நாய் மற்றும் பூனைகளை மனிதர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் போது அவைகளும் தங்களது ஏஜமானர்கள் போல் தங்களது வாழும் இடங்களை அடையாளப்படுத்தி எல்லைகளை வகுத்துக்கொள்ளும். அவற்றின் எல்லைக்கோடுகள் வேலிகளாலோ மதி;ல்களாலோ  அல்லது முள்ளுக்கம்பி வேலியினாலோ அமைவதில்லை. நமது கண்களுக்கு  அந்த எல்லைக்கோடுகள் தெரியாது. தங்களது குதத்தின் பின் பகுதியில் இருந்து சுரக்கும் இரசாயன திரவத்தால் அவை தமது இடத்தை அடையாளப்படுத்திக்கொள்ளும்.  அத்துடன் வேறு ஏதாவது மிருகங்கள் தங்களது  இடத்திற்கு வந்திருந்தால் அவைகளால் இலகுவில் அதனை உணர்ந்து கொள்ளும் வல்லமையும் கொண்டவை. ஊனுண்ணும் மிருகங்கள் காட்டில் இப்படி அடையாளம் செய்து கொண்டு தங்கள் பிரதேசத்தை பாதுகாக்கும். புலிகள், சிங்கங்கள் காட்டில் வாழும் போது இந்த அடையாளங்கள் அவற்றின் குட்டிகளையும் குடும்பங்களையும் பாதுகாக்கும் கோட்டை கொத்தளமாக இருக்கிறது. நாய்கள் பதினைந்தாயிரம் வருடங்களாகவும் பூனைகள் கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களாகவும் மனிதர்களோடு வாழத் தொடங்கினாலும் அவற்றின் வனவாழ்க்கையின் இசைவுகள் பல இன்னமும் இருக்கின்றன. - நடேசன் -நாய் மற்றும் பூனைகளை மனிதர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் போது அவைகளும் தங்களது ஏஜமானர்கள் போல் தங்களது வாழும் இடங்களை அடையாளப்படுத்தி எல்லைகளை வகுத்துக்கொள்ளும். அவற்றின் எல்லைக்கோடுகள் வேலிகளாலோ மதி;ல்களாலோ  அல்லது முள்ளுக்கம்பி வேலியினாலோ அமைவதில்லை. நமது கண்களுக்கு  அந்த எல்லைக்கோடுகள் தெரியாது. தங்களது குதத்தின் பின் பகுதியில் இருந்து சுரக்கும் இரசாயன திரவத்தால் அவை தமது இடத்தை அடையாளப்படுத்திக்கொள்ளும்.  அத்துடன் வேறு ஏதாவது மிருகங்கள் தங்களது  இடத்திற்கு வந்திருந்தால் அவைகளால் இலகுவில் அதனை உணர்ந்து கொள்ளும் வல்லமையும் கொண்டவை. ஊனுண்ணும் மிருகங்கள் காட்டில் இப்படி அடையாளம் செய்து கொண்டு தங்கள் பிரதேசத்தை பாதுகாக்கும். புலிகள், சிங்கங்கள் காட்டில் வாழும் போது இந்த அடையாளங்கள் அவற்றின் குட்டிகளையும் குடும்பங்களையும் பாதுகாக்கும் கோட்டை கொத்தளமாக இருக்கிறது. நாய்கள் பதினைந்தாயிரம் வருடங்களாகவும் பூனைகள் கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களாகவும் மனிதர்களோடு வாழத் தொடங்கினாலும் அவற்றின் வனவாழ்க்கையின் இசைவுகள் பல இன்னமும் இருக்கின்றன.

மெல்பன் போன்ற நகரங்களில் வாழும் மனிதர்களால் வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளைப் பொறுத்தவரையில் அவை வேலிகள் தாண்டிச் செல்வதால் பக்கத்து வீட்டில் பூனையில்லாவிடில் அங்கும் சென்று அதையும் தனது பிரதேசமாக அடையாளமிடும். மனிதர் சில பேர் காணிகளை அபகரிப்பது போன்ற செயலென  இதனை நீங்கள் நினைக்கலாம். இப்படியான அடையாளமிட்ட தனது பகுதியில் வேறு பூனை வந்தால் எதிர்த் தாக்குதலை நடத்தும். இப்படியான தாக்குதலில் காயங்கள் ஏற்படும் பின்பு அவை சீழ்பிடித்து பெரிதாகும் போது உடல் நலமற்று மிருக வைத்தியர்களிடம் கொண்டு வரப்படும்.

