ஓட்டம் - கடல்புத்திரன்பெண்கள் மாத்திரமில்லை,  ஆண்களும் ... தம்மவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். ஆனால்,அவர்களுடையது போல ஆழமான போக்குடையதில்லை. விமலுக்கு சுரேசின் தலை வாருதல் கண்ணைக் குத்துகிறது. மாலையில் கூட அப்படியே குலையாமல் இருந்து.. விமலைப் பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்க்கிறது. 'நான் என்ன நேரத்தில் பிறந்து தொலைத்தேனோ.. எனக்கு எல்லாமே தலைகீழ்!'அவனும் வீட்டிலே இருந்து வெளீக்கிடுகிற போது நீரைத் தெளித்து வாரித் தான் பார்க்கிறான். சைக்கிளில் ஏறி உழக்க,ஈரம் காய்ய.. பிடிவாதமாக பரட்டையாக நிற்கிறது.அவனுக்கு தேங்காய் எண்ணெய்யும் நீரும் சரியாய் கலக்கிற பக்குவம் பிடிபடவில்லை.அதோடு வேர்க்கிறதும் அதிகம்.அதிக எண்ணெய் தடவி வலிச்சு இழுத்தான் என்றால் கடிக்கிறது.உடம்பு மெசினும் நல்லாய் இல்லை.'தோல்வி தனை எழுதட்டும் வரலாறு'ரகம்.சலிச்சுக் கொள்வான்.

 அன்று வேலை முடிய‌ சுரேஸ்,விமலை அவனுடைய வீட்டுக்கு கூட்டிச் சென்றான்.அங்கே அம்மாவும்,அக்காவும் அவனை முக மலர்ச்சியுடன் பார்க்கவில்லை.ஒருவேளை காய்ந்த கறுத்த கறுவலான தோற்றம் காரணமாக இருக்கலாம்.அம்மா அவனைப் பார்த்து ஒரு முறுவல் பூத்திருக்கலாம்.பார்க்காதது மாதிரி நடந்து குசினிப் பக்கம் சென்றார்.கூடபின் தொடர்ந்து சென்ற சுரேஸ்,"அம்மா 2 ரீ போடம்மா"என்று மெதுவாக கேட்பது அவனுக்குக் கேட்டது.அக்கா,முக இறுக்கமில்லாது பார்த்துச் சென்றது சிறிது ஆறுதலாக இருந்தது.
  
அவனை முதல் தடவையாக கூட்டி வந்திருக்கிறான்.பள்ளிப்படிப்பு படிக்கட்டில் தொடர்ந்து செல்லாது தவறி விட்டவர்கள்.டெக்கிலே ட்ராவ்ட்ஸ்மன்னிலே படித்து,ராஜா பில்டரில் அடிமாட்டு விலைக்கு சோரம் போய் வேலை பார்க்கிறார்கள்.வேலையாய் இல்லாவிட்டாலும்.. ரெயினிங் என்ற தகமையும் தேவையே. இனவாதம் கோலோச்சுகிற நாட்டில் யாழ்ப்பாணத்தில் வேலை வாய்ப்பு கிடையாது என்பது சின்ன பிள்ளைக்கு கூட தெரியும்.அவர்கள் என்ன செய்வார்கள்.பெற்றோருக்கு பிடிக்கவில்லை.வெளிநாடு போறதென்றால்..  அவர்கள் .. சொத்துக்களை விற்று,கடனை வாங்கி அனுப்பத் தயார். இந்த படிப்புக்கு ஒரு வேலையை எடுத்து இங்கேயே இருக்கப் போறேன் என்று பிடிவாதமாக நின்றால்.. கோபமாக இருந்தார்கள். கூட்டாளி தான் கெடுக்கிறான் என்று மரியாதை கிடையாது.
    
அவன் உள்ளே போய்.. நோட்டீஸ் கட்டொன்றை எடுத்துக் கொண்டு வந்தான்."இந்தாடா"என்று கொடுத்தான்."வா போவோம்"என அவனும் வெளிக்கிட்டான்."நீ எங்கே வாராய்?"கேட்டான் விமல்."சும்மா சந்தி வரை வந்திட்டு வாறேன்"என்றான்.சந்திக்கருகில் தேத்தண்ணீர்க் கடை இருந்ததை கவனித்திருந்தான்.தனக்கு 'டீ'வாங்கித் தர வாறான் என்பதை புரிந்து கொண்டான்."டேய் எனக்கு பழகிப் போனதடா. நான் பெரிதாய் எடுக்கவில்லை.உன் மேல் உள்ள கோபத்தை உங்கம்மா காட்டுறார்.நீ வீட்டிலே நில்லடா.நான் போய்யிக்கிறேன்"என்று விடை பெற்றான்.அவனுடைய அம்மாவின் கோபம் நியாயமானது தான்.
  
அவர்கள் இருவருக்குமே வீணே வருசங்களைக் கழிக்கிறோம் என்ற சலிப்பு இருக்கத் தான் செய்தது.  நகரத்தை விலகி,கடற்காற்றுக்கூடாக கிராமத்துக்குள் வார போது..அன்றைய நாளைக் கழித்து விட்டாலும்,வீட்ட வருகிற ஒரு நிம்மதி இருக்கத் தான் செய்கிறது.'அரசியல்'என்ன அரசியல்.அரசு,அரைவாசியாவது மனிதாபிமானமாக தமிழர்களை மதிக்கக் கூடாதா?ஆயாசமாக இருந்தது.எவ்வளவு நாள் தான் வீட்டிலே தங்கி இருக்க முடியும். அம்மா "அவன் 'தன் செலவுக்கு கூட காசு கேட்பதில்லை"'மற்றவர்களுடன் கதைத்துக் கொள்கிறார்.அவனுக்கோ, 18 வயசுக்குப் பிறகு தான் உழைத்தே தன் செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டவன்.
  
