சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்!- விரைவில் வெளிவரவிருக்கும் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய  கட்டுரை இக்கட்டுரை. இத்தொகுப்பிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் ஏறகனவே 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவையென்பதும் குறிப்பிடத்தக்கது. - வ.ந.கி -


தொல்காப்பியம் என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருபவர் நுணாவிலூர் கா.விசயரத்தினம். அதற்குக் காரணம் 'பதிவுகள்' இணைய இதழில் இவர் எழுதிய , எழுதிவரும் தொல்காப்பியம் பற்றிய, சங்கத்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும், ஏற்கனவே நூலுருப்பெற்ற இவரது 'தொல்காப்பியத்தேன் துளிகள்..' என்னும் நூலும்தாம். ஆரம்பத்தில் இவர் 'பதிவுகள்' இணைய இதழுக்கு இலக்கியக்கட்டுரைகள் அனுப்பியபோது இவர் தமிழ்ப்பேராசிரியர்களுள் ஒருவராக இருக்கக்கூடுமென்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது இவர் தமிழ்ப்பேராசிரியரல்லர் ஆனால் ஓய்வு பெற்ற ஒரு கணக்கியல் பட்டதாரி; கணக்காய்வுத் திணைகளத்தில் (இலங்கை) கணக்காய்வு அத்தியட்சகராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவரென்பது.

கணக்கியல் பட்டதாரியான இவர் எவ்விதம் இவ்விதம் சங்கத்தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய ஆய்வில் ஆர்வம் கொண்டார்? ஆனால் அந்த ஆர்வம் இவரது ஓய்வுக்காலத்தைப் பயனுள்ளதாக மாற்றித் தமிழ் இலக்கிய உலகுக்கு வளம் சேர்க்குமொன்றாக மாற்றி விட்டது. தமிழ்ப்பேராசிரியர்களே எழுதாத எண்ணிக்கையில் சங்கத்தமிழ் நூல்கள் பற்றியும், குறிப்பாகத் 'தொல்காப்பியம்' பற்றியும் இவர் எழுதி வருவது பாராட்டத்தக்கது. தன் பிறந்த மண்ணை நினைவுபடுத்தும் வகையில் 'நுணாவிலூர் கா.விசயரத்தினம்' என்னும் பெயரில் இலக்கியக் கட்டுரைகளை எழுதி வரும் நுணாவிலூராரின்  சுயவாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை மற்றும், சாதாரண வாசகர்களுக்கும் புரியக்கூடிய தெளிந்த இலகு நடை ஆகியவை அவரது எழுத்துகள் சிறப்புற்று விளங்குவதற்கு முக்கிய காரணங்கள். இத்தொகுதியிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளிவந்தவை என்பதும் மகிழ்ச்சிக்குரியது.

1. நுணாவிலூராரின் சுயவாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை!

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அனைத்துமே அவரது சங்க நூல்கள் மீதான பன்முக, ஆழ்ந்த வாசிப்பினையும் அவற்றை ஆழமாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் திறமையினையும் வெளிப்படுத்துவை. உதாரணத்துக்கு இத்தொகுப்பிலுள்ள சில கட்டுரைகளை இந்த நோக்கில் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

