(26) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -பொய்யான கற்பனைகளிலும், மாயா ஜாலக் காட்சிகளிலும், மனம் குதூகலித்து, நம் மண்ணுக்கோ, அன்றாட வாழ்க்கைக்கோ, நம் அனுபவங்களுக்கோ உறவில்லாத, அர்த்தமற்ற குப்பைகளையே பார்த்துப் பழகிய காரணத்தால், இவையல்லாத எதையும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. இது வரை எந்த தமிழ் சினிமா நம் வாழ்க்கையோடு ஒட்டி உறவாடி, நாம் அந்த வாழ்க்கையின் அவதியில் ஆழ்ந்திருக்கும்போது பார்த்திராத, பார்க்கத் தவறிய உண்மைகளைச் சொன்னது? வெகு அபூர்வமாக ஒன்றிரண்டு சொல்லலாம். வீடு என்று ஒரு படம். பிறகு? பூமணி எடுத்த ஒரு படம். தலைப்பு மறந்து விட்டது. கருவேலம் பூக்களா? நினைவில்லை. கிட்டத் தட்ட இம்மாதிரித் தான் ஒரு பெயர்.

காலை ஐந்து மணிக்கு ஒரு வண்டி வரும். அதற்காக வேலைக்குப் போக, கிராமத்துச் சிறுமிகள் கையில் ஒரு சின்ன தூக்கு, மதியம் சாப்பாடு கொண்டு போகும் தூக்கோடு காத்திருப்பார்கள். கரிசல் காட்டு தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைக்குச் செல்லக் காத்திருக்கும் சிறுமிகள். எங்களாலும் முடியும் என்று செய்து காட்டிய தமிழ் கலைஞர்கள். அதோடு நாங்கள் வாழ்வது இந்த மன்ணில், எங்கள் கவலைகள் இந்த மண்ணை, எங்களைச் சுற்றியிருக்கும் மக்களைப் பற்றியது, நீங்கள் கவனிக்க, சிந்திக்க மறுக்கும் இந்த என் மக்களின் வாழ்க்கை இது என்று சொல்ல வாழும் தமிழர்கள் கலைஞர்கள் இவர்கள். தமிழர்கள் இவர்கள். இந்த மண்ணில் இருந்திருக் கிறார்கள். கொஞ்ச நாளைக்குத் தம் தலை காட்டியிருக்கிறார்கள்.  இவர்கள் சிந்தனையும், கவலைகளும், வாழ்க்கையும் ஒரு புதிய பாதையை தமிழ் சினிமாவில் உருவாக்க முயன்றன.. இவர்கள் ஏதும் நூறு கோடி முதல் போட்டு, அதை முன்னூறு கோடியாக்கி  லாபம் சம்பாதிக்க நினைத்தவர்கள் இல்லை. தன்னை, தன் சிந்தனைகளை வருத்தும் உலகை, தன் சக மனிதர்கள் காணத் தவறிய, சிந்திக்க மறுக்கும் உலகை அவர்களின் முன் நிறுத்தவேண்டும். அவர்கள் சிந்தனையை பார்வையை இங்கு இந்த வாழ்க்கை பற்றியும் நினைக்கத் தூண்டவேண்டும் என்று நினைத்து அதற்கு ஆகும் செலவில் இவை தயாரிக்கப்பட்டன.

இவர்கள் எண்ணமெல்லாம் தாங்கள் போட்ட பணத்தை எடுத்து அதற்கு மேல் தாம் வாழ கொஞ்சம் லாபமும் வேண்டும். அவ்வளவே. இதில் தவறென்ன? இவ்விருவரில், வீடு படத்தின் இயக்குனர் பாலு மகேந்திராவாவது சினிமா புகைப்பட கலைஞர். சினிமாத் துறையின் பரிச்சயமும் ஆழ்ந்த நுண்ணுணர்வும் கொண்டவர். புதியவர் அல்லர். ஆனால், பூமணி இத்துறையில் எவ்வித பரிச்சயமும் அற்றவர். பம்பாயிலிருக்கும்  FFDC யிலிருந்து கடன் உதவி பெற்று ஒன்றிரண்டு லக்ஷங்களில் படத்தைத் தயாரிக்கும் நிர்ப்பந்தத்தில் உள்ளவர். இந்த ஒன்றிரண்டு லக்ஷம் வடிவேலுவுக்கு இரண்டு நாள் சமபளத்துக்கே காணாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் தனக்கு பரிச்சயமில்லாத துறையில் கால் வைத்து, பணம் கடன் வாங்கி ஒரு அர்த்தமுள்ள இது சினிமாதான் என்று சினிமா என்ற தொழில் நுட்பத்தையும் கலையையும் தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு படத்தைத் தயாரித்துத் தந்துள்ளார.

