 2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில்லை, இதை வாசிக்க ஆரம்பித்தபொழுதில். அது பழக்கமும் இல்லை. வாசித்து முடிந்த பிறகு எழுத மனம் உந்தினால்தான் உண்டு. சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை இரண்டரைத் தடவையாக வாசித்த பிறகு இன்றைக்கு எழுத மனம் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை வாசித்து மூடிவைத்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழிய புத்தகத்தை தொடர முயன்றபோது முடியாமல்போனது. பக்கங்களை பின்னோக்கி நகர்த்தியபோதும் தொடுப்பை பிடிக்க முடியவில்லை. மீண்டும் வாசித்தேன். வாசிப்பில் அலுப்புத் தோன்றவில்லை. புதியதான தோற்றம். அது மீண்டும் மீண்டும் தன் ரகசியங்களைக் கட்டவிழ்த்துக்கொண்டே இருந்தது. சுகம் எச்சமாய் வந்தது. அதுவே இப்பிரதியின் அறுதியான பலன். ‘விடம்பன’த்துக்கு அடையாளமொன்று தேவைதான். அவ்வகையில் இதை நாவலென்று கொள்ளமுடியும். இதன் முன்னுரையில் சுகுமாரன் வகைப்படுத்துவதுபோல் picaresque வகையாகவும் எடுத்துக்கொள்ளலாம். Picaresque வகையினத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றிரண்டு பண்புகளையே அது இறுக்கமாகப் பற்றிக்கொண்டு செல்கிறது. பிக்காறெஸ்க் நாவலில் அல்லது உலுத்த வகை நாவலில் தன்னிலைக் கதைசொல்லும் பண்பை இது எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிடுகிறது.
ஜேர்மன் மொழியில் 1959இல் வெளிவந்து 1961இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான குந்தர் கிராஸின் The Tin Drum இவ்வகை நாவலுக்கு ஆரம்ப கால முன்னுதாரணமென்று சொல்லப்பட்டாலும், அந்த அமைவில் ‘விடம்பனம்’ செல்லவில்லை. ஆனாலும் அந்த வகையினத்தில் தவிர வேறில் இதைச் சேர்க்கவும் முடியாது. பெரும்பாலும் நீண்ட வசனங்களைக்கொண்டு அமைந்திருக்கிறது பிரதி. சல்மான் ருஷ்டியினதைப்போன்ற நீள வசனங்கள். வாசிப்பை மெல்ல நகர்த்துகிற அம்சம் இதுவேயெனினும், இதில் மனம் லயித்துவிடுகிறதைச் சொல்லுகிறபோது, சில நீண்ட வசனங்கள் இடறச் செய்வதையும் சேர்த்தேதான் குறிப்பிடவேண்டும். பாத்திரங்கள் சில நெஞ்சில் நிறுதிட்டமாய்ப் பதிந்துவிடுகின்றன. அவளும் இவளும் என வரும் இரு பெண்பாத்திரங்களான ராணி மார்க்கும், ஆடுதன் ராணியும் அவற்றில் தலையாயவை. அவளா இவளா என்று எழுவாயைக் கண்டறிய முடியாத குழப்பம், கவனம் சிதறினால் வாசகனில் விழுந்துவிடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கும். இது திட்டமாய் அமைக்கப்படவில்லை என்பதை மீறியும், இவ்வகைக் கதை சொல்லலுக்கு இதுவே உகந்த முறையென்று எண்ணுமளவிற்குத்தான் இருக்கிறது. புனைவுப் பாத்திரங்களான ஆடுதன் ராணியும், ராணி மார்க்கும், மணிமொழியும், தமிழ்வாணனும், காத்தானும், மூக்காயியும், சின்னக் கட்டாரியும்போலவே கருங்கண்ணியும், ஜிம்மியும்கூட மனத்தில் பதிகிற விதமாகவே நாவல் நடந்திருக்கிறது. அவ்வப்போது குறுக்கீடு செய்யும் அம்மாஞ்சிப் பாத்திரத்தைக்கூட, அதன் குணவியல்புகளிலிருந்து மங்கலாகவேனும் ஒரு உருவத்தை வாசகனால் கற்பிதம் பண்ணமுடிகிறது. அம்மாஞ்சி பாத்திரத்தின் சிந்தனையின் வரன்முறையான வளர்ச்சி நாவலின் தவிர்க்கவியலாப் பக்கங்களாகின்றன. அதனாலேயே ஒரு மங்கலான உருவத்தோடேனும் பாத்திரம் மனத்தில் இருக்கச் செய்கிறது. எனில் இதில் எந்தவொரு தனிப் பாத்திரமும் கதையை நகர்த்தவில்லையென்பது பிரதானமானது. தொடர்ந்தேர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதையொன்றுடன் நாவல் வந்திருக்கவில்லை. ஆயினும் இதில் ஒரு கதை இருக்கவே செய்கிறது. ஆனால் அந்தக் கதை மய்யமழிந்து கிடப்பதுதான் பிரதியின் விசேஷம்.
Last Updated on Friday, 30 June 2017 16:13
Read more...
ஈழத்து நாவல் இலக்கியம் தன்னளவிலான முயற்சிக்கும் சிந்தனைக்குமேற்ப இலக்கியப் பாதையில் முன்னேறிச் சென்றுகொண்டிருப்பினும் அது தன்மேல் பூட்டப்பட்ட விலங்குகளையும் சுமந்துகொண்டேதான் செல்கிறதென்று ஒரு விமர்சகனால் சொல்லமுடியும். இலகு யதார்த்தப் போக்கில் மூழ்கி கருத்துநிலையால் தன்னைச் சுற்றி முன்னேற்றத்தின் சகல சாத்தியங்களையும் சிரமமாக்கிக்கொண்டேதான் அது நடந்திருக்கிறதென்பது கசப்பானதெனினும் உண்மையானது.
