பேராசிரியர் து. மூர்த்தி நினைவாக..  நினைவுகள் சாவதில்லை..  பேராசிரியர் து. மூர்த்தி காலமாகி (24 - 10 - 2016) ஒரு வருடம்  கழிந்துவிட்டது..! அவரது நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றேன். எண்பதுகளின் முற்பகுதி. கலாநிதி து. மூர்த்தி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார். அவ்வேளை பேராசிரியர் அ. மார்க்ஸ் - பொ. வேல்சாமி - து. மூர்த்தி - இரவிக்குமார் ஆகியோர் தோழமையுடன் கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளில் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வந்தார்கள். இவ்வேளையில்தான் தோழர் கே. டானியலின் ''பஞ்சமர்" நாவலின் (இரு பாகங்கள்) அச்சுப்பதிப்பு தஞ்சாவூரில் இடம்பெற்று வந்தது. அதேவேளை அங்கு தோழமை பதிப்பகம் சார்பில் டானியலின் "கோவிந்தன்" நாவல் அச்சாகி வெளிவந்தது. "கோவிந்தன்" நாவல் வெளியீட்டு விழா - அறிமுக நிகழ்வுகள் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.  இந்த நிகழ்வுகளில் சிறப்புரையாற்ற சிறந்த பேச்சாளரான தோழர். கலாநிதி து. மூர்த்தியை இலங்கைக்கு வருமாறு கே. டானியல் அழைத்திருந்தார். மூர்த்தி இலங்கை வந்ததும் அவரது இலங்கைச் சுற்றுப்பயண ஒழுங்குகள் யாவற்றையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் - வேலணை - வடமராச்சி - திருமலை - கொழும்பு ஆதியாமிடங்கள் உட்படப் பல இடங்களில் நடைபெற்ற "கோவிந்தன்" நாவல் அறிமுக நிகழ்வுகளில் கலாநிதி து. மூர்த்தி சிறப்புரையாற்றினார். வேலணையில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் அவரை நயினாதீவுக்கு அழைத்துச் சென்றேன். அவ்வேளை நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அதிபராக நண்பர் கவிஞர் நாக. சண்முகநாதபிள்ளை கடமையாற்றி வந்தார். அவருக்கு து. மூர்த்தியை அறிமுகஞ்செய்து வைத்தேன். அவரது வேண்டுகோளுக்கிணங்க நயினை மகா வித்தியாலயத்தில் திடீரென ஒழுங்குசெய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் து. மூர்த்தி நல்லதோர் உரையினை வழங்கினார்.. அந்நிகழ்வில் மாணவர்கள் - ஆசிரியர்கள் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் எனது ஊரான புங்குடுதீவுக்கு மூர்த்தியை அழைத்துச் சென்றேன். அன்று இரவு எமது வீட்டில் இலக்கியப் பொழுதாகக் கழிந்தது. மறுநாள் எனது சகோதரர் த. துரைசிங்கம் அதிபராகக் கடமையாற்றிய புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் து. மூர்த்தி சிறப்புரையாற்றினார். வடபகுதியில் பட்டதாரி மாணவர்க்கான கல்வி நிலையங்கள் சிலவற்றிலும் மூர்த்தி உரையாற்ற ஒழுங்கு செய்தேன். பல்வேறு இலக்கியச் சந்திப்புகளை நடாத்தியபின் கொழும்புக்கு அவரை அழைத்துச் சென்றேன். கொழும்பில் "கோவிந்தன்" நாவல் அறிமுக நிகழ்வு முடிந்தபின் இலக்கியத்துறையினர் பலர் அவரைச் சந்தித்து உரையாடினர். இந்தச் சந்திப்புகளை ஒழுங்கு செய்யும் பொறுப்பினை டானியல் என்னிடமே ஒப்படைத்திருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பிரமுகர்களான பிரேம்ஜீ - சோமகாந்தன் ஆகியோர் து. மூர்த்தியுடன் கலந்துரையாட விருப்பம் தெரிவித்து அழைத்திருந்தனர். சோமகாந்தன் வீட்டில்தான் சந்திப்பு நடந்தது. நண்பர் முருகபூபதி உட்பட மற்றும் சிலரும் அங்கிருந்ததாக ஞாபகம். கடுமையான வாதங்கள் இடம்பெற்றன. அவர்களின் கருத்துக்களை திரிபுவாதமென மூர்த்தி கடுமையாகச் சாடினார். இருப்பினும் சிநேகபூர்வமாகவே பேச்சுக்கள் அமைந்தன.

கொழும்பிலிருந்து அவரை கட்டுநாயக்கா விமான நிலையம்வரை சென்று அனுப்பிவைத்தமை இன்றும் ஞாபகத்திலுண்டு. மூர்த்தி கலந்துகொண்டு உரையாற்றிய கூட்ட நிகழ்வுகளின் செய்தித் தொகுப்புகளை யான் பத்திரிகைகள் யாவற்றுக்கும் வழங்கியிருந்தேன். அவை பத்திரிகைகளில் நன்கு பிரசுரமாகியிருந்தன. அவற்றையும் எனது கடிதங்களுடன் பின்னர் மூர்த்திக்கு அனுப்பிவைத்தேன்.

