12-ம் அத்தியாயம்: மொட்டைக் கடிதம்

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிபத்மாவின் தோழி தங்கமணியை நாம் ஏற்கனவே பம்பலப்பிட்டி எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரிலும், பல்கலைக் கழகத்துக்கு முன்னாலிருக்கும் நிழல் படர்ந்த பஸ் தரிப்பிலும், பல்கலைக் கழக இரசாயன ஆய்வு கூடத்திலும் சந்தித்திருக்கிறோம். இன்று வத்தளையிலுள்ள அவள் வீட்டில் அவளைச் சந்தித்து வருவோமா? தங்கமணி வசித்த வீடு வத்தளை மெயின் வீதியில் பஸ்தரிப்புக்குச் சமீபமாக அமைந்திருந்தது. அவள் அவ்வீட்டில் தன் தாய், தந்தையருடன் வசித்து வந்தாள். அவளது ஒரே தம்பியான சிங்காரவேல் வவுனியாக் கச்சேரியில் இலிகிதனாகக் கடமையாற்றினான். அப்பா கொழும்பில் ஏதோ கம்பெனியில் வேலை. வீட்டில் அம்மாவைத் தவிர, பேச்சுத் துணைக்கு ரெஜினா இருந்தாள். ரெஜினா கொழும்பில் ஒரு வியாபாரத் தலத்தில் சுருக்கெழுத்து - தட்டெழுத்து வேலை செய்பவள். தங்கமணி வீட்டில் பணம் செலுத்தி "போர்டராக" இருந்தாள். ரெஜினாவுக்கும் தங்கமணிக்கும் நல்ல சிநேகிதம். பொழுது போகாத நேரங்களில் பேசிக் கொண்டிருப்பதற்கும் விடுமுறைத் தினங்களில் சினிமாவுக்குப் போய் வருவதற்கும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தார்கள்.

நாம் தங்கமணியைச் சந்திருப்பதற்கு சென்ற தினம் மகா சிவராத்திரி விரத நாள். விடுமுறையும் கூட. ரெஜினாவும் வீட்டிலிருந்தாள். தங்கமணி வீட்டு விறாந்தையில் ஒரு நாற்காலியில் தனது கிமோனாவில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தாள். ரெஜினாவோ விறாந்தைக்கு முன்னால் முற்றத்தில் தன் கிளைகளை ஒரு தட்டுப் போல் அலைப்பரப்பி வளர்ந்திருந்த ‘ஜாம்’ மரத்தில் ‘ஜாம்’ பழங்களைத் துள்ளித் துள்ளிப் பிடுங்கிக் கொண்டிருந்தாள். நன்றாய்க் கனிந்து வாய்க்கு ருசியான பதத்தில் பழுத்திருந்த கனிகள் கிடைத்த போது அவற்றைத் தன் வாயில் இட்டுக் கொண்டும், சாப்பிட பதமாகக் கிடைத்தவற்றை "இந்தா தங்கம், உனக்கு பிடி!" என்று தன் அன்புத் தோழிக்கு அவற்றை வீசிக் கொண்டும் நர்த்தனமாடினாள் அவள். ரெஜினா தங்கமணியைப் போல் கால்கள் வரை நீண்ட கிமோனாவை அணியாமல் கவுனே அணிந்திருந்தாள். அவள் ஒரு புள்ளி மான் போல் துள்ளித் துள்ளிக் கனி பறித்த காட்சி வீதியில் போய்க் கொண்டிருந்த இளைஞர்களின் கண்களுக்குப் பெரு விருந்தாயிருந்தது. அவளது உருண்டு சிவந்த கால்களின் எழில் அவ்வாறு வீதி இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்தது, தங்கமணிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால் அதை வெளிக்குக் காட்டாமல் வேறு காரணத்துக்காக அவளை அழைப்பது போல் "ரெஜி! இங்கே வா. நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்!" என்று கூறினாள்.

"இரு தங்கம். இன்னும் கொஞ்சம் பழங்கள் பிடுங்கி விட்டு வருகிறேன். இன்றைக்கு முழு நாளும் விடுமுறைதானே? பேசிக் கொண்டேயிருக்கலாம்"

"அது சரி, நீ பழத்தைப் பிடுங்கத் துள்ளும் பொழுது உன்னுடைய சட்டை குடை மாதிரி காற்றிலே விரியுது"

"அப்படியா? அப்படியானால் வெகு அழகாயிருக்குமே?"

"அழகாயிருக்குது. ஆனால் ரோட்டிலே போறவர்கள் பார்க்கிறார்கள்!"

"பார்க்கட்டுமே, எங்களுக்கென்ன நட்டம்"

தங்கமணிக்கு ரெஜினாவின் துடுக்குப் பேச்சுப் பிடிக்காவிட்டாலும் "வாடி ரெஜி, காய்களைப் பிடுங்கி வீணாக்காமல் பழுக்க விடு. சரியாக நாளை விட்டு அடுத்த நாள் பதமாய்ப் பழுத்திருக்கும்." என்றாள்.

