- வெங்கட் சாமிநாதன் -வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும். மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. மறைந்த கலைஞனின் ஆளுமையையும் நேர்மையையும் பிரதிபலிப்பதே போல, மிக எளிமையான மிகுந்த தன்னடக்கம் கொண்ட, எவ்வித பகட்டும் அற்ற அவருடன் கொண்ட தங்கள் பாசத்தையும் அவரது ஆளுமையும் செயலும் தங்களுக்குத் தந்த வியப்பையும் பதிவு செய்துள்ள அஞ்சலி இது. வேலாயுதம் அந்தக் கலைஞனின் பெயர்.  தன்னடக்கம், எளிமை என்றேன். ஆளுமையும் செயல் திறனும்  தந்த  வியப்பு என்றேன். இவையே அவரை அந்த சோக முடிவுக்கு இழுத்துச் சென்றதோ என்னவோ.

வேலாயுதத்தோடு எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது ஏழெட்டு வருஷங்களுக்கு முன். அதைப் பரிச்சயம் என்று கூட சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. புதுவையிலிருந்து களம் என்ற அமைப்பிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. களம் ஒரு நாடகக் கலை அமைப்பு. களம் எனக்கு நவீன நாடகச் சிற்பி என்ற விருது அளிக்கும் விழாவுக்கான அழைப்பு அது. (ஆமாம் ஐயா, நீங்கள் தப்பா படிக்கலை. நானும் தப்பா எழுதலை. விருது தான்.  எனக்குத் தான். விருது தான். உலகத்தில் எத்தனையோ வேடிக்கைகள் நடக்கின்றன. இப்படி ஒரு aberration நடந்துவிடாதா என்ன?) அதிலும் வேடிக்கை நவீன நாடகச் சிற்பி. நவீன நாடகம் என்னும் கோமாளித்தனத்தை வெறுத்து எழுதிக்கொண்டிருக்கும் நான் எப்படி அதன் சிற்பி ஆவேன்? தமிழ் நாட்டில் யார் யாரோ எதெதெற்கோ என்னென்னவோ வெல்லாம் ஆகிறார்கள்? சினிமாவே தெரியாத, அபத்தமான நாடகத்தையே சினிமா என்று மார்க்கெட்டில் தள்ளி வருபவர் இயக்குனர் இமையமாகும் போது, நான் நவீன நாடக சிற்பி ஆகக்கூடாதா என்ன? ஆனாலும், நான் கோபப் பட்டுக்கொண்டு ”எனக்கு உங்கள் விருதும் வேண்டாம். நானும் வரவில்லை,” என்று எழுதிவிட்டேன். இந்த செய்தி மதுரையில் இருந்த ராமானுஜத்துக்குப் போய், பின் அவர்  தான் என்னுடன்  தொலை பேசியில் தொடர்பு கொண்டு சொன்னார். “மறுக்காதீர்கள். களம் அமைப்பினர் எல்லாம் உற்சாகம் மிகுந்த இளைஞர்கள். நல்லவர்கள். நாடகத்தில் தீவிரமும் பற்றும் கொண்டவர்கள். நானும் வருகிறேன். வாருங்கள்.” என்றார். பின்னர் புதுவை சென்றேன். அங்கு நான் சந்தித்தது வேலாயுதத்தை. இன்னும் சிலர் இருந்தார்கள். எனக்குத் தெரிந்தவர் (செ.ரவீந்திரன், ஆறுமுகம், குணசேகரன் இத்யாதி) யாரும் அப்போது அங்கு இல்லை. புதுவை முதல் அமைச்சர் ரங்கசாமி தான் தலைமை தாங்கி விருது வழங்குபவராக ஏற்பாடாகியிருந்தது.  சுற்றியிருந்த களம் அமைப்பினர் பலரில் வேலாயுதமும் ஒருவர். ஆனால் இப்போது தான் தெரிகிறது, வேலாயுதம் சிந்தனையில் தான் களம் அமைப்பு உருவானதும், செயல்படுவதும் என்று. 

விருது ஒரு புறம் இருக்கட்டும் பல நல்ல இளம் இதயங்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி தான். அதற்கு இந்த அழைப்பு காரணமானது. என்னுடன் விருது பெற்றவர்களில் ராஜூவும் கலைராணியும் இருந்தனர். தூரத்தில் அரங்கில் புன்னகை பூத்த முகத்துடன் ஒருவர் என்னுடன் உதவிக்கு உடன் இருந்தவர், அவர் யாரென்று பக்கத்திலிருந்த ராஜூவைக் கேட்டேன். அவர் தன் வினோத். அவர் தில்லிக்கு தன் நாடகத்துடன் வந்திருந்தார். அவர் நாடகத்தைத் தான் நீங்கள் கடுமையாகத் தாக்கி இருந்தீர்கள்” என்று கொஞ்சம் அதிகமாகவே விளக்கம் தந்தார். அதில் அவருக்கு ஒரு சுவாரஸ்யம். வினோதும் களம் இயக்கத்தில் ஒரு பொறுப்பானவர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படிக் கூட ஒரு மனிதரா?, தன் நாடகத்தைத் தாக்கியவனுடன் புன்னகையுடன் பழகுவதற்கு,? என்று. திரும்ப என்னுடன் தான் அவர் சென்னை வரை மிகுந்த சினேக பாவத்துடன் பேசி வந்தவர். “அதனால் என்ன? நான் அதில் கோபிக்க என்ன இருக்கிறது? உங்கள் அபிப்ராயத்தை எழுதினீர்கள். அதில் எனக்கு சந்தோஷம் தான். வேறு யாரும் என் நாடகத்தைப் பற்றி எழுதவில்லை” என்றார். பின்னர் ஆறுமுகம், வினோத் மற்றும் களம் உறுப்பினர் அனைவரும் ஹோட்டலில் சேர்ந்து கொண்டனர். அப்போதும் வேலாயுதம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ளவில்லை.

