ஜெயந்தி சங்கர்:1. வணக்கம்!  உங்கள் குடும்பப்பின்னணி குறித்துச் சொல்லுங்கள்

ஜெயந்தி சங்கர்: என் பெற்றோரின் பூர்வீகம் மதுரை. நான் பிறந்ததும் மதுரை. இருப்பினும், பள்ளிவிடுமுறைநாட்களுக்குப் போவது தவிர மதுரையுடன் எனக்கு எந்தத் தொடர்பும் குறிப்பிடும் அளவிற்கு இருந்ததில்லை. அம்மா சாதாரண இல்லத்தரசி. இசை அறிந்தவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட அப்பா மத்திய அரசாங்கத்தில் ஒரு பொறியாளராக இருந்தார். வாசிப்பு, தொழில்நுட்பம், புகைப்படம், ஓவியம், தோட்டக்கலை போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்பாவுக்கு மாற்றலாகிக் கொண்டே இருக்கும். ஆகவே, கோவை முதல் ஷில்லாங் வரை பல ஊர்களிலும், மாநிலங்களிலும் வளர்ந்தேன். ஆகவே, பல மொழிகளும் பல்வேறுபட்ட கலாசாரங்களும் எனக்கு சிறு வயது முதலே அறிமுகம். குடும்பத்தில் நானே மூத்தவள். ஒரு தங்கை, லண்டனில் ஆங்கில ஆசிரியையான இருக்கிறாள். இரண்டு தம்பிகள். இருவரும் பொறியாளர்கள். கணவர் ஒரு பொறியாளர். இரண்டு மகன்கள். பெரியவன் ஒரு பொறியாளர். சிறியவன் சட்டம் இரண்டாம் வருடம் படிக்கிறான்.

2) எப்போது நீங்கள் சிங்கப்பூர் வந்தடைந்தீர்கள்?

ஜெயந்தி சங்கர்: கணவருக்கு செம்பவாங் ஷிப்யார்டில் பொறியாளர் பணி கிடைத்தபோது இரண்டு வயது மூத்த மகனுடன், மூவரும் சிங்கப்பூருக்கு வந்தது 1990ல். இளைய மகன் இங்கு தான் பிறந்தான்.

3) இங்கு வந்த புதிதில் தனிமையோ சொந்த ஊர் பற்றிய ஏக்கமோ இருந்ததா?

ஜெயந்தி சங்கர்: புதிதாக இருந்ததே தவிர தனிமையோ ஏக்கமோ எற்படவில்லை. அதற்குக் காரணம் சிங்கப்பூர் வரும் முன்னர் நான் பல்வேறு மாநிலங்களில், குறைந்தது 9-10 ஊர்களில் வளர்ந்தவள். கொஞ்சகால பிரமிப்பு இருந்தது. ஆனால், மிரட்சி இல்லை. புதிய ஊர், புதிய மக்கள் என்றபோதிலும் பல்லினக் கலாசாரம் எனக்கு முற்றிலும் புதியதில்லை.

4) எது உங்களை எழுதத் தூண்டியது?

ஜெயந்தி சங்கர்: இந்தியாவில் ஆங்கில வழிக்கல்வி பயின்றேன். ஏழாம் வகுப்பு இரண்டாம் மொழியாகப் பயின்ற தமிழ்மட்டுமே எனக்கான மொழிப் பின்புலம். எழுத ஆரம்பித்தது 1995. ஐந்தாண்டுகள் தொடர்ந்து எந்தவித இலக்குமில்லாமல் வாசித்துக் கொண்டிருந்த எனக்கு உதவியது தேசிய நூலகங்கள். ஒரு கட்டத்தில் கராறான ஒரு விமர்சகி உருவானாள். ஒருநாள் அந்த விமர்சகியிடம் “கட்டின வீட்டுக்கு எட்டு கோளாறு யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஒன்றைக் கட்டிப் பார்,” என்று கேட்டேன். அப்படி 1995ல் முயற்சித்தது தான் எனது முதல் சிறுகதை.

5)முறையான எழுத்துப் பயிற்சி இல்லாமல் எப்படி நீங்கள் எழுதத் துணிந்தீர்கள்?

