வாசிப்பும், யோசிப்பும்!அண்மையில் பரதன் நவரத்தினம் தனது முகநூல் பதிவாக 'மரணதேவன்' என்னும் சிறு கதையொன்றினைப் பதிவு செய்திருந்தார். டொரான்டோ பாதாள இரயிலில் பயணிக்குமோர் இளைஞனை, அந்த இரயில் முன் விழுந்த மரணித்த மானுடர் ஒருவரின் நிலை எவ்விதம் பாதிக்கின்றது என்பதைப்பற்றிய சிறியதொரு விபரிப்பே அக்கதை. கதை சிறியதாக இருந்தாலும் வாசிப்பவரை ஈர்க்கும் தன்மை மிக்கது. மழை பெய்யும் இரவொன்றில் , கடையொன்றில் பணியாற்றும் தொழிலாளி ஒருவர், வீடு திரும்புவதை விபரிக்கும் கதை. அவ்விதம் இரவில் தனியே திரும்பும்போது , நகரத்து இரவில் ஒருவர் அடையும் பயப்பிராந்திகளையும் அழகாக விபரித்திருக்கின்றார். வாசிப்பவரையும் அந்தப்பயப்பிராந்தி பீடித்து விடுவதுதான் அவரது எழுத்தின் சிறப்பு.

மேலும் நல்ல எழுத்து நடை. கூடவே சூழலை அவதானிக்கும் ஆற்றலுடன் கூடிய சம்பவ விபரிப்பு. இவை அனைத்தும் சேர்ந்து நல்லதொரு சிறுகதையாக மலர்ந்திருக்கின்றது. இன்னுமொன்று நகரத்தின் தன்மையினை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள எழுத்து. பகலில் வெறும் கட்டடங்களும், விரையும் மனிதர்களுமாகக்காட்சியளிக்கும் நகரின் இரவு வித்தியாசமானது. விபரிக்கும் வரிகள் சிறக்கின்றன.

'டிராகுலா'த்திரைப்படங்களில் அல்லது அது போன்ற திகிலூட்டும் திரைப்படங்களில் ஒவ்வொரு சிறு சிறு சம்பவத்தையும் பார்வையாளரின் அச்சத்தினைப் படிப்படியாக அதிகரிக்கும் வண்ணம் அமைத்திருப்பார்கள். அது போன்ற எழுத்துப்பாணியினைப் பரதன் இக்கதையில் கையாண்டிருக்கின்றார்.

எழுத்தில் சிறப்புண்டு. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ஒரு பதிவுக்காக அவரது அக்கதையினை இப்பதிவின் இறுதியில் பதிவு செய்திருக்கின்றேன். நீங்களும் ஒருமுறை வாசித்து அந்த இரவில் அவரது கதையின் நாயகன் அடைந்த உணர்வினை நீங்களும் அடையுங்கள்.

மேலும் இந்தக்கதை எனக்குச் சில சம்பவங்களை ஞாபகப்படுத்தி விட்டது. ஒருமுறை கோட்டை புகையிரத நிலையத்தில் மாலை நேரம், யாழ்ப்பாணம் செல்வதற்காகத் தபால் புகையிரதத்தை எதிர்பார்த்துக்காத்து நிற்கிறேன். புகையுரதம் வந்ததும் பலர் பாய்ந்து ஏறி இடம் பிடிப்பது வழக்கம். புகையிரதமும் வழக்கம் போல் குறித்த நேரத்துக்கு வந்து விட்டது. எனக்கு அருகில் நின்றிருந்த ஓரிளைஞர், 'சாறம்' கட்டியிருந்தவர் , புகையிரதம் நிற்பதற்கு முன்னரே இடம் பிடிப்பதற்காகப் பாய்ந்தார். பாய்ந்தவர் நிலை தடுமாறி புகையிரதத்துக்கும், நடைமேடைக்குமிடையில் ('பிளாட்போர்ம்) விழுந்து விட்டார். நல்லவேளை புகையிரதம் நிற்கவும் பலர் சேர்ந்து அவரைத்தூக்கினார்கள். அப்பொழுதுதான் கவனித்தேன். அவரது கால்களிரண்டும் , தொடைக்குக்கீழ் புகையிரதத்தால் முற்றாக வெட்டப்பட்டுச் சிதைக்கப்பட்டுக் காணாமல் போயிருந்தன. அந்த நிலையிலும் இன்னும் அந்த இளைஞர் மயக்கமாகவில்லை. அவர் கூறுகின்றார்: "மாமா என்ன நினைப்பாரோ தெரியவில்லை" இன்னும் அந்தக்காட்சி மனதிலுள்ளது. அச்சமயத்தில் அவருக்குத்தன்னுடைய நிலைமை தெரிந்திருக்காத நிலை என்றெண்ணுகின்றேன். அதன் பின்னர் புகையிரதம் சென்றதும், அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர், தண்டவாளங்களுக்குள் தேடிச்சென்று அந்த இளைஞரின் பாதங்களிரண்டையும் தேடிக்கண்டு பிடித்து எடுத்து வந்தார். பாதங்களுக்கும் ,அந்த இளைஞரின் தொடைகளுக்குமிடையிலிருந்த கால்களைக்காணவில்லை. புகையிரதத்தால் வெட்டப்பட்டு, அரைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

