டேசன்(அவுஸ்திரேலியா)“உலகம் சுருஙகிவிட்டது” என்று எல்லோரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அதை ஜெனிவாவுக்கு வந்தால் இலகுவாக புரிந்து கொள்ளமுடியும். பூகோளத்தில் உள்ள சகல நாட்டை சேர்ந்தவர்களும் வந்து போவார்கள். அந்த நாடுகளுக்கு  பொதுவான நிறுவனங்கள் இந்த ஜெனிவா நகரில் இருப்பதால் எப்பொழுதும் மகாநாடுகள் கருத்தரங்குகள் என நடைபெறுவதால் ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பியே வழியும். வெளிநாட்டவர்கள் தொகை உள்நாட்வர்களுக்கு சமமானது. இப்படியான ஜெனிவாவில் ஐந்து நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கி நாலு இரவுகள் அந்த ஹோட்டலின் உணவை அருந்தினார் சோலர் ரெக்னோலஜி பொறியிலாளர் சம்பந்தமூர்த்தி. அவரது நாக்குக்கு திருப்தியில்லை.

 எவ்வளவுதான் தரமான சுவி;ஸ் வெள்ளை வைனாக இருக்கட்டும். நாக்கில் சர்க்கரையாக கரையும் சீஸாக இருக்கட்டும்  நமது காரம் மணம் குணம் எந்த சாப்பாட்டுக்கு வரும்?; யாழ்ப்பாணத்து மட்டுவில் கத்தரிக்காயோ அல்லது சாவகச்சேரி முருங்கைக்காயோ இந்த நாட்டில்  கிடைக்காவிடிலும் நமது நாக்குக்கு வட இந்திய சாப்பாடாவது சாப்பிட்டால் மட்டுமே இன்று பொச்சம் அடங்கும்  என்ற ஆவலில் நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கியது.

மேலும் சுவிஸ் சாப்பாடு; சாப்பிட்டால்  நாக்கு செத்து விடும் என தீர்மானித்து  அந்த மாலைப் பொழுதில் சிறிது தொலைவில்  இந்திய உணவுக்கடை இருப்பதாக விசாரித்து அறிந்து கொண்டு பிளாட்பாரம் வழியே நடந்தார். ஐரோப்பிய கோடைகாலம். கடைகளுக்கு உள்ளே இருப்பவர்களைவிட பலர் கடைகளின் வெளியே உள்ள பிளாட்பாரங்களில் விரித்த குடைகளின் கீழ் உணவருந்தினர.;  இந்த ஐரோப்பியர் ஒவ்வொரு மாலை சாப்பாட்டையும் சடங்காக்கிறார்கள். நம்ம சனம் கல்யாணம் சாமத்தியம் மரண வீட்டைத்தான் சடங்காக கருதும.;  அது மட்டுமா? கோப்பையில் போட்டு வழித்து வாய்க்குள் அமுக்கிய பின்புதான் பேசுவதற்கு வாயை திறக்கும். சாப்பட்டை தின்று முடித்துவிட்டு கதைக்கச் சொல்லி தகப்பனிடம் பல முறை சிறுவயதில் அடி வாங்கியது சம்பந்தமூர்த்திக்கு ஞாபகத்திற்கு வந்தது. இங்கை சனம் ஒவ்வொரு வாய் சாப்பாட்டுக்கும்  இடையில் அரைமணித்தியாலம் பேசுதுகுள்.