பின்னர் சில வருடங்களுக்குப் பின் என் மகனின் உல்லாசப் பயணத்தில் நானும் சேர்ந்து புதுவை சென்றிருந்த போது, நான்  தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது கிடைத்தது ஆறுமுகம் ஒருவர் தான். “இங்க வாங்க நீங்க முதல்லே,” என்று தன் பல்கலைக் கழகத்தின் நிகழ் கலைத்துறை அலுவலகத்திற்கு அழைத்தார். வேறென்ன வேண்டும்.? அன்று அந்த பிற்பகல் மணி மூன்றிலிருந்து இரவு பத்து மணி வரை என் பொழுது அவருடன் தான் கழிந்தது. இதைச் சொல்லக் காரணம், அங்கு ஆறுமுகத்துடன் நான் பார்த்தது ஆறுமுகத்துக்கு உதவியாக இருந்த வேலாயுதத்தை. என் மகனும் மற்றோரும் ஹோட்டலுக்குத் திரும்பிவிட, நாங்கள் மூவரும் பாருக்குச் சென்றோம். பத்து மணி வரை இருந்த பொழுது முழுதும், மிக அன்யோன்னியம் நிறைந்த பொழுது. எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்த சந்தோஷம். அப்போது தான் வேலாயுதம் தன் விஸிட்டிங் கார்டைக் கொடுத்தார். அந்த கார்டில் அச்சிட்டிருந்தது

“ S. Velayoudame, M.A. M.Phil, D. Co.op,
Instructor, Department of Performing Arts,
Pondicherry University,
Kalapat, Pondicherry.
E-mail இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

புதுச்சேரியிலேயே பிறந்தவர், படித்தவர் என்ற காரணத்தினால்தான் தன் பெயரையும் ஃப்ரெஞ்சு வழியில் எழுதுகிறாரோ என்னவோ, தெரியாது. இருக்கலாம். இதில் ஒரு வேடிக்கை, ஆனால் யதார்த்தம், மனதை உருக்கும் யதார்த்தம் இந்த வேலாயுதம் எம்.ஏ. எம்.ஃபில். டி. கோ.ஆப். புதுவை பல்கலைக் கழகத்தில் நிகழ்கலை பயிற்றுவிப்பவராக இருப்பவர், தான் படிக்கும் காலத்திலிருந்து, பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பிறகும் இடையிடையே அப்போதைய படிப்பையோ, வேலையையோ இழந்து விட நேரிடும் போது தன் குடும்பத் தொழிலான பால் வியாபாரத்துக்குத் திரும்ப வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியும் வந்திருக்கிறார். இந்த சோகக் கதை எனக்கு இப்போது அவரது பல்கலைத் தோழர்கள் பதிப்பித்துள்ள வியாளம் அஞ்சலித் தொகுப்பிலிருந்து தான் தெரிகிறது.

இடையில் சில மாதங்களுக்கு முன் இந்திரா பார்த்த சாரதியின் ராமானுஜர் நாடகம் புதுவையில் எஸ் ராமானுஜத்தின் இயக்கத்தில் மேடையேற்றப் பட்ட போது, பாண்டிச் சேரி பல்கலைக் கழகத்தின்  நிகழ் கலைத் துறையின் DEAN, ஆக இருந்த Dr. குணசேகரன் என்னை அந்நிகழ்ச்சிக்கும் அதையொட்டிய கருத்தரங்கிற்கும் அழைத்திருந்தார். அப்போது, ஆறுமுகத்தோடு தொலை பேசியில் வேலாயுதத்தைப் பற்றி விசாரித்தேன். பார்த்து இரண்டு வருஷத்துக்கு மேலாகி விட்டது பார்க்கலாமே என்ற நினைப்பு எனக்கு.. “பாவம் அவர் இப்போ இல்லீங்க, என்ன காரணமோ கொஞ்ச மாதம் முன்னாலே தான், அவர் தற்கொலை பண்ணிக்கொண்டு விட்டார்” என்று அவர் அளித்த பதிலை யார் எதிர்பார்த்திருக்க முடியும்? அப்போது என் வேதனை ஒரு நல்ல நண்பரை இப்படியா இழக்க வேண்டும் என்று. அந்த சமயம் பாண்டிச்சேரியில் இருந்த ராமானுஜத் தோடும் ரவீந்திரனோடும் கூட பேசும்போது ரவீந்திரனிடமிருந்து தான் அவருக்கு வேலாயுதத்தோடு இருந்த நெருங்கிய தொடர்பைப் பற்றி தெரிய வந்தது. வேலாயுதத்தின் ஆழ்ந்த நாடகத் துறை ஈடுபாடுகள் பற்றியும் குறிப்பாக நாடகத்திற்கான ஒளிவிதானிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம் பற்றியும் இது பற்றி வெளிவந்துள்ள இரண்டு புத்தகங்களை (ஒளியின் வெளி என்ற கட்டுரைத் தொகுப்பும், பின் வியாளம் என்னும் நண்பர்களின் நினைவஞ்சலிகளின் தொகுப்பும்) அனுப்பி வைப்பதாகச் சொன்னார். வேலாயுதத்தின் தற்கொலை அவரை மிகவும் ஆட்டம் கொள்ள வைத்துவிட்டது. அப்படிக் கிடைத்தது தான் வியாளம். ஒளியின் வெளி தொகுப்பிலும் வேலாயுதம் எழுதியுள்ள மிக நீண்ட கட்டுரையும் உள்ளது.

