- நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது 'நாளை' நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. - பதிவுகள் -

அத்தியாயம் நான்கு!

- இ. தியாகலிங்கம் -ஈழத்தமிழ் இனத்தின் மீட்பிற்காகவும், இறுதி விடுதலைக்காகவும் பல இயக்கங்கள் இயங்குவதாகத் தேவகுரு கேள்விப்பட்டிருந்தார். எல்லா இயக்கங்களுமே தமிழ் இனத்தின் கௌரவத்திற்காகவே உழைக்கின்றன என்றும், அந்த இயக்கங்களைச் சேர்ந்த போராளிகள் அனைவருக்கும் யாழ் மக்களினால், 'பெடியன்கள்' என் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டனர் என்றும் தேவகுரு அறிந்திருந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் சேர்ந்து கொண்ட இயக்கம் பற்றி அறிந்து, அவர்களுடன் தொடர்பு கொண்டு, அந்த இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.

சில மாதங்கள் எந்தப் பயிற்சியும் இன்றி, யாழ்ப்பாணத்தில் உள்ள கோண்டாவில் என்று ஊரிலே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தது. கோண்டாவில் மக்கள் ஆதரித்த நேர்த்தி இன்றும் நெஞ்சை உருக வைக்கும் என்றாலும், இந்தக் காலம் மிகவும் அலுப்பான காலம். உண்மையான ராணுவப் பயிற்சி பெற்று, களத்திலே குதித்து செயற்கரியன சாதிக்க வேண்டும் என்று துடித்தார். இந்தியக் கரையை அடைவதற்குப் பயண ஏற்பாடுகளைச் செய்வதிலே சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு, என்று விளக்கினார்கள். பல்லைக் கடித்துப் பொறுமை காத்தார். பொறுமை வளறத் துவங்கி, பயிற்சி முகாம் செல்ல வேண்டும் என்கிற அவர் துடிப்பு நச்சரிப்பாக மாறிய ஒரு கட்டத்திலே, இந்தியாவிலுள்ள பயிற்சி முகாமுக்குச் செல்வதற்கு அவருக்கு வாய்ப்புக் கிட்டியது.

அவர் சேர்ந்திருந்த இயக்கத்திற்கு, தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரியதொரு தளம் இருந்தது. அந்தத் தளம் பல பயிற்சி முகாம்களை நடத்தியது. தேவகுரு பயிற்சி முகாம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதனை அடைந்ததும் மகிழ்ந்தார். கண்ணே கருத்தாக அவர்கள் அளிக்கக் கூடிய அனைத்துப் பயிற்சிகளிலும் சிறப்பாகத் தேறி, சிங்களருடைய படைகளை அழிக்கும் வீரப்படையில் முன்னேறிச் சென்று 'உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு' என நிலைக்கும் வீர மரணத்திற்குத் தயாராக இருந்தார். வீர மரணம் என்பது போராளியினுடைய வாழ்க்கையில் மிக இயல்பான ஒன்று என அவர் தனது மனசினைப் பக்குவப்படுத்தியும் இருந்தார்.

பயிற்சிகள் கடுமையானவையாக இருந்தன. விறகுக் கட்டைகளையே துவக்குகளைப் பாவனை செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. துவக்குகள் வந்து சேர்ந்ததும், இந்தப் பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும். என அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக் கொண்டார். இந்தப் பயிற்சிகள் தம்மைத் திறமையுள்ள படைவீரனாக மாற்றி அமைக்கும் என முழுமையாக நம்பினார். முகாமின் ஒழுக்க நெறிகள் - கட்டுப் பாடுகள் மிகவும் கடினமாக இருந்தன. இவை போராடும் குழுவுக்குத் தேவையானவை என அவர் பூண்ட நம்பிக்கைகளிலே காலப் போக்கிலே, சிறிது சிறிதாக ஓட்டைகள் விழத் துவங்கின.

ஒரு நாள். தூக்கக் கலக்கம். அதிகாலை மூன்று மணியிருக்கும். விசில் சத்தம் கேட்டது. 'பிளட்டூன்'களுக்கு நடுவே இருந்த முற்றத்தில் பயிற்சி பெறும் அனைவரும் அணி அணியாக நின்றனர். கணக்கெடுப்பு துவங்கியது. பலமுறை சரிபார்க்கப்பட்ட பொழுது, இருவர் காணாமற் போய் விட்டார்கள் என்பது நிரூபணமாயிற்று. தேர்வு செய்யப்பட்ட சிலர் காணாமற் போனவர்களைத் தேடிப் பிடித்து வருமாறு அனுப்பப்பட்டார்கள்.

அன்று ஏழு மணிபோல் பயிற்சி இடை நிறுத்தப் பட்டது. எல்லோரையும் முற்றத்தில் அணி திரண்டு நிற்குமாறு பணிக்கப்பட்டது. அங்கே காணாமற்போன இருவரும் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் தலை கவிழ்ந்து நின்றார்கள். விருப்புடன் இயக்கத்திலே சேர்ந்த அவர்கள் ஏன் சொல்லிக் கொள்ளாமல் ஒளிந்து ஓட வேண்டும்? என்ன காரணங்கள்? இவற்றை விசாரணை செய்து அறிய வேண்டாமா? ராணுவப் பயிற்சியிலே ஜனநாயக முறைக்கு இடமில்லை என்பதைத் தேவகுரு விளங்கிக் கொண்டார். ஆனால் குற்றவாளிக்கு விசாரணை இன்றித் தண்டனை வழங்குவதா?

முகாம் பொறுப்பாளர் வெறி கொண்ட நாய்போல குரைத்தார். பயிற்சி பெறும் அனைவரும் சிலையாக நின்றனர். அந்த இருவரும் முற்றத்தைச் சுற்றி ஓடும்படி பணிக்கப்பட்டார்கள். ஓடியவர்களை இடைவெளி விட்டுவிட்டுப் பொல்லால் தாக்கினார். அவர்களுக்கு விழுந்த ஒவ்வொரு அடியும் தேவகுருவின் நெஞ்சிலே சம்மட்டி அடி விழுவதைப் போன்று நோவினை ஏற்படுத்தியது. சமிக்ஞையின் பேரிலே, தோழன் என்பவன் அவர்களைத் துவக்குப் பிடியால் பலங்கொண்டு தாக்கினான். அவர்களுள் ஒருவன் "அம்மா" என்று பயங்கரமாக அலறிக் கொண்டு வீழ்ந்தான். பயிற்சி பெறுபவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். 'நேவிக்காரன் ஊரிலே என்னை அடித்ததிற்கும், இவர்கள் துவக்குப்பிடியால் அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? கதாபாத்திரங்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் இரண்டினதும் உக்கிரமும் கொடூரமும் ஒன்றுதான்' என்று தேவகுருவின் மனம் நினைத்துக் கொண்டது. அடிபட்ட இருவரும் உருக்குலைந்து 'சிக் கேம்பில்' படுத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் தேவகுரு அந்த இடத்தைக் கடக்கும் பொழுது நெருப்பில் விழுந்த புழுவாய் அவர் மனசு துடிக்கும்.

சில இயக்கங்கள் தாயக மண்ணிலே சிங்களப் படைக்கு எதிரான சண்டைகளில் ஈடுபட்டு வெற்றி சாதித்த செய்திகள் பத்திரிகை வழியாகக் கசியத் துவங்கின. 'ஆயுதம் வருகின்றது; வந்ததும் களம் செல்வோம்; அவர்களிலும் பார்க்க அரியன சாதித்து அனைவரையும் மிரள வைப்போம்!' என்கிற சமாதானம் சொல்லப்பட்டது. அவர்களுக்கு வந்து சேர வேண்டிய ஆயுதங்கள் வந்து சேர்ந்து இந்திய அதிகாரி ஒன்றும் பரவியது. அந்த ஆயுதங்களுக்குப் பதிலாக இந்திய ஆயுதங்கள் கொடுக்கப்பட்டது என்று மாற்றுக் கதை ஒன்றும் பரவியது. இந்தக் கதைகளின் உண்மை பொய்கள் இதுவரை தேவகுருவுக்குத் தெரியாது.

'சில குழுக்கல், வீணான விளம்பரங்கள் தேடிக் கொள்வதற்காக, தங்கள் போராளிகளைக் களம் இறக்கி உள்ளார்கள். இந்தச் சில்லறைத் தாக்குதல்கள் சாதிக்கப் போவது எதுவும் இல்லை. நமது குழு சக்தி மிக்கது. அனைத்து வளங்களும் நமக்கு உண்டு. இந்தப் போராட்டத்தை, சிங்கள ஆட்சியாளருக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவோம். இதற்கான செயல் திட்டங்களை முன்வைத்து இலங்கையில் கணிசமான ஆதரவும் பெற்றுவிட்டால், முழுப்படை யெடுப்பு! அதற்காக காத்திருக்கிறோம்' என்று உற்சாகமாக விளக்கினார்கள். சித்தாந்த விளக்கங்களிலே ஒரு பாரிய ஆசை பரவிக் கிடந்தது. ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் எனத் தேவகுரு குழம்பினார்.