என்ன நாடு.அதற்கான வாய்ப்புக்களே அற்றதாக இருக்கிறது.இப்ப அவனுக்கு 22 வயசு.உருப்படியான வேலை இல்லை.டெக்கிலே ..படித்து பாஸாகியும் விட்டான்.வேலை தானே படிப்பை முழுமைப் படுத்துகிறது.வேலை இல்லை.ராஜா பில்டர்,"அப்பிர‌ண்டீசாக எடுத்துக் கொள்கிறேன்.சுபவைசர் வேலை. 200ரூபாவே தர முடியும்" என்றது.வேற வழி இல்லாமல் ..அவனும்,சுரேஸும் போய் வருகிறார்கள்.எப்பவாவது நல்ல‌ வேலை கிடைக்கும்.அப்ப இவர்களிட லெட்டர்,உதவியாய் இருக்கும்.நம்பிக்கை!
   
பில்டர்ருக்கு சுப்பவைசர் என 2,.3 பேர்கள் வேண்டும்.இவ்வளவு சம்பளம் கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற அழுத்தங்கள் கிடையாது. தனியார் நிறுவனங்கள்,தாங்கள் நினைச்ச மாதிரி தான்.வேலை வாய்ப்புக்கள் முறையாக வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும்.யாழ்ப்பாணத்தில் வேலைகள் இல்லாமல் இல்லை.எதுவும் ஒழுங்காக இல்லை.தேர்த்தல் மூலம் தெரிகிறவர்களுக்கு ...அதிகாரங்கள் இல்லை.பொம்மையாளர்கள்.இங்கே இருக்கிற வேலைக்கு,கொழும்புக்குப் போய்,சிங்கள தலைகளுக்கு லஞ்சம் கொடுத்து..வேலையை பெற்று வர வேண்டும்.   
இப்படி..எல்லா விசயங்களிலுமே சிங்களம் தான் தீர்மானிக்கும்.அரசவேலைகள் எல்லாம் ஓரவஞ்சனை காட்டப்பட்டதால் விரக்தி நிலையில் பெடியள்கள் இருந்தார்கள்.அரசகாணிகள் கூட யாழ்ப்பாணத்தவர்களுக்கு கிடையாது.சிங்கள அரசுக்கு தான்.சோரம் போன பிரதேசங்களாக தமிழர் பகுதிகள் கிடந்தன.பொலிஸ், பயங்கரவாத சட்டத்தை அமுல் படுத்தி தமிழ் பெடியள்களை வேட்டையாடுகிறது 1972இற்குப் பிறகு தான் ஏற்பட்டது போல இருக்கிறது.அதற்கு முதல் ரயில் பகுதியில் வேலை செய்தவர்கள்,தமக்குத் தெரிந்தவர்களை அதிலே செருகக் கூடியதாக இருந்தது.அதே போல ஒவ்வொரு அரசாங்கத் துறைகளில் வேலை செய்தவர்களும்,வாய்ப்பு ஏற்படுற போது தமிழர்,சிங்களவர் என பேதம் பார்க்காமல் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.துறைமுகத் துறையிலும்..சேர முடிந்தது.எப்ப தமிழர் கல்வியில் தரப்படுத்தல் வந்ததோ...அதற்குப் பிறகு ஒன்லி சிங்களவர் மட்டும் தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது போலும்.விமலின் கிராமத்திலே ஒவ்வொரு துறையிலும் இளைப்பாரியவர்கள் தொகையினர்,தொகையினராக இருக்கிறார்கள்.அந்த சந்ததி வேலை பார்த்து சிறந்திருக்கிறது.
   
அவர்களின் பிள்ளைகள் யாவரும் அதிருப்தி அடைந்த பெடியளோ என சந்தேகத்துடன் பார்க்கப்பட்டிருக்கிறார்கள். வேலைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது.அது கொஞ்சநஞ்ச பெடியள் கிடையாது. தொகையினர். அதற்குப் பிறகு பெடியள்களுக்கு படித்தாலும் வேலை கிடைக்கும் என நம்பிக்கை கிடையாது.போதக்குறைக்கு தமிழர் பகுதியில் புத்தர் சிலைகளும்,புத்தர் கோவில்களும் எழுந்து கொண்டிருக்கின்றன‌. தமிழர்கள் அரசபடைகளால் தொகையாக கொலையுறுகிறார்கள்.அதற்காக‌ ஒரு நினைவுச் சின்னம் வைக்க முடியாது.
   
புத்தர் அகிம்சையைத் தான் போதித்தார், கிம்சையைக் கிடையாது.செய்தி ஊடகங்களை லொக் பண்ணி விட்டால்,இவை வெளிய தெரியவா போகிறது.இப்படித் தான் இந்த நாடு இருக்கிறது.'இணையம்'எல்லாம் அப்ப இருக்கவில்லை.அப்பப்ப தமிழ் அரசியல்வாதிகளுடன் சமாதான ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டார்கள் தான்.ஆனால் ஈரம் காய்ய முதலே கிழித்தெறியப்பட்டும் விட்டன‌.உள்ளே நடக்கிற சீர்கேடு வெளிய தெறிய வரவில்லை . தெரிய வந்தாலும்.."அது உள்நாட்டுப் பிரச்சனை","இறைமை"என்றெல்லாம் பேசி வாய்யை அடைத்து விடுவார்கள்.
   
விமல்,ஒவ்வொரு நாளும் 1,2 நோட்டீஸை வாசித்துப் பார்ப்பான்.வேலைக்கும் போய் வந்து கொண்டிருந்தான்.சுரேஸோடு ,மணியண்ணையோடு அரட்டை அடிப்பான். உடனடியாகவே அவனுக்கு...அவை இன்னொன்றின் கொப்பி என்பது புரிந்து விட்டது.அவன் தான் ஏற்கனவே பலதையும் படிக்கிறவனாச்சே! போல்ஸ்சேவிக் கட்சியின் சின்னம் உட்பட லெனின்,தயாரித்த வேலைத்திட்டங்கள்‍‍ (தொழிற்சங்கள் அமைத்து போராடுவது..),அதை ஒட்டி தமிழர் மத்தியில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட விளக்க‌ங்கள் தான் அவை.விடுதலைக்காக போராடுற தாமரை இயக்கம் தமது சின்னத்தைக் கூட அதை ஒட்டியே வடிவமைத்திருந்தது.லெனின் இயக்கம்.நம்பிக்கை பிறக்கத் தானே செய்யும்.லெனினை அழைத்தது போலவே,தலைவரையும் உள்ளே 'பெரியவர்'என அழைத்தார்கள்.

