குருமண்காட்டுப்பாதையும், மன்னார் றோட்டும் சந்திக்கும் இடத்தில் தற்போது காளி கோயிலுள்ளது.அண்மையில் கூகுள் நிலவரைபட வீதித்தோற்றம் மூலம் பார்த்தபொழுதுதான் காலம் எவ்வளவு விரைவாக மாறுதல்களுடன் ஓடி விட்டது என்பது புலப்பட்டது. என் பால்ய காலத்தில் பதிந்து கிடக்கும் குருமண்காட்டுப் பிரதேசத்தின் இன்றைய நிலையைப்பார்த்தபொழுது அடையாளமே காணமுடியாத வகையில் அப்பிரதேசம் மாறிக்கிடப்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. அதற்கு முக்கிய காரணங்களிலொன்றாக இலங்கையில் நடைபெற்ற யுத்தமும், அக்காலகட்டத்தில் வவுனியாப்பகுதி அடைந்திருந்த முக்கியத்துவமும்தாம் என்று நினைக்கின்றேன். வடக்குக்கும் தெற்குக்குமிடையில் அனைவரும் வந்து செல்லக்கூடிய முக்கிய நகராக வவுனியா உருமாறியிருந்ததால், யுத்தம் நடைபெற்ற பகுதிகளிலிருந்தெல்லாம குடிபெயர்ந்த மக்களால் நகர் நிறைந்து விட்டதுடன், மாற்றங்கள் பலவற்றையும் அடைந்து விட்டதெனலாம்.

ஆனால் இன்னும் என் நெஞ்சில் படம் விரித்திருப்பது என் பால்ய காலத்த்துக் குருமண்காடுதான். அந்தக் காலத்துக் குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த எங்கள் வாழ்வு பற்றி, அங்கு வாழ்ந்த மனிதர்களைப்பற்றி நினைவில் பதிந்து கிடப்பதையெல்லாம் எழுத்தில் பதிவு செய்தாலென்ன என்றொரு எண்ணம் அண்மைக்காலமாகவே அடிக்கடி தோன்றி மறைகிறது.

என்னைப்பொறுத்தவரையில் குருமண்காடு என்பது என் பால்ய பருவத்தின் சொர்க்க பூமி. ஒரு காலகட்டத்தினை வெளிப்படுத்தும் குறியீடு. மறக்க முடியாத அந்த அனுபவங்களுக்குச் சொந்தமான அந்தப்பிரதேசம் இன்று முற்றாக மாறி விட்டது. நாம் வாழ்ந்ததை வெளிப்படுத்தும் எந்தவித அடையாளங்களுமேயற்ற புதியதொரு நகராக, குடியிருப்புகளுடன், வர்த்தக நிலையங்களுடன், வீதிகளுடன் புதிய பிறப்பெடுத்து நிற்கிறது.

இந்நிலையில் என் மனதில் அழியாத சித்திரமாக விரிந்து கிடக்கும் குருமண்காடு பற்றிய நினைவுகளைப் பதிவு செய்தல் அவசியமென்று நினைக்கின்றேன். இந்தப்பகுதி பற்றியதொரு ஆவணமாகவும் இந்த நனவிடை தோய்தல் விளங்குமென்பதால் இத்தகைய பதிவுகள் அவசியமேயென்றும் தோன்றுகிறது.

குருமண்காட்டு அனுபவங்களை மையமாக வைத்து ஏற்கனவே ஒரு நாவல் எழுதியிருக்கின்றேன். அது 'வன்னி மண்'. 'தாயகம் (கனடா)' சஞ்சிகையில் தொடராக வெளியாகி, தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் மூலம் வெளிவந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்று.

நாங்கள் இருந்த காலகட்டத்தில் குருமண் காடு ஒற்றையடிப்பாதையுடன் கூடிய காட்டுப்பிரதேசம்.

நாங்கள் அப்பகுதிக்குக் குடி பெயர்ந்தபோது மொத்தம் இருந்த மானிடக் குடியிருப்புகள் ஒன்பதுதான்.
மன்னார் றோட்டிலிருந்து காட்டை ஊடறுத்துக்கொண்டு செல்லும் பாதையில் வலது புறமாக தொடக்கத்தில் இரு வீடுகள் பின்னர் காடு, சிறிது தூரம் நடந்து சென்றால் பின்னர் மூன்று வீடுகள். இது போல் இடது புறமாக மன்னார் றோட்டுடன் சந்திக்குமிடத்தில் , வட மேற்கு மூலையில் முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான மயானம், பின்னர் சுடலையை அண்டிய சிறு குடிசை, பின்னர் இந்திரா நெசவு சாலையை உள்ளடக்கிய பெரியதொரு பண்ணை. அவ்வளவுதான்.

