'மூத்த' எழுத்தாளர்களும், முகநூலும்!

எஸ்.எல்.எம்.ஹனீபாசமூக ஊடகங்களை அண்மைக்காலமாகப்பல மூத்த எழுத்தாளர்கள் பலர் பாவித்து வருவது ஆரோக்கியமானதொரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். இங்கு நான் பாவித்துள்ள மூத்த எழுத்தாளர்கள் என்னும் பதம் அமரர் எஸ்.பொ. அவர்களுக்குப் பிடிக்காததொரு பதம். அவருடன் ஒருமுறை ஆறுதலாக உரையாடிக்கொண்டிருந்தபொழுது 'அதென்ன மூத்த எழுத்தாளர்' என்று அவர் பரிகாசம் செய்தது ஞாபகத்துக்கு வருகின்றது. மூத்த என்னும் சொற்பதத்தை வயதில் மூத்த, எழுத்துத்துறை அனுபவத்தில் மூத்த என்னும் கருத்துப்பட பாவிக்கலாம் என்பதால் அவ்விதம் பாவிப்பதில் தவறில்லையென்றே கருதுகின்றேன். அதனாலேயே இங்கும் அப்பதத்தைப்பாவிக்கின்றேன்.

அந்த வரிசையில் அண்மைக்காலமாக முகநூலில் அதிகம் சந்திக்கக்கூடியவர்களிலொருவராக எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களையும் குறிப்பிடலாம். இன்னுமொருவர் எஸ்.எல்.எம் ஹனீபா. மேலும் 'அலை' யேசுராசா, மேமன்கவி, வி.ரி.இளங்கோவன் என்று பல ஈழத்து எழுத்தாளர்களைக்குறிப்பிடலாம். இவர்களைப்போன்றவர்களுடனெல்லாம் கருத்துகள் பரிமாறுவதைச் சாத்தியமாக்கியுள்ளது முகநூல்.  மேலும் பல்வேறு நாடுகளிலும் வாழும் பல்வேறு தலைமுறைகளைச்சேர்ந்த எழுத்தாளர்கள் சந்திக்குமோரிடமாக விளங்குகின்றது முகநூல். இது முகநூலின் முக்கியமான பயன்களிலொன்று. இவற்றை மூத்த எழுத்தாளர்கள் எல்லாரும் விளங்கியுள்ளார்கள் என்பதற்கில்லை. ஆனால் அவ்விதம் விளங்கிய சிலர் , இவ்விதமான சமூக ஊடகங்களை ஆக்கபூர்வமாகப்பாவிக்கின்றார்கள். இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது; ஆரோக்கியமானது.

எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான 'மக்கத்துச்சாலை'யினி 'நூலகம்' தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.noolaham.net/project/01/90/90.htm

நந்தினி சேவியர் அவர்களின் 'அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' சிறுகதைத்தொகுப்பினையும் 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான முகவரி: http://noolaham.net/project/03/230/230.pdf'

'அலை' யேசுராசா அவர்களை அவரது எழுத்தினூடு அறிந்திருக்கின்றேன். அவருடனான கருத்துப் பரிமாறல்களைச் சாத்தியமாக்கியுள்ளது முகநூல். பதிவுகள் இடுவதுடன், அவ்வப்போது ஏனைய பதிவுகளுக்குத் தன் கருத்துகளையும் தெரிவிக்கத்தயங்காதவர் இவர்.

ஈழத்தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமை இவர். கதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, இதழியல் மற்றும் திரைக்கலை எனப் பன்முகத்திறமை கொண்டவர் இவர்.

'அலை', 'கவிதை' மற்றும் 'தெரிதல்' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவிருந்தவர் இவர். இவற்றில் 'அலை' 35 இதழ்களும், 'கவிதை' 9 இதழ்களும் மற்றும் 'தெரிதல்' 15 இதழ்களும் வெளிவந்துள்ளன.