மாலை ஆறுமணிதான் இருக்கும். மாலை வெயில் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக அழகிய ஜெனிவாவை மெதுவாக இன்னும் போர்த்தியபடி இருந்தது, நடைபாதையில் சில நகைக் கடை மற்றும் கடிகாரக்கடைகளைத் தவிர மற்றவை எல்லாம் சாப்பட்டுக்கடைகள்தான். பல தேசத்தவரது கடைகள் இருந்தன.  பல நாட்டு கடைகள் மட்டுமல்ல  பல நாட்டு ஆண்களும்  பெண்களும் ஜாடை காட்டியது அற்புதமாக இருந்தது. எதிரில் போனவர்களை விலத்திக்கொண்டு நடக்கும் போது  ஒரு வானவில்லின் நிறப்பிரிகையாக இருந்தது. உலகத்தின் பலவிதமான முகங்கள் நிறங்கள் கண்கள் என தோன்றியது. கறுப்பிலும் தென் ஆபிரிக்க நிலக்கரி கறுப்பு, எத்தியோப்பிய கோப்பி கறுப்பு,  சோமாலிய பழுப்பு கறுப்பு என பல ரகம்;. இதேபோல் வெள்ளையில் பலவிதமான வெளுப்புகள். இப்படி கலர்களைக் கண்டபோது எல்லோரும் ஒரே நிறமாக இருந்தால் அது எவ்வளவு சலிப்பாக இருக்கும். இயற்கையை விட சிறந்த ஓவியன் உலக்தில் இல்லை.

 அந்த இந்தியக்கடையை கண்டாலும் உடனே அங்கு இருந்து விடாமல் நேராக ஜெனிவாவின் வாவி;யை நோக்கிச் சென்றார். அந்த வாவியில் இறங்கு துறையில் இருந்து  பெரிய படகு ஒன்று பல உல்லாசப்பயணிகளை ஏற்றிக்கொண்டு  செல்ல ஆயத்தமாகியது . நேற்று இரவில் அதே படகில்; சம்பந்த மூர்த்தியும் இருந்தர். மூன்று மணிநேரம் அந்த விசேடமான விருந்து கொன்பரன்சுக்காரருக்காக  ஒழுங்கு படுத்தப்பட்டது. விருந்தின் போது அந்தப் படகு சுவிஸ்லாந்தையும் பிரான்ஸ்ஸையும் பிரிக்கும் அந்த வாவியை  சுற்றி வந்தது.

 சிறிது நேரம் அந்தப் படகைப் பார்த்து விட்டு மீண்டும் உணவுக்கடையை நோக்கி நடந்து வந்த போது அந்த வாவியின் கரையில்  பறவைகள் சோடியாக இருந்தன.

‘முட்டை இட்டு அடைகாக்கும் ஸ்கண்டினேவிய வாத்துக்கள்’ என அந்த வழியால் அவைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த இளைஞன்  சொன்னான்.

‘ஸ்கண்டினேவிய வாத்துக்கள் இந்கே வந்தால் சுவிட்சர்லாந்து வாத்துக்கள் எங்கே போகும்? 'ஒரு நகைச்சுவையாகக் கேட்டுவைத்தார்சம்பந்தமூர்த்தி.

‘அவை மெடிரேனியன் நாடுகளான ஸ்பெயின் இத்தாலி போர்த்துக்கல் என தெற்கே போகும்.’

சம்பந்தமூர்த்தியின் முகத்தை கூர்மையாக பாரத்துவிட்டு மீண்டும் ‘ஸ்கண்டினேவிய நாட்டு வாத்துக்கள் அடைகாக்க வெப்பத்தை  தேடி இங்கு வருவது போல் இங்குள்ளவை இன்னும் அதிகமான வெப்பத்தை தேடி மெடிரேனின் கால நிலைக்கு செல்கின்றன’ என கூறிவிட்டு நகர்ந்தான் அந்த இளைஞன்.

அந்த இளைஞன் பறவைகள் விடயம் தெரிந்தவன் போல் இருக்கிறது என நினைத்துக்கொண்டு,  ‘நான் கொன்பரன்சுக்கு வந்தது போல் நீங்களும் அடைகாக்க வந்திருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கு பாஸ்போட், சுங்கம் என்பன கிடையாது.’ என்றார்.