இந்திய உளவுஸ்தாபனம் 'றோ' (Raw)வின் செயற்பாடுகள் பற்றி அவர் கேள்விப்பட்டன அனைத்தும் அவரை உற்சாகம் இழக்கச் செய்தன. மண் மீட்புப் போரினையே இலட்சியமாகக் கொண்டு பயிற்சிகளிலே ஈடுபட்டிருந்த குழுக்களுக்கிடையில், 'றோ' சேவகர்கள் தந்திரமான முறையிலே, பிரிவினையையும் கோஷ்டிப் பூசல்களையும் உண்டாக்கினார்கள். பாகிஸ்தானைப் பிரித்து, சுதந்திர வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில் ஒரு சுதந்திர ஈழத்தினைத் தோற்றுவிக்க இந்திரா அம்மையார் உதவுவார் என்கின்ற வகையிலேதான் இந்திய மண்ணிலே அகதிகளாக வந்து சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் பேசினார்கள். ஆனால், இதற்கு முரணாகவே 'றோ' செயற்பட்டது. தமிழ் மக்களுடைய சுதந்திர எழுச்சிகள் கவனத்திலே எடுக்கப்படுவதாக இல்லை. போராட்ட குழுக்களைப் பகடைக் காய்களாக வைத்து இலங்கை ஆட்சியாளரை அடிபணிய வைப்பதையே முதல் இலட்சியமாகக் கொண்டு 'றோ' இயங்குவதாக தேவகுரு நினைத்துக் கொண்டார். 'றோ' வைக் கும்பிட்டு வந்தனை செய்யும் குழுக்களைச் செல்லப்பிள்ளைகளாக நடத்தினர். ஏனைய குழுக்களை வலுவிழக்கச் செய்து, தமது அடியாட்களை வளர்க்கும் வியூகங்களை வளர்த்தனர். குழுக்களுக்கு இடையே உருவான பகைமைகள் தேசவிடுதலையின் உறுதியை ஆட்டம் காணச் செய்வதாக தேவகுரு வருந்தினார். 'றோ' அளிக்கும் உளவுச் செய்திகளின் அடிப்படையிலேயே தில்லியின் வியூகங்களும் அமைக்கப்பட்டதினால், 'றோ' வால் போராட்டக் குழுக்களின் உயிர்த்துவத்தை கட்டுப் படுத்தி வைக்கவும் முடிந்தது. 'றோ' வின் கண்ணுக்குப் புலனாகாத ஆரிய மேட்டிமையும், போராட்டக் குழுக்களின் முதுகுப் புறமாக நீண்டு கையைக் குலுக்கிக் கொள்வதாகச் சிலர் விமர்சனங்கள் முன்வைத்தனர். (வட இந்தியரும் தில்லிப் பேச்சாளர்களுடன் உறவு முறை பாராட்டினார்கள்.) இந்த விமர்சனங்களை நம்புவதா, நிராகரிப்பதா என்பதை அறியாது திகைத்தார்.

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் ஆதாயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, சிலசில குழுக்களின் தலைவர்களுக்குக் கொம்பு சீவும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததும் தேவகுருவின் மனநிலையைப் பாதித்தது. இவை அனைத்திலும் பார்க்க, அவர் சார்ந்திருந்த குழுவுக்குள் நடைபெற்ற கோஷ்டிச் சண்டைகளும், தலைமைப் பதவிகளுக்காக நடைபெற்ற மல்யுத்தங்களும், அவரைச் சோர்வடையச் செய்தன. பிரிந்த கோஷ்டிகளிடையே இப்பொழுது துப்பாக்கிகளும் உபயோகத்திற் வந்திருந்தன. பிரதான அலுவலகமாக இருந்த இடத்திற்கு முன்னாலேயே ஆயத்தமாயினர். உள்ளூர் பிரமுகர்கள் சரியான சமயத்தில் தலையிட்டதினால், அன்று சிந்தவிருந்த ரத்தக்களரி தவிர்க்கப்பட்டது. குழுவின் பணமும் தலைவர்களினாலே தவறான முறைகளிலே முதலீடு செய்யப்படுவதான வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. குழுவுக்கு நன்கொடைகளாகக் கிடைத்த நிதிகளில் ஒரு பகுதி தலைவரின் தனிப்பட்ட கணக்கிலே சுவிஸ் வங்கியிலே முடக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி. குழுவுக்கு நம்புதிறனையும், ஆரோக்கியத்தையும் ஊட்டுவதற்காக இந்தக் கணக்குகள் பற்றிக் கேள்வி எழுப்பிய சில தலைவர்கள் அரசியல் குழப்பங்கள் செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு, கொலையும் செய்யப்பட்டதாக அறிந்தார். 'காணாமற் போவதும்' 'கொலை செய்யப் படுவதும்' ஒன்றேதான் என்கின்ற அவலநிலையும் உருவாகியது.

போர்ப்பயிற்சி, மண்மீட்புப் போர், வீரமரணம் என்பனவெல்லாம் கானல் நீராகத் தோன்றியது. பொறுமையின் விளிம்புக்குத் தேவகுரு வந்திருந்தார். மனித மிருகங்களின் தனிப்பட்ட விரோதங்களுக்காகவும், தலைமைப் போட்டிக்காகவும், தன் உயிரை வீணே பலியிடுவது மகா முட்டாள் தனம் என்கின்ற ஞான விடிவு மெதுமெதுவாக அவருடைய உள்ளத்திலே சடைத்து வளரலாயிற்று. இத்தகைய ஆக்கினைகளின் குருநிலமாக அவர் மனசு தவித்துக் கொண்டிருந்த பொழுது, இவர் கொடுத்திருந்த நண்பனின் மேற்பார்வையில் ஒரு கடிதம் அவர் வீட்டில் இருந்து வந்து சேர்ந்தது. அது அவருடைய அண்ணன் எழுதியிருந்த கடிதம். தேவையான பணம் சென்னையிலுள்ள மண்ணடி கடை ஒன்றிற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அங்கு சென்றால் முழுவிபரமும் கிடைக்கும் என்பதும் கடிதத்தின் சாரம்.

இந்தக் கட்டத்திலே, இயக்கம் இரண்டாக உடைந்திருந்தது. இரண்டு குழுக்களும், இரண்டு தலைமைத்துவங்களும் தோன்றின. இத்தகைய ஒரு குழப்ப நிலையில் சென்னைக்குப் பயணத்தை மேற்கொள்ளுவதில் தேவகுருவுக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை.

சென்னை வாசம் அவரை முற்று முழுதுமாக மாற்றி அமைக்கப் போகின்றது என்பது அவருக்குத் தெரியாது. தான் சார்ந்த குழுவுக்கு எக்காரணம் கொண்டும் துரோகம் செய்யலாகாது; போட்டிக் குழு ஒன்றிலே, அது எவ்வளவு இலட்சிய வேட்கையுடன் நடத்தப்பட்டாலும் சேர்வதில்லை; இந்தத் தீர்மானங்களுடனேயே அவர் சென்னை வந்தார்.

வளரிளம் பருவத்துக் கனவுகள் ஏசியா சைக்கிளிலே வட்டமடித்ததுடன் கலைந்தன...

தமிழர் மண்ணின் மீட்புப் போரிலே உயிர் விடுதல் என்கிற இலட்சியக் கனவுகளை தஞ்சாவூர் மண்ணிலே மூட்டை கட்டி வைத்துவிட்டுத்தான் சென்னைக்குப் பயணமானார்...

அடுத்த சனிக்கிழமை.

நீல வீட்டிலே செல், அல்பிரேட், ஜோன், காறால்ட் ஆகிய நால்வரும் கூடியிருந்தார்கள். வீட்டிலே பல திக்குகளிலும் தொட்டந் தொட்டமாகக் காலியான பியர் போத்தல்கள் கிடந்தன. அவர்கள் நன்றாகக் குடித்திருந்தார்கள். தமிழர்கள் வெளியிட்ட நோட்டீஸ் அவர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தது. தங்களுடைய ஒரு செயற்பாட்டினைத் தமிழ்ப் பன்றிகள் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டார்கள் என்பது போன்ற ஒரு வெப்பிசாரத்திலே அவர்கள் கொதித்தார்கள். நோர்வே நாட்டின் சமாதான விரும்பிகளைத் தமது அணியில் சேர்த்துக் கொள்ளும் ஒருவகைத் தந்திரத்திலே தமிழர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் எனக் கறுவிக் கொண்டார்கள். தமிழர்களுடைய இந்தத் தந்திரத்தினை எவ்வாறு முறியடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காகத்தான் அவர்கள் கூடியிருந்தார்கள். இத்தகைய பிரச்சினைகளிலே தீர்மானங்கள் எடுப்பதற்கு மது போதை உதவியாக இருக்கும் என அவர்கள் நம்பினார்கள்.

'பன்றிகள் என்ன செய்திருக்கிறாங்கள் பார்த்தீர்களா?' என்று செல் ஆத்திர வசப்பட்டவனாகக் கத்தினான்.

'நாங்கள் எழுதினம். ஆனால், அவங்கள் பயப்பிட்டது போலத் தெரியவில்லை.'

'ஓமோம். அவங்களுக்குத் தாங்கள் பெரிய புத்திசாலிகள் என்கிற நினைப்பு. எங்களுக்கு புத்தி சொல்லப் புறப்பட்டிருக்கினம்...'

'எழுத்தெல்லாம் இவங்களுக்குச் சரிப்பட்டு வராது...'

'நான் சொன்னன். இவங்களுக்கு அடிதான் சரி...இருட்டடி! மரண அடிக்குக் கொஞ்சம் குறைஞ்சது. அந்த பாஷைதான் இவங்களுக்கு விளங்கும்' என்று ஜோன் ஆத்திரத்துடன் கத்தினான்.

'என்ன ஜோன் சொல்லுறாய்?' என்று செல் கேட்டான்

'அடிபோட வேண்டியதுதான். பயப்பட்டுப் பிர யோசனம் இல்லை. அவங்களுக்கு மரணபயம் ஏற்படுத்த வேணும்.'

'யாருக்கு எப்படிச் செய்யிறது? இதில நிறைய ஆபத்து இருக்குது. போலிஸார் மூக்கை நுழைப்பதற்கு இடம் வரும்' என்று அல்பிரேட் தயக்கம் தெரிவித்தான்.

'காறால்ட் கா‘ போறான். நாலு பேரும் காரில திரியலாம். தனியாக வாற பன்றிகளைப் பார்த்து அடிபோட வேண்டியதுதான்...'

'பிரச்சினைகள் வராமமல் செய்ய வேணும். பிடிபட்டால் எங்களுடைய நோக்கங்கள் பிழைச்சுப் போகும்...'

'பயப்பிடாத அல்பிரேட், பிரச்சினை வராமல் காரியங்களைச் செய்யலாம். நாங்கள் என்ன மடையரோ?'