இவர்கள் எவரையும் இந்த தமிழ் சினிமா உலகம் வாழவிடவில்லை. ஏதோ அருங்காட்சியகப் பொருட்களாக அவ்வப்போது யாராவது இந்தப் பெயர்களைச் சொல்வார்கள். ”தமிழ் சினிமாவிலும் நல்ல படங்கள் வந்து தான் இருக்கின்றன, நீங்கள் தான் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள், தமிழ்சினிமாவைத் தாழ்த்திப் பேசுவதே உங்கள் வேலை” என்று இங்கு என்னைக் கடிந்து கொள்பவர்களுக்கும் ஒரு பட்டியல் வேண்டுமே அந்த பட்டியலை அவர்களுக்குத் தர இவர்கள் அவ்வப்போது நினைவுக்கு வருவார்கள். பின் என்னைக் கடிந்து கொண்டபின் தங்கள் காரியம் முடிந்ததென்று மங்காத்தா இன்னொரு முறை பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்.. படம் பார்த்து வெளியே வரும்போது வாசலில் காமிராவோடு நிற்கும் சன் டிவி நிருபரிடம் தம்பதி சகிதம் “சூப்பர்” என்று முகம் மலரச் சொல்லிச் செல்வார்கள். வந்த காரியம் முடிந்தது என்ற திருப்தியோடு. இதில் எல்லோருக்குமே கலைக்குத் தொண்டாற்றிய திருப்தி. 

இம்மாதிரியான முயற்சிகள் அவ்வப்போது நடந்துகொண்டு தான் வருகின்றன. ஆனால் பல நூறுக்கணக்கில் ஒவ்வொரு வருடமும் ப்டங்கள் தயாரிக்கப்படும் தமிழ் சினிமா உலகில் இப்படியான பாதை மீறிய படங்களும் அது பற்றிச் சிந்திப்பவர்களும் எப்போதாவது ஒன்றிரண்டு பேர் வந்து ஒன்றோ அல்லது இரண்டோ படங்களுக்குப் பிறகு கையொடிந்து மறைந்து விடுவார்கள். எல்லாமே வியாபாரம், லாபம், அதிலும் கொள்ளை லாபம் என்ற ஒரே நோக்கத்தோடு, (க்ளாமர் உலகில் உல்லாசமாக தோளுரசலாம் என்று நினைப்பும் கூடுதல் போனஸாக இருக்கும் கட்டாயமாக) இந்த நினைப்பும் முனைப்பும் தான் தமிழ் சினிமா உலகின் கலாசாரத்தை நிர்ணயித்து வருகின்றன..

யாரும் பணத்தைக் கொட்டி நாசமாக்குவதற்காக இங்கு வரவில்லை. ஒரு படம் எடுக்க பணம் வேண்டும் தான். நிறையவே வேண்டும். அந்தப் பணம் திரும்ப எடுக்கப் படவேண்டும் தான். ஆனால் பணம் கொள்ளை கொள்ளையாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு அதற்கான காரியங்கள் அத்தனையையும் சந்தை நிலவரத்தை, இந்த வாரம் ஹிட்டான் படத்தின் தரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அதே மாதிரி தானும் செய்ய வேண்டும் என்ற மந்தை மனப்பானமை தான் தமிழ் சினிமாவின் மொத்த உருவாகவும், கலாசாரமாகவும் இருந்து வந்துள்ளது.

சிலருக்கு இந்தக் கலாசாரத்தில் மாற்றம் கொணரவேண்டும் என்ற நினைப்பு அடிக்கடி உறுத்திக்கொண்டிருப்பதை சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். வெயில், சுப்ரமணியபுரம், மாயாண்டித் தேவர் குடும்பம் (தலைப்பு சரிதானா?) இவை எதுவும் சம்பிரதாய, வெற்றிப் படமோ, இல்லை டப்பாக்குள் போய் அடைந்து கொண்ட படமோ எதானாலும் சந்தையில் வெற்றியைக் குறிவைப்பவை தான் ஆனாலும், பாதை மீறித்தான் பார்ப்போமே என்று துணிந்த தமிழ் படங்கள், சம்பிரதாய தமிழ்ப் படங்களின் வழியில் எடுக்கப் பட்டவை அல்ல. வித்தியாசமான கதை ,வித்தியாசமான படமாக்கல், வித்தியாசமான பேச்சு மொழி என்ற குறிக்கோளைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. ஆனால், தமிழ் சினிமா சந்தையைப் பற்றியும் இவர்களுக்கு மிகுந்த பயம் உண்டு. சந்தையில் தோற்றுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையும் உண்டு. கொள்ளையாகப் பணம் பண்ணவேண்டாம், ஆனால், போட்ட பணம் வந்து அதற்கு மேல் கொஞ்சம் வந்தாலும் சரி, ஆகையால், சாதாரணமாகச் சேர்க்கும் மசாலாச் சரக்குகளையும் சேர்த்துக் கொள்வோம் என்ற எச்சரிக்கை உணர்வோடு மசாலாக்களையும் சேர்த்து சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டவை. இப்படித் தான் பாரதி ராஜாவும் செய்தார்

