படித்தோம் சொல்கின்றோம்: "காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி" சுயவிமர்சனங்களை நாடும் தெய்வீகனின் அரசியல் பத்தி எழுத்துக்கள்எழுத்தாளர் முருகபூபதி' தந்தையாய்', 'தளபதியாய்', ' தலைவராய்', பயணித்த தமிழர் அரசியல் தற்போது ' ஐயாவாய்' வந்து புதுவடிவம் பெற்று நிற்கிறது என்றார் அண்மையில் என்னிடம் அரசியல் பேசிய முதியவர் ஒருவர்." எனத்தொடங்குகிறது அந்தப்பத்தி எழுத்து. தலைப்பு: ஐயாவின் பதவி: வரமா? வலையா? இந்தப்பத்தியை எழுதியிருப்பவர் மெல்பனில் வதியும் ஊடகவியலாளர் தெய்வீகன். இவர் இலங்கையில் வெளியாகும் தமிழ் மிரர் பத்திரிகையில் 2015 - 2016 காலப்பகுதியில் தொடர்ச்சியாக எழுதிய அரசியல் பத்திகள், இந்த ஆண்டில் (2017 இல்) தனிநூலாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. கிளிநொச்சி மகிழ் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

தெய்வீகன் ஏற்கனவே இலங்கையில் சுடரொளி, வீரகேசரி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றி அனுபவம் பெற்றிருப்பவர். அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் இங்கு வெளியான ஈழமுரசு பத்திரிகையிலும் எழுதியிருப்பவர். தீவிர இலக்கியவாசகர். ஆனால், இவருக்கு இருப்பது ஊடகம் சார்ந்த முகம்தான். அதனால், இலாவகமாக அரசியல் பற்றி விமர்சிக்கவும் ஆழமாக ஆய்வுசெய்யவும் இவருக்குத் தெரிந்துள்ளது. சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு சிறந்த ஊடகவியலாளனின் கடமை. அதனை செவ்வனே நிறைவேற்றி வருபவர் தெய்வீகன்.

நூலின் தலைப்பு: காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி. நூலைப்புரட்டினால், இடம்பெற்றுள்ள 34 அரசியல் பத்திகளிலும் இந்தத்தலைப்பினை காணமுடியாது. அதனால் சற்று வித்தியாசமான தொகுப்பு. தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் புலி அரசியலைவிட்டு, தமிழ்த்தலைவர்கள் மட்டுமல்ல பத்திரிகைகளும் ஊடகவியலாளர்களும் வாசகர்களும் ஒதுங்கமுடியாது என்பதையும் காலியாக்கப்பட்ட இந்த நாற்காலி சொல்கிறது. நாற்காலி பேசுமா...? நாற்காலிகளுக்காகத்தானே தற்பொழுது பேசிக்கொண்டிருக்கிறார்கள் எமது தலைவர்கள்... !!! வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ன யோசனையில் தமது இயக்கத்திற்கு புலியின் பெயரைச்சூட்டினார்...? அன்டன் பாலசிங்கமும், அடேல் பாலசிங்கமும் எழுதிய நூல்களில் அதன் விபரம் இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், இவர்களின் இயக்கத்தின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை புலிகள் பற்றி பல கவிதைகள் எழுதியிருக்கிறார்.

ஏன் அப்படி ஒரு தலைப்பினை தெய்வீகன் இந்த நூலுக்குச்சூட்டினார் என்பதையும் நூலில் தேடிப்பார்த்தேன். அவரது உரையும் இல்லை. பதிப்புரை எழுதியவரின் பெயரும் இல்லை. அந்த இடங்கள் காலியாக இருந்தாலும், எவருமே இன்று இல்லாத நாற்காலியில் புலி அமர்ந்திருக்கிறது. தலைவர்களின் பேச்சில், அரசுகளில் அச்சத்தில், ஊடகப்பதிவுகளில் புலி அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த வேடிக்கைதான் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் சமகால அரசியல் பத்திகள்.