ஜெயந்தி சங்கர்: ஒருவருக்கு எழுதப் பயிற்சி அளிப்பது என்பது காட்டில் திரியும் யானையை சங்கிலியில் கட்டி பிச்சை எடுக்க பயிற்சி அளிப்பது போல, அல்லது மேசை அலங்காரத்திற்கென்று பெரியதோர் ஆலமரத்தை மரபணு மாற்றம் மூலம் ‘பொன்ஸாயா’க உருவாக்குவது போலாகும். பாகனுக்கு  பெருமிதம் வரலாம். தோட்டக்காரனுக்கும் சாதித்த கர்வம் ஏற்படலாம். ஆனால், இவை யாவுமே இயற்கைக்கு மாறானவை. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால்,  துறை சார்ந்த எழுத்துக்கு வேண்டுமானால் எழுத்துப் பயிற்சி உதவலாம்.  ஒருவரை உருவாக்கவும் முடியலாம். ஏனெனில், அங்கே சொற்களிலும் நடையிலும் குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்த, உயர்பதவியில் இருக்கும் ஒரு தனிநபர் சார்ந்த தேர்வுகளே முக்கியத்துவம் பெறுகின்றன.  அது ஒரு வேலை தான். யாருமே பயின்றுவிடக்கூடிய வேலை. கலையாகாது.  ஆனால், புனைவுலகம் அப்படியில்லை. அது கட்டுப்பாடுகள் அற்ற ஓர் அகண்ட வெளி. புனைவுகள் அனிச்சையாக நிகழ்ந்தால் மட்டுமே அதில் கலையும் அழகியலும் வெளிப்படும். இவ்விரண்டுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

6) நீங்கள் எழுத வந்தது ஒரு விபத்தா?

ஜெயந்தி சங்கர்: ஒரு கட்டத்தில் எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தினால் என்னில் ஏற்பட்ட என் விருப்பத்தினால் தான் நான் எழுதத் தொடங்கினேன்.  விபத்தில்லை. நானே எனக்கு வைத்துக் கொண்ட சோதனை,  சின்னதொரு சவால் தான் எழுத்துக்குள் என்னைக் கொண்டு வந்தது.

7) ஏதும் எழுத்துப் பயிற்சி பெற்றிருந்தால் அதுகுறித்துச் சொல்லுங்கள்.

ஜெயந்தி சங்கர்: எழுதத் தொடங்கும் போது என்னில் இருந்த விரிந்த அகன்ற வாசிப்பு, அதன் மூலம் நான் பெற்ற எழுத்து வகைகள் பற்றிய சுயஅறிவு மட்டுமே எனக்கானதாக இருந்தது. அதுவும் அனுபவத்தை மட்டுமே அடிபடையாகக் கொண்ட தொடர்ந்த வாசிப்பு.

8) எழுத ஆரம்பித்த போது சவாலாக இருந்ததா?

ஜெயந்தி சங்கர்: சரியாக வாசிக்காமல் விமர்சிப்பவர்களை எதிர்கொள்வது, சரியாக வாசிக்காமலே போகிற போக்கில் நன்றாக இருக்கிறது என்பவர்களைக் கடப்பதும் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தின. போகப்போக இவற்றைச் சமாளிக்கவும், விமர்சனத்தை மதிப்பிடவும், ஏற்குமிடத்தில் ஏற்கவும், நிராகரிக்க வேண்டிய இடத்தில் நிராகரிக்கவும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், எழுதத் தொடங்கும் போது மற்றவர் கருத்துக்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் யாரிடமிருந்து எந்தப் பின்னணியில் அது உருவானது என்பதும். அந்த நுட்பம் தெரியாவிட்டால் அதிக மாயையால், அல்லது மிகுந்த வருத்தத்தால் படைப்பாளி உறைந்து விட வாய்ப்பு மிக அதிகம். அது நடக்காமல் தப்பித்தேன்.

ஜெயந்தி சங்கர்:9) நூல்களைப் பதிப்பிப்பது சவாலாக இருந்ததா?

ஜெயந்தி சங்கர்: பின்னோக்கிப் பார்த்தால் ஒன்று தெரியும். 1995 முதல் 2005 வரை நூல் என்று எதுவும் நூலாக அச்சாகாமல் பல்வேறு இதழ்களில் சிறுகதை, கட்டுரை எழுதியிருக்கிறேன். நூலாக்கம் குறித்து நான் சிந்திக்கவே இல்லை. அந்தமாதிரியான திட்டங்களோ, ஆசைகளோ இருக்கவில்லை என்னில் அப்போது.  அவ்வந்த படைப்பு எனக்குள் ஏற்படுத்திய திருப்தியே எனக்குப் போதுமானதாக இருந்து வந்தது. படைப்புகள் வாசகர்களுக்கானவை, நூலாக்கம் பெற வேண்டும் என்று மிகுந்த அன்போடு 2004 வாக்கில் கவிஞர் மதுமிதா, தற்போது கல்கி இதழ் ஆசிரியராக உள்ள ஆர்.வெங்கடேஷ் ஆகிய இரண்டு எழுத்தாள நண்பர்கள் இருவேறு பதிப்பாளர்களிடம்  நூலாக்கத்திற்கு ஆவன செய்தார்கள். அதன் பின்னர், தொடர்ச்சியாக பல நூல்கள், பல பதிப்பகங்கள். நூலாக்கத்திற்குரிய ஏராளமான சவால்களை எல்லோரையும் போல நானும் எதிர்கொண்டேன். சென்றாண்டு 980பக்கத்தில் காவ்யா பதிப்பகத்தில் சிறுகதைகள் முழுத்தொகுப்பும் எழுத்தாள நண்பர் சுப்ரபாரதிமணியனின் ஆலோசனையில் சிறப்பாகப் பதிப்பிக்கப்பெற்றது.

