'நூல் அறிமுகமும் இசைச் சமர்ப்பணமும்' :தமிழும்  இசையும்  இணைந்து  அரங்கேறிய  இனிமையான  நிகழ்வு  ஒன்று  22/10/2016  சனிக்கிழமை  மாலை  ஈஸ்ட்ஹாமிலுள்ள  அக்ஷயா மண்டபத்தில்  நிறைவேறியது. பிரபல எழுத்தாளர்  முல்லைஅமுதன் ஜெயராணி  தம்பதிகளின்  மூத்த  புதல்வி  கார்த்திகா  "சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்"  என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி  சிறிதரன்  அவர்களிடம்  தான்  கற்றுத் தேர்ந்த இசையையும்  சமர்ப்பணம்  செய்தார்.

முற்பகுதியில்  நூல்  அறிமுகம்,  பிற்பகுதியில்  இசைச் சமர்ப்பணமும் இடம்பெற்றது. ஆரம்பத்திலிருந்து  நிகழ்ச்சி  முடியும் வரை  சபையோர்  இருந்து  இரசித்து மகிழ்ந்தமை  இது  ஒரு  தரம்  மிக்க  நிகழ்வு  என்பதை  உறுதிப் படுத்தியது.

'தந்தை  எவ்வழி  மைந்தரும்  அவ்வழி'  என்ற  பழமொழிக்கிணங்க  மகள் தனது  பதின்மூன்றாவது  வயதிலேயே  அழகாக  ஒரு  நூலை  எழுதி வெளியிட்டது  பாராட்டத்தகுந்தது. மகாகவி  பாரதியைப்  பற்றித்  தமிழ் மக்கள்  ஒவ்வொருவரும்  அறிய வேண்டியது  அவசியம். இருபதாம் நூற்றாண்டின்  ஆரம்பக் காலத்தில்  அறியாமை  இருளில்  மூழ்கிக்  கிடந்த தமிழ்ச்  சமுதாயத்திற்கு  அறிவொளி  ஊட்டத்  தோன்றிய  ஒளிமிகு  சூரியன் மகாகவி. அவரது  அளப்பரிய  பெருமை  மிகு வரலாற்றையும்  சில பாடல்களையும்  தனது  நூலில்  பதிவு  செய்துள்ளார்  கார்த்திகா.

அது  மட்டுமன்றி, கர்நாடக  இசை  மேன்மையுற்று  வளர  மூலகர்த்தாக்களான மும்மூர்த்திகளின்  வரலாறும், இசைப்பணியும்  மட்டுமன்றி  அவர்களுக்கு இணையான  இன்னும்  சில  இசைமேதைகளின் (கோபால கிருஷ்ணபாரதி, பாபநாசம் சிவன், சுவாதித் திருநாள்)  வரலாறும்  சுருக்கமாகவும்  தெளிவாகவும்   இந் நூலில்  இடம் பெற்றுள்ளது. ஈழத்தில்  தோன்றி  ஈழத்திலும் , தமிழ்நாட்டிலும்  இசைக்கும் , தமிழுக்கும்  தம் வாழ்வை  முழுவதும்  அர்ப்பணித்த  விபுலானந்த அடிகளின்  வரலாறும்  இந் நூலில்  இடம்பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. இந்  நூல்  ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது  இந்  நாட்டில்  வளரும்  இளம்  தலைமுறையினருக்கு இலக்கியத்தை  அறிமுகப்படுத்தத்  துணை  நிற்கும்.  இசை கற்போர்  அனைவருக்கும் சிரந்த  கைநுலாக அமையும்.

நூல்  வெளியீட்டின்  ஆரம்ப நிகழ்வாக,  செல்வி.சிவபைரவி சிறிதரன் கைகுவித்துக்  கண்  மூடியவண்ணம்  பக்தியுடன்  பாடிய  தேவாரம்  நிகழ்ச்சி சிறப்பாக  அமையும்  என்பதற்குக்  கட்டியம்  கூறியது. 

வரவேற்புரையை  செல்விகள்  தர்மிகா பூரணம்பிள்ளை,பபிதா சிவசுந்தரம் தமிழிலும்  ஆங்கிலத்திலும் வழங்கினார்கள்.

