தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி1. தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி,,

சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் வெளியிட்டுள்ள தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலின் இலங்கைப்பதிப்பின் பின் அட்டையில் பின்வருமாறுள்ளது"

"உயிருடனிருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களோடு இணைந்தே வெளியேறத்தயாராகியிருந்தார்கள். ஆபத்துக்காலத்தில் கோழி தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை இழுத்துக்கொள்வதுபோல் தமிழ் மக்கள் தம்முடனே போராளிகளையும் பாசத்துடன் அரவணைத்து உள்வாங்கிக்கொண்டார்கள்.  யாரெண்ரே தெரியாமல் காயமடைந்து அனாதரவாகக் கிடந்த பல போராளிகளையும் மக்களில் சிலர் தூக்கிச் சுமந்துகொண்டு வெளியேறத்தயாரானார்கள்."

இதற்குக் கீழே தமிழினி பற்றிய சிறு குறிப்பொன்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மேற்படி நூலின் பின் அட்டையில் வேறு யாரோ எழுதியதைத் தமிழினி எழுதியுள்ளதாகக் குறிப்பி்டப்பட்டுள்ளதை முகநூலில் பலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அது கண்டிக்கத்தக்கது. காலச்சுவடு பதிப்பகத்தார் இதற்கான பதிலை நிச்சயம் கூறவே வேண்டும்.

தமிழினியில் சுயசரிதையில் நான் வாசித்த வரையில் ஈழத்தமிழர் போராட்டத்தைக்கொச்சைப்படுத்தியதாக எதனையும் நான் காணவில்லை. அவர் தன் அனுபவங்களை , போராட்ட அனுபவங்களை, விடுதலைப்புலிகளின் பிரமிக்கத்தக்க போர் வெற்றிகளை எல்லாம் விபரிக்கின்றார். இறுதியில் இவ்விதமான வெற்றிகளுடன் கூடிய போராட்டமானது , முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது அவருக்கு அதிர்ச்சியைத்தருகிறது. யுத்தத்தின் பின்னரான, மக்களின் முன்னாள் போராளிகள் மீதான புறக்கணிப்பு குறிப்பாகப் பெண் போராளிகள் மீதான புறக்கணிப்பு இதுவரை காலமும் யாருக்காகப் போராடினேன் என்ற கேள்வியை அவரிடத்தில் எழுப்புகிறது. அதன் பின்னரான அவரது அனுபவம் அவரை இதுவரை காலமும் நடந்த போராட்டம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. அச்சிந்தனையை அவர் தன் சுயசரிதையில் வெளிப்படுத்துகிறார்.

அவ்விதம் வெளிப்படுத்தும்போது தலைமையின் பலமான அம்சங்களை ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் விபரித்த அவர் , முழு அமைப்புமே தலைமையை மையமாக வைத்துக்கட்டியெழுப்பப்பட்டிருந்ததால், தலைமையுடன் முடிவுடன் ஆயுதங்கள் மெளனிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான போராளிகளும் கை விடப்பட்ட நிலையும் உருவானபோது அந்நிலை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றார்.

என்னைப்பொறுத்தவரையில் இவ்விதமான கேள்விகள், சுய பரிசோதனைகள் ஆரோக்கியமானவை. ஏன் இவ்வளவு வெற்றிகளுடன் விளங்கிய அமைப்பானது, முற்று முழுதாக இயங்க முடியாதவாறு, ஆயுதங்கள் மெளனிக்கப்பட வேண்டிய நிலையுடன் முடிவுக்கு வரவேண்டி வந்தது என்ற கேள்விகளுக்கான நியாயமான சுய ஆய்வே தமிழினியின் சுயசரிதை.

இன்று ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அவரது அமைப்பினரால் தலைமையின் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம்: தலைமையை மையமாக வைத்துக் கட்டமைக்கப்பட்ட அவரது அமைப்பின் நிலைதான். தலைமையை மட்டும் மையமாக வைத்துக் கட்டப்படாமல் அந்த அமைப்பு விளங்கியிருக்குமானால், இப்பொழுதும் அந்த அமைப்பு அடுத்தக் கட்டத் தலைவர்களுடன் இலங்கையில் இயங்கிக்கொண்டிருக்கும்.

