'கண்ணீரினூடே தெரியும் வீதி' தேவமுகுந்தன் சிறுகதைகள்தேவமுகுந்தன்இது தேவமுகுந்தன் அவர்களது சிறுகதைத் தொகுதி. இவர் சுமார் 20 வருடங்களாக சிறுகதைத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ளவராக இருக்கிறார். இவரது முதலாவது சிறுகதை 1992ல் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. மரநாய்கள் என்பதே அந்தச் சிறுகதையாகும். அதன் பின்னர் நீண்ட அஞ்ஞாதவாசத்தின் பின்னர் 2008 முதல் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார். இத் தொகுப்பில் அவரது 10 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் முற்கூறிய மரநாய்கள் உடன் ஏனைய 9 சிறுகதைகள் அடங்குகின்றன. இவை 2008 முதல் 2011 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை. அண்மைக் காலமாக கடந்த அதாவது 4 வருடங்களாகத் தீவிரமாக எழுதி வருகிறார். அத்தோடு பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். தகவம் பரிசை இருமறை பெற்றிருக்கிறார். இருந்த போதும் பரவலான வாசகர்களைக் கொண்டவர் என்று சொல்ல முடியாது. காரணம் இவரது படைப்புகள் ஜனரஞ்கமான பத்திரிகைளிலும் சஞ்சிகைகளிலும் வருபவை அல்ல. குறிப்பிட்ட தரமான சில ஊடகங்களில் மட்டுமே வருபவை. எனவே காத்திமான வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால் மேம்போக்கான கிளுகிப்பு வாசிப்பில் உள்ளவர்கள் இவரை அறிந்திருப்பது சாத்தியமில்லை.

இந் நூலில் உள்ள இவரது படைப்புகள் 'கலைமுகம் (3), 'காலம்'(3), 'யுகமாயினி'(1), 'ஞானம்'(1), 'ஜீவநதி'(1), ஆகிய சஞ்சிகைகளில் வெளி வந்திருக்கின்றன.  மாணவப் பருவத்தில் இவர் எழுதிய சிறுகதையான மரநாய்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அந்நேரத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. நூலின் முகப்புக் கதையும் நூலின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான 'கண்ணீரினூடே தெரியும் வீதி' தினக்குரல் ஞாயிறு பதிப்பில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைகளில் வெளிவரும் சிறுகதைகள் பொதுவாக தீவிர வாசகர்களைக் கவர்வதில்லை. அத்துடன் என்போன்ற சோம்பேறி வாசகர்கள் பார்வைக்கும் கிட்டுவதில்லை. காரணம் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தும் வாசிக்க ஆரம்பிப்பதற்கிடையில் பழைய பேப்பர்காரனது தள்ளுவண்டியில் பத்திரிகை ஏறியிருக்கும். ஆயினும் தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றில் நல்ல பல கதைகள் வெளிவந்துள்ளன.
 
நல்ல படைப்பாளி
 
இவர் ஒரு நல்ல படைப்பாளி. குறுகிய காலத்திற்குள் இவரால் எவ்வாறு இவ்வளவு நன்றாகக் கதை எழுத முடிந்திருக்கிறது என யோசித்தால், இவரிடமுள்ள தார்மீகக் கோபமும் ரசனையுர்வும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
 
ஒவ்வொரு கதையும் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. அதற்குக் காரணங்கள் பல இருக்கும். பரந்த வாசிப்பு, தேடல், தனது படைப்பில் எளிதில் திருப்தியடையாமல் சீர்திருத்தல் போன்ற பல.

ஆனால் இவற்றிக்கு மேலே வேறு ஒரு ரகசியமும் இருக்கிறது. அதை முகுந்தன் தனது முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார். "முதல் வாசகனாக இருந்து வாசித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்தவர்" திரு.அ.யேசுராசா என்கிறார்.
 
யேசுராசா இலை இதழின் ஆசிரியாராக இருந்தவர். ஈழத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் சிலரது மிகச் சிறந்த கதைகள் அலையில் வெளி வந்திருக்கின்றன. முதல் வாசகனாகவும் ஆலோசகராகவும் நண்பர் யேசுராசா இருந்ததால்தான் அவ்வாறான சிறுகதைகள் வெளிவந்தன என்பது நினைவிற்கு வருகிறது.

சிறுகதையை புனைகதை என்பார்கள். ஆனால் இவை வெற்றுப் புனைவுகளாக இருப்பது சாத்தியம் அல்ல. பெரும்பாலும் யதார்த்தமானவை. எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்கள். படைப்பாளியின் மனத்தில் ஆழ்மனத்தில் பதிந்தவையாக இருக்கும்.
 