விக்கிபீடியாவில் இவரைப்பற்றிய குறிப்பில் 'தெரிதல்; சஞ்சிகை பற்றிய குறிப்பில் காணப்பட்டுள்ள விடயமொன்று என்னை ஆச்சரியத்திலாழ்த்தியது.
அது: 'தெரிதல் இதழின் நான்காவது வெளியீட்டிலிருந்து ஒரு பக்கத்துக்கு 100 ரூபா, அரைப் பக்கத்துக்கு 50 ரூபா என்ற கணக்கில் படைப்பாளிகளுக்குச் சன்மானம் வழங்கப்பட்டது. சன்மானத்துடன் இருஇதழ்களும் இனாமாகக் கொடுக்கப்பட்டன' என்று குறிப்பிடப்பட்டுள்ள விபரம்தான்.

சிற்றிதழொன்று வேறெங்காவது இவ்விதம் படைப்பாளிகளுக்குச் சன்மானம் வழங்கியுள்ளதா? நண்பர்களே! அறியத்தாருங்கள்!

'தெரிதல்' இதழ்களைக்கீழுள்ள இணைப்பில் 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம்: http://www.noolaham.org/wiki/index.php

இவரைப்பற்றிய மேலதிக விபரங்களுக்கு: https://ta.wikipedia.org/…/%E0%AE%85._%E0%AE%AF%E0%AF%87%E0

* முகநூல் பின்னூட்டங்கள்:

Sajeeth Amsajeeth: இதில் கவனிக்கப்படாத ஒரு விடயம் இருப்பதாக உணர்கிறேன். எஸ்.எல்.எம். ஹனீபா வுடைய முகப்புத்தக செய்திகள் எந்த இலக்கிய ரசனைகளையும் கொண்டதாக காணப்படவில்லை. எழுத்தாளர்களுடன் நின்று புகைப்படம் எடுப்பது கீரை வகைகளை புகைப்படம் எடுப்பது என்று போகிறது. இன்னுமொறு பக்கம் அவர் மேடைகளில் பேசுகின்ற போது முகப்புத்தகம் அவருக்கு பிடிப்பதேயில்லை என்று பேசிவிட்டு செல்வார். ஆனால் நந்தினி சேவியர் விதிவிலக்கானவர் உண்மைகளை உரத்துப் பேசுபவர் முகப்புத்தக இருட்டடிப்பு அவரிடமில்லை.

Vathiri C Raveendran பல மூத்தவர்கள் முகநூலில் உள்ளார்கள். இவர்களுள் இலக்கியம்,நாடகம்,நடனம் என்றும்;சினிமா என்றுகூட மூத்தவர்கள் இருக்கிறார்கள்.மூத்தவர்கள் என்றால் பழுத்தவர்கள்,முத்தினவர்கள் என்ற கருத்தாகுமோ?

Taj Deen காக்கா எஸ்.எல். எம். ஹனீஃபா அவர்கள் மிகவும் வலுவான நவீன இலக்கிய ஆகுருதி என்பதில் மிகுந்த மகிழ்ச்சியுண்டு.

குணநாயகம் சரவணன் சிறப்பான பதிவு.முகநூலில் பதிவாகும் இலக்கிய முயற்சிகளை மூத்தஎழுத்தாளர்கள் கண்டு கொள்வதில்லை என்பது பொதுவான இளம்படைப்பாளிகளின் குற்றச்சாட்டு.

Slm Hanifa : SajeethAmsajeeth உங்கள் பின்னூட்டம் மனங்கொள்ளத்தக்கது ...வாழ்த்துக்கள் !

Sajeeth Amsajeeth: இலக்கிய விமர்சனம் என்பது ஒரு பிரபல்யமே. உங்களுக்கு தெரியாததா?

Slm Hanifa:
இலக்கிய விமர்சனமும் கீரைக்கறியும் ..நல்ல மகுடம் இளைஞர்கள் யாராவது எழுதலாமே ..

பரீட்சன்: எஸ். எல். எம் மூத்த எழுத்தாளர்களில் ஒரு நவீன பார்வை கொண்டவர் இந்த காலத்தில் அவரால்சிறுகதை/நாவல் ஒன்று எழுதப்படுமாயிருந்தால் அது தமிழின் இன்னுமொரு வர்ணமாய் அடையாளம் பெறும்.