இன்னொரு தலைவர் ஸ்டாலின் போல கருதப் பட்டார். நம்பிக்கையோடு தான் இறங்கி இருக்கிறார்கள்.ஆனால், அந்த இயக்கம் இன்னொரு இயக்கத்திலிருந்து உடைந்து உருவானது. அதைப் பற்றி யார் கவனித்தார்கள்.  
'தாய்'இயக்கம் கழுகு. கழுகு, பிரிந்து போறவர்களுக்கு மரணதண்டனை.. என்ற விதியை வைத்திருந்தது. மரணதண்டனையை ஜனநாயக அரசுகளே எடுத்து எறியவில்லை.இது,அரசு அமைப்பதற்காக எடுத்து வைக்கப்படுற ஒரு சீமேந்துக்கல்லு.அதில் இருப்பது ஆச்சரியம் இல்லை.ஆனால் ஏன் பிரிந்து ஓடவேண்டி ஏற்பட்டது?சிலரின் தனிநபர் பலவீனங்கள்,வயசு வித்தியாசம் பார்த்து ஏற்படுற அலட்சியங்கள்.ஆனால்,ஒரு போராளிக்கு, வயசு வித்தியாசம் பார்க்காமல் எல்லாரையும் சமமாக மதிக்கக் தெரிந்திருக்க வேண்டும்.இவர்கள் இன்னமும் போராளிகள் ஆகவில்லையே.அதற்காக அடி எடுத்து வைத்திருக்கிறவர்கள்.விதி,போராளிகள் மத்தியில் விரிசல்களை ஆழமாக ஏற்படுத்தி விட்டது'என்பதைத் தெரியாமல் எல்லா இயக்கங்களிலும் பெடியள்கள் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.
    
அன்று வேலை முடிய‌"சும்மா வாவன்.கதைப்போம்"என சுரேஸ் அழைத்தான்.வீட்ட என்று சொல்லவில்லை. விமலுக்கு.. போரிங்காக இருக்கிறது என‌ கிராமத்துக்கு திரும்ப சிலவேளை வந்த பாதையை தெரிய மாட்டான்.மானிப்பாய்க்குள்ளாக போகவும் செய்வான்.ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத கல்லுண்டாய்யை விட ஆட்கள் அதிகமாக போய் வாரது இருக்கிறதே.. என ஒரு மாற்றம். சிலவேளை வீடு திரும்பவே பிடிக்காது.யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கு சைக்கிளை விடுவான்.அவன் அதிலே ஒன்றிலே அங்கத்தினன்.புத்தகம் எடுத்து கொடுக்கிறது இருந்தது.2 புத்தகமே  எடுக்கலாம்.அது ஒரு வித்தத்தில் நல்லதுவே.கெதியிலே வாசித்து விட முடிகிறது.வேலையில் சேர முதல் பல தடவை கீரிமலைக்கரைக்கு போய் வந்து கொண்டிருந்தான்.நண்பர் என சிலர் இருக்கத்தானே செய்வார்கள்.சிலவேளை மினக்கெட்டு அவனோடு வருவார்கள்.பெரும்பாலும் தனிக்கட்டையாய் தான் பயணம்.
     
இவனுக்கு 'டீ'தராதது அவனுக்கு சுட்டு விட்டது என புரிந்திருந்தான்.சரி கூப்பிடுறான் ..எதுவும் சொல்லாமல் சென்றான்.கல்வியங்காடுசந்தியை அடைந்தார்கள்.மத்தியில்,வந்தியதேவன் போல 'சங்கிலி மன்னன் வாளுடன் குதிரையில் இருக்கிற சிலையில் விமலுக்கு எப்பவும் ஒரு ஈர்ப்பு இருந்தது.சற்று தொலைவில் ஓலைக் கொட்டிலில் இருந்த தேத்தண்ணிக் கடையில் சைக்கிள்ளை விட்டு இறங்கினான்.நினைச்சது சரி தான்.வாங்கிலே போய் அமர.. சுப்புக்கிழவர்,2 டீ போட்டுக் கொண்டு வந்து அவர்களுக்கு வைத்தார்.மணியண்ணை போல இவனுக்கு பழக்கமானவர் போல!"டேய் அந்த சந்தி பற்றி ஒரு விசயம் தெரியுமா?" என்று கேட்டான்."சொல்லு" என்றான்."உனக்கு புகழ்,பத்திரன்,வேலன்..இவர்களைத் தெரியுமா?"என்று கேட்டான்.யாழ்வாசிகளுக்கே தெரியும். கழுகு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.பொலிசால் சுற்றி வளைக்கப்பட்டு..தீரர்களாக சாவை தழுவியவர்கள்.காயப்பட்ட‌ புகழ்,துவக்கை தோழனிடம் கொடுத்து.."துவக்கு பத்திரம்"என தப்பி ஓட வைத்து,ஒரு கிரனைற்றை எறிந்து வெடிக்க வைத்த சண்டையில் இறந்தவன்.பத்திரனும் காயப்பட்டு விட்டவன் தான்.தன்னை சுட்டு விட்டு ஓடு'என துவக்கை கொடுத்து காப்பாற்றியவ‌ன்.வேலன் நிலமையோ வேறு.தனிய அகப்பட்டு விட்டான்.அவன் முதலே சொல்லி இருந்தவன்.சண்டை நடந்த இடத்திலே எங்கையாவது பாம்புப் புற்று இருந்தால் அதற்குள் என்ர கத்துப்பாக்கி இருக்கும்.எடுத்துக் கொள்ளுங்கடா".பொலிஸ் ,சண்டை பிடிக்கிறார்கள் என்றால்,கிட்ட நெருங்குவதில்லை.சுட்டுக் கொன்று விட்ட பிறகே வருவார்கள்.எனவே,இவர்களும் துவக்கை பாதுகாத்த பிறகு,சுடுவது போல பாவனை செய்து சுடவைத்து செத்து விடுவார்கள்."அவர்களுக்கு என்ன" கேட்டான்."முந்தி அவர்கள் எல்லாரும் வருசத்தில், ஒரு நாள் இந்த‌ சந்தியிலே கூடுவார்கள்.என்ர மூத்த மச்சானும் ஒருத்தன்.எல்லாரும் சைக்கிளில் கேரதீவு,பூநகரி,சங்குப்பிட்டி என கிடக்கிற பழைய கரையோரப் பாதையால் திருக்கேதீஸ்வரம் செல்வார்கள்.கடைசியாய் போன போது நானும் மச்சானுடன் தொத்திக் கொண்டு போனேனடா.மச்சான் கொஞ்சம் கொதி.பத்திரண்ணையே,'என்னை திட்டாதே'என்று என்னை பெரும்பாலும் ஏற்றிக் கொண்டு சென்றவர்.என்ன அனுபவமடா!"என்று அதிலே நனைந்து போய் இருந்தான்.கேட்டுக் கொண்டிருந்த சுப்பரும்,"ஓம் தம்பி!என்ர காலத்திலும் சங்கிலியடியிலே கூடுவோம்.2,3 தரம் நானும் போய்யிருக்கிறேன்"என்றார் ஆச்சரியமாக இருந்தது.அப்ப கழுகு இயக்கமே இருந்திருக்காது.எல்லாரும் சாதாரணப் பெடியள். இனக்கொழுப்பு,போராளியாக்கியிருக்கிறது .
 