'சங்க இலக்கியக் களவியற் பாடல்கள் வெளிக்கொணரும் அம்பலும் அலரும்' என்னும் கட்டுரை சங்ககாலத்தமிழர்கள் வாழ்வில் காதலைச் சமூகம் அங்கீகரித்திருந்ததை இக்கட்டுரை விபரிக்கும். காதல் வயப்பட்டிருக்கும் தலைவனும், தலைவியும் களவாகச் சந்திப்பதையும் , அதற்காகச் சில கட்டுப்பாடுகளைச் சமூகம் விதித்திருந்ததையும் கட்டுரை மேலும் விபரிக்கும். இவ்விதம் காதலர்கள் பிறருக்குத்தெரியாதவாறு களவாகச் சந்திப்பதைக் 'களவு' என்று அழைத்தனர். பகலில் தலைவனும் , தலைவியும் சந்திக்குமிடத்தைப் 'பகற்குறி'யென்றும், இரவில் சந்திப்பதை 'இரவுக்குறி'யென்றும் அழைத்தனர். இவ்விதம் சந்திக்கும்போது எவ்விதம் எங்கு சந்திக்க வேண்டுமென்பதையும் , அவ்விதம் சந்திக்குமிடங்கள் எவ்விதம் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதையும் அக்காலத்தமிழர்கள் சில நிபந்தனைக்களுக்குள்ளாக்கியிருந்தனர். அவற்றை மேற்படி கட்டுரையில் கட்டுரையாளர் பின்வருமாறு கூறுவார்:

"தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது குறியிடம் அமைத்துக் கூடுவர். பகலிற் கூடுமிடம் 'பகற்குறி' என்றும்,  இரவிற் கூடுமிடம் 'இரவுக்குறி' என்றும் கூறுவர்.  'குறியெனப் படுவது இரவினும் பகலினும், அறியக் கிளந்த ஆற்ற தென்ப.' –(பொருள். 128)

இரவுக்குறிக்குரிய இடமானது, இல்லத்துக்கு அண்மித்ததாகவும் அவர்கள் பேசுவதை வீட்டிலுள்ளோர் கேட்குமாறு அமைந்ததாகவும் இருக்க வேண்டுமென்று சூத்திரம் கூறும் 'இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே
மனையகம் புகாஅக் காலை யான.' – (129)

, பகற்குறிக்குரிய இடமானது மதிலின் புறத்தே அமையுமென்றும், அவ்விடம் தலைவிக்கு நன்றாகத் தெரிந்த இடமாகவும் அமைய வேண்டுமென்றும் கூறுவர்.
'பகற்புணர் களனே புறனென மொழிப
, அவளறி வுணர வருவழி யான.' – (பொருள். 130)"

இவ்விதம் ஆரம்பிக்கும் கட்டுரை, அம்பல் பற்றிய அலர் பற்றிய வரைவிலக்கணங்களை எடுத்துக்கூறி, காதற் களவு பற்றிய , தொல்காப்பிய, அகநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, குறுந்தொகை, திருக்குறள், நாலடியார் என் பல நூல்களை ஆதாரங்களாக்கி ஆய்வுக்கண்ணோட்டத்துடன்  விபரிக்கிறது.

இது போல் பெண்களின் குணவியல்புகளைப்பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் அவரது ஆய்வுச்சிறப்பினை வெளிப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு பண்டைய தமிழரின் இலக்கிய நூல்கள் பெண்களின் நால்வகைப்பண்புகளாக அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்று வகைப்படுத்தியிருப்பதை அனைவரும் அறிவர். ஆனால் தொல்காப்பியர் காலத்தில் பெண்களின்  மூவகைப்பண்புகளாக அச்சம், மடம் , நாணம் ஆகியவையே குறிப்பிடப்படுகின்றன. நான்காவது குணமாகிய பயிர்ப்பு என்னும் குணம் பற்றி பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப்புலவரின் 'நளவெண்பா' நூலே முதன் முதலில் குறிப்பிடுகின்றது என்பதைச்சுட்டிக்காட்டுகின்றார் தனது 'மகளிர் மாண்பை மேம்படுத்திச்சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியர்' என்னும் கட்டுரையில்.

