- பி. - துரைமுருகன், முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.பாட்டும் தொகையுமெனப் பகுக்கப்பட்டுள்ள சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர்தம் பல்வேறு வாழ்வியல் மரபுகளைப் பதிவு செய்துள்ள சமூக ஆவணங்களாக விளங்குகின்றன. சமூகம் உருவான தன்மை குறித்தும், அரசுகள் உருவான தன்மை குறித்தும் விளக்கும் சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கியல் போக்கை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமச்சீரற்ற சமூக வளர்ச்சிப் போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றன.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் அரசு எனும் அமைப்பு உருவாகி வளர்ந்ததைப் பல்வேறு ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இதனடிப்படையில் சங்க கால அரசுருவாக்கம் என்பது சீறூர் மன்னர், முதுகுடிமன்னர், மன்னர், வேந்தர் எனும் படிநிலைகளைக் கொண்டதாக இருந்துள்ளமையை அறியலாம். இவ்அரசு உருவாக்கங்களில் இனக்குழுச் சமூகப்பண்புகளைக் கொண்டதாகக் காணப்படும் சீறூர் மன்னர் சமூக அரசமைப்பு முதன்மை பெறுகிறது. இத்தகைய சீறூர் மன்னர்தம் குடிக்கே உரியப் பண்புகளாகக் கூட்டுழைப்பு, கூட்டுண்ணல், விருந்தோம்பல், நடுகல் வழிபாடு, வேந்துவிடுதொழில், தண்ணடை பெறுதல், மறத்துடன் விளங்குதல் என்பனவற்றைச்  சங்கப் பனுவல்கள் சிறப்ப்பகப் பதிவு செய்துள்ளன. இக்குடிமைப் பண்புகளில் நடுகல் வழிபாடு, வேந்துவிடுதொழில்  என்பவற்றைக் குறித்து ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

இனக்குழுச் சமுதாயமும் சீறூர் மன்னரும்
'சங்கப் பாடல்கள் ஒன்றுக்கொன்று மாறான இரு வேறுபட்ட சமுதாய வாழ்வியல்புகளைக் காட்டுவனவாய் உள்ளன. சிறப்பாகப் புறநானூற்றுப் பாடல்கள் புராதன விவசாயப் பொருளாதாரத்தையும் கால்நடைப் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இனக்குழுச் சமுதாய எச்சங்களைத் தாங்கிய வன்புலச் சமுதாயத்தையும், மருதநிலச் சமுதாயத்தையும் சமகாலச் சமுதாயங்களாகக் காட்டுகின்றன. இவ்விருவகைச் சமுதாயங்களும் நிலம், போர்முறை, போர்நோக்கம், வழிபாட்டுமுறை, உடைமைநிலை, புலவர் மன்னர் உறவுநிலை, வள்ளண்மை, தலைவர் குடிமக்கள் உறவுநிலை எனும் பல்வேறு நிலைகளிலும் ஒன்றுக்கொன்று முரணான இயல்புடையனவாய்க் காணப்பெறுகின்றன.' 1 இத்தகைய சமச்சீரற்ற வளர்ச்சிப்போக்கிற்கான காரணத்தை அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.

'சங்க காலம் ஒரு மாறுதல் நிலையைக் குறிப்பதாகும். அது, இனக்குழு வாழ்க்கை அழிந்து நிலவுடைமையாக மலரும் காலகட்டத்தைக் குறிக்கின்றது. சங்க காலம் வரையறைக்குட்பட்ட நிலப்பகுதிகளையும் குடியேற்றங்களையும் அதற்குரிய சொத்துரிமை, அவற்றைப் பாதுகாக்கும் வகைகளோடு உருவாயின எனக் கா.சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.' 2

இவ்வாறு இனக்குழு வாழ்வு மறைந்து அதன் எச்சங்கள் மாறிவரும் சமுதாயத்தில் காணப்படுவது குறித்து தேவிபிரசாத் சட்டோபாத்யாயா குறிப்பிடுவதை நா.வானமாமலை பின்வருமாறு எடுத்துக்காட்டுகிறார்.

'இனக்குழு வாழ்வு முறை அழிந்து நிலவுடைமையாக மாறுகின்ற சூழலில் பழைய சமுதாயத்தின் எச்சங்களும் நிலவுவது இயல்பே. இனக்குழு அழிவு முழுமையாக இராமல் அரைகுறையாக இருந்தால் இனக்குழு மக்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், பண்பாட்டு எச்சங்கள் அதற்கடுத்து உருவாகும் சமுதாயத்தில் எஞ்சி நிற்கும்.' 3

இந்த விளக்கங்களின் அடிப்படையிலேயே இனக்குழு வாழ்வியல் மரபுகளின் எச்சங்களைக் கொண்டதாய்க் காணப்பெறும் சீறூர்மன்னர் வாழ்வியலையும் புரிந்துகொள்ள வேண்டும்.