ஒளிவிதானிப்பில் தன் ஆர்வம் கிளைத்ததன் ஆரம்பத்தை ஒளியின் வெளியில் வேலாயுதம் சொல்கிறார். ”ஒரு விடுமுறையில் பொதிகை தொலைக்காட்சியில் கருஞ்சுழி நாடகம் தந்த ஒளிப்படிமங்கள் அவரை வேறு தளத்திற்கு இட்டுச் சென்றது, அந்தக் கணங்கள் தான் அவரை ஒளிவிதானிப்பாளராக நிலை நிறுத்தியுள்ளது என்கிறார். அதற்கும் முந்தைய காட்சி ஒன்றை முருக பூபதி நினைவுகூர்கிறார்: அது அவர்களின் உறவுத் தொடக்கம். மதுசாலையில். வேலாயுதம் தன் வாழ்க்கையில் பிடிப்பை இழந்துவரும் காலத்தின் ஒரு காட்சியாகவே அது தோன்றுகிறது. வேலாயுதம் அலைமோதும் மன நிலையில் பல உணர்வுகள் கொட்டி அலைக்கழிக் கின்றன. மாட்டுத் தொழுவத்தில் தாத்தாவின் முறுக்கேறிய அழுகையில் புதிதாகப் பிறக்கும் பாடல்களின் குரல் வலிமை தனக்குக் கிடைகாதா என்று ஏங்கி தொழுவத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததாகச் சொல்கிறார்.வேலாயுதம். இந்நினைவுகளில் தோயும் கணங்களில் தான் குடி மட்டும் தான் உணர்ச்சி வயப்பட்ட மனிதனுக்கு சாவை ஒத்திப் போடும் வல்லமை தருவதாகவும் சொல்கிறார். அந்த தாத்தாவிடமிருந்து தான் நாடகத்தின் தாதுக்களை எடுத்து வந்திருப்பதாகவும் சொல்கிறார். மிக அபூர்வமான சோகத்தின் கனம் நிறைந்த கணங்கள் அவை. வேலாயுதம் என்னும் ஒளிவிதானிப்பாளரின் நாடகக் கலை  ஈர்ப்பின் தொடக்கம் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தாத்தாவின் குரல் வலிமையில். எதன் தாதுக்கள் நினைத்தும் பார்க்க வியலாத எந்த இடத்திலிருந்து கருக்கொள்ளும் என்று யார் சொல்ல இயலும்.? That is the magic and mystique of art, all arts.

இளங்கலை வரலாறு படிக்கும் மாணவருக்கு கருஞ்சுழி நாடகத்தில் ஒளிப் படிமங்கள் வாழ்க்கையின் பாதையை நிச்சயித்து விடுகிறது. முது கலைக்கு விண்ணப்பிக்கும் போது சிவகுமார் என்னும் நண்பர் சொல்கிறார். “முதுகலை நாடகப் பிரிவில் சேர்ந்தால், பால் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ளலாம். படிக்கவும் செய்யலாம்” ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் தொடர்கின்றன. பாதியில் விட்டு விடலாம் என்று தோன்றுகிறது. ஒளிவிதானிப்பு நாடகத் துறை என்னும் கலவையில் ஒரு அங்கமே. சிபு கொட்டாரத்தின் வழி காட்டுதலில் ஒளிவிதானிப்பு என்னும் கலையின் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு. நாடகத் துறையில் இருந்த 48 விளக்குகளில் 30 செயல்படாதவை. இந்த ஒழுங்கின்மை நம் நாடு முழுமையின் ஒழுங்கின்மையின் ஒரு சிறு பிரதிபலிப்பே. இருப்பினும் அது தான் வேலாயுதம் தொழில் நுட்பத்தையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினைத் தருகிறது. அது முதல் படி. அது தான் ரவீந்திரன் ஒளிவிதானிப்பாளராக செயல்படும் இடங்களில் எல்லாம் ஒளி அமைப்பின் தொழில் முறை உதவியாளராக இருந்தது வேலாயுதம் தான். அதையும் மீறி ஒளிவிதானிப்பில் இடையில் ரவீந்திரன் எதையும் மறந்துவிட நேரிட்டால், அதை உடன் நினைவு படுத்துவதும் வேலாயுதம் தான்.