இந்த நிலையில் தமிழினியின் சுயசரிதை ஆரோக்கியமானது. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட வரலாற்றில், முக்கிய அமைப்பாக இறுதி வரை விளங்கிய அமைப்பொன்று இறுதியில் ஏன் நந்திக்கடலில் முடிந்து போனது? ஏன் அவ்வமைப்பின் ஆயிரக்கணக்கான போராளிகள் இவ்விதம் அனாதரவாகக் கைவிடப்பட்டு சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்? ஏன் மக்களுக்காகப் போராடிய போராளிகளை குறிப்பாக பெண் போராளிகளை சமூகம் யுத்தத்துக்குப் பின்னர் புறக்கணித்தது? இவ்விதமான கேள்விகளுக்கான சுய தேடலே தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்'.

இதிலிருந்து பாடம் படிப்பதற்குப் பதில் இந்த நூல் தலைமையினைக் கேள்விக்குள்ளாக்குக்கின்றது, தளபதிகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றது என்றெல்லாம் கண்டனம் தெரிவிப்பது ஆரோக்கியமானதல்ல. உண்மையைக் காண விரும்பாத தீக்கோழிகள் தம் தலைகளை மண்ணுக்குள் புதைப்பதைப் போன்றது.

இந்ந நூல் போராட்டத்தை எந்த வகையிலும் கொச்சைப்படுத்தவில்லை. உலகின் பல பாகங்களிலும் நடைபெற்ற மார்க்சிய புரட்சிகளையெல்லாம் கொச்சைப்படுத்துவதாகக்கூட ஒருவர் பதிவிட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. இந்த நூலில் அவ்விதம் எதுவுமே இல்லை. மேலும் வியட்நாம் மக்களின் விடுதலைப்போராட்டம் வெற்றியில் முடிந்ததொன்று. ஆனால் ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதொன்று. மாறாக ஈழத்தமிழர்களின் , தமிழினி சார்ந்த அமைப்பு வெற்றிபெற்றிருக்குமாயின் இது போன்ற நூல்களும் எழப்போவதில்லை; இது போன்ற கண்டனங்களும் எழப்போவதில்லை. ஆனால் அவ்விதம் நடைபெறாததால், போராட்டத்துக்காகத் தன் முழு வாழ்வினையே அளித்த ஒருவர், அதுவும் ஒரு பெண், தன்னிடத்தில் எழுந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்?

அவரின் கேள்விகளிலுள்ள நியாயங்கள் உணர்ந்து , அவற்றுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பதற்குப் பதில், தொடர்ந்தும் மறைந்து போன ஒருவர் இன்னும் வருவார் , எல்லாருடைய விடிவினையும் பெற்றுத்தருவார் என்று  கற்பனையில் மிதப்பதற்குப் பதில், நடந்தவற்றிலிருந்து பாடங்களைப்படித்து , சிந்திப்பதே , தமிழர்தம் உரிமைகளுக்காய்க் குரல் கொடுப்பதே ஆரோக்கியமானது.

 



வாசிப்பும், யோசிப்பும் 162 : தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி,,,; தமிழினி சாகாள்!; கார்ல் மார்கஸ் - 'சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைச்சரியாக உய்த்துணர்ந்தவன்'!2. தமிழினி சாகாள்!

அகரமுதல்வன் என்பவர் தமிழினியை மையமாக வைத்து 'சாகாள்' என்றொரு கதையினை எழுதியிருக்கின்றார். தமிழினியின் சுயசரிதை; வெளிவந்திருக்கும் இச்சமயத்தில் இந்தக் கதையும் வெளியாகியுள்ளது தற்செயலானதாகத் தெரியவில்லை. தமிழினி தன் கடந்த கால போராட்ட வாழ்வினைத் தனது சுயசரிதையில் விமர்சித்திருப்பதால், அவரது பெயருக்கு , அவருக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் எழுதப்பட்டுள்ள சிறுகதைபோல் தெரிகிறது.