இந்த நெசவு சாலையும், அதனுடன் கூடிய பண்ணையும் மலையகத்தைச்சேர்ந்த சத்தியவாசகம் என்பவருக்குச் சொந்தமாகவிருந்தது. அவரைத் 'தொரை' என்று அழைப்பார்கள். அவ்வப்போது அங்கு விஜயம் செய்யும் அவர், அப்பகுதியில் காலாற நடந்து செல்வது வழக்கம். அவ்விதமான சமயங்களில் வாசலில் நின்று அப்பாவுடன் அளவளாவிச்செல்வது ஞாபகத்திலுள்ளது.

அந்த நெசவு சாலையுள்ள பண்ணையுள் ஆடம்பரமான பங்களாவொன்றுமிருந்தது. அங்குதான் சத்தியவாசகம் அவர்களுக்குச் சொந்தமான டேவிட் என்ற இளைஞர் தங்கியிருந்து அப்பண்ணையை மேற்பார்வை செய்து வந்தார். நாங்கள் வவுனியாவில் இருந்த காலத்தில் குடும்ப நண்பரைப்போல் பழகி வந்தார். எம்ஜிஆர் என்றால் உயிரையே விடுமளவுக்குத்தீவிர எம்ஜிஆர் இரசிகர்; பக்தர். எம்ஜிஆரின் அன்பே வா 'கட் அவுட்' ஒன்றை உருவாக்கி, அந்தக் கட் அவுட்டின் தோளில் கைகளைப்போட்டுப்புகைப்படம் எடுக்குமளவுக்குப் பக்தர் இவர்.

அந்தப்பண்ணையில் மேலுமொரு வீடுமிருந்தது. அதிலிருந்து கொண்டு, தோட்ட வேலைகளைச்செய்து அப்பண்ணையைப் பராமரித்துக்கொண்டு, மலையகத்தைச்சேர்ந்த குடும்பமொன்றுமிருந்தது.

இந்தப்பண்ணையிலுள்ள கூழாம்பழ மரம் எங்கள் பால்ய காலத்து வாழ்வின் முக்கியமானோர் அங்கம். அங்குதான் பால்யகாலத்து நண்பர்களுடன் கூழாம்பழங்கள் பறித்து , உண்டு மகிழ்வது. மேலும் இன்னுமொரு முக்கியமான விடயம்.. நான் முதலில் சைக்கிள் ஓட்டப் பழகியது டேவிட்டின் சைக்கிள் மூலம்தான்.


குருமண்காட்டு ஒற்றையடிப்பாதையின் இன்றைய தோற்றம்...
இந்தக் குருமண்காட்டுப் பகுதியில் என் வாழ்விலோர் அங்கமாகப்பதிந்து விட்ட இன்னுமொரு பகுதியுமிருக்கிறது. அது 'பட்டாணிச்சுப் புளியங்குளம்'. குருமண்காட்டு வீதியும், மன்னார் றோட்டும் அமைந்திருக்கும் பகுதியில், தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்த குளம் அது. இந்தக் குளம் இல்லாமல் என் குருமண்காட்டு அனுபவங்களை விபரிக்க முடியாது. இந்தக் குளமும், காடு மண்டிக் கிடந்த குருமண்காட்டுப் பிரதேசமும், அங்கு வாழ்ந்த மனிதர்களும், காலப்போக்கில் குருமண்காட்டுப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களும், அப்பகுதி அரவணைத்துக்கொண்ட புதிய மனிதர்களும், இவற்றையெல்லாம் நாங்கள் அங்கு வசித்த காலகட்டம் வரையில் விபரிப்பதே, பதிவு செய்வதே இப்பதிவின் நோக்கம்.

நன்றி: புகைப்பட உதவி - மகேஸ்வரன். இங்குள்ள புகைப்படங்கள் குருமண்காட்டுப்பகுதியின் இன்றைய நிலையினைப்பிரதிபலிப்பவை. குருமண்காடு இன்று பெயரில் மட்டுமே காடு என்னும் சொல்லினை வைத்துள்ளதொரு சிறு நகர். அன்றைய அடையாளங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்ட புதியதொரு நகர். இங்குள்ள கோயில் உள்ள பகுதியில் முன்பு முஸ்லீம் மக்களுக்குச்சொந்தமான மயானமிருந்தது.

[ 'குருமண்காட்டு நினைவுகள்' மேலும் தொடரும்]