அமரர் வெங்கட் சாமிநாதன் இணையம் மூலம் என்னுடன் தொடர்புகொண்டு நெருங்கிப் பழகிய இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர். 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை மறைவதற்கு ஓஇரு நாள்கள் வரையில் அனுப்பிக்கொண்டிருந்தவர். அவர் 'பதிவுகள்' இணைய இதழ்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர்களிலொருவ்வர் அவர். திரு.வெ.சா அவர்கள் கனடா வந்திருந்தபொழுது நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அது பற்றி அவர் அடிக்கடி மின்னஞ்சல்களில் குறிப்பிட்டு வருந்தியிருப்பார். அவ்விதமானதொரு மின்னஞ்சலில் அவர் "மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை" என்று எழுதியிருந்தார். இப்பொழுது அதனை நினைத்தால் சிறிது வருத்தமாகவுள்ளது. பொதுவாகக் கனடாவுக்கு வரும் பல இலக்கிய ஆளுமைகளை அழைத்திருக்கும் அமைப்புகளுடன் செலவழிப்பதிற்கே அவர்களது நேரம் சரியாகவிருக்கும். இவ்விதமான சூழ்நிலையில் நானும் அவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பதில்லை. உண்மையில் நான் கனடா வந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலரைத்தான் தனிப்பட்டரீதியில் சந்தித்து , நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன். எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் சோமகாந்தன், எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிக்குமார் ('தேடல்' நண்ப்ர் குமரன் ஏற்பாட்டில்)  , கலை, இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் (எழுத்தாளர் தேவகாந்தன் ஏற்பாட்டில், அவரது இல்லத்தில்)  மற்றும் 'உயிர்நிழல்' கலைச்செல்வன் (அமரர் கவிஞர் திருமாவளவன் இருப்பிடத்தில், அவரது ஏற்பாட்டில்). வேறு பலரை அவர்களுடனான சந்திப்புகளில் கூட்டத்திலொருவனாகக் கலந்து, அவர்தம் உரைகளைச் செவிமடுத்திருக்கின்றேன். ஆனால் தனிப்படச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் சுந்தர ராமசாமி வந்திருந்தபொழுது அவருடன் நடைபெற்ற கலந்துரையாலின் இடைவேளையொன்றில் அவருடன் சிறிது நேரம் உரையாடியிருக்கின்றேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்தாளர்கள் பலருடன் நான் நேரில் சந்தித்திருக்காவிட்டாலும் இணையத்தினூடு தொடர்புகளைப்பேணி வருகிறேன்.

திரு வெ.சா. அவர்களை நேரில் சந்தித்திருக்காவிட்டாலும், இணையத்தின் வாயிலாக, அவரது படைப்புகள் வாயிலாக அவருடன் தொடர்புகளைப் பேணி வந்திருக்கின்றேன். அவரது ஐம்பதாண்டு கலை, இலக்கியப்பணியினைக் கெளரவிக்கும் பொருட்டு தொகுப்பு நூலொன்று வெளிவந்துள்ளது. 'வெங்கட் சாமிநாதன்': வாதங்களும் விவாதங்களும்' என்ற அந்தத் தொகுப்பு நூலினை எழுத்தாளர்கள் பா.அகிலன், திலீப்குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தியா பதிப்பகம் வாயிலாக 2010இல் வெளியிட்டுள்ளார்கள். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில், தடித்த மட்டையுடன் வெளியான அந்த நூலில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எனது கட்டுரையான 'அறிவுத்தாகமெடுத்து அலையும் வெங்கட்சாமிநாதனும் அவரது கலை ,மற்றும் தத்துவியற் பார்வைகளும்' என்றொரு நீண்டதொரு கட்டுரையினை என் பங்களிப்பாக அதில் எழுதியிருந்தேன். அதன் மூலமும், பதிவுகளுக்கு அவர் அனுப்பும் மின்னஞ்சல்கள் மூலமும் அவரை நேரில் சந்தித்தது போன்றதொரு திருப்தி எனக்குண்டு. அக்கட்டுரையைக் கீழுள்ள இணைப்பில் வாசிக்கலாம்: http://tamil.pratilipi.com/read?id=4865302860922880&ret=/giritharan-navaratnam-v-n-giritharan/arivu-thaagameduthalayum-venkat-saaminadhanum-avaradhu-kalai-matrum-thathuvayiyar-parvaigalum

'கட்டோடு குழலாட ஆட' என்ற இந்தப்பாடல் 'பெரிய இடத்துப்பெண்' என்னும் திரைப்படத்திலுள்ள பாடல். ஜோதிலட்சுமி, மணிமாலா , எம்ஜிஆர் ஆகியோரின் நடிப்பில் வெளியான பாடல்.  இன்று இந்தப்பாடலைக்கேட்கும் சமயங்களில் திரு.வெங்கட் சாமிநாதனின் நினைவும் கூடவே தோன்றி விடுகின்றது.

