அருந்ததிராய்யார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து போயினர். கலப்பு மணம் புரிந்து கணவனைப் பிரிந்து வாழ்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததனால் இவருக்கும் ஊரின், உறவின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. அருந்ததி ராய்க்கு சமூகம் எதிர் உலகமாகத்தான் முதலில் அறிமுகமாகியது. பின்னர் எல்லாவற்றையும் மீறி நீலகிரியில் பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பில் சேர்ந்தார். உடன் படித்த ஒருவரைக் காதலித்து மணந்த தால் படிப்பு பாதியில் நின்றது. அந்த வாழ்க்கையும் நான்கு ஆண்டுகள்தான் நிலைத்தது. அவரிடமிருந்து பிரிந்த பின்னர் “பிரதீப் கிரிஷன்’ என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து திரைப் படம் எடுத்தனர். இவ்வாழ்க்கையும் இவருக்கு நிலைக்க வில்லை. இவரின் கட்டற்ற சிந்தனை அடக்குமுறைக்கு அடங்காதவராக இவரை வடிவமைத்திருந்தது. மேலும் புரட்சிச் சிந்தனை மிக்கவராகவும் இவர் இருந்தார். இவரின் முதல் ஆசிரியரே இவரின் தாய்தான். “”உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள். நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிற பாடம் அவருக்குச் சூழலே கற்றுக் கொடுத்தது. அதனால் எல்லாவற்றின்மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி படைப்புகளின் மூலம் பலரின் கவனம் பெற ஆரம்பித்தார். இந்நிலையில் தான் 1997-ல் அவர் எழுதிய “த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ (The God of Small things) என்னும் நாவல் புக்கர் பரிசினைப் பெற்றது. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர்தான்.

மேற்குலகும் அமெரிக்காவும் அந்நாவலை மிகவும் கொண்டாடின. நியூயார்க் டைம்ஸ், கார்டியன் முதலிய அமெரிக்கப் பத்திரிகைகள் இந்திய கிளாஸிக் என்றும் இந்திய அடையாளமாகவும் அந்நாவலை முன்வைத்தன. அந்நாவலில் கணவனைப் பிரிந்து தனித்து வாழும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் மீறல்கள், சுரண்டல் மற்றும் மேற்கத்திய நிறவெறியை இந்தியச் சூழலில் தீண்டாமையி னோடு ஒப்புமைப்படுத்தி யும் எழுதப்பட்டிருந்தது. பெண்ணிலைவாதம் மிகவும் ஓங்கி ஒலிக்கும் காரணத்தினாலேயே அது அங்கு ஓங்கிப் பிடிக் கப்பட்டது. மேலும் அந் நாவலுக்குள் அவர் கையாண்டிருந்த கருத்தி யல், சொல்லாடல் அவரை கலகக்காரராகவும் புரட் சிக்காரராகவும் ஆயுதப் பெண்ணாகவும் வெளி காட்டியது.

இதன் பின்னர்தான் அவருக்குள்ளாக இருந்த போராட்ட குணம் தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது. மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (Narmada Bacho Andolan) அமைப்பால் ஈர்க்கப்பட்டு தீவிரமாகப் பங்காற்றினார். நர்மதா அணைப் போராட்டம் மட்டுமின்றி காஷ்மீர் பிரச்சினை, மாவோயிஸ்ட் மீதான தாக்குதல், பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் குறித்த பிரச்சினைகள், இலங்கைத் தமிழர் மீதான வன்முறை, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவான செயல் பாடுகள் அவரை தீவிரமான போராளியாக நம்முன் நிறுத்துகின்றன.