"டேய்,என்னையும் ஜேர்மனிக்கு போகச் சொல்லி வீட்டிலே ஓரே ஏச்சடா.நோட்டீஸ் கட்டை தந்தவனை ஜேர்மனிக்கு அனுப்பிய ஏஜென்சியிலே எல்லாருக்கும் ஒரே நம்பிக்கை.பேசாம கழுகிலே போச் சேர்ந்திடலாமா என்று இருக்கிறதடா?"என்றான்."ஜேர்மனிக்கு போவன்"என்றான் விமல்."விருப்பமில்லையே"என்று பதிலளித்தான்.அவனைப் போலவே,விமலும் இங்கேயே படித்து,இங்கேயே நல்ல வேலையில் இருக்க வேண்டும்'என்ற விருப்புடையவன்.
   
இனக்கொழுப்பு,வியாபித்து வருகிறதென்றால்,அதை எதிர்த்து போராடுற பெடியள்களுடன் சேர்ந்து போராட வேண்டியது தான்.அதற்காக 'ஓடுவது'கோழைத் தனம் அல்லவா!தர்க்க ரீதியாய் சரி.ஆனால், அதற்கு முதல் பயிற்சியும் இல்லை,ஆயுதமும் இல்லை..என்ற பெரிய போர்க்களம் இருக்கிறதே!அதை தயாரான பிறகே,சண்டையே பிடிக்கலாம்.பைத்தியம் பிடிக்க வைப்பவை. விமல்"பொறு.முதலில் நிதானமாக யோசி."என்றான்.சுரேஸ்,அவனையும் குழப்பி விட்டான்.முடிவு எட்டாமல் விடை பெற்றார்கள்.
   
