1

ஆசி கந்தராஜாஉடையார் மாமா மகா விண்ணன். அவரைச் சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரும். அவரைப்போன்று 'அச்சொட்டாக' விவசாயம் சம்பந்தப்பட்ட சங்கதிகளைப் பேச நான் வேறு ஆளைக் கண்டதில்லை. மாமா ஊரில் வாழ்ந்த காலத்தில் வயல் தோட்டம் துரவு என வசதியாக வாழ்ந்தவர். 'அரைவாசி ஊரே அவருக்குச் சொந்தமாக இருந்தது' என்று விண்ணாணம் பேசுபவர்கள் சொல்வார்கள். எப்படி இது சாத்தியமானதென ஒரு தடவை பாட்டியைக் கேட்டேன்.  இங்கிலீசுக்காரர் இலங்கையை ஆண்ட காலத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை இலகுவாக்க, மணியகாரன், உடையார், விதானையார் என்ற பதவிகளை உருவாக்கியதாகவும், பதவிக்கு வந்தவர்கள் தமது ஆட்சி அதிகாரங்களைப் பாவித்து ஊரில் உள்ள 'அடுகாணி-படுகாணிகளை' தம் வசமாக்கியதாகவும் பாட்டி சொன்னார். உடையார் மாமா வீடுகட்டியிருக்கும் 'நாவலடி வளவு' எங்கள் பாட்டனாருக்குச் சொந்தமானதென்று அம்மா சொல்லி வருத்தப்பட்டார்.

அவர் எங்களுக்கு நெருங்கிய சொந்தமென்று சொல்லமுடியாது. ஆனாலும் மரியாதையின் நிமித்தமாக 'மாமா' என்று அழைத்துப் பழகிவிட்டேன். ஊரில் 'பிரளி குழப்படி' இல்லாத பெடியன் என்று என்மீது எப்போதும் அன்பு பாராட்டியவர். எது எப்படி இருந்தாலும், மாமாவின் விவசாய அறிவும் அக்கறையும் என்னை வியப்பில் ஆழ்த்தும். இந்த வியப்பு காலப்போக்கில் ஆரோக்கியமான உறவாக வளர்ந்திருந்தது.

உடையார் மாமா என்னைப் போலவே மாம்பழப்பிரியரும். ஊரில் உள்ள அவர் வளவில் பலவகை மாமரங்களை நட்டுப் பராமரித்தவர். சும்மா சொல்லப்படாது. அந்த மாமரங்கள் காய்த்துக் குலுங்குவது ஒரு கண்கொள்ளாக்காட்சிதான். அவர் வீட்டுக் கறுத்தக்கொழும்பான் மாம்பழம் ஊரில் மட்டுமல்ல அயல் அண்டைக் கிராமங்களிலும் பெயர் எடுத்திருந்தது.

சிட்னி வாழ்க்கையில் அவர் இழந்தவற்றில் கறுத்தக் கொழும்பான் மாம்பழச்சுவை முக்கியமானதென்பதை அறிந்து கொண்டேன்.
'இதென்னடா தம்பி இங்கத்தைய மாம்பழம், மணமும் இல்லை ருசியும் இல்லை. பால்மணம்தான் மணக்குது' என்பார். 'பால்' என்பது மாங்காய் பறிக்கும்போது ஒரு வெள்ளைநிறத் திரவம் வழியுதே, அதுதான்! ஒருவகை latex. பழத்தில் அது அதிகமிருந்தால் மாம்பழம் சுவைக்காது என்பதை யாழ்ப்பாணத்தான், வெள்ளைக்காரன் அறியமுன்னரே தெரிந்திருந்தான்.

உடையார் மாமா ஊரிலும் விவசாயத்தில் பல புதுமைகளை முன்னின்று செய்தவர். பட்டை துலா கொண்டு தோட்டத்துக்கு நீர் இறைத்த காலங்களிலே, அவர் தோட்டத்தில் 'வாட்டர் பம்ப்' நீர் இறைக்கும். வெள்ளைக்காரன்ரை மரக்கறிகளென்று சொல்லப்பட்ட கோவா, கரட், பீற்றூட், முள்ளங்கி வகைகளை அறுபதுகளிலேயே தனது கமத்தில் விளைவித்து உள்ளூர் விவசாய இலகாவை மூக்கிலே விரல் வைக்க வைத்தவர். தோலகட்டி வையின் தயாரிப்புக்கு அவர் தோட்டத்திலிருந்து பெருமளவு திராட்சைப் பழங்கள் சென்றதை இன்றும் தனது சாதனைகளுள் ஒன்றாக நினைவுபடுத்திக்கொள்வார். இது நியாயமான பெருமை என்பதை மறுப்பதற்கும் இல்லை.
ஆடினகால் ஓயாது என்பார்கள்!

சிட்னிக்குப் புலம் பெயர்ந்த பின்பும் அவர் சும்மா இருக்கவில்லை. அவர் வசித்த மகளின் வீட்டின் பின்வளவையே சோலையாக்கி இருந்தார். மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய் தொடக்கம் யாழ்ப்பாண மொந்தன் கறி வாழைவரை பின்வளவில் கோடைகாலத்தில் காய்த்துக் குலுங்கும். அவர் உண்டாக்கியிருந்த 'உலாந்தா' முருங்கையும் 'கியாதி' பெற்றதே. இந்த விவசாய முயற்சிகளின் பரிணாமமாக, கறுத்துக் கொழும்பான் மாம்பழம் சிட்னியில் தனது பின்வளவில் காய்க்க வேண்டுமென்ற ஆசை அவருக்கு சடைத்து வளர்ந்தது. அது அவருள் ஒரு ஆவேசமாக வளர்ந்திருந்தது என்றுகூடச் சொல்லலாம்.

'தம்பி, கறுத்தக் கொழும்பான் மாமரத்தை சிட்னிக்கு கொண்டுவர ஒழுங்கு செய்யமாட்டியோ?' என்று இயல்பைப் புறந்தள்ளி நச்சரிக்கத் துவங்கினார்.

அவுஸ்திரேலிய Quarantine மிகவும் கடுமையானது. வெளிநாடுகளிலிருந்து இலகுவாக தாவரங்கள், விலங்குகள், பறவைகளை அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டுவர அனுமதிக்க மாட்டார்கள்.

வெளிநாடுகளிலுள்ள வைரஸ் கிருமிகள் அவுஸ்திரேலிய தாவரங்கள் விலங்குகளை பாதிக்காத வண்ணம் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கையே இது. விவசாய பல்கலைக்கழகத்தில் நான் பணிபுரிவதால், ஏதோ ஒருவகையில் கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தை இங்கு இறக்குமதி செய்வதற்கு ஏதாவது ஓட்டையைக் கண்டுபிடித்துச் செயல்படுவேன் என்கிற ஆசையை அவர் சுயாதீனமாக வளர்த்துக் கொண்டார்.

யாழ்ப்பாணத்தின் பெருமையைப் பறைசாற்றிய கறுத்தக் கொழும்பானும், தேன்பலாவும், கப்பல் வாழையும், தேன் கதலியும் 'சிங்கள அறுவான்களால்' முற்றாக அழிந்துவிடப்போகிறது என்று அவர் சிலவேளைகளிலே அவரையும் மீறிப் புலம்புவதுண்டு. யாழ்ப்பாணத்துக் கப்பல் வாழைப்பழத்தில் ஒருவகை வைரஸ் நோய் தொற்றிவிட்டதாகவும், ஒருபக்கம் நீட்டுக்குப் பழம் மரத்துப் போய் 'தெறுக்கணித்து' இருப்பதாகவும் மாமா சொல்லி வருத்தப்பட்டார். யாழ்ப்பாணத்துக்கு 'கியாதி'யைக் கொண்டுவந்த பல தாவர இனங்களின் பரம்பரை அலகுகள் கலப்படைந்து வருவதாகவும் யாரோ ஒருவரின் பின்வளவில் இன்றும் இருக்கக்கூடிய கலப்பற்ற இனங்களைக் கண்டுபிடித்து பாதுகாக்க வேணுமடா என்று எனக்கு அடிக்கடி அறிவுரை கூறும் மாமா, அதன் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக தனது பெறுமதியான கச்சேரியடி காணியை விற்று காசு தருவதாகவும் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார். உடையார் மாமா விறுக்கரல்ல. சொன்னதைச் செய்யும் நிதானம் உள்ளவர்.