எனக்குத் தெரிந்த கீற்றோ என்ற சிவப்பும் வெள்ளையும் கலந்த ஆண் பூனையொன்று வருடத்துக்கு இரண்டு முறையாவது இப்படி தாக்குதலில் ஈடுபட்டு விழுப்புண்ணோடு எனது கிளினிக்கிற்கு கடந்த பதின்மூன்று வருடகாலமாக வருகிறது. தற்பொழுது மூன்று வருடங்களாக கீற்றோவுக்கு சிறு நீரப் பையில் கற்கள் வந்து விட்டதால் அதைக் கரைப்பதற்கு விசேட உணவில் இருக்கிறது. இந்த உணவை பெறுவதற்காக அடிக்கடி எம்மிடம் வருவார்; இதன் உரிமையாளர் டானியல். இவர்; மெல்பன் அம்புலன்ஸ் சேவையில் வேலை செய்யும் ஒரு ஆண்தாதி.

டானியல் வந்தால் வழமையான நேரத்தை விட அதிகமாக என்னுடன் நின்று தனது வேலை அனுபவங்களை என்னிடம் பரிமாறிவிட்டு  செல்வது வழக்கம் . ஆறடி உயரமான டானியல் மெல்பனில் பலரது உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். ஹேரோயின் போதை வஸ்துவை அதிக அளவில் இரத்தத்தில் ஏற்றினால்  சுவாசம் நின்று விடும். அதனால் இறந்து போகவிருந்த பலரை,  மாற்று ஊசி ஏற்றி உயிர் பிழைக்க வைக்கும் பணியை  பலதடவைகள் மெல்பனில் வெள்ளி, சனி இரவுகளில் செய்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை டானியல் ஒரு ஹீரோவாக தோற்றமளிப்பார்.

ஓரு நாள் காலையில் எந்த அப்பொயின்மென்டும்; இல்லாததால் சற்றுத் தாமதமாக கிளினிக் சென்றபேர்து,  டானியல்  எனக்காக காத்திருந்தார். வழமையான சந்தோச முகமாக இருக்;கவில்லை .அவரோடு கீற்றோவைக் காணவில்லை.

கீற்றோவுக்கு ஏதாவது நடந்து விட்டதோ என நினைத்தேன்

ஆலோசனை அறைக்கு டானியலை அழைத்து உரையாடினேன்.

“என்ன விடயம்? கீற்றோவுக்கு ஏதாவது பிரச்சினையா?”

“கீற்றோ தற்போது ஆரோக்கியமாக இருக்கிறது. நானும் எனது மனைவி நிக்கோலும் பிரிந்து விட்டோம். நிக்கோலுக்கு எக்காலத்திலும் கீற்றோவை  பிடிக்காது. என்னை பழிவாங்குவதற்காக கீற்றோவை தன்னிடம் வைத்திருக்கிறாள். எனக்குத் தெரியும் இன்னும் சில நாட்களில் கீற்றோவை கருணைக் கொலை செய்துவிடுவாள். அப்படி அவள் கீற்றோவை அதற்காக உங்களிடம் கொண்டு வந்தால் எனக்கு அறிவிக்க வேண்டும்.”

டானியலுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது எனக்குத் தெரியும். அவர்கள் எனது கிளினிக்குக்கு பல தடவைகள் வந்திருக்கிறார்கள். நிக்கோலை நான் சந்தித்தது இல்லை.

‘நகரசபையில் யாருடைய பெயரில் கீற்றோ பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ, அவரே சட்டபூர்வமான உரிமையாளராகிறார்.’

‘இருவரது பெயரிலும் பதியப்பட்டிருக்கிறது.’

‘நிக்கோல் கருணைக் கொலை செய்யத் தீர்மானித்தால் நாங்கள் தடுக்க முடியாது.’

‘நிக்கோல் என்னைப் பழி வங்குவதற்காக கீற்றோவை கருணைக் கொலை செய்யக்கூடும்’ என்றார் டானியல்.

அதற்கு நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை

இந்த நேரத்தில் எனது நேர்ஸ், ‘எங்கள்  கம்பியூட்டரைப் பொறுத்தவரை டானியலின் பெயரில்தான் இருக்கிறது’ என்றாள்

‘டானியல் கீற்றோவை தேவையற்று கருணைக்கொலை செய்ய நாங்கள் சம்மதிக்க மாட்டோம். அப்படி ஒரு சந்தர்ப்;;பம் வந்தால் உங்களது சம்மதத்தை கேட்க வேண்டும் என எங்களது கம்பியூட்டரில் குறித்துக் கொள்ளுகிறோம்’ என உறுதியளித்தேன்.

டானியல் சென்ற பின்பு எங்களது மனத்தில் நிக்கோல் தான் வளர்க்கும் பூனையை  கொலை செய்யத் துடிக்கும்  வெறி பிடித்த பெண்ணாகத் தெரிந்தாள். வேறு பெண்ணுடன் உறவு கொண்ட கணவனை பழி வாங்குவதற்காக தாய்லாந்தில் கணவனின் ஆண்குறியை நித்திரையின்போது வெட்டி விடும் பெண்கள் இருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவில் பல கொலைகள் பெண்களால் நடந்திருக்கிறது. ஆனால் யாரும் கணவனின் செல்லப்பிராணியான பூனையொன்றை பழி வாங்கியதாக செய்தி வந்தது இல்லை.