முகநூலிலும் அவர் எனது முகநூல் நண்பர்களொருவராக இருந்திருக்கின்றார். இன்றும் இருக்கிறார். திரு. வெங்கட் சாமிநாதன் என் முகநூலில் நண்பர்களிலொருவராக இருந்தாலும் முகநூலில் நான் அவரது பதிவுகளைக்காண்பதில்லை. என்னுடன் தொடர்புகொள்வதென்றால் மின்னஞ்சல் மூலம்தான் அவர் தொடர்பு கொள்வார். ஆனால் முகநூலில் நான் பகிர்ந்த்ருந்த இந்தப்பாடலுக்கு மட்டும் அவர் தற்செயலாக இதனைப்பார்த்துவிட்டுத் தம் கருத்தினைத்தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துப்பரிமாறல்களை மீண்டுமொருமுறை 'பதிவுகள்' வாசகர்களுடன் அவர் ஞாபகார்த்தமாகப்பகிர்ந்து கொள்கின்றேன்.

வெங்கட் சாமிநாதன் (January 25, 2013 at 11:50pm): "இது எப்படி? இப்போது தான் தற்செயலாக எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடக்கும் உங்கள் பதிவை. எல்லாம் எம்ஜிஆர் பாட்டுக்களாக இருக்கின்றனவே என்று ஆச்சரியப்பட்டு. ஒன்றைப் போட்டுப் பார்த்தேன். கட்டோடு குழல் ஆட பாட்டு அது. மிக நன்றாக இனிமையாக இருக்கிறது. இதையெல்லாம் எப்படி ஒன்று சேர்த்து வைத்திருக்கிறீர்கள் எம்ஜிஆர் ரசிகரா நீங்கள்? அல்லது அப்பழங்கால சினிமாப் பாட்டுக்களின் ரசிகரா? எம்ஜிஆர் பாட்டுக்களாக ஒன்று சேர்க்க எப்படித் தோன்றியது? எப்படியிருந்தாலும் ஒரு வித்தியாசமான தேடலுக்கு நன்றி. சந்தோஷமாக இருக்கிறது" 

வ.ந.கிரிதரன்: "வணக்கம் திரு வெ.சா. அவர்களே, உங்களது வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி. பொதுவாக அறுபதுகளில் வெளியான எம்ஜிஆரின் படப்பாடல்கள் எனக்குப் பிடித்தவை. அத்துடன் எம்ஜீஆரின் ஆளுமையும், முக வசீகரமும் என்னைக் கவர்ந்தவை. முக்கிய காரணம்: தமிழ் சினிமாவின் அறிமுகமே எம்ஜிஆர்/ஜெயலலிதா/சரோஜாதேவி திரைப்படங்கள் மூலம்தாம் கிடைத்தது. பால்ய காலத்து நிகழ்வுகள், விருப்பங்கள் எல்லாமே ஒவ்வொருவரது மனதிலும் , குறிப்பாக ஆழ் மனதில் ஆழமாகப் பதிந்து விடுவது வழக்கம். அந்த வகையில் எனக்கும் அன்றைய காலகட்டத்து எம்ஜிஆர் திரைப்படப்பாடல்கள் பிடித்தவை. எம்ஜிஆரின் இறுதிக்காலகட்டத்துப் படப்பாடல்களை விட, அவரது கறுப்பு வெள்ளைப் படப்பாடல்களே பொதுவாக என்னைக் கவர்ந்தவை. முக்கிய காரணங்கள்: இளமையான , அழகான, வசீகரம் மிக்க எம்ஜீஆர், அவருக்குப் பொருத்தமான டி.எம்.செளந்தரராஜனின்  அற்புதமான இளங்குரல் இனிமை, பாடலின் கருத்தாழமிக்க வரிகள். இவையெல்லாம் எனக்குத் தனிப்பட்டரீதியில் பிடிக்கும். முகநூலை நான் அதிகமாகப் பாவிப்பது எனக்குப் பிடித்த பதிவுகளை, பாடல்களை ஓரிடத்தில் சேர்த்து வைக்கும் சேமிப்புத் தளமாகவே. தேவையானபோது தேடி அலையத் தேவையில்லையே. அதனால்தான் அவ்வப்போது கேட்பதை, வாசிப்பதை இங்கு பதிவு செய்கின்றேன். இன்னுமொரு எனக்குப் பிடித்த பாடல் 'மானல்லவோ கண்கள் தந்தது'."