பிறகும் பியர் போத்தல்களைத் திறந்து குடியைத் தொடர்ந்தார்கள். காறால்ட் கார் வாங்கவும், குளிர்காலமும் துவங்கியது. நோர்வேயின் வடக்கில் இருக்கும் வார்டோவில் (VARDO) குளிர்காலம் மிகவும் கொடூரமானது. நாள் முழுவதிலும், ஒரு சில மணி நேரம் மட்டுமே சூரிய ஒளி தெரியும். மற்றைய நேரமெல்லாம், நீள் இரவோ என்கின்ற பிரமை தந்து, மிக நீண்டிருக்கும். பகலையும் இரவையும் கடிகாரத்தின் துணையினால் மட்டுமே நிதானித்துக் கொள்ளலாம். ஆரம்ப காலத்தில், இத்தகைய குழலுக்குத் தம்மைப் பழக்கி எடுப்பதில் தமிழர்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். அத்துடன், குளிர்காலத்திலே, கடுங்குளிர் காற்று புயலின் வேகத்தில் வீசிக் கொண்டிருக்கும். சாவு குளிர்க் கரங்கள் நீட்டிக் கழுத்தை நெரிப்பது போன்ற அவஸ்தை ஏற்படும். இந்தக் குளிரையும் அதன் கொடூரத்தையும், பனை வடலிகளின் மத்தியிலே வளர்ந்த யாழ்ப்பாண மக்கள் வசப்படுத்தி வாழப் பழகிக் கொண்டமையைத் தேவகுரு ஒரு சாதனையாகவே பாராட்டினார்.

இன்று தேவகுருவுக்கு இரவு வேலை. வேலைக்கு புறப்படும் பொழுது பலமான காற்று வீசியது. காற்றுடன் மல்யுத்தம் செய்தே வேலைக்கு வந்தார். வேலை சீக்கிரம் முடிந்து விட்டது போன்று தோன்றியது. அவர் எதிலும் ஒன்றிவிடுவார். அது அவர் சுபாவம். தேவகுருவுக்கு இன்று 'லிப்ட்' தர எந்தக் காரும் வாய்க்கவில்லை. அதற்காக காத்திருப்பதும் அவர் இயல்பல்ல. இந்தக் குளிர்காலத்தில் உபயோகப்படுத்துவதற்கான விசேஷத் தொப்பியைக் கொண்டு வந்திருந்தார். அதனை அணிந்து செவிகளுக்குள் குளிர் நுழையாதவாறு இறுக்கிப் பொருத்தினார்.

வீதி வெறிச்சோடிக் கிடந்தது. குளிரும் இருட்டும் மனித நடமாட்டத்தை ஒடுக்கி விட்டதாக நினைத்துக் கொண்டார். தூரத்தில் ஓரிரு வாகனங்கள் தெரிந்தன. 'இந்த நேரத்தில் வானத்திலே பயணிப்பது சுகமானது. உள்ளே தேவைப்பட்ட வெப்பநிலையை வைத்துக் கொள்ளலாம் அல்லவா?' என்று நினைத்தார். விஞ்ஞானம் ஏற்படுத்தித் தரும் வசதிகளை தாம் இச்சிப்பதாக தனது மனசைக் கடிந்து கொண்டார்.

தேவகுருவுக்கு நித்தியாயினியின் நினைவு வந்தது. பல விஷயங்களிலே அவள் புதிய சூழ்நிலைகளையும் தேவைகளையும் அனுசரித்து வாழப் பழகிக்கொண்டாள். வேறு சிலவற்றிலே இன்னமும் யாழ்ப்பாண மண்ணின் சடங்கு சப்பிரதாயங்களைத் துறந்து விடுவதாகவும் இல்லை. நேரம் எவ்வளவு என்றாலும், அவள் சாப்பிடாமல், அவருக்காக காத்திருப்பது அவள் வழக்கம். இது தேவையற்ற சம்பிரதாயம் என்று எத்தனையோ தடவைகள் சொல்லியுள்ளார். பெண்ணியம் பற்றித் தமிழ்ப் பெண்கள் மத்தியிலே தோன்றிவரும் நவபுத்திசாலிகள் ஏதோவெல்லாம் எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஆனால் நித்தியாவோ, புருஷன் வரும் வரையிலும் சாப்பிடாமல் காத்திருப்பதிலே ஒருவித அன்புச் சுகம் இருப்பதாகவும், அது தனது உரிமை என்றும் வாதிடுகின்றாள்!

நித்தியா பற்றிய இனிமையான நினைவுகள் நெஞ்சினை அளைந்து கொண்டிருக்க நடந்தவருக்கு, திடீர் அதிர்ச்சியாக இருந்தது! சடுதியாக அவருக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது. யார் எவர் என்று நிதானிப்பதற்கிடையில் இரண்டு மூன்று பேர் காரில் இருந்து 'தடதட' வெனக் குதித்தார்கள். அவர்களுடைய முகம் தெரியவில்லை. கம்பளி முகமூடி அணிந்திருந்தார்கள். முகமூடியின் பொந்துகளிலிருந்து விரோத அக்கினி உமிழும் விழிகள் மட்டுமே தெரிந்தன. நிதானம் பெறுவதற்கு முன்னரே அவர் முகத்தில் குத்து விழுந்தது. அந்த ஒரு குத்தே அவரை நிலைகுலையச் செய்தது. இயந்தர கதியில் செயற்படுவது போல...மீண்டும் மீண்டும் குத்துகளும் அடிகளும் விழுந்து கொண்டே இருந்தன.

அவர் வாய் 'ஆண்டவா...' என்று முணு முணுத்துக் கொண்டே, இருந்தது. இறைவனைத் தவிர அந்தச் சமயத்திலே தமக்கு வேறு எந்தத் துணையும் இல்லை என்று மட்டும் நம்பினார். அந்த நம்பிக்கையை மட்டும் நெஞ்சிலே சுமந்து நினைவுகள் இழந்து நிலத்திலே விழுந்தார்.

தேவகுரு மயங்கி வீதியிலே விழுந்ததும் அவரைத் தாக்கியவர்கள் உசாராகினார்கள். காரைப் பின்னுக்கு எடுக்க, தாவி ஏறிக்கொண்டார்கள். கார் குச்சுப்பாதையால் திரும்பி ஓடி மறைந்தது.

தேவகுரு தெருவில் கிடந்தார்.

குளிர் அவர் உடற் சூட்டை மெதுவாக விழுங்கத் துவங்கியது...

தூக்கத்திலே கிடந்த அனிதா யாரோ தட்டி எழுப்பியது போன்ற உணர்ச்சியுடன் விழித்துக் கொண்டாள். யாரோ பலமாக முனகியது போலக் கேட்டது. யாருக்கோ அடித்து இம்ஸைப்படுத்துவது போன்று இருந்தது. விழித்தவள், கனவா மனப்பிரமையா என நிதானிக்க முயன்றாள். கார் ஒன்று உறுமிக் கொண்டு ஓடியது நிஜம் என்பதை அவள் நிதானித்தாள். கட்டிலிலிருந்து எழுந்து ஜன்னல் திரைச் சீலையை ஒதுக்கி வீதியைப் பார்த்தாள்.

மங்கலான ஒளியிலே யாரோ NORDRE LANG GATA வில் அலங்கோலாமாகக் கிடப்பது தெரிந்தது. யாரோ அந்த மனிதரைத் தாக்கியிருக்கிறார்கள். மூச்சுப் பேச்சு இல்லை. உயிரற்ற பிரேதமாக இருக்குமோ? இந்த எண்ணம் எழுந்ததும், அவளாலே தாங்கிக் கொள்ள இயலவில்லை. கீழே விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள். அப்பா அம்மாவை உலுக்கி எழுப்பினாள். விழித்து மலங்கப் பார்த்தவர்களுக்கு விஷயத்தைச் சொன்னாள்.

எல்லோரும் தெருவுக்கு ஓடினார்கள். மூவருமாக ஆளைத் தூக்கி வந்தார்கள். அவருக்கு சுவாசம் சீராக வந்து கொண்டிருந்தது. பிரக்ஞை மீளும் சாங்கமும் தெரிந்தது. ஹோலிலே கிடந்த நீள் சோபாவிலே கிடத்தினார்கள். காற்று வருமாறு ஹோல் ஜன்னலைச் சற்று நீக்கிவிட்டார்கள். துவாய் ஒன்று கொண்டுவந்து, மூக்கால் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை துடைத்து விட்டனர்...அவர் எழுந்து அமர முயன்றார். முடிய வில்லை. மீண்டும் சோபாவில் சரிந்தார்.

அவருடைய செயல் அவர்களுக்கும் புதுமையாகப்பட்டது. அனிதாவின் தந்தையான லார்ஸ் தேவகுருவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். அவர் தமிழர் சமூகத்திலே அகிம்ஸை மூலம் சமூகப்பணி செய்ய விரும்பும் இயல்பினர் என்று சமூக சேசையாளன் ஒருவன் பிரஸ்தாபிக்கக் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் மூர்க்கமான தாக்குதலின் பின்புகூட, அவர் அழுங்குப் பிடியாக அமைதி பேணியது இப்பொழுது அவருக்கு ஆச்சரியம் தந்தது.

அனிதாவின் அம்மா கோப்பி கொண்டுவந்தாள். 'உங்களுக்கு சிரமம் தரவிரும்பவில்லை' என்று கூறிச் சிரிக்க முயன்றார்.

'அருந்துங்கள். இதில் என்ன சிரமம்? நீங்கள் கோப்பியை...' என்று உபசரித்தனர். அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகக் கோப்பியைக் குடித்தார். முடிந்ததும் எழுந்து நடக்க விரும்பினார். மனசின் ஓர்மத்திற்கு ஏற்ப அவர் உடல் ஒத்துழைக்க மறுத்தது. முழுப்பலத்தையும் மீளப்பெறுவதற்குச் சற்று அவகாசம் தேவைப்படும் என்பதை நிதானித்து மீண்டும் சோபாவில் அமர்ந்தார்.

'ஏன் நீங்கள் போலிஸ் நடவடிக்கை எடுக்கப் பயப்படுறீங்கள்?' லார்ஸ் கேட்டார்.

தேவகுரு சிரித்தார்.

'முகமே உருமாறிக் கிடக்குது. உங்கள் மீது நடத்தப்பட்டது திட்டமிட்ட தாக்குதல். அவர்கள் பயமில்லாமல் மூர்க்கம் கொண்டு உங்களைப் போன்றவர்களைக் குதறி எறிவார்கள் என நான் அஞ்சுகிறேன். முரட்டுத் தனத்தையும் காடைத்தனத்தையும் நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?' என லார்ஸ் அக்கறையுடன் கேட்டார்.

'இல்லை'என்றார் தேவகுரு.

'அப்படியானால் ஏன்? இந்தக் காடைத்தனத்தை மன்னிப்பதன் அர்த்தம் என்ன?'