நிக்கோலை நாங்கள் பார்த்தது இல்லை என்பதால் மேலும் அதிகமாக அவளை வெறுக்கக் கூடியதாக இருந்தது. தெரியாதவர்களை தெரிந்தவர்களிலும் பார்க்க அதிகமாக வெறுக்கமுடியும்.  மிருகங்களின் மேல் அதிக அன்பு கொண்ட எனது நேர்ஸ் பல மடங்காக நிக்கோலை வெறுத்தாள்.

வாரங்கள் கடந்து  செல்வது போன்று நினைவுகளும் நம்மைக் கடந்து சென்று விடுகின்றன. நாங்கள் நிக்கோலையும் கீற்றோவையும் மறந்து விட்டோம்

உடல் பருத்து இடுப்பு சரிந்த ஒரு பெண்ணை   நிக்கோல் என எனது நேர்ஸ் அறிமுகம் செய்தாள். நாங்கள் வெறுத்த பெண்ணின் உடல் அழகு குறைந்து இருந்த போது எமது வெறுப்பு உறுதி செய்யப்படுவது போலிருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.

கீற்றோவுக்கு விசேடமான உணவை எங்களிடம் வாங்க வந்த போது என்னைக் கண்டதும் ‘நானும் டானியலும் இப்பொழுது பிரிந்து விட்டோம். இரண்டு வருடமாக வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்புடன் இருந்திருக்கிறான். என்னால் இந்தத் துரோகத்தை மன்னிக்க முடியாது. இதைவிட வேடிக்கை கீற்றோ தனக்கு வேணுமாம். மகன்  ஹென்றிக்கு கீற்றோ என்றால் உயிர். உங்களுக்குத் தெரியும்தானே ஹென்றிக்கு ஓட்டிசம் இருக்கு.’ என்று சொன்ன அவளது வார்த்தைகள் கடுமையாக   இருந்தன.

இப்பொழுது டானியலின் தரப்பு மிகவும் பலவீனமாக இருந்தது.
நிக்கோலின் கதை கேட்டு எனது நேர்ஸ் கண்கலங்கினாள்.
கீற்றோவின் உயிருக்கு ஆபத்து இல்லை. இவர்கள் ஒருவரை ஒருவர் வெறுத்தாலும்  கீற்றோவில் பாசமாக இருக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது.
    
மனிதர்களது உறவுகளில் ஏற்படும் பிரிவுகள் அவர்களது குழந்தைகளை மட்டுமல்லாது அவர்களது செல்லப்பிராணிகளையும் பாதிக்கிறது என்பதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். பலரது செல்லப்பிராணிகள் கருணைக்கொலை செயயப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் புதிய இடங்களையோ புது உரிமையாளர்களையோ தேடவேண்டி இருக்கும். இப்படியான நெருக்கடிகள் வரும்போது அவர்களது மனநிலையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

நாய்கள் இளமையாக இருந்தால் இந்த  மாற்றங்களை அவை தாராளமாக ஏற்றுக் கொள்ளும். வயதான போது மிகவும் பாதிப்படைந்துவிடும்.  அதனால் கடைசிவரையும் புதிய சூழலுக்கு ஏற்ப மாறாமல் போய்விடும். பூனைளைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் அவை அதிக அளவில் பாதிப்படைகின்றன. தாங்கள் வளர்ந்த சூழல் தொலைந்தால் அவற்றால் புதிய சூழலுக்கு மாறுதல் மிகவும் கடினமாகிறது. தனது உடலை கடித்துக் கீறி காயப்படுத்தி தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும். இப்படி  பல பூனைகள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை நான் எனது தொழில் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

கீற்றோ இவர்களது பிரிவால் தனது வாழ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்தால் புதிதாக மீண்டும் ஒரு இடத்தில் எல்லைகளை உருவாக்கி, அங்கு தனக்கு எதிரானவர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க இந்த வயதில்  மிகவும் சிரமப்பட்டிருக்கும்.

“ கீற்றோவின் எஜமான் டானியல் செய்ததை பல ஆண்கள் சரித்திர காலத்தில் இருந்து செய்து வருகிறார்கள். இதில் ஆணாக எனது கருத்தும் பெண்ணாக உனது கருத்தும் வேறுபடும். இருவருக்கும் சந்தோசமான விடயம்  நிக்கோல் - டானியல் உறவின் பிரிவை சகித்துக்கொண்டு வாழும் ஓட்டிசம் நோய் உள்ள மகன் ஹென்றியும் கீற்றோவும் நிக்கோலுடன் வாழ்வது ஒருவிதத்தில் ஆறுதலானது” என்று  கண்கலங்கிய எனது நேர்சுக்கு ஆறுதல் கூறினேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.