நூலகத்திற்கு சைக்கிளை விட்டான்.வந்த வழியில் ஒரு நூலகக் கிளையை கவனித்திருந்தான்.பெரிய நூலகம் எரிந்த பிறகு அங்காங்கே பல‌ கிளைகளை திறந்திருக்கிறார்கள்.குமுதம்,விகடன்..போன்ற சஞ்சிகைகளையும், பேப்பர்களையும் வாசிக்கலாம்.குமுதத்தில்'ஜெயித்துக் கொண்டே இருப்பேன்'என்ற முகமத் அலியின் தொடரை விரும்பி வாசிக்கிறவன்.இன்னொருவனின் போரை படிக்கிற போது,அது இவன் மனதையும் தடவிக் கொடுக்கும்.சிந்திக்க வைக்கும்.நம்பிக்கை,விடாத பயிற்சி..,இவை தான் அந்த கருப்பு இளைஞனின் தொடர்.வெற்றி,தோல்வி..மாறி மாறி வருபவை.ஒரு தடவை வெற்றியை அடையலாம்.அதற்கு முதல் 'சா'கூட முந்தி விடலாம்.'உயிர்'  அழிவற்றது என்கிறார்கள்.அதையும் நம்புறதில் தவறில்லை.வெல்லணும் என்ற ஆசையை அந்த உயிர் சுமந்து கொண்டே இருக்கும்.இன்னொரு உடலில் புகுந்து கொள்கிற போது,அட நாயாய், பூனையாய்.. எந்த‌ பிறப்பாக பிறந்திருந்தாலும் கூட,தேவரின் சினிமாப்படங்களைப் போல,அந்த மிருகங்களும் எதிரியை பழிவாங்குற போது.. வந்து கூட்டுச் சேர்ந்து விடும் அல்லவா! தன்னுடைய நினைப்பை நினைக்க, விமலுக்கே சிரிப்பு வந்தது.அந்த நம்பிக்கை மனிதர்களுக்கு வேண்டியது தான். எனவே எந்த போராட்டத்திலும் 'தர்மங்கள்' நிறைய இருக்க வேண்டும்.அதற்காக ஆயுதமே தூக்கக் கூடாது;அகிம்சை வழியில் தான் போராட வேண்டும் என்பதில்லை.எதிரியை மட்டுமே இனம் கண்டு தூக்க வேண்டும்.போராட்டப் பாதை தவறாக இருந்தாலும்...,அதை முதலில் பகிரங்கமாக முன் வைத்து விட வேண்டும்.துண்டுப் பிரசுரம்,பத்திரிகைகள் எல்லாம் அதற்கான நோட்டீஸ் போர்ட்டுக்கள்.அறிஞர்கள்,சிந்தனைவாதிகள்..தவறுகளை சுட்டிக் காட்டுற போது திருத்திக் கொண்டு நடை போடுகிற தன்மையும் போராட்டத்திற்கு இருக்க வேண்டும்.ஆயுதக்குழுக்களோட பேச்சு வார்த்தை நடத்துற பெருந்தன்மை சில அரசியல்வாதிகளுகே இருக்கிறது.மிச்சப்படி அவை தடை செய்யப்பட்ட அமைப்புக‌ள் தான்.அரசியல்பிரிவை தமக்குள் கட்டிக் கொண்டு வேலை செய்யலாம்.பேச்சு வார்த்தைகள் நடக்கிற போது,இவர்களுடைய அரசியல் பிரிவு போய் பேசக் கூடாது.வெளிய இருக்கிற தேர்த்தலில் ஈடுபடுகிற தலைவர்கள் மூலமாக பேச வேண்டும்.இவர்கள் பேச வேண்டிய ஆட்கள் நம் தலைவர்கள் மட்டுமே.'போராட்டம்' மக்கள் போராட்டம்!வேற வழி இல்லை.இதை சரிவர புரிந்து கொள்ளாத இயக்கங்கள்,தம் வழியில் என்னொன்னவோ புரிந்து கொண்டு,'நான் தான் பெரியவன்;நீ இல்லை'என தம்முள் அடிப்பட்டுக் கொண்டிருந்தன.'புதிதாக போராட வந்திருக்ககிற இளைஞர்கள்'என்ற நினைப்பில் சுரேஸ் கழுகை நினத்தான்.விமலுக்கு.. வாசிச்சதால் தாமரையை நினைத்தான்.அந்த வயசில் அவர்களுக்கு உண்மையில் அரசியல் தெரியவில்லை தான். அவர்களுக்கு வேலையில் அதிருப்தியே நிலவிக் கொண்டிருந்தது.பாடசாலைக் கல்விப் படிக்கட்டுக்களில் படிப்பு தொடரவில்லை.ஒவ்வொரு பெடியள்களின் அத்தோல்விக்கு பல காரணங்கள் இருக்கும்.விமலுக்கு பாடசாலைகள் மாறிக் கொண்டிருந்ததைக் கூறலாம்.முதலில்,..சுமார் 2 அரை மைல் தூரமாக இருந்த நகரத்திற்கும் பட்டிணத்திற்கும் இடைப்பட்ட பாடசாலை.அங்கே தூரம் ஒரு பிரச்சனை.அந்த காலத்தில் ஒரு சைக்கிள் கிடைத்திருந்தால்..பரவாய்யில்லையாய் இருந்திக்கும்.5ம் வகுப்போட அது அறுபட்டு விட்டது.பிறகு கிராமப்பள்ளிக்கூடம்.அது 10ம் வகுப்போட மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.'எ.லெவல்'படிக்கிற வசதியும் இருந்திருக்க வேண்டும்.எ.லெவல் படிக்க நகரத்திற்குப் போன போது...நிறைய தன்மைகளில் மாறியிருந்தது.கிராமத்துப் பள்ளியில் இல்லாத சாரணர்,பொலிஸ்,ஆமி கடேஸ் அமைப்புக்கள் அங்கே இயங்கின.வகுப்பிலிருக்கிற மாணவர்களில் ஒருத்தன் ஒன்றிலே சார்ஜன்ட்..3,4 பெடியள்கள் ஒவ்வொன்றுக்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள்.முதல் படித்த பள்ளிக்கூடத்தில்..அவை வலுவாக இய‌ங்காட்டிலும் ..ஒரளவாவது இயங்கிக் கொண்டிருந்தன.மாணவன் இவற்றில் எல்லாம் பங்கேற்றுக் கொண்டு,உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்திக் கொண்டு படிக்க வேண்டியவன்.கிராமத்தில் ..மிஸ்சிங்.அவற்றை எல்லாம் மிஸ் பண்ணினவனாக உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.நகரத்தில் உள்ள எல்லா பாடசாலைகளிலும்
மாணவர்கள் 'கல்வியில் தரப்படுத்தல்'அமுலானதிற்குப் பிறகு டியூசன் வகுப்புகளிலும் எல்லா பாடங்களையும் சமாந்தரமாகவே வகுப்பில் பாடம் நடத்துற ஆசிரியர் மூலமாக‌ டியூற்றரியிலும் அதே பாடங்களை படிப்பித்துக் கொண்டிருந்தார்க‌ள்.கிராமத்தில் இல்லாத அதிசய நிலமை.நகரத்து  மாணவன்,டியூசனுக்கு போறதையும் சதாரணமாக கொண்டிருந்தான்.அங்கே நிலவுற‌2 பள்ளிகூட நடைமுறை விமலுக்கு பிடிக்காமலே இருந்தது. தவிர செலவுடன் கூடியது.ஏண்டா நகரத்துக்கு படிக்க வந்தேன்..என்று அவனுக்கு இருந்தது.
  
"வகுப்பில்,சிலபஸை முடிப்பேன் என்று சவாடல் விடுகிற ஒரு ஆசிரியர் கூட இங்கே முடிக்க மாட்டாரடா,நீ கட்டாயம் டியூசனுக்கு போகவே வேண்டும்"என்று நண்பர்கள் சிலர் ஆலோசனை கூறினார்கள்."வீட்டிலே காசு மாறேலதடா.."என்று சோகமாக கதைத்த போது,நண்பர் சிலர் தமது டியூசன் நோட்ஸை இரவலாக படிக்கத் தந்தார்கள்.ஓரே பாடத்திற்கு வேற வேற டியூசன் வகுப்பிற்கு போய் வந்த நண்பரின் நோட்ஸ் வேற மாதிரி விளக்கம் தந்து,அவன் தலையை ஓரேயடியாய் குழப்பித் தள்ளியது.சதாரண தரத்திலே பாஸ் பண்ண முடிந்தது.
     