'என்னைத் துன்புறுத்த வேண்டும். நான் வேதனைகளை அநுபவிக்க வேண்டும். அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. இது அவர்களுக்குத் திருப்தி தரலாம். அந்தத் திருப்தி அவர்களுக்குக் கிடைக்கட்டும். அவர்களுடைய திருப்தியை நான் பறிப்பதினால் எனக்கு என்ன இன்பம் இருக்க முடியும்?'

அவர் சொல்வதை கேட்ட லார்ஸ், அவர் சொற்களுக்குப் பின்னால் மறைந்து நிற்கும் கோட்பாட்டினை முழுமையாகக் கிரகிக்க முடியாது தவித்தார். ஆனால், தேவகுருவின் உறுதி அவருக்கு ஆச்சரியம் தந்தது. அவருடைய அநுபவத்தினைப் பங்கிட்டுக் கொள்ளும் ஆர்வம் அவருக்குப் பிறந்தது.

'நீங்கள் சொல்வது எனக்கு முழுமையாக விளங்கியது என உரிமை பாராட்ட முடியாதிருக்கின்றது...'

'யேசு நாதரின் வாழ்க்கையையும் நான் ஆதர்ஷமாகக் கொண்டுள்ளேன். ஒரு கன்னத்திலே அறைந்தவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டும்படி அவர்தானே போதித்தார்? ஏன்? என்னை அடித்துத் துன்புறுத்தியது வன்முறைச் செயல். வன்முறைக்கு பதில் வன்முறையல்ல என்பது என் நம்பிக்கை...அன்புதான் மனிதநேயத்தின் மொழியென நான் நம்புகிறேன்...'

இந்த விசித்திர மனிதன் தமது விருந்தாளியாக தமது ஹோலிலே அமர்ந்திருத்தல் லார்ஸ”க்குப் பெருமையாக இருந்தது.

'நான் உங்களுக்கு மேற்கொண்டும் சிரமம் தர விரும்பவில்லை. நடுநிசி தாண்டிய நேரம்...நான் வருகிறேன்' என்று தேவகுரு எழுந்து நிற்க முயன்றார்.

லார்ஸ் அவரை மீண்டும் சோபாவில் அமர்த்தினார்.

'மனித நேயத்தின் மொழி அன்பு என்பதை ஏற்றுக் கொண்டவன் நான். நான் ஒரு டாக்டரும், எனவே, உங்களுக்குச் சிகிச்சை அளிக்க என்னை அனுமதியுங்கள்...உங்கள் வீட்டிற்கு நாங்கள் தகவல் கொடுக்கின்றோம்...' என்று லார்ஸ் உறுதியுடன் கூறினார்.

காரிருளில் அவரை வழிமறித்து அடித்துத் துவைத்தவர்கள் நொஸ்குகள், நிறவெறியை வேதமாக பரப்ப விழைந்துள்ள நொஸ்குகள். இந்த அகால வேளையில், வீட்டிலே வசிப்பவர்களுடைய சிரமங்களையும் பாராட்டாமல், மனித நேயத்துடன் சிகிச்சை தருவதற்குத் துடிப்பவனும் நொஸ்கே!

இந்த இரண்டு சாராருள் நோர்வே நாட்டின் ஆன்மாவின் உண்மையான பிரதிநிதி யார்?

லார்ஸ் செலுத்திய ஊசி, நோவினை அகற்றி, தூக்கத்தை வசதி செய்வது போல தேவகுருவுக்குத் தோன்றியது...

'எந்த நிறமிருந் தாலும் - அவை
யாவும் ஒரே தர மன்றோ?
இந்த நிறம் சிறி தென்று - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?'

--என்று பாரதியார், அவர் செவிகளுக்குள் பாடுவது போன்ற மயல். தேவகுரு விழிகளை மூடினார்.

தேவகுரு சென்னை வாசத்தின் போது, சம்பாதித்துக் கொண்டு அரிய நட்பு இராமநாதருடையது...மண்ணடியில் அண்ணா குறிப்பிட்ட கடையில் அதன் சொந்தக்காரர் கோபாலை தேவகுரு சந்தித்தார். அவர் தேவகுருவுக்குப் பணம் கொடுத்ததுடன், அண்ணா நகரிலே தங்குவதற்கு ஓர் அறையும் ஏற்பாடு செய்து தந்தார். இலங்கைக்குத் திரும்புவதை அண்ணா விரும்பவில்லை. புனர் வாழ்க்கையில் ஈடுபட்டுப் புதிய வாழ்வு ஒன்றினை அவர் மேற்கொள்ளுவதற்கு எல்லா வசதிகளையும் செய்து தருவதாக அவர் வாக்களித்திருந்தார். அது வரையிலும், மனக் காயங்களை ஆற்றிக் கொண்டு, வாழ்க்கையைப் புதிய நம்பிக்கையுடன் எதிர் நோக்குவதற்கு ஏதாவது படிக்கும் படியும் ஆலோசனை கூறியிருந்தார்.

கோபாலுக்கு கொழும்பிலும் வர்த்தகத் தொடர்புகள் இருந்ததினால், துண்டிக்கப்பட்ட தொடர்புகள் துளிர்த்தன.

மீண்டும் கல்லூரி ஒன்றிலே சேர்ந்து படித்துப் பட்டம் பெறுதல் வேண்டும் என்கின்ற எண்ணம் தேவகுருவுக்கு வரவில்லை. கல்லூரிகளின் கற்கைநெறி, சிற்றூழியர்களைத் தயார் செய்யும் ஒரு தொழிற்சாலை என்றே அவர் கருதினார். வாழ்க்கையின் அர்த்த சுருதிகளைக் கல்லூரி நாற் சுவர்களுக்கிடையில் கற்றுத் தேற இயலாது என்பதையும் அவர் புரிந்து கொண்டார். வாழ்க்கையின் அர்த்தங்களைப் புரிந்து கொள்வதிலே, சதா ஒரு தேடலிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்திருந்தார்.

அமைதி தேடித் திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்றார். அனாதை போன்றும், அகதி போன்றும் மடங்களிலும் தங்கினார். எதைத் தேடுகிறோம் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவருடைய மன அவதிகளை இனம் கண்டு, அவரை வழி நடத்தக் கூடிய நல்லாசிரியனும் வாய்க்கவில்லை. இருப்பின், சும்மா இருந்த தமது மனசினைச் சாத்தானின் தொழிற்சாலையாக மாற்றாமலிருக்க அவர் பாடுபட்டார்.

திருவண்ணாமலையில் ரமணரிஷ’ ஆஸ்ரமத்திலே தங்கியும் பார்த்தார். சிலவற்றுக்குத் தேவைக்கும் மீறிய விளம்பரங்கள் ஆன்மீக வாதிகள் மத்தியிலே செலவாணி செய்யப்படுவதுதான் உண்மை என்பதையும் உணர்ந்தார்.

சோர்வுற்று, அண்ணாநகர் திரும்பிக் கொண்டிருந்த பொழுது, பேருந்தில் இராமநாதருடைய அறிமுகம் தேவகுருவிற்குக் கிட்டிற்று. அவரும் தேவகுரு இறங்கிய அதே தரிப்பிலேதான் இறங்கினார். அவர் மிக அயலிலே வசிப்பதாகத் தெரிந்து கொண்டார். அவருடைய அழைப்பின் பேரில், அவருடைய அறைக்குச் சென்றார்.

இந்த சந்திப்புத் தொடர்ந்தது. வாரம் ஒரு முறை என்பது சுருங்கி தினசரியாயிற்று.

இராமநாதர் இலங்கையிலும் பணியாற்றி இருக்கிறார். ஆங்கிலத்திலும், தத்துவத் துறையிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். சுதந்திருத்திற்கு முற்பட்ட அரசு சேவையில் கடமையாற்றி, தனிச் சிங்களச் சட்டத்தின் பின்னர் ஓய்வு பெற்று இந்தியா மீண்டவர். அவருடைய பூர்வீகம் மதுரை. தாரம் இழந்தவர். மகன்கள் இருவரும் கம்ப்யூட்டர்த் துறையிலே தேர்ச்சி பெற்று, அமெரிக்காவில் குடியேறி வாழ்கிறார்கள். அமேரிக்கா வந்து தங்களுடன் வசிக்குமாறு வருந்தி அழைத்தும், அவர் போகவில்லை. தமது ஆன்மீக தேடல்களுக்கு பாரத பூமியிலேதான் விடைகள் காணமுடியும் என்று அழுங்குப் பிடிவாதம் பாராட்டி வாழ்கிறார். அவருடைய இளைய மகனைச் சில சாங்கங்களிலே தேவகுரு நினைவு படுத்தினாராம். இதன் காரணமாகவும் இராமநாதர் அவர்மீது தீவிர அன்பு பாராட்டினார். புதியதொரு புத்தக நிலையம் ஒன்றின் ஊடாக ஞானப்பயணம் செய்து மீள்வது போன்ற புளகாங்கிதம் தேவகுருவுக்கு ஏற்பட்டது.

பரமஹம்ஸர், விவேகாநந்தர், மகாத்மா காந்தி, வினோபாஜி ஆகியோருடைய போதனைகள் ஊடாகப் பயணஞ் செய்வதற்கு இராமநாதர் கருணை புரிந்தார். பகவத் கீதை, சுவிசேஷம், புத்தர் போதனைகள் ஆகியவற்றின் சாரங்களை அறிந்து கொள்ள ஊக்குவித்தார். அவர் விரும்பிப் படித்த நூல்கள் பலவற்றைத் தேவகுருவை வாசிக்கும்படி தூண்டினார். இவற்றை வாசிக்கும் பொழுது ஏற்பட்ட சந்தேகங்கள் பலவற்றை இராமநாதர் விளக்கிய பாணி மிகவும் அற்புதம்.