"காயா?" என்றாள் ரெஜினா ஆச்சரியத்துடன். எண்ணி மொத்தம் முப்பது கனிந்த ‘ஜாம்’ கனிகளை அவள் இது வரை நன்றாகச் சுவைத்துச் சப்பிட்டிருந்ததே அவளது ஆச்சரியத்துக்குக் காரணம்.

"ஓகோ, அப்படி என்றால் நீ பழங்களா சாப்பிடுகிறாய்! அப்போது பழத்தை எல்லாம் நீ சாப்பிட்டு விட்டுக் காய்களை எனக்கு எறிகிறாய், அப்படித் தானே?"

ரெஜினா தன்னை மீறி வந்த சிரிப்பை முகத்தைத் திருப்பி உதட்டைப் பிதுக்கி அடக்கிக் கொண்டு, "சீ! தங்கம், அப்படிச் செய்வேனா? இந்தா உனக்கொரு நல்ல பழம்" என்று கையுள் மறைத்து வைத்திருந்த செக்கச் செவேலென்று கனிந்த மூன்று பழங்களில் ஒன்றைத் தங்கத்தை நோக்கி வீசினாள்.

ரெஜினா தங்கமணியைப் போல் கால்கள் வரை நீண்ட கிமோனாவை அணியாமல் கவுனே அணிந்திருந்தாள். அவள் ஒரு புள்ளி மான் போல் துள்ளித் துள்ளிக் கனி பறித்த காட்சி வீதியில் போய்க் கொண்டிருந்த இளைஞர்களின் கண்களுக்குப் பெரு விருந்தாயிருந்தது. அவளது உருண்டு சிவந்த கால்களின் எழில் அவ்வாறு வீதி இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்தது, தங்கமணிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.சில சமயங்களில் மிகப் பெறுமதியான பொருள்களைக் கூட சந்தோசமாகத் தியாகம் செய்ய முன்வரும் பலர் இப்படிப்பட்ட அற்ப பொருள்களை இன்னொருவருக்காகத் தியாகம் செய்ய முடியாது இடர்ப்படுவது எவ்வளவு வியப்பானது? நன்றாகக் கனிந்த அந்தப் பழத்தைத் தங்கமணிக்குக் கொடுக்க வேண்டி வந்ததே என்ற நினைவு வெகு நேரமாக ரெஜினாவின் உள்ளத்தை ஓரளவு அரித்துக் கொண்டிருந்தது. எனவே அந்த நட்டத்தை ஈடு செய்ய ‘ஜாம்’ மரத்தின் அடர்ந்த இலைகளுக்கிடையே பவளமணி போல நன்றாகக் கனிந்த ஜாம் பழங்களைத் தேடிக் கொண்டிருந்தாள் அவள். கடைசியில் கண்னுக்கு ஒரு கனிந்த பழமும் தென்படாத நிலை வந்ததும், வீட்டுப் படியில் குதித்தேறிக் காலில் இருந்த மணலில் வாசலில் இடப்பட்டிருந்த தென்னந்தும்புத் தடுக்கிலே தட்டி விட்டு விறாந்தைக்கு வந்து தங்கமணியின் நாற்காலிக்கு முன்னால் கிடந்த இன்னொரு நாற்காலியில் "அம்மாடி" என்று ஆயாசத்துடன் விழுந்தாள் அவள்.

தங்கமணி, அன்று விரதம் ஆனதால் காலையிலே குளித்து முழுகித் தலையை வழக்கம் போல் அழுத்திச் சீவாது கோடாலி முடி போட்டிருந்தாள். வழக்கமாக அவள் நெற்றியில் தீட்டப்பட்டு விளக்கும் ஆச்சரியக் குறி போன்ற திலகத்தையும் அன்று காணோம். திருநீற்றை மட்டும் நெற்றியில் சற்று அதிகமாக அப்பிக் கொண்டிருந்தாள்.

ரெஜி அவன் முகத்தை ஏற இறங்கப் பார்த்த வண்ணமே "என்ன தங்கம்! முக்கியமான விஷயம் ஒன்று பேச வேண்டுமென்றாயே, சொல்லேன். இப்போது நான் ‘பிறீ’ என்றாள்.

தங்கமணி சுற்று முற்றும் பார்த்துவிட்டு "அம்மா எங்கே!" என்றாள். "அடுக்களையிலே வேலைக்காரியோடு, செவிடியோடு பேசுவது போல சப்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். உமக்குக் காது கேட்காதோ?" என்றாள் ரெஜினா.