வேலாயுதம் புதுவை பல்கலைக்கழக நாடகத் துறையில் அதிகார பூர்வமாக அறியப்பட்டது அவர் விசிட்டிங் கார்டு சொல்வது போல இன்ஸ்ட்ரக்டர். அதாவது பயிற்றுவிப்பாளர். தாற்காலிகமாக. அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தாற்காலிக நிலையில். முதலில் சிபி கொட்டாரத்தின் உதவியாளராகத் தொடங்கிய போது, ஒளிவிளக்குகளை செயல்படுத்துவதில் நிகழும் சிறு சிறு தவறுகளைக் கூட பெரிதாக்கி அவரைச் சிறுமைப்படுத்து வதில் முடிகின்றன. அடக்கமும் எளிமையும் இந்த சந்தர்ப்பங்களில் அவருக்கு உதவுவதில்லை. கற்றுக்கொள்ள போராடுபவரே அல்லாது, குருட்டு அதிகாரத்தை எதிர்த்துப் போராடக் கற்றவரில்லை. இருப்பினும் எத்தனையோ சந்தர்ப்பங்களில், நாடக இயக்குனர், ஒளி விதானிப்பாளர் நாடக விழாககள், பல்கலைக் கழக அரங்குகள், இப்படி எழும் சந்தர்ப்பங்கள் எல்லாம் அவர் கற்ற தொழில் நுட்பம் ஒளிஅமைப்புக் கலையின் விகாசத்துக்கு உதவியிருக்கின்றன. ரவீந்திரன் இது பற்றியே தன் கட்டுரைகளில், எங்கு வேலாயுதத்துடன் இருக்க நேரிட்டாலும், மதுக்கடைகளிலோ அல்லது வேறு எங்குமோ, அங்கு ஒளிஅமைப்பின் வண்ணக் கோலங்கள், சோதனை ரீதியான திட்டங்கள் பற்றியே அவர்கள் சொல்லாடல்கள் இருக்கும் என்று சொல்கிறார். மறுபடியும் வேலாயுதத்தின்  சோகங்கள் அழுத்தி வதைக்கும் நிலையில், முருக பூபதி, பதிவு செய்திருக்கும்  வேலாயுதத்தின் வார்த்தைகளை நினைவு கொள்ளலாம். ”குடி மட்டும் தான் உணர்ச்சி வயப்பட்ட மனக் கூர்மை கொண்டவனின் சாவை ஒத்தி போடும் வல்லமை கொண்டது”

அவர் பயிற்றிவிப்பாளராகவே இன்றோ நாளையோ என்ற தவிப்பிலேயே வாழ்ந்தவர். வாழ்ந்தவரா, சாவை ஒத்திப்போடும் தன் வல்லமையைச் சோதித்துக்கொண்டிருந்தவரா?  நாடகத் துறையில், இளம் முனைவர் பட்டத்துக்கான மாணவராக மறுபடியும் ஒரு முயற்சி. அதுவும் “அந்த ஒரு வருடம் வலியும் வேதனையும், பசியும் சேர்ந்து வருத்திய வருடம் தான். “பால் வியாபாரத்தை விடுத்து அனைத்தையும் இழந்து நிர்கதியான நிலை என்று எழுதுகிறார் வேலாயுதம். “உலக நாடக விழாவில், வினோதின் இயக்கத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நாயர் நாடகத்தின் ஒரு மாணவர் செய்த ஒளிவிதானிப்பைக் கண்டு மனம் நொந்து, ஒளிவிதானிப்பின் செயலாற்றுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார். இம்மாதிரி மனம் நோகச் செய்த ஒளி அமைப்பு என்று  வெளிச்சம் என்னும் நாடகத் தயாரிப்பு, அது தமிழகத்தின் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இப்படிப் பல. களம் என்னும் புதுவை நாடக இயக்கத்தில் வேலாயுதம் பணியாற்றிய ஒளிவிதானிப்புகள் எல்லாம் பாராட்டுக்குரியன என ரவீந்திரன் குறிப்பிட்டுச் சொல்கிறார்.  ஒளியின் வெளி என்ற நாடக ஒளிவிதானிப்பு மாத்திரமே ஆராயும் கட்டுரைத் தொகுப்பில் ஒளி அமைப்பு பற்றி விஸ்தாரமாக, அதன் வரலாறு பற்றியும் செயல்பாடு பற்றியும் ஆராயும் நீண்ட கட்டுரை வேலாயுதத்தினது தான் இருப்பினும் வேலாயுதம் புதுவை பல்கலைக் கழகத்தின் ஒளி அமைப்புக்கலை விரிவுரையாளர் பணி தனக்கு கிடைக்க தன் அனுபவமும் திறமையும் தகுதியும் உதவும் என்று உறுதியோடு இருந்த வேலாயுதத்திற்கு புதுவை பல்கலைக் கழக தேர்வுக் குழு தந்தது ஏமாற்றம் தான். திருச்சூரில் வந்த இது போன்ற வாய்ப்பும், தேர்வுக்குழுவில் தன்னை அறிந்த தன் திறமையையும் அனுபவத்தையும் அறிந்த தேர்வாளர்கள் ராஜூ, சிபு கொட்டாரம் குழுவில் இருந்த போதும் அந்த எதிர்பார்ப்பும் சிதற அடிக்கப்பட்டது.
 
திறமை, அனுபவம், உழைப்பு எல்லாம் இருந்தும் ஏமாற்றமும்,, சிறுமைப் படுத்தலுமே தனக்கு விதிக்கப்பட்டது என்று தான் எதிர்கொள்ளும் எந்த நிறுவனமும் சொல்லும் பதில் என்றால், எந்த நிலையான பணிக்கும் உத்திரவாதம் இல்லாது, இன்றோ நாளையோ என்று நிலையற்ற தள்ளாடலிலேயே சுற்றியிருக்கும் சமூகமும் நிறுவனமும் தன்னை வைத்திருக்க விரும்புகிறது என்றால், அதன் காரணமென்ன? எத்தனை தடவை விழுந்தாலும் எழுந்து நிற்கும், மீண்டும்  கேட்கும் தன் தன்னடககமா? எத்தனை சிறுமையையும் தாங்கும் எளிமையா?  வீழும் போதெல்லாம் தான் விடாது தன் குடும்பம் காக்கச் சார்ந்து கொள்ளும் பால் வியாபார பின்னணியா? தன்னைச் சுற்றியிருக்கும் சமூகம் அப்படிப்பட்ட ஒரு பின்னணியிலிருந்து எழுந்து வந்தது தானே? அது ஏன் தனக்கு கை கொடுக்க மறுக்கிறது?