காலாதிகாலமாக நாட்டுக்கும் இனத்துக்கும் உரித்தான தாவரங்களின் பரம்பரை மூலங்களை பாதுகாக்க‘Genetic Resource Centre’ என்ற நிலையத்தை பல்வேறு நாடுகளிலும் நிறுவியிருக்கின்றார்கள். இங்கு, அசல் தாவரங்களின் ‘Germplasm’ எனப்படும் கலப்பற்ற தாவர அலகுகளை விதைகளாகவோ, இளையமாகவோ (tissue),  கலங்களாகவோ (cells), பாதுகாக்கப்படும். ஆண்டாண்டு காலமாக இவற்றின் இயல்பு மாற்றமடையாது பாதுகாக்க இப்படிப் பல தொழில் நுட்பங்களை விஞ்ஞானவளர்ச்சி கற்பித்துத் தந்துள்ளது.

இந்துக் கோவில்களின் கோபுரங்களின் உச்சியில் பதின்மூன்று கலசங்கள் உண்டு. அந்த கலசங்களில் பல்வேறுவகை தானியங்களை சேமிக்கும் பழக்கத்தை நம்முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள். பதினாறு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிசேகத்தின்போது கலசங்களில் உள்ள தானியங்கள் மாற்றப்படும். கலசங்கள் செய்யப்படட உலோகக்கலவை, பதினாறு வருடங்களும் தானியங்களின் முளைக்கும் திறனை பாதுகாக்கும் என்று நம்பப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான விதைகளின் முளைக்கும்திறன் ஆகக்கூடுதலாக மூன்று வருடங்களாக கணிக்கப்பட்டுள்ளது. மாங்கொட்டையின் முளைக்கும் திறன் மூன்று மாதங்கள் மட்டுமே. வெள்ளப்பெருக்கு, சுனாமி, போர் அல்லது நோய்வந்து தாவரங்கள் அழிந்தாலும் சேமித்துப் பாதுகாக்கப்பட்ட Germplasm   புதிய தாவரங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.

இலங்கையிலும்; கண்டியிலுள்ள 'கன்னொறுவ' என்னும் இடத்தில் Plant genetic resources centre என்ற பெயருடன் ஒரு நிலையமுண்டு. இது 1988ம் ஆண்டு யப்பான் அரச உதவியுடன் நிறுவப்பட்டது. அங்கு ஈழப்பிரதேசத்தில் காணப்படும் மருந்துக்கு உபயோகிக்கப்படும் அரிய இனங்களான பிரண்டை, கார்த்திகைப்பூ, காத்தோட்டி, ஆடாதோடை, மஞ்சநுணா போன்ற தாவரங்களினதும், கறுத்தக் கொழும்பான், கொடிகாமத்து தேன்பலா போன்ற பழமரங்களின் ‘Germplasm’ பாதுகாக்கப்படவில்லை என்பதை மாமா எப்படியோ அறிநித்திருந்தார். 'சிங்களவங்கள் இப்படித்தான். மரங்களிலும் சிங்களம்-தமிழ் பார்க்கிறான்கள்' என்ற எரிச்சலுடன் புறுபுறுப்பார்.

நான் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவன் என்பதும், நான் இத்துறை சார்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லாளன் என்று கணிக்கப்படுவதும் அவர் அறிந்தவை. என் நிபுணத்துவத்தில் அவர் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் அவர் தமது கச்சேரியடி காணியை விற்று  Gemplasm Conservation ஆராய்ச்சிக்கு பண உதவி செய்ய முன்வந்தார் என்பதை நான் அறிவேன். அவர் என் ஆற்றலை இந்தளவுக்கு மதித்தமை குறித்து நான் பெருமையும் அடைந்தேன். அது மட்டுமல்லாமல் உடையார் மாமாவின் ஆசை வெறும் மண்பற்றுக்கு அப்பாற்பட்டதாகவும், நியாயமானதாகவும் எனக்குத் தோன்றியது. எனவே இது பற்றிய தகவல் சேகரிப்பில் இறங்கினேன்.

யாழப்பாணத்தில் கறுத்தக் கொழும்பான், வெள்ளைக் கொழும்பான், செம்பாட்டான், கிளிமூக்கு, விலாட்டு, அம்பலவி ஆகிய மாமரங்கள் உண்டு. இவற்றுள் கறுத்தக் கொழும்பானும், செம்பாட்டானுமே பெருமளவில் சந்தைக்குவரும். யாழ்ப்பாண மாமரங்களின் காய்க்கும்திறன்; பிறநாட்டு மரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. அதற்கான காரணிகள்பல. பராமரிப்பின்மை அவற்றுள் முக்கியமானது. இதுபற்றி மாமா என்னுடன் பலதடவை பேசியுள்ளார். மாமர பராமரிப்புபற்றிய விபரக்கொத்தொன்றை அடித்து யாழ்ப்பாணத்தில் விநியோகிக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் மாமா மனதில் கொண்டிருப்பதை நான் அறிவேன். அவுஸ்திரேலியாவில் பருவகாலம் முழுவதும் காய்க்கும் மாமரங்கள் Kensington Pride, R2E2, Calypso, Honey gold ஆகியவை. இவற்றுள் Kensington Pride முதன்முதலில் குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் Bowen என்னுமிடத்தில் பயிரிடப்பட்டதால் இதை Bowen மாம்பழம் எனவும் அழைப்பார்கள். இது நியூசவுத்வேல்ஸ் மாநிலம் உட்பட உபஉலர்வலய மற்றும் உலர்வலய பிரதேசங்களில் காய்க்கக்கூடியது. இந்த மாம்பழமும் R2E2 எனப்படும் கலப்பின (Hybride) மாம்பழமும் பெருமளவில் பருவகாலத்தில் சந்தைக்குவரும்.

அவுஸ்திரேலியாவில் பயிரிடப்படும் மாமரங்களுள் எழுபது விழுக்காடு Kensington Pride  எனப்படும் Bowen மாம்பழமே. ஊரிலுள்ள செம்பாட்டான் மாம்பழத்தை இது ஒத்தது என்பது எனது கணிப்பு. ஆனால் உடையார் மாமா இதை ஒத்துக்கொண்டது கிடையாது. இது பால் மாங்காய் என்று யாழ்ப்பாணத்துக் கமக்காரருக்குரிய கெப்பருடன் கூறுவார்.

பருவகாலத்தின் பின்பகுதியில் Palmer, Keitt, Kent, Pearl, Brooks ஆகிய மாம்பழ இனங்களும் சிறிதளவு அவுஸ்திரேலியச் சந்தைக்கு வருவதுண்டு.

சமீபகாலங்களில் Tomy Adkins எனப்படும் மாமரம் Florida – USA இல் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த தகவலை உடையார் மாமா எப்படி அறிந்திருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடைய அக்கறையின் தீவிரத்தை இது மெய்பிக்கவும் செய்தது.  Tomy Adkins மாமரத்தை விட்டவங்கள் ஏன் கறுத்தக் கொழும்பான் மாமரத்தை விட ஏலாது?' என்று நான் தான் அதற்கு அனுமதியளித்தவன் என்பது போல என்னுடன் சண்டைக்கு வந்தார். இதேபோன்ற கவலை என்னுடன் பணிபுரிந்த கலாநிதி சுந்தரத்துக்கும் இருந்தது. அவர் இந்தியாவின் சேலம் மாவட்டத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தவர். இந்திய இனங்களான மல்கோவா, Alfonso ஆகியவைதான் உலகிலேயே சுவையுடைய மாம்பழங்கள் என்று அவர் தனது மண்பற்றுடன் கூறத்தவறுவதில்லை. இதன் காரணமாக அந்த மாமரங்களை ஏன் இங்கு பயிரிடக்கூடாது? என்று பல விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடங்களில் வாதிட்டவர். அவருக்கும் உடையார் மாமாவின் வயதுதான் இருக்கும். பல்கலைக் கழகத்தில் பணிபுரிவதற்கு வயதெல்லை ஒரு தடையல்ல என்பதால் டாக்டர் சுந்தரம் இன்னமும் பணியில் உழைக்கிறார். மல்கோவா மாம்பழம்பற்றி டாக்டர் சுந்தரம் எனக்கு சொல்லும் போதெல்லாம், சுவைகளிலேகூட மண்பற்றும், மரபுசார்ந்த நெறிகளும் புகுந்துவிடுதலை இனங்கண்டு என்னுள் சிரிப்பதுண்டு.