'செல்வநாயகம் அற்புதமான தலைவர். தமிழர்களுக்கு ஏற்படக் கூடிய இன்னல்களையும், இடையூறுகளையும் அவர் தீர்க்கத்தரிசனமாக உணர்ந்தார். தமிழ் மக்களை உரிய காலத்தில் எச்சரிக்கை செய்தார். வன்முறை இறுதி ஆயுதமென அவர் நினைத்திருக்கக் கூடும். இதனாலேதான் அவர் சமாதானப்பேச்சு வார்த்தைகள் மூலம் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தார். ஆனால், அவருடைய புரிந்துணர்வையும், நல்ல பரந்த மனப் பான்மையையும், சிறுபான்மையினர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குச் சிங்களத் தலைவர்கள் பயன்படுத்தத் தவறினர். மனித நம்பிக்கைகளிலே உருவான ஒப்பந்தங்களை அவர்கள் அவை எழுதப்பட்ட காகிதத்தின் மதிப்பளவுகூடக் கனம் பண்ணத் தவறினர். அவர் ஏமாற்றப்பட்டமை செல்வாவின் ஏமாளித்தனத்தையல்ல; சிங்களத் தலைவர்களுடைய துரோகச் செயலையே குறிக்கும். இந்தச் சத்திய மீறல்களுக்கு நீண்டகாலத்தில் சிங்கள இனம் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படும்' என்று ஒரு சந்தர்ப்பத்திலே கூறினார்.

'செல்வா அவருடைய தொண்டர்களுடைய நிர்ப்பந்த வசமான கைதியாகச் செயல்பட்டதும் உண்டு. அவரை ஈழத்து காந்தி என்று அவருடைய தொண்டர்கள் மேடைதோறும் முழங்கியது தவறு. அஹ’ம்ஸையை செல்வா என்றுமே அரசியல் ஆயுதமாக தரிசிக்கவில்லை. சத்தியாக்கிரகம் என்பது உண்மையில் உறுதி. தனிமனிதனுடைய ஆன்மிக பலத்தை வளர்த்து வளப்படுத்திய பிறகே அதனைப் பயன்படுத்தலாம். அதனைத் தமது ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எத்தனையோ நோன்புகளையும் தவங்களையும் காந்திஜ“ மேற்கொண்டார். காந்திஜ“ அரசியல் பற்றிப் பேசிய ஓர் ஆன் மிகவாதி என்பதை நாம் மறந்துவிடலாகது. செல்வா ஆன்மிகவாதியல்ல. அதனை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமோ, அவகாசமோ செல்வாவுக்கு ஏற்பட்டதும் இல்லை. இதனைப் புரிந்து கொள்ளாத தொண்டர்கள் அவரை ஈழத்துக் காந்தியாக உயர்த்துவதற்கு கோஷம் போட்டமை, அவருடைய அரசியல் தலைமைத்துவம் பற்றிய மதிப்பீட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்' என்று செல்வாவை மதிப்பீடு செய்தார்.

'இலங்கையில் நடத்தப்பட்டது சத்தியாக்கிரகம் என நான் சொல்லமாட்டேன். சத்தியாக்கிரகம் என்கின்ற பெயரிலே தமிழ் பகுதிகளிலே 'பந்த்' நடத்தப்பட்டது. இதனால் அரசியல் கோஷங்கள் மக்கள் கவன ஈர்ப்புக்கு முன்தள்ளப்பட்டது. ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தினை சாத்வீகப் போராட்டம் என்று வர்ணிக்க முடியுமா? தார் பூசுவதின் மூலம் என்ன சாதிக்க முனைந்தார்கள்? தாரும் பிரஸ”ம் ஆயுதங்களே. அடிப்படையில் அதிலே வன்முறை கலந்து இருந்தது. கச்சேரிகளுக்கு முன்னால் நடத்தப்பட்டவை ஒருவகை முற்றுகையே. தன்னைத் தண்டித்துக் கொள்ளும், தன்னை வருத்திக் கொள்ளும், அனைத்து இன்னல்களையும் ஆன்மிக பலத்துடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் என்றுமே வளர்த்தெடுக்கப் படவில்லை. எனவே, சத்தியாக்கிரகம் ஓர் அரசியல் உபாயமாக இலங்கையிலே தாழ்வுற்றது என்றே நான் நினைக்கிறேன். இன்னொரு பிழையும் தேர்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளரின் எண்ணிக்கை என்ன? இந்திய மக்களின் ஜனத்தொகை என்ன? எண்ணிக்கை பற்றிய சிந்தனையும் வேண்டும். வன்முறையிலும் பலத்காரத்திலும் ஈடுபட்டுள்ள பெரும்பான்மை இனத்தினைப் பணிய வைப்பதற்கு அஹ’ம்ஸை எவ்வளவு தூரம் பயன்பட வல்லது என்பதை பரீட்சித்துப் பார்ப்பதிலே அமேரிக்கக் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் ஈடுபட்டார் என்று தோன்றுகின்றது. ஆனால், அவரும் அதனை அரச வன்முறைகளுக்கு எதிரான உபயோகிக்க வில்லை...' என சத்தியாக்கிரகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் பல தளங்களிலே வைத்து விமர்சனம் செய்தார்.

'யூதர்களுக்கு எதிராக ஹ’ட்லர் அரச வன்முறையை உபயோகித்தான். இந்த அக்கிரமத்திற்கு எதிராக நாகரிக உலகமே எதிர்த்துப் போராடியது. இன்று ஹ’ட்லரிலும் பார்க்க மிகக்கொடுமையான முறையிலே, சிங்கள அரசு கொடிய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த கொடுமையை இன்று நாகரிக உலகம் முழுவதும் கை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. இந்த கொடுமைக்குத் துணை போகும் செயலை, வரலாறு நாளையும் மன்னிக்க மாட்டாது' என்று பிறிதொரு சந்தர்ப்பத்திலே விளக்கினார். 'இலங்கை ஆட்சியாளர் முதலிலே கொலை செய்தது புத்தரையும் அவருடைய கருணை மயமான போதனைகளையும்தான்! இந்தக் கொலையிலே சீவர ஆடைதாரிகளான பிக்குகள் துணை நின்றனர். அவர்களுடைய கைகளிலே இன்னமும் தமிழருடைய இரத்தக் கறை படிந்து கிடக்கிறது. நான் அஹ’ம்ஸையில் நம்பிக்கை உள்ளவன். அதனை என் வாழ்க்கை முறையாகவும் பயில்வதற்காக வாழ்க்கை முழுவதும் போராடி வருகிறேன். ஆனாலும், ஈழத்துத் தமிழ்ப் போராளிகளை வன்முறையாளர் என அழைப்பதற்கு என் நாக்குக் கூசுகிறது. அவர்களுடைய போராட்டத்தை நான் நியாயப்படுத்தவில்லை. நியாயமும் தர்மமும் ஒன்றல்ல. அனைத்து நியாயங்களையும் நிராகரித்து, நிராயுதபாணிகள் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடும்பொழுது தமிழர்களுக்கு முன்னாலுள்ள தர்மம் என்ன? இந்த நுட்பமான கேள்விக்கு விடை கண்டு பிடிக்க மனித நேயர்கள் தயக்கம் காட்டுவதுதான் மகா சோகமானது. கொலையில் கொல்லாமை பற்றிப் பகவத்கீதை போதனை செய்கிறது. இதனை இரண்டொரு சந்தர்ப்பத்திலே காந்திஜ“யும் பயின்றார். உண்மை. பெருவாரியான கொலைகளைத் தவிர்ப்பதற்குச் செய்யப்படும் கொலை கொலையுமாகாது, வன்முறையுமாகாது என்றுதான் என் மனச்சாட்சி எனக்குக் கூறுகின்றது...' இராமநாதர் தத்துவங்களின் ஊடாக ஆழமாக நுழைந்த பொழுது, அவற்றை விளங்கிக் கொள்ளாது தேவகுரு தத்தளித்துமிருக்கிறார்.

எது எவ்வாறு இருந்த போதிலும் தேவகுருவின் உள்ளத்திலே அன்பு பற்றியும், அஹ’ம்சை பற்றியும், மனித நேயம் பற்றியும் புதிய பார்வைப் பரிமாணங்களை இராமநாதர் வளர்த்தெடுத்தார். நோர்வே நாட்டுக்கு அவர் பயணப்பட்ட பொழுது, அபூர்வமான நூல்கள் பலவற்றைப் பரிசளித்தார். அவர் உயிர் வாழும் வரையில் கடிதங்கள் எழுதினார். தனது மனசிலே எழும் சஞ்சலங்களுக்கும் ஐயங்களுக்கும் விளக்கம் கேட்டால், நிச்சயமாக இராமநாதரிடமிருந்து விரிவான பதில்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன.

அவர் சென்னையில் காலமானார் என்கிற செய்தி அறிந்ததும், தேவகுரு ஒரு வாரம் வரையிலும் உண்ணா நோன்பும் பேசா நோன்பும் அனுஷ்டித்தார். அந்த அநுபவத்திலிருந்து, இராமநாதரின் உண்மைத் தரிசனம் தமக்குக் கிடைத்ததாகத் தேவகுரு மகிழ்ந்தார்.

நோக்களைக் காட்டாது தேவகுரு முறுவலித்தவாறு எழுந்து நடக்கத் தொடங்கியதைப் பார்த்து லார்ஸ் வியந்தார். நடந்து செல்லப் போவதாகத் தேவகுரு வாதாடியும் லார்ஸ் மசியவில்லை. தன் காரில் ஏற்றி அவரை வீட்டிலே சென்று இறங்கினார். அவருடன் கூடவே வீட்டிற்குள் சென்றார்.

நித்தியாயினியும் பிள்ளைகளும் அவரைப் பார்த்ததும் அழத் துவங்கிவிட்டார்கள்.

'எனக்கு ஒன்றும் நடக்கவில்லை. இலேசான காயம். இஞ்ச பாருங்கோ என்னால நடக்க முடியும்' என்று சிரித்தபடி நடந்து காட்டினார். அவர் நடந்து காட்டியது குழந்தைத்தனமாகவும் இருந்தது. 'மூஞ்சை யெல்லாம் வீங்கிக் கிடக்குது. நல்ல அடியென்று டாக்டர் போனிலும் சொன்னவர். உங்களுக்கு என்ன, விஷரே பிடிச்சிருக்குது?' என்று நித்தியா தேம்பினாள்.

'எனக்கு புத்தி நல்லா தெளிவாய் இருக்குது...' என்று சொல்லத் துவங்கியவர், லார்ஸ் நிற்பதைக் கண்டு, அவரைச் சற்றே அமர்ந்து, கோப்பி அருந்திச் செல்லுமாறு வற்புறுத்தினார். அவருடைய குடும்பத்துடன் நட்புணர்வினை வளர்த்துக் கொள்ள விரும்பிய அவர் கோப்பி அருந்திச் செல்லச் சம்மதித்தார்.