இவ்விதமே தொகுப்பிலுள்ள கட்டுரைகளொவ்வொன்றுமுள்ளதைக்காணலாம். ஓவ்வொரு கட்டுரையின் முடிவிலும் நிறைவுரை அல்லது முடிவுரை என்னும் பகுதியைக்காணலாம். இம்முடிவுரை அல்லது நிறைவுரை பகுதியில் கட்டுரையின் சாரம் சுருக்கமாகக்கூறப்படுகிறது. இவ்விதமாகக் கட்டுரைகளை ஆசிரியர் அமைத்திருப்பதன் முக்கியமான காரணம் ஆசிரியர் இவ்விதமான கட்டுரைகளை எழுதியதன் முக்கிய நோக்கங்களிலொன்றினால்தான். அந்த நோக்கம்  சாதாரண வாசகர்களையும் தொல்காப்பியம் முதலான சங்க இலக்கியங்கள் மிகவும் எளிய, இலகுவான நடையில் கூறப்படுவதன் மூலம் சென்றடைய வேண்டுமென்பதுதான்.

2. நுணாவிலூராரின் சாதாரண வாசகர்களுக்கும் புரியக்கூடிய தெளிந்த இலகு நடை!

தொல்காப்பியம் என்றாலே சாதாரண மக்களுக்கெல்லாம் புரியாததொரு இலக்கண நூலென்று பலர் நினைத்து விடுகின்றார்கள். ஆனால் அது தவறு. தொல்காப்பியம் மக்களுக்காக எழுதப்பட்ட நூல். அந்நூல் எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்குப் புரியக்கூடிய வகையில் எழுதப்பட்ட நூல் தொல்காப்பியம். இன்று அக்காலகட்டத்து மொழி நடை கடினமானதாகவிருப்பினும், அக்காலகட்டத்தைப்பொறுத்தவரையில் எளிதான நடையிலேயே தொல்காப்பியம் எழுதப்பட்டுள்ளது என்பது ஆசிரியரின் எண்ணம். இதனை ஏற்கக்கூடியதாகவுள்ளது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட நூல்களின் மொழி நடை இன்று வாசிக்கும்போது சிரமமாகவிருக்கிறதல்லவா. ஆனால் அன்று மக்களுக்குப் புரியக்கூடிய மொழியில் இருந்திருக்குமல்லவா.  ஆசிரியரின் இவ்வெண்ணத்தை அவரது 'தொல்காப்பியத்தேன் துளிகள்..' நூலின் அவரது 'நுழையுமுன் என் உரை' என்னும் குறிப்பின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

"தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல் என்று கூறப்பட்டாலும் அந்நூல் ஓர் இலக்கிய நூலுமாகும். அதில் நிறைந்த இலக்கியங்கள் பொதிந்துள்ளன. அதிலுள்ள சூத்திரங்கள் சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை என்றும் , அவை பண்டிதர் பரம்பரைக்குரியனவென்றும் கூறி எட்ட நிற்போர் பலர்.  ஆனால் தொல்காப்பியம் எழுந்த காலத்தை நாம் நோக்க வேண்டும். அன்று தமிழ்மொழி சிறப்புற்றிருந்தது. அக்கால மக்களுக்கு அன்று அவை புரிந்திருக்க வேண்டும். ஏனெனில் தொல்காப்பியம் மக்களுக்காக எழுதப்பட்ட நூல், ஆனால் இன்றுள்ளோருக்கு இச்சூத்திரங்கள் கடினமானவையே. சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் இலகு தமிழில் எழுதுவதே என் நூலின் நோக்காகும். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மையப்படுத்தியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. "( நூல்: தொல்காப்பியத்துளிகள்..', பக்கம் xxi)

மேற்படி ஆசிரியரின் கூற்று ஏற்கனவே வெளியான அவரது நூலான 'தொல்காப்பியத்தேன் துளிகள்..' என்னும் நூலுக்கான ஆசிரியரின் கூற்றாகும். அது இந்நூலிலுள்ள கட்டுரைகளுக்கும் பொருந்தும்.

