நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எம் முன் காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள் தம் மக்களின் நல்வாழ்வுக்காகப் பல நீதிநூல்களை யாத்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் ஓளவைப் பாட்டியாவார். அவர் வழியில் நின்று ஆன்றோர் பலர் நீதி நூல்களைப் பாடித் தந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உலகநாதர் என்னும் தமிழ்ப்புலவராவர். அவர் 'உலகநீதி' என்ற ஓர் அரிய நூலை அருளித் தந்துள்ளார். இதுவே இங்கு கட்டுரையின் பேச்சுப் பொருளாகின்றது. இதில் பதின்மூன்று (13) பாடல்கள் அமைந்துள்ளன. இவர் பாடல்கள் மிகவும் எளிமையானவை. கடுஞ்சொற்கள் அற்றவை. பொருள் விளக்கத்துக்கு எவரிடமும் போகத் தேவையில்லை. இந்த நூலை எழுதுவதற்கு முன், கலைகளின் வடிவமாகத் திகழும் கரிமுகனுக்கு மருபுவழி நின்று கடவுள் வணக்கச் செய்யுள் பாடித் தொடங்குகிறார். 'விக்னவிநாயகனே! வினைதீர்க்கும் கணேசா! வேழ முகத்தானே! உன் துணை கிடைக்க வேண்டும், இந்த நூலை நான் பாடுவதற்கு' என்று வேண்டுகிறார்.

'உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு.'

1. ஓதாமல் இருக்க வேண்டாம்:- ஒரு காலும் படிக்காமல் இருக்க வேண்டாம். பிறர் மனம் வருந்தும்படியான சொற்களைச் சொல்ல வேண்டாம். மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம். கெட்டவர்களுடன் பழக வேண்டாம். கீழ் மக்கள் கூடியுள்ள இடங்களுக்குப் போக வேண்டாம். பிறர் குணங்களைப் பற்றிப் பேச வேண்டாம். இதில் செய்ய வேண்டாமென்று ஆறு வகைகள் சொல்லப்பட்டுள்ளன. அழகு மிக்க குறவர்களின் மகளாகிய வள்ளியை அருகில் வைத்துக்கொண்டு, மயிலை வாகனமாகக் கொண்டுள்ள முருகனை வாழ்த்துவாயாக மனமே!

'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனை செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடம்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயில்ஏறும் பெருமானை வாழ்ந்ததாய் நெஞ்சே!'
2. பொய் பேச வேண்டாம்:- என்றும் உண்மையைப் பேசு, பொய் சொல்ல வேண்டாம். கெட்ட செயல்களைச் செய்ய வேண்டாம். விடமுள்ள பாம்புடன் பழக வேண்டாம். கெட்ட குணமுடையோருடன் நட்புக் கொள்ள வேண்டாம். நல்லோர் காட்டிய வழியைத் தவிர்த்துப் புது வழியே செல்ல வேண்டாம். உன்னை நம்பி வந்தவரைக் கெடுக்க வேண்டாம். இங்கும் செய்ய வேண்டாமென்ற ஆறு வகைகளைக் காண்கின்றோம். வள்ளியைத் தன் அருகில் வைத்துக் கொண்டு, மயிலை வாகனமாக உடைய கந்தனை வாழ்த்துவோமாக!

'நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணகம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கள்
மயில்ஏறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்.

3. மனம் போன போக்கில் போக வேண்டாம்:- உன் மனம் போற வழிகளில் சென்று துன்பப் பட வேண்டாம். பகைவனை நண்பனாகக் கருதி நாசமடைய வேண்டாம். தேடிய பொருளை அனுபவிக்காமல் புதைத்து வைக்க வேண்டாம். தருமம் செய்வதை ஒருபோதும் மறக்க வேண்டாம். கோபத்தையும், துன்பத்தையும் தேடிக் கொள்ள வேண்டாம். கோப குணம் கொண்டவரின் வீட்டு வாசல் பக்கம் போக வேண்டாம். இங்கும் ஆறு வகையான செயல்களைச் செய்ய வேண்டாமென்கிறார் உலகநாதர். வள்ளியையும், முருகனையும் வாழ்த்துவோமாக!

'மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்தவர் வாசல்வழிச் சேரல் வேண்டாம்
வனந்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயில் ஏறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!'


4. பிறர் குறை பேச வேண்டாம்:- பிறர் குறைகளைப் பேசி அலைய வேண்டாம். கொள்ளை, கொலை செய்பவர்களுடன் சேர வேண்டாம். கல்விகற்ற பெரியோர்களை இகழ்ந்து பேச வேண்டாம். கற்புடைய மாதரைத் தவறான எண்ணத்தில் நினைக்க வேண்டாம். நாட்டைக் காக்கும் அரசனை, அவன் ஆட்சியை எதிர்த்துப் பேச வேண்டாம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இங்கேயும் ஆறு வகையான செயல்களைச் செய்ய வேண்டாமென்று கூறுகின்றார் ஆசிரியர். வள்ளியைத் தன் பக்கத்தில் வைத்திருக்கும் மயில் முருகனை நெஞ்சார வாழ்த்துவோமாக!.

'குற்றம் ஒன்றும்; பாராட்டித்திரிய வேண்டாம்
கொலை களவு செய்வாரோடு இணங்கவேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லாஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயில் ஏறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!'

5. திருமணமான பெண்ணை வாழவிடாமல் வைத்திருக்க வேண்டாம்:- திருமணமான பெண்ணை அவள் கணவனுடன் வாழவிடாது பெற்றோர் தம் வீட்டில் வைத்திருக்க வேண்டாம். மனைவியின் மீது குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம். பெரும் பழியையும் பாவத்தையும் உண்டாக்கக் கூடிய பள்ளத்தில் விழ வேண்டாம். போரில் மனவலிமை குன்றிப் புறமுதுகு காட்டி ஓட வேண்டாம். தாழ்ந்தவருடன் சேர வேண்டாம். தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். இங்கும் ஆறு வகையான செயல்களைச் செய்ய வேண்டாம் என்று வற்புறுத்துகிறார் ஆசிரியர். இவைகள் நிலைத்து நிற்க நாமும் வள்ளியையும், முருகனையும் வாழ்த்தி நிற்போமாக!

'வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றம்ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறங் கொடுத்து மீளவேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயில் ஏறும் பெருமானை வாழ்தாய் நெஞ்சே!'

6. வீண் வார்த்தை பேசுவோருடன் அலைய வேண்டாம்,- பயனற்ற சொற்களைப் பேசுவோரின் வாயைப் பார்த்து அலைய வேண்டாம். மதியாதார் வீட்டு வாசலை மிதிக்க வேண்டாம். ஆன்றோர் சொல்லும் கருத்துள்ள நல்ல வார்த்தைகளை மறக்க வேண்டாம்.

முன்கோபக் காரரோடு சேர வேண்டாம். கல்வி புகட்டும் ஆசிரியருக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தைக் கொடுக்காமல் இருக்க வேண்டாம். வழி பறித்துத் திரிவாரோடு சேர வேண்டாம். இங்கும் ஆறு வகையான தீய செயல்களைச் செய்ய வேண்டாம் என்று உலகநாதர் மக்களைக் கேட்டுக்கொள்கின்றார். இதற்காக நாங்களும் அம் முருகக் கடவுளை வாழ்த்திப் போற்றுவோமாக!

'வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்ததைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன் ஒருவள்ளி பங்கள்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே!'

7. ஆராயாமல் எதையும் செய்ய வேண்டாம்:- ஆராயாமல் எக் காரியத்தையும் செய்ய வேண்டாம். ஒழுக்கத் தவறான சொற்களை ஒரு பொழுதும் பேச வேண்டாம். இருவர் பகைகொண்டு சண்டையில் ஈடுபட்டிருக்கும்போது அங்கு போக வேண்டாம். பொது நிலத்தில் ஒரு நாளும் இருக்க வேண்டாம். ஒரு மனைவி இருக்கும் போது வேறொரு பெண்ணை மணந்து கொள்ள வேண்டாம். இங்கு ஐந்து வகையான செயல்களைச் செய்ய வேண்டாமென்று கூறுகின்றார் ஆசிரியர். தினைப் புனத்தைக் காவல் காக்கும் வள்ளியை மனைவியாக்கித் தன் அருகில் அமர்த்திக் கொண்டிருக்கும் முருகனின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக!

'கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்.
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்
குமரவேல் பாதத்தைக் கூறாய் நெஞ்சே!'

8. தீயவரோடு சேர வேண்டாம்:- சேரத் தகாத தீயவரோடு சேர வேண்டாம். நன்மை செய்தவர்களை ஒரு நாளும் மறக்க வேண்டாம். கோள் சொல்லிக் கொண்டு திரிய வேண்டாம். உற்றார் உறவினரை மதிக்காமல் இருக்க வேண்டாம். பிறர் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்க வேண்டாம். பிறருக்காகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டாம். இவ்வண்ணம் ஆறு வகையான செயல்களைச் செய்ய வேண்டாமென்று உலகநாதர் கூறுகின்றார். அவர் கூறும் வள்ளி அம்மை, முருகப்பெருமான் ஆகியவர்களை வாழ்த்திப் போற்றுவோமாக!

'சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வார் ஆரும் குறவருடை வள்ளிபங்கன்
மயில்ஏறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!'

9. ஒரு பக்க நீதி வழங்க வேண்டாம்:- வழக்கில் நடுவராக இருந்து ஒரு பக்கம் சார்ந்த நீதி கூற வேண்டாம். யாருடனும் சண்டையிட்டுத் திரிய வேண்டாம். பிறருக்கு இரங்காமல் அவர்களுக்குத் துன்பம் செய்ய வேண்டாம். உன் கண்ணால் காணாத எதையும் கற்பனை செய்து கூற வேண்டாம். பிறர் மனம் புண்பட எதையும் பேச வேண்டாம். புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம். இவ்வாறு ஆறு வகையான செயல்களைச் செய்ய வேண்டாமென்று அறிவுரை வழங்குகிறார் ஆசிரியர். இதற்காக மூவுலகையும் தன் மூவடிகளால் அளந்த திருமாலின் தங்கையாகிய உமாதேவியின் மகனும் மயிலை வாகனமாக உடைய முருகக் கடவுளை வாழ்த்தி வணங்குவோமாக!.

'மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்
மனஞ்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்.
காணாத வார்தையைக் கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயில்ஏறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!

10. வாய்ச் சொல் வீரரோடு சேர வேண்டாம்:- வாய்ச் சொல் வீரரோடு சேர வேண்டாம். வீண் வாது கூறி அநியாய வழக்கை முறை கெடச் சொல்ல வேண்டாம். உன் வல்லமையைத் தம்பட்டமடித்துத் தற்புகழ்ச்சியாகக் கூறிக் கொண்டு திரிய வேண்டாம். தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம். நீ இறக்க நேர்ந்தாலும் பொய் சொல்ல வேண்டாம். உன்னை மதிக்காது இகழ்ந்து பேசும் உற்றார் உறவினருடன் பழக வேண்டாம். இப்படி ஆறு வகைச் செயல்களைச் செய்ய வேண்டாமென்று அறிவுரை தருகின்றார் உலகநாதர். நாங்களும் குமரவேளின் நாமம் கூறி வாழ்த்திப் போற்றி நிற்போமாக!

'மறம்பேசித் திரிவாரோடு; இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகம்இட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குற்றம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே!'

11. உழைப்பாளிக்குரிய கூலியைக் கொடுக்காதிருக்க வேண்டாம்:- வண்ணானுக்கு உரிய ஊதியத்தைக் கொடுக்காதிருக்க வேண்டாம். நாவிதனுக்குரிய ஊதியத்தைக் கொடுக்காதிருக்க வேண்டாம். கலைகள் போதித்த ஆசானுக்குரிய கூலியைக் கொடுக்காதிருக்க வேண்டாம். பிள்ளைப் பேறு பார்க்கும் மருத்துவிச்சியின் கூலியைக் கொடுக்காதிருக்க வேண்டாம். நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவன் சேவைக்கான கூலியைக் கொடுக்காதிருக்க வேண்டாம்.

இவ்வாறான ஐந்து வகைச் செயல்களைச் செய்ய வேண்டாம் என்கிறது உலகநாதர் உலகநீதி. இப்படியான கொடுப்பனவுகளைக் கொடுக்காது வைத்திருப்பவர்களை இயமன் என்ன துன்பங்களுக்கு உள்ளாக்குவானோ? யுhர் அறிவார்.

'அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎனின் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான், நாவிதன் தன்கூலி,
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி,
வஞ்சம்அற நஞ்சுஅறுத்த மருத்துவச்சி கூலி,
மகாநோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி,
இன்சொலுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏது எது செய்வானோ எமன்தானே!'

12. கூறாக்கிக் குடியைக் கெடுக்க வேண்டாம்:- குடும்பத்தில் பிளவுகளையும் பிரிவுகளையும் உண்டாக்கி அமைதி வாழ்வைக் கெடுக்க வேண்டாம். பிறர் பார்க்கும்படி பூக்களைக் கொண்டைமீது சூடி வீணாக்க வேண்டாம். பிறரைப் பற்றி அவதூறு கூறிக்கொண்டு திரிய வேண்டாம். இழிவான செயல்களைச் செய்யும் தீயவர்களோடு சேர வேண்டாம். தெய்வ நிந்தனை செய்ய வேண்டாம். பெருமையுடைய பெரியோரை வெறுக்க வேண்டாம். இவ்வண்ணம் ஆறு வகைச் செயல்களைச் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார் உலகநாதர். நாமும் முருகக் கடவுளை மனத்தால் வாழ்துவோமாக!

'கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயில்ஏறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!'

13. உலகநீதி நூல் நிறைவுற்றது:- உலகநாதன் முருகனை வணங்கி, அவரைப் புகழ்ந்து பாடுவதற்குப் பொருளைத் தேடினான். பின்பு அந்த வள்ளிநாயகன், அவனுக்கு ஓதியருளிய வாசகத்தைத் துணைகொண்டு, 'உலகநீதி' என்னும் இந்நூலைத் திறம்பெற இயற்றினார் உலகநாதன். அத்தகைய இந்நூலைக் கற்பவர்களும், கற்றவர் கூறக் கேட்பவர்களும் நாள்தோறும் நல்லெண்ணங்களும், மன நிறைவும், ஞானமும், நல்வாழ்வும், பேரும், புகழும் பெற்று, இப்பூவுலகம் உள்ளவரை நிலைத்து நீடூழி வாழ்வார்களாக!

'ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் ஆறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத் தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடி வைத்த உலகநீதி
காதலித்துக் கற்றோரும் கேட் போரும்
கருத்துடனே நாள் தோறும் களிப்பினோடு
போதமுற்று, மிதவாழ்ந்து, புகழும் தேடிப்
பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே! '

முடிவுரை

எல்லா நீதி நூல்களும் தருமம் செய், பொய் பேசாதே, தாய் தந்தையரை மதி, கடவுளை வணங்கு, சினம் கொள்ளாதே, தீயோருடன் சேராதே, இரக்கம் காட்டு, இன்சொல் பேசு, நன்றி மறவேல், இளமையிற் கல் என்று போதிக்கின்றன. இதன் நோக்கம் மக்கள் நேர்மையாக வாழ வேண்டும், பண்பாளர்களாக முன்வர வேண்டும் என்று, சிறு சிறு வார்த்தைகளில் நீதிகளைக் கூறி வைத்தனர் நம் ஆன்றோர்கள். அதனால் இவைகள் நம் குழந்தைகள் மனதில் மிக இலகுவாகப் பசு மரத்தாணிபோல ஆழமாகப் பதிவாகியுள்ளன. இப் பதிவுகள் என்றும் அழியாப் பதிவுகளாம்.

இந்த 'உலகநீதி' என்ற நூலில் ஒருமித்து 70 வகையான தீச் செயல்களைச் செய்ய வேண்டாம்! வேண்டாம்!! என்று திருப்பித் திருப்பிக் கேட்டுள்ளார் உலகநாதர். இந்த 70 செயல்களையும் கடைப்பிடித்துச் செய்யாது விட்டால் அவன் முழுமனிதன் ஆகிவிடுவான் என்பது திண்ணம். நாங்களும் 'உலகநீதி' என்ற நூலைப் படித்து அதன்படி ஒழுகி நிற்போமாக!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R