இவர்களிடம் ஒரு இரட்டை மன பேதளிப்பு இருந்தது. இவர்கள் எல்லாம் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் இன்னும் நடிகர் இயக்குனர் இத்யாதி பெரியவர்கள் காலம் காலமாக தொடர்ந்து வரும் சந்தை மன்ப்பான்மை, கொள்ளையடிக்கும் மனப்பான்மையின் காரணமாக இவர்களது படம் பற்றிய பார்வையே முற்றிலுமாக. பொதுப் புத்திக்குக்கூட ஏற்காத மசாலாக்கள் காலம் செல்லச் செல்ல யாரும்  கேள்வியே எழுப்பாது ஒப்புக்கொள்ளப்பட்ட மரபில் வந்தவர்கள் அத்தோடு இவர்களுக்கு கொஞ்சம் அவ்வப்போது சந்தேகமும் வந்து தொல்லை படுத்தியது. இந்த மசாலாக்களில் சிலவற்றை புத்திக்கு ஏற்ப செய்தால் என்ன?, சிலவற்றை விட்டுத் தொலைத்தால் தான் என்ன?  வழ்க்கமான பிதற்றலைக் கொஞ்சம் கொஞ்சமாவது குறைத்துப் பார்த்தால் என்ன? என்ற கேள்விகள் அவர்களை உறுத்தின. ஆக இரண்டு உலகங்களில் அவர்கள் வாழ்ந்தார்கள். மனம் ஒரே சமயத்தில் கனவும் காணவும் நனவில் வாழவும்  ஆசைப்பட்டது. அதாவது கண்களை மூடி கனவும் காணவேண்டும். . அதே சமயம் கண்கள் விழித்து நாங்கள் புதுமை செய்பவர்கள், கலைஞர்கள் என்ற பெயரும் சம்பாதிக்க ஆசை. கற்புக்கரசி என்ற பெயரும் வேண்டும். அத்தோடு முடிந்த அளவோ அல்லது வேண்டிய அளவோ ஜாலியாகவும் வாழ்க்கை வாழவேண்டும் என்ற தத்தளிப்பு.

பாரதிராஜா சிவாஜி கணேசனை, நடிகர் திலகத்தை, ”உங்க உலகப் புகழ் பெற்ற நடிப்பைக் கொஞ்சம் மறந்து விட்டு சாதாரணமா இருங்களேன்,” என்றும் சொல்வார். அதேசமயம் வெள்ளை ஆடை உடுத்தி பூச்சரம் சூடி, நளினமாக ஆடிக்கொண்டே தேவதைகள் போல ஆகாயத்தில் கன்னிகைகளையும் மிதந்து வரச் சொல்வார். என்ன செய்ய? டான்ஸ் காட்டியாகணுமே!!. ரொம்பவும் யதார்த்தமாக எடுக்கப்பட்ட,, பெரிதும் பலரால் புகழப்பட்ட முதல் மரியாதை படத்தில், சிவாஜி கணேசனை இயல்பாக நடக்க பேச அறிவுரை கொடுத்தவர், வழக்கமான பாணி, திரும்பச் சொல்கிறேன் வழக்கமான் பாணி காதல் விளையாட்டுக்களை விட்டு விட அவருக்கு மனசிருப்பதில்லை. இந்த பாணி தமிழ்,ஹிந்தி சினிமாவுக்கே ஆன பாணி. வேதம் புதிது படத்தில் என்று நினைவு. ஆற்றின் கரையில் நின்று கொண்டு சிறு வயது பிராமணப் பையன், எதற்கு மூச்சுக்கொரு தடவை நாயக்கரோ/கவுண்டரோ சாதியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்பான். அது அவரை கன்னத்தில் அறைந்தது போலிருந்தது என்று சாதாரணமாக பேச்சில் சொல்வார்கள். பத்திரிகைக் கதைகளிலும் ஒரு வரி அப்படி வரும். அந்தப் பையன் கேட்டதும் சத்ய ராஜ் கன்னத்தில் அறையும் சத்தம் வரும் மூன்று முறை. மூன்று முறையும் அவர் கன்னத்தைத் திருப்பிக் கொள்வார். அந்த சத்தம் வரவேண்டும், சத்ய ராஜும் கன்னத்தைத் திருப்ப வேண்டும்.  சத்தம், கன்னத்தைத் திருப்பல் எல்லாம் வேண்டும். அதுவும் மூன்று முறை வேண்டும். அப்பத் தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ”பையன் கன்னத்தில் அறைஞ்ச  மாதிரில்லா  ஒரு கேள்விய கேட்டுப்புட்டான்? பாரதி ராஜா படமில்லா, பின்னா என்னாங்கறேன். அவர் டச் இருக்காதா?” என்று புரிந்து கொண்டு ரசிப்பார்கள். இதெல்லாம் ஒண்ணாங்கிளாஸ் பாடம் நடத்துகிற மாதிரி. ஒரு தடவைக்கு இரண்டு மூன்று தடவையாகச் சொன்னால் தான் புரியும். மனசில் பதியும்.