ஆரம்ப காலங்களில் மரபு சார்ந்து நடந்த ஈழத்து தமிழ் இலக்கியம் பின்னால் முற்போக்குப் பாதையில் திரும்பிய வேளையிலும் நவீனத்துவத்துக்கான ஒரு மொழியையும் நடையையும் பார்வையையும் கண்டடைந்து தொடர்ந்துசெல்ல முடியாமற்போனமை துர்ப்பாக்கியமே. அதனுடைய முன்னேற்றமென்பது அளந்து அளந்து வைக்கப்பட்டதாக ஆயிற்று. யதார்த்தத்திற்குப் பின்னால் நவீன யதார்த்தம் தோன்றியதென்பதையோ பின்நவீனத்துவப் போக்கு பரீட்சிக்கப்பெற்றதென்றோ அதன் வழி இலக்கியம் மொழியால் நடத்தப்படுகிறதென்பதையோ அது இன்றைவரைக்கும் புரிந்ததாய்ச் சொல்லிவிட முடியாதே இருக்கிறது. தலித் இலக்கியத்துக்கான முன்னோடி எழுத்துக்களை ஈழத்து இலக்கியம் தந்திருந்தபோதும் பெருமைப்படக்கூடிய புனைவிலக்கியமொன்றை அது தரமுடியாதிருந்ததின் காரணம் இங்கே இருக்கிறதெனக் கொள்வதில் தவறில்லை.
தமிழகத்தில் முதல் தமிழ் நாவலான வேதநாயகம்பிள்ளையின் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ 1879இல் தோன்றியதெனில் ஈழத்து முதல் தமிழ் நாவலான சித்திலெவ்வை மரைக்காரின் ‘அசன்பேயுடைய சரித்திரம்’ 1885இல் தோன்றிற்றென்பது விமர்சகர் யாவர்க்கும் ஒப்பமுடிந்த முடிவு. எனில் ஈழத்து முதல் தமிழ் நாவல் தோன்றி இன்றைக்கு ஒன்றேகால் நூற்றாண்டுக்கு சிறிது மேலேயாகியிருக்கிறது. இந்த நீண்ட கால வரலாற்றில் எடுபொருள் குறித்த தன்மையால் எஸ்.பொ.வின் ‘தீ’யும் புதிய களநிலை குறித்த தன்மையால் பாலமனோகரனின் ‘நிலக்கிளி’யும் தெளிவத்தை யோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’யும் பேசப்பட்டாலும் மொழியமைப்பின் வசீகரத்தாலும் வலுவான உரையாடல்களாலும் இறுகியதும் வேறுபட்டதுமான நடையினாலும் மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம்’ தீவிர வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது. இதுவே இந்நீண்ட வரலாற்றுப் புலத்தில் ஈழத்து இலக்கியத்தின் சாதனையெனச் சொல்லக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் அண்மையில் வெளிவந்திருக்கும் நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’ நாவல் இதுவரையிருந்த ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மொண்ணைத்தனத்தினை நொருக்கிப்போடும் மொழி நடை உரையாடல் மற்றும் பொருள் சார்ந்த வி~யங்களின் வல்லபத்தோடு வெளிவந்திருப்பதை அதன் திசைமாற்ற முன்னறிவிப்புக் குரலாக நான் காண்கிறேன். இருந்தும் ஈழத்திலேயே இது பெருங்கவனம் பெற்றிராதது ஆச்சரியகரமானது.
Last Updated on Monday, 11 April 2016 04:30
Read more...
அறுவடை முடிந்துவிட்டால் வயல்வெளியில் ‘கிளிக்கோடு’ விளையாட்டு தொடங்கிவிடும். பள்ளி முடிந்து வீடு வந்த பின்னால் வயலுக்குச் செல்வதை தவிர்க்கவே முடிவதில்லையயயய. விளையாடாவிட்டாலும் பார்த்துக்கொண்டு இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. சூழ்நிலைமைக்கும் நேரத்துக்கும் தக விளையாடப் போவதற்கு முன்பாகவோ பின்னாகவோ நான் வசந்தாக்கா வீட்டுக்குப் போய் வந்துகொண்டேயிருந்தேன் அந்நாட்களில். சிரிக்கச் சிரிக்கவும் பேசுவதோடு, மிக நகைச்சுவையான வி~யங்களைச் சொல்லும்போது அவ்வப்போது என் தோளைத் தொட்டுத்தழுவி வசந்தாக்கா பேசுவாள். என்னோடு மட்டும்தான் அவள் அப்படிப் பேசுவதாக நான் நம்பிக்கொண்டிருந்தேன். அதில் இனம்புரியாத ஒரு இன்பத்தையும் நான் அடைந்துகொண்டிருந்தேன். பெரும்பாலும் அவளோடு நான் பேசாத நாட்கள் அதனாலேயே மிக அரிதாக இருந்தன.