Vasan Svs: மூத்த எழுத்தாளர் இளைய தலைமுறை எழுத்தாளர் என்ற பதங்களில் பிரச்சனையில்லை. ஆனால் பல மூத்த எழுத்தாளர்களில் அநேகம் பேர் பல தசாப்தகாலமாக எதுவுமே படைக்காமல் முன்னாள் எழுத்தாளர்கள் ஆகிக்கொண்டிருப்பது தான் மிக மிக வேதனைக்குரியது. சோர்வடைந்திருக்கும் இவர்களை இனம் கண்டு ஊக்குவிப்பதும் இன்று எம் முன் உள்ள பல கடமைகளில் ஒன்று.

Thevarasa Mukunthan Sajeeth Amsajeeth இலக்கியத் தகவல்களைப் பகிர்வதற்கு பலர் உள்ளனர் . ஆனால் இயற்கையை நேசிப்பதற்கும் சுற்றாடலை மதிப்பதற்கும் எம்மை ஈடுகொள்ள வைப்பதற்கு இலக்கியவாதியான எஸ் எல் எம் இன் சுவையான தகவல்கள் உதவுகின்றன. அவர் இடும் புகைப்படங்களும் அவரின் எழுத்தும் வாசகரை ஈர்க்கின்றன. எஸ் எல் எம் தொடர்ந்தும் இவ்வாறான பதிவுகளை எழுதவேண்டும்.

Sajeeth Amsajeeth:
பதிவிடுவதில் தவறில்லை. கீரை மட்டுமா? பதிவு என்பதுதான் இங்கு கேள்வி. அது மட்டுமில்லாமல் முகப்புத்தகத்தை பற்றிய எஸ்எல்எமின் பார்வை வித்தியாசமானது. களவு கூடாது என்று பாடம் எடுத்து விட்டு களவு செய்தல் தகுமா தோழரே...

Giritharan Navaratnam: முகநூலின் அடிப்படை நோக்கங்களில் சில: நண்பர்கள் , உறவினர்கள் அல்லது வேலை பார்க்கும் சக நண்பர்கள் ஆகியவர்கள் தமக்கிடையில் தம் புகைப்படங்களை, தம் கருத்துகளை, தமக்குப் பிடித்த பாடல்கள் போன்றவற்றைப்பற்றிப் பகிர்ந்து கொள்வதுதாம். ஆழமான விடயங்களைப்பகிர்ந்து கொள்வதற்கும் முகநூல் பயனுள்ளதாகவிருப்பதால் பகிர்ந்து கொள்கின்றோம். நீங்கள் ஆழமான விடயங்களைப்பற்றி அறிய வேண்டுமானால் எழுத்தாளர்களின் வலைப்பதிவுகள், இணைய இதழ்கள் போன்றவற்றிலேயே அவற்றைத்தேட வேண்டும். முகநூலில் தேடுவது அவ்வளவு பொருத்தமாகவில்லையே.

எழுத்தாளர் ஹனீபா தோட்டக்காட்சிகளை, இயற்கைக்காட்சிகளைப் பதிவு செய்கின்றார். அவை கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் அதே சமயம் இயற்கையின் வனப்பில் எம்மை இழக்க வைக்கின்றன. மேலும் சூழலின் பேணலின் அவசியத்தையும் மறைமுகமாக வலியுறுத்துகின்றன. முகநூலில் நண்பர்கள் பலர் அவற்றை விரும்புவதையும் அறிய முடிகின்றது.

Thevarasa Mukunthan: Giritharan Navaratnam :- I accept your above comment.

Slm Hanifa : SajeethAmsajeeth 'களவுகூடாது என்று பாடம் எடுத்துவிட்டு களவு செய்தல்' அதைவிளக்கமாகச்சொல்லுங்கள்