அடுத்து   இடம்பெற்ற வரவேற்பு   நடனம்  நிகழ்ச்சிக்கு  களைகட்டியது. நடன  ஆசிரியை  திருமதி. தர்சிகா பிரதீபனின்  நெறியாள்கையின்  திறனை  நடனம்  எடுத்தியம்பியது. வாழ்த்துரை  வழங்க  வந்த  வரகவிப்புலவர் .சிவநாதனின்  இடிமுழக்கத்துடன் கூடிய  கவிதை மழை  சபையோரை  மெய்மறக்கச்  செய்தது. (தமிழ்  தெரியாத சிலரைத்  திடுக்கிடவும்  செய்தது) மகளின்  திறமையை வியந்து  பாராட்டியதுடன்,,  எழுத்துலகில்  தன் கொள்கையின்  வழி  நின்று   சிறிதும்  பிறழாது  வாழ்ந்து வரும்  தந்தை முல்லை அமுதனின்  தனித்துவத்தையும்  சுட்டிக்காட்டினர்.

அடுத்து, கருத்துரை  வழங்கிய  இளந்தலைமுறையைச்  சேர்ந்த செல்வி .ஜனனி விஜயமனோகரன்  நூலைப்  பற்றி  அளவாக ,அழகாக, தெளிவான உச்சரிப்புடன்  தமிழில்  உரையாற்றியமை  சபையோரை  நிச்சயமாக ஆச்சரியத்தில்  ஆழ்த்தியிருக்கும்  என்பதில்  ஐயமில்லை.

வெளியீட்டுரை  நிகழ்த்திய, லண்டனின்  வாழும்  எல்லோராலும்  அறியப்பட்ட கவிஞர், பெரும் பேச்சாளர். திரு,இராஜமனோகரன்  அவர்கள்  இன்னும் கொஞ்சம்  விபரமாக நூலைப்  பற்றிச்  சொல்லி  இருக்கலாமே  என்று எண்ணத்  தோன்றுகிறது .ஏனெனில்,  குட்டி எழுத்தாளருக்கு  அது  ஒரு தூண்டுதலாக  அமையும்.

பிரதம  விருந்தினராக  வந்தமர்ந்து  நிகழ்ச்சியை  சிறப்பித்த  சைவ சித்தாந்த பண்டிதர்  வசந்தன்  குருக்கள்  தனக்கே  உரிய  பாணியில்  தமிழையும் ,இசையையும்   நடைமுறை   வாழ்வுடன்   இணைந்து  நகைச்சுவையும்  கலந்து  நயம்பட  நல்லுரையாற்றினார்.

இசைச் சமர்ப்பணமும்  கேட்போரைக்  கவரும்  வகையில்  பாடல்கள்  தெரிவு செய்யப்பட்டிருந்தன. பாடல்களின்  பொருளை  உணர்ந்து  அவற்றிற்கான உணர்ச்சியை  வெளிப்படுத்தி  அருமையாகப் பாடியுள்ளார்   கார்த்திகா. சுருக்கமாகக் கூறினால்  பாடலின்  பொருளாக   மேடையில்  கார்த்திகா  அமர்ந்திருந்தார்   எனலாம்.

பாட்டிற்கேற்ப  குரல் அசைவும்  தலையசைவும்  மிகவும்  ரசிக்கக்கூடியதாக இருந்தது.

அனுபவம்  மிக்க  கலைஞர்கள்  பாடல்களைப்  பாடும் போது  சொற்களை மென்மையாகவும், நளினமாகவும்  உச்சரிப்பார்கள்.  அதைப் போலவே பாடியமை  என்னை   மிகவும்  கவர்ந்தது.  தாயகப்  பாடல்  எல்லோரது நெஞ்சைத்  தொடும்  வகையில்  இருத்தது.  குறிப்பாக   "தூர… தூர.. தூர"  என்ற வரிகள்   தாயத்திலிருந்து  லண்டன்  வரை  நடைப்பயணம்  செய்தது  போன்ற உணர்வை  ஏற்படுத்தியது. அப்பாடலை  தமிழ்நதி  எனும்  நம்மவரே எழுதியதாக  அறிந்தபோது  இன்னும்  சந்தோசமாக  இருந்தது. அவருக்கும் வாழ்த்துக்கள்  போய்ச்  சேரட்டும்.

கார்த்திகாவின்  குரு திருமதி சேய்மணி  சிறிதரன்  மாணவி  பாடும் ஒவ்வொரு  பாடலுக்கும்   ஊக்கமும்  உற்சாகமும்  கொடுக்கும் வகையில்  தாளம்  போட்டுக் கொண்டிருந்தமை ஆசிரியரின்  அர்ப்பணிப்பைக்  காட்டியது. குருவின் பங்களிப்புப்  பாராட்டுக்குரியது.