10) உங்களுக்குள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் யார்?

ஜெயந்தி சங்கர்: ஒரே ஒருவரைச் சொல்வது மிகக் கடினம். நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழில் புனைவைப் பொறுத்தவரை புதுமைப்பித்தன், ப.சிங்காரம், சுந்தர ராமசாமி, அம்பை, பிரபஞ்சன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வெங்கட் சாமிநாதன், சல்மா, அ.முத்துலிங்கம்,  எஸ்.ராமகிருஷ்ணன்,  பெருமாள் முருகன்,  சந்திரா, பாவண்ணன், பாமா, சுப்ரபாரதிமணியன், ஷங்கரநாராயணன் என்று வரிசையாக நிறைய பேரைச் சொல்லலாம்.

 11) பிற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உங்கள் எழுத்தில் பிரதிபலிப்பதுண்டா?

ஜெயந்தி சங்கர்: ஒவ்வொரு எழுத்தாளரும் வாசிக்கும் போது எனக்குள் இயல்பாகவே ஏதோவொரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இருப்பினும், அவை என் எழுத்தில் எங்குமே எதிலுமே அது பிரதிபலிப்பதில்லை. வாசிக்கும் போது வாசகி, படைக்கும் போது படைப்பாளி என்ற விலகல் தவிர இதற்கு நான் வேறு எந்தத் தனிக் கவனமும் எடுப்பதில்லை.  யாருடைய சாயலும் என் எழுத்தில் இருப்பதில்லை. இது உண்மையில் ஓர் அதிருஷ்டம் தான். நிறைய வாசிக்கிற யாருக்குமே ஏதோ ஒரு சாயல் வந்துவிடுவதுண்டு.  நிறைய படைப்பாளிகளிடம் இதைப் பார்த்திருக்கிறேன்.

12) உங்கள் எழுத்துப் பணிக்கு உங்கள் குடும்பம் ஆதரவளிக்கிறதா?

ஜெயந்தி சங்கர்: யாருமே ஏன் இந்தக் கேள்வியை யாரும் ஓர் ஆண் எழுத்தாளரிடம் கேட்பதில்லை என்று எனக்கு எப்போதுமே தோன்றும்.  ஒத்துழைப்போ ஆதரவோ இருந்தாலும் இல்லாவிட்டாலும் எழுத எனக்குப் பிடிப்பதால் நான் தொடர்ந்து எழுதுவேன்.  குறிப்பாகச் சொல்வதென்றால் அப்பா இருந்தவரை மிகவும் ஆசையுடன் தட்டிக் கொடுத்தார். இப்போதும் உடன் பிறந்தோர் ஊக்குவிப்பர். கணவர் தடுப்பதுமில்லை, ஊக்குவிப்பதுமில்லை. மூத்தமகன் எப்போதேனும் இதுகுறித்துக் கேட்பான். இளைய மகன் அடிக்கடி வந்து உட்கார்ந்து பேசுவான்.  மேலோட்டமாகப் பார்த்தால் மிகுந்த அக்கறையில் பிறந்த கேள்வி போலத் தோன்றும் இது. இருப்பினும்,  அப்பட்டமான ஆணாதிக்கத்தில் எழுந்த கேள்வி தான் இது.  பெண்ணுக்கு எப்போதுமே ஆதரவும் ஊக்கமும் தேவை, இல்லையென்றால் அவளால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே செய்ய முடியாது என்று அறிந்தோ அறியாமலோஅவளைச் சிறுமைப் படுத்துவதிலிருந்தும் பெண் குறிப்பிடும்படி ஏதும் செய்தால் அதன் பின்னணியில் ஓர் ஆண்மகனின், குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும் என்று கற்பித்துக்கொள்வதிலிருந்தும் பிறக்கும் கேள்வி.