தார்மீகக் கோபம்
 
ஒரு உதாரணம் சொல்லலாம். அண்மையில் ஒரு மருத்துவக் கருந்தரங்கு நடைபெற இருந்தது.; உணவு முறைகள் பற்றியது. நோய்களுக்குக் காரணமான உணவு முறைகள், மற்றும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்க, எவ்வாறு சில வகை உணவுகள் உதவ முடியும் என்பது பற்றியது. எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். நோய்களைத் தணிக்க மருந்துகளுக்கு அப்பால் உணவு முறை உட்பட்ட வாழ்க்கை முறைகள் உதவும் என நம்பும் எந்த மருத்துவனுக்கும் பிடித்தமான விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அது ஒரு வேலை நாள். கருத்தரங்கிற்கு நான் சென்றால் தேடிவரும் நோயாளிகள் ஏமாற நேரிடும். ஆனாலும் அங்கு நான் பெறும் அனுபவங்களை பத்திரிகைகளில் பகிர்வதன் மூலம் பல நோயாளர்கள் பயனடைவார்கள் என்பதால் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. மருத்துவர்களுக்காக மருத்துவர்களால் நடாத்தப்படும் கருத்தரங்கு. ஆனால் அங்கு பெருந்தொகையான தாதியர்கள் மற்றும் உணவு லிகிதர்கள் வந்திருந்தார்கள். ஆங்கிலத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கு முற்றுமுழுதாக சிங்கள மொழியில் நடைபெற்றது. இடையிடையே புரஜெக்டரில் காட்டப்பட ஆங்கில சிலைட்டுகளைப் பார்த்து ஆறுதலடைய வேண்டியிருந்தது.

முகுந்தனும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். அது கற்கைச் செயற்பாட்டில் வழிகாட்டிகள் பற்றியது. அது பங்குபற்றுபவர்களுக்கு அரசு பணம் கொடுத்து செய்த கருத்தரங்கு ஆனால் நாங்கள் பணம் கொடுத்து அந்தக் கருத்தரங்கு சென்றிருந்தோம். இருந்தபோதும் நாம் எழுதவில்லை, உரத்துப் பேசவில்லை, மௌமாக இருந்தோம். ஆனால் தார்மீகக் கோபமுள்ள படைப்பாளியான முகுந்தனை அது ஆழமாகப் பாதித்திருந்தது. அவரால் மௌமாக இருக்க முடியவில்லை. அதுவே 'வழிகாட்டிகள்' என்ற சிறுகதையாகப் பரிணமித்;தது.
 
நம்பகத்தன்மை
 
சிறுகதை என்பது பொதுவாக ஒரு சிறிய படைப்பு. அது அளவில் சிறியது என்பது மட்டுமின்றி மனத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு சிறிய உணர்வை, அல்லது ஒரு சிக்கலை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். அது தனிப்பட்ட ஒரு மனிதர் பற்றியதாகவோ அல்லது ஒரு நிகழ்வு பற்றியதாகவே கூட இருக்க வாய்ப்புண்டு.
 
சிறுகதையில் இறுக்கமான கட்டுமானத்திற்கு இதுவே காரணமாக அமைகிறது. முகுந்தனின் படைப்புகளில் இந்த இறுக்கத்தைக் காண்கிறோம். தனது படைப்பிற்கு அவசியமானதற்கு அப்பால் எதையும் அவர் எதையும் வளவளவென்று சொல்வதில்லை. தனது மனதை அருட்டுவதைப் பற்றி மட்டும் எழுதும் எந்த எழுத்தாளனும் அவ்வாறே எழுதுவான்.
 
ஆனால் இங்குள்ள பல படைப்பாளிகளும் வலிந்து கதை கட்டுவதில்தான் வல்லவர்களாக இருக்கிறார்கள். கதைக்குத் தேவையானதா தேவையற்றதா எனச் சீர்தூக்கிப் பார்க்கமல் தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அதில் சொல்லிவிட முனைகிறார்கள்.
 
பரபரப்பாகப் பேசப்படும் விடயங்கள் பற்றி ரெடிமேட் தாயாரிப்புகள் சுடச்சுட வெளிவரும். சாதீயம், இனப்பிரச்சனை, போர்,பெண்ணியம் என எதைப் பற்றியும் அது பற்றி எந்தப் பட்டறிவு இல்லாதவர்களும் எழுதிவிடுவார்கள்.
 
அதற்கும் அப்பால் உபாசகர்களாக, போதகர்களாக மாறி நீட்டி முழங்கிப் போதனைகள் செய்ய முனைகிறார்கள். சிறுகதை என்ற வடிவத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் சிறுகதைப் படைப்பாளிகளாக  பத்திரிகைகளையும் மேடைகளையும் நிறைக்கிறார்கள்.
 