தமிழினியின் சொந்தப்பெயரான சிவகாமி என்பதைப்பாவித்து, சிவகாமியின் கதையாக இவ்விதம் இவர் இச்சிறுகதையினை எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.

இப்புனைகதையில் சிறைப்பிடிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளின் நிலை , அவர்கள் எவ்விதம் ஶ்ரீலங்காப் படையினரால், குறிப்பாகக் கோத்தபாயா சார்புப்பிரிவினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பது அருகிலிருந்து பார்த்ததுபோல் விபரிக்கப் பட்டிருக்கின்றது. உண்மையில் தமிழினியின் இயற்பெயரைப் பாவித்ததன் மூலம் , அபுனைவு போல் எழுதப்பட்டுள்ள புனைவுதான் இந்தச் 'சாகாள்'. தமிழினியின் பெயரைப்பாவிக்காமல் , படையினரின் முன்னாள் பெண் போராளிகள் மீதான பாலியல் வன்முறைகளை விபரிப்பதாகக் கதை இருந்திருக்கும் பட்சத்தில் , கூறும் பொருளில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

ஆனால், தமிழினியின் பெயரைப்பாவித்ததன் மூலம், இப்புனைவின் சிறப்பினைக் குறைத்து விட்டிருக்கின்றார் இதனை எழுதியவர்.

இவ்விதமாக அண்மையில் இறந்த ஒருவரின் பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் இப்புனைவினைப்படைத்துள்ள அகரமுதல்வன் ஏன் தமிழினி உயிருடன் இருந்தபொழுது இதனை எழுதவில்லை? அவ்விதம் எழுதியிருந்தால் தமிழினி நிச்சயம் இவர்கள் மேல் மான நட்ட வழக்கினைத்தொடுத்திருப்பார். இப்பொழுதுதான் அவர் உயிருடனில்லையே. அவரைப்பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக எழுதலாமோ அவ்விதமே கீழ்த்தரமாக எழுதியிருக்கின்றார்.

இவ்விதமான புனைவுகளை எழுதுபவர்கள், நூறு வீத ஆதாரங்களை மையமாக வைத்தே எழுத வேண்டும். ஊகங்களின் அடிப்படையில், அல்லது கேள்வி ஞானத்தின் அடிப்படையில் எழுதுபவர்களாக இருந்தால், உண்மையில் வாழ்ந்த ஒருவரின் பெயரினைப்பாவித்து எழுதியிருக்கக் கூடாது. இவ்விதம் எழுதுவது எழுத்துச்சுதந்திரம் கூறுபவர்கள், அச்சுதந்திரத்தை மற்றவர் உரிமையினைப்பாதிக்கும் வகையில் பயன்படுத்துவதைத்தவிர்க்க வேண்டும்.

இவ்விதமான எழுத்துகள் ஒருபோதும் தமிழினியின் பெயருக்குக் களங்கத்தினை ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் நாம் அனைவருமே அவரை அவரது படைப்புகளினூடு, அவரது வாழ்வினூடு விரிவாகவே அறிந்திருக்கின்றோம்

இந்தக்கதையின் முக்கியமான அம்சமொன்று நூலின் தலைப்பு. 'சாகாள்'. நிச்சயம் தமிழினியும் தமிழர்தம் மனதில் என்றுமே சாகாள்


வாசிப்பும், யோசிப்பும் 162 : தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி,,,; தமிழினி சாகாள்!; கார்ல் மார்கஸ் - 'சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைச்சரியாக உய்த்துணர்ந்தவன்'!2. மேலும் சில வார்த்தைகள்...