'விபத்துக்கள் தவிர்க்க முடியாதன. தவிர்க்க ஏலுமானவை விபத்துகளுமல்ல...எத்தனையோ தற்செயல்களிலும் விபத்துக்களிலிருந்துமே மனிதகுலம் தன் அறிவை வளர்த்திருக்கிறது...டாக்டர், ஆப்பிள் பழம் நிலத்தில் விழுந்ததைப் பார்த்துத்தானே நியூட்டன் புவியீர்ப்புத் தத்துவத்தை உலகிற்கறிவித்தார்?...இருட்டிலே தனிமையில் வந்தால், புவியீர்ப்பின் இன்னொரு பரிமாணமாக முகத்தையும் உடைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்!' என்று தமக்குத் தெரிந்த நொஸ்க் மொழியிலே கூறித் தேவகுரு சிரித்தார்!

'நீங்கள் விசித்திரமான மனிதர்...' என்றால் லார்ஸ்

'மனித நேயம் பாராட்டி வாழ விரும்பும் சாதாரண மனிதன் நான்' என்று தேவகுரு அடக்கமாகக் கூறினார்.

'நானும் சாதாரண மனிதனே! இரண்டு சாதாரண மனிதர்கள் நண்பர்களாக வாழுதல் சாத்தியமே' என்றார் லார்ஸ்.

தேவகுரு ஏதோ சொல்வதற்கு வாயெடுத்தார். அதற்கிடையில் நித்தியாயினி கோப்பி கொண்டு வந்து இருவருக்கும் பரிமாறினாள்.

தேவகுருவைத் தாக்கிய இளைஞர்களுக்குத் தமது இலட்சியப் பயணத்தில் ஏதோ சாதித்து விட்டதாகத் தோன்றியது.

துண்டுப்பிரசுரப் பிரசாரத்திற்கு, தமிழர்கள் துண்டுப் பிரசுர மூலம் பதில் அளித்தார்கள். இருட்டடிக்கு அவர்கள் என்ன தரப்போகிறார்கள்? அடிக்குப் பதில் அடி என்று எங்களைத் தேடித் திரிவாங்களா? அல்லது 'நொஸ்குகள் அடிச்சுப் போட்டாங்கள்' என்று போலிஸ”க்கு ஓடுவார்களா? அப்படியானால் அம்புலன்ஸ், போலிஸ் ஆகிய வாகனங்களின் 'சைரன்' ஓசை கேட்கும். அப்படி ஒரு சத்தத்தையும் காணோமே!

மூன்று மணி நேரமாகியும் ஓர் அசுமாட்டத்தையும் காணோமே? ஒரு வேளை அடிவாங்கிய அந்தப் பன்றி வீதியிலேயே செத்துக் கிடக்கிறானா? அவனைக் கொலை செய்வது அவர்களுடைய நோக்கமாக இருக்கவில்லை. வன்முறை மூலம் தமிழர்களை அச்சுறுத்த வேண்டும். வார்டோவில் இருந்தும், இறுதியாக நோர்வேயிலிருந்தும் இந்தக் கறுப்புப் பன்றிகள் ஓட வேண்டும்...அந்த லட்சியத்தை அடைவதற்கான இயக்கமும் பயணமும்!

காறால்ட்டும் செல்லும் மட்டும் எதிர்வினையை அறிவதற்கு தேவகுருவை அடித்துப் போட்ட இடத்துக்கு மெதுவாகக் காரில் வந்தார்கள். அடிபட்டவனை காணவில்லை. அம்புலன்ஸ் சத்தமும் இல்லை. 'பன்றி களைச் சுட்டுப்போட்டாலும் ஒன்றும் செய்யாதுகள் போல இருக்கிறது' என்று செல் சலித்துக் கொண்டான். அவர்கள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. எதுவுமே நடக்காதது போலத் தமிழர்கள் தங்களுடைய வேலைகளுக்கு வழக்கம் போலச் சென்று வந்தார்கள். 'அப்படியானால் அடுத்த நடவடிக்கை என்ன? அடி இவர்களுக்கு அச்சம் ஊட்டவில்லையா?'

இதைப் பற்றி விவாதிப்பதற்காக அடுத்த வெள்ளிக் கிழமை இரவு அவர்கள் நீல வீட்டிலே கூடினார்கள். வழக்கம் போல மது தாராளமாக பரிமாறப்பட்டது. அவர்களுடைய முகங்கள் இறுகி இருந்தன. எதுவும் பேசப்படவில்லை. மௌனத்தின் அடர்த்தி.

மௌனத்தைத் தாங்க முடியாதவனாய் செல் பேசினான். 'அந்தப் பன்றிகள் உசும்புற மாதிரி இல்லை. முதலாவது நோட்டீஸ்; பிறகு அடி போட்டம். அவங்கள் ஒன்றும் செய்யாமல் இருக்கிறாங்கள். ஆத்திரப் படுறாங்கள் இல்லை. இனி, என்ன செய்யலாம்? சொல்லுங்கோ. பேசாமல் ஆளையாள் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி?' கோபத்தில் அவன் கையில் இருந்த மதுப்போத்தல் நடுங்கியது.

'நேற்று பிறம் கிறிஸ்த் கட்சி (Fremeskrittspartiet) மகா நாடு பார்த்தீங்களா? வெள்ளையரைத் தவிர வேற ஆக்கள் இந்த நாட்டில இருக்கக் கூடாது என்று சொல்லுறத்துக்குப் பயம். பல்கலாசாரம் அது இது வென்று பசப்புறாங்கள். எங்களை மாதிரி நேரடியாச் சொல்ல வேணும். நோர்வே நூர்மனுக்கு மட்டும் என்பதை அடிச்சு சொல்ல வேணும். கறுத்தப் பன்றிகள் திரும்பவும் காட்டுக்கு ஓடவேணும். துணிவுடன் அதுகளைத் துரத்த வேணும்..'

'ஒஸ்லோவில இருக்கிற பன்றிகள், துணிஞ்சவங்களாம். அடிக்குப் பதில் அடி என்று திரியிறாங்களாம்...'

'அவங்களில பயங்கரவாதிகளும் கலந்திருக்கிறாங்கள் என்றுதான் நினைக்க வேணும். அண்டைக்கு (Dag bladet) ஒன்று தற்செயலாக எங்கட புத்தகம் எடுக்கப் போகக்கே லைபிரரியில பார்த்தன். அதில இவங்கட வெளிநாட்டமைச்சர் பேட்டி குடுத்திருக்கிறான். அவனே இவங்களைப் பயங்கரவாதிகள் என்றுதான் சொல்லி இருக்கிறான். இதுக்கு மேல அந்த வெளிநாட்டமைச்சர் ஒரு தமிழனாம்.'

'அவன் கிடக்கிறான். எங்களப் பொறுத்தவரையில அவனும் ஒரு பன்றிதானே? ஒஸ்லோ விஷயத்தைக் கடைசியாகப் பார்க்க வேண்டியது.'

'அது சரி இங்க வார்டோவில உள்ள பன்றிகள் பயந்து சாகுதுகள். இதுகள் அதிக காலம் நின்று பிடிக்க மாட்டினம் என்றுதான் நான் நினைக்கிறன்.'

'இப்ப உள்ள நிலையில நாங்கள் கார்ல் ஈ யேகனை (Carl I Hagen) ஆதரித்தால் என்ன?'

'சாய், அவன்ர ஈடுபாடு காணாது. எங்களுக்குச் சின்னம் சுவஸ்திகாதான். ஹ’ட்லர் பாவிச்ச சின்னம். வெள்ளைத் தோலர்களின் ஆதிக்கம். ஆரியர்களுடைய ஆட்சி! உலகம் முழுவதையும் சுவஸ்திகா ஆள வேணும்.'

'ஓமோம். இது நூர்மன் நாடுதான் என்று அடிச்சுக் கலைக்கவேணும். அந்த அளவுக்கு அவங்கள் மாறுகிற வரையில அதில சேர்றதில பிரயோசனம் இல்லை.'

'நான் ஒரு விஷயத்தைத் தெளிவாச் சொல்லுறன். சுவஸ்திகா சின்னத்தைச் சொன்னால், ஆதரவு கிசு கிசு என்று வளரும். வரலாறு என்ன சொல்கிறது? 1920 இல், ஜெர்மனியின் சுவஸ்திகாவுக்கு இரண்டு சதவீதமான ஆதரவுதான் இருந்தது. பதின்மூன்று வருஷத்தில--பதின்மூன்றே பதின்மூன்று வருஷத்தில--44 சதவீதமான மக்கள் சுவஸ்திகாவுக்கு ஆதரவு தெரிவிச்சாங்கள். அப்படித்தான் நாங்கள் வளரவேணும்...

'ஜெர்மன்காரனுக்கு இருந்த நாட்டுப்பற்று எங்களுக்கு இல்லை. இங்கு இருக்கிறவங்கள் தாங்கள் பெரிய புத்திஜ“விகள் என்கிற நினைப்போட திரியுதுகள்...'

'இந்தப் புள்ளி விபரத்தைக் கேளுங்கோ...ஜெர்மனியில் கறுப்பன்கள்--மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த பிச்சைக் காரர்கள்--பதினேழுபேர் கொலை செய்யப் பட்டிருக்கிறாங்கள். அவங்கள் வாழுற 380 வீடுகளை எரிச்சிருக்கிறாங்கள். இது 1992 இல் நடந்ததற்கான புள்ளி விபரம். இப்ப இது கூடியிருக்கும்...'

'நோர்வேயுல நாங்கள் என்ன செய்து கிழிச்சிருக்கிறம்? நோர்வேயை விடுங்கோ...வார்டோவில் என்ன செய்திருக்கிறம்?'

'என்ன செய்யவேணும் என்று நினைக்கிறாய்?'

'எத்தனையோ...தொடர்ந்து அடி போடவேணும்...வீடுகளை எரிக்கலாம்...'

'இப்படி அடுக்கடுக்காகச் செய்து கொண்டிருந்தால் போலிஸ் பார்த்துக் கொண்டிருக்காது...'