சீறூர் மன்னர்தம் குடிமைப்பண்புகள்
புறநானூற்றின் 285ஆம் பாடல் முதல் 335ஆம் பாடல் வரை சீறூர் மன்னர் பற்றிக் குறிப்பிடுகின்றன. சீறூர் மன்னர் ஆண்ட நிலப்பகுதி,
பருத்தி வேலிச் சீறூர் மன்னர் 4
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் 5

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர் 6
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அம்குடிச் சீறூர் 7

எனவும் இவர்கள் ஆண்ட நிலப்பகுதி குறிக்கப்பட்டுள்ளது.

நெல் விளையாத புன்புலச் சீறூர் 8 தலைவனின் ஊரில்,
கருங்கால் வரகே இருங்கதித் திணையே
சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கல்லது உணாவும் இல்லை 9

என வரகும் தினையும் கொள்ளும் அவரையுமே விளைவதாகக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய புன்செய் நிலமும் புன்செய் நிலத் தானிய வேளாண்மையும் கொண்ட சீறூர் மன்னரின் குடிக்கேயுரிய பண்புகளும் இவர்கள் பற்றிய பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளன.

நடுகல் வழிபாடு
இனக்குழுச் சமூகத்தின் முதன்மையான அடையாளங்களுள் ஒன்றாக நடுகல் வழிபாடு சுட்டப்பெறுகிறது. வீரயுகக் கால மாடுபிடி சண்டையில் இறந்து படுவோரைத் தெய்வமாகக் கல் நட்டுப் பரவும் நிலையைத் தொல்காப்பியம் இலக்கணப்படுத்தியுள்ளது.

ஆநிரை மீட்டல் எனும் இனக்குழுச் செயல்பாட்டைக் கரந்தைத் திணை எனும் திணைப்பகுப்பில் காணமுடிகிறது. வெட்சித் திணைக்கு மாறாகியத் திணையெனச் சுட்டப்படும் கரந்தைத் திணையின் துறைகளைச் சுட்டும் தொல்காப்பியர் (தொல்காப்பியர் வெட்சித் திணையை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். கரந்தைத் திணையைப் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் இல்லை. வெட்சித் திணையிலேயே ஆநிரை கவர்தல் மீட்டல் சுட்டப்பட்டுள்ளன) இத்திணைக்குரிய இருபத்தோரு துறைகளில் நடுகல் பற்றியும் சுட்டியுள்ளார்.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்த மரபில் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே 10

எனக் கல்நடும் நடைமுறையைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.

சங்க இலக்கியங்களில் நடுகல் வழிபாடு குறித்த செய்திகளைப் பரவலாகக் காணமுடிகிறது.
நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடைமறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலைநடுகல்
வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் 11

எனும் பாடலடிகள், ஆநிரைகளை மீட்க வேண்டி வெட்சி வீரருடன் போரிட்டு வென்று வீரமரணமடைந்த வீரர்களது பெயரும் புகழும் பொறிக்கப்பட்ட கற்கள் மயில் தோகை சூட்டப்பட்டு நிற்க, அக்கற்களுக்கு முன் வேலும் கேடயமும் சார்த்தி வைக்கப்பட்டிருந்த நிலையைக் குறிப்பிடுகின்றன.

வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
நாள்ஆ உய்த்த நாமவெஞ்சுரத்து
நடைமெலிந்து ஒழிந்த சேண்படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
வெருவரு தகுநகானம் ‘நம்மொடு
வருக என்னுதி ஆயின்
வாரேன்; நெஞ்சம்! வாய்க்கநின் வினையே 12

எனும் பாடலடிகள், ‘நாம் கடந்து செல்லும் காடோ, சீழ்க்கை ஒலி பொருந்திய அம்பினது தப்பாத தொடையினையுடைய வெட்சி சூடின மறவர்கள், விடியற்காலையில் பசுக்கூட்டத்தைக் கவர்ந்து கொண்டு போகும் அச்சம் தரும் கொடிய பாலை வழியினைக் கொண்டது. வேட்சியாருடன் போரிட்டு ஆநிரைகளை மீட்டுவரச் சென்ற கரந்தையார் அச்சுரவழியைக் கடந்து நெடுந்தூரம் நடந்து வந்தமையால் தம் தாயாருடன் செல்லமாட்டாது நடைதளர்ந்து நின்றுவிட்ட கன்றுகளின் கண்ணின் கருமணியின் கடையினின்றும் சிந்துகின்ற நீரைத் துடைத்து அவற்றின் துயரைப் போக்கினர். நிரைமீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து, மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும் சிறப்பினைக் கொண்ட நடுகல்லின் முன் ஊன்றிய வேலும், அதன்கண் சார்த்தப்பெற்ற கேடயமும் செல்லும் வழிதோறும் வேந்தரது போர்முனையை ஒத்துக் காணப்படும் அச்சம் எழும் இயல்பினை உடையது 13 என விளக்கி நிற்கின்றன