பொதுவாகவே ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதுபோல் 'தொல்காப்பியமா?' என்று தொலைவில் ஒதுங்குவோரே பலர். அவர்களைப்பொறுத்தவரையில் தொல்காப்பியம் கடின நடையிலமைந்த இலக்கணச்சூத்திரங்களை உள்ளடக்கிய நூல். ஆனால் தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமல்ல இலக்கிய நூலும் கூட என்னும் தன் கருத்தினை தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மையமாக வைத்து ஆசிரியர் படைத்திருக்கும் ஆய்வுக்கட்டுரைகள் நிரூபிக்கின்றன. இடைச்சங்க காலத்தைச்சேர்ந்த தொல்காப்பியத்தின் பொருளதிகாரமும் ஏனைய கடைச்சங்ககாலத்தமிழ் நூல்களும் அக்காலகட்டத்தமிழ் மக்களின் சமூக வாழ்வை , அவர்கள் கைப்பிடித்து ஒழுகிய சமூகப்பண்புகளை, அவர்களது காதல் வாழ்க்கையினை, பெண்களுக்குச் சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையினை, எவ்விதம் அன்று தமிழ் மக்கள் நிலப்பிரிவுகளுக்கேற்ப வாழ்ந்தார்கள் என்பதை, அவர்களுக்கிடையில் நிலவிய பழக்க வழக்கங்களை, பொழுது போக்குகளை, அவர்கள் அணிந்த அணிகலன்களை, அவர்கள் உண்டு மகிழ்ந்த உணவு வகைகளை, விளையாடி இன்புற்ற விளையாட்டுகளை, நகர அமைப்பு முறையினை, வாழ்ந்த பல்வகை விலங்கினங்களை, பறவைகளை, விருட்சங்களை, பண்டைத்தமிழரின் திருமணச் செயற்பாடுகளை, வாழ்வின் வழிகாட்டலுக்காக அறிவுறுத்திய நல்வழிக்கூற்றுகளை, அவர்களது அறிவியற் சிறப்பினை, பெண்களின் குணநலன்களை என்று பல விடயங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றை ஆசிரியரின் தொல்காப்பியம் உட்பட ஏனைய கடைச்சங்க நூல்கள் மீதான புலமை இந்நூலிலுள்ள கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்துகின்றது.

இந்நூலிலுள்ள கட்டுரைகள் ஆசிரியரின் இவ்வகைக்கட்டுரைகளைப் படைப்பதற்கான முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுகின்றன. மிகவும் கடினமானவையாக இன்று வாழும் மக்களுக்குத்தென்படும் சங்ககாலத்தமிழ் நூல்கள் கூறும் விடயங்கள் மூலம் அக்காலகட்டத்தமிழர்கள்தம் வாழ்வினை, பண்பாடுகளை, சமூக அமைப்பினை, நகர அமைப்பினை எனப்பல்வகை விடயங்களை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டுமென்பது ஆசிரியரின் அவா. அந்த அவரது நோக்கம் நிறைவேறுவதற்கு அந்நூல்களையெல்லாம் நன்கு வாசித்து அவை கூறும் பொருளின் சாரத்தை அறிந்திருக்க வேண்டும். அதனை அவரது தொடர்ச்சியான சுயவாசிப்புடன் கூடிய சங்கத்தமிழ் இலக்கியங்கள் மீதான புலமை சாத்தியமாக்கியிருக்கின்றது. இவ்விதம் தான் அறிந்த விடயத்தை சாதாரண மக்களிடத்தே எடுத்துச்செல்வதற்கு அவரது தெளிந்த இலகுவான மொழி நடை உதவியிருக்கின்றது. தன் ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக்கித்தன் எழுத்துகள் மூலம் சாதனை படைக்கும் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள் தொடர்ந்தும் தான் சுவைத்த சங்கத்தமிழ் நூல்கள் கூறும் பொருளினை மையமாக வைத்து, கட்டுரைகள் பலவற்றைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் மொழி நடையில் எழுத வேண்டும்; எழுதுவார் என்றே நம்புகின்றோம். அவரது இலக்கியச்செயற்பாடுகள் சிறப்புடன் மேலும் தொடர்ந்திட வாழ்த்துகிறோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R