இது தவிர நாங்கள் வவுனியாவில் வசித்த காலத்தில் ஆண்களிருவர், பெண்ணொருவர் யாழ்தேவிக்கு முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்கள். அந்நினைவுகளையும் இக்கதை ஞாபகப்படுத்தி விட்டது.

'டொராண்டோ'வில் அடிக்கடி இவ்விதம் நடக்கின்றது. இரு வாரங்களுக்கு ஒருவர் என்பது புள்ளி விபரமாம். ஒருமுறை தமிழ்ப்பெண்ணொருத்தி குழந்தையை அருகில் நின்றவரிடம் கொடுத்து விட்டுப்பாய்ந்திருக்கின்றார். 'விக்டோரியாப் பார்க் சப்வே' நிலையத்தில் தமிழர் ஒருவர் தன் மூன்று வயதுக்குழந்தையுடன் பாய்ந்திருக்கின்றார். இவற்றையெல்லாம் இக்கதை ஞாபகமூட்டி விட்டது.


பரதன் நவரத்தினத்தின் பதிவு கீழே:

மரணதேவன்


வாசிப்பும், யோசிப்பும்!பூட்டிய கடைக்கதவை திரும்ப இழுத்துப்பார்த்து விட்டு தெருவில் இறங்கும் போது வழக்கத்தை விட இன்று பிந்திவிட்டது என்பதை உணர்ந்தான் மதி .கடை பூட்டும் நேரம் வந்து வரிசையில் நின்ற அந்த நாலு கஸ்டமர்களையும் மனதில் திட்டிக்கொண்டு இரவு பத்து நாற்பது மணி பஸ்சும் போயிருக்கும் , இனி எப்படியும் அடுத்த பஸ் வர பதினோன்றாகும் Bloor Subway யிற்கு பத்து நிமிட நடைதான் ஆனால் இந்த நேரம் இருட்டில் நடப்பதை விட பஸ்சிற்கு காத்திருப்பது பாதுகாப்பானது என்று எண்ணி எவருமற்ற அந்த பஸ் நிலையத்தில் ஒதுங்குகின்றான் .

தினமும் பகலில் எந்தவொரு பய உணர்வும் இல்லாமல் உலா வரும் இந்த இடம் இரவானதும் வேறு ஒரு கோலம் பூண்டுவிடுகின்றது. இன்று பகல் கூட மதிய சாப்பாடு வாங்க கடையை பூட்டிவிட்டு சன நெருசல் நெருங்கிய இந்த வீதியால் தான் Kentucky வாங்க போனான்.
இப்போ அனைத்து கடைகளும் பூட்டி, தெருவில் மக்கள் ஆரவாரம் அற்று வெறுமையாகி, அந்த தனிமை மதிக்கு மனதில் ஒரு வித பயஉணர்வை கொண்டு வந்துவிட்டிருந்தது .

ஆங்காங்கே நடந்து தன்னை கடந்து திரிபவர்கள் எவரும் பகலில் ஒரு போதும் தென்படாதவர்களாக, ஒரு வித போதை மயக்கத்தில் அவனிடம் சில்லறைகாசு அல்லது சிகரெட் கேட்பவர்களாக இருந்தார்கள் . இல்லை என்று சொல்லும் போது தூசணத்தால் திட்டுபவர்களும் காறி துப்பிக்கொண்டே செல்பவர்க்ளையும் பார்க்க இரவு மனிதர்களே இப்படித்தானோ என்று மதி எண்ணிக்கொண்டான்.