இந்நூலின் நயப்புரையின் தொடக்கத்தில் இடம்பெற்ற " - ' தந்தையாய்', 'தளபதியாய்', ' தலைவராய்', பயணித்த தமிழர் அரசியல் தற்போது ' ஐயாவாய்' வந்து புதுவடிவம் பெற்று நிற்கிறது என்றார் அண்மையில் என்னிடம் அரசியல் பேசிய முதியவர் ஒருவர்." என்ற வரிகள் வாசகர்களை சிந்திக்கத்தூண்டுவது. முதியவர்கள் அனுபவசாலிகள். பல தலைவர்களை கண்டவர்கள். அவர்களின் சவடால் பேச்சுக்களைக்கேட்டவர்கள். இலங்கையில் என்னைச்சந்தித்த ஒரு முதியவரும் " அரசியலில் ஆணவம் மிஞ்சினால் கோவணம்தான் மிஞ்சும்" என்றார். ஆனாலும் என்ன செய்யமுடியும். அதே மாதிரியான தலைவர்கள்தானே வருகிறார்கள். தந்தையாய், தளபதியாய், தலைவராய், ஐயாவாய். பெயர்கள் மாறியிருக்கின்றன. ஆனால் தலைவராக விளங்கிய பிரபாகரன் அதிகம் பேசாமல், எந்தத்தலைவர்களையும் நம்பாமல் ஆயுதத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்திருந்தார். பலனையும் கண்டோம். அதன் அறுவடையை இன்று நாம் பார்க்கின்றோம். பார்ப்பதற்கு கிடைத்திருக்கும் ஊடகம் தெய்வீகன் போன்றவர்கள் எழுதும் அரசியல் பத்திகள். ஏற்கனவே சில பத்திரிகை ஆசிரியர்கள் எழுதிய ஆசிரியத்தலையங்கங்கள் மற்றும் சிலரின் பத்திரிகை அனுபவங்கள் நூல்களாக வெளியாகியிருக்கின்றன. ஆனால், அரசியல் விமர்சனப் பத்திகள் நூலுருவில் வெளியாவது அபூர்வம். காலம் கடந்துவிடுதல், மாற்றங்கள் நேர்ந்துவிடல் முதலான இன்ன பிற காரணங்களினால், ஊடகவியலாளர்கள் அரசியல் பத்திகளை நூலுருவாக்குவதில்லை.

தெய்வீகன் காலத்தின் தேவை கருதி தமது பத்திகளை தொகுத்து வெளியிட்டிருக்கிறார். அதனால், தமிழ் மிரரில் வாசிக்கத்தவறிய என்னைப்போன்றவர்களுக்கும் இந்த நூல் பயன்தருகிறது. அரசியல் பத்திகள் எழுதியதனால் அதிகார மையங்களினால் பரலோகம் அனுப்பப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுகளுக்கே இந்த நூலை தெய்வீகன் சமர்ப்பித்திருக்கிறார். அங்கதம், நளினம், தார்மீகக்கோபம், தீர்க்கதரிசனம், நினைவாற்றல் முதலான அம்சங்கள் ஒவ்வொரு பத்தியிலும் இழையோடுவதனால் சோர்வு தட்டாமல் படிக்க முடிகிறது.

" தமிழர்கள் அரசியலைப்பற்றி கதைக்கும் அளவுக்கு அரசியலை அறிவுரீதியாக அணுகுவதுமில்லை. ஆராய்வதும் இல்லை. மிக அபூர்வமாகவே முறைப்படியமைந்த துறைசார் நிலையிலான ஆய்வுகள் நடப்பதுண்டு. ஆகவே, மிகக் குறைந்தளவு புத்தகங்களே இந்தத்துறையில் வெளியாகி உள்ளன. அப்படி வெளியான புத்தகங்களும் பொதுவெளியில் கூர்மையாக வாசிக்கப்படுவதுமில்லை. விவாதிக்கப்படுவதுமில்லை. அதையும்விடக்கொடுமையானது அரசியல் தலைவர்களே புத்தகங்களை வாசிப்பதில்லை என்பது. பிற சமூகங்களில் தங்களுடைய அரசியற் சிந்தனைகளையும் வழிமுறைகளையும் தாம் முன்னெடுக்கும் அரசியலையும் பற்றித்தலைவர்கள் எழுதுகிறார்கள். விவாதிக்கிறார்கள். தமிழில் இந்தப்பண்பு, இந்த நிலை மிக அபூர்வமானது. குறைந்துவிட்டது" என்று பதிவுசெய்கிறது இந்த நூலின் பதிப்புரை.