வெயில் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக சில காட்சிகள், சில காட்சிகளின் அமைப்பும், பேச்சும் நடிப்பும் வாழ்க்கையில் இயல்புக்கு ஏற்பவே இருந்தன. இருந்தாலும் அனேக இடங்களில் பரத்தும் பசுபதியும் சேர்ந்த காட்சிகள் அதீதமாக நாடகமயப்படுத்தப்பட்டவை. அதிக சத்தம் போடுபவை. சண்டைக் காட்சிகள் மசாலாவுக்காகச் சேர்க்கப்பட்டு அதுவும் அதீத நாடக பாணியில் உருவாக்கபட்டவை. பின்னர் மிஞ்சியது பாட்டும் ஆட்டமும். அதை எங்கு செய்தால் புதுமையாகவும் அதே சமயம் மசாலாவாகவும் இருக்கும்? வேறு எங்கு? சினிமா ப்ரொஜெக்டர் இருக்கும் அறைதான். அங்கு ப்ரொஜெக்டர் வைக்கவும் அதை இயக்குபவர் நிற்கவும் தான் இடம் இருக்கும். ஆனால் இந்த புதுமை//மசாலா இயக்குனர் ஆச்சே?  ஓடி ஆடி ஒளிந்து பாட்டு பாடிக்கொண்டு ஆடும் அளவுக்கு விஸ்தாரமான இடம் இருக்கும். அதுவும் புதுமை தானே?. கொடுமைக்கார தகப்பன்களைப் பார்த்திருக்கிறோம். இருக்கிறார்கள் தான். ஆனால் தன் சின்ன பையனை விருதுநகர் தெரு வெயிலில் ஏதோ கருவாடு காயப்போடுவதைப் போல வருத்தெடுக்கும் காட்சி அப்பத்தானே பாக்கறவங்களுக்கு உறைக்கும்? சொல்றதை நல்லா சொல்லாண்டாமா? தெற்கு மாவட்டங்கள் கதை என்றால் அதில் மடித்துக்கட்டிய வேட்டி, காக்கி ட்ரௌசர் தெரிந்தால் இன்னும் சிறப்பு, அந்தந்த வட்டார தமிழ், பின் கொடூரமான வன்முறை. கார்கள் பறப்பதற்கு பதிலாக, வீச்சரிவாளுக்குப் பதிலாக வேறு வேறு புதிதாகக் கற்பனை செய்துகொள்ளும் வன்முறைக் காட்சிகள்.  இதெல்லாம் தென்மாவட்ட ப்ராண்ட் சினிமா சமையலுக்கான, மிளகாத்தூளு,,, கொத்தமல்லித் தூளு, மஞ்சத் தூளு, தேவையான உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளு,.,கரம் மசாலா இருந்தா சேத்துக்கலாம். நல்லாருக்கும்.
ருசியா எல்லாரும் சாப்பிடுவாங்க.    .


(27) -  மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -இது நான் எழுதுவது 27-வது அத்தியாயம்.  நான் கொஞ்சம் எளிதாகவே, எந்த ஒரு விஷ்யத்தையும் முன்னர் சொல்லியிருந்தாலும், இப்போதைய சந்தர்ப்பத்தில் அதைத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வர திரும்பச் சொல்ல வேண்டியிருந்தால் இரண்டாம் முறை மூன்றாம் முறையும் சொல்லி விடுகிறேன். கடந்த 26 அத்தியாயங்களையும் ஒரு முறை இதைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் பல விஷ்யங்களை நான் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சொல்லி வந்துள்ளதைப் பார்த்திருக்கலாம். இதை ஏன் மறுபடியும் மறுபடியும் திரும்பச் சொல்கிறான் இந்த மனுஷன் என்று கூட பலர் நினைத்திருக்கலாம். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்று கேட்பதற்காக, அது பற்றி சிந்திப்பதற்காக அல்ல, தாம் அனுபவித்துவரும் சந்தோஷத்தைக் கெடுப்பதற்காகவும், தாம் போற்றி புகழ்ந்து வரும் படங்களையும், நக்ஷத்திரங்களையும் அவமானப் படுத்துவற்காகவே எழுதுவதாக சிலருக்கு கோபம் எழுகிறது. இது போல நிறைய இங்கு பார்க்கிறேன். உதாரணத்திற்கு ஒன்று. நான் கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தேன்.