'எங்கள் கொள்கைக்காக, நூர்மனின் மேன்மைக்காக, ஜெயிலுக்குப் போறது. இதில் என்ன தப்பு? பன்றிக் கூட்டத்தை இங்க இருந்து பாறது. இதில் என்ன தப்பு? பன்றிக் கூட்டத்தை இங்க இருந்து விரட்டினோம் என்கிற சந்தோஷத்தில ஜெயிலில இரு

'எங்கள் கொள்கைக்காக, நூர்மனின் மேன்மைக்காக, ஜெயிலுக்குப் போறது. இதில் என்ன தப்பு? பன்றிக் கூட்டத்தை இங்க இருந்து விரட்டினோம் என்கிற சந்தோஷத்தில ஜெயிலில இருந்திட்டு வாறது...' போலிஸ், ஜெயில் என்கிற வார்த்தைகள் வந்ததும், அங்கே சிறிது அமைதி குடிபுகுந்தது. அந்த அமைதியை மீண்டும் செல்தான் கலைத்தான்.

'ஒஸ்லோவில், போலிஸ் நடத்திய வேட்டையில கம்ப்யூட்டர் எல்லாம் பிடிபட்டிருக்குது. ஆனால், அதைப் பற்றி நாங்கள் பயப்பிடவும் தேவையில்லை. எங்களுடைய பெயர் எதுவும் அதில பதிஞ்சிருக்க வில்லை. நாங்கள் நவநாஜிகள் என்று யாரும் எங்களுக்கு சீல் குத்தவில்லை. வெளிப்படையாக இப்படிக் குத்தப்பட்டால் வில்லங்கம்...இது சின்ன இடம். எங்களைப் போலீஸ் கண்காணிக்கத் துவங்கிவிடும். எங்களுடைய நடவடிக்கைகள் இரகசியமா இருக்கிறதுதான் இப்போதைக்கு நல்லது...அது சரி ஜோன் நீ ஏன் ஒன்றும் பேசாமல இருக்கிறாய்?' என்றான் செல்.

'இல்லை, நீங்கள் பேசுறதைக் கேட்டுக் கொண்டிருக்கிறன். இங்குள்ள தமிழருக்கு Antirasistsenter (நிறவெறிக்கு எதிரான அமைப்பு) உடன் தொடர்பு இருக்கிறதாக தெரியேல்ல...அப்பிடி ஏதும் இருந்தால் அவங்கள் கத்திக் கொண்டு திரிவான்கள். இப்படி இவங்கள் தனிச்சிருக்கிறது எங்களுக்கு வசதியாப் போச்சுது...'என்று கூறி ஜோன் அவர்கள் உரையாடலிலே பங்காற்றுவதாகக் காட்டிக் கொண்டான்.

'ஜோன் சொல்வது முக்கியமானது. இங்கு உள்ள தமிழர் நம்ம ஆக்களோடு ஒட்டுறதில்லை. அவங்கள் தனிச்சிருக்கிறதால, எங்கள் ஆக்கள் அதிகம் அலட்டிக் கொள்ள வரமாட்டாங்கள். அதுதான் எங்களுக்கு நல்ல வாய்ப்பு. முடியுமானால், எங்கட சனங்கள் மத்தியில இவங்களுக்கு வெறுப்பு ஏற்படக் கூடிய வகையில கதைகளைப் பரப்ப வேணும். இவங்கள் சோஷல் பணத்தில் கார் வாங்கிப் பவிசு காட்டுறாங்கள் என்றெல்லாம் கதைகள் கட்ட வேணும்...'

'ஆமா. வெறுப்பு ஏற்றுகிற விதத்தில கதைகள்...'

'நூர்மனையும் இவங்களையும் பிரிச்சு வைக்கிறதுதான் எங்களுடைய இயக்கத்துக்கும் எங்களுடைய வேலைகளுக்கும் நல்லது. நூர்மன் இவங்களை ஆதரிச்சுக் குரல் கொடுக்கத் துவங்கினால் வீண் கரைச்சல்...'

'அது எங்கள் நீண்டகாலத் திட்டம். ஆனால், இப்ப என்ன செய்யப் போறம்?' என்று அல்பிரேட் மது போதையிலே கோபமாகக் கேட்டான்.

'இப்ப ஒன்றும் வேண்டாம். கொஞ்ச நாளுக்கும் பதுங்கியிருக்க வேணும். போலீஸை நோட்டம் பார்க்க வேணும்...'

'கூட்டாகச் செய்தால்தானே கரைச்சல்?' என்று அல்பிரேட் கேட்டான்.

மதுபோதையில் அல்பிரேட் கேட்ட கேள்விக்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை.

ஆனால், அவனுடைய கேள்வி ஜோனின் நெஞ்சில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. 'நீங்கள் பேசிக் கொண்டிருங்கோ...எனக்கு அலுப்பாக இருக்கிறது...'என்று ஜோன் எழுந்தான்.

'நாங்களும் புறப்படுவோம். அடுத்த கூட்டத்துக்கு ஏதாவது செய்யத் திட்டத்துடன் வாருங்கள்' என்றான் செல்.

'காத' என்று சொல்லிக் கொண்டே அவர்கள் விடை பெற்றார்கள். தன் வீட்டிற்கு ஜோன் வந்தான். நீல வீட்டிலே பேசிக் கொண்டிருந்த பொழுது, தன் மனசிலே விழுந்த எண்ணப் பொறியைப் பற்றி மீண்டும் ஆழ்ந்து சிந்தித்தான். கூட்டாக செல்வதிலும் பார்க்க, தனியாகவே சில நடவடிக்கைகளைத்தான் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

தனது மனதிலே உருவான திட்டத்தினைச் செயற்படுத்த எதாவது கிடைக்குமா என வீட்டிலே தேடிப்பார்த்தான். வேட்டைக்கு கொண்டு செல்லும் துப்பாக்கி ஒன்று அவனிடம் இருந்தது. அதையும், அதற்கு உபயோகப்படுத்தப்படும் ரவைகளையும் எடுத்துப் பார்த்தான். அவற்றால் பயனில்லை எனத் தீர்மானித்து, இருந்த இடங்களிலேயே வைத்தான். மேஜையில் 'லைட்டர்' இருந்தது. அதனை எடுத்து வைத்துக் கொண்டான். வீட்டிலே வேறு பொருள்கள் கிடைக்காததினால், வீட்டின் மேஸ்மெண்டிற்குள் இறங்கினான். அதற்குள் உடனடியாக உபயோகத்திற்குத் தேவையில்லாத பொருள்கள் குவிக்கப்பட்டிருந்தன. மிச்சமான பெயின்ட் டின்கள், 'தின்னர்' ஆகியன காணப்பட்டன. 'தின்ன'ரைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு யோசித்தான். அதனைச் சுற்றி எழுந்த எண்ணம் திருப்திகரமாகப் படவில்லை. அதனை வைத்தான். அங்கே அகப்பட்ட ரப்பர் குழாய் ஒன்றினை எடுத்துக் கொண்டு, கராஜுக்குள் நுழைந்தான். அங்கே அவனுடைய சினோ ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருந்தது. தன் தேடலுக்கு விடை கிடைத்த திருப்தியில் ஸ்கூட்டரை முத்தமிட்டான். வீட்டிற்குள் மீண்டான். கையுறை அணிந்து கொண்டு, போத்தல் ஒன்றை நன்றாகத் துடைத்தெடுத்தான்.

அந்தப் போத்தலிலே, ஸ்கூட்டரிலிருந்து ரப்பர் குழாய் மூலம் பெற்றோல் எடுத்து நிரப்பினான். கராஜ் கதவு மூடியே இருந்தது. தன் திறமைக்கு ஏற்பப் பெற்றோல் குண்டு ஒன்று செய்தெடுத்தான். தொழில் நுட்பமுறையிலே அது செவ்விதாக அமையாவிட்டாலும், தான் எதிர்பார்க்கும் நாசத்தினை அது உண்டாக்க வல்லது என்கின்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டது. அதனை சொப்பிங் பையொன்றிலே வைத்துப் பத்திரப்படுத்தி எடுத்தான். லைட்டரைத் தட்டிப் பார்த்தான். பிரச்சினை இன்றி அது இலகுவாக வேலை செய்தது. வீட்டின் கதவைச் சாத்தும் பொழுது நேரத்தைப் பார்த்தான். இரவு இரண்டரை மணி. வீதியை நோட்டமிட்டான். எத்தகைய உயிர் அரவமும் தென்படவில்லை. குண்டைச் செய்தெடுக்கும் பொழுதே, அதன் இலக்கை அவன் மனசிலே தீமானித்துக் கொண்டான்.

தன்வீட்டில் இருந்து ஓரளவு தூரத்தில் இருந்த அந்த வீடு அவனுக்குத் தெரியும். அங்கே ஒரு தமிழ்க் குடும்பம் வசித்து வருவதை அவன் அறிவான். ஏனோ தெரியாது, அந்த வீட்டின் அமைப்புகளை அவன் நுணுக்கமாக அவதானித்திருக்கிறான். அந்த வீட்டின் கராஜ் கதவு மூடமுடியாது இருப்பது விஷேடமாக அவன் கவனிப்பிலே விழுந்தது. அந்தக் கராஜின் கதவினை ஒட்டினாற்போல வீதி அமைந்திருந்தது.

நடந்து கொண்டே, அந்த கராஜ் கதவின் இடுக்கு வழியாக அந்த பெற்றோல் 'பாம்'பை வீசி எரிக்கச் செய்வதிலே சிரமம் இருக்க முடியாது எனத் தீர்மானித்தான். இத்தகைய நாச வேலைகளைச் செய்யப் பயிற்சி பெற்றவன் போன்று, மிகத் துரிதமாகவும் நேர்த்தியாகவும் செயற்பட்டான். வேலை முடிந்ததும், விரைவாகத் தன் வீட்டிற்கு மீண்டான். இடையில் திடீர் வெட்டில் திரும்பிப் பார்த்தான். கராஜிலே புகையும் மெல்லிய தீ ஜுவாலையும் எழும்புவதை அவதானித்தான். தனது திட்டம் கனகச்சிதமான பலனைத் தருகின்றது என்கின்ற திருப்தியுடன், தன் வீட்டிற்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக் கொண்டான். படுக்கையில் வீழ்ந்தான். தன்முதுகிலே தானே தட்டிக் கொடுக்கும் குள்ளச் சிரிப்புடன் கண்ணை மூடி தூங்கத் துவங்கினான்.