அவுஸ்திரேலியா உட்பட பல அபிவிருத்தியடைந்த நாடுகளில், புதிதாக இனவிருத்தி செய்யப்பட்ட தாவரத்தையோ அல்லது வெளிநாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தாவரத்தையோ வணிக ரீதியாக பயிரிடுவதற்கு முன்பு அவற்றின் இயல்புகள்பற்றி ஆராய்வார்கள். சுவை, மணம், பழத்தின் நிறம், Shelf Life எனப்படும் அறுவடைக்குப்பின் வைத்திருக்கக்சுகூடிய காலம், பெட்டிகளில் பொதி செய்வதற்கு ஏற்ற இயல்பு என்பவற்றை கவனத்தில் எடுத்து ஆராய்வு செய்வார்கள். இவை எல்லாமே சந்தைப்படுத்தலுக்கு மிக முக்கிய இயல்புகளாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. பழத்தின் சுவை மட்டும் முக்கியமானதல்ல. கண்ணுக்கு அழகாக இருக்கிறதா எனவும் பார்ப்பார்கள். தோடம்பழத்தில் இலகுவாக தோல் உரிக்கும் இயல்பு வரவேற்கப்படும். இவை விவசாயத்துடன் சம்பந்தப்படாத பொருளாதாரத்துடன் அதிக உறவு வைத்துள்ள சந்தைப்படுத்தல் என்னும் துறையுடன் தொடர்புடையது.

உடையார் மாமாவின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தின் சுவையை வேறு எந்த மாம்பழத்தின் சுவையாலும் வெல்ல முடியாது என்பது உண்மை. ஆனாலும் அவுஸ்திரேலிய அதிகாரிகளின் நிலைப்பாட்டையும் நாம் நடுநிலை தவறாது அறிதல் வேண்டும். கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தின் தோலின் நிறம் பச்சை கலந்த மஞ்சள் நிறம். 'கறுத்த' என்பது, அதன் கடும் பச்சை நிறத்தால் உருவான பெயரே. அதன் வடிவமும் நீள் வட்டம். அதாவது உருண்டு திரண்ட ‘Polish’ தோற்றம் அதற்கு கிடையாது. இது வாங்குபவர்களின் கண்ணுக்கும் பொதி செய்பவதற்கு ஏற்றவையல்ல என்பது அவுஸ்திரேலிய சந்தைப்படுத்தும் நிபுணர்களின் அபிப்பிராயம். அத்துடன் கனிந்த பழங்களை அதிக நாள்கள் வைத்திருக்க முடியாதென்றும், பழச்சதையின் திடத்தன்மை நீண்டகால சேமிப்புக்கு உகந்ததல்லவென்றும், உடையார் மாமா உச்சிமேற் கொண்டு கூத்தாடும் கறுத்தக் கொழும்பானுக்குப் பாதகமான குணங்களாகப் பட்டியலிட்டார்கள்.

இந்தவகையில் கறுத்தக் கொழும்பானை அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்த நான் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததில், என்னைவிட உடையார் மாமா மிகுந்த கவலைப்பட்டார். அமெரிக்கா அல்லது தென் ஆபிரிக்காவில் இந்த மாமரம் நின்றிருந்தால், திறமான பழம் எனச்சொல்லி மரத்தை இங்கு இறக்கியிருப்பாங்கள் என்று டாக்டர் சுந்தரமும் மாமாவுடன் சேர்;;;ந்து, இது வெள்ளைக்காரன் பாராட்டும் நிறத்துவேசம் சார்ந்தது எனச்சாதித்தார்கள்.

2

ஒருநாள் கடுகதி அறிவித்தல் தந்து உடையார் மாமா தமது கூட்டாளி ஒருவரை எனக்கு அறிமுகம் செய்து வைக்க அழைத்து வந்தார். அவர் ஒரு 'பறங்கி' இனத்தவர் என்றும், இலங்கையிலே புகையிரத என்ஐpன் டிரைவராக பணியாற்றியவர் என்றும், ஆஸ்திரேலியாவில் 'வெள்ளையர்கள் மட்டும்' என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில் இங்கு புலம் பெயர்ந்ததாகவும் சொன்னார்.

அந்தப் பறங்கி நண்பர் சற்றே சிவப்பு நிறமுள்ள யாழ்ப்பாணத்து மனுஷர் போன்று தோன்றினார். ஆவரின் மூததையர் டச்சுக்காரர் என்று அவர் சொன்னார். அவர் தன் தந்தையைப் பின்பற்றி இலங்கை புகையிரத சேவையில் என்ஜின டிரைவராக வேலை பார்த்தவராம். ரயிலில் யாழ்ப்பாணம் திருக்கோணமலை ஆகிய இடங்களுக்கு சென்று வந்தவராம். கொழும்பில் பிறந்து வளர்ந்த அவர் காலப்போக்கில் திருக்கோணமலையில் காணிவாங்கி குடும்பமாக குடியேறி விட்டதாகவும் சொன்னார். அவருடைய அந்த புலப்பெயர்வுக்கு கலப்புத்திருமணம் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வர்த்தமானம் இந்த படைப்பியல்புக் கட்டுரைக்கு முக்கியமில்லாததால் நான் நோண்டிக்கேட்கவில்லை. ஆனால் அவர் யாழ்ப்பாணத்தமிழிலே பேசி என்னை மகிழ்வித்தார் என்பது கொசுறு செய்தி. வழமையான உபசரிப்பின் பின் உடையார் மாமா என்னை அவசரமாகச் சந்திக்க வந்த கதையை மெல்லத் துவங்கினார். பறங்கி நண்பரின் மகனது பிறிஸ்பேன் வீட்டில் ஒரு கறுத்தக் கொழும்பான் மாமரம் வளர்கிறதாம். இந்த வருடம் அந்த மரத்தில் மூன்று காய்கள் காய்த்திருப்பதை சமீபத்தில் பிறிஸ்பேன் போன நேரத்தில் பார்த்த பரவசத்திலேதான் என்னைச் சந்திக்க உடையார் மாமா வந்திருந்தார். சென்றவருடம் ஒரு பழம் காய்த்ததாகவும் அது அசல் கறுத்தக் கொழும்பான் சுவையை அச்சொட்டாக ஒத்திருப்பதாகவும் உடையார் மாமா மேலும் விபரங்களை அடுக்குவதன் மூலம் என்னால் சாதிக்க முடியாததை தனது பறங்கி நண்பர் சாதித்து விட்டதை என் மனம் நோகாத பக்குவத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்த மரம் எப்படி அவுஸ்திரேலியாவுக்கு வந்ததென ஆவலை அடக்கமுடியாமலும், என் தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாமலும் கேட்டேன். கூடவந்த பறங்கி நண்பர் என் கேள்விக்கு பதில் சொல்வதை சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டார்.