இருளாகி விட்டதால்   இந்தி;ய ரெஸ்ரோரண்டுக்குச் சென்று வெளியே இருந்த ஆசனத்தில் இருந்து கொண்டு பியரை ஓடர் பண்ணிவிட்டு சுற்றிப் பார்த்தார். வானவில் நிறங்களில் பலர் இருந்தார்கள். அவர்களில் இருவர் சம்பந்தமூர்த்தியின் கவனத்தை கவர்ந்தார்கள் அறுபது வயதான  ஐரோப்பிய பெண் மிக மெலிந்தவள்.  ஒருகாலத்தில மிக அழகியாக இருந்த தொல்லியல் அடையாளங்கள் அவளில் இருந்தன. எதுவித அலங்காரமும் அற்று  பிரான்ஸிய தொனியுடன் ஆங்கிலத்தில் பக்கத்தில் இருந்த இளைஞனுடன்  அன்னியோன்னியமாக பேசிக்கொண்டிருந்தள் . அவனுக்கு பதினெட்டு அல்லது இருபது வயதான இந்திய முகச்சாடையுடன்  வெளிறிய கோதுமை நிறம். இருவருக்கும் முக நிற ஒற்றுமை இல்லை. எனவே தாயும் மகனுமாக இருக்க முடியாது. இருவரும் சிகரட்டை புகைத்துக் கொண்டிருந்தனர். சம்பந்த மூர்த்தி அவர்களைப் பார்த்த  போது அந்தப் பெண்  ‘ஹலோ’ என்றள்.

 அவள் ஹலோ சொல்லி விட்டு திரும்பிய போது அந்த இளைஞனும் சினேகமாகப் பார்த்து புன்னகைத்தான்.

 பதினைந்து நிமிடத்தின் பின் அந்த இளைஞன் அந்த ஹோட்டலில் இருந்து வெளியேறிவிட்டான்.

 சம்பந்தமூர்த்தி  அப்பொழுது பியரை முடித்து விட்டு, பியரின் கடைசித் துளிகளை உடனடியாக விழுங்காமல் இவ்வளவு காலம்

குடித்தவற்றோடு ஒப்பிட்டு  இரசித்த போது  அந்தப் பெண் எழுந்துவந்து மார்கி என தன்னை அறிமுகப்படுத்தினாள்.

‘இந்தியாவா’

 இந்தியா இலங்கையர்களின் அரசியல் கலாசாரத்தில் மட்டுமல்ல தனி மனிதர்களின் தோற்றத்திலும் ஆட்சி செய்கிறது.

‘இல்லை. இலங்கை. ஆனால் அவுஸ்திரேலியா’

‘இந்த இளைஞனை  நான் நேபாலில் இருந்து இங்கு படிப்பதற்கு ஸ்பொன்சர் செய்கிறேன்’

‘என்ன படிக்கிறான்?’;

‘ஹோட்டல் முகாமைத்துவம்’

 அந்தப் பெண்ணில் இருந்த காந்தத்தாலும் சாப்பிடும் போது  பேச்சுத்துணையை தேடியதாலும் அவளுக்கு வைனை ஓடர் பண்ணிய போது வேண்டாம் என்றாலும் மீண்டும்  வற்புறுத்தி  கேட்டபோது மறுக்கவில்லை. வைனை ஓடர் பண்ணிய போது ‘வைற் பிளீஸ்’ என பரிசாரகரிடம் கூறிவிட்டு  ‘ இந்த நாட்டில் வைற் வைன் நன்றாக இருக்கும்’ என சம்பந்தமூர்த்தியை பார்த்து கூறிவிட்டு சிகரட்டை நீட்டினாள் .

‘இதை மறந்து பல காலமாகிவிட்டது’ என்றார் சம்பந்த மூர்த்தி

‘இளம் வயது பழக்கம் தொடர்கிறது’ என்று அவள் சொன்ன போது  வழமையாக புகைப்பவர்களது பூனை இருமல்  வந்தது.

‘சுவிஸ்- பிரான்ஸா இல்லை பிரான்ஸ் -பிரான்ஸா?

