-  வே.ம.அருச்சுணன் – மலேசியா கைபேசி ஒலிக்கிறது!

எடுத்துப் பார்க்கிறேன். அறிமுகமான எண்தான்!

பள்ளி முதல்வர் நாஷான் பேசுகிறார்.

நான் குழப்பமடைகிறேன்.

மன உளைச்சல். நேரத்திலேயே  வீடு திரும்புகிறேன்.

“என்னங்க....சீக்கிரமா திரும்பிட்டிங்க?”

“வதனி......சந்துரு எங்கே.....?”

 

“ஏங்க....கோபமா இருக்கீங்க? சிறப்பு வகுப்புன்னு  காலையில் சொல்லிட்டுப் போனான்....!”

“சந்துரு......ஒரு வாரமா பள்ளிக்குப் போகலையாம்! பள்ளி முதல்வர்  அழைத்துச் சொன்னார்......!”

“என்னங்கச் சொல்றீங்க.....?”

“பொய்யாச் சொல்வேன்?”

“நாஷான்  நல்லவராயிற்றே! அதோ..... சந்துரு வந்துட்டான்!”

“சந்துரு......நீ ஒரு வாரமா  ஏன் பள்ளிக்குப் போகல......?”

அதிர்ச்சியில் தலைகுனிகிறான்.

“சந்துரு........!”

“வந்துப்பா.....!” தயங்குகிறான்.

அப்பாவுக்கு கோபம் வந்து அவன் பார்த்ததில்லை.

“ஊர் சுற்றாம.....இப்பவே நீ ஒழுங்கா படிச்சாதானே அடுத்தாண்டு ஆறாம் படிவம் மேல் நிலை வகுப்பில் சிறப்பாகத் தேர்வு பெற முடியும்.....?”

“உங்களிடம் சொல்லாமல் பள்ளிக்கு மட்டம் போட்டதற்கு என்னை மன்னிச்சிடுங்க அப்பா.....!”

“அப்பாவுக்குக் கூடச் சொல்லாம ஒரு வாரமா நீ எங்கே போயிருந்தே?”

“பந்து விளையாடப் போனப்பா......!”

“ சந்துரு.....நீ என்ன சொல்ற?”

“பள்ளிக்கு அருகாமையில் இருக்கிற காற்பந்து கிளப்புக்குப் போனேன்”

“அங்கு என்னப் பண்ண?”

“இங்கிலாந்து மென்செஸ்டர் கிளப் திறமையான இளைஞர்களுக்கு இலவசமா பயிற்சித் தர்றாங்க.அதில எனக்கும் வாய்ப்புக் கிடைச்சது”

“எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட ஒரு வார்த்தைச் சொல்லனுமில்ல?”

“ரூனியப் போல விளையாடனுங்கிறதுதான்  என்னுடைய வாழ்நாள் குறிக்கோள்...!” 

“பல்கலைக்கழகத்துலப் படிச்சுப் பட்டம் வாங்கி நல்ல வேலையில் சேர்ந்து கைநிறையச் சம்பாதிச்சு வயசான காலத்தில் எங்களைக் காப்பாற்றுவேன்னு பார்த்தா..... நீ எங்களோட நம்பிக்கையில மண்ணை வாரிப் போட்டிடுவப் போல இருக்கே?”

“காற்பந்து விளையாட்டுல கோடிக் கோடியா பணம் சம்பாதிக்கிறாங்கப்பா....என் திறமையில முழு நம்பிக்கை இருக்கு....!”

“முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல இருக்கு சந்துரு...உன்னோடப் பேச்சு.....! ”

“இங்குள்ள இளம் விளையாட்டளர்களுக்கு முறையானப் பயிற்சிகள் தந்து.......தேர்வுப் பெறும் விளையாட்டாளர்களை அவர்கள் நாட்டிற்குச் அழைத்துச் சென்று, மேலும் நுணுக்கமானப் பயிற்சிகளைத் தொடர்ந்து,வழங்கி உலகத்தரத்திலான விளையாட்டாளர்களை உருவாக்குகிறாங்க.......!”

“இதற்கெல்லாம் அதிஷ்டம் வேணும்.....!”

“நிச்சயம் நான் சாதித்துக்காட்டுவேம்பா...!” உணர்ச்சியுடன் கூறுகிறான்.

“கண்காணாத இடத்திலப்போய் விளையாடுறதைவிட முதல்ல நீ பிறந்த இந்த மண்ணுக்காக  விளையாடலாமே?”