அவுஸ்திரேலியாவுக்கு இலகுவில் தாவரங்களையோ விதைகளையோ இறக்குமதி செய்துவிடமுடியாது. தனிப்பட்ட முறையில் ஒருவர் தான் விரும்பிய தாவரத்தை இறக்குமதி செய்வதாயின், அவற்றை Quarantine House இல் இரண்டு மூன்று வருடங்கள் வைத்து அந்த தாவரத்துக்கு ஏதாவது வைரஸ் நோய் இருக்கிறதா அல்லது இத்தாவரம் அவுஸ்திரேலியாவுக்குள் வளர்ந்தால் நாட்டின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுமா என்பவற்றை ஆராய்ந்தபின்பே அனுமதிப்பார்கள். அதற்குப் பெரும் பணம் செலவாகும். ஈற்றில் அனுமதி கிடைக்குமோ என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது.

உடையார் மாமாவின் பறங்கி நண்பர் இந்த நடைமுறையை பின்பற்றி இருக்க வாய்ப்பி;ல்லை. வெள்ளையர்கள் மட்டும் புலம் பெயர அனுமதிக்கப்பட்ட காலத்தில், இலங்கையில் 'சிங்களம் மட்டும்' மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆங்கிலம்பேசும் இனமாக அறியப்பட்ட பறங்கியர்கள் குடியேற அனுமதிக்கப்பட்ட அந்தக் காலத்திலே, அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தவர் அவர். அந்தக் காலத்தில் அவுஸ்திரேலிய Quarantine நடைமுறைகளில் இப்போதைய கெடுபிடிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். இதிலுள்ள ஓட்டை ஒறுவாய்களைப் பாவித்து இவர் மாங்கொட்டையினை கடத்திவந்து நாட்டியிருத்தலே சாத்தியம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
எது எப்படியோ கறுத்துக் கொழும்பான் மாமரம் அவுஸ்திரேலியாவில் வளர்வதை, உடையார் மாமாவின் அழுங்குப்பிடியான அக்கறை காரணமாக, பிறிஸ்பேனுக்கு போன நேரத்தில் நேரில் பார்த்து உறுதி செய்து கொண்டேன். சில மாதங்களின் பின் அந்த மரத்தில் காய்த்த மூன்று பழங்களில் ஒன்றை எனக்கு கொண்டுவந்திருந்தார். சும்மா சொல்லப்படாது அசல் கறுத்தக் கொழும்பான் மாம்பழம்தான். சந்தேகமே இல்லை.

அவுஸ்திரேலிய மண்ணிலே யாழ்ப்பாணச் சுவை, திருகோணமலையில் வாழ்ந்த பறங்கியின் மூலம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டது! உடையார் மாமாவின் ஆசை அடங்கவில்லை. வருடத்தில் ஒரு மரம் மூன்று காய்களல்ல, முந்நூறு மாங்காய்கள் காய்க்க வேண்டும். இவ்வாறு கறுத்தக் கொழும்பானின் சுவையை அவுஸ்திரேலியாவில் சர்வ வியாபாகமாக்குவதன் மூலம், கறுத்துக் கொழும்பான் விடயத்தில் இங்குள்ள அரசின் கொள்கைக்கு இறுதி ஆப்பு அடிக்கவேண்டுமென்று உள்மனதில் கர்விக்கொண்டார்.

மாமரங்கள் உலர் வலயத்துக்;கே உரித்தான பயிர். அவை குளிர் பிரதேசத்தில் நல்ல விளைவைக் கொடுக்கமாட்டா. இதனால் சிட்னியில் வசிக்கும் உடையார் மாமா பிறிஸ்பேனில் வளரும் கறுத்தக் கொழும்பானை சிட்னி சுவாத்தியத்துக்கு ஏற்ற வகையில் இனவிருத்தி செய்ய உதவவேண்டும் என்ற கோரிக்கையுடன் என்னை நச்சரிக்கத் துவங்கினார்.

விஞ்ஞானரீதியாக பழமரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை குறைகுளிர் வகை ((Low Chill), நிறைகுளிர் வகை (High Chill), குளிர் தேவையற்ற வகை (No Chill).  தாவர உடற்கூறு இயல்பின்படி பீச், பிளம்ஸ், அப்பிள் போன்ற தாவரங்கள் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் குளிர் தேவை. ஆனால், மாமரம் பூப்பதற்கு குறிக்கப்பட்டளவு வெப்பம் தேவை. ஐரோப்பாவின் குளிர் சுவாத்தியத்தில் வளர்ந்த அப்பிளையோ பீச்சையோ சிட்னி சுவாத்தியத்தில் வளர்த்தால் அவை நல்ல விளைவைக் கொடுக்கமாட்டாது. இதே போல, நுவரேலியாவில் வளரும் பிளம்ஸ் மரத்தை யாழ்ப்பாணத்தில் வளர்த்தால் அந்த மரம் பூக்காது. இதேபோன்றுதான் யாழ்ப்பாண மாமர இனங்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களில் நன்கு காய்ப்பதில்லை. இவையே பழமரங்கள் காய்ப்பதிலுள்ள சூட்சுமங்கள்!

சிட்னி உபஉலர்வலயப் பிரதேசத்தில் உள்ளது. இதன் சுவாத்தியம் இலங்கையின் மலையக சுவாத்தியத்தை ஒத்தது. சிட்னி நகரம் அமைந்துள்ள நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் நல்ல விளைவைக் கொடுக்கும் அப்பிள், பீச், பிளம்ஸ் போன்ற தாவரங்கள் குறைகுளிர் (Low chill) இனங்களாக இருக்கவேண்டும். ஆனால் வெள்ளையர்கள் ஐரோப்பாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த காலங்களில், ஐரோப்பாவில் இருந்து நிறைகுளிர் (High chill) இன தாவரங்களையே சிட்னிக்கு கொண்டு வந்தார்கள். சிட்னிக் குளிரின் அளவும் காலமும் இத்தாவர இனங்களுக்கு போதாமையால் இவை பூப்பதற்கும் காய்ப்பதற்கும் சிரமப்பட்டன. இதனால் சிட்னி நகரம் அமைந்துள்ள நியுசவுத்வேல்ஸ் மாநில சுவாத்தியத்துக்கு ஏற்றவகையில் வெள்ளையர்களால் கொண்டுவந்து நடப்பட்ட தாவர இனங்களை இனவிருத்தி செய்யவேண்டிய கட்டாயத்துக்கு விவசாய விஞ்ஞானிகள் ஆளாக்கப்பட்டிருந்தார்கள். இந்த ஆராச்சியின் நீட்சியில் எனக்கும் தொடர்புண்டு.

இந்த ஆராச்சியில் நான் ஈடுபடுவதும,; இது விடயமாக சிட்னி சுவாத்தியத்தை அச்சொட்டாக ஒத்த தென்சீனா மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு சென்று வருவதும் உடையார் மாமாவுக்கு தெரியும்.

பிறிதொரு நாள் அவசரகதியில் தன் மகள் குடும்பத்துடன்; வீட்டிற்கு வந்த உடையார், தென் ஆபிரிக்க டேர்பன் நகரில் கறுத்தக் கொழும்பான் மாமரத்தை ஒத்த ஒருமரம் நன்கு காய்ப்பதாகவும், அதன் ஒரு இளையத்தை (tissue) அல்லது கொப்பை சிட்னிக்கு கொண்டுவந்து பறங்கி நண்பண் வீட்டில் உள்ள மரத்துடன் கலப்பதன் மூலம் அல்லது ஒட்டுவதன் மூலம் நியூசவுத்வேல்ஸ் மாநில சுவாத்தியத்துக்கு இனவிருத்தி செய்யலாம் என்ற ஆலோசனையை முன்மொழிந்தார். அத்தோடு நிற்காது, அடுத்தமுறை ஆராச்சி வேலை நிமித்தம் நான் தென் ஆபிரிக்காவுக்கு செலலும்போது தானும் தனது சொந்த செலவில் என்னுடன் வருவதாகச் சொன்னார். உடையார் மாமா விடாக்கண்டன் வம்சத்தை சேர்ந்தவர் என்று ஏலவே சொல்லியிருந்தேன். அவர் தமது வாழ்க்கைப் பயனையும் கறுத்தக் கொழும்பானின் வெற்;றியையும் முடிச்சுப் போட்டுள்ளதை நான் அறிவேன். கூட்டிக் கழித்துப் பார்த்தபொழுது அவருடைய கறுத்தக் கொழும்பான் பற்று மண்பற்றின் இன்னொரு நிலை என்பதை புரிந்து கொண்டேன். அதனை மதித்ததனால் அவருடைய கோரிக்கைக்கு சம்மதித்தேன்.

