திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களுடன்  ஒரு சிறப்பு நேர்காணல்!ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வு நிலை ஆசிரியருமான திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு  ஒருநேர்காணல்

நிலவன் :- உங்களைப் பற்றிச் சற்றுக் கூறுங்கள்…?

பாராசத்தி :- எனது பெயர் திருமதி பாராசத்தி  ஜெகநாதன். முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளைக் காட்டு விநாயகர் கோயிலடி எனது சொந்த ஊராகும். தற்போது விநாயகர் வீதி உக்குளாங்குளம் வவுனியாவில் வாசித்து வருகிறேன். நான் கணபதிப்பிப்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் ஒரே புதல்வியாவேன். எனது தந்தையார் ஒரு நாட்டுக் கூத்துக் கலைஞன். எனது ஒன்பதாவது வயதிலிருந்து இசை, நாடகம் இரண்டையும் முறையாக பயின்று வந்தேன். எனது பாடசாலைக் கல்வியை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியிலும் பட்டப்படிப்பை இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பெற்று பத்து ஆண்டுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், இருபதாண்டு வவுனியா மாவட்டத்திலும் இசை ஆசிரியராக பணிபுரிந்து முப்பதாண்டுகள் பூர்த்தி செய்தும் தற்போது வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வு நிலை ஆசிரியராக இருக்கிறேன்.

நிலவன் :- பல்துறை சார் நிபுணத்துவம் உருவாக்கத்தில் உங்கள் இளைமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி கூறுங்கள்?

பாராசத்தி :- பெண் பிள்ளை என்று ஒரு காரணத்தைக் காட்டிப் பல்துறையிலும் ஊக்கப்படுத்தாதீர்கள் என்று பலர் தடைவித்தனர். என் பெற்றோர் எனக்குப் பக்கபலமாக இருந்து என்னை ஊக்குவித்தனர். மேலும் எனக்குக் கிடைத்த இசை ஆசான்களின் பயிற்சி மற்றும் வழிப்படுத்தலினாலே இது சாத்தியமானது.

நிலவன் :-  உங்கள் இசைப்பயணம் பற்றி கூறுங்கள்?

பாராசத்தி :- எனது ஒன்பதாவது வயதில் இருந்து இசை நாடகம் இரண்டையும் குருகுலக்கல்வியாக கற்கத் தொடங்கினேன். எனது ஆரம்பக் குரு சித்தப்பா வெற்றிவேல். பின் சங்கீத, பூசணங்களான தரு சாதாசிவம் ஜெய வீரசிங்கம், திருமதி கந்ததவனாதன், தங்கனாச்சி, திரு ஏ.கே கருணாகரன் ஆகியோரிடம் முறையாகக் கற்றேன். எனது பத்தாவது வயதில் அரிச்சந்திரா நாடகத்தில் விஷ்வாமித்திரர் வேடம் ஏற்று அரங்கேறினேன்.
பின்னர் கோவலன் கண்ணகி இசை நாடகத்திலும் நடித்ததோடு பல நாடகங்களிற்குப் பின்னிசை வளங்குவதிலும் பங்களிப்புச் செய்துள்ளேன். பதினான்காவது வயதில் முள்ளியவலை வித்தியானந்தா கல்லுரிக் கலையரங்கில் இடம்பெற்ற பாரதி விழாவில் எனது முதலாவது இசைக் கச்சேரி செய்யும் வாய்ப்பினைப் பெற்றேன்.  தொடர்ந்தும் முள்ளியவளை இயலிசை நாடகக் கலைமன்றத்தினுடாக இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்களிப்க்ச் செய்ததோடு மன்றத்தின் இசை வகுப்புக்களில் பங்குபற்றி வட இலங்கை சங்கித சபையினால் நடாத்தப்பட்ட இசைப் பரிச்சைக்குத் தோற்றிக் “கலா வித்தகர்“ பரிட்சை வரை தேர்ச்சி பெற்றேன்.