அவரைப் பற்றித்தெரிந்த வரையில் அவர் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தவரில்லை. கருஞ்சுழி நாடகத்தின் ஒளி அமைப்பைக் கண்டு தானும் ஒளிவிதானிப்பவராக ஆகும் எண்ணம் உதித்த 1994 –ம் ஆண்டிலிருந்து அவர் இறந்த 2012-ம் ஆண்டு வரை அவர் எங்கும் நிம்மதியாக, சிக்கல் இல்லாது, உள்ளுக்குள் குமைந்து குமைந்து தன் வேதனைகளை அடக்க முயலாத நாட்கள் இல்லை என்று தான் தோன்றுகிறது. இருப்பினும் அவர் பயிற்சியாளாராகவே தொடர்ந்தவர். 1996 லிருந்து ஆறு ஆண்டு காலம் அவர் பால்விற்றுப் பிழைத்த போதும் ஒளிவிதானிப்பில் அவர் நாட்டம் குன்றவில்லை. ரவீந்திரன் பதிவில் காணப்படுவது, ”வேலாயுதம் தன் நண்பர் ஞா. கோபியின் நாடகத்திற்கு ஒளிவிதானிப்பு செய்ததிலிருந்து புதுவை பல்கலைக் கழகத் தயாரிப்புகள், பின் களம் என்ற இயக்கத்தின் தயாரிப்புகள் அனைத்துக்கும் ஒளிவிதானிப்பு வேலாயுதத்தினதாக இருந்தது. மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஒளி விதானிப்பு மாத்திரமல்ல, உடை அலங்காரம், முக ஒப்பனை, அரங்க நிர்மாணம் என பல நிலைகளிலும் பின்னரங்க செயல்பாடுகளிலும் அவர் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்டவர்,”

ஒளிவிதானிப்புக்கே அவர் முறையாகவோ நிறுவன அங்கீகரிப்பு பெற்றோ, கற்றவரில்லை. தானாக தன் முயற்சியில் கற்றது. ஒளியின் வெளியில் அவர் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரை அவர் இத்துறையில் எவ்வளவு தூரம், சென்றுள்ளார் என்பதை அறியத் தரும். அப்படியிருக்க, முக ஒப்பனை, உடை அலங்காரம், மேடை அமைப்பு, எல்லாம் கற்றது எங்கே? இதெல்லாம் போக, மேடை மேலாண்மை என்று ஒரு புதிய பிரிவைப்பற்றியும் அவர் பேசுகிறார். இது பற்றி நான் கேள்விப்பட்டதும் இல்லை. யாரும் இது பற்றி பேசி, பிரஸ்தாபித்துக் கேட்டதும் இல்லை. மேலை நாடுகளில் தோன்றியுள்ள இது ஒரு புதிய துறை, என்று ரவீந்திரன் சொல்கிறார். நாடக அரங்கின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒன்று என்கிறார். இப்படி பூதாகாரமாக விகசிக்கும், என்ன திட்டினாலும் அடக்கி ஒடுக்கினாலும், தன் அவமானங்களையெல்லாம் தன்னுள் புதைத்துக் கொண்டு தன்னை விகசித்துக்கொண்டே செல்லும் ஒரு பால் வியாபாரியை என்ன செய்வது? ரவீந்திரனின் அஞ்சலியில் தான் வேலாயுதத்தின் இயக்கத்தில் கண்ட கடைசி  நாடகம் பற்றிச் சொல்கிறார்: நாடகத் துறைக்காக அவர் இயக்கத்தில் உருவான நாடகத் தயாரிப்பினை ஸ்டுடியோ அரங்கில் பார்த்தேன். நாடகத்தின் பெயர் நினைவில் இல்லை. மொழிபெயர்ப்பு நாடகம். மரணத்தை எதிர்கொள்ளும் ஒரு மனிதனின் வாழ்வுயர் போராட்டம் இந்நாடகம். இந்நாடகத்திற்கான அரங்க நிர்மாணம் உடை ஒப்பனை ஒளிவிதானிப்பு எல்லாமே வேலாயுதத்தின் கைவண்ணத்தில் உருவானவை. இந்நாடகத்தின் போது பின்னரங்க வெண்திரையின்(cyclorama) மீது பாய்ச்சப் பெற்ற காட்சிப் படிமங்கள் எல்லாமே நாடகத்தின் கதையாடலுக் கான குறியீடாகவே விளங்கின. அவர் அளவில் அவருக்கான வெற்றியே தவிர, பார்வையாளர் பலரின் பார்வையில் ஒரு அலட்சியமே காணப்பட்டது. இதன் பிறகு அவர் நாடகத் துறைக்காக எந்த நாடகமும் தயாரித்தளிக்க முன் வரவில்லை”

அவரை பல்கலைக்கழக அரங்கத்தில் பார்க்கக் கிடைத்த கடைசி நாளன்று அரங்கத்தில் பார்வையாளர் இடத்தில் வருவதும் அமர்வதும், பின் வெளியேறுவதும் பின் திரும்ப வந்து அமர்வதுமாக ஒரு நிம்மதியற்ற அலையாடலில் காணப்பட்டதாக அருகில் இருந்த ஒருவர் எழுதுகிறார்.  அவர் அழைக்கப்படுகிறார். காணவில்லை. எங்கோ சென்றிருப்பார். வருவார் என்று காத்திருக்கிறார்கள் பின்னும் அவர்  வரவில்லை. அவரைக் காணவில்லை. தேடுதல் தொடர்கிறது. நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் புதுச்சேரி எல்லை தாண்டிய ஒரு சவுக்குத் தோப்பில்……. அவர் வாழ்க்கை அவரது முயற்சியிலேயே முடிந்தது. கடவுளின் இடையூறின்றி. காவல் துறை அதிகாரி ஒருவர் விசாரிக்கிறார்: “அவரை மாணவர்களும் கேலி செய்வார்களாமே, அப்படியா?” என்று. என்ன பதில் கிடைத்தது என்று சொல்லப் படவில்லை. ஏன் கேட்டோம்? என்று தோன்றியதாலோ என்னவோ அவர் அந்த இடத்தை விட்டு நகர்கிறார் என்று அது முடிகிறது.