இசை நிகழ்ச்சியில்  பக்கவாத்தியக்  கலைஞர்கள்  சபையோரை ஆச்சரியத்தில்  ஆழ்த்தினர். இனிமேல்  பெருங்கலைஞர்களை அரங்கேற்றத்திற்கு  அழைக்கவேண்டிய  அவசியம்  இல்லை என்பதை மேடையிலிருந்த  குட்டிக் கலைஞர்கள்  உறுதிப்படுத்தினர்.

மிருதங்கத்தை  பாரதிநேயன் சிறிதரன்  வாசித்தனர்.  பிரபல தபேலா, கஞ்சிரா ,மோர்சிங்  வித்துவான். சிதம்பரநாதன்  எனப் போற்றப்படும்  கலைஞரின் புத்திரர்களான  தனுஜன்   தபேலா  வாசிக்க, தர்மஜன்  மோர்சிங்  வாசிக்க   சிவஜனனி  சுரேஷ்  வயலின்  வாசித்தார்.  சிவபைரவி, தர்சிகா  எனும் சிறுமிகள்  தம்புராவை  மீட்டினர்.

தமிழும்  இசையும்  சைவமும்   இந்  நாட்டில்   தழைக்கும்,  நிலைபெறும் என்னும்  நம்பிக்கையை  எமக்களிப்பதாக  எமக்களிப்பதாக  நூல்  வெளியீடும்,  இசைச் சமர்ப்பணமும்  அமைந்தது. 

செல்வி.துவாரகா பாலச்சந்திரன்,  கவிஞரும் ,ஊடகவியலாளரும்,  அரசியல்   ஆய்வாளருமான   திரு.வேல்தர்மா,. திரு ஆனந்ததியாகர் (அதிபர்.சைவ முன்னேற்றச் சங்க நால்வர் தமிழ்ப் பாடசாலை),   திருமதி. அமிர்தா சாந்திகுமார் (அதிபர். தமிழ்க் கல்விகூடம். எசெக்ஸ்)    ஆகியோரும் சுருக்கமாகவும்   தெளிவாகவும்   சிறப்புரையை   நிகழ்த்தினார்கள்.

.*கார்த்திகாவின்  மேற்கத்தைய  இசை ஆசிரியர்       Mr.James Lindsay கார்த்திகாவின்  இசை  ஆர்வத்தையும்  அவருக்கு  கற்பிப்பதில் தான் சந்தோசம்  அடைந்ததையும்  தான்  இன்று  எவ்வளவு  இசையை  ரசித்தார் என்பதையும்   அழகாக   ஆங்கிலத்தில்  எடுத்துரைத்தார். இசைக்கு  மொழி அவசியமில்லை   என்றும்  குறிப்பிட்டார். பிறநாட்டு  இசை  மரபுகள்  இந் நாட்டு இசையை  வளப்படுத்துகிறது  என்றும்  கூறினார். இள  வயதில்  கார்த்திகா எழுதி  இசை  அமைத்த  பாடலை  தொலைக்காட்சியிலும் ஆவணப்படுத்தியதாகவும்  சொன்னார்.

மூத்த  நிகழ்ச்சித்  தொகுப்பாளர்  திரு.விக்கி .விக்னராஜா   தன் பங்கை  மிகத்  திறம்பட  ஆற்றினார்.

மண்டபம் நிறைந்த மக்களும் இரசித்துச்  சென்றமையும், ஒவ்வொருவரும் நிகழ்ச்சி,  நிகழ்ச்சி  ஒருக்கிணைப்பு,  நூல்,  இளம் கலைஞர்கள்,  சிறார்களுக்கே முக்கியத்துவம்  கொடுத்தமை,  சிற்றுண்டி, உணவு  என  பலதையும்  புகழ்ந்து சென்றதைப்  பார்க்கக்கூடியதாக  இருந்தது.

நீண்ட  இடைவெளிக்குப்  பிறகு  முல்லைஅமுதன்  நடத்திய  முழுமையான நிகழ்ச்சி  இதுவாகும்

இப்படியான   நிகழ்வுகளை  நடத்தியதன்  மூலம்  பலருக்கும்  முன் மாதிரியாக  இது  அமையும்  என்பதே  கணிப்பு.

வாழ்க  கலை, வளர்க  இளம் கலைஞர்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.