‘நான் ஜெனிவாவில் பிறந்து வளர்ந்தேன் இந்த  இடங்கள் எல்லாம் நான் ஓடித் திரிந்து தொழில் பார்த்த இடங்கள்.’

‘என்ன தொழில் பார்த்தீர்கள்’

சிரிப்பு மட்டும் அவளிடம் இருந்து வந்தது.

 சம்பந்தமூர்த்திக்கு ஆவல் மேலீட்டாலும் நாகரீகம் கருதி ‘நேபால் சென்றீர்களா’ என பேச்சை மாற்றினார்.

 இந்தியாவில் பலகாலம் இருந்தேன். அதன் பின் தான் நேபால் சென்ற போது இந்த இளைஞனின் தந்தை எனது வழிகாட்டியாக இருந்தார். அவர் மரணம் அடைந்து விட்டார் எனக்கூறி மீண்டும் இருமினாள்

‘இன்று வீடு போகும் முன்பு இந்த கடைகளின்  பின்;னால் இருக்கும் பாதையில் நடக்கப் போகிறேன் என்னோடு துணைக்கு வர முடியுமா?’

 உணவை முடித்து விட்டு நடப்பது சம்பந்தமூர்த்தியின் சர்க்கரை வியாதிக்கு நல்லது என்பதால் அந்த வேண்டுகோள் சாதகமாக இருந்தாலும் மனதில் சிறிது நெருடியது. எதற்காக இவள் எனது துணையை கேட்கவேண்டும்? அறுபது வயதுப் பெண்ணால் என்ன நேர்ந்து விடப்போகிறது?. அதைவிட இரவு என்பதே இல்லாமல் வெளிச்சமாகவும் தெருவெல்லாம் பலர் அங்கும் இங்கும் திரிந்தபடி இருந்தார்கள்.

இதைவிட சம்பந்தமூர்த்திக்கு  இரவு பன்னிரண்டு மணி வரையும் விழித்து இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  இருவரும் எழும்பி ஹோட்டலின் பின்பகுதிக்குச் சென்ற போது அங்கு நைட்கிளப்புகளுக்கு பின்புறம் ஆண்களும் பெண்களும் நின்றார்கள். சிறிது தூரம் போன போது சில பெண்கள் தனியாகவும் கூட்டமாகவும் நி;ற்பது தெரிந்தது.

‘இதுதான் ஜெனிவாவின் ரெட் லைட் பகுதி. நான் பத்து வருடங்கள்  இந்தப் பெண்கள் போல் இங்கு வேலை செய்தேன். 

 மவுனத்தால் பதில் அளித்த சம்பந்தமூர்த்திக்கு பாலியல் தொழிலாளியாக இருந்து ஓய்வு பெற்ற பெண்ணோடு ஜெனிவாவின் ரெட் லைட்பகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறேன் என்பது  ஆச்சரியத்தையும் வெட்கத்தையும் கொடுத்தது.
‘என்ன பேசாமல் வருகிறீர்கள்?’

‘இதில் என்ன பேச இருக்கிறது. ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு ஏன் என் துணை உங்களுக்கு தேவைப்பட்டது என்பதுதான் புரிவில்லை?

‘வயது கூடும் போது கடந்த கால நினைவுகள் மட்டும்தான் நம்மோடு துணையாக வருவது என்பது உங்களுக்கு தெரியும்.  பழைய இடங்களை பார்க்க விருப்பமாக இருந்தாலும்; இரவில் வருவதற்கு துணிவு கடந்த இரு வருடங்களாக இல்லாமல் போய்விட்டது.

இப்போதைய நண்பர்களை நான் அழைத்து வர முடியாது. அதே வேளையில் நீங்களும் நானும் அறிமுகமற்றவர்கள். மேலும் இருவரும் மீண்டும் சந்திக்கப் போவதில்லை.  இன்று என்னால் திறந்த உள்;ளத்தோடு பேச ஒருவர் கிடைத்தது எனது மனதில் நனவிடை தோய்தலுக்கு வசதியாகிவிட்டது.;  அது எனது அதிஷ்டம்.’

