பாலன் தோழர்தோழர் பாலனின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' என்னும் சிறிய நூல் தோழர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது ' என்பார்கள். அதற்கொப்ப அளவில் சிறியதானாலும், கூறும் பொருளில் காத்திரமானதாக, புரட்சிகரமானதாக அமைந்துள்ள நூலிது. இலங்கை மீதான இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவரீதியிலான தலையீடுகளை விபரிப்பதும், இவற்றால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை வெளிப்படுத்துவதும், எவ்விதம் இந்தியத்தலையீட்டிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு இலங்கையின் மக்கள் அனைவரும் இன, மத , மொழி ரீதியிலான பிரிவுகள் ஏதுமற்று , ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதையும் தர்க்கரீதியாக விபரிப்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இது தன் நோக்கத்தில் வெற்றியே அடைந்திருக்கின்றது என்பதை இதனை வாசிக்கும்போது உணர முடிகின்றது.

பொதுவாக இந்தியாவின் தலையீடு இலங்கையிலுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இந்தியாவை மீறி இலங்கையால் எதுவுமே செய்ய முடியாது என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தியாவைப்பொறுத்தவரையில் அதன் அயல் நாடுகளுடனான வெளிநாட்டுக்கொள்கை அதன் தேசிய நலன்களுக்கு அமையவே அமைந்துள்ளது. அயல் நாடுகள் அதன் தேசிய நலன்களுக்கு முரணாகச் செயற்படும்போது அது அந்நாடுகளை ஆக்கிரமிக்கவும் தயங்காது என்பதை வரலாறு காட்டி நிற்கிறது. அயல் நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தனது நலன்களுக்குச் சார்பாகப் பயன்படுத்துவதில் இந்தியா ஒருபோதுமே தயங்கியதில்லை. இதனை இந்நூல் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இதுவரை காலம் இலங்கையின் மீதான இந்தியத்தலையீட்டினை வரலாற்றுக்கண் கொண்டு , சுருக்கமாக ஆராயும் இந்நூல், , இந்தியா எவ்விதம் தன் அயல்நாடுகளில் தன் நலன்களுக்காகத்தலையிடுகின்றது என்பதையும் புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துகிறது

அண்மைக்காலமாகவே , குறிப்பாக இலங்கையில் யுத்தம் மெளனிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து இந்நாள் வரையில் உபகண்ட அரசியலைக்கூர்ந்து நோக்கினால், இந்தியா இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளைத்தன் மாநிலங்களைப்போலவே பயன்படுத்தி வருவதைப்போன்றதொரு நிலையினை அவதானிக்க முடிகின்றது. தன் நலன்களுக்கேற்ப அது ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் பார்க்கும்போது (காங்கேசன் துறைத்திட்டம், பலாலி விமான நிலையத்திட்டம், புகையிரத்தப்பாதை மீளமைப்புத்திட்டங்கள், சம்பூர் அனம் மின்சார நிலையத்திட்டம், திருகோணமலை எண்ணெய்ச்சுத்திகரிப்பு நிலையத்திட்டம் என இவை போன்ற பல திட்டங்கள்) எவ்வளவு தூரம் இந்தியாவின் தலையீட்டில் இலங்கை அகப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது. இவ்விதமான திட்டங்களினால் இந்தியா அடையும் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதாரரீதியிலான நலன்களை நூல் பட்டியலிடுகின்றது. அதே சமயம் இத்திட்டங்களினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய தீமைகளைப்பற்றியும் நூல் விபரிக்கின்றது. இவ்வகையான திட்டங்களினால் இரு நாட்டு மக்கள் அடையும் நன்மை, தீமைகளைப்பற்றி நூல் ஆராய்கிறது. அதே சமயம் இந்தியத்தலையீடு பற்றிய ஊடகங்களில் அதிகம் வராத பல தகவல்களையும் ஆசிரியர் இந்நூலில் வெளிப்படுத்துகின்றார். உதாரணமாக வட, கிழக்கு தவிர்ந்த மதவாச்சி, அநுராதபுரம் போன்ற இடங்களிலுள்ள விவசாய நிலங்கள் இந்தியாவுக்குக் குறைந்த குத்தகையில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள விபரத்தைக்குறிப்பிடலாம். இது போன்ற பல விபரங்களை நூல் வெளிப்படுத்துகிறது.