Sajeeth Amsajeeth: எத்தனை நாளுக்குத்தான் கீரைப்புராணம் என்று கேட்கிறேன். புதியவர்களின் படைப்பினை குப்பைகள் என்று சொல்பவர்கள் கீரை யை மட்டும் எடுப்தில் ஆச்சரியமில்லைதான். களவின் விளக்கம் யாதெனில். முகப்புத்தக பாவனையாளர்கள் அங்கு பதிவிடப்படும் இலக்கிய முயற்சிகள் தரமற்றது என்று பேசிய பின் கீரை மட்டும் எப்படி தரமாகும். கண்ணிற்கு கீரை குளிர்ச்சிதான். எஸ்.எல்.எம் ஆற்றலை இதனுடன் பொருத்தி பாருங்கள். ஆளுமைமிக்க மக்கத்து சால்வையை தந்தவரிடம் நாம் எதிர்பார்க்கும் இலக்கிய படைப்பு கீரை மட்டும்தானா? முகத்தாச்சினை வேண்டாம். இலக்கிய பரப்பில் பேசுவோம். ஒரு நல்ல இலக்கிய விமர்சனத்தை பேசட்டும் அல்லது நந்தினி சேவியர் யேசுராசா போன்று கட்டுடைப்பு செய்யட்டும். வெறும் கீரை ஒரு போட்டோக்கு ஓகே. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே...

Slm Hanifa: இந்த கீரைக்காரனை விட்டு விடுதலையாகுங்கள் நன்றி ...உங்கள் அளவு ஞானமும் புலமையும் என்னிடம் இல்லை என்பதை பணிவுடன் ஏற்றுக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் ..

Sajeeth Amsajeeth: மன்னிக்க வேண்டும். மனம் நோகும்படி பேசியிருந்தால் மன்னியுங்கள். இது இலக்கிய விமர்சனம் மட்டுமே மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். குறை கூறும் நோக்கமல்ல...

Athanas Jesurasa // 'கவிதை' 15 இதழ்களும் மற்றும் 'தெரிதல்' 9 இதழ்களும் வெளிவந்துள்ளன.// - கவிதை 9 இதழ்களும், தெரிதல் 15 இதழ்களும் வந்தன என்பதே சரியாகும். 2006 இல் நின்றுபோன தெரிதலின் 16 ஆவது இதழ், தற்போது வெளியாகியுள்ளது. படைப்புழைப்புக்குப் பணப் பெறுமதியும் இருக்கவேண்டும்; ஆனால், ஈழத்தில் நமது பெரும் பத்திரிகைகள் பலவும் எழுத்தாக்கங்களுக்குப் பணம் கொடுப்பதில்லை; ஏதாவது விடயம் வந்தால், எழுதியவர் பணம் கொடுத்தே அந்தப் பத்திரிகையை வாங்கவும்வேண்டும் என்ற பரிதாப நிலை! இந்நிலையில் ஓர் அடையாளரீதியிலான ஊக்குவிப்புக்காகவே தெரிதலில் சிறிய சன்மானத்தை வழங்குகிறோம்; தற்போதும் அதனைத் தொடர்கிறோம். 2000 பிரதிகளை அச்சிடுவதால் அக்கொடுப் பனவு சிரமமானதாகவும் இல்லை.

Giritharan Navaratnam தட்டச்சுப்பிழையைச்சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன்.

Rathan Ragu ரொரன்ரோவில் எங்கு பெற்றுக்கொள்ளலாம்?

Giritharan Navaratnam //Rathan Ragu ரொரன்ரோவில் எங்கு பெற்றுக்கொள்ளலாம்?// இங்கு நாங்கள் எந்த நூலைப்பற்றியும் கலந்துரையாடவில்லையே ரகு! எதனைப்பற்றி கேட்கின்றீர்கள்? smile emoticon

Rathan Ragu கவிதை' மற்றும் 'தெரிதல்

Giritharan Navaratnam வெளிவந்த கவிதை , தெரிதல் இதழ்களை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். மேலுள்ள பதிவில் தெரித'லுக்கான இணைப்புள்ளது. கவிதைக்குரிய இணைப்பையும் சேர்த்துள்ளேன்.

Athanas Jesurasa இது தெரிதலைக் குறிப்பதென்றால், காலம் செல்வத்திடம் 16 ஆம் இதழைப் பெறலாம். தொடர்ந்து பெற சந்தாதாரராகச் சேருங்கள்.

Athanas Jesurasa Rathan Ragu கவிதை 19 95 இல் நின்றுவிட்டது; தெரிதல் மறுபடி இந்தத் தை மாதத்திலிருந்து வெளிவருகிறது.