”யாரும் பணத்தைக் கொட்டி நாசமாக்குவதற்காக இங்கு வரவில்லை. ஒரு படம் எடுத்து பணம் பண்ண வேண்டும் தான். நிறையவே வேண்டும். அந்தப் பணம் திரும்ப எடுக்கப் படவேண்டும் தான். ஆனால் பணம் கொள்ளை கொள்ளையாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு அதற்கான காரியங்கள் அத்தனையையும் சந்தை நிலவரத்தை, இந்த வாரம் ஹிட்டான படத்தின் தரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அதே மாதிரி தானும் செய்ய வேண்டும் என்ற மந்தை மனப்பான்மைதான் தமிழ் சினிமாவின் மொத்த உருவாகவும், கலாச்சாரமாகவும் இருந்து வந்துள்ளது.

இதற்கு உடனே எதிர்வினை எழுதுபவர் சொல்கிறார்: ஐயா திரைப்படம் எடுக்க வருவது அனைவரும் சம்பாதிக்க தான். பிறகென்ன இங்கே வந்து சேவையா செய்வது? சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் ஒரு திரைப்படத்தை நம்பி இருக்கிறது. அவர்கள் அனைவரும் சாப்பிட நிச்சயம் வணிக சினிமா தேவைப்படுகிறது. ( பிரகாஷ் on Thursday, 22.09.11 @ 21:01pm)

நீ என்னவேண்டுமானாலும் எவ்வளவு காரணங்களோடும் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டு போ. அதை நான் கேட்டுக்கொள்ளத் தயாரில்லை. நீ எதுவும் எழுதாதது போலவே பாவனை செய்துகொண்டு நான் பழைய நிலையிலேயே தான் உழன்று கொண்டிருப்பேன் என்கிற மனோபாவம். இது. இதை நாம் எதுவும் செய்ய முடியாது. ஃநான் யாருடைய சந்தோஷத்தையோ கெட்டிப்பட்ட மனோபாவங்களையோ மாற்றியே தீருவது என்ற சபதம் எடுத்துக்கொண்டு இங்கு பிரசாரம் செய்ய வரவில்லை. இங்கு சமூகத்தில், கலைகளில் தொடர்ந்து நடப்பதும், சமூகத்தின் உணர்வுகளும், ரசனையும் ஆபாசப்படுத்தப் படுவதும் சகிக்காமல் எழுதுகிறேன். அவரவருக்கு எது சந்தோஷம் தருகிறதோ அதில் அவர்கள் ஆழ்ந்திருப்பது எனக்கு வருத்தம் தருவதானாலும் அவர்கள் சந்தோஷங்களைக் நான் கெடுக்க வரவில்லை. அவர்கள் இவற்றையெல்லாம் ஏற்க பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அபபடி பழக்கப் படுத்துகிறவர்கள், சமூகத்தை நாசப்படுத்துவதுமல்லாமல் சுய லாபக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நான் சொல்ல எனக்கு உரிமையும் சுதந்திரமும் உண்டு. கேட்பதும் அல்லது உதறித் தள்ளி நகர்ந்து செல்வதும் அவரவருக்குள்ள சுதந்திரமும் உரிமையுமாகும் ஆனால் ஒன்று. நான் எழுதுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆதலால் என கருத்துக்களை எதிர்கொள்ளாமல், உங்களுக்கு பழக்கப்படுத்தியதையே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள் என்பது படிப்பவர்களுக்குத் தெரியும்

ஒருவர் சொன்னார்: நீங்கள் சொல்கிறபடி வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும், வாழ்க்கைப் பிரசினைகள் தான் சினிமாவில் கையாளப்படவேண்டும், வாழ்க்கையை மீறிய கனவுலகத்தையே சிருஷ்டிக்கக் கூடாது என்று சொல்வீர்களானால், அதற்கு சினிமா எதற்கு? அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டித் தான் பார்க்கவேண்டும், அது தான் சினிமாவா என்று கேட்டார். ஒருவர். இப்போது தேடிப் பார்த்து அவர் யார் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரும் சினிமாத் துறைக்குச் சம்பந்தமில்லாத, அது பற்றி எதுவும் தெரியாத, கலை உணர்வே இல்லாத கொள்ளை லாபமே குறியாகக் கொண்டவர்களால் பழக்கப்படுத்தப்பட்டவர் இவர். இவர் மாத்திரமல்ல. தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோருமே தான். ஏதோ லம்பாடி இனக்குழு நடனமாட மச்சுப்பிச்சுவைத் தேடி ஒருவர் போய் அங்கு ஐஸ்வர்யா ராயையும், ரஜனிகாந்தையும் இன்னும் நாற்பது பேரோடு ஆடச் சொன்ன தமிழ் வாழ்க்கைப் பிரசினை என்ன? அது என்ன தமிழ் ரசனை? என்ன தமிழ் மக்கள் பற்று? என்று நாம் கேட்பதில்லை. இப்படியெல்லாம் கேட்காமல் சென்னையின் கொளுத்தும் வெயிலில் அன்று சம்பாதித்த ரூபாய் 100-ஓ 150-ஐயோ டிக்கட் கௌண்டருக்கு முன்னால் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வைத்திருப்பது பழக்கப் படுத்தப்பட்டதால் தான். ஏழை என்று 20 கிலோ அரிசி அன்று கொடுக்கப்படாவிட்டால் கோபம் வருகிறது. ஆனால் இங்கு 150 ரூபாய் கொடுத்து வெயிலில் வறுபட்டாலும் சந்தோஷம் தான்.