பள்ளிகூட அமைப்பு முறையை சரியாவே கட்டியிருக்கிறார்கள். கிராமம்,அரைகுறை,தரப்படுத்தல்,முழுமையாய் இயங்கிற நகரத்திலே கூட,2வது பள்ளிக்கூடமான‌  டியூற்றரிக்கும் கூட‌ போக வைத்து,இல‌வசக் கல்வியை காசு கட்டி படிக்கக் கூடியதாக்கி குழப்பக்கரமாக்கி விட்டிருக்கிறார்கள்.இந்த குழப்பம் தீர்க்க முடியாம இருப்பதற்கு நாட்டில் நிலவுற இனவாத ஆட்சி முறையே காரணம்.இதன் மத்தியிலும் படித்து வாரவர்களை வஞ்சகமாக துடைத்தொழிக்கும் நடைமுறைகளையும் வைத்திருக்கிறது.இந்நாட்டின் படைகள் நம்மவர்களுக்கு சேவையாற்றுவதில்லை.பள்ளிக்கூடத்திலிருந்து துப்பி எறியப்பட்ட சுரேஸும்,விமலும் வருசங்களை மேலும் விரயமாக்கி,விக்கிரமாதித்தன் போல டெக்கில் 'ட்ராவ்ட்ஸ்மன்'கோர்ஸை படித்து ஒரு மாதிரி பாஸாகி இருந்தார்கள்.சின்ன வயசில் செய்கிற உடற்பயிற்சி வாழ்நாள் முழுதும் தொடர்வது போல பள்ளியில் படிக்கிற ஒவ்வொரு பாடங்களும் தொடர்வதாக இருக்க வேண்டும்.குறைந்த பட்சம் படிக்கிற படிப்பு அறுபடாது வேலையில் சேர்ந்து படிக்கிறதாக இருக்க வேண்டும்,மேலும் தொடர்ந்து படிப்பதாக அமைய வேண்டும்.சரி,வெளிநாட்டில் இருப்பது போல பல்கலைக்கழகப் படிப்பு,படிக்கா விட்டால், டெக்கிற்குப் போய் படிக்க வழி செய்தாலும் கூட‌ அப்படிப்பிற்கு கட்டாயம் வேலை கிடைப்பதாய் இருக்க வேண்டும்.ஆன‌ல் நம்நாடோ ஒரு முட்டாள் நாடு.நம்மை எல்லாம் மரத்திலிருக்கிற‌ காகம் வைத்திருக்கிற வடையைப் பார்த்து ஏங்கிக் கொண்டு அலைய வைத்திருக்கிறது.தமிழர் பகுதியில்,யாழ்ப்பாணத்தில் கொக்குவிலும்,கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறையிலும் மட்டும் தான் பல்தொழிநுட்பக் கல்லூரிகள் உள்ளன.'ட்ராவ்ட்ஸ்மன்'கோர்ஸும் அதிலே மட்டும் தான் இருக்கின்றன.40,45 பேர்களைக் கொள்கிற ஒரு வகுப்பில், வருசத்தில் முழுமையாகவே தேறுகிறவர்கள் 5 பேருக்கும் குறைவானவர்களே.இவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வக்கில்லை என்றால்,அது எவ்வளவு இனவாதத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
  
2 ரிவேர்ட் பாடங்களுடம் தேறினவர்களும் இதை விட இருந்த,அரச கட்டிடங்களைக் கட்டுற பில்டர்ஸிலேயும் குறைவான சம்பளத்தில் அதிருப்தியுடன் சேர்ந்திருந்தார்கள்.யாரை யார் பார்த்து அனுதாபப்படுவது.பொதுவாக ராஜா பில்டர்,கட்டப்படுற ஒவ்வொரு வீட்டிற்குமே சுரேஸையும்,விமலையும் தனியே அனுப்புவது வழக்கம்.வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புற எஜென்சிகாரன் ஒருத்தன்,பெரிய மாடி வீடாக கட்ட ஆரம்பித்திருந்தான்.அதற்கு இருவரையுமே அனுப்பி இருந்தது.காலையில் 8.00 மணிக்கு சைட்டுக்கே
போய் விட வேண்டும்.எத்தனை பேர் வேலையை தொடங்கிறார்கள்?எந்த இடத்திலிருந்து எவ்வளவு வேலை செய்யப் படுகிறது?எத்தனை கதவு,ஜன்னல்கள் பொறுத்தினார்கள்?,அதோடு கலவையில் சல்லி,சீமேந்து,மணல்,நீர் சேர்க்கப்பட்ட வீதம்,நிலத்தில் வேலை நடந்தால் அது சம்பந்தமான விபரம்...என‌ அளவுகளுடன் நின்று பார்த்து தெளிவான குறிப்புகளுடன் மாலை 3.00 மணிக்கு எழுதி ஒபிசில் கொடுக்கப்பட வேண்டும். வேலையாட்களுக்கு 2 வேளை 'ரீ'வரும்.அவர்களுக்கும் கிடைக்கும்.மத்தியானம் இடியம்ம்பம் சொதி,சம்பல்,அல்லது பட்டரில் சீனி தடவிய சன்விச்..என சாப்பாட்டை முடிதுக் கொள்வார்கள்.
    
ஒபிஸ்,டவுணுக்குள்ளே இருந்தது.ட்ராட்ஸ்மன்னாக கொழும்பிலே வேலை பார்த்த தியாகர்,5 வருசம்  குவைத்திலும் போய் ட்ராவ்ஸ்மன்னாக வேலை பார்த்தார்.ஒப்பந்தம் முடிய திருப்பியவர்,கல்யாணம் கட்டிக் கொண்டு கிடைத்த சீதனத்திலே ராஜா பில்டரை தொடங்கி,இங்கேயே தங்கி விட்டார்.வெளிநாட்டுக் களை.இயல்பாகவே சிரிச்ச முகம்.பெரிய 2 பில்டர்ஸ் மத்தியில்,இவரும் கால் பத்தித்து விட்டார்.ஒரு இளைப்பாரிய சிவில் இன்ஜினியர்,ஒபிசில்2 படம் கீறுகிற பாபுவும்,நந்தனும்,தலைமை மேசன் மணியண்ணையும்,அவரது வேலையாட் பட்டாள‌மும்,கொழும்பிலிருந்து கட்டிடப்பொருட்களைக் கொண்டு வார லொரியும், ரைவரும்,அதோடு இவர்கள் இருவரும் தான்..பில்டர்.
     