3

அந்த நாளும் வந்தது! உடையார் மாமாவும் நானும் தென் ஆபிரிக்காவின் டேர்பன் நகருக்கு பறந்தோம். தென் ஆபிரிக்காவின் தலைநகரான யோகான்ஸ்பேர்க்கில் இறங்கி உள்ளூர் பறப்பின் மூலம் டேர்பனை அடைந்தோம். தென் ஆபிரிக்காவில் டேர்பனிலும் அதன் அயலிலும் இந்தியர்கள் செறிவாக வாழ்ந்து வருகின்றார்கள்.

டேர்பன் ஒரு துறைமுகநகரம். தென் ஆபிரிக்காவின் வெள்ளையர்களின் அரசு துறைமுக வேலைகளுக்காக இந்தியர்களை கூலிகளாக கொண்டு வந்திருந்தார்கள். அவர்களுள் தென் இந்தியர்களே அதிகம். பெரும்பான்மையானவர்கள் அன்றைய மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த தமிழர்கள். இவர்கள் தவிர குஜராத் மாநிலத்திலிருந்து வந்தவர்களும் தென் ஆபிரிக்காவில் வசிக்கிறார்கள். இவர்கள் கிழக்கு ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் வணிகர்களாக குடியேறியவர்கள். அவர்கள் தமது வணிக முயற்சிகளை தென் ஆபிரிக்காவின் டேர்பன் நகரம்வரை விரிவு படுத்தியுள்ளார்கள். இவர்களது வணிக நிறுவனங்களில்; முன்னால் நிற்கும் விற்பனையாளர்கள் ஆபிரிக்க கறுப்பர்கள். குஜராத்தி முதலாளிகள் பின்புலத்தில் இருந்து கொண்டு சூத்திரக் கயிறுகளை லாவகமாக இழுத்துக் கொண்டிருப்பார்கள். இந்தக் குஜராத்தியர்களுடைய தென் ஆபிரிக்க தொடர்புகளே மகாத்மா காந்தியைத் தென் ஆபிரிக்காவுக்கு கொண்டு வந்தது என்பது தனிக்கதை. இருபதாம் நூற்றாண்டின், ஐம்பதாம் அறுபதாம் ஆண்டுகளில், தென் ஆபிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை கடுமையாக அமுலாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கறுப்பர்களுக்கும் இந்தியர்களுக்கும் உயர்கல்வி உட்பட பல்வேறு உரிமைகள் அப்போது மறுக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக இந்திய நலன் விரும்பிகளின் முயற்சியால் 1960 ம் ஆண்டு University College for Indians என்னும் கல்வி நிறுவனம் தென் ஆபிரிக்காவின்  Salisbury தீவில் நிறுவப்பட்டது. இன ஒதுக்கல் கொள்கைக்கு பயந்த இந்திய மாணாக்கர்கள் இக்கல்வி நிறுவனத்தில் அப்போது குறைவாகவே சேர்ந்தார்கள். இருப்பினும் எண்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்திலே தோன்றிய இன ஒதுக்கலுக்கு எதிரான எதிர்ப்பலை பெருமளவு இந்திய மாணாக்கர்களை இக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கத் தூண்டியது. இந்த எழுச்சியின் காரணமாக இந்தியர்களுக்கான பல்கலைக்கழகக் கல்லூரியாக இருந்த இந்த நிறுவனம் முழுமையான பல்கலைக்கழக அந்தஸ்;தைப் பெற்று 1971 ம் ஆண்டு  University of Durban – Westville என்னும் பெயரைப் பெற்றது. 1984 ம் ஆண்டு தொடக்கம் இப்பல்கலைக் கழகத்தில் இந்திய மாணாக்கர் மட்டுமல்லாது கறுப்பர்களும் வெள்ளையர்களும் சேர்ந்து படித்துப் பயன் பெறுகிறார்கள். பெரும்பான்மையாக இந்திய விரிவுரையாளர்களே பணிபுரிந்த இக்கல்வி நிறுவனத்தில் தற்போது மாணாக்கர்களின் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப கறுப்பர்களும், ஒரு சில வெள்ளைக்காரர்களும் பணிபுரிகிறார்கள்.

University of Durban பூங்கனியியல் பிரிவு மாம்பழ ஆராய்ச்சி மாநாடொன்றை சர்வதேசரீதியாக ஒழுங்கு செய்திருந்தது. இம்மாநாட்டில் 'அவுஸ்திரேலியாவில் மாம்பழச் செய்கையின் சாதகபாதகங்கள்' என்னும் தலைப்பில் நான் பணிபுரியும் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றைச் சமர்ப்பிக்கும்படி நான் அழைக்கப்பட்;டிருந்தேன். இது உடையார் மாமாவுக்கு தெரியவந்த பொழுதுதான் என்னுடன்கூடவே தென் அபிரிக்காவுக்கு வந்திருந்தார்.

உடையார் மாமாவுக்கு ஆங்கில அறிவு அப்படி இப்படித்தான் என்பது பரமரகசியமல்ல. விஞ்ஞான கலைச் சொற்கள் சுட்டுப் போட்டாலும் அவருக்கு விளங்கியிருக்க மாட்டாது. இருப்பினும் மாநாட்டின் இடைவேளையில் இந்தியாவில் இருந்து வந்திருந்த விவசாய விஞ்ஞானிகளுடன் நன்கு பழகி பலவகையான தகவல்களைச் சேகரித்துக் கொண்டார். இரவில் நாம் தங்கியிருந்த விடுதிக்கு வந்தவுடன் தான் சேகரித்த தகவல்களை 'ஒரு சின்னப்பிள்ளை தன் தாய்க்கு கதை சொல்வதுபோல்' ஆர்வமுடன் எனக்கு ஒப்பிப்பார்.  ஒரு நாள் ஒரு சின்னப்போத்தலில் ‘Cultar’ என்னும் இரசாயன திரவத்தை கொண்டுவந்து காட்டினார். மாநாட்டு மண்டப விறாந்தையில் விவசாய மருந்துக் கொம்பனிகள் பல்வேறு விவசாய உபகரணங்களையும் மருந்துகளையும் காட்சிக்கு வைத்திருப்பதாகவும் அங்கு ஊரடவயச திரவத்தை அன்பளிப்பாக கொடுத்ததாகவும் சொல்லி மாமரத்துக்கு இதை தெளிக்கலாம் எனச் சொன்னதாகவும் சொன்னார். மாமா கொண்டுவந்த திரவம் மாமரத்தின் வளர்ச்சியைக் குறைத்துக் குட்டையாக வைத்திருக்கும். இதன் பயன்பாட்டை எவ்வாறு உடையார் மாமாவுக்கு விளக்குவது என குளம்பிப் போயிருந்தேன்.    மாமாவின் கைதடி வீட்டில் உள்ள ஒரு பரப்பு காணியை மூன்று கறுத்தக் கொழும்பான் மாமரங்கள் ஆக்கிரமித்திருந்ததாக, ஒருதடவை கதையோடு கதையாக சொலிலியிருந்தார்.
மாமரத்திலே பூக்கள் எங்கே அதிகமாகத் தோன்றும்? என அவரது விவசாய அறிவைச் சோதிப்பவனைப்போல கேட்டேன். இளம் கிளைகளின் நுனிக்குருத்தே பூக்களாக மாறுவதாகவும், பெரியமரங்களின் கிளைக்கூடலின் உட்பகுதியில் இளம் இலைக் குருத்துக்கள் இல்லாததால் மரத்தின் கிளைக்கூடலின் ((Vegetative Crown)) வெளிப்பகுதியில் மாத்திரம் பூக்கள் தோன்றி மாங்காய் காய்ப்பதாகவும் சொன்னவா,; உட்பகுதி கொப்புக்களில் உள்ள கிளைகளில் மிக அரிதாகவே பிஞ்சுகள் வருவதாகவும் மேலதிக தகவலை சொல்லி என்னை அசத்தினார். ஒரு பரப்புக் காணியில் சின்ன கிளைக்கூடல்   கொண்ட எத்தனை மாமரங்கள் நடலாம் என மேற்கொண்டு கேட்டேன். ஆறு மரங்களாவது நடலாம் என்றார்.