 நேரடியான நேர்மையான பேச்சின் உண்மை குழந்தைகளின் மாபிள் பளிங்குத்தரையில் தெறித்து விழுந்தது  போல் இருந்தது.

 அடுத்த சந்தால் திரும்பும் போது இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் நின்றார்கள். அவர்கள் பேரம் பேசுவது கேட்கா விட்டாலும் புரிந்தது. அடிப்படையான மனித தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள மொழி தேவையில்லை. அதிலும் காமத்தை தீர்த்துக்கொள்ள ஆதி மனிதன் என்ன மொழிபேசினான்?. மிருகங்கள் மொழியா பேசுகின்றன?    அங்கு நடக்கும் பாலியல் சந்தை நிலைவரத்தை புரிந்து கொள்ள மொழி ஒரு தடையாக இருக்கவில்லை.

‘இவர்கள் எலலோரும் கிழக்கு ஐரோப்பிய பெண்கள். ஆனால் வறுமையில் வேலைக்கு ஆசைகாட்டி அழைத்து வரப்பட்டு பின் இந்த வேலைக்கு தள்ளப்படுகிறார்கள்’.

சம்பந்தமூர்த்;திக்கு வாயை வைத்திருக்க  பொறுக்கவில்லை

‘எல்லோருக்கும் வறுமை என சொல்லமுடியுமா?’

‘மற்றவர்களுக்காக நான் பேசமுடியாது. நான் ஆரம்பத்தில் அசட்டுத் தைரியத்தில் அதோடு வன்மத்தில் ஈடுபட்டேன் பணம் வந்ததும் பரவாயில்லை என்ற உணர்வு வந்தது’

‘பிறகேன் இடையில் வெட்டிக்கொண்டு இந்தியா போனீர்கள்?’

‘எனது சொந்தக் கதையை கிண்டுகிறீர். ஆனால் ஒரு அத்தியாயம் மட்டும்தான்  என்னால் சொல்லமுடியும்’

‘எனக்கு இன்று நித்திரை கொள்ளமுடியாது என் மனைவியை நடுநிசியில் ஜெனிவா ஏர்போட்டில் பிக்கப்;பண்ணவேணும். இப்பொழுது பத்து மணிதான்.

‘அப்படியானால் இரண்டு மணித்தியாலம் என்னை வைத்திருக்க ஏற்பாடா? அந்தக் காலத்தில் எனது மணித்தியாலத்தின் விலை அதிகம்’ என்றாள் பெரிய சிரிப்புடன்.

‘எனக்கு பேச்சுத்துணை தேவையாக இருக்கிறது. அதற்காக நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை’

 ‘எனது பதினாறு வயதில் அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டதால் நான்  இடர்பட நேர்ந்தது. பல  போய்பிரண்ட்ஸ். அதில் ஒருவன் மூலம் போதை மருந்து பழக்கம் வந்தது. அதனால் பணம் தேவைப்பட்டது. அதே நேரம்  எனது தாய் தந்தையை பழி வாங்குவதற்கும் இது ஒரு வழி என எண்ணினேன். இந்த முதல் இல்லாத வியாபாரத்தில் என்னை முதலாக்கினேன். ஆனால் சில வருடத்தில் எங்களது கோஷ்டியில் பலருக்கு எயிட்ஸ் என்ற புதிய நோய் வந்ததும் நான் பயந்து போனேன். அப்படியே இந்தியாவுக்குப் போய்  ரிசி கேசத்தில் ஒரு ஆச்சிரமத்;தில் தங்கி இருந்தேன் சில காலம் இருந்த போது இத்தாலியன் ஒருவனேடு மீண்டும் வட இந்தியாவில் சுற்றிவிட்டு மீண்டும் வந்த போது எனக்கு முப்பது வயதாகிவிட்டது. பயண முகவர் நிலயத்தில் சில வருடம் வேலை செய்துவிட்டு இம்முறை  நேப்பாளத்திற்கு சென்ற போது அங்குள்ள பிரான்சிய உதவி ஸ்தாபனத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் பலகாலம் அதாவது பதினாறு வருடங்கள் நேபாளதில் இருந்தேன்.  இப்பொழுது அம்மா மிகவும் வயோதிபத்தை அடைந்ததால் இப்பொழுது ஜெனிவாவில் இரண்டு வருடமாக தங்கி இருக்கிறேன்.