Kuppilan Shanmugan பல்துறை சார்ந்த எஸ் எல், எம் ஹனிபாவின் பதிவுகள் எனக்கு உவப்பானவை.அவர் தம் பதிவுகளைத் தொடர வேண்டும்.


தன்னடக்கமா? திறனாய்வுத் திறமையா?

பாரதியார்.எழுத்தாளர் நந்தினி சேவியர் தன் முகநூல் பதிவொன்றில் பின்வருமாறு கூறியிருந்தது என் சிந்தனைக்குதிரையைச்சிறிதே தட்டி விட்டது.

//“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவன்போல்,இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” //

இவ்விதம் பாரதி கூறியதைத்தன்னடக்கமாக என்னால் கருத முடியவில்லை. படைப்புகளைப்பகுத்தாராயும் அவரது திறனாவுத்திறமையாகவே நான் கருதுகின்றேன். பாரதியார் கம்பரின், வள்ளுவரின், இளங்கோ அடிகளாரின் படைப்புகளை ஆழ்ந்து படித்து வந்தடைந்த முடிவு இதுவென்றே கருதுகின்றேன். அவர் இவர்களைத்தமிழ் நாட்டுக்கு மட்டுமே உரியவர்களாகக் கருதவில்லை. உலக மகா கவிகளாகக் கருதினார். அதனால்தான் 'பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்று பாடினார். அதனால்தான் 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாடினார்.

வள்ளுவனைப்பற்றி, கம்பனைப்பற்றி, இளங்கோவைப்பற்றி இவ்விதமானதொரு முடிவுக்கு பாரதியால் வர முடிந்ததென்றால், எவ்வளவு ஆழமாக அவர்கள்தம் படைப்புகளை அவர் படித்திருப்பார்? அவ்விதம் அவர்தம் படைப்புகளைத்திறனாய்வு செய்ததனால்தான் பாரதியாரால் இவ்விதமான , ஆணித்தரமான முடிவுக்கு வர முடிந்திருக்கின்றது. இவர்களைப்பற்றி பாரதியார் தன் கவிதைகள் பலவற்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

பாரதியாரின் மேற்படி கவிகளைப்பற்றிய ஆணித்தரமான முடிவினை, கம்பரின், வள்ளூவரின், இளங்கோவடிகளின் படைப்புகளை ஆழ்ந்து வாசித்த எவருமே எதிர்க்க மாட்டார்கள். பாரதியாரின் இவ்விதமான படைப்புகளைத்திறனாயும் திறனாய்வினை இன்றுள்ள, திறனாய்வாளர்கள் என்ற பெயரில் உலா வரும் பலர் நிச்சயம் அடைந்தாலொழிய நல்ல திறனாய்வுகள் உருவாகுவதற்குச் சாத்தியமில்லை. இன்று பலர் நுனிப்புல் மேய்ந்து விட்டு, ஒரு சில படைப்புகளை மேலோட்டமாகப்படித்து விட்டு, அவற்றை உலக இலக்கியத்தின் பிரதிகளாக முடிவு செய்து விடுகின்றார்கள். ஆனால் இவர்கள் இவ்விதம் வந்தடைந்திருக்கும் முடிவினைப்பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாரதியார் கம்பர் பற்றி, இளங்கோ பற்றி, வள்ளூவர் பற்றி வந்தடைந்திருக்கும் முடிவினை யாராலுமே எதிர்க்க முடியாது என்பேன்.

மேலுள்ள பாரதியாரின் வரிகளிலிருந்து நான் வந்தடையும் முக்கியமான முடிவுகள் வருமாறு:

1. படைப்புகளைப்பற்றிய இறுதி முடிவுக்கு வர முன்னர், அவற்றை ஆழ்ந்து படியுங்கள். அலசி ஆராயுங்கள். பின்னர் தர்க்கரீதியானதொரு முடிவுக்கு வாருங்கள்.
2. இவ்விதமான ஆழ்ந்த திறனாய்வின் வழி வெளிவரும் முடிவுகளை அனைவருமே ஏற்றுக்கொள்வர்.