உண்மைதான், மகாத்மா காந்தி, நேரு, இந்திராகாந்தி, ஃபிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா, மா ஓ சேதுங் முதலானோரிடம் வாசிக்கும் பழக்கம் இருந்தது. சமீபத்தில் மறைந்த ஜெயலலிதாவுக்கும் அந்தப்பழக்கம் நீடித்திருந்தது. நேரு தினமும் இரவில் கே. ஏ.அப்பாஸ் எழுதிய பத்திகளையும் இந்திராகாந்தி, குஷ்வந் சிங்கின் அரசியல் பத்திகளையும் படித்துவிட்டுத்தான் நித்திரைக்குச்செல்வார்கள். ஆனால், சமகாலத்தில் எமது தமிழ்த்தலைவர்களோ, விடிந்தால் யாருக்கு எதிராக அறிக்கை விடலாம் என்ற யோசனையுடன்தான் படுக்கைக்குச்செல்கிறார்கள். அல்லது யாருடைய ஆசனத்தை அடுத்து காலியாக்கலாம் என்ற கனவுடன் துயில்கொள்கிறார்கள். அவர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல்தான் காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி. பத்திரிகைகளில் செய்தி எழுதிவிடுவது சுலபம். இக்காலத்தில் Down load Journalism இருப்பதனால் அந்தப்பணி மெத்தச்சுலபம். ஆனால், அவற்றுக்கு தலைப்பிடுவதற்குத்தான் சற்று நேரம் எடுக்கும்.

இந்தத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்திகளுக்கு மிகவும் பொருத்தமான தலைப்புகள் இடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சில: விடிவு வராது: இப்போதைக்கு 'வீடியோ' தான்! - 'எழுக தமிழ்' மூலம் யார் எழவேண்டும் - உயர்ப்பிணங்களின் ஊழை - ஒரு திட்டு: உடைந்தது குட்டு - எல்லா வெளிச்சங்களும் விடிவுகளைத் தருவதில்லை - பால் குடத்தை தூக்கி எறிந்து பூனையை கலைக்கும் புத்திசாலிகள்' - சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் துருப்பிடிக்கும் நல்லாட்சி - வீரசிங்கம் மண்டபம் முதல் ஸ்கொட்லாந்து வரை - படி தாண்டிய விக்கி பரிதாபமானது கட்சி - இருப்பை அழித்தது 9-11; இருப்பதையும் அழிக்குமா 11 - 13 ? - கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன் - வலைகளுடன் போராட மீன்கள் தயாரா? - சிலுவையில் சிதறிய இரத்தம். தலைப்பினைப் பார்த்துவிட்டுத்தான் வாசகர்கள் தமது ஆர்வத்தின் விகிதாசாரத்தை தீர்மானிக்கிறார்கள்.

அதிகாரமையங்கள் இடத்துக்கிடம் காலத்துக்குக் காலம் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் மக்கள் நினைவு மறதியிலிருப்பதாக எண்ணிக்கொண்டு அரசியல் செய்யும் தலைவர்களையும் இனங்காட்டுகின்றன தெய்வீகனின் அரசியல் பத்திகள்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு கடற்படை அதிகாரிக்கு எதிராக மேற்கொண்ட வாய்த்தர்க்கத்தை தென்னிலங்கை ஊதிப்பெருப்பித்த சம்பவத்தையும், மகிந்தரின் பதவிக்காலத்தில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் வருகையை கண்டித்து விமல்வீரவன்ச ஆர்ப்பாட்டம் நடத்தியபோது பொலிஸார் அவ்விடத்தில் முற்றுகையிடவும் அந்த இடத்தில் நின்றுகொண்டே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிடம் தொலைபேசி ஊடாக முறையிட்டு பொலிஸாரை கலைந்துபோகச்செய்த சம்பவத்தையும் தர்க்கரீதியாக ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் தெய்வீகன்.

" நாட்டின் சகல குடிமக்களுக்கும் ஒரே நீதி, ஒரே நியாயம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நல்லாட்சி நடைபெற்றுவருவதாகவும் முப்பதாண்டு காலப் பகையுணர்ச்சிகளை மறந்து தம்மோடு இணைந்து நல்லிணக்கம் அடையவேண்டும் என்றும் மேடைக்கு மேடை கூட்டத்துக்கு கூட்டம் தமிழர்களுக்கு வகுப்பெடுக்கும் ரணில், கிழக்கு சம்பவத்தில் கடைப்பிடிக்கும் அணுகுமுறைதான் என்ன...? என்ற கேள்வியை தொடுத்திருக்கும் தெய்வீகன், குறிப்பிட்ட பத்தியின் இறுதியில், " சிறுபான்மை இனங்களின் புரிந்துணர்வு மிக்க நீடித்து நிலைக்கக்கூடிய ஒற்றுமையே இத்தகைய ஆக்கிரமிப்புக்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் பதிலாக அமையும்" என்ற தீர்வினையும் சொல்கிறார். இங்குதான் ஒரு ஊடகவியலாளனின் பொறுப்புணர்வு வெளிப்படுகிறது. அதனால்தான் முதலிலேயே " சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும்தான்" ஒரு ஊடகவியலாளனின் கடமை என்றோம்.