மூன்று பெரிய மரங்களின் கிளைக் கூடலின் வெளிப்புறத்தில் காய்க்கும் மாங்காய்களைவிட சிறிய கிளைக்கூடல்கள் கொண்ட ஆறு மாமரங்களில் அதிக மாங்காய்கள் பெறலாமல்லவா என நான் கேட்டேன்.

'உண்மைதானடா தம்பி, அதுக்காகத்தான் தின்னவேலி பாமிலை மாமரங்களைக் கவ்வாத்துப் பண்ணிறவங்கள'; என்று தமது அநுபவத்துக்குப் புதிய விளக்கம் கண்ட குதூகலத்தில் சொன்னார்.

கவ்வாத்துப் பண்ணுவது ஒரு முறை. இன்னுமொரு முறை நீங்கள் கொண்டுவந்த ஊரடவயச என்ற மருந்தை தெளிப்பது அல்லது கரைத்து மரத்தின் அடிக்கு ஊற்றுவது. இந்த மருந்தை  PB2  என்றும் கூறுவதுண்டு. இது இம்மருந்தின் இரசாயனப் பெயரான '‘Paclobutrazol’' இன் சுருக்கம் என விளக்கம் சொன்னேன்.

பள்ளிக்கூட மாணவன்போல் நான் சொல்லும் ஒவ்வொரு தகவலையும் கவனமாக குறிப்புப் புத்தகத்தில் பதிந்து கொண்ட உடையார் மாமா, தான் எதிலும் சுழியனே என்பதை மீண்டும் நிரூபித்தார்.
4
உடையார் மாமா டேர்பன் நகரில் இருந்தபோது சும்மா இருக்கவில்லை. அது அவர் சுபாவமும் அல்ல. தனக்குத் தெரிந்த 'கத்திப்பிடி' ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு சகல மட்டத்திலும் சிநேகிதர்களைப் பிடித்துக் கொண்டார்.

கலாநிதி மன்றீ (Dr. Mundree) என்னும் இளைஞன் ஒருவன் இவருடன் வாஞ்சையுடன் ஒட்டிக் கொண்டான். அங்கிள் என்று அழைத்து இவருக்கு சகல உதவிகளையும் செய்தான். இதனால் உடையார் மாமா எனக்குத் தொல்லை தருவதைத் தவிர்த்து மன்றீயுடன் பல இடங்களுக்கும் போய்வரத் துவங்கினார். இந்த இளைஞனை நான் நன்கு அறிவேன். இவனின் தாவர ஆராய்சிகள் மிகவும் பிரசித்தமானவை. பல ஆராய்சிக் கட்டுரைகளை சர்வதேச விஞ்ஞான சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளான். விவேகமான ஆராய்சியாளான். டேர்பன் பல்கலைக்கழகத்தில் மதிக்கப்படும் விரிவுரையாளனாக பணிபுரிகின்றான்.

ஒரு நாள் உடையார் மாமா அந்த இளைஞனை என் இருப்பிடம் கூட்டிவந்தார். அவனுடன் ஒர் இந்திய பெண்ணும் வந்திருந்தாள். செல்வி டாக்டர் ஐயர் என அவளை அறிமுகப்படுத்தி தன்னுடைய ஆராய்ச்சிகளிலே அவள் பெரிதும் ஈடுபாட்டுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாகவும் கூறினான்.

பரஸ்பர குசலம் விசாரிப்புக்கு மத்தியில் அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்த சிறார்களுக்கு 'தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும்' ஏற்ற வகையில் எழுதப்பட்ட புத்தகத்தை கலாநிதி மன்றீக்கு அனுப்பி வைக்க முடியமா? என உடையார் மாமா என்னைக் கேட்டார். 'டொக்டர் மன்றீக்கா.....?' என வியப்பு மேலிடக் கேட்டேன்.

அவன் வெள்ளைக்காரன் போல் தோற்றமளித்தான். அவன் பெயரும் தமிழ் பெயர் போல் தோன்றவில்லை. இவனுக்கு ஏன் தமிழின் மேல் ஆர்வம்?

இப்படி என் தலையிலே கூத்தாடிய கேள்விகளே என் வியப்புக்கு காரணம்.

என் தடுமாற்றத்தினை புரிந்து கொண்ட உடையார் மாமா, 'நீ என்ன யோசிக்கிறாய் என்று சொல்லட்டே? இவன் தமிழ் படிக்க ஆசைப்படுகிறான். இவன் ஒரு பச்சைத் தமிழன். இவனுடைய முன்னோர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள். இவனுடைய கொள்ளுத் தாத்தாவின் பெயர் நாராயண-மந்திரியாம். அவர் கூலியாக வந்த காலத்தில் நாராயண'மந்திரி' என தன் பெயரைச் சொன்னது புரியாமல் பதிவேட்டில் வெள்ளையன் மன்றீ ((Mundree) என பதிந்து விட்டானாம். அதுவே இன்றும் நிலைத்துவிட்டது' என்று அவனது பூர்வீகத்தை எடுத்துச் சொன்னார். அவனும் அதை ஆமோதிப்பவன்போல் புன்னகைத்தான்.

எவ்வளவு தலைமுறைகள்! இந்த நாட்டின் வாழ்க்கையின் தன்மையுடன் கரைந்துவிட்டன. யதார்த்தம் இவ்வாறு இருக்கும் போது ஏன் தமிழ்படிக்கும் ஆசை உனக்கு வந்தது என அவனைச் சீண்டும் குரலிலே கேட்டேன்.

'என்ன அப்படிக் கேட்கிறீங்கள்? என விநோதமாக என்னைப் பார்த்தவன் 'தமிழ் என் இனத்தின் அடையாளமல்லவா....?' என மிடுக்குடன் கேட்டான்.

ஆபிரிக்க நாடொன்றில் இப்படி ஒரு தமிழ் இளைஞன் இருப்பதையிட்டு உண்மையிலேயே நான் பெருமைப் பட்டேன். மகிழ்ச்சி தாங்காமல் அவனை ஆரத் தழுவி இரவு விருந்துக்கு அவர்களை அழைத்தேன்.

மன்றீ, டேர்பன் நகரிலுள்ள இந்திய உணவு விடுதிக்கு வழிகாட்டினான்;.

உடையார் மாமா, நான், அந்த இளைஞன், அவனுடன் வந்திருந்த டாக்டர் ஐயர் என்ற பெண் அனைவரும் புரியாணிக்கு ஓடர் கொடுத்துக் காத்திருந்தோம். அங்குள்ள ஒலிபெருக்கியில் இந்தி திரையிசைப்பாடல்களும் இடையிடையே தமிழ், மலையாள, தெலுங்கு பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன. பாடல் இடம் பெற்ற படம, பாடியவர்கள் பற்றிய விபரங்களை ஒலிபரப்பாளர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். என் வியப்பினைப் புரிந்து கொண்ட மன்றீ 'இது டேர்பன் நகரில் இயங்கும் தனிப்பட்ட இருபத்திநாலு மணி இந்திய வானொலி' என்றான்.