தங்கமணி அதற்குப் பதிலளிக்காமல், "வந்து... நான் சொல்லப் போகும் விஷயம் பரம் இரகசியம். இந்த உலகத்தில் உனக்கு மட்டும் தான் சொல்லுவேன். யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தால் தான் கூறுவேன்" என்றாள்.

ரெஜினா, "அப்படி வாக்குறுதி அளிக்க என்னால் முடியாது. எந்த இரகசியத்தையும் ஓர் ஆளுக்கு மட்டும் நான் கட்டாயம் சொல்லுவேன். அது உமக்கு ஆட்சேபணை இல்லை என்றால் சொல்லும்" என்றாள்.

"யாருக்கு"

"என் போய் பிரெண்டுக்கு!... காதல் மன்னனுக்கு!"

போய் பிரெண்ட்! காதல் மன்னன்!

தங்கமணிக்கு உள்ளத்தை என்னவோ செய்தது. எல்லோருக்கும் ஒரு போய் பிரெண்ட், காதல் மன்னன்! இந்தக் காலத்துப் பெண்கள் எப்படியோ ஒவ்வொருவனைப் பிடித்து விடுகிறார்கள்! காலம் கெட்டுப் போய்விட்டது. ஆனால் என் விஷயத்தில் மட்டும் தான் நாசமாய்ப் போன காலம் கெட மாட்டேன் என்கிறது. எத்தனையோ பேர் தங்கமணியைப் பார்த்து பல்லிளிப்பது மெய்தான். ஆனால் உருப்படியானவன் ஒருவனும் இன்னும் பல்லை இளிக்காததுதான் தங்கமணியின் குறை. உத்தியோகமில்லாதவனும், உருக்குலைந்தவனும் உதவாக்கரைகளும் தான் அவள் பாதையில் வந்து கொண்டிருந்தார்கள். ஆகவே தங்கமணி, "ஓடு மீனோட உறுமீன் வருமளவும்" கொக்கு போல் வாடி இருக்க வேண்டியிருந்தது. இன்றைய விரதம் இது விஷயங்களில் நல்ல பலனைத் தருமோ என்னவோ? இதுதான் விரதம் அனுட்டிப்பதின் நோக்கம். பரீட்சையில் சித்தி பெறுவது தான் என்று அவள் உத்தியோக பூர்வமாக அப்பா, அம்மா, வேலைக்காரி, ரெஜினா ஆகியோர் முன்னிலையில் பகிரங்கப் பிரகடனம் செய்திருந்த போதிலும், அதன் அந்தரங்கமான நோக்கங்களில் தனக்கு ஒரு நல்ல கணவன், அல்லது காதலன் கிடைக்க வேண்டுமென்பதுமொன்றாகும். எமது புராணங்களின் படி உலக நாயகியாகிய உமாதேவியே தனக்குக் காதலன் வேண்டுமென்று விரதமிருந்திருக்கிறார். ஆகவே தங்கமணி அதற்காக இரகசிய விரதம் காத்ததில் தவறில்லையா?

ரெஜிக்கு தன் காதலனைப் பற்றி இடம்பமாகப் பிரகடனம் செய்ததை எப்படியோ ஒருவாறு தாங்கிக்கொண்டு அவருக்குச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் வேறு யாருக்கும் சொல்லுவதில்லை என்று வாக்குறுதி கொடு" என்றாள் தங்கமணி.

ரெஜினா அவ்வாறே வாக்குறுதி அளித்துவிட்டு, "அவருக்கும் நான் சொல்ல மாட்டேன். சும்மா உன்னை மிரட்டினேன்!" என்றாள் கொஞ்சலாக.

தங்கமணி, "சரி ரெஜினா, சொல்லுகிறேன்." என்று ஆரம்பித்தாள். முதலில் எப்படி விஷயத்தைத் தொடங்குவது என்று தெரியாது சிறிது நேரம் திக்கு முக்காடி வீட்டுக் கடைசியில் ஒரு மாதிரி விஷயத்துக்கு வந்து சேர்ந்தாள் அவள்.

"ரெஜி, உனக்குப் பத்மாவைத் தெரியும்தானே?"

"எந்தப் பத்மா? உன்னுடைய வார்சிட்டி மேட் நீச்சல் ராணி! நீ சொல்லியிருக்கிறாய். பத்திரிகைகளில் படத்தையும் பார்த்திருக்கிறேன்."

"ஆம். அந்தப் பத்மா தான். அந்தப் பெண் எங்களுர்ப் பையன் ஒருவனைக் கெடுத்துக் கொண்டு வருகிறாள்!"

"என்ன செய்கிறாள்?"

"காதல்..."

"காதல் கெடுதியா? அப்போது நீ என்னையுமல்லாவா கண்டிக்கிறாய்! தங்கம், நீ சரியான ஆள்!"

"இல்லை ரெஜி. நீ உன் தரத்திற்கேற்ற பொருத்தமான ஆளைத் தெரிந்தெடுத்துக் காதல் செய்கிறாய். அதிலே பிழையில்லை. ஆனால் பத்மா அப்படியல்ல..."