 13) சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உலகை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ஜெயந்தி சங்கர்: சிங்கப்பூர் தமிழ் இலக்கியப்பரப்பில் இயங்கும் ஒவ்வொருவரும் குறுகியகால இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கியே இயங்குகின்றனர் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்களில் பலருக்கும் பலவித மனத்தடைகள் உள்ளன. அவற்றுள் சில பல்வேறு நியாயமான அச்சங்கள் காரணமாக உருவானவை. வேறு சில வேண்டாத கற்பனைகள் கொண்டுவரும் தேவையற்ற அச்சங்கள் காரணமாக உருவானவை. மற்ற சில படைப்பாளிகளிடம் உள்ள மனத்தடை ‘நான்’ என்பதைத் தாண்டி அவர்கள் யோசிக்காததால் வருபவை. வாசிப்பிலும் எழுத்திலும் ‘தொடர்ச்சி’ இருப்பதில்லை என்பது நான் தொடர்ந்து கவனித்து வரும் ஒரு மிகப் பெரிய குறை. இங்கே நமக்கு எத்தனை அமைப்புகள், எத்தனை இயக்கங்கள், எத்தனை வசதிகள், எத்தனை வாய்ப்புகள் ! அப்பப்பா, நினைக்க நினைக்க எனக்கு எப்போதுமே மிக பிரமிப்பாக இருக்கிறது. கலை, இலக்கியம் சார்ந்த இயக்கம் பெருகியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்தபடியுள்ளது. அது உற்சாகமளிக்கிறது. வரவேற்கத் தக்கது. நல்லதும் கூட. இருப்பினும், அவை எல்லாமே ஏற்படுத்தியிருக்க வேண்டிய அளவிற்கு இலக்கியப்பரப்பில் ஆக்கங்கள் என்கிற நோக்கில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது கொஞ்சம் சந்தேகமாகத் தான் இருக்கிறது.

14) நமது சமூகத்தில் உலகத் தர இலக்கியம் பிறக்கும் சாத்தியமுண்டா?

ஜெயந்தி சங்கர்: இருக்கிறது. கண்டிப்பாக, வாய்ப்புண்டு. இல்லையென்று சொல்ல முடியாது. சுருங்கி வரும் உலகில் உலகத் தரம் என்பதெல்லாம் தவிர்க்கக் கூடியவை அல்ல. வேண்டியது தான். இயல்பாகப் பிறக்கும் எழுத்தில் அதை  எட்டுவதும் சாத்தியம் தான். ஆனால், இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.  எப்போதுமே கலை, இலக்கியத்தில் மதிப்பீடு என்பதே ஏதோவொரு ஒருவகையில் , அவரவர் அனுபவம், ரசனை போன்றவற்றின் அடிப்படையில் நடக்கும் ஒப்பீடு சார்ந்தது.  ஒருவருக்கு சிறப்பாகத் தோன்றும் ஓர் ஆக்கம் இன்னொருவருக்கு சராசரியாகத் தோன்றலாம். கலையின் பலமும் இது தான். பலகீனமும் இது தான். அதுவுமில்லாமல், கலை இலக்கியத்தில் ஊடாடி வரும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து தர நிர்ணயம் செய்கிறார்கள். இங்கே தான் அனுபவமும் ரசனையும் கைகொடுக்கின்றன. அதனால் தான் கல்வியாளர்களின் மதிப்பீடுகள் பெரும்பாலும் மிகவும் இயந்திரத்தனமாக உயிர்ப்பில்லாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். படைப்பு என்பது தொழிநுட்பம் சார்ந்ததல்ல.  கடுமையான அளவுகோலோ துல்லிய தரக்கட்டுப்பாடோ உருவாகும் கட்டம் உருவாகுமிடத்தில் எல்லாம் கலையும் மெல்ல மங்கி மறையும் என்பதே என் தனிப்பட்ட கருத்து.

15) சீனக்கவிதைகளை மொழிபெயர்க்க உங்களைத் தூண்டியது எது?