அங்குள்ள பல இந்தியர்கள் தமிழர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தமது தாய் மொழி தெரியாது. ஆனால் இந்திய திரைப்படங்களையும், திரை இசைப்பாடல்களையும் பெரிதும் விரும்பி ரசிக்கிறார்கள். இந்திய திரைப்படங்கள் மூலம்தான் இந்திய கலசாரம் தென் ஆபிரிக்காவில் பெயரளவுக்கேனும் நிலைத்திருப்பதாக டாக்டர் ஐயர், மன்றீயின்  கூற்றினை ஆதரித்துப் பேசினாள். அந்த வேளையிலேதான் ஓர் உண்மை உறைத்தது. இந்தியாவிலே தாம் இந்தியர்கள் என்று சொல்வதிலும் பார்க்க, கன்னடத்தான், மலையாளி, குஜராத்தி, வங்காளி, தெலுங்கன், பஞ்சாபி என தம்மை அடையாளப்படுத்திக்  கொள்ளுகிறார்கள். தமிழ் நாட்டிலேகூட தமிழர்களைப் பார்ப்பது அரிது. மறவர், பறையர், வன்னியர், கவுண்டர், தேவர், முதலியாh,; பார்ப்பணர், தலித் என்கிற ஜாதிகளாலே தான் மக்களைப் பார்க்கலாம்.

'இந்திய இனம்' என்பது உண்மையிலேயே வலிந்து புகுத்தப்ட்ட கருத்துவம் என்கிற எண்ணம் எனது இந்திய பிராயாணங்களின்போது ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவும் அமைந்துவிடுகிறது. ஆட்சி அதிகாரத்துக்கும், அடக்கு முறைக்கும் உள்ள வித்தியாசத்தை உணரமுடிகிறதா?

அடக்குமுறையின் காரணமாக தென் ஆபிரிக்காவிலும் மொறேசியஸ், பிஜீ தீவுகளிலும் இந்தியர்கள் மொழி ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் தங்களை அடையாளப்படுத்தாமல் ஒரே இந்திய இனமாகக் காட்சியளித்தது மகிழ்ச்சியைத் தந்தது.
இதன் தொடர்ச்சியாக, 'இந்திய மக்களுடைய நலன்களை முன்வைக்கும் இந்திய மொழிப் பத்திரிகைகள் ஏதாவது வெளிவருகின்றதா?' எனக் கேட்டேன்.

இந்தியர்களுக்காக நடாத்தப்படும், இந்தியர்களின் புதினங்களை பெருமளவில் தாங்கி ஆங்கில மொழிப் பத்திரிகையொன்று வெளிவருவதாகவும் இதன் ஐPவிதம் விளம்பரங்களிலேயே தங்கியிருப்பதாகவும் ஐயர் பெண் கூறினாள்.
சின்னனும் பெரியதுமாய் பெருவாரி சைவக் கோவில்களும் பிரார்த்தனைக் கூடங்களும் இருப்பதாகவும் இன்னமும் திருமணங்கள் இந்திய சம்பிரதாய முறைப்படியே நடப்பதாகவும் தான் அறிந்த விபரங்களை உடையார் மாமா அவிழ்த்து விட்டார். 'சிறுபான்மை இன வெள்ளையர்களின் ஆட்சிமாறி,  பெரும்பான்மை கறுப்பர்களின் ஆட்சிவந்தபின், தென் ஆபிரிக்க இந்தியர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கிறது?' என என் மனதில் கனகாலம் உறங்கியிருந்த கேள்வியை கேட்டேன்.

சிறிது நேரம் மௌனம் சாதித்த மன்றீ தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, 'முன்பு வெள்ளையர்களுக்குப் பயந்து அடிமைகளாக கறுப்பர்களும் இந்தியர்களும் வாழ்ந்தோம். இப்போது கறுப்பர்களுக்குப் பயந்து இந்தியர்களும் வெள்ளையர்களும் வாழ்கிறார்கள். மொத்தத்தில் இந்தியர்களின் வாழ்க்கையில் பெரிதளவு மாற்றமெதுவுமில்லை' என்றான்.

அவனுடைய பதிலில் ஒருவகை விரக்தி புரையோடிக்கிடந்தது.

புதிய சூழலில் வெள்ளையர்களும் இந்தியர்களும் குழுக்களாக அங்கு வாழ்கிறார்கள். இவர்களின் வீடுகளைச் சுற்றி உயர்ந்த மதில்கள் எழுப்பப்பட்டு பாரிய இரும்புக்  கேற்றுக்களும் போடப்பட்டுள்ளன. வளவின் உள்ளே என்ன நடைபெறுகிறது என்பது வெளியே தெரியாது. அவர்களின் மதிலும் கேற்றும் போயஸ்கார்டினிலுள்ள ஜெயலலிதாவின் வீட்டையே ஞாபகப்படுத்தும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆபிரிக்கன் காவலுக்கு இருப்பான். மணி அடித்தால் கேற்றில் உள்ள சிறிய துவாரக் கதவை திறந்து விபரம் கேட்பான். காவலுக்கு இருக்கும் கறுப்பன் எவ்வளவு தூரம் விசுவாசமாக இருப்பான் என்பது அவரவர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. இரவில் வீதிகளில் இந்தியர்கள் நடந்து போவது மிகவும் அரிது. வெள்ளையர்கள் தங்கள் வாகனங்களில் துவக்கு வைத்திருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்..., என தான் சேகரித்த தகவல்களை சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் உடையார் மாமா சொல்லத்துவங்கினார். இந்த உரையாடல்களுக்கு மத்தியில் தனது கைக்கடிகாரத்தை பார்த்த ஐயர் பெண் தான் தேவாலயத்துக்கு போகவேண்டுமென்று மன்றீக்கு மெல்லச் சொன்னாள்.

இது உடையார் மாமாவின் பாம்புக்காதுக்கு கேட்டுவிட்டது.

'தேவாலயத்துக்கா....? நீ ஐயர் பெம்பிளை, சேர்ச்சுக்கு போறியோ...?'

அவர் என்ன பேசுகிறார் என்று புரியாமல் விழித்தாள் ஐயர் பெண்

நிலைமையைச் சமாளிக்க 'உனது பெயரின் அர்த்தம் தெரியுமா...?' என அவளைக் கேட்டேன்

இல்லை என்றவள் தனது மூதாதையர்கள் தென் இந்தியாவில் பண்டிதர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என தான் அறிந்ததாகச் சொன்னாள்.

உடையார் மாமாவின் முகத்தில் கோவம் தெரிந்தது. அவர் தம்மை ஆசாரமான இந்து என்பதை வலியுறுத்தி வாழ்பவர். எந்த மதத்தவராக இருந்தாலும் ஆதாயத்துக்காக மதம் மாறுவது அவருக்கு பிடிக்காது. 'ஐயர்' என்ற சொல்லின் அர்த்தத்தை விளக்கியவர் 'ஒன்றில் உன் பெயரை மாத்து, அல்லது உன் மதத்தை மாற்று என்று கூறிய அவர் 'ஐயர்' பெம்பிளை சேர்ச்சுக்கு போறாள் என்பது வேடிக்கையாக இருக்கிறது என்று தன்பாட்டில் புறுபுறுத்தார். பெயருக்கான விளக்கத்தைக் கேட்ட இளைஞனும் பெண்ணும் வாய்விட்டுச் சிரித்தார்கள். தான் பிறந்த நாள்முதல் கிறீஸ்தவராக இருப்பதாகவும் தனது பாட்டனார் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருக்கலாம் எனச் சொன்னவள், இற்றை வரையில் தனது பெயரில் இப்படி ஒரு வில்லங்கம் இருப்பது தெரியாது என்று சொல்லி தனது ஆச்சரியத்தை மறைப்பதற்கு ஐயர் பெண் அழகாகச் சிரித்தாள்.
5
மாம்பழ மாநாடு முடிந்தது! மாமர செய்கைபற்றிய பல்வேறு தகவல்களை மாமாவால் திரட்ட முடிந்தது என்பது உண்மையே. இருந்தாலும் கறுத்தக் கொழும்பான் மாமரத்தை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வருவதற்கான வழிவகை எதுவும் அந்த மாநாட்டினால் தெரியவரவில்லை.