1986 -ம் ஆண்டு டானியலும் நானும் தமிழகம் சென்றபோது சென்னையில் மூர்த்தி எங்களைச் சந்தித்து உரையாடினார்; அவ்வேளை அவர் மிகுந்த சோகமான நிலையில் காணப்பட்டார். வேலை நிறுத்தம் காரணமாகத் தஞ்சைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை இழந்திருந்தார். ''கிரியா" பதிப்பகத்தில் தற்காலிகமாகத் 'தமிழ் அகராதி' தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். குடும்பப் பிரச்சினை அவரை வாட்டியது. ஆசைமகன்மீது கொண்ட அளவுகடந்த பாசம் அவரை வதைத்தது.

பாண்டிச்சேரியில் இலக்கியச் சந்திப்புகளை மேற்கொண்ட பின்னர் பேராசிரியர் அ. மார்க்ஸ் - பேராசிரியர் இராமசுந்தரம் ஆகியோரின் ஆலோசனைப்படி திருமதி மூர்த்தியைச் சந்தித்துப்பேச டானியலும் நானும் சென்றோம்.

உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் டானியலும் நானும் திருமதி மூர்த்தியைச் சந்தித்து அவர்களது குடும்பப் பிணக்கிணைச் சுமூகமாகத் தீர்த்துவைப்பதற்காகத் திருமதி மூர்த்தி விரிவரையாளராகக் கடமையாற்றிய கல்லூரிக்குச் சென்றோம். கல்லூரி மதிய இடைவேளையின்போது அவரைச் சந்தித்து உரையாடினோம்.
அவர் எம்மை வீட்டிற்கு அழைத்து மதிய உணவும் அளித்து அன்பாக உரையாடினார்.

மீண்டும் மூர்த்தியுடன் பேசி அவர்களை ஒருங்கிணைக்கலாம் என்று சொல்லி வந்த ஓரிரு நாட்களிலேயே டானியல் காலமாகிவிட்டார்.  பின்னர் அவர்களுடன் பேச எனக்கு அப்போது வாய்ப்பு இருக்கவில்லை. மூர்த்தியும் சென்னையைவிட்டு புதுடில்லிப் பக்கம் போய்விட்டாரென அறிந்தேன்.

2012 -ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் திகதி எனது சிறுகதைத் தொகுதியின் இந்தி மொழிபெயர்ப்பு புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அதில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள பேராசிரியர் சந்திரசேகரனிடம் மூர்த்தி குறித்துப் பேசினேன். அவர் உடனே அலிகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மூர்த்தியுடன் தொடர்புகொண்டு என்னைப் பேசவைத்தார்.

அவர் அலிகார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகக் கடமையாற்றி வந்தார். புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினரும் ஆய்வு மேற்படிப்பு படிக்கும் தமிழ் மாணவர்களும் மூர்த்தியை நன்கறிந்தவர்களாகவும் அவர்மீது மிக மதிப்பு வைத்துள்ளதையும் அங்கு கலந்துரையாடும்போது அறிந்துகொண்டேன்.

பல வருடங்களுக்குப் பின் சில நிமிடங்கள் தொலைபேசியில் மூர்த்தியுடன் அன்பாகப் பேச முடிந்தது. பணி நிமித்தம் உடன் சந்தித்துப் பேச முடியவில்லையென்றும் ஒரு சில நாட்களில் சந்திப்பதாகவும் கூறினார். ஆனால் நான் அடுத்த ஓரிரு நாட்களில் சென்னை திரும்பிவிட்டேன். அதனால் நேரில் சந்தித்துப்பேச முடியவில்லை. அடுத்த தடவை இந்தியா போகும்போது புதுடில்லி சென்று நண்பர்கள் பலரையும் சந்திப்பதுடன் மூர்த்தியையும் சந்தித்து நிறையப் பேசவேண்டுமென எண்ணியிருந்தேன். அதற்குள் அவரது இழப்புச் செய்திதான் கிடைத்தது. உணர்ச்சிகரமான மனிதன் மூர்த்தி. அவ்வாறே அவரது மேடைப் பேச்சும் உணர்ச்சிகரமாக அமைந்து மக்களைக் கவரும். பல ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் அவர் படைத்துள்ளார்.

இலங்கை வந்தபோது அவருடன் பழகிய சில நாட்கள் என்றும் மறக்க முடியாத இனிய இலக்கிய அரசியல் கருத்தாடல் நிறைந்த பொழுதுகளாக அமைந்தன. தோழர் டானியல் மூலம் அறிமுகமாகிய மூர்த்தியும் டானியல் போன்றே என் நெஞ்சில் நிறைந்துள்ளார்..!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.