ஜெயந்தி சங்கர்: ‘பெருங்சுவருக்குப் பின்னே’ என்ற நூலை எழுதும் போது ஒரேயொரு சீனக் கவிதையை ஆங்கிலம் வழி மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அதற்காக சில கவிஞர்களைக் கேட்கவும் எண்ணினேன். ஓரிருவரைக் கேட்டு அவர்களுக்கு நேரமில்லாமல் இழுத்தடித்ததால், நானே முயன்று பார்த்தேன். பிடித்திருந்தது. புதிய அனுபவம். மொழிபெயர்த்ததை ஒரு கவிஞரிடம் (ஆங்கிலத்தையும் சேர்த்து) கொடுத்து கருத்து கேட்டேன்.  நன்றாக இருக்கிறது என்றார். அது ஓர் உந்துதலாக இருந்தது. பின்னர், ஆர்வமிகுதியால் ஆங்கிலம் வழி சீனக் கவிதைகளை மொழிபெயர்த்து  ’மிதந்திடும் சுயபிரதிமைகள்’ என்ற நூலானது. அந்த நூல் நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதையும் பெற்றது. 2009ல் சென்னை சென்று விருது வாங்கித் திரும்பினேன்.

16) நீங்கள் பெண்ணியவாதியா?

ஜெயந்தி சங்கர்: நுட்பமாகப் பார்த்தால் ஆமாம். ஆனால், அது என்னை மிக நெருக்கமாக அறிந்த வெகுசிலருக்கு மட்டுமே உணரக்கூடியதாக இருக்கிறது.  வெளிப்படையாகச் சொல்லாத, உரத்த குரல் எழுப்பாத, கொடி எதுவும் தூக்காத, பெரியாரை சரியாக உள்வாங்காமலே மேடையிலும் மேசையிலும் கோஷம் போடாத ஒரு பெண்ணியவாதி  என்று என்னை வரையறுக்கலாம். அதே நேரத்தில், சமீபகாலம் வரை ஆணாதிக்கமானது உருவாக்கிய அதிகாரம், பலமெல்லாம் மெதுமெதுவாக தன் போக்கில் மருவி ஆணின் பலவீனமாகவே அவை வெளிப்படுகிற, பார்க்கப்படுகிற மாற்றங்களையும் கூர்ந்து உணர்ந்தே வருகிறேன்.

17) நீங்கள் உங்களையே முதன்மைப் பாத்திரமாக உங்கள் ஆக்கங்களில் சித்தரித்ததுண்டா?

ஜெயந்தி சங்கர்: முதன்மைப் பாத்திரத்துக்குள் புகுந்து அந்தப் பாத்திரமாக யோசித்து எழுதுகிறேன். ஆனால், எனக்குள் முதன்மைப் பாத்திரத்தைப் புகுத்தி நான் எழுதியதேயில்லை. அதனால் தான் ஒரே மாதிரி எல்லோருமே என்னுடைய படைப்புக்களைக் குறித்துச் சொல்வது – ‘படைப்பாளி எங்கேயும் வெளிப்படாத சிறந்த படைப்புக்கள்.’

18) உங்கள் கதாப்பாத்திரங்களில் உங்கள் சொந்த வாழ்க்கை எந்த அளவிற்கு பிரதிபலிக்கிறது?

ஜெயந்தி சங்கர்: கிட்டத்தட்ட பூஜ்யம். அதற்கு அவசியமுமில்லை. முதன்மைப் பாத்திரத்துக்குள் புகுந்து அந்தப் பாத்திரமாகவே எழுதியுள்ளேன். ஆனால், எனக்குள் முதன்மைப் பாத்திரத்தைப் புகுத்தி எழுதியதில்லை. இதே காரணத்தினால் தான் என் எழுத்தில் அதிக variety வருகிறது என்கிறார்கள் நல்லவாசக மனம் படைத்த பலர். தொடர்ந்து எவ்வாறு சாத்தியப்படுகிறது என்றும் கேட்பார்கள். அவ்வாறு கேட்கப்பட்டும் வேளையில் நானே ஆராய்ந்து கண்டடைந்த பதில் – எனக்குள் இருக்கும் Empathy இதை சாத்தியப்படுத்தியுள்ளது. படைப்புக்குள் படைப்பாளியைத் தேடிச் சலிக்கின்ற மனநோயுற்ற சிலரோ படைப்பாளியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்துவிடத் துடிக்கும் விகாரமனம் படைத்தவர்கள். ஒன்றையும் படிக்காமல், அல்லது சரியாகப் படிக்காமல் இவர்கள் விமர்சன அவதாரம் எடுக்கும் விநோதங்களும் அடிக்கடி நடக்கிறது. 

19) உங்கள் கதைகளில் உலாவும் கதாப்பாத்திரங்களின் உண்மையான தீவிரம், உணர்ச்சி போன்றவற்றை சமூகத்திற்கு ஏற்றவாறு எந்த அளவிற்கு நீங்கள் புனைவுகளால் மூடுவீர்கள்?