இன்னொரு தடவை மே 18 வந்திருக்கிறது எனத்தொடங்கும் பத்தியில், கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த நோக்கத்துடன் நாம் பயணித்த தூரம் எவ்வளவு? அதில் பெற்றுக்கொண்ட பலாபலன்கள் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறார். மே முதலாம் திகதி வந்தால் பத்திரிகைகளில் மேதினச்செய்திகள்தான் அதிகமாக இருக்கும். அதுபோன்று 2009 ஆம் ஆண்டின் பின்னர் வருடம்தோறும் மே 18 ஆம் திகதியும் அதனை அண்டிய நாட்களிலும் தமிழ்ப்பத்திரிகைகளில் முள்ளிவாய்க்கால் அவலம்தான் பேசுபொருளாக இருக்கும். நாம் பயணித்த தூரம் என்ன..? பெற்ற பலாபலன் என்ன..? என்று வினாத்தொடுக்கிறார். சிந்தனைக்கு விடப்படுகிறது. நினைவேந்தல் நிகழ்வுகள் வெறும் பத்திரிகைச்செய்திக்கான சடங்காகிவிடலாகாது என்ற ஆதங்கம் தொனிக்கிறது.

"தாயகத்தினதும் புலம்பெயர் மண்ணினதும், தமிழகத்தினதும் யதார்த்தங்களை மீள்பரிசீலனை செய்துகொள்வதுதான் இம்முறை மே 18 ஆம் திகதி அனைத்துத் தமிழர்களும் உறுதிசெய்துகொள்ளவேண்டியதாகும்" என்று பத்தியை நிறைவுசெய்கிறார். இது எழுதப்பட்ட திகதி 17 - 05-2016. இந்த உறுதிப்பாடுதான் தொடரவேண்டும் என்பதும் எழுதியவரின் ஆதங்கம்.

" உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூருவதென்பது, உணர்வுநிலை சார்ந்த விடயம் என்பதிலும் பார்க்க, அரசியல் சார்ந்த விடயமாகப்புனையப்படுகிறது." எனப்பதிவுசெய்யும் தெய்வீகன், " தான் தேர்தலில் வெற்றிபெற்றால் மாவீரர் நாளை தேசிய விடுமுறைநாளாக அறிவிப்பேன்" என்று சூளுரைத்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் மாவீரர் வார அரசியல் என்ற பத்தியில் கேள்வி கேட்கிறார். விஜயகலாவும் மறந்திருப்பார் அதனைக்கேட்ட மக்களும் மறந்திருப்பர். ஆனால், இந்த ஊடகவியலாளருக்கு நினைவாற்றல் அதிகம். அதுதான் அரசியல்தலைவர்களுக்கு கொள்ளி. மாவீரர் வார அனுட்டிப்புக்கான சமூகக்காரணியையும் விவரித்துள்ளார். போரிலே மாவீரராவது பெரிய தியாகம் என்ற உணர்வை ஏற்படுத்துவதில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட முயற்சியையும் விளக்குகிறார்.

"அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் சேவையில் தங்களை தூய்மையாக இணைத்துக்கொண்ட தலைவர்களை மக்கள் மறப்பதுமில்லை. அதை மீறியவர்களை வரலாறு மன்னிப்பதுமில்லை." (பக்கம் 43) என்ற வரிகள் இடம்பெறும் உயிர்ப்பிணங்களின் ஊழை என்ற தலைப்பிலான பத்தியில், தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் தோற்றத்திலும் அதன் வளர்ச்சியிலும், அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த எம். எச். எம் அஷ்ரப், மற்றும் ஏ.ஆர். எம். மன்சூர் ஆகியோர் மேற்கொண்ட பணிகளை விபரிக்கின்றார். அவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு பார்க்காமல் தமது சமூகத்தின் நலனுக்காகவும் மாணவர்களுக்காகவும் செய்த சேவையை சுட்டிக்காண்பிக்கின்றார். தமிழ்த்தலைவர்கள் இவற்றிலிருந்தும் பாடம் கற்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் முன்வைக்கிறார்.