புதுக்க வந்த இவர்களுக்கு இன்னமும் சரிவர இந்தியன் இங்கில் படம் கீறத் தெரியாது.வகுப்பில் பென்சிலால் மட்டுமே கீறிக் கொண்டிருந்தவர்கள்.தேர்ச்சி பெற வாய்ப்பு வேண்டும்.எந்த படிப்பிற்கும் ..முடித்த பிறகு,அவர்கள் தேர்ச்சி பெற குறிப்பிட்ட கால பயிற்சி வாய்ப்பும் வேண்டும்.வேலையாள் ஒன்றும் கருவிலே திருவுடையவராகப் பிறப்பதில்லை.திறமை,மண்ணாங்கட்டிக்கு முதல்,படிப்பு,பயிற்சி..என ஒரு நேர்கோடு இருக்கிறது.அவர்களுடைய விசாரம் சொல்லி முடியாதது.பாபு,இங்கில் படம் கீறுகிறதை பார்த்துக் கொண்டு நிற்பார்கள்.அவன் ஆங்கில எழுத்தை எழுதுவதற்கு டென்சில் கார்ட்டையே பாவித்தான்.30.40 படம் கீறியிருப்பானில்லே,அனாசியமாக டென்சிலை பாவித்துக் கொண்டிருந்தான்.பிளானிலும்,முன்பக்க தோற்றத்திலும்..கூட மரங்கள் சிலதையும்,சிலர் மனிதர்களையும் கீறுவதுண்டு.பாபு,இலைகள் அற்ற நரம்பு மரத்தையும்,தோற்றத்தில் அசோக் மரத்தையும் கீறினான்.குளிர் நாடுகிளிலே,இலைகள் கொட்டிய நரம்பு போல காட்சியளிக்கிற மரங்கள் இருக்கின்றன. இலங்கையில் அத்தகைய மரங்கள் இல்லை.பிரீட்டிஸ் என்னெத்தைக் கீறி விட்டுச் சென்றார்களோ..அத்தனையும் இப்பவும் கீறிக் கொண்டிருக்கிறார்கள்.செலவு மதீப்பீட்டில் 2 சுப்பவைசருக்கும் பணம் அறவிடப் படுகிறது. பில்டர்.. கட்டாயம் சுப்பவைசரை அனுப்பியே ஆக வேண்டும்.அதனாலே அவர்களுக்கும் வேலை கிடைத்திருக்கிறது.இல்லையென்றால்..அந்த வேலையும் இல்லை.தவிர முனிசிபால்டியில் பார்க்கப் படுற அத்தனை கட்டிட விதிகளும் பிரிட்டீஸ் விட்டுச் சென்றவையே.தமிழருக்கு மட்டுமில்லை,சிங்களவர்களுக்கும் என்று ஒரிஜினாட்டி..என்று ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை.ஆனால் காலனியாட்சியாளர்கள் வருவதற்கு முதலும் மனிதர்கள் வீடுகளில் தான் வசித்தார்கள்.கடலைக் கலக்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.தற்போது எல்லாமே பிரிட்டீஸ் மயம். அதோடு இனவாதமும் வேற கலந்து கிடக்கிறது.ஒரு காலத்தில்,சோழர்கள் சிங்களவர்களை பலிஎடுத்திற்கும்,அடிமைகளாக அலய வைத்ததிற்கும்..கணாக்கு தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
  
ஆனாலும் 'பாபு கீறுகிற போல நானும் கீறணுமே'என இருவருமே ஆசைப்படுவார்கள். ஆனால் எங்கே நடந்தது.இந்தியன் இங் பேனாவால் ஆங்கில எழுத்துகளை அழகாக எழுதுறதும், லைன்வேக்ஸ் என்கிற முறையில் பலவித மெலிய கோடுகளை கீறி படத்தை அழகுற அமைப்பது அவர்களுக்கு கிடைக்காமலே போனது.அன்று விபரங்களை கையளிக்க ஒபிசுக்கு போக முடியவில்லை. கப்பலில் இருந்து ஊருக்கு திரும்பி இருந்த வெளிநாட்டுக் களையாக இருந்த‌ இளைஞன் ஒருவனை, சுபாஸ் உணவகத்தில் வைத்து பொலிஸ்,கழுகைச் சேர்ந்தவன் என்ற சந்தேகத்தில் பட்டப்பகலில் சுட்டுக் கொன்று விட்டது. அவன் அடுத்த மாசம் திரும்பவும் கப்பலுக்கு போக இருந்தவன். படையினர், இயக்கங்களை விட மோசம்.தமிழும் அவர்களுக்கு சரிவர பேச வராது.கடைகள் எல்லாம் வேளைக்கே மூடிக் கொண்டன. மணியண்ணை,"நீங்கள் வீட்ட போங்கள்.நாளைக்குப் பார்க்கலாம்.நான் சொல்லிக் கொள்கிறேன்"என்றார். ஓபிசும் மூடிக் கொண்டு போய் விட்டது அடுத்த நாள் சென்ற போதே தெரிந்தது. தியாகர்,வெளிநாட்டுக்காரர். அவரை பயம் பற்றிக் கொண்டு விட்டது."ஓபிசை இனி வீட்டுக்கே மாற்றிக் கொள்ளப் போகிறேன்"என்று தெரிவித்தார். 2 நாள் போய் வந்திருப்பார்கள். எ9 பாதையில் வந்த லொரி ட்ரைவரும் சுடப்பட்டு விட்டார். செக் பண்ணி அனுப்பி விட்டு பின்னால் சுட்டு விட்டார்கள். பத்திரிகைக்கு "நிற்காமல் ஓட்டிப் போனான். அது தான் சுட்டோம்"என படைத் தரப்பு கூறியது.லொரியிற்கு பாதிப்பு ஏற்படவில்லை.ரைவருக்கு சலரோக நோய்யும் இருந்தது.கையில் பட்ட காயம்.அவனால் இனி லொரியே ஓட முடியாது போய் விட்டது."தமிழர் எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் விதி எழுதி இருக்கிறது"என கதைத்துக் கொண்டார்கள்.ராஜா பில்டர் கனக்க யோசிக்கத் தொடங்கி விட்டது."நாளையிலிருந்து நீங்களும் வேலைக்கு வர வேண்டாம்"என்று தெரிவித்தார்கள்.
    
"இங்கே வேலை செய்யிறதிலும் பார்க்க வேலை செய்யாமல் இருக்கலாமடா. நான் கழுகிலே போய்ச் சேரப் போகிறேன். நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று சுரேஸ் கேட்டான். "தெரியல்லே!"என்றான் விமல்.