“வாய்ப்புக் கொடுத்தா விளையாட மாட்டேன்னா?   ஆதங்கத்தோடுக் கூறுகிறான்.

“ம்....முயற்சிப் பண்ணிப்பாரு......! திறமைசாலிகள் எங்கும் ஜொலிக்கலாம்!” 

“கோல்கீப்பர்ஆறுமுகம்,சந்திரன் போல விளையாட எனக்கும் ஆசைதான்...! ஆனா.....திறமையைப் பார்ப்பதை விட தோலைப் பார்க்கிறாங்க..!  என்னைப் போன்ற திறமைசாலிகளுக்கு வாய்ப்பே இல்லையே....!”

சந்துரு ஏக்கமுடன் பேசுவதைப் பார்த்து வாயடைத்துப் போகிறேன்.வளரத்துடிக்கும் பயிரை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்களே...! இளமைக்காலத்தில் தாமும் சிறந்த காற்பந்து விளையாட்டாளர்தாம்.தேசிய விளையாட்டாளராவதற்குப் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்ல.வாய்ப்புக் கிட்டாமல் மனம் நொந்து போனேன்.இப்போது நினைத்தாலும் உள்ளம் வலிக்கிறது!

மகனின் மன உணர்வுகளை உணர்கிறேன்! மகனின் எதிர்காலம் அவன் கையில் இருக்கிறது. தன்னைவிட அவன்  மிகச் சிறப்பாகவே திட்டமிட்டுச் செயல் படுவதை எண்ணி வியக்கிறேன்.

அறுபதாம் ஆண்டுகளில், நாட்டின் முதல் பிரதமர் துங்கு முனைப்பால் மெர்டேக்கா கிண்ணம் காற்பந்து போட்டி பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்றுவந்தது.தென் கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகளுக்குக்கிடையே வருடந்தோறும் தடையில்லாமல் மிகச்சீராக நடைபெற்றுவந்தது.

அப்போட்டிவிளையாட்டில், இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம், போன்ற நாடுகளிலிருந்து வரும் விளையாட்டாளர்கள், தங்களின்திறமைகளைக் காட்டி விளையாடியது ரசிகர்களுக்குக் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

இந்தியாவுக்கும் மலாயாவுக்கும் இடையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில்  நமது நாட்டின் முன்னணி ஆட்டக்காரர் தனபாலன் லாவகமாக எதிரிகளை ஏமாற்றி வெற்றிக்கோலை அடித்த போது மெர்டேக்கா ஸ்டேடியமே அதிர்ந்தது! நேரில் சென்று அந்த அரிய ஆட்டத்தைக் கண்டுகளித்த எனக்கு அந்தக் கோல் இன்றும் என் மனதில் ஆழப்பதிந்திருந்தது! அந்த வரலாற்று நாயகன் தனபாலனுக்கு விடிந்தால் திருமணம் என்ற செய்தியும் காற்பந்து இரசிகர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது!

ஆறாம் படிவத்தை முடித்த போது, இங்கிலாந்து  செல்லும் வாய்ப்பைப் பெறுகிறான் சந்துரு.அவனது திறமையைக்கண்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு மான்செஸ்டர்  இளைஞரணியில் விளையாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது!காற்பந்து விளையாட்டில் மகன் தனித்திறமைக் கொண்டிருப்பதை அறிந்து வியந்து போகிறேன்.

அவன் பல மாதங்கள் இங்லாந்தில் தங்கி அங்குள்ள கிளப்புக்கு விளையாடியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி.இளமையில் நானும் காற்பந்து விளையாட்டாளராகஇருந்திருக்கிறேன். பள்ளிப் பருவத்தில் ஆரம்பத் தமிழ்ப்பள்ளியிலும் பின்னர் இடைநிலைப் பள்ளிலும் பள்ளியைப் பிரதிநிதித்து காற்பந்து விளையாடிய அனுபவம் பசுமரத்தாணி போல் இருக்கிறது!

சந்துருவைப் பல மாதங்கள் பிரிந்திருந்தது மனைவிக்கு வருத்தம் என்றாலும்,உள்நாட்டில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பினும் வெளிநாட்டில் மகன் விளையாடுவதைத் தொலைக்காட்சியில் கண்டுகளிப்பது  மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சிதான். 

பல மாதங்களுக்குப் பின் நாடு திரும்புகிறான் சந்துரு.