கன்சனும் லயிலாவும் அன்று கடமையில் ஈடுபட்டிருந்த போலிஸாராவர். டிஸ்கோ முடிவடையும் நேரமாதலால், அவர்கள் ஹோட்டலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாங்கள். அப்பொழுது அந்த வீட்டின் கராஜிலிருந்து புகையும் நெருப்பும் கிளம்பிக் கொண்டிருப்பதையும், அந்தத் தீ வீட்டின்மீது பரவிக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.

வீட்டை நெருங்கியதும் தீயின் வேகம் அதிகரித்தது. உள்ளே யாராவது தூங்கிக் கொண்டிருக்கிறார்களா? அந்த வீட்டின் படுக்கை அறைகள் எங்கே இருக்கின்றன? இவற்றை எல்லாம் அறியாது, அவர்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடினார்கள்.

எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலே ராஜமோகன் குடியிருந்தான். தனது மனைவியுடனும் மகளுடனும் தூங்கப் போயிருந்தான். தூக்கத்திலே சுவாசிப்பதற்கு இயலாமல் யாரோ நெஞ்சை அமத்துவது போலத் தோன்றியது. சடுதியாக விழித்தவனுக்கு புகைமணம் மூச்சுமுட்டச் செய்தது. நிதானித்தபொழுது, தமது வீடு தீப்பற்றி எரிவதை உணர்ந்து கொண்டான்.

ஓடிச்சென்று படுக்கையறைக் கதவைத் திறந்தான். புகை ராஜமோகனைத் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தது. அறைக்கதவைச் சாத்தினான். மனைவி தீபாவையும் மகளையும் உசுப்பிவிட்டான். அவர்களும் துடித்து பதைத்துக் கொண்டு எழுந்தார்கள். ஜன்னலுக்கு வெளியே ஆள் நடமாட்டம் இருப்பதுபோலத் தோன்றியது. ராஜமோகன் ஜன்னலைத் திறந்தான். வெளியே நின்ற போலிஸார் உடனே வெளியேறுமாறு அவசரப்படுத்தியதின் அர்த்தத்தை உணர்ந்தான். பிள்ளையை முதலில் அவர்களிடம் கொடுத்தான். தீபாவை ஜன்னலிலே ஏற்றி விட்டான். அவள் வெளியே குதிப்பதற்குப் போலிஸார் உதவினர். அவனும் ஏறி வெளியே குதித்தவுடன், வீட்டைப் பார்த்தான். கராஜ் பக்கமாக வீடு மிளாசி எரிந்து கொண்டிருந்தது. அப்பொழுது அபாயச் சங்கு ஊதியவாறே தீயணைப்புப்படை வந்து சேர்ந்தது.

ராஜமோகனும் குடும்பமும் ஹோட்டலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்புப்படை வீரமுடன் போராடிய போதிலும், வீட்டுக்கு ஏற்பட்ட சேதங்களை அவர்களாலே தடுத்து நிறுத்த முடியவில்லை.

எரிந்த வீட்டை அநேகர் வந்து பார்த்துச் சென்றனர். 'உள்ளே படுத்திருந்தவர்கள் உயிருடன் தப்பியது தெய்வாதீனமானது' என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். போலிஸார் தடயங்களைப் பரப்பி அந்தத் தீ எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்வதிலே ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது தான் தேவகுருவும் அந்த வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய ஆராய்வுக்கு அவர் உதவுவதுபோல அவர்களுடன் இருந்தார்.

'இது தற்செயலாக ஏற்பட்ட நெருப்பு அல்ல. கராஜிலிருந்து பரவியிருக்கிறது; பெட்ரோல் பாம்' வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்' என்றார் அதிகாரி.

'நம்பமுடியவில்லை...'என்று இழுத்தார் தேவகுரு.

'இந்த வீட்டில் இருப்பவருக்கு யாராவது பகைவர் இருக்கிறார்களா?'

'ராஜமோகனுக்கா? எனக்குத் தெரிந்த வரையில் இல்லை. அவன் யாருடைய ஜோலிகளுக்கும் போகாதவன்...' என்று தேவகுரு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராஜமோகனும் அவ்விடம் வந்து சேர்ந்தான்.

'தம்பி, உனக்கு யாரும் பகைவர்கள் இருக்கிறார்களோ என்று கேட்டினம்...'இல்லை' என்று சொல்லிக் கொண்டிருக்க நீயும் வாறாய்...'

ராஜமோகனை அதிகாரிக்கு அறிமுகம் செய்து வைத்தார். வீடு எரிவதற்கு 'பெட்ரோல் பாம்' காரணமாக இருக்கலாம் என்று அதிகாரி மீண்டும் சொன்னார். அத்துடன், நோட்டீஸ் அடித்து தபால் பெட்டிகளிலே போட்டவர்கள் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். தனி ஒருத்தனாக அந்த நோட்டீஸ் அடிக்கும் வேலை நடந்திருக்காது. சிறிய கோஷ்டி ஒன்று செயற்படுவதாகத் தாம் சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

'இந்தக் கோஷ்டியைக் கண்டுபிடித்தால்தான் தலையிட தீரும்' என்று அதிகாரி தீர்மானித்தாராயினும், அதனை அவர் இவர்களுக்குக் கூறவில்லை.

தேவகுரு இந்த விஷயங்களை அடக்கி வாசிக்கவே விரும்பினார். அங்கு வாழும் தமிழர்கள் மத்தியிலே வீணான பீதி ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. பதற்றப்படுவதனாலே உருப்படியான காரியங்கள் நடக்கமுடியாது என்று அவர் நம்பினார்.

ஆனாலும், ராஜமோகன் ஓரளவு ஓட்டைவாயன். அநுதாபத்துடன் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் எல்லாம் போலிஸ் அதிகாரி தெரிவித்த சந்தேகங்களைப் பெரிதாகச் சொன்னான். இந்தச் செய்திகள் வாட்டோவில் வாழும் தமிழர்கள் மத்தியிலே காட்டுத் தீ போலப்பரவியது. எதனைத் தேவகுரு விரும்பவில்லையோ, அதுவே நடைபெற்றது. இதனால் அவர் மிகவும் வியாகூலம் அடைந்தார்.

அன்று தேவகுரு மாலதிக்குத் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்தார். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று திறந்தார். லார்ஸ் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மாலதி துள்ளிக் குதித்தாள். அவள் அனிதாவை தன்னுடைய மிக நல்ல சிநேகிதி எனப் பாராட்டினாள். அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமரச் செய்த பின்னர், 'என்ன குடிக்கிறியள்? கோப்பி?'என்று கேட்டார். லார்ஸ், 'கோப்பி தாருங்கள். நன்றி' என்றார்.

தேவகுரு கோப்பி தயாரிப்பதற்கிடையில் அனிதாவுக்கு 'யூஸ்' கொடுத்து விளையாடத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விட்டாள் மாலதி. நூர்மன் கறுப்புக் கோப்பிப் பிரியர்கள் என்று அறிந்த தேவகுரு, பால் கலக்காது கோப்பி தயாரித்துக் கொண்டு வந்து பரிமாறினார்.

'அந்த வீட்டிற்கு யாரோ திட்டமிட்டு நெருப்பு வைத்திருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்களாம்...உண்மையா?' என்று கோப்பியை அருந்தியவாறு லார்ஸ் கேட்டார்.

'போலிஸார் அப்படித்தான் நினைக்கிறார்கள்.'

'எங்களால நம்பமுடியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய மக்களும் இப்படிச் செய்வார்களா?' என திருமதி லார்ஸ் அங்கலாய்த்தாள்.

'நாலாயிரம் சனங்களில நாலுபேர் வித்தியாசமாகச் செயற்படுவது இயற்கைதானே?' என்று தேவகுரு சமாதானம் சொன்னார்.

'இப்படியும் செய்யிறதே? அதுவும் குழந்தையோட தூங்கிற குடும்பத்துக்கு?' என்று அவள் கோபத்துடன் கேட்டான்.

'சிலருடைய மனங்களிலே அச்சமும் வெறுப்பும் குடியேறி இருக்கும். அவற்றை எப்படி களையிறது என்பதுதான் பிரச்சினை; இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்ப்புக் காணலாம்? இங்குள்ள தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? இங்கள்ள நல்லிதயம் கொண்ட நொஸ்க்குகளின் கடமை என்ன? எரிக்கிறாங்களே என்று விரோதம் பாராட்டாமல், இந்த வன்செயல்களிலே ஈடுபட்டுள்ளவர்களுடைய மன அச்சங்களை அகற்ற வேண்டும், என்று தேவகுரு சொன்னார்.

'நீங்கள் வித்தியாசமான மனுஷர்' என்று திருமதி லார்ஸ் புன்னகைத்தார்.

'மனிதனை மனிதன் வெறுப்பது முட்டாள்களின் செயல். மனிதனை மனிதன் நேசிப்பது--மனிதநேயம்--மகத்தான செயல். மனித நேயம் வளர்ந்தால், வன்முறை அழிந்து போகும்...'

'ப்றா..நான் ஒரு திட்டத்துடன் வந்திருக்கிறேன். நாங்கள் எல்லோரும், தமிழர்களும் நூர்மனும் சேர்ந்து, ஒர் அமைதி ஊர்வலம் நடத்தவேணும். அதிலே அதிகமான நூர்மன் கலந்து கொள்ளுவதற்கு என் மனைவியும் நானும் பாடுபடுவோம். எங்களுக்குள் இந்த ஐக்கிய உணர்வு வெளிப்பட்டால், தீய சக்திகள் ஒடுங்கிப் போக வழியுண்டு' என்றார் லார்ஸ்.

'நல்ல யோசினை. உங்களுடைய அன்புக்கும் அக்கறைக்கும் தமிழர்கள் சார்பாக நன்றி சொல்லுகிறேன்.'

'இது எங்கள் கடமை. உங்கள் ஆக்களுடன் பேசித் தோதான தேதியை எனக்கு அறியத் தாருங்கள்...'

'அடுத்த சனிக்கிழமை, தமிழர் கூட்டமைப்புக் கூட்டம் இருக்கிறது. அதில் தீர்மானிக்கப்படும் தேதியை உங்களுக்கு அறியத் தருகிறேன்....' என்றார் தேவகுரு.

உள்ளே மாலதியுடன் விளையாடிக் கொண்டிருந்த அனிதாவுக்கு, திருமதி லார்ஸ் குரல் கொடுத்தாள். [தொடரும்]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R