அண்மையில் வெளியான தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்.. ' குறித்து வாதப்பிரதிவாதங்கள் நிகழந்தபடியுள்ளன. என்னைப்பொறுத்தவரையில்
ஒவ்வொருவருக்கும் தமது கருத்துகளைக் கூறும் உரிமை உண்டு. அது மனிதர்களின் அடிப்படை உரிமை. தமிழினி அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்தவர். யுத்தத்தின் பின்னர் பல்வகையான துன்பங்களை அனுபவித்தவர். அவர் தன் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவற்றை அவர் எவ்விதம் பதிவு செய்திருக்கின்றாரோ அவ்விதம் பதிவு செய்வது அவரது உரிமை. அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அமைப்புகளே பல தடவைகள் எடுத்த முடிவுகள் ஈழத்தமிழரின் போராட்டத்தையே குழிதோண்டிப்புதைக்கக்காரணமாக இருந்தன என்பதையும் மறக்க முடியாது. உதாரணமாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு முக்கிய காரணம் தமிழர்களின் பகிஷ்கரிப்புத்தான். ஆனால் அதுவே இறுதியில் போராட்டத்தை மெளனிக்கச் செய்து விடும் வகையில் விசுவரூபம் எடுத்து விட்டதென்பதும் உண்மைதான். ஆனால் இன்று ஆயுதங்களே மெளனிக்கப்பட்ட நிலையில், தமிழினியின் கருத்துகள் போராட்டத்துக்கு எதிரானதாக அமையுமென்று கருதுவது நகைப்புக்கிடமானது. உண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் தவறுகளை அறிந்து கொள்ள, எதிர்காலத்தில் இவை போன்ற தவறுகள் ஏற்படாமலிருக்க , இவ்விதமான சுய ஆய்வுகள் முக்கியமானவை. நடந்தவற்றிலிருந்து பாடங்கள் படிக்காமல் ஒருபோதுமே முன்னோக்கிச் செல்ல முடியாது. அந்த வகையில் தமிழினியின் கவிதை நூலும் , சுயசரிதையும் முக்கியமான படைப்புகள்.

எம் சமூகத்துக்கு உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னுமில்லையென்றுதான் கூற வேண்டும். இவ்விதமாக விமர்சிக்க வேண்டிய நேரத்தில் விமர்சிக்காமல் விட்டதனால்தான் , ஈழத்தமிழர்களின் போராட்டம் இன்று இந்த நிலையை வந்தடைந்திருக்கின்றது.


வாசிப்பும், யோசிப்பும் 162 : தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி,,,; தமிழினி சாகாள்!; கார்ல் மார்கஸ் - 'சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைச்சரியாக உய்த்துணர்ந்தவன்'!4. கார்ல் மார்கஸ்: 'சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைச்சரியாக உய்த்துணர்ந்தவன்'!