இவர்கள் யாராலும் தனக்கு ஏதும் வில்லங்கம் வரமுதல் பஸ் வரவேண்டும் என வேண்டவும் திடீரென்று வானம் வெளிக்க, இடி மின்னலுடன் மழை தூறத்தொடங்குகின்றது. காற்று வேறு சற்று பலமாக வீசி மதியின் உடைகள் நனைக்க மதிக்கு உடலில் குளிர் படர ஆரம்பிக்கின்றது .

திடிரென உருவாகும் இயற்கையின் மாற்றம் கூட மனிதருக்கு மனதில் அச்சத்தை உருவாக்குகின்றது என மதி மனதில் நினைத்துக்கொண்டான்

மழைக்கிடையில் ஊர்ந்து செல்லும் வாகனங்களில் இருந்து முகத்தில் அடிக்கும் வெளிச்சமும் அவை எழுப்பும் ஒலியும் ஆங்கில மாபியா படங்களில் வருவது போல தன்னை யாரோ கடத்த போகின்றார்களோ என்பதாகவும் ஒரு பிரமை வந்து போனது .

வீதியில் இருக்கும் தண்ணீரை விசிறியடித்தபடி பஸ் வந்து காலடியில் நின்றது .பஸ்ஸிற்குள் நாலு பேர்கள் தான் இருந்தார்கள் . இரண்டு நிமிடத்தில் Bloor ஸ்டேசனில் பஸ் வந்து சேர்ந்து விட்டது .உடனே ரெயினை பிடித்துவிடவேண்டும் என்று மதி ஓடிச்சென்று ஸ்டேசனில் படியிறங்க நேரம் பதினொன்று ஐந்து, ரெயின் வர நாலு நிமிடங்கள் இருக்கு என்று பிளாட்பாரத்தில் உள்ள மணிக்கூட்டில் எழுத்துக்கள் ஓடிக்கொண்டு இருந்தது .

Kennedy Station போகும் பிளாட்பாரத்தில் எவருமில்லை .மறு புறத்தில் சிலர் இருப்பது தெரிகின்றது . யாரோ படியிறங்கி வரும் சத்தம் கேட்கின்றது .
மழை காரணமாக நடந்து வருபவர் ஆளையே மூடி ஆடை அணிந்திருப்பதால் முகத்தை பார்க்கமுடியவில்லை ஆனால் ஆண் என்று தெரிகின்றது . தனிமைக்கு ஒரு துணை கிடைத்தது போலிருந்தாலும் சிலவேளை தன்னை பிடித்து ரெயினில் தள்ளியும் விடுவானோ என்ற ஒரு நினைப்பும் மதிக்கு வந்துபோனது .எதற்கும் பாதுகாப்பாக சற்று தள்ளியே நிற்போம் என்று பிளாட்பாரத்தின் கடைசிக்கு செல்கின்றான் .

ரெயின் வருவதற்கான சத்தம் சிறிதாக கேட்கத்தொடங்குகின்றது அத்தோடு உர்ர்ர்ர் என்று நிலக்கீழ் பாதைக்குள் அடைபட்ட காற்றை கிழிக்கும் ஓசையும் அந்த காற்று ஸ்டேசன் கதவுகளையும் அடித்து திறந்து மூடும் சத்தமும் மதிக்கு ஒரு வித திகிலைத் தர ரெயின் பிளாட்பாரத்தில் நிற்கிறது. சற்று தள்ளி நின்ற பயணி அடுத்த Compartment ஏறுவதைக்கண்டதும் அப்பாடி அவன் தன்னை தள்ள வரவில்லை என்றபடியே தானும் உள்ளே ஏறுகின்றான் .

பின்னிரவு ரெயின் பயணம் மதிக்கு ஒன்றும் புதிதில்லை .வேலை செய்த களையில் தூங்கி வழியும் முகங்கள் தான் இருக்கைகைகள் எங்கும் நிரம்பியிருகின்றார்கள் .தாம் இருக்கும் சீட்டிற்கு முன் சீட்டிற்கு மேலே காலை தூக்கி போட்டுக்கொண்டு இரண்டு இளைஞர்கள் கை தொலைபேசியில் அவர்கள் தங்கள்பாடு . ரெயினில் ஏறினால் யார் முகத்தையும் பார்க்காமல் மூலை இருக்கையாக அமர்ந்து புத்தகம் படிப்பதுதான் மதியின் வழக்கம் . அன்றும் கடைசியாக வந்த ஆனந்தவிகடனை புரட்ட ஆரம்பிக்கின்றான் .