ஒரு நாள் வசந்தாக்கா வீட்டுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய எனக்கு சிறிதுநேரத்தில்தான் திடுக்கிட்டாற்போல சந்தேகமாகிற்று, அன்று வீட்டுக்குத் திரும்பிவந்து திண்ணையிலே நான் எனது பாட்டா செருப்பை கழற்றிவிட்டேனாவென்று. அப்படியானால் எங்கோ மறந்துபோய் விட்டிருக்கிறேன். எங்கே? வயல்வெளி விளையாட்டிடத்தில் மறுபடி போட்டுக்கொண்டது ஞாபகம் வந்தது. அல்லது அவ்வாறான ஒரு ஞாபகத்தை நான் வலிந்து உருவாக்கிக்கொண்டேன். அப்படியானால் வசந்தாக்கா வீட்டு படிக்கட்டில்தான் விட்டிருக்கவேண்டும். அதை மறுநாள்கூட நான் எடுத்துவிடலாம். ஆனால் அங்கேதான் விட்டேன் என்றும் நூறு சதவிகிதம் துணிய முடியாமல் இருந்தது. உடனேயே வசந்தாக்கா வீட்டுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினேன்.
Last Updated on Sunday, 02 August 2015 23:46
Read more...
மாரிகாலத்தில் ஒரு அதிகாலை நேரம் முதல்நாளிரவில் வீசிய காற்றுக்கு முற்றம் முழுக்க இறைந்துகிடந்த பூவரசின் பழுத்த மஞ்சள் இலைகளை அம்மா பெருக்கிக்கொண்டிருக்கää விறாந்தையில் தூக்கம் இன்னும் கலைந்துவிடாத சோம்பேறித்தனத்துடன் படுக்கைப் போர்;வையை இன்னும் மேலிலே சுற்றியபடி எந்த விடுப்புமற்ற அந்தச் செயற்பாட்டில் கண் பதித்து அமர்ந்திருந்தேன். பூவரசமிலைகளின் பல்வேறு தர மஞ்சள்கள் தவிர என் கவனத்தைக் கவர அங்கே வேறெந்த அம்சமும் இருந்திருக்கவில்லை.
“மழை வரப்போகுதுபோல கிடக்கு. எழும்பிப் போய் முகத்தைக் கழுவியிட்டு வா” என்று அம்மா எனக்குச் சொல்லுகிறாள். தூக்கம் கலைந்தாலும் சோம்பல் கலைந்துவிடாத நான்ää “போறனம்மா” என்று சொல்லிக்கொண்டே இன்னும் அந்த இடத்தைவிட்டு அகலாமல்.வெளியே செல்;ல புறப்பட்டு தெருவில் வந்த ஒருவர் அம்மாவுடன் படலையில் நின்று பேசுகிறார். போகும்போது சொல்கிறார்ää ‘கெதியாய் கூட்டி முடியுங்கோ. பருத்துறைக்கடல் இரையிறது கேக்குதெல்லே? நல்ல மழைதான் வரப்போகுது’ என்று. அம்மாவின் கூட்டுகைச் சத்தம் நின்றிருந்த அந்தப் பொழுதில் நான் கேட்கிறேன்ää காற்றின் அசைவு தவிர்ந்து வேறு சத்தமற்றிருந்த அவ்வெளியில் கடலின் உறுமலை.
பருத்தித்துறைக்கும் சாவகச்சேரிக்குமிடையில் பன்னிரண்டு மைல்கள். எங்கள் வீட்டிலிருந்து பத்து மைல்களாவது இருக்கும். அந்தளவு தூரத்திலிருந்து இரையும் கடலின் சத்தம் இவ்வளவு தூரத்துக்கு கடந்துவந்திருக்குமெனில்ää ஆயிரம் தரைவைக் கடல்களைவிடவுமே அது பிரமாண்டமாய் இருக்கவேண்டும்! சாவகச்சேரியில் தரவைக்கடல் பார்த்திருக்கிறேன். அதுபோல் கைதடியிலும் நாவற்குழியிலும் எழுந்திருந்த பாலங்களுக்குக் கீழால் விரிந்திருந்த தரைவையில் அலையசைந்த நீர்ப் பெரும்பரப்பையும் பார்த்திருக்கிறேன். அவை சப்தமெழுப்பியதே இல்லை. ஆனால் கண்டிராத கடல் பத்துக் கட்டை தூரத்திலிருந்து எழுப்புகிற சப்தம் இங்கே கேட்கிறது! கடலின் பிரமாண்டம் காண அன்றைக்கேதான் என் மனத்துள் ஆசை விழுந்திருக்கவேண்டும்.
Last Updated on Tuesday, 07 July 2015 02:06
Read more...
 மனவெளி அரங்க அளிக்கைக் குழுவினரின் பதினேழாவது அரங்காடல் நிகழ்வு சித்திரை 17,2015இல் வழக்கம்போல் மார்க்கம் தியேட்டரில் நடந்து முடிந்திருக்கிறது. ஐந்து அளிக்கைகள்,சுமார் நான்கு மணிநேரத்தில்; பல்வேறு உணர்வுத் தெறிப்புகளை பார்வையாளரிடத்தில் பதித்துப் போயிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும்பற்றிய விமர்சனமல்ல இக்கட்டுரை. ஒவ்வொரு அளிக்கையும் முடிவுற்ற கணத்தில் மனத்தில் எஞ்சிய உணர்வோட்டம் எது காரணமாய் ஏற்பட்டதென்ற நினைவோட்டத்தின் பதிவுமட்டுமே. மாலை 06.03க்கு தொடங்கிய இரண்டாம் காட்சியின் முதல் நிகழ்வு யாழினி ஜோதிலிங்கத்தின் ‘நீலம்’ என்பதாக இருந்தது. பிரதியின் சொல்லடர்த்தியும்,காட்சிப் படிமங்களும் காரணமாய்,முதல் அளிக்கையாக அது நிகழ்வில் அமர்த்தப்பட்ட ஒழுங்குக்காய் அமைப்பாளர்களுக்கான பார்வையாளனின் பாராட்டைக் கோரியிருந்தது. ஒரு களைப்புற்ற மனம் கனதியான பிரதியொன்றைத் தொடரும் சிரமம் இதனால் தவிர்க்கப்பட்டது. ஒரு இசை நாடகத்தின் பரிமாணத்தின் பல கூறுகளை இது தன்னகத்தே அடக்கியிருந்தது என்பது நிஜம். தீவிர அளிக்கையென்பது அதன் அசைவுகளால் மட்டுமல்ல,ஒலியும்,ஒளியுமாகிய தொழில்நுட்ப உத்திகளின் உதவியுடன்,காட்சிப்படுத்தலின் இடையீடுறா நீட்சியின் அமைவையும் கொண்டதாய் நவீன அரங்க அளிக்கையின் அனுபவம் தமிழ்ச் சூழலில் முக்கியத்துவமும்,முதிர்ச்சியும் பெற்றுவருவதன் அடையாளமாய் இருந்தது ‘நீலம்’.
