சுப்ரபாரதிமணியன்திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “ சூழல் அறம் “ என்றத் தலைப்பில் கருத்தரங்கம் புதன் அன்று  நடைபெற்றது. பேரா. கண்ணகி ( தமிழ்த்துறைத்தலைவர் ) தலைமை வகித்து திருப்பூர் குமரன் பிறந்த தினத்தையொட்டி குமரன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக அவரின் படத்திற்கு மாலை அணிவித்து நினைவு கூறப்பட்டது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் “ சூழல் அறம் “ – சுற்றுச்சூழலும் உணவும் என்றத் தலைப்பில் பேசினார் . அப்போது இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும், உடல் நலமும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் தனதுரையில் குறிப்பிட்டவை:

"இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. துரித, ஜங்க் உணவுகள் உடல் ரீதியான பாதிப்புகளையும், உளவியல் பாதிப்புகளையும் தொடர்ந்து தருகின்றன. மூளையும், நாக்கும் அதே வகை சுவை உணவை தொடர்ந்து வேண்டுகின்றன. நல்ல சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிக அளவிலான ரசாயன உப்பு, செயற்கை இனிப்பு, செயற்கை நார்சத்து, ரசாயன கலவைகள், கொழுப்பு வகைகள் என்று அவை உணவில் கலந்து விட்டன. இவ்வகை அதீத சுவைப் பொருட்கள் ரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டியும் குறைத்தும் விளையாட்டு காட்டுவதுண்டு. இது மன அழுத்தம், மனச் சிதைவிற்கும் உடல் உபாதை மீறி கொண்டு செல்கிறது. இவ்வகை உணவுகளைத் தொடர்ந்து உண்ணும் ஒருவர் மிக எளிதாக சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்.

பெரும் சந்தையும், வணிக அம்சங்களும் கொண்ட இவ்வகை உணவு பரிமாறலில் பல நூற்றாண்டின் தமிழர்களின் வாழ்வியல் முற்றிலும் மறுக்கப்பட்டு வருவதை காண இயலும். தமிழகத்தின் பண்டைய ஐவகை நிலப் பிரிவில் குறிஞ்சி (கனி, கிழங்கு, தேன், தினை, விலங்குகளின் ஊன்), முல்லை (பால், தயிர், நெய்), ஆட்டிறைச்சி சோளம்), மருதம் (நெல்லரிசி, வாழைப்பழம் ஆடு கோழி இறைச்சி, பத நீர், கள்), நெய்தல் (மீன், ஆமை, நண்டு இறால்) குறிஞ்சி (தேன்), முல்லை (பால் நெய்). பாலை இவற்றை விற்கும் சந்தையானது.ஆகியவற்றில் கிடைத்த வெவ்வேறு பொருட்கள் மக்களுக்கு தினசரி உணவாகவும், இவற்றை பண்டமாற்றாக்கி வேறு உணவுகள் பெறவும் ஏதுவாகின.

தொழிலுக்கு தகுந்தபடியும், வருமானம், பருவ காலத்திற்கு ஏற்பவும் உணவு முறைகளை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். வெக்கை காலத்தில் தண்ணீர் கஞ்சி, குளிர் காலத்தில் சுடு சோறு கம்பு, களி உணவுகள் என்றும் வழக்கத்திலிருந்தது. தங்களுக்கு கிடைக்கும் இளநீர் நுங்கு மாம்பழம், கொய்யா ஆகியவற்றை சுலபமாக எடுத்துக் கொண்டனர். சமைக்காத சத்துள்ள உணவுகள் தொடர்ந்து கிடைக்க வழி இருந்தது. உணவை சமைக்க ஆரம்பித்த பின் அவை வெகு சுவையாகவும், எளிதில் செரிக்கும் தன்மையும் கொண்டிருந்ததால் சமையல் கலை என்பது வளர்ந்தது. சமையல் கலை இன்று ஒரு வகைப் படிப்பாகவும் வளர்ந்து விட்டது. சிறு நகரங்களின் உணவு விடுதிகள், பள்ளி மாணவர் விடுதிகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவுக் கூடங்களில் கூட இவ்வகை படிப்பு படித்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சமையல் கலை சார்ந்த படிப்புகளும், கல்வி நிறுவனங்களும் வளர்ந்து அத்துறையிலும் வேலையில்லாத பட்டதாரிகளை உருவாக்கி விட்டது. பரோட்டா, பிரியாணி, குஸ்கா, பிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் என்று தமிழ்ப் பெயர்களற்று உணவுப் பண்டங்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. தினசரி சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட மாற்று உணவுகளை தேடிப் போனான் தமிழன். ஆனால் இன்று நமது பாரம்பரிய உணவுகளை மாற்று உணவு என்று மீண்டும் தேடி வர வேண்டியுள்ளது. நம்மிடம் நோய் தீர்க்கும் உணவுப் பொருட்கள் இருந்தன. இன்று நோய் கொண்டு வரும் உணவுப் பொருளைத் தேடுவதில் சுகம் கண்டு கொண்டான். பெண்கள் தங்களின் பணி நேரம் தவிர சமையலில் அதிக நேரம் செலுத்த இயலாமல் துரித வகை உணவு பழக்கங்களில் முடங்கிப் போய்விடுகிறவர்களாக இருக்கிறார்கள். நோய்களுக்கும் வகை வகையான மருந்துகளைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, சுடுக்காய், சித்தரத்தை, மதுரம், கிராம்பு, வெட்டி வேர் வசம்பு, இஞ்சி, வேம்பு, பூண்டு, மஞ்சள் என்றும் மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, முங்கைக் கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, புதினா, மல்லி, கீழா நெல்லி என்று வெவ்வேறு கீரை வகைகளும் சாதாரண உணவில் சேர்க்கப்படும் பொழுது நோய்க்கு மருந்தாகும். இன்று மருந்தை தனியாக தேடி நிறைய செலவு செய்து உடம்பை மோசமான இயந்திரமாக்க வேண்டியிருக்கிறது. வயிற்றைக் குப்பையாக்கும் குப்பை தீனிப் பழக்கம் இன்றைய இயந்திர வாழ்க்கையின் நெருக்கடியால் தவிர்க்க இயலாமல் வந்து சேர்ந்து விட்டாலும் நுகர்வு கலாச்சார உணவுப் பண்பாடு ரத்தத்தில் கலந்து விட்டதை அறுவை சிகிச்சை மூலமே தவிர்க்க இயலும் நிலைக்கு வந்தாகி விட்டது.  இதை கவனத்தில் படிக்கும் மாணவ மாணவியர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.“

பேராசிரியைகள், மாணவிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.