தமிழில் பத்தி எழுத்துகளின் முன்னோடி.. யார்?

பாரதியார்.எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்கள் தனது முகநூல் பதிவொன்றில் பின்வரும் கேள்வியொன்றினை, தமிழில் பத்தி எழுத்துகளின் முன்னோடி யார் என்னும் கேள்வியினைக் கேட்டிருந்தார். அது வருமாறு:

"பத்தி எழுத்துக்கள் படிப்பது வலு சந்தோசமாகிவிட்டது .தமிழ் எழுத்தாளர்கள்பலரும் பத்தி எழுதுவதில் அதிக ஈடுபாடு கொள்வதையும் காண்கிறோம் .சிறுகதை ,புதுக்கவிதை முன்னோடிகள் என்று நாம் கொண்டாடுவதுபோல் ..இந்தவகை எழுத்துக்களின் முன்னோடிகள் யார் ?எவர் ?நண்பர்களே கூறமுடியுமா ?பதர் நீக்கி மணிதேடுங்கள் .."

தமிழில் பத்தி எழுத்துகளின் முன்னோடியாகச்சிலர் அமரர் சுஜாதாவைக்கருதுவதுண்டு. அவர் அவ்வகை எழுத்துக்கான முன்னோடி அல்லர்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே பத்தி எழுத்துகள் தமிழில் உருவாகிவிட்டன. 'பாரதியின் சுயசரிதைகள்' என்னுமொரு தொகுப்பு நூலினை அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருந்தது. அதனைத்தொகுத்தவர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

அந்நூலுக்கான முன்னுரையில் அவர் பாரதியையே தமிழின் பத்தி எழுத்தின் முன்னோடியாகக்கூறியிருப்பதை வாசித்தது நினைவுக்கு வருகின்றது. அதிலவர் "'தராசு' என்னும் தொடரின் மூலம் 'பத்தி' எழுத்து என்ற வகைமைக்கும் பாரதியே முன்னோடியாவான்." என்பார்.

எனக்கும் முனைவரின் கூற்றில் உடன்பாடே. யாராவது இதற்கு மாறான கருத்தினை ஆதாரபூர்வமாக முன் வைத்தால் அதனை வரவேற்கக் காத்திருக்கின்றேன். அதுவரை மாகவியே இவ்வகை எழுத்துக்கும் முன்னோடி என்று கருதுவோம்.

மேலும் அமரர் கல்கி கூட கர்னாநாடகம் என்னும் பெயரில் சங்கீதக் கச்சேரிகள் பற்றி விமர்சனக்குறிப்புகள் எழுதியிருக்கின்றார். அவையும் பத்தி எழுத்துகளே. மேலும் பத்தி எழுத்துகள் எதனைப்பற்றியும் இருக்கலாம். அரசியலைபற்றியும் இருக்கலாம். அறிவியலைப்பற்றியும் இருக்கலாம். கலையைப்பற்றியும் இருக்கலாம். அந்த வகையில் பாரதியின் எழுத்துகள் பலவற்றையும் அடக்கலாமென்பதென் கருத்து. பாரதியாரின் பல சிறு கட்டுரைகள், குறிப்புகள் பல அக்காலத்தில் வெளியான பத்திரிகைகள் பலவற்றில் வெளியாகியிருக்கின்றன, அவையும் ஒரு வகையில் பத்தி எழுத்துகளே. பத்தி எழுத்துகளைப்பற்றி விரிவாக ஆராய்ந்தால், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பலர் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பத்தி எழுத்துகள் எழுதி வந்திருப்பதை அறிய முடியும் என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

*முகநூல் பின்னூட்டங்கள்:

Prasanna Ramaswamy : பாரதிதான்

Slm Hanifa:  நன்றி ..

Kuppilan Shanmugan: தமிழில் பத்திஎழுத்திற்கு மட்டுமல்ல பலவற்றுக்கும் பாரதியே முன்னோடி. தமிழில் காட்டூன் என்ற கேலிச்சித்திரத்திற்கும் அவரே முன்னோடி என்று வாசித்திருக்கிறேன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.