அவர் பங்களிப்பு எதற்கும், எந்த துறையிலும், பாராட்டுக்கள் அவருக்கு கிடைத்தில்லை. திட்டுக்கள் தான் என்று ரவீந்திரன் சொல்கிறார். திறமை வாய்ந்த ஆனால் எளிமையும் அடக்கமும் கொண்டவன் சக மனிதனால் ஏன் கொடுமைப் படுத்தப் படுகிறான்? 3-ம் வருடம் படிக்கும் கல்லூரி மாணவர்கூட்டம் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை ஏன் ragging சித்திர வதை செய்து தற்கொலைக்கு நிர்பந்திக்கிறது.? ஒரே தாழ்த்தப்பட வகுப்பைச் சார்ந்த வண்ணார் குடும்பம் தம் வகுப்பைச் சேர்ந்த படித்த, காலனி வீடுகளில் வாழ்பவர்களையும், அவர் வீட்டின் முன் நின்று “சாமியோவ்” என்று கூவி சலவைக்குத் துணி கேட்கிறது? (இமையத்தின் கோவேறு கழுதைகள்) சிவகாமியின் நாவல்களிலும் இதே நிலை தான். ஆனால் காட்சிகள் தான் வேறு. சில மாதங்கள் முன் மிகக் கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண்ணும் சரி அவளை சித்திர வதை செய்த இளம் வயது கும்பலும் சரி, மிகுந்த ஏழ்மையில் கிராமத்தை விட்டு தில்லிக்கு பிழைப்பு தேடி வந்தவர்கள் தான். பெண் தன் முயற்சியில் தன்னை உயர்த்திக்கொள்ள முயன்றவள். அவளைக் கொன்ற கும்பல் தம் மிருகத்தனமான முரட்டு வழியில் வாழ்க்கையை அனுபவிக்க தேர்ந்துகொண்டவர்கள். (சலோ யார் மஜா லேன் – come, let us have fun) அந்தக் கூட்டம் ஆணின் பலம், முரட்டுத் தனம், எல்லாம் திரண்டது அவர்கள் பெற்ற அதிகாரம். ஒரு நிறுவனத்தின் தயவில் வாழும் விஞ்ஞானி, கலைஞன், அறிஞன், தன் இயலாமையின் காரணத்தால் நிறுவனத்தின் அதிகாரத்துக்கு பணிந்து தான் வாழ்கிறான். அல்லது இரையாகிறான். போரிஸ் பாஸ்டர்நக் வாய் அடைக்கப்பட்ட போது ஒரு சின்ன முனகல் கூட அவரிடமிருந்து எழவில்லை. அவருக்கு எதிராக பூதாகாரமாக நின்ற அதிகாரம் சோவியத் தலைமையில் இருந்த லியோனிட் ப்ரெஸ்னயேவ். அப்போது ஒருவர் சொன்னார். யாரென்று நினைவில் இல்லை. “யார் இந்த ப்ரெஸ்னெயேவ்? வருங்கால சரித்திரம் சொல்லும், ”போரிஸ் பாஸ்டர்னக் வாழ்ந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த ஒரு அரசியல் வாதியின் பெயர் ப்ரெஸ்னயேவ்” கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. அதற்குப் பின் பாஸ்டர்னக் எதுவும் எழுதாமலேயே மறைந்தார். புதுச்சேரியில் அப்படி ஒரு கலைஞன் தன் கலை வாழ்வு பூரண மலர்ச்சி அடையும் முன்னேயே மொட்டாகவே வாடி உதிர்ந்துபோனான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


வெ.சா.வின்  'தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்' கட்டுரையும், வியாளம், வியாளி பற்றிய கருத்துகள் சிலவும்.  - வ.ந.கிரிதரன் -

வெ.சா.அவர்கள் தனது  'தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்' கட்டுரையில் "வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்." என்று வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தார். அது பற்றிச் சில வார்த்தைகளைப் பதிவு செய்வதே இக்குறிப்புகளின் நோக்கம்.  தமிழ் இலக்கியத்தில் வியாளம் என்ற சொல் பாம்பு, புலி, யாளி, கெட்ட குணமுள்ள யானை போன்ற பல அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.  தோலாமொழித்தேவர் இயற்றிய 'சூளாமணி'யில் 912 பாடலாகப் பின்வரும் பாடல் வருகிறது.

அடுகடா மாவி நாறு மழிமதங் கருவி வீழத்
தொடுகடா வயிரத் தோட்டி யுடையன 3தொடர்க ளூன்ற
விடுகொடா வியாள நிற்ப மெல்லவன் பணிகள செய்யும்
படுகடாக் களிறுந் தேரும் புரவியும் பண்ணு கென்றான்.
 
