book_kanavuchsirai5.jpg - 11.07 Kbஎழுத்தாளர் தேவகாந்தன்.[எழுத்தாளர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் ஜனவரி 3 , 2015 அன்று தமிழகத்தில் காலச்சுவடு பதிப்ப வெளியீடாக வெளிவரவிருக்கின்றது. நீண்ட நாள்களாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாவலான 'க்னவுச்சிறை' நூலுருப்பெற்று வெளிவருவது மகிழ்ச்சியளிப்பது. வாழ்த்துகிறோம். அதனையொட்டி 'கனவுச்சிறை' நாவல் பற்றி வெளியான எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் சிலரின் கருத்துகள் சில இங்கு பதிவாகின்றன. - பதிவுகள்-]

முனைவர் நா.சுப்பிரமணியன்:
நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட - கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட - வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.

தேவகாந்தனது படைப்பாற்றலின் முக்கிய அம்சம்களிலொன்று அவரது முன்நிபந்தனைகட்கு உட்படாத - கொள்கைத் திட்டங்களுக்கு உட்படாத - மனித நேயப்பார்வை. பிரச்சினைகள் பலவற்றையும் அவற்றின் இயல்பான தளத்தில், இயல்பான கோணத்தில் இவர் நோக்குகிறார். ஒவ்வொன்றின் நுணுக்க விவரங்களையும் கவனத்துட்கொள்கிறார். அவற்றின் காரண பார்வையால் இவரது படைப்புக்களுக்கு இயற்பண்பு, யதார்த்தம் என்பன பொருந்தியனவாக வெளிப்படுகின்றன.

இந்த நாவலைப் பொறுத்தவரை தேவகாந்தன் அவர்கள் ஒட்டு மொத்த ஈழத்தமிழர் சமூதாயத்தையும் (கிழக்கிலங்கை மற்றும் மலையகம் நீங்கலாக) ஒரு கதையம்சத்தில் பொருத்திநோக்க முற்பட்டிருப்பது தெரரிகிறது. மலையகம் சார் பாத்திரமொன்று இந்நாவலில் நம் காட்சிக்கு வந்துள்ளதெனினும் மலையக வாழ்வியல் இந்நாவலில் கவனத்திற் கொள்ளப் பட்டதாகக் கூறமுடியாது. எனவே வடபுலம் சார்ந்த ஈழத்தமிழர் சமுதாயமும் அதன் புலம் பெயர் - புகலிட்வாழ்வியலுமே இவரது பார்வைப் பரப்புக்குள் வருகின்றன. சமகாலப் படைப்பாளிகளில் வேறு எவராவது இவ்வாறு சமகால ஈழவாழ்வியல் மற்றும் புகலிட வாழ்வியல் என்பவற்றை ஒரே கதையம்சத்தில் இவ்வளவு விரிவாக நோக்க முற்பட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை. அவ்வகையில் தேவகாந்தனது இப்படைப்பு ஒரு வரலாற்றுச் சாதனை எனக் கணிக்கப்பட வேண்டியதாகின்றது.

இந்த நாவலைப் படைப்பதற்கு தேவகாந்தன் அவர்கள் மிகச் பெரிய அளவு தயாரிப்பு முயற்சிகள் மேற்கொண்டிருப்பார் என்பதை இந் நாவலை வாசிப்போர் உணரமுடியும். திரட்டிய தகவல்கள் அனைத்தையும் ஒரு நாவற்கட்டமைப்புக்குள் கொண்டுவர அவர் முயன்றுள்ளார் எனத் தெரிகின்றது. நாவல் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரிந்து செல்வதற்கு இது ஒரு காரணம் எனலாம். இன்னொரு முறை இந் நாவல் திருப்பி எழுதப்பட முடியுமாயிருப்பின் வடிவச் செம்மை நோக்கில் பக்கங்கள் குறையலாம்.

தேவகாந்தன் அவர்கள் தாம் இந்த நாவலைப் படைத்தமைக்காக மனநிறைவு அடையலாம். பல ஆண்டுகளாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்துள்ள அவர் தமது வாழ் நாட்சாதனையாக இதனைப் படைத்துள்ளார்.

இந்த நாவலுக்கு ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. ஈழத்துத் தமிழிலக்கியத்தின் ஒரு வளர்ச்சி நிலையான புலம் பெயர் இலக்கிய வரலாற்றிலும் நிலையான இடம் இதற்குக் கிடைக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மகா நாவல் சமகாலத் த்மிழகத்தின் தரமான முதல் வரிசைப் படைப்பாக்கங்களுடன் வைத்துக்கணிக்கப் படக்கூடிய தகுதி கொண்டது. ['தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஒரு விமர்சன அறிமுகம்' என்னும் தனது ஆய்வுக்கட்டுரையில் முனைவர் நா.சுப்பிரமணியன்.]