ஜெயந்தி சங்கர்: எதையும் வலுவில் நிறுவ முயலாமல் வாசகனின் சிந்தனைக்கும் கருத்தோட்டத்திற்கும் மதிப்பளிக்கும் எழுத்து என்னுடையது. ஆகவே, கதையில் உள்ள சூழலுக்கும் கதாப்பாத்திரத்தின் இயல்புக்கும் கதையின் ஓட்டத்துக்கும் ஏற்றவாறு தான் அவற்றை அமைக்க முடியும்.

20)சுதந்திரமான இலக்கியப்பரப்பில் இயங்குவதாகக் கருதுகிறீர்களா?

ஜெயந்தி சங்கர்: இல்லை. சிங்கப்பூர் இலக்கியப் பரப்பில் சில விஷயங்கள் குறித்து எழுத முடியாது என்பது நன்றாக தெரிகிறது. ஒவ்வொன்றையும் எழுதும் முன்னர் நான் எனக்குள் தணிக்கை செய்கிறேன். அந்தக் கோணத்தில் பார்த்தால் முழுச் சுதந்திர வெளி இல்லை நம்முடைய இலக்கியப்பரப்பு என்றே நினைக்கிறேன்.

21)நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள்  சரியாக நடத்துகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

ஜெயந்தி சங்கர்: பெண்ணை தாய், அன்னை, தாய்க்குலம், சக்தி அது இது என்று ஒரேயடியாக glorifyசெய்வது அல்லது புழுவென மிதித்துக் கடாசுவது ஆகிய இருவகை ஆண்கள்.  பெரும்பாலும் பெண்ணை கிள்ளுக்கீரையாக நினைக்கும் ஆண்கள் அல்லது அச்சுறுத்தலாக நினைக்கும் ஆண்கள் தான். அச்சுறுத்தலாக நினைக்கும் ஆண்களில் பலர் தங்களது தாழ்வு மனப்பான்மையை இட்டு நிரப்ப, பெண்ணை அவமதிப்பார்கள். கிள்ளுக்கீரையாக நினைக்கிறவரே மேல் என்று நாம் நினைக்கும் அளவிற்குப் போகும் இது.  புதுவகை ஒன்றுண்டு. ஆணாதிக்கமே என்னிடம் இல்லை பார் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிறுவி விட முயன்று கோமாளியாகும் ஆண். பெரும்பாலும் வெற்றியடையாதபோதிலும் குறைந்தபட்ச முயற்சிக்காக வேண்டுமானால் இவரை மன்னித்து விடலாம்.

22)சிங்கப்பூரின் இலக்கியவெளியில் பெண்கள் பங்காற்ற முடியுமா?

ஜெயந்தி சங்கர்:

ஏற்கெனவே பல பெண்கள் கால் பதித்து வருகிறார்களே.

23)உங்கள் பதிப்பாளர்கள் உங்களுக்கு ஆதரவு நல்குகிறார்களா?

ஜெயந்தி சங்கர்: அவரவர் அளவில் ஆதரவாக இருக்கிறார்கள். இதை தமிழ் பதிப்புலகம் இயங்கும் முறையை வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலப் பதிப்புலம் போல தமிழ் பதிப்புலகம் இயங்குவதில்லை.

24)உங்கள் நூல்கள் பதிப்பிக்க ஆகும் செலவை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

ஜெயந்தி சங்கர்: செலவுகளைச் சமாளிப்பது எல்லாமே நான் தான். கணவரும் பொருளாதார உதவி செய்வதுண்டு. மற்றபடி எந்த வித வெளி உதவியும் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை.

25)குடும்பத்தையும் வேலையையும் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

ஜெயந்தி சங்கர்: என்னுடைய நேர நிர்வாகம் சிலநாட்கள் நானே கர்வப்படும் அளவிற்கும் சிலநாட்கள் மிக வெட்கப்படும் அளவிற்கும் போகும். எந்த நெருக்கடியையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அந்தந்த நாளை சுவாரசியமாக அவதானித்துக் கடக்கிறேன். பெரிய இலக்குகள், அதனால் நெருக்கடிகள் ஏற்படுத்திக் கொள்வதில்லை.