ஆனால் முகுந்தனின் படைப்புகளைப் படிக்கும்போது அவற்றில் நம்பகத்தன்மை நிறைந்து கிடக்கிறது. எதுவும் போலியாக இல்லை. மாணவனாக, வேலையற்ற பட்டதாரியாக, கொழும்பில் அறையில் வாடகைக்கு தங்கியிருக்கும் வாலிபனாக, அரச ஊழியனாக, வெளிநாட்டிற்கு புலமைக் கல்விக்காகச் செல்பவனாக, நூலகத்தில் ஈயோட்டும் வாலிபனாக, புகழ் பெற்ற எழுத்தாளனின் போலி முகத்தை வெளிப்படுத்தும் உறவினனாக அவரது பாத்திரங்கள் அனைத்தும் உயிரோவியமாக அமைந்துள்ளன. அந்தப் பாத்திரங்களோடு எங்களையும் நெருக்கமாக உலவ விட்டிருக்கிறார்.

முகுந்தன் படைப்புலகில் அதிகம் எழுதியது போர் முனைப்புப் பெற்ற காலமாகும். எனவே இவற்றில் போர் மற்றும் இன முரண்பாடு பற்றியதாகவே இருப்பதில் வியப்பில்லை. கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் குண்டு வீச்சு, செல் அடி என போர் பற்றிய நேரடியான அனுபவங்கள் பற்றிய கதைகள் கிடையாது. மரநாய்கள் விதிவிலக்கு.
 
யதார்த்தம்
 
இவரது படைப்புகள் பெரும்பாலும், மாற்று மொழிபேசும் நண்பர்களுடன், சகஊழியர்களோடு பழகும்போது ஏற்படும் அவமானங்களைப், இனப் பாகுபாடுகளை, உதாசீனங்களை, அவற்றால் ஏற்படும் மனப் பாதிப்புகளைப் பேசுகின்றவையாக இருப்பதைக் காண்கிறோம். இருந்தபோதும் மாற்று இனம் மீதான வன்மம் இவரது படைப்புகளில் இல்லை என்பது நம்பிக்கை ஊட்டுகிறது.
 
தாய் மொழி, தன் கலை கலாசாரம் பண்பாடு மீதான அதீத பற்றும், ஏனைய இனங்கள் மீதான வெறுப்பும் இளக்காரமும் இன முரண்பாட்டை வளர்க்கவே செய்யும். பல இனங்கள் சேர்ந்து வாழும், தொடர்ந்தும் வாழ வேண்டிய சூழலில் பேனா பிடித்தவர்கள் சற்று நிதானமாக பொறுப்புணர்வோடு எழுதுவது அவசியம். புண்ணை ஆறவிடாது நோண்டிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அல்ல எழுத்தாளன். அதே நேரம் வாக்கு வங்கியை பிடித்து வைப்பதற்காக பிரச்சைனைகளை பூதகாரமாக்கும் அரசியல்வாதி போலவும் இருப்பது நல்லதல்ல.

முகுந்தன் மலினமான புகழுக்காக அதீத இனப் பற்றாளனாக தன்னைக் காட்ட முற்படவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வகையில் பார்க்கையில் 'இரட்டைக் கோபுரம்' கதையின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இவனோடு ஒன்றாக வேலை செய்து, உண்டு குடித்து உலாவித் திரிந்த சிங்கள நண்பர்களில் ஒருவன் தனக்கு பாரிய துன்பம் ஏற்பட்ட வேளையில் 'பற தெமிளு' என்ற வார்த்தையை உதிர்த்துவிடுகிறான்.

இவனது மனம் நோகிறது. ஏமாற்றம் அடைகிறது. அருகே நின்ற சிங்கள மொழி தெரியாத மற்றொரு நண்பன் அவன் என்ன சொன்னான் என இவனை வினவுகிறான். 'எல்லாச் சிங்களச் சொற்களுக்கும் எனக்குக் கருத்துத் தெரியாது' என இவன் பதிலளிக்கிறான். நல்ல பதிலாக எனக்குத் தோன்றியது. முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் உறவுகளை பேண முயலும் ஒருவன் அவ்வாறுதான் பேச வேண்டும். முகுந்தன் தனது பாத்திரத்தை அவ்வாறு பேச வைத்தமை மகிழ்வளிக்கிறது.

இன முரண்பாட்டுக் கதைகளைப் பொதுவாகப் பார்க்கும்போது, வன்னியில் வாழ்ந்தவர்களது பார்வை அதி தீவிரமாகவும், யாழில் வாழ்பவர்களது படைப்புகள் அதில் சற்று காரம் குறைந்து மறைபொருளாகவும், வெளிநாட்டில் வாழ்பவர்கள் அதீத கற்பனைவாதிகளாகவும் படைப்பார்கள். கொழும்பில் வாழ்பவர்களது பார்வை வாழும் சூழலுக்கு ஏற்ப சற்று நீர்த்தலாகவே இருக்கும்.