Last Updated on Thursday, 30 April 2015 06:14
Read more...
ஐயாவின் மரணத்துக்குப் பிறகு எனக்கு மிச்சமாகிப் போனவை அவரது நினைவும்,அவர் பாவித்த ஒரு பழைய சைக்கிளும்தான். முன்பே சைக்கிள் எடுத்து ஓடித்திரிய வீட்டிலே எனக்குக் கட்டுப்பாடிருந்தது. இப்போது அம்மா பெரும்பாலும் தன் சோகத்துள் இருந்த நிலையில் நான் கட்டறுத்தவனாய் திசையெங்கும் அலைந்து திரிந்தேன். இப்பவோ அப்பவோ ஒருபொழுதில் என் குடும்பத்தாருடன் காரிலும்,பஸ்ஸிலுமாய் நான் கலகலத்துச் சென்ற பாதைகளின் காடும்,வயலும்,வெளியும் பேசிய மௌனத்தின் சுவை என் அலைவின் தனிமையில் எனக்குச் சுகிப்பாயிற்று. மாலையின் மஞ்சள் வெளிச்சங்களில் மட்டுமில்லை,நிலாவின் மென்னொளி இரவுகளும்கூட என் அலைதல் காலமாயிற்று. கதைகளிலும்,கட்டுரைகளிலும் வாசித்து ரசித்த நிலக் காட்சிகளின் நிதர்சனம் மேலும்மேலுமாக இயற்கையின்மீதான என் ருசியினை ஏற்றிற்று. பள்ளிப் பாடங்கள் தவிர்ந்த புத்தக வாசிப்பும்,பள்ளிக்குச் செல்லாமலே மேற்கொண்ட ஊர் அலைவும் எனக்குள் ஒரு புதிய உலகத்தைத் திறந்தபோதும்,அதை சரியாகப் புரிந்துகொள்ள முடியாதவனாகத்தான் நான் இருந்தேனென்று நினைக்கிறேன். ஒரு இலக்கு நோக்கியல்லாமல் வெறும் அலைதலாக அது இருந்தது. அப்படியேதாவது பலன் அதிலிருக்குமாயிருந்தாலும் அதன் பேறு உடனடியாக அறுவடைக்குச் சாத்தியமாவதுமல்ல. பன்னிரண்டு வயதில் ஒரு செல்நெறியை நான் உணர்ந்து உள்வாங்கிவிட முடியாது. அதற்கான காலம் வரவேண்டியிருந்தது.
Last Updated on Thursday, 23 April 2015 03:07
Read more...
பனி புகட்டினால், மழையிலே நனைந்தால், வெய்யில் பட்டால், தூசிக்குள் நின்றால் என எதற்குமே தும்மல் வந்து, தடிமனாக்கி, காய்ச்சலும் இருமலும் பிடித்துவிடுகிற ஒரு நோஞ்சான் பிள்ளையாகவே என் சின்ன வயது இருந்திருக்கிறது. இது காரணமாகவே அண்டை அயல் வீடுகளிலே போய் விளையாட நான் அனுமதிக்கப்படவில்லை என் பெற்றோரால். சாதிபற்றிய காரணம் பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் தரத்ததாகவே இருந்தது. பாடசாலை மெய்வல்லுநர்ப் போட்டிகளில் பங்குகொள்வது அது தேடிச் சென்று பங்குபற்றுகிற சூழ்நிலையில் அமையாததில் அதற்கு நான் அனுமதிக்கப்பட்டேன். இருந்தும் பத்து வயதுவரை என்னால் பெரிதாக எதனையும் செய்யமுடியவில்லை, இந்த வருத்தக்கார உடம்பு இருந்த காரணத்தால்.
இந்தா, இந்தமுறை விளையாட்டுப் போட்டியில் யூனியர் பிரிவில் சம்பியன் ஆகாவிட்டாலும், இவனுக்கு எப்படியும் நூறு யார் ஓட்டத்திலோ, நீளம் பாய்தலிலோ முதலாம் அல்லது இரண்டாம் பரிசுகள் கிடைத்துவிடும் என்றிருக்கிற நிலையில், விளையாட்டுப் போட்டியிலன்று நான் சுகவீனமாகி எழும்பமுடியாது கிடந்த சம்பவங்கள்தான் என் வாழ்வில் அதிகமும் நேர்ந்திருக்கின்றன.
Last Updated on Friday, 05 December 2014 03:36
Read more...
