தமிழர் சமவுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்ற உணர்வை       அன்று எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்தியவர் வித்துவான் வேந்தனார்..! வித்துவான் வேந்தனார்'ஈழத்தில் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் நிறைந்து காணப்பட்ட 1940 -களின் பிற்பகுதியில் ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக, தமிழ்ப்பற்றாளராக, நல்ல தமிழாசானாக, பிஞ்சுக் குழந்தைகள் முதல் பெரியோர்வரை பாடிக்களித்திட பாடல் தந்த கவிஞராக, உணர்ச்சிமிக்க பேச்சாளராக, ஆய்வுக் கட்டுரையாளராகப் பர்ணமித்துத் தமிழறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தவர்;. தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு தமிழ்ப்பணியாற்றியவர்;. இந்நாட்டில் தமிழர் சமவுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்ற தணியாத தாகம் மிகக்கொண்டவராக, எழுத்திலும் பேச்சிலும் அதனை வலியுறுத்தியவர் வித்துவான் வேந்தனார் ஆவார்.' இவ்வாறு, பாரிஸ் மாநகரில் கடந்த ஞாயிறு மாலை (23 - 06 - 2019) நடைபெற்ற வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா நூல்கள் வெளியீட்டு நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் - 'கலாபூஷணம்' வி. ரி. இளங்கோவன் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது :- 'நாட்டிற்காய் இளைஞர் கூட்டம் கிளர்ந்தெழுதல் வேண்டுமென அவரது 'அவளும் அவனும்' என்னும் காவியத்தில்வரும் கருத்துக்கள் தீர்க்கதரிசனமானவையெனப் பலர் குறிப்பிட்டுள்ளனர். 'அறப்போருக்கு அறைகூவல்' என்ற தலைப்பில் தொடர்ச்சியாக அவர் எழுதிவந்த கவிதைகள் கவனத்துக்குரியன. 'ஈழகேசரி'யில் அவர் எழுதிய கட்டுரையின் தாக்கத்தால் அப்பத்திரிகை 'இலக்கிய அரங்கம்' என்ற விவாதமேடையையே அமைத்து தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரித்தது. அதனால் வித்துவான் வேந்தனார் தமிழ்ப்பற்றாளர் எல்லோரதும் கவனத்துக்குரியவரானார்.

யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் 1951 -ம் ஆண்டு ஏப்ரல் 29, 30, மே 1 -ம் திகதிகளில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 'தமிழ்விழா' சிறப்பாக நடைபெற வேந்தனார் முன்னின்று செயற்பட்டார். தமிழகம், பெங்கள10ர், புதுடில்லியைச் சேர்ந்த சுமார் 18 -க்கு மேற்பட்ட தமிழறிஞர்களும், இலங்கையின் பத்துக்கு மேற்பட்ட தமிழறிஞர்களும் இவ்விழாவில் பங்குபற்றிச் சிறப்பித்தமை வரலாறு. இவ்விழாவில் மூன்றாம் நாள் இறுதிப் பேச்சாளராகக் கலந்துகொண்ட வித்துவான் வேந்தனாரின் 'வாழும் இலக்கியம்' என்ற தலைப்பிலான சிறப்புரையைத் தமிழகத்துத் தமிழறிஞர்கள் செவிமடுத்து வியந்து பெரிதும் மெச்சினர்.

தமிழர் ஒற்றுமை - விடுதலை, தீண்டாமை ஒழிப்புக் குறித்த வேந்தனாரின் எழுச்சிக் கவிதைகள் சிறப்புடையன. குழந்தை இலக்கிய முன்னோடியாக அவர் படைத்த குழந்தைப் பாடல்கள் இன்றும் தமிழர் இல்லங்கள் தோறும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. அவரது நாமம் தமிழர் வாழ்வில் நீடித்து நிலைக்கும்.' என்றார்.
தமிழர் சமவுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்ற உணர்வை       அன்று எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்தியவர் வித்துவான் வேந்தனார்..!
கலை இலக்கியச் செயற்பாட்டாளர் சி. மனோகரன் பேசுகையில், 'புலம்பெயர்ந்தோர் வாழ்வில் இன்று தலைமுறை இடைவெளி அதிகரித்து வருகிறது. கலாசாரப் பிறழ்வுகள் குறித்துப் பெற்றோர் விசனப்படுகிறார்கள். குழந்தைகள் சுயமாகச் சிந்திக்கவும், தமிழ்மொழியில் பேசி உறவாடவும் குழந்தை இலக்கியம் அவசியமாகிறது. இந்த விடயத்தில் பெற்றோர் கவனங்கொண்டு குழந்தை இலக்கியப் பாடல்களைச் சொல்லிக் கொடுப்பதின்மூலம் உறவை வளர்த்துக்கொள்ளலாம். வேந்தனாரின் பாடல்களை நாங்கள் ஞாபகப்படுத்திக்கொள்வதுடன் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்திட வேண்டும்' என்றார்.

கலை இலக்கியச் செயற்பாட்டாளர்கள் க. வாசுதேவன், க. முகுந்தன், வண்ணை தெய்வம், குகன் குணரட்ணம், வி. பாஸ்கரன், யாழ்நிலா, செ. பாஸ்கரன் ஆகியோரும் உரையாற்றினர். வேந்தனாரின் பாடல்களுக்குப் பரதநாட்டிய மாணவிகள் நடனமாடி மகிழ்வித்தனர். குழந்தைப் பாடல்களைப் பாடியும் மகிழ்வூட்டினர்.

வேந்தனாரின் நூற்றாண்டு விழாமலர் 'செந்தமிழ் வேந்தன்' (548 பக்கங்கள்),'குழந்தை மொழி' (மூன்று நூல்கள் - பாகம் 1, 2, 3.), 'தமிழ் இலக்கியச் சோலை', 'தமிழ் விருந்து' (வேந்தனார் கட்டுரைகள்) என ஆறு நூல்கள் விழாவில் வெளியிடப்பட்டன. வேந்தனாரின் மகன் இளஞ்சேய் தம்பதிகள் நூல்கள் அடங்கிய பொதியை வழங்க, முதலாவதாக அதனைச் சமூகச் செயற்பாட்டாளர் - தொழிலதிபர் யா. பாலகிருஸ்ணன் பெற்றுக்கொண்டார்.

 

தமிழர் சமவுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்ற உணர்வை       அன்று எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்தியவர் வித்துவான் வேந்தனார்..!

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கப் பிரான்ஸ் கிளையினர் ஒழுங்குசெய்த இவ்விழாவில் பெருந்தொகையானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.