‘ஒரு விதத்தில் பார்த்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. பிரச்;சினையான தொடக்கமாக இருந்தாலும் மிகவும் இலட்சியமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறீர்கள.;  இன்னும்  வாழ்ந்து வருகிறீர்கள்’

‘எனக்கு பணத் தேவையோ அல்லது பணத்தில் அதிக ஆவலோ இல்லாத படியால் தெருவில் இருந்து நினைத்தவுடன் வெளியேற முடிந்தது.

‘ஆச்சிரமத்தில் சேர்ந்த பின்புதான் அப்படியான மன நிலை வந்திருக்கவேண்டும்?’

‘ஆச்சிரமம் பேருக்குதான்.  அங்குள்ள துறவிகளுக்கு ஆசைகள் மற்றவர்களை விட அதிகம். ஆனால் வித்தியாசமான விடுமுறை காம்ப் போன்றது. இயந்திரமயமற்ற வாழ்வு எனக்கு பிடித்திருந்தது. இதைவிட இந்திய கிராமத்து மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

வறுமையிலும் பெருமையாக வாழுவதும் இந்தி பேச தெரிந்து கொண்டதாலும் எங்கும் எனக்கு விசேட மரியாதை கிடைத்தது . எங்கும் முக்கிமானவளாக கருதப்பட்டேன்.

‘நானும் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறேன். இந்தியாவில் வெள்ளைத்தோலுக்கு எப்பொழும் விசேட மரியாதை உள்ளது.’

‘நானும் அதைப்பார்த்திருக்கிறேன். ஆங்கிலேயர் ஆண்டதால் வந்ததா?’

‘ஆங்கிலேயர் வர முன்பே இருந்த சாதிப்பிரிவினை என்ற வர்ணாசிரமத்தால் வந்திருக்க வேண்டு;ம். தற்போது உலகத்தில் நிறபேதம் பார்ப்பதில் முதன்மையானது இந்தியாவாக இருக்கும் என நினைக்கிறேன்.’

‘உங்கள் விமர்சனம் காட்டமாக உள்ளது. நான் நினைத்தேன் ஐரோப்பியரிடம் இருந்துதான் நிறபேதம் வந்தது என்று.’

‘ஐரோப்பியரில் பலர் நிற பேதத்தில் இருந்து பல தூரம் போய்விட்டார்கள் போல் எனக்குத் தெரிகிறது.’’

இருவரும் பேசிக்கொண்டு  சிறிய சந்தில் வந்த போது எதிரில் வெள்ளைக்கார பெண்ணும் ஆபிரிக்க பெண்ணும் எதிராக வந்து பின்பு திரும்பிப் பார்த்தபடி நடந்தார்கள்.

‘இவர்கள் ஏன் நம்மை பார்க்;கிறார்கள் தெரியுமா?. இங்கு வரும் ஆண்கள் கிராக்கி தேடியோ அல்லது போதை மருந்து தேடியோ மட்டும்தான் வருவார்கள். அவர்களின் முகத்தில் எதையோ தேடும் பாவனை தெரியும் .அவர்களை இந்த பெண்களால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியும்.  இந்த இடத்தில் இந்த நேரத்தில் எங்களைப் போல் பொருத்த மற்றவர்கள் வரமாட்டார்கள். அதுதான் அதிசயமாக பார்க்கிறார்கள்.’