'முனைவர் ந.ரவீந்திரன்:
‘கனவுச் சிறை’ மக்களின் வாழ்வையும், யுத்தக் கொந்தளிப்பூடான மாற்றங்களையும், உணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தி நிற்கிறது. மனித ஊடாட்டங்கள் விழுமியங்கள் அபிலாசைகளில் போர் விளைக்கும் மாற்றங்கள் அற்புதமாய்ப் படைப்பாக்கம் பெற்றுள்ளன.

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்:
‘கனவுச் சிறை’ மக்களின் வாழ்வையும், யுத்தக் கொந்தளிப்பூடான மாற்றங்களையும், உணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தி நிற்கிறது. மனித ஊடாட்டங்கள் விழுமியங்கள் அபிலாi~களில் போர் விளைக்கும் மாற்றங்கள் அற்புதமாய்ப் படைப்பாக்கம் பெற்றுள்ளன.  - ந.ரவீந்திரன் -
யுத்த எதிர்ப்பு போலவே பெண்ணிலைவாதக் கருத்துக்களும் வலிந்து பெறப்பட்டதாயன்றி கதைசொல்லியின் வழியாகவும், கதாபாத்திரங்களின் வழியாகவும் இந்த ஐந்து பாகங்களிலும் விரவியிருக்கின்றன.

எழுத்தாளர்  சு.வேணுகோபால்:
தேவகாந்தன் ‘கனவுச்சிறை’ நாவல் மூலம் மிகப்பெரும் பரப்புக்குள் வாசகனை அழைக்கிறார். இலக்கியக் கனவுகளைத் தாங்கிய படைப்பாளிகள் படைத்திருக்கும் பiடைப்பிலிருந்து இந்நாவல் வித்தியாசமானது. ஒரு இனத்தின் நிகழ்கால சிதைவை ஆத்மசுத்தியோடு பதிவு செய்துவிடவேண்டும் என்ற உந்துதலால் படைக்கப்பட்ட ‘கனவுச்சிறை’ ,அந்த நோக்கத்தைத் தகர்த்துக்கொண்டு பெரும் கலைப் படைப்பாகவும் மாறி பரிணமிக்கிறது.

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்:
புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் தேவகாந்தனுக்குச் சிறப்பானதோரிடமுண்டு. இவரது கனவுச்சிறை (திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய  ஐந்து பாகங்களை உள்ளடக்கிய, 1247 பக்கங்களைக் கொண்ட,  1981 முதல் 2001 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய நாவல்.) புகலிட இலக்கியத்தில் மிகவும் முக்கியத்துவத்துக்குரியது. எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் கனவுச்சிறையின் ஒரு பாகமாகிய 'வினாக்கால்' என்னும் நாவல் பற்றிய அவரது விமரிசனத்தில் 'கனவுச்சிறை முதலாம் பாகத்துக்கும் இறுதிப் பாகத்துக்குமான பதிப்புக் காலஇடைவெளி நான்கு ஆண்டுகள். இவருடைய நாவலை முழுமையாக வாசிக்கலாம் என்று நான் தேடியபோது ஐந்து பாகங்களையும் ஒன்றாகத் திரட்டுவது என்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தேவகாந்தனின் கனவுச் சிறை பரவலாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படாததற்கு இதுவும் காரணமாக இருக்கும் எனவே நினைக்கிறேன்.' என்று கூறுவது கவனிக்கத்தக்கது. ஆனால் அண்மைக்காலமாக இந்நிலைமை மாறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வாசிக்க வேண்டிய நூறு நாவல்கள் பட்டியலில் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவலையும் சேர்த்திருக்கின்றார். முனவர் ந.முருகேசபாண்டியன், முனைவர் நா.சுப்பிரமணியன், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் ஆகியோர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' பற்றி விரிவான விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார்கள். இன்னும் பலர் எழுதியிருக்கின்றார்கள்; எழுதியிருப்பார்கள். அனைவரையும் இக்கட்டுரையில் குறிப்பிடுவது சாத்தியமற்றது. ஆனால் இவையெல்லாம் காய்தல் உவத்தலின்றி ஆவணப்படுத்தப்படல் அவசியம். அதுபோல் புகலிட நாவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே அவை பற்றிய விரிவான ஆய்வுகள், திறனாய்வுகள் சாத்தியம். [புகலிடத்தமிழ் நாவல் முயற்சிகள்' என்னும் தனது ஆய்வுக்கட்டுரையில் எழுத்தாளர் வ.ந.கிரிதரன் -]