ஒரு காலத்தில் எங்கள் கிராமத்தில் குழைக்கடைச் சந்தியென்றொரு இடமிருந்தது. மாரி தொடங்கியதும் குழைக் கடை தொடங்கும். கடையென்றால் விற்கிறதல்ல, வாங்குகிற கடை. தென்மராட்சி குழைக்காடு என்று சொல்லப்படுவதற்கேற்ப நெடுமரங்களும், வேலிமரங்களுமாய் குழை செறிந்து நிழல் விழுந்த பூமியாகவே இருந்தது. வடமராட்சியின் செழிப்பான விவசாயத்துக்காக யூரியாபோன்ற இரசாயன பசளையினங்கள் இல்லாத அக் காலத்தில் பசளையாகப் பாவிப்பதற்கு பனையோலையும், எருவும், குப்பையும் வீடுவீடாகச் சென்று வாங்கியதுபோல, அங்கிருந்து வந்து குழையும் வாங்கினார்கள். குழை வாங்குவற்கான மத்திய ஸ்தானம்தான் குழைக்கடை.
நெடுவாகக் கிடந்த பருத்தித்துறை வீதியை அம்பலந்துறை வயலிலிருந்து தொடங்கி கல்வயலின் அருகுவரை சென்றிருந்த மணலொழுங்கை ஊடறுத்துக்கிடந்த சந்தியில், முதிர்ந்த ஒரு ஆலமரத்தின் கீழே அது கூடியது. கட்டுக்கட்டாக பூவரசு, சீமைக்கிளுவை, வேம்பு, பாவெட்டை, அன்னமுன்னா, கிலுகிலுப்பை, மஞ்சவுண்ணாவென்று வீட்டுமரக் குழைகளும், கொய்யா, கிஞ்ஞா ஆகிய காட்டுமரக் குழைகளும் மரங்கள் மொட்டையடிக்கப்பட்டு கட்டுக்கட்டாகக் கட்டி அங்கே கொண்டுவரப்பட்டு காலை ஒன்பது பத்து மணிவரை நடைபெறும் அக் கடையிலே விற்பனையாகின.
Last Updated on Sunday, 02 November 2014 04:02
Read more...
 1971 ஆவணி 31இல் பிறந்த நிர்மலதா என்கிற ஒரு பெண்ணின் மரணம், செப்டெம்பர் 10, 2014இல் நிகழ்ந்தது. எல்லோர்வரையிலும் நாள்தோறும் யுத்தங்களினாலும், பட்டினியாலும், நோயினாலும் சம்பவிக்கும் லட்சோப லட்சம் மரணங்கள்;போல் இதுவும் ஒன்றாயினும், அவளது தந்தைக்கு அது அவனது சொந்த மரணமேபோல் சுயத்தின் இழப்பாயிற்று.தாய் தந்தையர், கணவன் மனைவி, சகோதரங்கள், மேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடையேகூட இவ்வளவு பாதிப்போடு ஒரு மரணம் நிகழ்ந்திருக்க முடியும். அன்பினது ஆழமான வேரூன்றல் என்பதிலிருந்து இந்தப் பாதிப்பு கூடியும் குறைந்துமாய் விளைகிறது. ஒரு நெருங்கிய உறவின் மரணத்தில் கண்ணீரே சிந்தாமல், ஒரு வாய்ச் சொல் அரற்றிப் புலம்பாமல் நொருங்கிப்போனவர்கள் இருக்கிறார்கள். போலவே, அழுது விழுந்து புரண்டு கதறிய பின், சுடலையிலிருந்து அல்லது மின்தகன ‘தோட்ட’த்தினின்று திரும்பிய நாளின் பொழுது விடிந்ததிலிருந்து காதலும் காமமும் இலௌகீகத் தேடல்களுமாய் பிரிவுகளை மறந்துபோனவர்களும் நிறையவே யதார்த்தத்தில் உண்டு. தந்தையானவன் உடைந்து நொறுங்கியது பெற்ற மகளென்ற பாசத்தில் மட்டும் உருவானதில்லை. தான் தவறவிட்ட அடைவுகளை அவளே தன் சுயபலத்தில் நிறைவேற்றிக்கொண்டிருந்தாள் என்பதனாலுமாகும்.
Last Updated on Tuesday, 07 October 2014 04:06
Read more...
முனை 1
நீண்டு நெடும் பாம்பாய்க் கிடக்கிறது மக்கித் தெரு. சோளகம் சருகுகளை உருட்டிச் சென்றுவிட்ட கான்கள், புல்களும் புதர்களும் காய்ந்து சுருங்கிய நிலையில், வெறுமையாய்க் கிடக்கின்றன. காற்றினால் அகற்றப்பட முடியாது எஞ்சிப்போன சுள்ளிகளும் தடிகளும், பிறகொருநாள் கோடை பிறந்துவிட்ட அந்தப் பருவகாலத்தில் தீ வைத்துச் சாம்பலாக்கப்படலாம். மாரியில் வெட்டப்பட்ட வேலி மரங்களில் பசுமை செறித்து வளர்ந்திருந்த இலைகளில் மக்கி அப்பி பழுப்பாய்த் தோன்றுகின்றது. கோடையினை அக் கிராமத்தின் வெறித்த பருவமாய் உணர்விலெழுப்ப, மக்கித் தெரு இணைத்து மேற்கிலும் கிழக்கிலுமாய்க் கிடந்த வயல்வெளிகளின் தரிசு மட்டுமில்லை, வயல்வெளிகளில் ஒழுங்கைகளில் தம்பாட்டுக்கு காய்ந்த புல் சருகுகளில் தம் பசியாற்ற அவிழ்த்துவிடப்பட்டிருந்த ஆடுகள் மாடுகளின் அலைவும் மட்டுமில்லை, தெருக்கள் ஒழுங்கைகளில் அரிதுபற்றிப் போன மனித நடமாட்டமும், இன்னும் அடுக்களைகளின் கூரைகளைத் துளைத்துக்கொண்டு அடுப்புப் புகை மேற்கிளம்பாத அசைவிறுக்கமும்கூட பொருந்திய காட்சிகளாக இருந்தன. யாழ்ப்பாணம் கிடுகு வேலிக் கலாசாரத்தைக் கொண்டிருந்தாய்ச் சொல்லப்படுகிறது. அதை நிரூபிப்பதற்கான அச்சொட்டான காலமாகவிருந்தது அது. அதை அண்ணளவாக ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளின் ஆரம்பகாலம் என்கலாம். கிடுகு வேலிக் கலாசாரமென்பது மாற்றங்களை உட்புக விடாததும், மரபின் இறுக்கங்களைத் தளர விடாததுமான வாழ்நிலைமையை முப்புற வேலிகளைக்கொண்டு உறுதியாக்கி அங்கே கட்டப்பட்டிருந்தது.
