மதுரக்குரல் மன்னன் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவு!எழுத்தாளர்  குரு அரவிந்தன்தமிழ்த்திரை உலகில் அன்றும் இன்றும் பலராலும் விரும்பப்பட்ட குரலுக்கு உரியவரான, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடலின் மூலம் பலரின் மனதைத் தொட்ட, பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.சிறீனிவாஸ் சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது 82வது வயதில் (14-04-2013) காலமானார். 1930ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ம் தேதி ஆந்திரமாநிலத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்த இவர் பனிந்திரஸ்வாமி, சேஷகிரியம்மா தம்பதிகளின் மகனாவார். திருமணமான இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றார்கள். பட்டதாரியான, கர்நாடக சங்கீதம் கற்ற இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற எட்டு மொழிகளை அறிந்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை இவர் பாடியுள்ளார்.
 
ஆர்.நாகேந்திரராவின் ஜாதகபலம் என்ற படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியதன் மூலம் திரையுலகிறகு இவர் அறிமுகமானார். ஏ.எம்.ராஜா, ஜிக்கி ஆகியோரின் பாடல்கள் ஒரு காலத்தில் பலராலும் விரும்பிக் கேட்கப்பட்டது பலருக்கும் ஞாபகம் இருக்கலாம். அதேபோல பி.பி. சிறீனிவாஸ், ஜிக்கி இணைந்து பாடிய பாடல்களும் ஒருகாலத்தில் பிரபலமாக இருந்தன.
 
1952ம் ஆண்டு ஜெமினியின் மிஸ்டர் சம்பத் என்ற இந்திப் படத்தில் கீதாடட்டுடன் இணைந்து பாடியதில் இந்தித் திரையுலகில் அறிமுகமானார். 1955ம் ஆண்டு ஹரிச்சந்திரா என்ற மலையாள திரைப்படத்தில்  பாடல் பாடியதன் மூலம் மலையாள திரையுலகிறகு அறிமுகமானார். தமிழ் திரையுலக பிரபல நடிகர்  ஜெமினிகணேசனின் குரலுக்கு இணையாக இவரது குரல் இருந்ததால் நடிகர் காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்காக அதிக திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார். கன்னட திரைப்பட உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய நடிகர் அமரர் ராஜ்குமாருக்கும் கன்னட மொழியில் அதிக பாடல்களை இவர் பாடியுள்ளார். லதா மங்கேஸ்கர்;, பி.பானுமதி, பி.சுசீலா, எஸ்.ஜானகி, கே.ஜமுனாராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, ஆகியோருடன் இவர் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாது, பக்திப் பாடல்கள், சுலோகங்கள், தோத்திரங்கள் என்று வேறுபல பாடல்களும் அதிகம் பாடியுள்ளார். இவரது கலைச் சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது மட்டுமல்ல, குரலிசைக்காகப் பல்வேறு விருதுகளும் பெற்றிருந்தார். கன்னட மொழியில் சுமார் 3000 பாடல்களைப் பாடிய இவருக்கு, கர்நாடக மாநிலத்தின் சிறந்த விருதான கன்னட ராஜ்ஜோதஸ்;சவ விருதும் கன்னட முதலமைச்சரிடம் இருந்து இவருக்குக் கிடைத்திருந்தது.
 
பி.பி. சிறினிவாஸ் பல தமிழ் பாடல்களைப் பாடியிருந்தாலும், சில பாடல்கள் மனதைவிட்டகலாமல் இன்றும் இருக்கின்றன. 1961ம் ஆண்டு பாசமலரும் அதைத் தொடர்ந்து பாவமன்னிப்பும் இவருக்குப் பகழ் தேடிக் கொடுத்தன. ஆண்டொன்றுபோனால், ஆறோடும் மண்ணில் எங்கும், அன்புமனம், அவள் பறந்து போனாளே, அழகிய மிதுலை, சின்னச்சின்ன, என்னருகே நீயிருந்தால், இன்பம் பொங்கும் வெண்ணிலா, இந்த மன்றத்தில் ஓடிவரும், இரவு முடிந்துவிடும், காதல் நிலவே, கண்ணும் கண்ணும் பேசியதும், மாம்பழத்து வண்டு, மனிதன் என்பவன், மயக்கமா கலக்கமா, மௌனமே பார்வையால், நீ போகுமிடமெல்லாம், நிலவே என்னிடம் நெருங்காதே, நெஞ்சம் மறப்பதில்லை,  நேற்றுவரை நீயாரோ, நிலவுக்கு என்மேல், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், பார்த்துப் பார்த்து, பொன்னென்பேன், பொன்னொன்று கண்டேன், பூஜைக்கு வந்த மலரே, ரோஜா மகளே இராஜகுமாரி, தென்றலே நீ பேசு, தோள் கண்டேன், உடலுக்கு உயிர் பாரம், உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா? உன்னழகைக் கண்டுகொண்டால், யார் சிரித்தால், யார் யார் யார் இவர் யாரோ? போன்ற பி.பி. சிறினிவாஸின் சில பாடல்கள் இன்றும் எங்கள் மனதை விட்டகலாமல் இருக்கின்றன.
 
பி.பி.சிறினிவாஸின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப் பிரபல திரையுலகப் பிரபலங்கள் பல வந்திருந்தனர். மறைந்த சிறினிவாஸின் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, ராகவேந்திரா ராஜ்குமார், கவிஞர் வைரமுத்து, பாடகர் ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, மாணிக்க விநாயகம், எஸ்.ஜானகி, சின்மயி உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
 
‘அவர் சிறந்த ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, தரமான பாடல்களைத் தரவேண்டும் என்ற கொள்கையும் கொண்டவர்’ என்று மறைந்த பாடகர் பி.பி. சிறினிவாஸைப்பற்றி அவரோடு பல பாடல்களை இணைந்து பாடிய பிரபலபாடகி எஸ். ஜானகி குறிப்பிட்டிருந்தார். இசை இரசிகர்களைவிட்டு அவர் மறைந்தாலும் காலமெல்லாம் அவர் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.