ரூபானந்தசிவம் சிவனடியான்.யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் பலர் சர்வதேசரீதியாகப் கல்வி சார்ந்த பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வருவது யாவரும் அறிந்ததே. அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையிலும் சர்வதேசரீதியாகக் கவனம் பெற அவர்கள் தொடங்கியிருப்பதை வரும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. 

சிங்கப்பூரில் மே 4 தொடக்கம் மே 8 வரை நடைபெறவுள்ள 'ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றுவதற்கு யாழ்ப்பாண உதவிக்கல்விப்பணிப்பாளர் சண் தயாளன் தகுதி பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தயாளன் யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் கனடாவில் வசிக்கும் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவரான ரூபானந்தசிவம் சிவனடியான் அவர்கள் சர்வதேசக்கிரிக்கட் சபையின் அமெரிக்கத்துணைக்கண்டத்துக்குரிய நடுவர்கள் குழுவில் அங்கம் வகிப்பது பெருமைக்குரியது. இவரது விளையாட்டுத்துறைச் சாதனைகளுக்காக  30.04.2016 டொராண்டோ, கனடாவில் நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரியின் இராப்போசன நிகழ்வில் கெளரவிக்கப்பட்டபோதுதான் இவரது இந்தச்சாதனை பலருக்குத்தெரிய வந்தது.

விளையாட்டுத்துறையில் தம் பங்களிப்பினைச்சர்வதேசரீதியாக வழங்கி தொடர்ந்தும் சாதிக்கும் சண் தயாளனையும், ரூபானந்தசிவம் சிவனடியான் இருவரையும் வாழ்த்துவோம்!