1.  'ராமச்சந்திரன்' ஆட்சி செய்த மண்ணில் 'ரவிச்சந்திரன்கள்' மடியும் நிலை இனியும் வேண்டாம்.

ரவிச்சந்திரன் என்ற மனிதர் , தன்னுடன் வாழும் மக்களின் உரிமைகளைச் சுட்டிக்காட்டி, அவலங்களைச்சுட்டிக்காட்டிபோராளியாகத்தன்னை மாய்த்துக்கொண்டிருக்கின்றார். அவரது இந்தப்போராட்டம் , இந்த முடிவு தமிழகத்தில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இனியாவது விடிவொன்றினைக்கொண்டு வரட்டும்.

அண்மையில் கனடா அரசு 25,000 சிரிய அகதிகளைப் பெரும் ஆரவாரத்துடன் கை நீட்டி, அரவணைத்து அழைத்தபோது எனக்குத் தமிழகத்தில் அகதிகள் முகாம் என்ற பெயரில் நடாத்தப்படும் தடுப்பு முகாம்களில் வாடும் எம் நாட்டுத்தமிழ் அகதிகளின் நிலைதான் ஞாபகத்துக்கு வந்தது. ஈழத்தில் நிலவிய கொடிய அடக்குமுறைகள் காரணமாகத் தாய்த்தமிழகம் என்ற பெரும் நம்பிக்கையுடன் , அபயம் நாடித்தமிழகம் வந்த அப்பாவி அகதிகள் அவர்கள். அவர்களை இருகரம் நீட்டி அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப்பதிலாகத் தடுப்பு முகாம்கள் என்ற ஒருவகைச்சிறைக்கூடங்களில் தடுத்து, உளரீதியாகத்துன்பங்களை அனுபவிக்க வைத்து, அதிகாரிகளின், காவல்துறை அதிகாரிகளின் அடக்கு முறைகளுக்குள் பல்வகைத்துன்பங்களை அனுபவிக்க வைத்து ஏன் தமிழக அரசு இவ்விதம் அந்த அகதிகளுடன் வாழ்வுடன் விளையாடுகிறது?

தமிழக அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் , நடிகர்கள் போன்ற பலர் இவர்களைப்பற்றி எதுவுமே பெரிதாகக் கதைப்பதேயில்லை. இவர்களுக்காகக் குரல் கொடுப்பதேயில்லை. இவ்வளவுக்கும் இவர்களது நிலை பற்றி மானுட உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சிலர் அவ்வப்போது குரல் எழுப்பித்தான் வருகின்றனர். , ஊடகங்கள் சில இவர்களது நிலை பற்றிக் குரல் கொடுத்துத்தான் வருகின்றன. இருந்தும் ஏன் எல்லாரும் இவர்களின் நிலையினை மாற்றி, பூரண சுதந்திரம் மிக்கவர்களாக இவர்கள் வாழ அனுமதிக்கவில்லை?

அகதி முகாமுக்குத் தாமதமாக வந்த ரவிச்சந்திரனை அதுவும் மிகவும் நியாயமான காரணத்துக்காகத் தாமதமாக வந்தவரைக் கண்டித்து, அவமானப்படுத்தி, அகதி முகாமுக்குள் ஏற்க முடியாது என்று மறுத்த அதிகாரி ராஜேந்திரன் , ரவிச்சந்திரனை 'வாழ்க்கையின் ஓரத்துக்கே' ஓடும்படி விரட்டியிருக்கின்றார். அவர் மீது பொலிஸார் வழக்குத்தொடுத்திருப்பதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைப்போன்ற அதிகாரிகள் மிகவும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். தன் வாழ்வையே மாய்த்துக்கொண்ட ரவிச்சந்திரனின் குடும்பத்துக்குப் போதிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும். எந்தக் காரணத்துக்காக ரவிச்சந்திரனுக்கு இந்த நிலை ஏற்பட்டதோ? அந்தக்காரணங்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும். அகதிகள் பூரண சுதந்திரம் மிக்கவர்களாக வாழ்வதற்கு உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். அதிகாரிகளின் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமற்று, சாதாரணை குடிமக்களைப்போல் தாம் விரும்பிய இடங்களில் அல்லது அகதி முகாம்களில் சுதந்திரமாக வாழ்வுதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

