'எதுவும் பேசாத மழைநாள்'-ஒரு பார்வைமுல்லைஅமுதன்ஈழத்துக் கவிதை உலகில் தமிழ் பேசும் முஸ்லிம் கவிஞர்களின் பங்களிப்பு மகத்தானது.மரபு,நவீனம் என தங்கள் கவிதைகளை சிறப்புறவே நமக்குத் தந்துள்ளனர். அன்பு ஜவகர்ஷா, அன்பு முகைதீன், பஸீல்காரியப்பர், மருதூர் வாணன், அண்ணல், இக்பால்(தர்காநகர்)மேமன்கவி, இப்னுஅஸ்மத், கலைக்கமல், கவின்கமல், சோலைக்கிளி, உ.நிசார், பைசால், ரியாஸ் குரானாகெக்கிராவை. சஹானா,  வசீம் அக்ரம்,  நாச்சியார்தீவு பர்வீன், கே.எம்.எம்.இக்பால்(கிண்ணியா)ஒலுவில் அமுதன், ஒட்டமாவடி அஸ்ரப், ஜின்னாசெரிப்புத்தீன், புரட்சிக்காமால், கலைமகள் ஹிதாயா, நளீம், நற்பிட்டிமுனை பளீல், அனார், ரிஷான் செரிப், பஹீமா ஜெகான்,ழ்ரஷ்மி, பௌசர், இப்படி பட்டியல் மிக மிக நீண்டது. அவ் வகையில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது நபீல் எனும் கவிஞனின் இந் நூல். உயிர் எழுத்துப் பதிப்பகம் அழகுற எழுபது பக்கங்களில் அச்சிட்டுள்ளது. ஏற்கனவே'காலமில்லாக் காலம்' எனும் கவிதை நூலை தந்தவர். அபரிமிதமான நம்பிக்கைகளை அந் நூலின் மூலம்விதைத்தவர். அவர்களும் யுத்த ரணங்களைச் சுமந்தவர்கள். இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர்கள். பிரிக்க முடியாத படி அவலங்களுடனும், நெருக்கடிகளுக்குள்ளும் வாழ்பவர்கள். ஒரு இனத்தின் விடுதலை இவர்களையும் இணைத்தது தான். அதுவே முழுமையானதுமாகும்.

வாழ்க்கை அழகாக இருக்கவே ஆசைப்படுகிற மனிதர்க்கு அவ்வாறு வாய்ப்பதில்லை.நமக்கான வெளி கூட பயமுறுத்தவே செய்கின்றன. கால்களில் குத்தி வலி ஏற்படுத்துகின்ற யுத்த எச்சங்கள் கவிஞரையும் வருத்துவது அவர் கவிதைகளூடே சொல்கிறார். நாமும் அந்த வலிகளூடே நகர்வதால் கவிதைகள் சொந்தமாகின்றன. கவிதையில் தேர்ச்சி தெரிகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராகவும்,கொழும்பு துறைமுக அதிகாரசபையின் இலிகிதராகவும் கடமையாற்றுவதால் அனுபவங்கள் கிடைக்க கவிதைகள் இலகுவாக எழுத முடிகிறது. மெதுவாக அவர் துன்பங்களும்,துயரங்களும் லாவகமாக வாசகருள் இறங்கி அவர்களையும் சங்கமிக்க வைக்கிறது.

      'மற்றெல்லாவற்றையும் மன்னிக்கலாம்
       முடியுமானவரை மறக்கலாம்.
       கவிதையை வளர்த்து
       என் நித்திரையை நீ
       பிடுங்குவடைத் தவிர
       கண்விழித்தெழுந்த என் கவிதைகள்
       அழுக்குத் தீரக் குளித்துக் கொண்டிருந்தன.'

கவிதைகள் குளிக்கின்றன எனும் கவிதைத் தலைப்புக்கூடாக தன் கவி திறத்தை
அழகுறச் சொல்கிறார்.'

   நிலவைஇழுத்துக்கொண்டு
   மழையை அலைக்கழிக்கிறாய்
  அலைந்து வரும் நாயாக நின்று
   எப்போது மூச்சிழுக்கப் போகிறாய்?

சொல்லாடல் நம்பிக்கை தருகிறது.பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

     காயப் படுத்தாமல்
     வேகமுள்ள என் சொற்கள்
     விழித்துக் கண் மூடுகிறது.
     திடுக்கிட்டு விலகி அலையாகி
     தெறித்து விடுவாளோ
     இடுப்பில் ஆடையில்லாத
     அந்தக் கடலாள்...

கவிதை சொல்லும் அழகு தனக்கே உரித்தான பாணியில் சொல்வது வலுச் சேர்க்கிறது. சில கவிதைகளை நாம் வாசிக்கும் தருணங்களின் மன உணர்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தின் இலேசாக கண்கள் பனிக்கும். எங்கோ ஒரு உலகின் மூலையில் ஒரு உயிர் துடிக்குமாயின் கவிஞன் எழுதிய எழுத்துக்கள் உயிர் வாழும் என்பதில் நம்பிக்கை எனக்கு அதிகம். நம் கவிஞர்களின் புதிய திசைகள் பற்றிய தெளிவான சிந்தனைகளை நமது அரசியல் கற்றுத் தந்திருக்கிறது.அவர்களின் சூழலும் நேர்த்தியாக அதிர்வைத் தரக்கூடிய மாதிரி எழுத வைக்கிறது.நபீலும் விதி விலக்கல்ல. 59 சிறியதும் பெரியதுமான கவிதைகளைத் தாங்கி வெளி வந்துள்ள தொகுப்பு இது.

தோற்ற இடத்தில் கையலம்பி
எழுகிறது...
சொற்களால் முகம் வரைந்து
தோளில் சாய்ந்துகொள்ள
மடியில் விரிகிறது...

சொல்லாடல் எம்மை நிமிரவைக்கின்றன. சமூகம் பற்றிய அதிக அக்கறை, சூழல் பற்றிய கவனிப்பு,காதலைக் கூட இங்கிதமாய் நமக்குப் புரியவைக்கிற துணிச்சல் நபீல் பாராட்டுக்குரியவர். மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கவிதைகள் அதிகம்.கவனிக்கப்படவேண்டியவர்.
வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர்.

உரிச்சி வெயிலில் எறிந்த கோதுகள்..
தன்னை வாசிக்கும் புல்லாங்குழல்..
ஏழு வானங்களும் எல்லா வீடுகளும்..
தொலைத்தவர்கள் தொலைந்தனர்..
முகமும் மடியிலமர்ந்த கூந்தலும்..
கிளிகள் சாய்த்து வந்துதைத்த மனம்..
அழுத மழையும் சிறகுகளும்..
கொக்குக் குஞ்சு மடு..

நான் ரசித்த கவிதைத் தலைப்புக்கள். எதுவும் பேசாத மழைநாள் கவிதையும் நன்று. இத்தனை கவிதைகளும் வாசகரைச் சென்றடைகிற போது நிச்சயம் இன்னும் கவனிப்புக்குரியவராவார். மோதிரக்கையான சோலைக்கிளி அவர்களின் அணிந்துரை நபீலுக்குப் பெருமை சேர்க்கிறது.இந் நூலை வெளியிட்ட உயிர் எழுத்துப் பதிப்பகத்தார்க்கும் வாழ்த்துகள். நபீலின் தொகுப்புக்கள் நிறைய வெளி வரவேண்டும்.
வாழ்த்துகள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.