எவ்வாறாக இருந்தபோதும் இனமுரண்பாட்டை முன்நிலைப்படுத்தும் மற்றும் ஏனைய இனத்தவர்களை விரோதிகளாகச் சித்திரிக்கும் படைப்புகள், எமது தாழ்வுமனப்பாட்டின் வெளிப்பாடா என நான் சிந்திப்பதுண்டு.

அல்லது இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைச் செய்திகளும் படைப்புகளும்தான் எங்களை மீளமுடியாத தாழ்வுச் சிக்கலில் ஆழ்த்துகின்றனவா என்பதையிட்டு சமூகவியலாளர்கள் சிந்திக்க வேண்டும்.
முகுந்தனின் படைப்புகளில் இனப் பிரச்சனைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் அதிதீவிர உணர்வு இருக்கவில்லை. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாக தொடர்ந்து இருக்காது யதார்த்தத்தை உணர்ந்த படைப்பாளியாக முகுந்தனை அவ்விடத்தில் கண்டேன்.
 
தொடர்ந்தும் இனமுரண்பாட்டுப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது எமது வாழ்வின் நாளாந்தப் பிரச்சனைகள் பலவற்றையும் முகுந்தன் எழுதுவார் என நம்புகிறேன். இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சில கதைகள் உள்ளன. சின்ன மாமா, கூட்டத்தில் ஒருவன் போன்றைவை வேறு விடயங்களை முன்னிலைப்படுத்துகின்றன.
 
இந்தத் தொகுப்பில் உள்ள எந்த ஒரு சிறுகதையும் சீ என ஒதுக்கக் கூடியவை அல்ல. எல்லாக் கதைகளும் நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளன. 10ல் அரைவாசிக்கு மேற்பட்டவை மிக நல்ல படைப்புகளாக உள்ளன. படித்து முடித்த பின்னரும் அவற்றில் பல கதைகள் எம்மோடு நெடுநேரம் உரையாடுகின்றன. அடுத்த படைப்புக்குள் புகவிடாது தொல்லைப்படுத்துகின்றன. இதனால் என்னால் இத்தொகுப்பை ஓரு மூச்சில் படித்து முடிக்க முடியாது போயிற்று.
 
இன்றைய விழா தனிச்சிறப்பு வாய்ந்தது. வழமையாக இவரது படைப்புகளை வாசிக்காத ஒருவர் கூட இன்றைய இவரது வெளியீட்டு விழா அழைப்பிதழைக் கண்டால் இக் கூட்டத்திற்கு வரவும், இவரது கதைகளை வாசிக்க விரும்பவும் கூடும். ஏனெனில்

இது ஒரு காலச்சுவடு வெளியீடு. இதற்கு பின்னுரை எழுதியிருப்பவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள். இங்கு கருத்துரை வழங்க வந்திருப்பவர்கள் திரு.அ.யேசுராசா மற்றும் உமா வரதராஜன். இந்த மூன்று பேரும் காலச்சுவடு பதிப்பகத்தினரும் ஒரு விதத்தில்.... ஒருமைப்பாட்டைக் கொண்டவரகள். படைப்பிலக்கியத்தில் செழுமையை அவாவுபவர்கள். இலக்கியப் படைப்பின் தரத்தில் எந்தவித சமரசங்கங்களுக்கும் இடம் கொடாதவர்கள். முகத்திற்கான இது நல்ல படைப்பு என்ற அங்கீகாரத்தை எவருக்காகவும் கொடுக்க மறுப்பவர்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் இந்த முயற்சியில் பங்கு கொள்வதன் மூலம் முகுந்தனின் படைப்புகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.
 
இந்த நேரத்தில் படைப்பு இலக்கியம் பற்றி லியோ டால்ஸ்டாய் கூறிய ஒரு கருத்ததை நினைவில் கொள்ளலாம்.

".. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று. கடைசியாக 'டெக்னிக்'. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்' என்பது தானாக வந்துவிடும்..."

முகுந்தனின் முதல் இரண்டும் இருக்கின்றன.
 
அதாவது சொல்வதற்கு ஏதோ ஒரு விடயமும், அதில் நெகிழ்ச்சியான பற்றும் நிறையவே இருக்கின்றன. அத்துடன் நல்ல கதை சொல்லிக்கான டெக்னிக் அவருக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. இதனால் இலக்கிய உலகில் அவருக்கு வளமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. மேலும் பல சிறப்புகள் அவரை வந்தடைய வாழ்த்துகிறேன். இத்தகைய அருமையான கூட்டத்தில் தலைமை தாங்க அழைத்தமைக்கு முகுந்தனுக்கு நன்றிகள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.