எ[ப்படி யெல்லாம் நம் வாழ்க்கை ஆபாசப்படுத்தப் பட்டு விட்டது!, எப்படியெல்லாம் நம் உணர்வுகளும், மூளையும் சலவை செய்யப் பட்டு விட்டன!. ஆச்சரியம் தான். பரிதாபம் தான். எல்லாவற்றையும் விட என்னைப் பொறுத்த மட்டில் அது ஒரு சோகம். பாரிய சோகம் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது தான் சினிமாவா என்று கேட்டவர், கொஞ்சம் யோசித்திருந்தால், பின்னோகிப் பார்த்திருந்தால், வீட்டுக்குள் நடப்பதையும் தான் தமிழ் சினிமா காட்டுவதாக பாவனை செய்துள்ளது. காட்சிகள் வீட்டுக்குள் நடப்பதாகத்தான் தயாரித்தவர்களும் சொன்னார்கள். நாமும் அப்படி எண்ணித்தான் பார்த்தோம். ஆனால் இவை யார் வீட்டிலும் நடப்பதல்ல. ஸ்டுடியோவில் வீடாக செட் அமைத்து அதில் சிலரை நிற்க வைத்து வசனம் பேசச் செய்த காட்சிகள் தான் அவை. சாதாரணமாக வீட்டில் வாழும் வாழ்க்கையை, மனிதர்களை, அவர்கள் ஜீவனைக் கூட சொல்லமுடியாத, நேர்மையாகக் காட்சிப் படுத்த முடியாதவர்கள் நாம். இந்த்ப் பொய்மையை நாமும் இத்தனை வருஷ காலமாக பார்த்து, ரசித்து, புகழ்ந்து, அதை ஒரு மரப்பாக வேறு பே4ணி காத்து வருகிறோம்.  எந்த சினிமாவில், எந்த வீட்டில் நமக்குக் காட்டப்பட்ட மனிதர்களும், வீடும், அவர்களிடையேயான பேச்சும் நம் வாழ்க்கையின் நம்பகத் தன்மையைப் பெற்றிருந்தது? இல்லாத வாழ்க்கையை, இல்லாத மனிதர்கள், இல்லாத தோரணையில் இல்லாத பேச்சை, மிக அபத்தமான நாடகமாக, தமிழ் நாடகத்துக்கே உரிய அபத்தத்துடன் நாம் சினிமாவில் பார்த்து வருகிறோம். அன்றாட வாழ்க்கையை, நாம் தினம் எதிர்கொள்ளும் மனிதர்களைச் சினிமாவில்காட்டியதாகப் பெயர் பெற்ற இயக்குனர் சிகரத்தை, ஒருவர் “என்னிக்கு ஐயா நீங்க நாடகத்தை நிறுத்தி சினிமா எடுக்கப் போறீங்க? என்று கேட்டு விட்டார். உடனே பாய்ந்தது ஒரு படை பத்திரிகை அலுவலகத்துக்கு.

சமீபத்து உதாரணத்தைச் சொல்கிறேன். வெற்றிமாறனின் படம் .ஆடு களம் .ஊரெல்லாம் இரவு பூராவும் சுற்றி விட்டு வீட்டுக்கு வருகிறான். அந்தக் காட்சி அமைப்பை நினைவு கொள்ளலாம். ஒரு சின்ன சந்து போல இருக்கும் நுழைவு. உள்ளே போகும் மகனைக் கடிந்து கொள்கிறாள் தாய். அந்தக் காட்சியும், பேச்சும்,. தாயும் மகனும் அவர்கள் வீட்டினுள் நடப்பும் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான். குடிசை தான். முன் தின்னையில் கைலியை மடித்துக்கட்டி குந்தி உட்கார்ந்திருப்பவன் டீயை ஒரு வாய் குடித்துத் துப்புகிறான். பின் உட்புறம் பார்த்து  அம்மாவைக் வைகிறான். அம்மா திருப்பி அவனைத் திட்டுகிறாள் அந்த காட்சியில் அவனது பொறுப்பில்லாத் தத்தாரித் தனமும், அம்மாவின் கஷ்டங்கள் விட்டுக் கஷ்டங்கள் அறியாது அம்மாவைக் கண்டபடி திட்டுவதும் நம் தமிழ் நாட்டு வாழ்க்கைக் காட்சிகள். எல்லாமே உண்மை. எதுவும் ஜோடிக்கப் படவில்லை. இந்த மாதிரியான ஒரு காட்சியை நான் தமிழ் சினிமாவில் காண இத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது.