மார்ச் 14., கார்ல் மார்க்ஸுன் நினைவு தினம். 'மூலதனம்' என்னும் பொருளியல் ஆய்வு நூலினை எழுதி, உலக அரங்கின் சமூக, அரசியற் சூழலினையே மாற்றியமைத்தவரின் நினைவு தினம். உற்பத்தி சாதனங்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்குமிடையிலான உறவின் இயல்புக்கேற்ப பரிணாமமடைந்து வந்த சமுதாய அமைப்பின் வளர்ச்சியினை , வரலாற்றினூடு ஆய்வு செய்ததன் மூலம், பல்வேறு பிரிவுகளாகப் (இனம், மதம், மொழி, சாதி போன்ற) பிளவுண்டிருக்கும் மானுடர் சமுதாய அமைப்பு , உற்பத்தி சாதனங்களின் பரிணாம வளர்ச்சி காரணமாக, இருபெரும் வர்க்கங்களாகச்சுருங்கியதை (முதலாளி /  தொழிலாளி) அவதானித்து , இவ்விதமாக வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் சமுதாய அமைப்பில் ஏற்கனவே மானுடரைப் பிரித்து வைத்திருந்த ஏனைய பிரிவுகளெல்லாம் முக்கியமிழந்து, தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் மானுடரை ஒற்றுமைப்படுத்துமென்றும், சிறு வர்க்கமான முதலாளித்துவ வர்க்கம், பெரும்பான்மை வர்க்கமான தொழிலாள வர்க்கத்தினை ஆட்சி செய்வதை, முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகம் என்று கூறுவது வெட்கக்கேடு என்றும், பெரும்பான்மை வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் கையில் ஆட்சி இருப்பதே அதனிலும் மேலான ஜனநாயகமென்றும், அதுவே நீதியானதென்றும், இவ்விதமாகத் தொழிலாளர் கைகளில் அதிகாரம் கிடைப்பதென்பது புரட்சியொன்றின் மூலமே சாத்தியமென்றும், அவ்விதம் சாத்தியப்படும் புரட்சிகர அரசினைத்தக்க வைக்க இடைக்காலச் சர்வாதிகாரமான பாட்டாளிவர்க்கச்சர்வாதிகாரம் அவசியமென்றும் தனது மூலதனம் பற்றிய ஆய்வின் மூலம் எதிர்வு கூறியவர். எதிர்காலத்தில் அரசு அற்ற கம்யூனிஸ அமைப்பொன்று உருவாவதற்கு இவ்விதமான இடைக்காலச்சர்வாதிகாரம் அவசியமென்றும் தனது ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தவர். நவீன விஞ்ஞானத்திலுள்ள விதிகளைப்போலவே , வரலாற்றை நடத்திச்செல்லும் விதிகள் இருக்கின்றன என்பதைத் தனது ஆய்வின் மூலம் கண்டறிந்தவர். வரலாற்றுப்பொருள்முதல்வாதம் என்னும் சித்தாந்தத்தின் அடிப்படையே மார்க்ஸின் மேற்படி மூலதனம் பற்றிய ஆய்வுகள்தாம்..

மார்க்ஸ் என்ற தனி மனிதர் ஒருவரின் சாதனை 'மூலதனம்'. அந்தச்சாதனைக்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் ஒன்றா? இரண்டா? தன் கல்வியைக்கொண்டு மிகவும் இலகுவாக அவரால் செல்வச்செழிப்பில் மிதந்து கொண்டிருக்க முடியும். ஆனால் தன் ஆய்வுக்காக தன் வாழ்வை, தன் குடும்ப சுகத்தையெல்லாம் அர்ப்பணித்து உழைத்த அந்த மேதையின் உழைப்பின் வெற்றியான 'மூலதன'மே இன்று உழைப்பாளரின் வேதம்.

மார்க்ஸை நினைவு கூரும் இத்தருணத்தில் கூடவே அவரது காதல் மனைவி ஜென்னி மார்க்சையும், நண்பர் எங்கெல்ஸையும் நினைவு கூர்வோம். மார்க்சின் மூலதனம் பற்றிய ஆய்வுகளுக்காக, அவருடன் கூட இணைந்து மிகவும் உறுதுணையாக விளங்கியவர்கள் அவர்கள்.

மார்க்ஸ் பற்றி பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய சிறு கவிதையான 'மார்க்ஸ்' என்னும் கவிதையினை இத்தருணத்தில் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். இக்கவிதை எனது 'எழுக அதிமானுடா!' கவிதைத்தொகுப்பிலுள்ள கவிதைகளிலொன்று.

மார்க்ஸ்!
- வ.ந.கிரிதரன் -


சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைச்
சரியாக உய்த்துணர்ந்தவன்.
ஏழ்மை இவன் எண்ணங்களைச்
சிதைத்திட என்றுமே இவன்
அனுமதித்ததில்லை.
முயற்சி , ஊக்கத்தை மூலதனமாக்கி
மூலதனம் படைத்தவன்.
நேற்றைய மாற்றங்களை எதிர்வு கூறிய
இவன் ஏன்
இன்றைய மாற்றங்களைக்கூட
எச்சரிக்கை செய்தவன் தான்.
உண்மைகளை மண்ணுலகின்
நீண்ட பாதையிலே
மக்கள் மீண்டுமொருமு
றை
அறிந்து கொள்வர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.