"அப்படியா... சொல்லு சொல்லு."

தங்கமணி சொல்ல ஆரம்பித்தாள்.

"எங்களூரிலேயே பெரிய குடும்பம் சேர் நமசிவாயம் குடும்பம். அவர்கள் பரம்பரையில் இன்றிருப்பவர் சிவநேசர். இலங்கையிலேயே பெரிய பணக்காரர், படிப்பாளி, சாதிமான், அவருடைய ஒரே மகன் ஸ்ரீதர். ரொம்ப அழகாயிருப்பான். அவனைத்தான் குலுக்கி மினுக்கி ஏமாற்றி வருகிறாள் பத்மா. கொட்டாஞ்சேனைச் சாக்கடையில் பிறந்த அவள் அப்படிச் செய்ய நாம் இடமளிக்கலாமா?"

ரெஜினா, "என்ன சிவநேசர் மகனைக் காதலிக்கிறாளா பத்மா? சிவநேசர் மிகவும் பெரியவர் ஆச்சே! நானும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் எப்படிப் போனாலும் நமக்கென்ன? நம்முடைய வேலையை நாம் பார்த்து கொண்டிருக்க வேண்டியதுதானே?" என்றாள்.

தங்கமணி அதற்குப் பதிலாக பத்மா -ஸ்ரீதர் காதல் சம்பந்தமாகத் தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூறினாள். நான் அவளை எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரில் ஸ்ரீதரோடு சந்தித்ததையும் பஸ்தரிப்பில் ஸ்ரீதரின் பொய் வேடத்தைத் தான் பத்மாவுக்கு நிரூபித்துக் காட்டியதையும் கூறினாள்.

"ஸ்ரீதர் தன்னை ஏமாற்றி விட்டாள் என்றறிந்ததும் பத்மா பஸ் தரிப்பிலேயே அழ ஆரம்பித்து விட்டாள். ஆனால் நாலு நாள் போவதற்கிடையில் எப்படியோ விஷயங்களைச் சமாளித்துக் கொண்டு மீண்டும் அவனோடு வெட்கமில்லாமல் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு அலைகிறாள். அதற்கிடயில் நீச்சல் ராணிப் போட்டி வேறு! அரை நிர்வாணமாக உடுத்திக் கொண்டு எப்படித்தான் அவளால் அந்த ஆண்பிள்ளைகளுக்கு முன்னால் போய் ஆட்டம் போய் ஆட்டம் போட முடிந்ததோ எனக்குத் தெரியவில்லை. நீரும் நானும் இவைகளுக்குப் போவோமா?..." என்றாள் தங்கமணி.

"ஏன் போனாலென்ன? நான் போவன். ஆனால் எங்களப்பாவுக்குத் தெரிந்தால் கொன்று போடுவார். உமக்கோ நீச்சலுடை நன்றாயிருக்காது. உம்முடைய உடம்பின் அளவுக்கு உமது கால்கள் மிக மெலிவு. ஆனபடியால் நீர் இவைகளுக்குப் போகாமலிருப்பது புத்தி தான்" என்றாள் ரெஜினா.

தங்கமணிக்கு ரெஜியின் பேச்சு ஓரளவு ஆத்திரத்தை ஊட்டியதாயினும் அதை வெளிக்குக் காட்டாமல் உள்ளே குமைந்து கொண்டு "அதில்லை ரெஜி, இந்தப் பத்மா - ஸ்ரீதர் ஜோடியை அடியோடு பிரிப்பதற்கு நான் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறேன். பார் நான் செய்யப் போகிற வேலையை" என்றாள்.

"என்ன செய்யப் போகிறாய்"

"ஸ்ரீதரின் அப்பாவுக்கு இந்தக் காதல் பற்றிய எல்லா விவரங்களையும் அறிவிக்கப் போகிறேன்."

"அதைத்தான் கோள் மூட்டுவது என்பார்கள். நீ கோள் மூட்டப் போகிறாயா? அது மிகவும் கெட்ட பழக்கமென்று சிறு வயதில் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்."

"நான் கோள் மூட்டப் போவதில்லை. கோள் மூட்டுவதென்றால் நேரே போய்ச் சொல்லுவது. நான் கடிதம் எழுதப் போகிறேன்."

"யாருக்கு, சிவநேசருக்கா? சிவநேசரை உனக்குத் தெரியுமா?"

"தெரியும். பார்த்திருக்கிறேன். எங்கள் கிராமத்தில் இருக்கும் இந்த நாட்டின் மிகப் பெரிய மனிதர் அவர். அவரை எனக்குத் தெரியாதா? ஆனால் அந்த அறிமுகத்தைக் காட்டாமலே கடிதமெழுதப் போகிறேன் நான்."

"எப்படி?"