26) கரிகாலன் விருது குறித்துச் சொல்லுங்கள்

ஜெயந்தி சங்கர்: திரிந்தலையும் திணைகள் நாவலுக்கு கரிகாலன் விருது வழங்கப்பட்டது. டிசம்பர் மாதம் செய்தி வந்த பின்னர், விருது வாங்க தஞ்சை சென்றேன். விருது, கவனம், பயணம், மேடை, மாலை, பொன்னாடை, பாராட்டுகள், அறிமுகங்கள், அங்கீகாரம், சான்றிதழ், பூச்செண்டு, புகைப்படங்கள் ஆகிய அனைத்தையும் தாண்டி கரிகாலன் விருது நடுவர் குழு அளித்த தேர்வறிக்கை தான் என் மனதுக்கு மிகப் பிடித்ததாக இருந்தது. மேடையில் ஏற்புரையிலும் இதையே தான் நான் சொன்னேன். ஒரு நூலில் நூலாசிரியர் சொல்ல நினைத்ததை ஒரு வாசகர், ஒற்றை வாசகர் சரியாகப் புரிந்துகொண்டாலே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும். ஒரு பல்கலைக்கழகத்தின் விருது நடுவர் குழு அந்த நூலைச் சரியாக உள்வாங்கியிருந்தது மிகுந்த நிறைவைக் கொணர்ந்தது.

27)முன்னணியில் 5 தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக நீங்கள் உங்களை மதிப்பிடுவீர்களா?

ஜெயந்தி சங்கர்:சிங்கப்பூர் எழுத்துலகம், (Diaspora) புலம்பெயர் எழுத்துலகம் என்று எடுத்துக்கொண்டால், நேரடியான பதில் ஆம். விரிவான பதில் சொல்வதென்றால், என் வரையில் இந்த முன்னணி, பின்னணிகளில் நம்பிக்கை இல்லை. ஏனெனில், போட்டி போடுவோருக்கு, முகமூடிகளை அணிந்து, பிம்பங்களை உருவாக்கிக் கொண்டு அதைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கும் படைப்பாளிகளுக்குத் தானே அதெல்லாம் முக்கியம். தன் போக்கில் அமைதியாக தெளிந்த நீரோடை போல இயங்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவருக்கு அதெல்லாம் வேண்டாதது.  அவை புத்தாக்கத்திற்குத் தடையாகலாம் என்றும் சொல்வேன்.

28)சிங்கப்பூரில் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்த பிறகு, சிங்கப்பூரின் ஒரு பகுதியாக உணர்கிறீர்களா?

ஜெயந்தி சங்கர்: நான் சிங்கப்பூரின் ஒரு பகுதி தான். ஆனால், 10, 12 ஆண்டுகளுக்கு முன்னர் மனதளவில் நான் சிங்கப்பூரராக உணர்ந்தபோது யாருமே என்னை இப்படிக் கேட்டதில்லை. இப்போது நான் உலகக் குடிமகளாக உணரும் வேளையில் இதை என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள்.

29)எந்த அச்சமோ தயக்கமோ இல்லாமல் புத்தாக்கத்துடன் உங்களால் எழுத முடிகிறதா?

ஜெயந்தி சங்கர்: கண்டிப்பாக. ஒரு விஷயத்தை எழுதுவதா வேண்டாமா என்பதில் தயக்கம் இருக்கலாம். எழுதுவது என்று முடிவான பிறகு எந்தத் தயக்கமும் என்னில் இருப்பதில்லை.

30)உங்கள் படைப்புகளில் சிறந்தவை என்று நீங்கள் நினைப்பவை எவை?

ஜெயந்தி சங்கர்: ‘மனப்பிரிகை’, ‘திரிந்தலையும் திணைகள்’ ஆகிய இரண்டு நாவல்களையும் சொல்லலாம். ’மனப்பிரிகை’க்குக் கிடைத்திருக்க வேண்டிய கவனமும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பது அப்படைப்பின் குறையில்லை. நமது இலக்கிய உலகின் குறை.

31)யார் உங்கள் படைப்புக்களைத் திருத்துகிறார்?

ஜெயந்தி சங்கர்: புனைவைத் திருத்துவதற்கும் அ புனைவை, தொழில்சார்ந்த எழுத்தைத் திருத்துவதற்கும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடு உண்டு என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதைச் சொல்லிவிட்டு பதிலுக்குப் போகிறேன். எழுதும் போது செய்வதைத் தவிர நூலாக்கத்தின் போது, நான் ஒருமுறை எடிட், ஃப்ரூஃப் செய்வேன். பதிப்பாளர் இன்னொரு முறை செய்வார்.  தமிழ் பதிப்புலகம் இயங்கும் முறையை வைத்து இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், ஆங்கிலப் பதிப்புலம் போல தமிழ் பதிப்புலகம் இயங்குவதில்லை.

32)உங்கள் படைப்புகளில் உங்கள் மனதுக்கு நெருக்கமானவை எவை?