1974ஆம் ஆண்டு கலாசார பேரவையினால் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் கோகுலன் நாட்டுக் கூத்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது இதற்கு நான் பின்னிசை வழங்கியிருந்தேன். இதுவே தேசிய மட்டத்தில் எனக்கு கிடைத்த முதல் சான்றுதல் ஆகும். ஆதனைத் தொடர்ந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இலங்கை வானொலியில் கோகுலன் நாட்டுக் கூத்தில் கண்ணகி பாத்திரம் ஏற்று நடித்தேன். தொடர்ந்து எனது முயற்சிகளைப் பாடசாலையிலும், வெளியிடங்களிலும் மாணவர்களை பயிற்றுவித்து இசை, நாடகம், நாட்டுக் கூத்து, வில்லிசை, நாட்டார் இசை, நாட்டிய நாடகம் போன்ற பல்துறைகளிலும் பங்களிப்பைச் செய்துள்ளேன். தற்போது ஓய்வு பெற்ற நிலையிலும் பாரம்பரியக் கலைகளை அடையாளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு கலாசாரப் பேரவையின் அனுசரணையுடன் 2016ம் ஆண்டு வவுனியா பிரதேச செயலக நிகழ்விலும் வேழம் படுத்த வீராங்கணை எனும் நாட்டுக் கூத்தினை அரங்கேற்ற எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன்.

நிலவன் :-  இதுவரை நீங்கள் ஏற்பாடு செய்த நிகழ்வு பற்றி கூறுங்கள்?

பாராசத்தி :- தனி, குழு இசை,  நாட்டார் இசை, வில்லிசை, இசை நாடகம், நாட்டுக் கூத்து, சிந்துநடைக் கூத்து நாட்டிய நாடகம், மெட்டமைத்து பின்னணி இசை வழங்குதல், இன்னிசை இசைக்குழு ஆகியவற்றை ஆற்றுப்படுத்தினேன்.


நிலவன் :- நாடகம் இசைத்துறையில் நீங்கள் பெற்ற விருதுகள், பட்டங்கள் பற்றி கூறுங்கள்?

பாராசத்தி :-

1974ம் ஆண்டு கலாச்சாரபேரவைக் கலாச்சார அமைச்சினால் நாட்டுக்கூத்துக்கான தேசிய விருது.
2011ம் ஆண்டு கலாச்சாரபேரவைக் கலாசார அமைச்சினால் நாட்டிய நாடக விருது (பின்னணி இசை)!
2016ம் ஆண்டு வவுனியா மாவட்ட செயலகத்தினால் வவுனியம் கலை விருது.
2016 கலாசார அமைச்சுக் கலாசார அலுவலகத் திணைக்களம் வங்கிய கலா பூசணம் அரச விருது.

பட்டங்கள்- வழங்கிய நிறுவனங்கள்.

இசைக் கலைமணி - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கலா வித்தகர் - வட இலங்கை சங்கீத சபை.
பட்டப்பின் கல்வி டிப்ளோமா - தேசிய கல்வி நிறுவனம்

திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களுடன்  ஒரு சிறப்பு நேர்காணல்!நிலவன் :-ஊங்கள் அனுபவம் ஊடாக சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கூற விரும்புவது என்ன..?

பாராசத்தி :- ஆர்வமுடைய மாணவர்களை இனம் கண்டு ஊக்குவித்தல் வேண்டும்.! ஏளனம் செய்வதைத் தவிர்க்க  வேண்டும். மாணவர்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.! திறமையுடைய மாணவர்களுக்குச் சில சமயம் வறுமை தடையாக அமைந்தால் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.! மாணவர்களைச் சமமாக மதிப்பிட வேண்டும். அதன் மூலம் நல்ல மாணவர் சமுதாயத்தையும் கலையையும் வளர்க்கலாம். மாணவர்கள் நிச்சயம் குருவையும் கலையையும் விசுவாசிப்பார்கல்.

நிலவன்:- நவின மயப்படுத்தப்பட்ட காலத்தில் பாரம்பரிய கலைகள் நலிவடைந்து செல்கிறது, அந்தவகையில் அவற்றினை நேர்செய்வது பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்து.?

பாராசத்தி :- தற்காலச் சமுதாயம் மேற்கத்தேய இசையில் நாட்டம் கொண்டதாகவும்! இசைக் கலைஞர்களை வியாபர நோக்குடன் பார்ப்பதனால் பாரம்பெரிய கலைகள் நலிவடைந்து செல்கின்றன. அவற்றைச் சீர் செய்வதற்கு இளம் சமுதாயத்திற்குப் பாரம்பரிய கலையை அறிமுகம் செய்து அதன் மகத்துவத்தை உணர்த்துவதன் முலம் சீர் செய்யலாம் என்பது எனது கருத்து.

நிலவன் :- பாரம்பரிய கலைகளைத் தற்கால இளைஞர்களுக்குக் கொண்டு சேர்ப்பது எவ்வாறு என்பது பற்றி உங்கள் கருத்து.?