"கை எழுத்துப் போடாமல் மொட்டைக் கடிதம் எழுதப் போகிறேன்..."

"மற்றவர் விஷயமாக நாம் ஏன் முத்திரையை இவ்வாறு செலவழிக்க வேண்டும்? கை எழுத்தில்லா கடிதத்தை முத்திரையும் இல்லாமலே போட்டு விடு. சிவநேசர் இரட்டிப்புப் பணம் கட்டி எடுக்கட்டும்... அது சரி, மொட்டைக் கடிதம் என்றாயே, அது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. சொல்லு கேட்போம்."

தங்கமணி அதற்குப் பெரிய விளக்கமே கொடுத்து விட்டாள். வவனியாக் கச்சேரியில் வேலை பார்த்த தம்பி சிங்காரவேலும் தானும் பல மொட்டைக் கடிதங்களை அவ்வப்போது எழுதியிருப்பதாகவும் உண்மையில் மொட்டைக் கடிதங்களில் எத்தனையோ வகைகள் இருப்பதாகவும் கூறினாள் அவள்.

"மொட்டைக் கடிதங்களில் சிலவற்றுக்குக் கை எழுத்தே இடப்படுவதில்லை. அவைதான் உண்மையான மொட்டைகள். ஆனால் மற்றும் சிலவற்றுக்கோ ‘உண்மை விளம்பி’, ‘சத்தியக் கீர்த்தி’, ‘சமூகத் தொண்டன்’ பொன்ற பெயர்கள் கை எழுத்தாக இடப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட கை ஒப்பம், தமது மொட்டைக் கடிதங்களில் உள்ள பொய்களுக்குச் சத்தியத்தின் வலுவையும் பரோபகாரத்தன்மையையும் தரும் எனபது அவற்றை எழுதுவோர்களின் எண்ணம். வேறு சிலர் "கம்பர்", "வள்ளுவர்", "அகஸ்தியர்" போன்ற புனை பெயர்களை உபயோகிப்பார்கள். ஆனால் மிகத் தந்திரசாலிகளான இன்னும் சிலரோ உண்மைப் பெயர்களைக் கூட உபயோகித்து விடுவார்கள். ஆனால் இது ஆள் மாறாட்டப் பிரச்சினைகளைக் கிளப்பிப் பல தொல்லைகளை அதை எழுதி பலருக்கு விளக்கக் கூடுமாதலால் அனுபவமிக்க மொட்டைக் கடித எழுத்தாளர்கள் இதை அதிகம் விரும்புவதில்லை."

இப்படிப் பல ருசிகரமான தகவல்களைக் கூறினாள் தங்கமணி. தங்கமணி இந்த விவரங்களை எல்லாம் ஒரே மூச்சில் பிரசங்கம் போல் கொட்டி விடவில்லை. ஒரு வினா விடை ரூபத்தில் இத்தகவல்கள் ஒன்றன் பின்னொன்றாக வெளிவந்து மொட்டைக் கடிதங்களின் முழு உருவத்தையுமே விளக்கி விட்டன. ரெஜினா கேள்வி கேட்டாள். தங்கமணி விடை பகர்ந்தாள்.

ரெஜினா கேட்ட கேள்விகளுக்கு ஒன்று "மொட்டைக் கடிதங்களை ஏன் எழுத வேண்டும்" என்பதாகும். அதற்குத் தங்கமணி விரிவாகப் பதிலளித்தாள்.

"குடும்பங்களைப் பிரிப்பதற்கு, உத்தியோகத்தர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கு, தான் விரும்பாத காரியங்களை நடக்காது தடுத்து நிறுத்துவதற்கு - இப்படி எத்தனையோ நோக்கங்களுக்காக மொட்டைக் கடிதங்களை எழுதலாம். ஒரு குற்றமற்றவன் மீது கூட சந்தேகங்களை ஏற்படுத்துவதற்கு மொட்டைக் கடிதம் போல் சிறந்த கருவி வேறில்லை. உண்மையில் திறமையாக எழுதப்பட்ட மொட்டைக் கடிதங்களால் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் கூட முடிச்சுப் போட்டு விடலாம்!" இவ்வாறு எத்தனையோ காரணங்களை எடுத்துக் கூறினாள் தங்கமணி. முடிவில் பின்வரும் காரணத்தைச் சொல்லவும் அவள் மறக்கவில்லை.

"மொட்டைக் கடிதங்களை நல்ல நோக்கங்களுக்காகவும் எழுதலாம். நான் எழுதப் போகும் மொட்டைக் கடிதம் அப்படிப்பட்டதுதான். இந்தப் பட்டணத்துப்  பாட்டுக் காரி பத்மா இலங்கையின் மிகவும் உத்தமமான ஒரு குடும்பத்தின் மதிப்புக்கே உலை வைக்கப் பார்க்கிறாளல்லவா. அதை நிறுத்துவதுதான் எனது நோக்கம். அது உயர்ந்த நோக்கந்தானே?" என்றாள் தங்கமணி.

ரெஜினாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. பெரியதொரு சூழ்ச்சித் திட்டத்தில் சும்மா இருக்கும் தன்னையும் இழுத்து மாட்டி விடப் பார்க்கிறாளோ என்ற பயம் ஏற்பட்டுவிட்டது அவளுக்கு.

"தங்கம்! எனக்கென்னவோ நீ செய்ய நினைப்பது சரியாகப் படவில்லை. உலகத்தைத் திருத்த எங்களால் முடியுமா? என்னுடைய போய் பிரெண்டை உனக்குத் தெரியும் தானே? அவர் அடிக்கடி சொல்லுவார்? இந்த உலகத்தைத் திருந்த வள்ளுவர் போன்ற பெரியார்களாலேயே இதுவரை முடியவில்லையாம். நம்மால் முடியுமா என்று! அவர் சொல்லுவதும் சரி தானே? பொய் சொல்லாதே என்று இயேசு, புத்தர், வள்ளுவர் எல்லோரும் தான் எத்தனையோ நூற்றாண்டுகளின் முன்னர் சொல்லிவிட்டார்கள். ஆனால் பொய் இன்று கூட கொஞ்சமாவது நின்றிருக்கிறதா உலகத்தில்" என்றாள் ரெஜினா.

"ஆனால் அதற்காக நாம் முயற்சியை விடலாமா?’ என்றாள் தங்கமணி.

"நடக்க முடியாத காரியங்களுக்காக நாம் முயலுவது வீண், தங்கம். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று தெரிந்த பின்பும் யாராவது நாயைப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் வாலை நிமிர்த்திக் கொண்டிருப்பார்களா என்ன?"

"ஸ்ரீதர் - பத்மா விஷயத்தை நான் அப்படிப்பட்ட உடைக்க முடியாத விஷயமென்றெண்ணவில்லை ரெஜி. அதனால் தான் முயன்று பார்க்க நினைக்கிறேன்."

ரெஜினா தங்கமணியின் திட சங்கற்பத்தைக் கண்டு பயந்து போனாள். இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "தங்கம் நான் உன்னை ஒன்று கேட்கப் போகிறேன். நீ கோபித்துக் கொள்ள மாட்டாயே?" என்றாள்.

"இல்லை, கேள்" என்றாள் தங்கமணி. ரெஜியின் சிந்தனை தோய்ந்த முகத்தைத் தன் கழுகுக் கண்களால் உற்றுப் பார்த்தவண்ணமே,

"உனக்கு ஸ்ரீதர் மேல் ஆசையா? பத்மாவை வழியிலிருந்து அகற்றிவிட்டு நீ அவனைக் கட்டி கொள்ள விரும்புகிறாய். அப்படியா?" என்றாள் ரெஜி.

தங்கமணி கலகலவென்று சிரித்தாள்.

"அப்படிக் கனவு காண்பதற்கு நான் ஒரு மடைச்சி அல்ல. முடவன் கொம்பு தேன் ருசியாயிருக்கிறதே என்று ஆசைப்பட்டு என்ன பயன்? ஸ்ரீதர் குடும்ப அந்தஸ்தைப் பற்றி நீ இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. அவர்கள் ஒரு போதும் என் போன்றவர் குடும்பங்களில் சம்பந்தம் செய்து கொள்ளவே மாட்டார்கள். ஆகவே அந்த எண்ணமே என் மனதில் தோன்றியதில்லை" என்றாள் தங்கமணி.

"அப்படியானால் பத்மா ஸ்ரீதரைக் கட்ட இடமளிக்கக் கூடாது. அதைச் செய்து முடித்தால் உனக்குச் சந்தோசம். அவ்வளவு தானே? மற்றவன் வாழ உனக்குப் பொறுக்க வில்லை. அதுதானே உன்னை இந்த மொட்டைக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது?"

"பத்மாவின் தளுக்கும் குலுக்கும்! ஆனால் அதல்ல என் எண்ணங்களுக்குக் காரணம். ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தன் நிலைக்கேற்ற ஆசைகளைத் தான் கொள்ள வேண்டும். பத்மா தன் சமுதாய அந்தஸ்துக்கு மீறிய ஆசைகளைக் கொள்கிறாள். அது தான் எனக்குப் பிடிக்கவில்லை. சிறு வயதிலிருந்தே எனக்கு இப்படிப் பட்ட விஷயங்கள் பிடிக்கா."

ரெஜினா அதற்கு மேலும் பேச விரும்பவில்லை. தங்கமணியின் உள்ளம் ஒரு பொறாமைக் குளமாக விளங்குகிறது. எனபதை அவள் உணர்ந்து கொண்டாள். ஆகவே அவள் விரும்பியதை அவள் செய்யட்டும் என்று விட்டு விட எண்ணினாள் அவள். "சரி உம்முடைய இஷ்டம். எழுதுவதென்றால் எழுதும்" என்று கொண்டு பக்கத்தில் கிடந்த பத்திரிகை ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள் அவள்.