Kennedy Subway ,பிறகு YRT to Mccowan,அடுத்து பஸ் எப்படியும் வீடு போய் சேர இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும் என்று நினைக்க மதிக்கு விசராக இருந்தது . Castle Frank ஸ்டேசனை தாண்டி ரெயின் பாலத்தில் பயணிக்கும் போது களனி ஆற்றை தாண்டும் யாழ் தேவியின் நினைவும் சிறு வயதில் களனி ஆற்றில் எழுந்து பாயும் புழுதி நிறதண்ணீரை பார்த்து பயந்ததும் கண்களில் வந்து போனது .

அசோகமித்திரனின் சிறுகதை ஒன்று வந்திருக்கு அதை வாசிப்பம் என்று கதையில் மூழ்கிவிட்டான் மதி .ரெயின் ஒவ்வொரு ஸ்டேசனாக நிற்பதும் பின் வேகமெடுத்து ஓடுவதாகவும் இருந்தது .

கிரீச் என்று பெரிய சத்தத்துடன் ரெயின் பிரேக் அடித்தது .சில பயணிகள் சீட்டில் இருந்து விழுந்தும் விட்டார்கள் .மதி புத்தகத்தை மூடியபடியே எந்த ஸ்டேசன் என்று யன்னலை பார்க்க மடார் மடார் என்று ரெயினிற்குள் இருக்கும் கதவுகளை திறந்தபடி ரெயின் ஓட்டுனர் பயணிகள் எல்லோரையும் முன்பக்கம் போய் வெளியேற சொல்லுகின்றார்.ரெயினின் கதவுகள் எதுவும் திறக்கவில்லை .எந்த ஸ்டேசன் என்று தெரியவில்லை ரெயின் ஸ்டேசனை அண்மித்தவுடன் நின்றுவிட்டது . ரெயினில் வந்த மொத்த பயணிகளும் ஒரு கதவால் நெருக்குபட்டபடியே எவர் எவரையோ திட்டியபடி வெளியேறுகின்றார்கள்.

Pape ஸ்டேசன் , மதிக்கு எதோ நடக்க கூடாதது நடந்துவிட்டதாக உள்மனது சொல்லுகின்றது. கதவால் வெளியேறும்போது தண்டவாளத்தை எட்டிபார்க்கவேண்டும் என்று மனம் அலை பாயுது ஆனால் அது தற்செயலாக பார்க்க முடியாத கோர காட்சியாக இருந்தால் பல நாட்களுக்கு தூக்கம் வராது என்று திரும்பாமல் நடந்தவன் கடைசி படியேறும் போது ஆவல் மீதியால் தலையை திருப்புகின்றான் .

அட பார்க்காமலே இருந்திருக்கலாம் .ஸ்டேசனுக்கு வெளியில் வருகின்றான் .

மழை இன்னமும் கொட்டிக்கொண்டிருக்கு .எங்கும் ஆம்புலன்ஸ் ஒலி .Stretcher உடன் முதலுதவியாளர்கள் ஸ்டேசனிற்குள் இறங்கி ஓடுகின்றார்கள். ரெயினால் இறங்கிய பயணிகளால் நிறைந்து Pape ஸ்டேசன் அல்லோலகல்லோடப்படுகின்றது .

"ரெயின் இனி ஓடாது . எல்லோரும் இனி Shuttle பஸ்ஸில் தான் பயணிக்கவேண்டும்" என்று அறிவிக்கின்றார்கள் . எல்லோருக்கும் வீடு போக வேண்டிய அவசரம் . அவரவருக்கு அவரவர் பிரச்சனை .

நாலாவதாக வந்த Shuttle Bus இல் ஏறி அரை குறையில் விட்ட அசோகமித்திரனின் சிறுகதையை வாசிக்க ஆனந்தவிகடனை புரட்டுகின்றான் மதி .

Pape ஸ்டேசன் தண்டவாளங்களுகிடையில் மரணதேவன் கையில் உயிருடன் செல்லும் காட்சி மட்டுமே கண்ணிற்கு தெரியுது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.