Last Updated on Monday, 21 April 2014 03:30
Read more...
(முன்மொழிவு: கதி மாற்றமற்ற காலத்தின் சீரான நகர்ச்சியில் சந்தோஷங்களுடனும், துக்கங்களுடனுமான மனித வாழ்க்கைமட்டும்தான் ஊர்வதாகவோ பறப்பதாகவோ தோற்றம் காட்டி நிற்கிறது. வாழ்வை வாழ்வதற்கும், கழிப்பதற்குமான எல்லைக்கோடுகள் வேறுவேறானவையாகவே இருக்கின்றன. வாழ்ந்தேனா, கழித்தேனா என்ற கேள்விகளுக்கப்பால் எல்லைக்கோடுகளின் விதித்தல்பற்றியே நிறைய நான் சிந்தித்திருக்கிறேன். பதில் கிடைத்த அப்போதும் எல்லைக்கோடுகள் தாண்டமுடியாதவையாகவே இருந்திருக்கின்றன. இவை பல வேளைகளில் விண்டுரைக்க முடியாத விரக்தியின் உச்சம்நோக்கி என்னை நகர்த்தியிருக்கின்றன. மன விரக்திகள் மிக மோசமாக அழுத்துகிறபோது சமூகத்தின்மீதான கோபமாகவும், அதன் பிரதிநிதிகளாய் நின்று வாதித்து என்னை உபாதிக்கும் குடும்பத்தினருடனான ஒட்டுவிடுதலாகவும் அது பரிணமித்து என்னை எங்கோ எங்கோ தொலைத்துவிடுகிற சந்தர்ப்பங்கள் எனக்குப் பல்வேறு தடவைகளில் நேர்ந்திருக்கின்றன. அச்சந்தர்ப்பங்களிலும் கவுதமனுக்கு ஒரு திரிமாபோல, எனக்கு ரோஸ்களும், தயாவதிகளும், எமிகளும் இருக்கவே செய்திருக்கிறார்கள். இத்தகு கணங்கள் மிகப் பெருமைப்பட முடியாதவையாக இருந்தபோதும், என் வாழ்வின் ஒரு பகுதியாக எனக்கு இவற்றில் அக்கறையுண்டு. ஆயினும், இவை என் யோசிப்பின் காலப் பரப்பு அடக்காத விஷயங்கள். இலங்கையிலோ, தமிழகத்திலோ என்னைத் தொலைத்துவிடுவதற்கான நிலைமைகள் முதிர்ந்தபோது மிக அநாயாசமாக அவற்றைச் செய்துவிட என்னால் முடிந்திருக்கிறது. ஆனால் அவ்வாறான நிலைமைகள் என் புதிய நாடான கனடாவில் விளைந்த சமயங்களில் காலநிலையும், தொடர்பூடகச் சாதனங்களும் காரணமாய் செயற்படுத்தவியலாத நிலை உருவாயிற்று. அண்மையில் அவ்வாறான ஒரு மனவழுத்தம் திரண்ட சமயத்தில் ஒரு விச்சிராந்திபோல் வானும், நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும், மண்ணும், மரங்களும்கூட பார்வையில் படமுடியாத நிலக்கீழ் வீட்டிலிருந்து, கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகவளவிலான பனிப் பொழிவாலும், குளிர் அடர்த்தியாலும், உறைபனியாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு பருவகால செறிநிலையில் என் அவத்தை குறையும்படியாக என் வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அதீத முயற்சியில் ஈடுபட முயன்றிருந்தேன். யோசிக்க யோசிக்க எனக்கு விடைகளுக்குப் பதிலாக புதிர்களே கிளர்ந்தெழுந்ததாய்த் தோன்றியது. இல்லறத்தில் துறவறத்தையும், துறவறத்தில் இல்லறத்தையும் மாறுகொள வாழ்ந்த வாழ்வு ஒரு வெறுமையாய் வந்து என்னைக் கவிந்தது. திட்டமிடாவிட்டாலும் வித்தியாசங்களூடாக இழுத்துக்கொண்டு செல்லப்பட்ட வாழ்க்கையில் இது தவிர்க்கப்பட முடியாதது என்றே ஆரம்பத்தில் கணித்தேன்.
Last Updated on Tuesday, 18 February 2014 01:36
Read more...