“சந்துரு.....நீ காற்பந்து விளையாட்டுல முழுத் திறமையைக் காட்டி விளையாடு.நமது உள்ளூர் விளையாட்டாளர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளைச் செய். உன் திறமையால் ஒரு சிறந்த குழு உருவாகனும்.   முழு ஒத்துழைப்பைத் தருகிறேன்!”

சந்துரு மேலும் உற்சாகமடைகிறான்.

உள்ளூர் பிரமுகர் டத்தோ தியாகன் ‘இந்தியன் ஸ்டார்’ எனும் பெயரில் காற்பந்து கிளப் ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு சந்துரு கைகொடுக்கிறான்.தகுதியான இளைஞர்களின் மன உணர்வுகளை அறிந்தவர்.அவர்களுக்கு வடிகாலாய் இருப்பதில் மன நிறைவு கொள்கிறார்.இந்திய இளைஞர்கள் மீண்டும் விளையாட்டுத்துறையில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்னும் தனியாதத் தாகம் கொண்டவர்!

வெளிநாட்டிலிருந்து பயிற்றுனர்கள் வரவழைக்கப்பட்டு முறையானப் பயிற்சிகள் விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது! நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் காற்பந்து போட்டிகளிலும்‘இந்தியன் ஸ்டார்’ குழு கலந்து கொண்டு எல்லாம் பரிசுகளையும் தட்டிச் செல்கின்றது.

மாநில அளவில் பல வெற்றிகளைக் குவித்த இக்குழு பிரபலமான இங்கிலாந்து  விளையாட்டுக் கிளப்புகள் நடத்தும் போட்டிகளிலும் கலந்து பரிசுகளைப் பெறுகின்றது.

திடீரென பொங்கியெழுந்த சுனாமி பேரலையைப்போல்,டத்தோ தியாகன் போலிசாரால் கைது செய்யப்படுகிறார்! இந்தியஇளைஞர்களை ஒன்று திரட்டி நாட்டுப் பாதுகாப்புக்குக் குந்தகம்விளைவிக்கும் சதிச்செயல்களில் ஈடுபடுவதாக யாரோ காவல் துறையினரிடம் புகார் செய்ததால் டத்தோ தியாகனை  கைது செய்யப்படுகின்றார். சில இந்திய அரசியல் புள்ளிகளும் இக் கைது நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பது  பின்னர் தெரியவருகிறது!

 கொதித்தெழுந்த இளைஞர் பட்டாளம் வழக்கறிஞர் குழுவுடன் சட்ட ரீதியில் சந்திக்க காவல் துறையை முற்றுகையிடுகின்றனர்! சட்டநிபுணர்கள் கொடுக்கப்பட்ட விளக்கங்களுக்குப் பின்னர்,டத்தோ தியாகன் ஒருநாள் சிறைவாசத்திற்குப்பின் விடுவிக்கப் படுகிறார்!

“பொதுவாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா! நாம எடுத்துக் கொண்ட வேலையைப் பார்ப்போம்!” அலட்டிக்கொள்ளாமல் தம்முடைய ஆதரவாளர்களிடையே பேசுகிறார்.

திட்டமிட்ட  வேலையில் மும்முரம் காட்டுகிறார்! நாட்டிலுள்ள பிரபலமான காற்பந்து கிளப்புகள் இந்தியன் ஸ்டார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருப்பது டத்தோ தியாகனுக்கு மேலும் மனத்தெம்பைத்தருகிறது.

அன்றைய காலைப் பொழுதில்,முதல் முறையாக ‘இங்லீஸ் பிரிமியம் லீக்’ கிண்ணத்திற்கான காற்பந்துப் போட்டியில் பங்கு பெற ‘இந்தியன் ஸ்டார்’ கிளப்பைச் சேர்ந்த நமது இளம் சிங்கங்கள் பயிற்றுனர் சந்துரு தலைமையில் இங்கிலாந்தை நோக்கிப் புறப்படுகின்றனர்!

‘ஏர் ஆசியா’ நிர்வாக இயக்குனர் டோனி பினாண்டஸ் விளையாட்டாளர்களை வாழ்த்தி வழியனுப்புகிறார்.

வெற்றிக்கனியைப் பெற்று வர, கூடியிருந்த ஆயிரமாயிரம் இந்திய இளைஞர்கள் உற்சாகமுடன் கையசைக்கின்றனர்.இதமான அந்தக் காலைப் பொழுதில் நமது சிங்கங்களைச் சுமந்தவாறு ஏர் ஆசியா பெருத்த உறுமலுடன் வானை நோக்கிப் பாய்கிறது!   

arunveloo @ yahoo.com