'கல்யாணி' என்ற கற்பனைப்பாத்திரம் வாழ்வின் சொல்லொணாத்துயரங்களுக்கு உள்ளாகியபோது திரையில் கலைஞர் 'ஓடினாள். ஓடினாள். வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்' என்று கண்ணீர் விட்டார். அவர்தம் ஆட்சியிலும் அவரால் ஈழத்தமிழ் அகதிகளை வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓட வைக்க முடிந்ததே தவிர நியாயமான தீர்வு எதனையும் வழங்க முடியவில்லை. கருணையின் உருவாக்த்தன்னைக் காட்டிக்கொள்ளும் 'அம்மா'வின் ஆட்சி நிலவும் தமிழகத்தில் அவரது கடைக்கண் பார்வை, தாயன்பு இன்னும் ஈழத்தமிழ் அகதிகள் பக்கம் சாயவில்லை.

இந்நிலையில் இன்னும் எத்தனை நாள்கள்தாம் ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்து மண்ணில்  அடிமைகளாக, சிறைக்கைதிகளாக வாழ்வது? இனியும் ரவிச்சந்திரன்கள் உருவாக வேண்டாம். தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, ஈழத்தமிழ் அகதிகள் வாழும் அகதி முகாம்களைப்பூரண சுதந்திரம் மிக்கவையாக மாற்ற வேண்டும். அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோரின் தலையீட்டிலிருந்து அவர்களை மீட்டுச் சம உரிமை மிக்க மானுடர்களாக வாழ அனுமதிக்க வேண்டும்.

'தாய்த் தமிழகம்' என்ற நம்பிக்கையுடன் அபயம் நாடி வந்தவர்கள் அவர்கள். ஈழத்தமிழரை அரசியலில் ஊறுகாய்களாகப் பாவிக்கும் தமிழகத்து அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களும் அவர்கள் நிலையினை உணர்ந்து, அவர்கள் சுதந்திரம் மிக்கவர்களாக வாழ்வதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும்.

ரவிச்சந்திரன் என்ற மனிதர் , தன்னுடன் வாழும் மக்களின் உரிமைகளைச் சுட்டிக்காட்டி, அவலங்களைச்சுட்டிக்காட்டிபோராளியாகத்தன்னை மாய்த்துக்கொண்டிருக்கின்றார். அவரது இந்தப்போராட்டம் , இந்த முடிவு தமிழகத்தில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இனியாவது விடிவொன்றினைக்கொண்டு வரட்டும்.

'ராமச்சந்திரன்' ஆட்சி செய்த மண்ணில் 'ரவிச்சந்திரன்கள்' மடியும் நிலை இனியும் வேண்டாம்.


2. எழுத்தாளர் 'சீர்காழி' தாஜ்.......

சீர்காழி தாஜ்

சீர்காழியைச்சேர்ந்த நண்பர் தாஜ் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினை நடாத்தி வருகின்றார்.  இவரை எனக்குப் பல வருடங்களாகத்தெரியும். இவருடனான எனது தொடர்பு முதன் முதலில் ஏற்பட்டதற்குக் காரணம் தமிழகத்தில் சிநேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான 'அமெரிக்கா' மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்கள்தாம். அவ்விரு நூல்களையும் தமிழகத்து நூல் நிலையக்கிளைகளிலிருந்து இரவல் வாங்கி வாசித்து, அவை பற்றிய தனது கருத்துகளை நீண்ட இரு கடிதங்களாக அனுப்பி வைத்திருந்ததுடன் இவருடனான எனது தொடர்பு ஆரம்பமாகியது. அக்கடிதங்கள் இரண்டினையும் இன்னும் ஞாபகத்துக்காகப் பாதுகாத்து வருகின்றேன்.

நண்பர் சீர்காழி தாஜ் எழுத்தாளரும் கூட. கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள், தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன.

தாஜ் அவர்கள் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வருகின்றார். அதற்கான இணையத்தள முகவரியினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இவ்வலைப்பதிவில் தாஜ் அவர்களின் புனைவுகளை, அபுனைவுகளை மற்றும் கவிதைகளை, இலக்கியக்கட்டுரைகளை எனப்பல்வகை விடயங்களைப்பற்றிய படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்.

http://tamilpukkal.blogspot.ca/