(ஆவணி 31, 2013 சனிக்கிழமை கனடா சுயாதீன திரைப்பட இயக்கியத்தினால் பட்டறை, மற்றும் கலந்துரையாடல் என ஒரு முழுநாள் நிகழ்வாக மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் அவர்கள் பங்கேற்ற அமைவில் வாசிக்கப்பட்ட பேச்சு உரைவடிவத்தின் உரைக்கட்டு வடிவம் இது.) ஒரு மாறுதலுக்காக மட்டுமன்றி, இந்தமாதிரியான ஒரு அலசல்தான் இந்த நூலிலுள்ள விஷயங்களின் தாற்பரியங்களை விளங்கிக்கொள்ளும் சுலபத்திற்கு வாய்ப்பானது என்று கருதுகிற வகையில், இந்த முறையில் இந்நூல் பற்றிய என் கருத்துக்களைத் தொகுத்தளிக்க விழைகின்றேன். ஐசன்ஸ்டெயினிற்கும் மார்க்கருக்கும் நடுவிலுள்ள அளவிலாத் தூரத்தில் சஞ்சரிக்கும் மார்க்சின் ஆவி, உலகமயமாதலுக்குப் பின்னும் நம்மை ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிய அடிப்படைக் கூறான இருமை எதிர்வைக் கட்டவிழ்த்த தெரிதாவின் கூற்றில் உண்மை இருக்கின்றது’ என்று கடைசிப் பக்கத்தில் வரும் வசனங்களோடு இந்த நூல் முடிவடைகின்றது. முடிவிலிருந்தே ஆரம்பிக்கலாம்.
Last Updated on Tuesday, 03 September 2013 04:08
Read more...
 ‘ஆறாவடு” நூல் குறித்த பிரஸ்தாபம் ஈழத்து வாசகர் மத்தியில், முகப் புத்தகப் பக்கங்களில் இவ்வாண்டு தை முதலே இருந்து கொண்டிருந்திருப்பினும், அதை அண்மையில்தான் வாசித்து முடித்தேன். நூலின் பின்னட்டையிலுள்ள படைப்பாளியின் போட்டோவிலிருந்தும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்தும் அவரது வயதைக் கணிப்பிடக்கூடியதாக இருந்தது. இது முக்கியம். ஏனெனில் நூல் தெரிவிக்கும் வெளியில் படைப்பாளியின் அனுபவ நிஜத்தை அதிலிருந்தேதான் வாசகன் கணிக்கவேண்டியிருக்கிறது. நிகழ்வுகளில் அதிவிஷேடத்தனங்கள் இல்லாதிருந்த நிலையில் களத்தில் நின்றிராதிருந்தும் நிகழ்வுகளை இணையம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் கவனித்திருக்கக்கூடிய ஒருவராலும் இந்தமாதிரி ஒரு கதையை மிகச் சுலபமாகப் புனைந்துவிட்டிருக்க முடியும். இந்நூல் ஒரு புனைவு என்ற தளத்திலிருந்தான நோக்குகைக்கு இத் தகவல்கள் ஒன்றுகூட அவசியமானவையில்லை. ஆனால் முகப் புத்தகத்தில் பெரிய ஆரவாரம் நடந்துகொண்டு இருந்தவகையில் இதுவும், இத்துடன் வேறுபல செய்திகளும் வேண்டியேயிருந்தன. தன்னைத் தானே முன்னிலைப்படுத்திக்கொண்டு படைப்பே பேசவெளிக்கிட்டது போன்ற நிலை படைப்பின்மீதான சந்தேகத்தை எவரொருவரிலும் கிளர்த்தமுடியும். அதுவே இந்தப் பிரதி விளைந்தது. இந்நிலையில் வெளியிலிருந்து வந்த தகவல்கள் தவிர்ந்து அவர்பற்றி வேறெதையும் அறிந்துகொள்ளும் சாத்தியமெதுவும் நூலில் கிடைக்காததும், தொலைக்காட்சி உரையாடலில் இல்லாததும் இதை எழுதுவதற்கான தாமதத்தை ஏற்படுத்தியது.
Last Updated on Tuesday, 03 September 2013 03:57
Read more...
பகுதி ஒன்று
(இது அக்டோபர் 06 2012இல் தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் என்ற கருத்திலான இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாள் நிகழ்வின் முதல் அமர்வில் வாசிக்கப்பட்ட உரைக்கட்டு. இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன். - தேவகாந்தன் -) புலம்பெயர் இலக்கியம் என்ற விடயத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியம் என்ற கூறுகளும், ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பில் ஈழத்து தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக இலக்கியம் என்ற கூறுகளும் இத் தலைப்பிலான ஓர் உரைக்கட்டில் தலையிடும் தவிர்க்கமுடியாமை இயல்பாகவே எழும். அவ்வாறு அது எழுந்தாக வேண்டும். அதுவே சரியான பார்வையாக இருக்க முடியும். புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப் படைப்புகளையும் புகலிடத் தமிழிலக்கியமாகவே கொள்ளவேண்டும் என்ற கருத்தினையும் இவ்வுரைக்கட்டு கருத்திலெடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் பிரான்சில் வதியும் நாகரத்தினம் கிரு~;ணா, இங்கிலாந்தில் வதியும் யமுனா ராஜேந்திரன், கனடாவில் வதியும் சு.கி.ஜெயகரன், ஐக்கிய அமெரிக்காவில் வதியும் காஞ்சனா தாமோதரன் ஆகியோரது ஆக்கங்களை எந்தவகையான வகைமைக்குள்ளும் கொண்டுவந்துவிட முடியாதுபோய்விடும்.
Last Updated on Tuesday, 03 September 2013 03:58
Read more...