இங்கு 'விடுகொடா வியாள நிற்ப' என்பது 'நம் பட்டத்து யானையும் ஒழிக' என்னும் அர்த்தத்தில் வருகிறது.
 
சூடாமணி நிகண்டு வியாளம் பாம்பின் இன்னுமொரு பெயர் என்னும் தகவலினைத் தரும்:
 
பாம்பின் பெயர்:  அரவு, கட்செவி, போகி, அகி, அரி, வியாளம், சர்ப்பம், உரகம், பன்னகம், நாகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம், பணி,
 
அருணகிரிநாதரும் ஓரிடத்தில் வியாளம் என்பதை பாம்பு என்னும் அர்த்தத்தில் பாவித்திருப்பார்.
 
அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ
     டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த
          அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக  என்னும் திருப்புகழ் வரிகளில் வரும் 'மணிமுடிவி யாள மிட்ட ழுந்த' என்னும் வரிகள் 'ரத்தின முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியை கயிறாகப் பூட்டி' என்னும் அர்த்தத்தில் வருகின்றன. இங்கு பாம்பாகிய வாசுகியைக் குறிப்பதற்கு அவர் வியாளம் என்னும் சொல்லினைப் பாவித்திருப்பார்.
 
கம்பராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் வரும் சடாயு காண் படலத்தில் வரும் மிகைப் பாடல்களில் வியாளம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது:
 
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி, உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள், செலசரம் ஆகிய பலவும், தெரிக்குங்காலை. 24-4
 
மகாபாரத யுத்தத்தின் நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்ததாக வருகிறது.

இது பற்றி அவருக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதிலளித்த அவர் தனது கடிதத்தின் இறுதியில் 'கடைசியில் எந்த சொல் வியாளத்துக்கு பொருத்தமான அர்த்தமாக இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள். சொல்லுங்கள்' என்றொரு வேண்டுகோளினையும் விடுத்திருந்தார்.

மேற்படி 'வியாளம்' என்னும் நூலானது 'மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது' என்று வெ.சா. தனது கட்டுரையில் 'வேலாயுதம்' என்ற அந்தக் கலைனைப் பற்றி அறிமுகம் செய்திருப்பார்.
 
இது பற்றிய எனக்கெழுதிய தனது கடிதத்தில் வெ.சா. அவர்கள் 'ஒரு வேளை இது யாழ்ப்பாணத் தமிழோ - {ஒளி விதானிப்பு போன்ற பல சொற்கள் அந்த புத்தகத்தில் வருகின்றன. வேலாயுதத்தின் நண்பர்கள், கோபி போன்றவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் )' என்றொரு சந்தேகத்தினையும் எழுப்பியிருந்தார்.

வியாளமும், கீர்மலை 'வியாளி'யும்

சிறிது சிந்தனையினை இந்த விடயத்தில் ஓட விட்டபோது யாழ்ப்பாணத்தில் இச்சொல்லைப் பாவிப்பது பொதுவான வழக்கம் போல் தெரியவில்லை. ஆனாலும் 'வியாளம்' என்ற சொல் உடனே எனக்கு ஒருவரின் ஞாபகத்தை ஏற்படுத்தியது. அதற்குரியவர் ஒரு பெண்மணி. அந்தப் பெயரினைக் கேட்டாலே எல்லோரும் ஒரு காலத்தில் நடுங்குவார்கள். குறிப்பாகக் கீரிமலையில் அவரது பெயர் மிகுந்த பிரபலம். அவர் ஒரு சண்டிராணி. யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் சண்டியர்கள் பலருக்குப் பெயர்பெற்றிருந்தது. ஆனால் பெண்கள் ஓரு சிலரே 'சண்டிச்சி'யாகப் பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களில் கீரிமலை 'வியாளி'யைத் தெரியாதவர்கள் சிலரே அன்றிருந்தார்கள். அவரது குடும்பத்தில் அவரது பிள்ளைகளெல்லாரும் பெயர் பெற்ற சண்டியர்களென்று கேள்விப்பட்டிருக்கின்றேன். வியாளி கீர்மலையில் சாராயக் கடை நடத்தி வந்ததாகத் தெரிகிறது. எனக்கும் ஒரு முறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அப்பொழுது பல்கலைக் கழகப் புகுமுகக் கல்வியை முடித்துவிட்டு பல்கலைக்கழகப் பிரவேசத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அக்காலகட்டத்தில்தான் யாழ்ப்பாணத்து மாணவர்கள் முதல்முதலாக பனங்கள்ளிலிருந்து தொடங்கி 'லயன் லாகர்' பியர், 'குரங்கு' என்று திரியும் காலகட்டம். எங்களது காலகட்டத்தில் ஆனைக்கோட்டையில் உடன் கள், றீகல் தியேட்டர், யாழ் புகையிரத நிலையம், மற்றும் 'யாழ்ட்டா'வில் பியர், இவற்றுடன் 'மொக்கங்கபே'யில்  கொத்துரொட்டி, குருமா போன்ற அசைவ உணவு வகைகளென்று நண்பர்களுடன் காலத்தைக் கழிப்பார்கள். நாங்களும் அதற்கு விதி விலக்கானவர்களல்லர்.  இவ்விதமானதொரு சமயத்தில் நண்பர்கள் பலருடன் கீரிமலைக்குச் சென்றிருந்தோம். எல்லோரும் கள்ளுண்டு மந்திகளாக ஆடிக்கொண்டிருந்தோம். நாங்கள் அவ்விதம் ஆடிக்கொண்டிருந்தது 'வியாளியின்' கடைக்கு அண்மையிலிருந்த ஆலமரத்து விழுகளில்தாம். எமக்கு அப்பொழுது வியாளியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், ஒரு முறையாவது நேரில் சந்தித்திருந்ததில்லை. அத்துடன் நாங்கள் அப்பொழுது ஆடிக்கொண்டிருந்தது வியாளியின் கடைக்கு முன்னென்று என்பதும் அச்சமயத்தில் தெரிந்திருக்கவில்லை. அச்சமயத்தில்தான் வியாளி புயலெனச் சீறியபடி தனக்கேயுரிய 'மங்கல' வார்த்தைகளால் எங்களை அர்ச்சித்தபடி வந்தார். அவரை யாரென்று தெரியாததால் நாமும் அவரை எதிர்த்து வார்த்தைகளை விட முனைந்தபோது ஊரவர்கள் சிலர் ஓடி வந்து 'தம்பிமாரே, வியாளியுடன் வீண் வம்புக்குப் போகாதீர்கள்' என்னும் கருத்துப்பட அறிவுரைகளைப் பகர்ந்தபோது எங்கள் அனைவருக்குமேற்பட்ட திகைப்பில் மெல்ல மெல்ல கணகணப்பாக அதிகரித்துக்கொண்டிருந்த கள்வெறி போன இடமே தெரியவில்லை. நாங்கள் அனைவரும் நல்ல பிள்ளைகளாக அவ்விடத்தைவிட்டு நகர்ந்தோம்.