வெங்கட் சாமிநாதன் (January 26, 2013 at 12:30am): "ஆச்சரியம். இந்நேரம் நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். ஒரு வேளை நீங்கள் இரவிலும் உறங்காது உழைப்பவரோ. இப்போதுதான் 'பதிவுகளு'க்கு செல்லப்பா பற்றிய நீண்ட கட்டுரையின் முதல் பகுதியை அனுப்பி அது "sending" என்றே சொல்லிக்கொண்டிருக்க, அனுப்பியாகட்டும் என்று காத்திருந்தேன். உடனுக்குடன் உங்கள் பதில். பழைய பாடல்கள் தான் எனக்கும் பிடிக்கும். ஐம்பதுகள் வரைய பாடல்கள். அதன் பின் வெகு வெகு சிலதான். இன்னும் சிலவற்றை நான் தவற விட்டிருக்கக் கூடும். இப்படி உங்கள் பதிவு சிக்கியது போல, நான் அதன் பாதையில் தடுக்கி விழுந்தால் தான். தேடிச் செல்வது என்பது வருடத்துக்கு 200-300 படங்கள் எடுத்துத் தள்ளும் தமிழ் சினிமா காட்டுக்குள் நான் இந்த வயதில் புகுந்து தேடி எடுத்து வெளி வருதல் சாத்தியமில்லை. இப்படி எடுத்துக்கொடுப்பவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். தங்களூக்கு என் நன்றி. இப்படி எங்கோ மூலையில் இருக்கும் உங்களூடன் பேச, உறவாட வழிசெய்துகொடுத்திருக்கும் கம்ப்யூட்டருக்கும் யூ ட்யூபுக்கும் நன்றி."

'தமிழ் ஹிந்து' இணைய இதழில் (அக்டோபர் 16, 2013) அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் 'தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்' என்றொரு கட்டுரையினை எழுதியிருந்தார். அதில் அவர் 'வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது  சொல்லக் கூடும்.' என்று எழுதியிருந்தார்.\

அவர் குறிப்பிட்டிருந்த 'வியாளம்' என்னும் சொல் பற்றிய எனது கருத்துகளை அங்கு பதிவு செய்திருந்தேன். கிருஷ்ணகுமார் என்பவரும் அது பற்றிய தந்து எண்ணங்களைப் பதிவு செய்திருந்தார். அதற்குப் பதிலளித்த திரு.வெ.சா. அவர்கள் பெருந்தன்மையாக, தன்னடக்கம் மிக இவ்விதமாக எழுதியிருந்தார்:

வெங்கட் சாமிநாதன்: (October 21, 2013 at 7:52 pm): "திரு கிரிதரன் அவர்களுக்கும் கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இம்மாதிரியான எதிர்வினைகள் தான் நமக்கு வளமூட்டும். இவை நமக்குத் தெரியாத விஷயங்களை,தெரியவைப்பதுடன், எந்த விஷயம் பற்றியும் ஒரு நல்ல சம்வாதம், ஒருவருக்குஒருவர் புரிந்து கொள்ள வழிசெய்தல் எல்லாம் தான் நமக்கு வேண்டும். தமிழ் இலக்கியத்தில் எனக்குள்ள ஞானம் வெட்டவெளிச்சமாகியுள்ளது பற்றிக் கவலையில்லை. மீண்டும் நண்பர்கள் இருவருக்கு என் மனமார்ந்த நன்றி."

திரு. வெ.சா.வின் கட்டுரையையும், அது பற்றிய எனது எதிர்வினையையும் , அதற்கான அவரது பதிலையும் 'தமிழ் ஹிந்து' இணையத்தளத்தில் கீழுள்ள இணைப்பில் வாசிக்கலாம்.
http://www.tamilhindu.com/2013/10/a-society-that-drives-an-artist-to-suicide/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R