வணக்கம், கிரிதரன். ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக நீங்கள் எழுதிய எதிர்வினையை ‘பதிவுக’ளில் பார்த்தேன். பொதுவாக உரைக்கட்டுசார் விடயங்களுக்கான எதிர்வினைகள் வருவது ஆரோக்கியமானது என்பதே எனது கருத்தாக என்றும் இருந்துவருகின்றது. அது குறித்து என்வரையில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் எதிர்வினையாக மட்டுமே அது இருந்திருந்திருந்தால் அதற்கு இவ்வாறான ஒரு பதில்மறுப்பு என்னளவில் அவசியமில்லாமலே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சுமத்தியது ஒரு குற்றச்சாட்டு அல்லவா? என் வாசிப்பின் மீதான உங்களது அவநம்பிக்கையை என்மேல் சுமத்திய ஒரு குற்றச்சாட்டாகவே அதை என்னால் பார்க்க முடிகிறது. அக் குற்றச்சாட்டின் பதில்மறுப்பிற்காக உரைக்கட்டினைவிட கடித வடிவம் சிலாக்கியமாகப்பட்டதில் இவ்வாறு எழுத நேர்ந்திருக்கிறது. என் வாசிப்பின் போதாமையை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள், கிரிதரன்?
Last Updated on Tuesday, 03 September 2013 03:58
Read more...
காலம் என்பதுதான் என்ன என்ற ஒரு கேள்வி, சிலகாலமாகவே என் நினைவுள் நுழைந்து விடை தேடி நின்றுகொண்டிருந்தது. அண்மையில் நிகழ்ந்த தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனுடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டதற்குப் பின்னர் அந்தக் கேள்வி இன்னும் வலுவடைந்துள்ளதாகவே தோன்றுகிறது. ‘காலமென்பது கறங்குபோல் திரிந்து கீழது மேலாய், மேலது கீழாய்ப் புரட்டும் ஒரு மகாசக்தி’யென இலக்கியங்களில் படித்ததுண்டு. இது வரலாற்றுக் கண்கொண்டு நோக்கப்பட்ட காலமெனச் சொல்லலாம். இன்னும், ஆரூடகாரனின் நாவில் குதிபோடும் ‘தம்பிக்கு காலம் இப்ப நல்லாயில்லை…’ அல்லது ‘காலம் நல்லாயிருக்கு’ என்ற வாசகங்களில் விதியென்ற மாயத்தின் பாய்ச்சலைக் காணமுடியும். காலத்துக்குத்தான் தமிழில் புதிராய், மாயமாய், விளக்கமாய், செறிவாயென எத்தனை அர்த்தங்கள்!
Last Updated on Tuesday, 03 September 2013 03:59
Read more...
(பாலின் நிலைமாற்றத்தினை பாலின மாற்றம் என்பதா, பால்நிலைப் பிறழ்வென்பதா என இக் கட்டுரை 05.05.2012இல் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு 39இல் வாசிக்கப்பட்டபோது ஒரு பிரச்சினை தோன்றியது. பால்நிலை மாற்றம் என்று குறிப்பிடுவதே சரியென்று, இலக்கியச் சந்திப்பு வாசிப்பின் பின் நான் யோசித்திருந்தாலும், மீண்டும் மீண்டுமான என் யோசிப்பில் அலியென்பது ஒரு பிறழ்வெனவே தோன்றியது. ஆண் அல்லது பெண் ஆகவேண்டியது இரண்டுமல்லாததாக ஆவது ஒரு பிறழ்வுதான். ஆனால் ஆண் அலி, பெண் அலி தம்மைப் பெண்ணாக மாற்றிக்கொள்வதை மாற்றம் எனக் குறிப்பிடல் சரியாகலாம். எனவே தொடர்ந்தும் பிறழ்வு என்ற சொல்லையே இக் கட்டுரையில் நான் பாவித்திருக்கிறேன். சில இடங்களில் வரநேர்ந்திருக்கும் மாற்றம் என்ற சொல்லை நான் வலிந்து மாற்ற முயற்சி செய்யவில்லை.) பால் நிலைப் பிறழ்வு குறித்தும், பாலியல் சார்ந்த பகுப்புகள் குறித்தும், கலவி நிலைகளும் அதுபற்றிய விளக்கங்கள் பற்றியும் சிந்திக்க முனையும் ஒருவருக்கு, அவைபற்றிய முதல்நிலைத் தகவல்களைத் தருபவை கீழைத் தேய எழுத்துக்களாகவே இருக்கின்றமை வெளிப்படையானது.
Last Updated on Tuesday, 03 September 2013 04:00
Read more...
 [வலைப்பதிவுகளிலிருந்து அவ்வப்போது ஆக்கங்கள் ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றன. அந்த வகையில் எழுத்தாளர் தேவகாந்தனின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்] இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் பின்பாதியினது போக்கினை நிர்ணயித்த முக்கியமான நாவலாகக் கருதப்படும் சிமோன் டி போவுவாவின் ‘அடுத்தவர் குருதி’ (The Blood of others) என்ற தத்துவார்த்த நாவலை அண்மையில்தான் வாசித்தேன். சிமோன் டி போவுவாவின் The Second Sex என்ற இரண்டு தொகுப்பு பெண்ணியச் சிந்தனைபற்றிய முக்கியமான நூலோடு சில காலத்துக்கு முன்னரே தொடர்பு ஏற்பட்டிருந்தபோதும், அவரது படைப்பிலக்கிய நூல்கள்பற்றித் தெரிந்திருந்த நிலையில்கூட, அவரது நாவல்களுள் பிரவேசிப்பதற்கான பெரிய ஆர்வமேதும் என்னிடம் எழுந்திடவில்லை.
Last Updated on Tuesday, 03 September 2013 04:02
Read more...
|