இலங்கையில் நடக்கும் அரசியல் கூத்துக்களை மட்டுமன்றி, புகலிடத்தின் கூத்துக்களையும் சித்திரித்திருக்கிறார். முக்கியமாக சுமந்திரனின் அவுஸ்திரேலியா விஜயமும் அதுதொடர்பான ஆர்ப்பாட்டங்களும், பிரித்தானியாவில் 2016 இல் நடந்த, பிரித்தானிய தமிழர் பேரவையின் " தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு, மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை கற்றறிவதற்காக சம்பந்தர் ஸ்கொட்லாந்துக்கு பயணமான சம்பவம் பற்றியெல்லாம் இதர பத்திகளில் சொல்லப்படுகிறது.

இத்தகைய பத்திகளை தெய்வீகன் எழுதும்போது, எமது திருவிளையாடற் புராணமும் நினைவுக்கு வந்து அவருக்கு தொல்லை தருகிறது. " முதலிலே உலகை வலம்வருபவருக்கு மாங்கனியை பரிசளிப்பதாகக் கூறிய சிவபெருமானின் கூற்றுக்கு இணங்க, மயில் மீது பறந்து சென்ற முருகனை, அம்மை அப்பனை வலம் வந்து மிகச்சுலபமாக வெற்றிகொண்ட விநாயகனின் கதை கடந்த சில நாட்களாக அடிக்கடி நினைவில் வந்துபோனது. (பக்கம் 115) இந்தப்பத்திக்கு அவர் இட்டிருக்கும் தலைப்பு: வீரசிங்கம் மண்டபம் முதல் ஸ்கொட்லாந்து வரை..."

தலைவர் ஐயா சம்பந்தன், பாடம் படிக்க ஸ்கொட்லாந்து செல்லும் அதேவேளையில் நீதியரசர் ஐயா, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தனது தரப்பு தீர்வை முன்வைத்து தமிழ்த்தேசியக்கூட்டமைக்கு பாடம் கற்பிக்க முனையும் சம்பவமும் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு சமகால அரசியல் வேடிக்கைகளை மக்கள் மறந்துவிடாதிருக்க, அயற்சியின்றி எழுதிக்குவித்திருக்கிறார் தெய்வீகன்.

"தங்களுக்கான தீர்வு வரைவுகள் பலவற்றை காகிதங்களில் மட்டும் கண்டு அனுபவம் பெற்றவர்கள் தமிழ் மக்கள்."

" ஒரு குடும்பத்துக்குள் பகை என்று வந்துவிட்டால், யார் ஜெயிச்சார் என்பது பெருமையல்ல, யாருமே தோற்கவில்லை என்பதுதான் கௌரவம்"

" நாங்கள் ஒரு காலத்தில் திருமலை கடல் முதல் அந்தாட்டிக்கா தாண்டி உலகின் சகல சமுத்திரங்களிலும் தங்கு தடையின்றி நீந்தி வந்தோம். அப்போது நாங்கள் சின்ன மீன்கள். வலைகள் எமக்கு தடையாக இருந்ததில்லை. நாங்கள் வளர்ந்துவிட்டபோது முன்னர் நுழைந்து ஓடிய வலை ஓட்டைகள் எல்லாம் நுழைய .இடம்தரவில்லை. அதனால் நாங்கள் அகப்படத்தொடங்கிவிட்டோம்"

இவ்வாறு பலரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்னவற்றையும் பத்திகளின் தேவைகருதி இடம்பெறச்செய்துள்ளார்.

இன்றைய செய்தி நாளைய வரலாறு. இலங்கை அரசியல் வரலாற்றில் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று: போருக்கு முன்னர் - மற்றது போருக்குப்பின்னர். ( போ. மு. - போ . பி) இவை இரண்டுக்கும் மத்தியிலிருந்துதான் தெளிவுகளை தேடுகின்றோம். குழப்பங்களையும் நாடுகின்றோம். ஆழ்ந்து ஆராய்ந்து முடிவுகளை தேடிப்பெறுவதற்கு இதுபோன்ற அரசியல் பத்திகள் எமக்கு அவசியமானது. தெய்வீகனின் எழுத்துநடை எளிமையானது. சுவாரஸ்யமானது. அத்துடன் இறுக்கமானது. அதனால் வாசிக்கும்போது சோர்வு அண்டாது. தமிழ் ஊடகத்துறையில் நல்லதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கும் தெய்வீகனுக்கும் இந்த நூலை வெளியிட்ட கிளிநொச்சி மகிழ் பதிப்பகத்தினருக்கும் எமது வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R