‘உங்களிடம் நான் பாடங் கற்றுள்ளேன். இன்னும் அரை மணிநேரத்தில் நான் இரயில்வே நிலயத்திற்கு போக வேண்டும்.’

‘நானும் ரயிலில் தான் வீடு செல்ல வேண்டும். இந்த வழியால் திரும்பி நடந்தால் ஜெனிவா ரயில் நிலயம் வரும்.’

 இருவரும் திரும்பி நடந்த போது மிக வெளிச்சமான வீதி வந்தது. இரவிற்கான அறிகுறி இல்லாமல் ரயில்வே நிலையம் கலகலப்பாக இருந்தது. மாக்கி விடைபெற்றுக்கொண்டு புற நகர் ரயிலில் ஏறிச்சென்றாள். சம்பந்தமூர்த்தி விமான நிலயத்துக்கு செல்லும் வண்டியில் ஏறினார்.

--------

இரவு மட்டும்தான் இந்த ஹோட்டலில் தங்கமுடியும். அடுத்த நாள் பாரி;ஸ் செல்லத் திட்டம் இருந்தது. அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து இறங்;கிய சாலினி ஒரு நாள் தங்கிவிட்டு செல்வோம் என்ற போதுதான் சம்பந்தமுர்த்திக்கு பிரச்சினை உருவாகியது.

‘இரவு மட்டும்தான் இந்த ஹோட்டலில் தங்க முடியும். நாளை எந்த அறையும் காலி இல்லை என்பதாக எனக்கு சொல்லி விட்டார்கள்’;

‘இந்த ஹோட்டல் இல்லா விட்டால் வேறு ஒன்று’

‘சரி அதை நாளை பார்போம்’;.

ஒரு கிழமை பிரிந்திருந்ததால் இருவரும் போர்வைக்குள் வேகமாக உட்புகுந்தனர்

----

காலையில் சம்பந்தமூர்த்தி ஹொட்டல் அறை ஒன்று தேடிக்;கொண்டு காலை ஆறு மணியளவில் ஜெனிவாவின் மூலை முடுக்கெல்லாம் திரியவேண்டி இருந்தது. ஆறு நாள் மட்டும் தங்குவதாக பதிவு செய்த ஹோட்டலில் அடுத்த நாள் இருக்கவில்லை. அதிகாலையில் எழுந்து இருவரும் ஒவ்வொரு ஹோட்டலாக தேடினார்கள். பெரிய ஹோட்டல்கள் கை விரித்தார்கள். சிறிய தெருக்களில் சென்றுதேடவேண்டும் என்ற போது முக்கியமாக நேற்று இரவு மாக்கியுடன் தெருவலம் வந்த பகுதியில் சம்பந்த மூர்த்தி மனைவியை விட்டு விட்டு தான் மட்டும் சென்றார். பெரும்பாலும் தெரு மேக்கப் போடாத நடு வயது பெண்ணைப்  போல் களையிழந்திருந்தது.

பெரும்பாலான ஹோட்டல்களில்  கை விரித்து விட்டார்கள்.

சிறிது தூரம் சென்ற போது    ஒரு ஹோட்டலுக்கு முன்பாக ஒரு சிறிய மதுக்கிளப்; இருந்தது. அந்த மது கிளப்புக்கு முன்பாக இரண்டு பெண்கள் நின்றார்கள். அதில்  வெள்ளையாக இருந்த பெண் சிகரட்டை புதைத்தபடி நின்றாள். அவளுக்கு அருகாமையில் காப்பி கொட்டையை சிறிது அதிகம் வறுத்தது போன்ற கறுப்பு நிறமான இருபத்தைந்து வயது கூட நிரம்பாத அழகிய  ஆபிரிக்க பெண் அவளுக்கு சிறிது தூரத்தில் நின்றாள். அவளை கடந்து ஹோட்டலுக்குள் நுழைந்த சம்பந்தமூர்த்தி கவுண்டரில் இருந்த பெண்ணிடம் அறை காலியாக இருக்கிறதா என்ற போது அவள் ஆமென்றாள். அந்த மகிழ்ச்சியில் கடன் அட்டையை கொடுத்து ஒரு நாள் பதிவு செய்து விட்டு வெளியே வந்த போது சம்பந்த மூர்த்தியை அந்த காப்பிக் கொட்டை அழகி கைகளால் அழைத்தபோது சம்பந்தமூர்த்தி சிறிது தயங்கினார். அவள் விடவில்லை