தங்கமணி ரெஜினாவிடம் "இந்தக் கடிதத்தை நான் சொல்ல, நீ உன்னுடைய கை எழுத்தில் எழுதித் தர வேண்டும். ஏனென்றால் எங்கள் கிராமத்தில் என் கை எழுத்தை யாராவது கண்டுபிடித்து விடலாமல்லவா?" என்றாள்.

ரெஜினா திடுக்கிட்டு விட்டாள். "சிச்சீ என்னால் முடியாது. நீயே எழுது. ஒரு மாதிரிக் கை எழுத்தை மாற்றி கீற்றி எழுது" என்றாள்.

தங்கமணி அதற்கு "அப்படி எழுதலாம் தான். முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் நான் அப்படி எழுதியிருக்கிறேன். என்றாலும் வேறு ஆளின் கை எழுத்தென்றால் நல்லது. நீயோ எங்கள் கிராமத்திலிருந்து வெகு தொலை. ஊர்காவத்துறை அல்லவா உங்கள் ஊர்? இன்னும் பத்மா ஸ்ரீதர் இருவரும் பல்கலைக்கழக மாணவர்கள். நானும் பல்கலைக் கழக மாணவி. அத்துடன் ஸ்ரீதரும் நானும் ஒரே ஊர். அவன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் அரை மைல் தூரமில்லை. ஆனபடியால் என் மீது சந்தேகமேற்பட எவ்வளவோ காரணமுண்டு. அது தான் ரெஜி, நீ இந்த உதவியை எனக்குச் செய்ய வேண்டும். நான் உன்னிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன்! உனக்கு என் மீது அன்பில்லையா? நான் கேட்பதைச் செய்ய மாட்டாயா?" என்றாள் தங்கமணி.

ரெஜிக்குத் தங்கமணியின் கேள்வி எக்கச்சக்கமான ஒரு நிலையை ஏற்படுத்தியது. ஆனால் தங்கமணியோ விடுபவளாயில்லை. "ரெஜி, நீயும் உன்னாலியன்ற அளவு கை எழுத்தை மாற்றி எழுது. எங்கள் ஊரில் உன்னை யாருக்கும் தெரியாததால் உன்னை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இந்தக் கடிதத்தை எழுதிவிட்டு இன்று பிற்பகல் இரண்டு பேரும் கொழும்புக்குப் படம் பார்க்கப் போவோம். செலவெல்லாம் என்னுடையது" என்றாள் தங்கமணி.

"ஓகோ, எனக்கு இலஞ்சம் கொடுக்கப் பார்க்கிறாயா?’ என்றாள் ரெஜி. முடிவில் "சரி படம் இருக்கட்டும். நீ இவ்வளவு தூரம் கேட்கும் போது எப்படி மறுப்பது? எழுதுகிறேன். ஆனால் எனக்கு ஒரு கரைச்சலும் வராது நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்." என்று கடிதத்தைத் தங்கமணி சொன்ன மாதிரியே எழுதிக் கொடுத்தாள் ரெஜினா.

தங்கமணி கடிதத்தை அநாவசியமாக நீட்டி முழக்கவில்லை. ஒரு சில வசனங்களில் விஷயத்தை மிகச் சுருக்கமாக முடித்து விட்டாள் அவள். "மதிப்பு வாய்ந்த சிவநேசர் பிரபு சமூகத்துக்கு" என்று ஆரம்பித்த அக் கடிதத்தில் கீழ்க் கண்ட நான்கு வசனங்களே இடம் பெற்றன. "உங்களுடைய குடும்ப கெளரவத்தைச் சிதைத்துச் சீரழிகக் வல்ல சில சம்பவங்கள் இப்பொழுது கொழும்பில் நடந்து கொண்டிருக்கின்றன. கொட்டாஞ்சேனையில் குடிசையில் பிறந்த பரமானந்தர் மகள் பத்மா என்ற ஒரு சாதி கெட்ட அநாதைச் சிறுக்கி உங்கள் உத்தம மகன் ஸ்ரீதருக்கு வலை வீசி வருகிறாள். இதனால் உங்கள் குலக் கெளரவமும் அந்தஸ்தும் குலையாதிருக்க வேண்டுமானால், உடனடியாக இச் சிறுக்கியின் கொட்டத்தை அடக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இக் கடிதத்தை உங்கள் குடும்பத்தின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் பயனாகவே நான் எழுதுகிறேன்." கடிதத்தின் முடிவில் கை ஒப்பமாக "நன்மை விரும்பி" என்ற வார்த்தைகள் இடப்பட்டன.