அடுத்த ஒரு கிழமையில்  என்னென்னெவோ சம்பவம் எல்லாம் மளமளவென நடந்தன. நகரத்தில் குண்டு வெடித்தது. பொலிஸ் கூட்டமாக கிளம்புவார்கள். அவர்களுக்கு வைத்தது தவறி விட்டது. மக்கள்  வங்கி ஒன்று கொள்ளை அடிக்கப் பட்டது. ஒரு இயக்கம் அந்த களேபரத்தில் செய்து விட்டது. வெடி மருந்துகள் வாங்க பணம் தேவையாக இருந்தது. எனவே எந்த‌ வலத்திலும் இறங்க தயாராகி விட்டன இயக்க‌ங்கள். நகரபஸ் நிலயத்தில் விமல் சைக்கிளில் நின்ற போது, அவனை கண்டு விட்டு சுரேஸ், பெடியள்களுடன் அவனிடம் வந்தான். காக்கி நிறத்தில் தொள தொள சேர்ட்டுடன், மற்றவர்களும் அப்படியே,இவன் தான் அதிலே பெரியவன்.சிறிய துவக்கை,கிரனைற்றை மறைக்கத் தான் அண்ணைமார்ர சேர்ட்டுக்களை அணிகிறவர்கள். "எங்கடேயிலே வந்து சேரன்"என்று சிரித்துக் கொண்டு கேட்டான். "இன்னமும் எதிலே சேருரது என்ற குழப்பமாய் இருக்குதடா"என்றான் விமல்."என்னோடு படித்தவன்"என்று பெடியள்களுக்கு அறிமுகப் படுத்தினான்.விமலை மரியாதையுடன் பார்த்து கொண்டு நின்றார்கள் சின்னப் பெடியள்.கழுகிலே விமலுக்கு மரியாதை இல்லை என்றில்லை.இவனே சேர்ந்து ஒரு மாசம் இருக்கலாம்.ஆயுதத்தையே கொடுத்து விட்டார்கள்.போராட்டக்காரனுக்கு ஆயுதக் காய்ச்சல் இருக்கக் கூடாது.அதைக் கையாலாகாத வரையில்.. அது நீங்காது.கிரிக்கெட் மட்டையை கையாளுவது போல ஆயுதங்களை கையாள்வது படிய வேண்டும்.குறிபார்த்து சுடுவதற்கும் பயிற்சி வேண்டும்.ஓரளவாவது அந்த தகுதி வருகிற போதே,படையினரை எதிர்த்து வீரமாக போரிட முடியும்.மற்ற இயக்கங்களை விட இவ்வியக்கமே ஆயுதப் பயிற்சியை முக்கியமாகக் கருதியது.‌"நீ ரஸ்ய நாவல் எல்லாம் வாசிக்கிறவன்.உன்னால் இதிலே சேர முடியாது தான்.எதிலாவது சேர்ரு.அது முக்கியம்"என்றான்.அவன் அப்படி பேசுறதை பெடியள் அதிசயமாய் பார்த்தார்கள்.கழுகைச் சேர்ந்த பெரும்பாலான‌வர்கள் மற்ற இயக்கங்களை மதிப்பவர்கள் இல்லை.விடை பெற்றுக் கொண்டு போனான்.
  
அடுதடுத்த மாசங்களில் கோட்டையைச் சுற்றி இரகசியமாய் சென்ரிகளை அமைப்பதில் இயக்கங்கள் மல்லாடிக் கொண்டிருந்தார்கள்.அல்லி இயக்கத்தைச் சேர்ந்த கஜனை கோட்டைப் பகுதியில் பின்னால் இருந்து கழுகைச் சேர்ந்தவர்கள் சுட்டு விட்டார்கள்.அவ்விரு இயக்கத்திற்குமிடையில் நடைபெற்ற சண்டையில் ..கிராமம் கூட கலங்கி இருந்தது.அதனால் விமலும் நகரப்பக்கம்  அவ்வளவாக வரவில்லை.ராஜா பில்டரிடமிருந்து அவனுக்கு 50ரூபா வரவேண்டியிருந்தது.அவனுக்கு அது பெரிய காசு தானே. சுடுபாடுகள் குறையவே அப்பணத்தை வாங்க பில்டரிடம் சென்றான்.தியாகர் சிரித்துக் கொண்டு பணத்தை கொடுத்தார்.நந்தனும் வீட்டுக்கு அனுப்பப் பட்டிருந்தான்.பாபு மட்டுமே போர்ட்டில் இருந்தான்.மாடி வீட்டை ஒருமாதிரி கட்டி முடித்திருந்தார்கள். மணியண்ணையும் ஒபிசிற்கு வந்திருந்தார்.அவரும் பணம் வாங்கவே வந்திருந்தார்.புதிதாய் வீடு கட்டுறது நின்றிருந்தது."தம்பி,நல்லாய் இருக்கிறாயா?"என வாரப்பாடாகக் கேட்டார்."உன்ர கூட்டாளி சுடுபட்டு இறந்தது தெரியுமா?"எனக் கேட்டார்."சுரேஸ் செத்திட்டானா?"அதிர்ச்சியுடன் கேட்டான்."அல்லிட‌ ஆட்கள்,சுரேசிடகாம்மை தான் தாக்கினவர்கள்.அதிலே,8பேர்கள் சரி.சுரேஸும் ஒருவன்"என்றார்.விமல்,அந்த செய்தியை பேப்பரில் வாசிச்சிருந்தான் தான். ஆனால் சுரேஸும்...ஒருவன் என்கிற போது மனசெல்லாம் துயறுற்றது.மணியண்ணை அவனை அனுதாபத்துடன் பார்த்து விட்டுச் சென்றார்.போராட வேண்டியது அவசியம்.அதில் கால் வைக்காத வரையில் ..அதில் இருக்கிற பிரச்சனைகள் தெரியவே வராது.முன்னால் செல்கிற படையினர் போல நம்மவர்களும் அதில் செத்து மடியவே செய்வார்கள். அந்தப் பாதையையுமே கடந்து தான் நாம் விடுதலையை அடைய வேண்டும்.
  
"நீ எதிலாவது சேர்ரது விடுதலைக்கு முக்கியமடா"சுரேஸ் சொல்றதும் சரி தான்.வீட்ட வராது சைக்கிளை தாமரை (இயக்க) காம்மை நோக்கி செலுத்தினான்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R