மேலே காட்டிய இரு அகநானூற்றுப் பாடல்களும், தலைவன் பொருளீட்டப் பிரிந்து சென்ற வழியின் இயல்புகளை விளக்குவதாக அமைந்துள்ளன. ஆநிரை மீட்கும் சண்டையில் இறந்துபட்ட வீரர்கள் நடுகல்லாய் நின்றநிலை இனக்குழச்சமூகத்தில் ஆநிரைகள் சொத்தாகக் கருதப்பட்டதையும், இழந்த சொத்தை (ஆநிரையை) மீட்பது சமூகக் கடமையாகக் கருதப்பட்டதையும், அத்தகைய மீட்பின்போது மாண்டோர் தெய்வமாகத் தொழத்தக்கவர்களாக விளங்கியதையும் மேற்காட்டிய பாடல்கள் விளக்கி நிற்கின்றன.

இத்தகைய நடுகல்வழிபாடு சீறூர் மன்னர் சமுதாயத்தில் முதன்மையானதாக, அடிப்படையானதாகக் கருதப்பட்டு வந்துள்ளதை இச்சமூகம் பற்றிய பாடல்கள் விளக்கி நிற்கின்றன.

சீறூர் மன்னர் நடுகல் வழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருந்ததையும் நடுகல் அன்றி வேறு தெய்வங்களை வழிபடாப் பண்புடையார் என்பதையும் மாங்குடி கிழாரின் மூதின்முல்லை துறையிலமைந்த,

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே 14

எனக் குறிப்பிடுகிறது. இந்த அடிப்படையில்,

நடுகல் பிறங்கிய உவல் இடுபறத்தலை
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர் 15

என நடுகற்கள் நிறைந்திருந்த சுடுகாட்டை உடையதாகச் சீறூர் சுட்டப்படுகிறது.

'வீரவணக்கம் சங்க இனக்குழுச் சமுதாயத்தின் பெருவழக்குடைய முனைப்பான வழிபாட்டு முறையாய் இருந்துள்ளது. மாடுபிடி சண்டையில் இறந்துபட்டவர்க்கு நடப்பட்ட நடுகற்களே இவ்வீர வழிபாட்டிற்கான அடிப்படைகளாய் இருந்துள்ளன. இதைத்தான் சீறூர் மன்னர் சமுதாயத்திலும் காணமுடிகின்றது. சீறூர் மன்னர் சமுதாயத்திலும் வீரமே சமுதாய நலம் பேணுதற்கான அடிப்படையாய் இருந்துள்ளது. கால்நடைப் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்டு வாழ்ந்த சமுதாயத்தில் நடந்த கரந்தைப் போர் அச்சமுடைதாய உடைமை பேணும் பொதுப் போராகும். இதில் இறந்துபட்ட அனைவருமே அச்சமுதாயத்தினரால் மதிக்கப் பெற்றனர். உடைமை காத்த கரந்தை வீரரை இறப்புக்குப் பின்னும் நடுகல்லாய்த் தம்மோடு வாழ்பவராகக் கருதியுள்ளனர்.' 16

இந்த அடிப்படையில் தாம்சார்ந்த சமுதாயத்தின் உடைமையை (ஆநிரையை)க் காக்கும் பொருட்டு மாண்ட வீரர்களின் நினைவாகக் கல்நட்டு அவ்வீரர்களைத் தெய்வமாக வழிபடும் பண்பு சீறூர் மன்னர்தம் குடிமைப் பண்பாய் விளங்குவதை அறிய முடிகிறது.

வேந்துவிடுதொழில்
புன்புல வேளாண்மையால் கிடைக்கும் வரகு, தினை, அவரை முதலான தானியங்களை மட்டுமே உடையதான, வேட்டையின் வாயிலாகக் கிடைக்கும் பொருளைக் கொண்டதான சீறூர் மன்னர் சமுதாயம் வறுமை காரணமாக வேந்துவிடுதொழிலில் ஈடுபட்டமையைப் புறநானூற்றுப் பாடல்கள் விளக்குகின்றன.

வேந்து தொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு 17
……… வேந்தனொடு       
நாடுதரு விழுப்பகை எய்துக 18
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்   
வேந்துவிடு தொழிலொடு சென்றனன் 19

என வேந்துவிடுதொழிலை மேற்கொண்ட சீறூர் மன்னர், அத்தொழிலின் வாயிலாக நெல், பொன், யானையின் முகபடாம் போன்ற பலவற்றைப் பரிசிலாகப் பெற்று வந்ததையும் பாடல்கள் காட்டுகின்றன.

பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து,தன்
புன்புறப் பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் - வேந்து விழுமுறினே 20

எனும் பாடலடிகள் பெரிய நெல் வயல்களில் விளைந்த நெல்லை உண்ட தன்னுடைய புல்லிய முதுகுப் பகுதியையுடைய பெண் குருவியுடன் தங்குவதற்கு இடனாகிய, வேந்துவிடு தொழிலில் கிடைக்கும் புதுவருவாய் உடையதாகும் ஊர் எனக் குறிப்பிடுகின்றனர்.

சிறிய ஊரின் மன்னன், வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை ஏற்றுப் பகை மேற்சென்றனன். அவன் போரில் வெற்றியுடன் திரும்பி வந்து உன்னுடைய பாணிச்சி பொன்னரி மாலை அணிய, உனக்கு வாடாத பொன் தாமரைப் பூவினைத் தலையில் பரிசாகச் சூட்டுவான் எனப் பாணரிடம், சீறூர் மன்னனின் மனைவி குறிப்பிடுவதை,

சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின்
பாடினி மாலையணிய
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே 21

எனும் பாடலடிகள் காட்டுகின்றன.

அருஞ்சமம் ததையத் தாக்கி பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும் பரிசிலனே 22

எனும் பாடலடிகள் சீறூர் மன்னன் வேந்துவிடு தொழில் முடித்து யானையின் முகபடாம் பெற்று வந்ததைக் காட்டுகின்றன.

அரசனால் வென்றளிக்கப்பட்ட சிறந்த பொருள்களைத் தனக்கென வைத்துக்கொள்ளாது பரிசிலர்க்கு எந்நாளும் குறையாமல் தருகின்ற வள்ளண்மையுடைய புகழமைந்த தகுதியுடையவன் சீறூர் மன்னன் என்பதை,

வேந்து தரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரை 23

எனும் பாடலடிகள் காட்டுகின்றன.

வேந்துவிடு தொழிலுக்காட்பட்டு, அத்தொழிலின் வாயிலாகப் பெற்றவற்றைப் பாணர்க்கும் பலர்க்கும் வழங்கிய சீறூர் மன்னரின் இத்தகைய இயல்பு அவர்தம் குடிமைப் பண்பால் விளங்கக் காணலாம்.

முடிவுரை
இனக்குழுச் சமூகத்தின் பண்புகள் நிரம்பியதாய்க் காணப்படும் சீறூர் மன்னர் சமூகம் அரசுருகாக்கத்தில் முதன்மையான பங்கு வகித்துள்ளதைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

கூட்டுழைப்பும், கூட்டுண்ணலும் எனப் பொதுவுடைமை நிலவிய சமூகமாக இனக்குழு வாழ்வின் எச்சங்களைக் கொண்டதாகச் சீறூர் மன்னர் சமூகம் விளங்கியது. இச்சமூகம் பல விழுமிய பண்புகளைக் குடிமைப்பண்புகளாகக் கொண்டிருந்துள்ளது.

இக்குடிமைப் பண்புகளில் நடுகல் வழிபாடும், வேந்தர்க்காக மேற்கொள்ளும் வேந்துவிடு தொழிலும், சீறூர் மன்னர்தம் வறுமை நிரம்பிய வாழ்வையும், தொன்மைச் சிறப்பையும் காட்டுவதோடு பண்டைத் தமிழ்ச் சமூகத்தில்  இச்சமூகம் பெற்றிருந்த இடத்தையும் காட்டுகின்றன.

சான்றெண் விளக்கம்
1.    மாதையன். பெ.,  சங்க கால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும். ப.38
2.    மேலது. ப.38
3.    மேலது. ப.38
4.    புறம். 299:1
5.    மேலது. 308:4
6.    மேலது. 302:7
7.    மேலது. 324:7-8
8.    மேலது. 328:2
9.    மேலது. 335:4-6
10.    தொல்.பொருள்.புறத்.5:19 – 21
11.    அகம். 67: 6 – 11
12.    மேலது. 131:6 – 15
13.    செயபால்.இரா.,(உ.ஆ) அகநானூறு, ப. 400
14.    புறம்.335: 10 – 12
15.    மேலது. 314: 3 - 4
16.    மாதையன்.பெ  சங்ககால இனக்குழச் சமுதாயமும் அரசு உருவாக்கமும். ப. 43 – 44
17.    புறம்.285 : 7
18.    மேலது. 306: 6 - 7
19.    மேலது. 319: 12 - 13
20.    மேலது. 318: 7 - 9
21.    மேலது. 319: 12 - 15
22.    மேலது. 326: 13 - 15
23.    மேலது. 320: 16 - 18

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*கட்டுரையாளர்:  - பி. - துரைமுருகன், முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R