கடிதத்தை எழுதி முடித்ததும் தோழிகள் இருவரும் விரதச் சாப்பாடு உண்ணச் சென்றார்கள். வழக்கத்துக்கு மாறாக அன்று பாயசத்துடன் சைவச் சாப்பாடு. ரெஜினா கிறிஸ்தவப் பெண்ணென்றாலும் இடையிடையே சைவச் சாப்பாடு சாப்பிடுவதை அவள் ஆட்சேபிக்கவில்லை. அவளுக்குப் பொதுவாக மீன் இறைச்சி இல்லாது உனவு இறங்குவது சற்றுக் கடினமான விஷயமேயானாலும், வாய்க்கு இனிமையான பாயசம் கிடைக்கும் என்ற திருப்தி அதை ஓரளவு சமன் செய்யவே செய்தது!

அன்று பிற்பகல் தோழிகள் இருவரும் கொழும்புக்குச் சினிமா பார்க்கச் சென்ற போது, ஒரு பேராச்சரியம் அவர்களுக்கு அங்கே காத்திருந்தது. பத்மாவும் அடுத்த வீட்டு அன்னம்மாக்காவும் படம் பார்க்க வந்திருந்ததே அது. தங்கமணியைக் கண்டதும் பத்மா, "தங்கம், இங்கே வந்துட்கார்" என்று கூவினாள். தங்கமணியும் பத்மாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். அத்துடன் ரெஜினாவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் அவள். பின்னர், பெண்கள் மூவரும் கலகலவென்று பேச ஆரம்பித்தார்கள். பத்மாவின் பேரெழிலைக் கண்டு வியப்படைந்தாள் ரெஜினா.

தங்கமணி பத்மாவிடம் ஸ்ரீதர் விஷயம் பற்றி விசாரித்தாள். பத்மாவும் எல்லா விஷயத்தையும் தங்கமணியிடம் ஒளிவு மறைவின்றி கூறினாள். ஸ்ரீதர் தன்னிடம் தனது உண்மைப் பெயரை மறைத்துப் பொய் சொல்லியதன் காரணங்களை விளக்கி விட்டு, "என்னை ஏமாற்றும் நோக்கம் அவருக்குக் கொஞ்சமும் இல்லை. அதன் பலனாக பழையபடி நாங்கள் முன் போலவே நல்ல சிநேகிதம்" என்று உற்சாகமாகக் கூறினாள் பத்மா.

தங்கமணி, "அது எனக்குத் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் இருவரும் காரில் ஜோடியாகச் சென்றதை நான் பார்த்தேன்.. எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?" என்றாள்.

பத்மாவுக்கு அதிக ஆனந்தம். தன் காசிலே தங்கமணி உட்பட எல்லோருக்கும் ஐசி-சொக்ஸ் வாங்கிக் கொடுத்தாள்.

அதைச் சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்ட வண்ணமே தங்கமணி "பத்மா! உண்மையில் நான் உங்கள் காதல் உடைந்து விடுமோ என்று எவ்வளவு கவலைப்பட்டேன் தெரியுமா? ஸ்ரீதர் உனக்கு நல்ல ஜோடி. நீங்கள் இருவரும் கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டுமென்பது தான் என் ஒரே ஆசை." என்றாள்.

பத்மா, "அதை நீ சொல்லவும் வேண்டுமா, தங்கம்? எனக்கு ஓர் ஆளின் முகத்தைப் பார்த்தாலே அவருடைய மன எண்ணத்தை உடனே கூறி விட முடியும். உன்னை நான் சந்தித்த முதற் நாளே உனது முகம் என்னைக் கவர்ந்துவிட்டது" என்றாள்.

பத்மாவின் இவ்வார்த்தைகள் ரெஜினாவின் உள்ளத்தைத் துணுக்குறச் செய்தன. தங்கமணியின் முகத்தைத் தன் கடைக் கண்களால் நன்கு அவதானித்துப் பார்த்தாள் அவள். அந்த முகத்தில் ஒரு இருள் மேகம் கவிந்திருந்தது போல் தோன்றியது அவளுக்கு. "இந்த முகத்தையா பத்மா இவ்வளவு தூரம் நம்புகிறாள்." என்று ஆச்சரியப்பட்டாள் அவள்.

முகத்தில் ஒன்றுமில்லை. பார்ப்பவர்களின் கண்ணிலும் மனதிலும் தான் இப்படிப்பட்ட விஷயங்கள் தங்கியிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்பட்டது அவளுக்கு. "இந்த பத்மாவுக்கு எதிராக மொட்டைக் கடிதம் தீட்ட ஒத்துழைத்தேனே, என் முகம் எப்படியிருக்கிறதோ?" என்ற நடுக்கமும் ஏற்பட்டது அவளுக்கு.

 [தொடரும்]


- ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது.  அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள் -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R