“மூக்கைத் தொலைத்தும்
முதுகை மடக்கியும்
கையை இழந்தும்
காலை மறந்தும்
இன்னும் ஆறாத காயங்களோடு
ஹிரோசிமாவிலும்
நாகசாகியிலும்
இன்னும் பிறந்து கொண்டிருப்பது
நான் தான்…
நான் தான்…’

என்னும் இன்குலா பின் கவிதை மதம், மொழி, இனம், நாடு என எல்லை கடந்து உலகெங்கிலும் வன்முறைக்கு இலக்காவோரின் வலி தன்னுடையதாகவே உணரும் படைப்பாளியின் மானுட உணர்வைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அருந்ததிராயும் இத்தகைய குணநலன்களைப் பெற்றவராகவே காட்சியளிக்கிறார். இதனால்தான் தான் எதிர்க்கவேண்டிய எதனோடும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்னும் நிலைப்பாட்டில் 2003-ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதெமி பரிசைப் பெற மறுத்துவிட்டார்.

இவரின் போராட்டங்களைக் கண்ட ஆஸ்திரேலிய அமைப்பு ஒன்று அவர் எவற்றுக்கெல்லாம் போராடுகிறாரோ அவையெல்லாம் எய்தப்பட வேண்டும் என்கிற நோக்கில் 2004-ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசை இவருக்கு வழங்கியது. மேலும் அரசுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் எதிராகப் போராடும் சமூக செயல்பாட்டுக் காகவே அமெரிக்காவின் “லென்னான் பவுண்டேஷன்’ அருந்ததிராய்க்கு விருது வழங்கியது.

“நான் எவ்வித சார்புமற்ற சுதந்திரமான எழுத்தாளர். எதிர்ப்பியக்கத்தின் பக்கம் நின்றுகொண்டே கேள்விகள் கேட்கும் உரிமை எனக்கு இருப்பதாகக் கருதுகிறேன். திட்டவட்டமாக நான் எதிர்ப்பியக்கத்தின் பக்கம் நிற்கிறேன்’ என்று தன் நிலைப்பாட்டைக் கூறும் அருந்ததிராய் நம் நாட்டில் நடக்கும் எல்லா போர்களும் பிரச்சினைகளும் இயற்கைச் செல்வங்கள் அழிப்பு மற்றும் பெருங்குழும ஆதரவினை மையமாகக் கொண்டது என்கிறார். பழங்குடிகள் தங்களுடைய வாழ்வாதாரத் தைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார்கள்.

அப்போராட்டங்கள் மூலமாகவேதான் வனவளம், மலைவளம், நீர்வளம் காப்பாற்றப்பட்டு வருகிறது. அதைக் காப்பாற்ற முனைவோரை தான் நக்சலைட்டு கள், தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் என அரசு முத்திரை குத்துகிறது. அவர்களை ஒடுக்கி பெருங்குழும நிறுவனங்களின் சுரண்டலுக்கு வழிகாணாத அரசு, செயல்படாத அரசாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட முயல்கிறது என்னும் கருத்தினை வெளிப்படுத்தும் இவர், இலங்கையில் நடைபெற்ற இன அழித்தொழிப்புப் போர் தமிழர்களுக்கு எதிரானது. அது பெருங்குழுமப் போர். இந்தப் போரின் பின்னணியில் இந்திய அரசு மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. இலங்கை நோக்கிச் செல்லும் பெருங்குழுமத்திற்காகவே அது திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள் கூட வலுவான வகையில் அதனை எதிர்த்து எதுவும் செய்யவில்லை என்று சென்னையில் உரையாற்றியபோது தெளிவாய் தன் கருத்தினை வைத்தார்.