‘இங்கே வா’

‘ஏன்?’

‘தயவு செய்து வா’

அவளது குரலில் ஒரு பரிதாபம் இழையோடியது. காலை ஆறுமணிக்கு இவள் ஏன் கூப்பிடுகிறாள். மேலும் அறை கிடைத்த சந்தேசம் மனதில் பதட்டத்தை நீக்கி இருந்தது.  மனம் இவள் ஏன் கூப்பிடுகிறாள் என்பதை அறிய விரும்பியது
நெருங்கியதும்  அந்தப்பெண்ண் தனது மேற்சட்டையின் இரண்டு பொத்தான்களை கழற்றி தனது முலையில் பெரும்பகுதியை வெளிப்படுத்தி ‘உனக்கு விருப்பமா? என்றாள்.

 மருத்துவ விற்பனைப் பிரதிநிதி தனது மருந்துகளின் சாம்பிளை காட்டுவது போல் இருந்தாலும் மனதில் இருந்த மகிழ்ச்;சியால் எந்த பதட்டமும் ஏற்படாமல் ‘இது மிகவும் காலைப் பொழுதாக இருக்கிறது. எனக்கு தற்போது  மூடில்லை.’

‘எனக்கு பணம் வேண்டும்’

‘என்னை மன்னித்துக்கொள். நான் தயாரில்லை’ எனக் கூறிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்று தனது பழைய ஹோட்டலுக்கு சென்று இடம் பிடித்த கதையை வெற்றிகரமாக சாலினிக்கு சொன்ன சம்பந்தமூர்த்தி அந்த ஆபிரிக்க பெண்ணின் கதையை சொல்லவில்லை.

--

மதியம் பன்னிரண்டு மணிக்கு மேல் புதிய ஹோட்டலுக்கு சாலினியுடன் சூட்கேசை தள்ளியபடி  வந்துகொண்டிருந்தபோது மீண்டும் அந்த கப்பிக் கொட்டை அழகி எதிர்ப்பட்டாள். இவள் நம்மை விடமாட்டாள் போல் இருக்கிறது என நினைத்த போது அவள் அருகில் வந்து விட்டாள். அவளை விலத்த முடியாத நடை பாதை.
‘உமக்கு இளம் பெண்களை பிடிக்காது. நேற்றும் ஒரு கிழவியுடன் போகிறீர் இன்றும் இந்த மத்திய வயது பெண்ணுடன் ஹோட்டலுக்கு போகிறீர். உமக்கு ஏதாவது பிரச்சினையோ? என ஆங்கிலத்தில் வழியை மறித்து கேட்டாள். அந்த இடத்தில் புராணகாலத்தைப் போல் நிலம் பிளந்து தன்னை உள்வாங்கிவிடாதா என நினைத்தபடி கோடைகாலத்தில்  நடுப்பகலில் ஜெனிவா சூரியனை பார்ப்;பது சாலினியின் முகத்தை விட சாந்தமாக இருக்கும்  என நினைத்து ஆகாயத்தை பார்த்தார்.

 நில நடுக்கம், சுனாமி அருகாமையில் உருவாகுவதற்கான அறிகுறிகள் தென்படுவதை வனவிலங்குகள் மட்டுமா அறியும்? சோலர் ரெக்னோலஜி எஞ்ஜினியரும் அறிந்து கொள்வார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.