அறிவித்தல்காலம்- 08 டிசம்பர் 18 (சனி)
மாலை 3.00 மணிக்கு
இடம் - Trinity Centre, East Avenue, Eastham ,E12 6SG (Nearest Underground Station: East Ham)

அனைவரையும் அழைக்கிறோம். உரிய நேரத்திற்கு நிகழ்வு தொடங்கும்
ACTIVITY CENTRE FOR TAMIL LANGUAGE COMMUNITIES – A.C.T
தொடர்பு 07817262980 (Fauzer), 07402868713 (Sabesan)


அமர்வு-01 - வழிப்படுத்தல் - நா.சபேசன்

1. "ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர் ஐராவதம் மகாதேவன்" - உரை - எஸ். விசாகன் (மானிடவியல், சாசனவியல் ஆய்வாளர்)
2. "முழு நேர ஊழியன் தோழர் ஏ.எம்.கோதண்டராமன்" - கட்டுரை -  முன்னாள் பேராசிரியர் தெய்வசுந்தரம் , சென்னைப் பல்கலைகழகம்
3. "கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி " உரை - மு. நித்தியானந்தன் ( எழுத்தாளர் கல்வியலாளர், கலை இலக்கிய விமர்சகர்)

ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர் ஐராவதம் மகாதேவன் - உரை - கலாநிதி எஸ். தியாகராஜா

தமிழின் தொன்மைக்குச் சான்றுகளை கொடுத்த அறிஞர், இவர் சிந்தி எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கல்வெட்டு எழுத்தியல் துறையில் மிக முக்கியமான அறிஞராக பார்க்கப்பட்டார். 1977-ல் அவர் வெளியிட்ட ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’என்ற புத்தகம் சிந்து சமவெளி எழுத்துக்களைக் குறித்த ஆராய்ச்சிகளில் ஒரு மைல்கல். அந்த புத்தகத்தில் தான் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. தினமணி நாளிதழின் ஆசிரியராக 1987 முதல் 1991 வரை பணியாற்றியபோது, அறிவியல், இலக்கியம் போன்ற துறைகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்ததுடன், பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தினை ஊடகத்துறையில் அழுத்தி பதிய வைத்தவர்.

முழு நேர ஊழியன் தோழர் ஏ.எம்.கோதண்டராமன் - கட்டுரை - பேராசிரியர் தெய்வசுந்தரம் , சென்னைப் பல்கலைகழகம்

மார்க்ஸிய - லெனினிய கம்யூனிஸ்ட் அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான ஏ.எம்.கோதண்டராமன் , தனது அரசியல் பணிகளின் காரணமாக வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையிலும், தலைமறைவிலும் கழித்தவர். தொழிற்சங்க பணிகளில் பங்களித்தவர். `சமரன்’ என்ற பத்திரிகையின் மூலம் தீவிரமான அரசியல் கட்டுரைகளை எழுதினார். `செந்தாரகை’ எனும் இலக்கிய இதழைக் கொண்டுவந்ததிலும் இவரின் பங்கு இருந்தது.ஈழ அரசியல் அமைப்புகளுடன் தொடர்பை பேணியவர். தமிழக இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளிலொருவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸிய – லெனினிஸ்ட் ம.யு (பொல்ஷெவிக்) கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர்.

கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி உரை - மு. நித்தியானந்தன் ( எழுத்தாளர் கல்வியலாளர், கலை இலக்கிய விமர்சகர்)

1936 ஆம் ஆண்டு பிறந்த முத்துசாமி, தெருக்கூத்து மற்றும் நாடக் கலையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு கூத்துப்பட்டறையை நிறுவினார்.தெருக்கூத்து மூலம் பிரபலமான இவர் கூத்துப்பட்டறை , மற்றும் நவீன நாடகங்கள் மூலம் கலைஞர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வந்தார். நாடகத்துறையின் ஆளுமையாக மதிக்கப்பட்டார் . நவீன நாடகம் மூலம் அவர் காட்சிப்படுத்திய விதங்கள், தமிழ் நாடக உலகிற்கு புதியதாக இருந்தது மட்டுமின்றி, பல பார்வையாளர்கள் முன் சமூகம் சார்ந்த கேள்விகளை முன்வைத்து பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. பன்முகக் கலைஞராக விளங்கிய அவர் கதைகள், கட்டுரைகளை எழுதியும், அவற்றை நூலாக வெளியிட்டுமுள்ளார்.


அமர்வு -02 - வழிப்படுத்தல் - ராகவன்

“தமிழ்த் திரை : மையமாகும் விளிம்புகள்” - பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படங்களை முன்வைத்த உரையாடல் –
உரை- முரளி சண்முகவேலன் – சாதி மற்றும் தகவல் தொடர்பு ஆய்வாளர்.(SOAS- University of London

'பரியேறும் பெருமாள்'.
- சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் அத்துமீறல்களையும், சமத்துவத்தை எதிர்பார்க்கும் இளைஞனின் நோக்கத்தையும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படம். சாதிய வன்மத்துடன் திரியும் மனிதர்களின் முகங்களை, உள்ளுக்குள் குரூரத்துடனும் வெளியில் இயல்பாகப் பேசுவதாகப் பேசும் மனிதர்களின் தந்திர பாவனைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று 'பரியேறும் பெருமாள்'.

மேற்கு தொடர்ச்சி மலை-
தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கிற மலைப்பகுதி கிராமத்தில் வாழ்கிற மனிதர்களை பற்றிய சம்பவங்கள்தான் இந்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’. தன் வாழ்நாள் முழுக்க மலையடிவாரத்திலிருந்து அதன் உச்சி வரைக்கும் நடந்து கொண்டேயிருக்கும் ஒருவனை, நகரமயமாக்கலும் நய வஞ்சகமும் எப்படி ஓரிடத்தில் அமர வைக்கிறது என்பதுதான் மையம். இந்த மையம் தவிர்த்த மற்ற பகுதிகள் எல்லாம் கிராமங்களின் அழகையும் வெள்ளந்தி மனிதர்களின் நேர்மையையும் சொல்லி சொல்லி மயக்குகிறது நம்மை. வெற்றி தோல்வி என்கிற புள்ளிவிபர கணக்குக்கெல்லாம் ஆட்படத் தேவையில்லாத இந்தப்படம் தமிழ்சினிமாவின் கவுரவங்களில் ஒன்று

"இந்தக் கதைகளை உங்களால் சகிக்க முடியவில்லையென்றால், இந்த சமூகம் சகிக்க முடியாததாக இருக்கிறதென அர்த்தம். ஏற்கனவே நிர்வாணமாக நிற்கும் இந்த சமூகத்தின் ஆடைகளை உருவ நான் யார்? நான் அதை மறைக்க முயலவில்லை. அது என் வேலையுமில்லை" என்ற சாதத் ஹசன் மாண்டோவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

Mahroof Fauzar <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>