அருந்ததிராய்மக்களுக்கு எதிரான அரசினை மட்டும் அருந்ததிராய் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஜனநாயகத்திற்கு எதிரான விஷயங்களிலும் அவர் தன் கருத்தினை வலிமையாகவே பதிவு செய்தார். அன்னா ஹசாரே நிகழ்த்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தை “உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி’ என்றார். அது இந்திய அரசியல் அமைப்பைத் தூக்கி எறிவதாக உள்ளது. அதிகாரத்தை ஒன்று குவிக்காமல் பகிர்ந்து அளிக்கச் சொல்லும் காந்தியின் கருத்துகளுக்கு முரணாக “ஜன்லோக் பால் மசோதா’ அரக்கத்தனமான எதேச்சதிகாரம் ஒரு முகப்படுத்தப் பட்ட அதிகார மையத்தைக் கோரும் ஊழல் தடுப்பு மசோதாவாக இருக்கிறது என்றார். மேலும் “அன்னா தான் இந்தியா, இந்தியாதான் அன்னா என்று கூறியும் ஹசாரேவை ஆதரிக்காதவர்கள் தேசப்பற்று அற்றவர்கள் என்ற அளவிலும் ஊடகங்கள் ஹசாரேவின் உண்ணாவிரதத்தை தூக்கிப் பிடித்தன. அருந்ததிராய் அவர்களின் உண்ணாவிரதத்தை ஆதரிக்க மறுத்தார். காரணம், அந்த உண்ணாவிரதம் ஒருவரைச் சந்தேகப் பட்டாலேயே அவரைக் கொல்ல அனுமதியளிக்கும் மணிப்பூரின் ஆஎநடஆ என்ற அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து பத்து வருடத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் “ஜரோம் சர்மிளா’வின் போராட்டம் போன்றது கிடையாது. (சர்மிளாவிற்குத் தற்போதும் பலவந்தமாகவே உணவு செலுத்தப்படுகிறது). அதே போல் ஒரு வருடத்திற்கும் மேலாக வன்முறை ஏதுமின்றி அணுஉலையினை எதிர்த்து கூடங்குளத்தில் மக்கள் வரிசையாக நடத்திவரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல இது. மேலும் அன்னாவின் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்பவர்கள் இதற்கு அல்லது இது போன்ற சுரங்க கனிமவளக் கொள்ளை, நர்மதா நதிப்பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, பழங்குடியினர் பிரச்சினைகளுக்கு ஆதரவாளர்களும் அல்லர் என்கிறார். ஊழல் என்பது நோய் அல்ல. அது நோய்க்கான அறிகுறியே என்னும் இவர், அதிகாரங்கள் சரியாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு கடைக் கோடி மனிதவனுக்கும் நீதி சரியாக வழங்கப்பட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதை நோக்கித்தான் நாம் போராட வேண்டும் என்கிறார்.

இந்தியாவின் தற்போதைய கட்டமைப்பு பற்றிக் கூறும்போது அடிப்படையில் இங்க பிரச்சினைகளுக்குக் காரணம் என்னவென்றால் சாதிய அமைப்புதான். இந்திய அடிப்படைக் கட்டுமானமே சாதியில் சிக்குண்டு கிடக்கிறது. அந்தச் சாதிதான் ஜனநாயகம், அரசியல், ஆட்சி இயந்திரம் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் சாதிய அமைப்பு நிலப்பிரபுத்துவ முறையிலிருந்து கார்ப்பரேட் முறைக்கு மாறி இருக்கிறது என்று நவீனமயமான ஒடுக்கு முறைக்கு இந்திய மக்கள் ஆளாகிக் கொண்டிருப்பதன் பின்புலத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். மக்கள் இதற் கெல்லாம் அசந்து போகாமல் போராட்ட குணத்தை வளர்க்கும் வகையில் தன்னுடைய எழுத்தின் மூலமும் களப்பணி மூலமும் நம்பிக்கைகளுக்கான விதைகளை விதைத்துக் கொண்டே இருக்கிறார் அருந்ததிராய். பிரச்சினைகளை கண்டு வாய்மூடி மௌனிகளாக நிற்கும் படைப்பாளர்கள், உணர்ந்து படிக்க வேண்டிய உயிர்ப்புள்ள புத்தகம்தான் அருந்ததிராய்!

நன்றி: http://inruoruthagaval.com/arunthathi-roy-3/