வியாளியைப் பற்றி இன்னுமொரு கதையினையும் ஏற்கனவே கேட்டிருந்தோம். கீரிமலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சராகவிருந்த சுகததாசா கட்டிய மண்டபமொன்றினைத் திறந்து வைப்பதற்காக தந்தை செல்வாவுடன் வந்து கொண்டிருந்தார். அவர்களை வரவேற்பதற்காக மக்கள் மாலைகளுடன் நின்றிருந்தார்கள். அவர்களில் வியாளியும் ஒருவராக நின்றிருந்தார். அமைச்சர் சுகததாசா வியாளியின் அருகில் வந்தபோது மாலையினைப் பெறுவதற்காகத் தலையைக் குனிந்தார். ஆனால் வியாளி மாலையைப் போட்டதோ தந்தை செல்வாவின் கழுத்தில். இதனை எனது அப்பாவின் மூலம்தான் முதலில் கேட்டிருந்தேன். இது பற்றிய உண்மையினை யாராவது அறிந்தவர்கள்தாம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த வியாளி என்ற சொல் வியாளம் என்ற சொல்லிலிருந்து வந்திருக்க வேண்டும் [வியாளியின் இயற்பெயர் விசாலாட்சி என்றும் செவிவழியாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது பற்றியும் யாராவது அறிந்தவர்கள்தாம் உறுதிப்படுத்த வேண்டும்]. வியாளம் என்பது கொடிய புலி, யாளி, அரவம், கொடிய யானை போன்றவற்றைக் குறிப்பதாலும், வியாளி யாவரும் அஞ்சத்தக்க சண்டிராணியாக விளங்கியதாலும் , அவர் பெண் என்பதாலும் 'வியாளி' என்றழைக்கப்பட்டிருக்கலாமென்றே படுகிறது. அவ்விதம் அவர் அழைக்கப்பட்டது சாதாரண மக்களால். அதிலிருந்து தெரிவதென்னவென்றால் 'வியாளம்' என்ற சொல் சாதாரண மக்கள் மத்தியில் சாதாரணமாக விளங்கியியிருக்க வேண்டுமென்றே படுகிறது. ஒருவேளை வெ.சா. அவர்களின் 'ஒரு வேளை இது யாழ்ப்பாணத் தமிழோ' என்ற சந்தேகமும் நியாயமான சந்தேகமாகவிருக்கக்கூடும்.

வெ.சா.வின் 'கடைசியில் எந்த சொல் வியாளத்துக்கு பொருத்தமான அர்த்தமாக இருக்கும் என்று சொல்லுங்கள்' என்ற  வேண்டுகோளினையும் மேலதிகமாக எண்ணிப்பார்த்தேன். வேலாயுதம் அவர்களின் நண்பர்கள் எந்த அர்த்தத்தில் பாவித்தார்களோ தெரியவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் வியாளம் என்ற சொல்லின் ஓர் அர்த்தமான 'புலி' என்னும் அர்த்தமே நன்கு பொருந்துவதாகத் தெரிகின்றது. 'புலி வாலைப் பிடித்த நாயர்' என்ற பேச்சு வழக்குத்தான் ஞாபகத்துக்கு வருகிறது. வாலின் மீதான பிடியைத் தவற்விட்டால் புலிக்கு இரையாக வேண்டும். இல்லாவிட்டால் வாலைப் பிடித்துக்கொண்டே புலியிடமிருந்து  தப்ப முனைய வேண்டும்.

கலைஞர் வேலாயுதத்துக்கு நடந்தது என்ன? இருப்பு என்ற புலியின் வாலைப் பிடித்துக்கொண்டு தப்பிப் பிழைத்துக்கொண்டிருந்தவரின் பிடி ஒரு தருணத்தில் நழுவி விட்டது. விளைவு .. புலிக்கு அவர் பலியாகி விட்டார். இந்த அர்த்தத்தில் , வியாளம் புலியைக் குறிக்கும் அர்த்தத்தில் சிந்திக்கையில் 'வியாளம்' என்ற பெயர் மிகவும் பொருத்தமாகவே எனக்குப் படுகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.