இலங்கை அகதிகள் வேறொரு நாட்டில் தற்காலிகமாக தங்கி, ஐரோப்பாவுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ நுழைவதுபோல தென் ஆபிரிக்காவுக்கு கறுத்தக் கொழும்பானை கொண்டுவந்து அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வரமுடியுமா என்று பல 'ரூட்'டுக்களிலும் உடையார் விசாரணைகளை நடத்திய போதிலும், எதுவும் சாத்தியமானதாகப் பொருந்திவரவில்லை எனபது அவருக்கு ஏமாற்றம் தந்தது.

அங்கு வாழும் இந்தியர் ஒருவரின் வீட்டில் கறுத்தக் கொழும்பான் நிறையக் காய்க்கிறது என அவர் கேள்விப்பட்டதை உறுதிப்பபடுத்த முடியாத நிலையில், பிறிஸ்பனில் உள்ள அவரது பறங்கி நண்பரின் வீட்டில் வளரும் கிளையை அவுஸ்திரேலிய இன மாமரத்தில் ஒட்டி முயன்று பார்க்கலாம் என அவரை அமைதிப்படுத்தினேன்.

கறுத்தக் கொழும்பான் மாம்பழம் பற்றி உடையார் மாமாவுக்கு முந்தி இருந்த தீவிரம், தென் ஆபிரிக்காவுக்கு போய்வந்தபிறகு இல்லை என்று எனக்குத் தோன்றியது. அதற்கு பதிலாக அவரிடம் புதியதொரு தீவிரம் முளை கொண்டிருப்பதை அவதானிக்கமுடிந்தது. உடையார் மாமா தனது மூத்த பிரசைகள் சங்க சகாக்களுடன் அடிக்கடி, சிட்னியிலே தமிழ் கற்பிக்கும் முயற்சிகளிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பாடசாலைகளுக்கு வார இறுதி நாட்களிலே சென்றுவருவதை அறிந்தேன். அங்கு அந்நிய மொழிச் சூழலில் வாழும் சிறார்களுக்கு தமிழ் கற்பிக்க பாவிக்கப்படும் பாடநூல்களையும் பயிற்சி நூல்களையும் மட்டுமல்லாது பேச்சுத் தமிழுக்கான குறுந்தட்டுக்களையும் வாங்கிச் சென்றதாக அறிந்தேன். இதன் பின்னணியை என்னால் ஓரளவு ஊகித்துக் கொள்ள முடிந்தது. அன்று உடையார் மாமா வீட்டிற்கு வந்திருந்தார். இந்த தடவை ஹோம்புஸ் தமிழ் பாடசாலையில் தமிழ் கற்பிக்கும் ஈடுபாட்டினால் அறியப்பட்டவரான என்னுடைய நண்பர் ஒருவரையும் அழைத்து வந்திருந்தார். அந்தக் கூட்டணியைப் பார்த்ததுமே எனது ஊகம் சரியானதுதான் என்பதை உணரமுடிந்தது.

நான் அவர்களை முகமன்கூறி உபசரித்தேன். உடையார் மாமாவைப் பார்த்து 'கறுத்தக் கொழும்பான் மாமரத்திலை சில கிளைகளை வெட்டுவதற்கு உங்கள் நண்பரைக் கேட்டுப்பாருங்கோவன். இப்ப சுவாத்தியமும் நல்லாய் இருக்கு, அவற்றை ஒட்டுவதற்கு என்னிடம் உள்ளூர் மரக்கன்றுகளும் இருக்கின்றன' என்ற செய்தியை மிக அக்கறையுடன் சொன்னேன்.

'அந்த சிங்களவங்கள் கண்னொறுவவிலுள்ள நிலையத்திலை கறுத்தக் கொழும்பானை விரட்டி அடிச்சாலும் பறுவாய் இல்லை தம்பி. இதிலும் பார்க்க குடிமுழுகப்போற சங்கதி ஒண்டு இருக்குது. அதை நீ தென் ஆபிரி;க்காவிலை பார்த்தனீ தானே. இப்ப எங்கடை தமிழைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போறதுதான் கறுத்தக் கொழும்பானிலும் பார்க்க முக்கியம். டேர்பனுக்கு  மாம்பழ மாநாட்டுக்கு வந்து நான் தெளிவு பெற்ற அறிவு இதுதூன்' என்று கூறி உடையார் மாமா மனம் விட்டுச் சிரித்தார்.  'பிறகென்ன, புத்தர் போதிமர ஞானம் பெற்றது போல, நீங்கள் கறுத்தக் கொழும்பான் மாமர ஞானம் பெற்று விட்டீர்கள் என்று சொல்லுங்கோவன்' என்று கூறி அவருடைய சிரிப்பில் சங்கமமானேன்.

'தம்பி, இது சிரிக்கிற விடயம் இல்லை. அந்த டேர்பன் பெடியன் மன்றீ, ஐயர் பெட்டை எல்லாரும் தமிழர்தானே. இப்ப தமிழ் தெரியாமல் எங்களுடன் தமிழில் பேசமுடியாமல்....சே, அந்த மன்றீ தமிழிலை தான் பேசமுடியாததுக்கு எவ்வளவு துக்கப்பட்டவன் எண்டது எனக்குத்தான் தெரியும்.....'

'எடதம்பி, தமிழ் பற்றிய தியானம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழிமூலம் எடுத்துச் செல்லப்படவேண்டும். அது எங்களாலைதான் முடியும். தென் ஆபிரிக்காவிலை பார்த்தாய்தானே? அங்கை வாழும் தமிழர்கள் தமிழை மறந்து, ஓர் இந்திய இனத்தின் அங்கமாக நிர்ப்பந்தவசத்தால் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவலங்களுக்கு மத்தியிலை தமிழை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்லவேண்டிய கடமை எங்களுடையதாகத்தான் இருக்கிறது' என ஒலிபெருக்கிக் கருவி இல்லாத குறையாக தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற பிரசார கூட்டத்திலே பேசுபவரைப் போல விளாசித் தள்ளினார் உடையார் மாமா. 'தமிழ் அழிவதை தமிழ் நாடும் அங்குள்ள தமிழ் தலைவர்களும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்' என்று நான் வேண்டுமென்று சொன்னேன். உடையாரை உசுப்பி விட்டால் உணர்ச்சி வேகத்தில் பொங்குவார் என்பது எனக்குத் தெரியும். 'நீ கறுத்தக் கொழும்பான் ஞானம் என்று பகிடி பண்ணினாலும் பறுவாய் இல்லை. தென் ஆபிரிக்காவிலையும், மொறிசியஸ் தீவிலையும், பிஜித் தீவிலையும் தமிழ் அழிஞ்சதை தமிழ் காவலர்கள் எல்லாரும் பார்த்துக் கொண்டுதானே இருந்தவை. இல்லை தெரியாமல்தான் கேட்கிறன். நீ சொன்ன தமிழ் நாடு எங்கை இருக்கு? ஒரு மாநிலம் இருக்குது, அங்கை ஒரு பக்கத்தாலே ஆங்கிலமும் மறுபக்கத்தால இந்தியும் போட்டி போட்டுக் கொண்டு வளருது. நீ தமிழ் நாட்டு 'டிவி' யில பேசிற 'தமிங்கிலத்தை' கேட்கிறனிதானே?

இப்பதான் எனக்கு உண்மை விளங்குது. தமிழ் இனம் ஒன்று இருப்பதை தமிழ் மொழிமூலம் தான் அடையாளப் படுத்தலாம். எனவே சிட்னி போன்ற இடங்களிலே நமது நாளைய தலைமுறைகளின் நாவிலே தமிழ் வாழ்ந்திட வேண்டும்...' என்று   ஒரு பிரார்த்தனை போன்று கூறி மௌனமானார்.

அந்த மௌனத்தின் உறுதி என்னுள் ஒரு சிலிர்ப்பினை ஏற்படுத்தியது. 'கறுத்தக் கொழும்பானின் சுவையிலும் பார்க்க தமிழ் மொழியின் சுவை மேலானதும் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றும்' என்கிற உடையார் மாமாவின் ஞானத்தினால் நான் புதிது கற்றுக்கொண்ட உற்சாகம் பெறலானேன்.  

(நன்றி: ஞானம்)

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R