பொங்கலோ! பொங்கல்! பொங்கலோ! பொங்கல்!ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்! இந்
நானிலம் காத்திடும்
ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்!


நானறிந்த வரையில் தைப்பொங்கலை ஈழத்தமிழர்கள் யாவரும் தமிழர்தம் திருவிழாவாகத்தான் கொண்டாடி வருகின்றார்கள். அவ்விதமே தொடர்ந்தும் கொண்டாடுவோம். தமிழர்தம் திருவிழாக்களில் இந்தத்தைத்திருநாள் எனக்கு மிகவும் படித்த திருவிழா என்பேன். இவ்வுலகின் உயிர்களுக்குக் காரணமான இரவியினை நோக்கி, மானுடர்தம் வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவினை அளிக்கும் உழவரை எண்ணி,  உலகு இயந்திரமயமாகுவதற்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை உழவருக்கும், அனைவருக்கும் பல்வகைகளில் உறுதுணையாகவிருந்துவரும்  மாடுகளைப்போற்றித் தமிழர் அனைவரும் (உழவருட்பட) வருடா வருடம் தம் நன்றியினைத்தெரிவிப்பதற்காகக்கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

பொங்கல் என்றதும் என் பால்ய காலத்து நினைவுகள் படம் விரிக்கின்றன. அப்பொழுது நாம் வவுனியாவில் குடியிருந்தோம். பொங்கல் அன்று முற்றத்தில் புதுப்பானையில் அதிகாலையிலேயே எழுந்து , நீராடி, அம்மா பொங்குவதும், பொங்கும் சமயங்களில் சிறுவர்களாகிய நாம் வெடிகொளுத்தி மகிழ்வதும் இன்னும் நெஞ்சினில் படம் விரிக்கின்றன. எழுபதுகளில் ஈழத்தமிழர் வாழ்வில் ஏற்பட்ட அரசியல் ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டதைத்தொடர்ந்து இவ்விதமான திருவிழாக்களில் வெடி கொளுத்துவதும் இல்லாமலாகிப்போனது. என் பால்ய காலத்து வாழ்வில் இவ்விதமான திருவிழாக்களைக்கொண்டாடி மகிழ்ந்த காலமென்றால் அது நாம் வவுனியாவில் இருந்த காலம்தான். இவ்விதமான பண்டிகைக்காலங்களில் அக்காலகட்ட நினைவுகளை மீளவும் அசைபோடுவதும் வழக்கமாகிப்போனது.

பொங்கல் என்றதும் இன்னுமொரு விடயமும் உடனடியாக ஞாபகத்துக்கு வருவதுண்டு, அது ஏழாம் வகுப்பு மாணவனான நான் எழுதி அனுப்பிய 'பொங்கலோ! பொங்கல்!' என்ற கவிதையினைச் சுதந்திரன் பத்திரிகை அச்சில் வெளியிட்டு உற்சாகப்படுத்திய நாள் இந்தப்பொங்கல் திருநாளில்தான். என் எழுதுலக வாழ்க்கையில் முதல் முதலாக அச்சில் வெளியான படைப்பு அந்தப் 'பொங்கல்' கவிதைதான். அது ஒரு சிறுவர் கவிதை!

கூடவே இன்னுமொரு கவிதையின் ஞாபகமும் தோன்றுகிறது.  கனடாவில் வெளியான எனது 'எழுக அதிமானுடா' கவிதைத்தொகுப்பில் அடங்கியுள்ள 'தை பிறக்க' என்னும் என் ஆரம்பகாலக்கவிதையொன்று பற்றிய ஞாபகம்தானது. ஒரு பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள கவிதையது. நாயகி அவள் பிறக்கும் இந்தத்தையிலாவது அனைவருக்கும் வழி பிறக்கட்டும் என்னும் நம்பிக்கையுடன் காத்து நிற்பதாக  அமைந்துள்ள கவிதை.

தை பிறக்க...

மூவேந்தர் முன்னாண்டார். முடி கண்டார்.
படை வென்றார்.
நாவெந்தர் நாம் நாவளந்தோம்.
நடந்ததுவோ முடிந்த கதை.
தொடர்ந்ததுவோ சோக வதை.
இருந்தும்
நம்பிக்கை நான் இன்னும்
இழக்கவில்லை.
ஒன்றுபட்டு, படைசமைத்து
வென்றுவிடும் வாழ்வொன்று
அன்றுதானில்லை. ஆயின்'
இன்று வருமெனுங்கனவில்
தையல் நானிருக்கின்றேன்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்ற பெரும் துணிவினிலே
கோ '
தை யானிருக்கின்றேன். ஒரு
பா
தை தான் காண்கின்றேன்.

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். இந்தத் '
தை' அனைவருக்கும் நல் வழியினைக்காட்டட்டும்.
அனைவர்தம் வாழ்விலும்
பொங்கும் மங்கலம் எங்கும் பொங்கட்டுமென
வாழ்த்தட்டும். கூடவே நாமும் வாழ்த்துவோம்.
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!
உழவர் திருநாளில் உங்கள் அனைவருக்கு
உளமார்ந்த வாழ்த்துகள்.
இந்த இனிய நாளில் அனைவர் வாழ்விலும்
இன்பம் பொங்கட்டும்!
உலகின் பல்வேறு திக்குகளிலும் வாழும்
உழைப்பாளர்கள் வாழ்வில்
உழைப்புக்கேற்ற ஊதியம்
பொங்கி நிறையட்டும்!
போர்கள் மலிந்த பூமியில்
சமாதானம், அமைதி, மகிழ்ச்சி
பொங்கட்டும்!
பல்வேறு அடக்கு,
ஒடுக்குமுறைகளுக்குள்
சமுதாயச் சீர்கேடுகளால் வாடும்
அனைவர் வாழ்விலும் சீர்கேடுகள் நீங்கி
சமத்துவம் பொங்கட்டும்!
இனம், மதம், மொழி, வர்க்கம்,
பால் எனப் பல்வேறு பிரிவுகளாகப்
பிரிந்து மோதும், சாடும் அனைவர் வாழ்விலும்
போதுமிந்தப் பிரிவுகள் இனியுமென்ற அறிவு
பொங்கட்டும்! அன்பு பொங்கட்டும்! நம்பிக்கை
பொங்கட்டும்!

பொங்கலோ! பொங்கல்!
பொங்கும் மங்கலம்
எங்கும் தங்குக!
பொங்கலோ! பொங்கல்!
பொங்கலோ! பொங்கல்!