெளியிட்டதற்காக நன்றி கூறுகையில் வழக்கம்போல் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி செலுத்திய கங்காதரன் 'பதிவுகள்' இணைய இதழினை மறந்து விட்டார். இது அவர் தவறல்ல. 'பதிவுகள்' இதழினை அவர் வாசிக்காதது அவர் குற்றமல்லவே.