இந்நூல் கூறும் சில விடயங்களில் எனக்கு மாற்றுக் கருத்துகள் உண்டு. குறிப்பாகத் 'தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த வரையில் இந்தியாவால் இலங்கையில் காலூன்ற முடியவில்லை' என்ற விடயத்தைக்குறிப்பிடலாம். உண்மையில் விடுதலைப்புலிகளுட்பட அனைத்து இயக்கங்களும் இந்தியாவின் ஆதரவால்தான் , குறுகிய காலத்தில் அசுர பலம் கொண்டு வளர்ந்தன. பின்னர் இந்தியாவுக்கும், அமைப்புகளுக்குமிடையில் குறிப்பாக இந்தியாவுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் முரண்பாடுகள் முற்றி வெடித்தன. இந்தியா இலங்கையில் இராணுவரீதியில் தலையிட, காலூன்றக் காரணமாக அமைந்ததே அன்றைய ஜே.ஆர்.அரசின் வடமராட்சி மீதான இராணுவ நகர்வுகள்தாம். இந்திய இராணுவத்தலையீடு தன் தேசிய நலன்களுக்காக, விடுதலைப்புலிகளைக் காப்பாற்ற., விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் ஏற்பட்டதுதான். விடுதலைப்புலிகளின் காலத்திலேயே இந்தியா இலங்கையில் காலூன்றி விட்டது. எனவே இவ்விடயம் இன்னும் விரிவாக ஆராயப்படலாம் என்பதென் நிலைப்பாடு. மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் 'வங்கம் தந்த பாடம்' நூல் பற்றியும் இந்நூலில் குறிப்பிட்டிருக்கலாம். ஏனெனில் அனைத்து ஆயுத அமைப்புகளும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில், இந்தியத்தலையீட்டின் விளைவு எவ்விதம் எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது என்பதை எச்சரிக்கும் வகையில் வெளியானதொரு முதனூலாக இந்த மொழி பெயர்ப்புப் பிரசுரத்தைக் கருத முடிகின்றது. அந்நூல் அன்று எச்சரித்தது பின்பு நடைமுறையில் நிஜமாகியதை வரலாறு வெளிப்படுத்துகின்றது. தன்னால் வளர்க்கப்பட்ட் அமைப்புகளில் ஒன்றான விடுதலைப்புலிகள் பலம் பெற்று, தன் நலன்களுக்கு எதிராக மாறிய போது, அதனை அழிப்பதற்காக இலங்கை அரசுகளுடன் இணைந்து இந்தியா செயற்பட்டது. இதனைத்தான் 'வங்கம் தந்த பாடம்' அன்று எச்சரித்திருந்தது.

இந்நூலின் இறுதியில் இந்தியத்தலையீடுக்கு எதிராக இலங்கையின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப்போராட்டம் எத்தகையதாக அமைய வேண்டும் என்று ஆசிரியர் கருதுகின்றார் என்பதை இன்னும் விரிவாக விபரித்திருக்க வேண்டும். இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கெதிரான , வர்க்க ரீதியிலமைந்த வர்க்கப்போராட்டமாக அமைய வேண்டுமென விரும்புகின்றாரா? அல்லது இந்தியத்தலையீட்டுக்கு எதிரான பொதுவானதொரு அரசியல் போராட்டம் என்ற ரீதியில் அமைந்த போராட்டத்தினை ஆசிரியர் விரும்புகின்றாரா? இது பற்றி இன்னும் சிறிது விரிவாக ஆசிரியர் விபரித்திருக்கலாம். தன் கருத்துகளைப்பகிர்ந்திருக்கலாம்.

மேலும் அண்மைக்காலமாக ஊடகங்களில் அவ்வப்போது அடிபடும் செய்திகளிலொன்றான இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையிலான சேது பாலம் அமைக்கும் திட்டம் பற்றிய தனது புரிதல்களையும் பாலன் தோழர் அவர்கள் இந்நூலில் உள்ளடக்கியிருக்கலாம் என்றும் கருதுகின்றேன். இலங்கை மீதான இந்தியத்தலையீட்டுக்கு மிகவும் வலுச்சேர்க்கும் வகையில் அமையும் திட்டங்களிலொன்று இந்தச் சேது பாலம் அமைப்பது பற்றிய திட்டம். இப்பாலம் மட்டும் அமைந்து விட்டால் இலங்கை இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றைப்போல் மாறியதுபோல்தான். இத்திட்டம் பற்றியும், இதன் சாதக, பாதக அம்சங்களைப்பற்றியும் நூலாசிரியர் சிறிது ஆராய்ந்திருக்கலாம்.

மேலும் இச்சிறு நூலில் 1971 ஜே.வி.பி.யினரின் ரோகண விஜயவீராவின் புரட்சி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் என் பால்ய காலத்து அனுபவங்கள் சிலவற்றை நனவிடை தோய வைத்து விட்டது. 1971 ஜே.வி.பி.யினரின் ரோகண விஜயவீராவின் புரட்சியின்போது நீண்ட காலம் பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அப்பொழுதுதான் யாழ் இந்துக்கல்லூரியில் கற்க ஆரம்பித்திருந்த சமயம். நீண்ட விடுமுறை காரணமாக அப்பொழுது வவுனியாவில் வாழ்ந்து வந்த என் குடும்பத்தவருடன் சென்று இணைந்து கொண்டேன். அக்காலகட்டத்தில் வவுனியா நகரசபைக்கு முன்பாகவிருந்த மைதானத்தில் இந்தியக் ஹெலிகொப்டர்கள் வந்திறங்குவதும், மைதானத்தைச்சுற்றிப் படையினர் 'சப் மெஷின் கன்'களுடன் நிலையெடுப்பதும், புகையிரத நிலையம் போன்ற நகரின் முக்கிய நிலைகளிலெல்லாம் படையினர் 'சப் மெஷின் கன்'களுடன் திரிவதும், 'பொலிஸ் நிலையத்துக்கு முன் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்பட்டிருந்ததும், மடுக்கந்தை பகுதியில் ஹெலிகொப்டர்களில் படையினர் குண்டுகள் போடுவதும் ஞாபகத்துக்கு வருகின்றன.

மொத்தத்தில் இச்சிறு நூல், தான் கூறும் பொருள் பற்றிய விரிவானதொரு ஆய்வுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் எழுந்துள்ள நல்லதொரு ஆரம்ப நூல்; முதனூல். இது பற்றிய விரிவான ஆய்வுகளை உள்ளடக்கி மேலும் பல நூல்கள் வெளிவரவேண்டும்.

நூல்: இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
முதற்பதிப்பு: ஜூன் 2016
நூல் ஆசிரியர்: தோழர் பாலன்
வெளியீடு: தோழர் பதிப்பகம்

தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 00447753465573
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பக்கம்: 58
உரிமை: மக்களுக்கு

விலை: ரூபா 25 (இந்திய ரூபா)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R