பாராசத்தி :- பாடசாலை மட்டத்தில் இருந்து இம் முயற்சியை ஆரம்பிக்கலாம்! இசை, நடன, நாடக ஆசிரியர்கள் பாடசாலை நிகழ்வுகளில் பாரம்பரிய கலை நிகழ்வுகளை மாணவர்களுக்குப் பழக்கி அரங்கேற்றுவதன் மூலம் இவ்வாறான பாரம்பரிய கலைகள் பற்றி மாணவர்களுக்கு உணர்த்த முடியும். அத்துடன் பாரம்பரிய கலைகளை அறிமுகப்படுத்தல், கெளரவித்தல், பயிச்சி வழங்குவதற்கு ஊக்குவித்தல், பாரம்பரிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இணையத்தளத்தில் தரவேற்றம் செய்வதன் முலம் கலையையும் கலைஞர்களையும் வளர்த்துக் கொள்ளவும் பிரபலியப்படுத்த முடியும்.

நிலவன் :- இசை கற்கும் மாணவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது யாது.?

பாராசத்தி :- சங்கீதத்தைச் சுத்தமாக பாடுவதற்கும் குரல் வளத்தை மேன்படுத்துவதற்கும் சங்கீதத்தை முறையாகப் பயில்வது உகந்தது. இதன் மூலம் உங்களை வளர்த்துக்கொள்வதோடு கேட்போரை மகிழ்விக்கவும் அடுத்த தலைமுறைக்குக் கலையை எடுத்துச் செல்லவும் முடியம்.!

நிலவன் :- நீங்கள் நெறிப்படுத்திய இசை நாடகம், நாட்டுக் கூத்து பற்றிக் கூறுங்கள்.?

பாராசத்தி :- அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, கோவலன் கண்ணகி, நந்தனார் இசை நாடகங்களும், இராவணணேஸ்வரன், காத்தவராஐன் ஆகிய நாட்டுக் கூத்துக்களும் எனது நெறியாள்கையின் கீழ் அரேங்கேற்றப்பட்டன.

நிலவன் :- அதிகப் பின் தங்கிய பிரதேசங்களில் பாரம்பரிய கலை வளர்ச்சி பற்றி கூறுங்கள்?

பாராசத்தி :- இப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் தொழிலுடன் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்வு படுத்திக் கலை வடிவங்களை பிரதி பலிக்கின்றார்கள். உதாரணமாகக் குருவிச் சிந்து, அருவிச் சிந்து, பன்றிப்பல்லுப் போன்றவையும், பண்டிகைக்காலங்கள் மற்றும் சமய நிகழ்வுகளிலும் கும்மி, கோலாட்டம், கரகம், காவடி, உடுக்கை ஊஞ்சல் பாட்டு என்பவற்றை பொழுது போக்காகவும் மகிழ்வான ஒன்று கூடலின் போதும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

நிலவன் :- போருக்கு பிற்பட்ட இன்றைய சூழ்நிலையில் மக்களைக் கலைகள் மூலம் ஆற்றுப் படுத்த முடியுமா?

பாராசத்தி :- நிச்சயமாக முடியம் அவர்களின் வழியிலே சென்று அவர்களை ஆற்றுப் படுத்த வேண்டும் சில கருத்துக்களை, ஆறுதல்களை அமைதியான வார்த்தைகளை கலைவடிவங்களின் ஊடாக வழங்க முடியும். மனிதர்கள் வாழ்க்கைக்கு ஆறுதல் அளிக்கும், இறுக்கமான சூலில் இருந்து மனிதனுக்கு விடுதலை கொடுக்கும், சிறந்த மருந்தென்றே கூறலாம்.

நிலவன் :-  நிறைவாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.?

பாராசத்தி :- கலை இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு கொடையென்றே கூறலாம். இதிலும் பாரம்பரியக் கலைகள் அனைத்தும் பெரும் பொக்கிசமாகும். நம் பாரம்பரிய கலைகளை நிகழ்த்தியும் நெறிப்படுத்தியும் வரும்  நாடுகள் கடந்து வாழும்  கலைஞர்களை காணும்போது மகிழ்வாக இருக்கிறது.

திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களுடன்  ஒரு சிறப்பு நேர்காணல்!

எதிர்வரும் காலங்களிலும் கலைக்கும், கலைஞர்களுக்கும் என்னால் ஆன பங்களிப்பை வழங்குவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
எனது கருத்துக்களை பதிவு செய்த உங்களுக்கு மனமாந்த நன்றிகள் வாழ்க வளமுடன்.!

நிலவன் :- என்னுடைய இந்த நேர்காணலுக்கு ஒத்துழைத்தமைக்கு உங்களுக்கும் எனது நன்றிகள்.

நன்றி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.