வெற்றி மாறனின் படம் பெரும்பாலும் ஒரு நல்ல முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமா ரசிகனுக்கு சண்டைக் காட்சிகள் இல்லாவிட்டால் ரசிக்காது. அது சேவல் சண்டைக் காட்சிகளால் அந்த ஆசையும் நிறைவேற்றப் படுகிறது. அதை நாமும் ஏற்ற்க்கொள்ளலாம். கதையே சேவல் சண்டையைத் தான் மையமாகக் கொண்டுள்ளது.வெற்றி மாறனின் படம் பெரும்பாலும் ஒரு நல்ல முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமா ரசிகனுக்கு சண்டைக் காட்சிகள் இல்லாவிட்டால் ரசிக்காது. அது சேவல் சண்டைக் காட்சிகளால் அந்த ஆசையும் நிறைவேற்றப் படுகிறது. அதை நாமும் ஏற்ற்க்கொள்ளலாம். கதையே சேவல் சண்டையைத் தான் மையமாகக் கொண்டுள்ளது. எந்த காரை, ஜீப்பை பறக்கவிடலாம் என்று அலையவில்லை. யாருடைய பேச்சும் இயலபான ஒன்றே. அதை இயலபாகவே பேசுகிறார்கள். தமிழ் சினிமாவில் எல்லா டயலாகும் இரண்டு இர்ண்டு அல்லது மூன்று வார்த்தைகளாக வெட்டி வெட்டியே பேசுவார்கள். இவர்களுக்கு இந்த வியாதி எங்கேயிருந்து வந்தது என்று நமக்குத் திகைப்பாக இருக்கும். நாடகத்தில் பக்கத்தில் மறைந்திருந்து ப்ராம்ப்டர் இரண்டு இரண்டு வார்த்தைகளாகத்தான் நம்ம ராஜ பார்ட்டுக்கு வசனம் சொல்வார். ஒரு முழு வாக்கியத்தையும் சொல்லி அவர் பேசிவிட முடியாது. அந்தக் கண்றாவி தான் இன்று 70 வருடங்களாகியும் தமிழ் சினிமாவை விட்டு நீங்க மறுக்கிறது. தனுஷை யாரும் சினிமா கதா நாயகன் என்று சொல்ல மாட்டார்கள். ரிக்‌ஷாக் காரணானாலும் எம்.ஜி.ஆருக்கு பாண்டும் ஷர்ட்டும் பளபளக்கும் பட்டில் தான் வேண்டும். இல்லையெனில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இப்படி ஒவ்வொருவருக்கு ஒன்று. நம் எல்லா சினிமா கதாநயகர்களும் கதாநாயகிக்ளும் தம்மை தாமாகத் தான் சினிமாவில் காட்டிக்கொள்வார்கள். உலக நாயகன் கமல் சாரையும் சூப்பர் ஸ்டார் ரஜனி சாரையும் சேர்த்து. ஆனால் தனுஷையும் ஒரு சில நிமிடங்களுகாவது குத்தாட்டம் போட வைத்துவிட்டுத் தான் தீர்வது என்று இருந்திருக்கிறார்கள்.

காதல் இல்லாது ஒரு தமிழ் சினிமா படம் சாத்தியமா என்ன? இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்தியா பூராவும் இதே கதை தான், அதாவது வியாபாரத்தை முன் வைத்தே எடுக்கப் படும் படங்களில். சேவல் சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதையே ஆனாலும், அதில் இருக்கும் வாலிபன் ஒருவனுக்கு அங்கு இருக்கும் பெண்மேல் ஆசை வராதா என்ன? வரும் தான். அந்த வாழ்க்கைப் பகுதியை விட்டு விடலாம் என்றாலும் அது சேர்க்கப்பட்டாலும் பெரிய தவறு இல்லை தான். ஆனால் அது வெள்ளை வெளேரென்று இருக்கும் ஒரு சட்டைக் காரியாகத் தான் இருக்கவேண்டும் அவளும் கொளுத்த அழகியாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது சந்தையில் விலை போக வேண்டுமே என்ற நினைப்புத் தான் நிச்சயமாக. அதுக்கு ஒரு டாப்ஸியோ, பாப்ஸியோ (இந்தப் பெயர்கள் எனக்கு சரிவர நினைவிலிருப்பதில்லை) அவளை வடக்கேயிருந்து தான் இறக்கு மதி செய்யவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் இன்றைய கால கட்ட சந்தை விதித்துள்ள விதி. இந்த விதி எப்படியோ உள்ளே நுழந்து விட்டது. அதுவும் வடவர் ஆதிக்கத்தை மூன்று தலைமுறையாக எதிர்த்து வந்த இயக்கம் அரசில் மாத்திரம் இல்லை, சமூகத்தின் குணமாகவே ஆக்கிவிட்ட இன்றைய கால கட்டத்தில் தமிழ் சினிமா கதாநாயகிகள் எல்லாம் வடக்கத்திக் குட்டிகளாகவே இருக்கவேண்டும் என்ற நியதி திராவிய கழகங்கள் ஆட்சி தொடர்ந்து 50 வருட காலம் ஆகிவிட்டபிறகு வந்து ஆட்சி செய்வது, அதுவும் அவ்வியக்கத்தின் 86 வயது மூத்த தலைவர் இதற்கு எதிராக முணுமுணுத்ததாகக் கூட தகவல் இல்லாது போனது ஒரு விசித்திரம் தான். நான் காணும் தொலைக் காட்சி விழா பதிவுகளை நம்புவதென்றால் அவருக்கு இதில் ஆட்சேபம் என்ன, அவரை இந்த மாற்றம் மகிழ்விக்கிறது என்று கூடத் தோன்றுகிறது.

சரி சட்டைக்காரியின் மேல் காதல் ஏற்படக்கூடாதா? அப்படி ஒன்றும் விதி இல்லை. ஆனால் அவள் சினிமா கதாநாயகி மாதிரி தான் இருக்க வேண்டுமா? கொஞ்சம் நம்பும் படியான தோற்றம் இருக்கக் கூடாதா? தனுஷை நம்பி படம் எடுக்கவில்லையா? தனுஷ் மாதிரி ஒருவர் நம் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளதும், அவருக்கு தன்னைப் பற்றிய கதாநாயக பிரமைகள் ஏதும் இல்லை என்பதும் அறிய மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. அவரை நம்பி படம் ஓடவில்லையா? தென்மேற்கு பருவக் காற்று படத்தில் (இதைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்) இரண்டு பெண்கள் வருகிறார்கள். இளம் பெண்கள் தான். ஒருத்தி மேல் காதல். இன்னொருத்தி அவன் தாய் நிச்சயித்துள்ள பெண். இருவரும் கிராமத்தில் நாம் காணும் சாதாரணப் பெண்கள் என நம்மை நம்ப வைக்கவில்லையா? அவர்கள் அனுஷ்ய்காவையும் ஷ்ரேயாவையும் தேடிப் போகவில்லையே?

இப்படி இன்னும் சில சொல்லலாம் தான். தனுஷின் குருவாக நாம் காணும் ஈழத்துக் கவிஞர் ஜெயபாலன் மிகச் சிறப்பாகத் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதைச் செய்திருக்கிறார். மிக நன்றாக என்று சொல்லவேண்டும். ஆனால் கடைசியில் இத்தனை வன்மமும், குரூர சதி மனமும் இருக்குமா என்பது சந்தேகம் தான். தேவையுமில்லை. இப்படித்தான் அதிகம் நாடகத் தன்மையேற்றி விடுகிறார்கள், ரசிகர்களைத் திருப்திப் படுத்த. தனுஷும் டாப்ஸியும் இரவில் பேசி நடந்து வரும் காட்சியிலும் இரவில் மைதானத்தில் கூட்டத்தைக் காணும் காட்சியிலும் ஒளி அமைப்பு நாடகத் தன்மை கொண்டது.

இருப்பினும் நான் அதிகம் வரவேற்கும் மாற்றங்களியும், சந்தைக்குத் தயாராக்க மிகக் குறைவான சமரசங்களையும் கொண்ட படம் ஆடுகளம். இதை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது ஏதோ தவறிப் போய் நடந்து விட்ட காரியம். மங்காத்தாவும், சிங்கமும் காணும் இடத்தில் ஆடுகளம் இருப்பது விசித்திர நிகழ்வு தான். இதற்கு தேசீய விருது கிடைத்திருப்பது இப்படத்தின் பொறுப்பாளர்களை உற்சாகப் படுத்தும் என்று நினைத்தேன்.ஆனால், வெற்றி மாறன் உத்தேசித்திருக்கும் அடுத்த படம் அந்த நம்பிக்கையை எனக்குத் தரவில்லை..சில சமயம் பரிட்சையில் நமக்கே தெரியாமல் சரியான பதிலை எழுதி விடுவதில்லையா?  .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R