ஜெயந்தி சங்கர்: எல்லாமே தான். இருந்தாலும் ‘மனப்பிரிகை’, ‘திரிந்தலையும் திணைகள்’ ஆகிய இரண்டு நாவல்களைச் சொல்லலாம். அ புனைவில் ‘பெருஞ்வருக்குப் பின்னே’ என்ற நூலைச்சொல்வேன். தமிழில் இல்லாத நூல் வகை இது. மொழிபெயர்ப்பில் ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’, என்ற சீனக் கவிதை நூலையும் ‘என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி’  என்ற சீனத்துச் சிறுகதை நூலையும் சொல்லலாம்.

33)உங்களுடைய ஆகச் சிறந்த ஆக்கத்தைக் குறித்து விரிவாகச் சொல்லுங்கள்.

ஜெயந்தி சங்கர்: திரிந்தலையும் திணைகள் நாவலைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன். உலகமயமாக்கல் பூமிப்பந்தைச் சுருக்கி வரும் வேளையில் நாடுகளிடையேயும் பழந்தமிழ் திணைகளுக்கிடையேயும் நிலவிய எல்லைகள் மறைக்கப்பட்டுவிட்டன. புலம்பெயர்வுகள் அதிகரித்து, நாடுகளிடையே எல்லைகள் மறைந்து, ஒவ்வொரு மனிதனும் தனக்குள் விரியும் அகன்ற அகவெளியை ஏந்தி அலைகிறான். அதனால், ஒவ்வொரு மனிதனுமே ஒரு திணையாகிறான். உள்நாட்டுக்குள், வெளிநாட்டுக்கு புலம்பெயர்தலால் அலைக்கழிக்கப்படும் மனிதர்களைப் பற்றியது இந்தப் புதினம். இடப்பெயர்வுகளுக்கு ஆளாவது ஆலயங்களும் அதில் குடிகொள்ளும் தெய்வங்களும் தான். இரண்டு பெண்களைப் பற்றிய நாவல் என்றும் இதை நாம் வாசிக்க முடியும். சிங்கப்பூரின் செம்பவாங் வட்டாரம் 20 ஆண்டுகளில் கண்டுள்ள மாற்றங்கள் இந்தநாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

34)எழுத்துப்பயணத்தில் எதுவரை போக விருப்பம்?

ஜெயந்தி சங்கர்: இக்கணத்தில் தோன்றுவது. என் மூளை, யோசிக்கும் திறனைத் தக்கவைத்துக்கொள்ளும் காலம் வரை என்று சொல்லலாமா?  இலக்கியத்தில் என்னுடையது எப்போதுமே ஓர் ஆன்மிகம் சார்ந்த தேடல் என்றே உணர்கிறேன். என்னை நானே கண்டடையவும் என்னை தொடர்ந்து பக்குவப்படுத்திக் கொண்டு, மேம்படுத்திக்கொண்டு முன்னகர இந்தத் தேடல் எனக்கு மிக உறுதுணையாக இருக்கிறது.

35) உங்கள் பொழுதுபோக்குகள் யாவை?

ஜெயந்தி சங்கர்: இசை வகைகளில், குறிப்பாக வீணை இசையில் எனக்கு ஈடுபாடு உண்டு.  அது தவிர, புத்தகம். எப்போதேனும்,  நேரமிருப்பின் ஈரான், கொரியா, ஸ்பானிஷ், சீனம், ஹிந்தி போன்ற உலக சினிமா பார்ப்பேன். ஆங்கில சப் டைட்டிலுடன் தான்.

36) Man booker Prize அல்லது Pulitzer Prize போன்ற விருதுகளுக்கு எழுதும் நோக்கமுண்டா?

ஜெயந்தி சங்கர்: ஏதோ ஓர் இலக்கை நோக்கிப் போகும் எழுத்துப்பயணம் அல்ல என்னுடையது. எழுத்துப் பயணத்தில் முடிவை விட பயணம் எனக்கு முக்கியம்.  இங்கே தான் நான் எப்போதும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு வருகிறேன். அது போன்ற இலக்குகள் படைப்புகளின் இயல்பை, அழகை அழிக்கக் கூடிய ஒருவித நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன என்றே நினைக்கிறேன். நான் எழுதுவது முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும். பின்னர் வாசகர்களுக்கு. அதன் பிறகு இது போன்ற போட்டிகளுக்கான நடுவர் குழுகளுக்கும் பிடித்து என்னைத் தேடி விருதுகள், அங்கீகாரங்கள் வந்தால் மகிழ்ச்சி தான். ஊக்கமும் கூட. இருப்பினும், அவற்றை நோக்கி என் பாதையை அமைத்துக் கொள்வதில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை.

37) வணக்கம்

ஜெயந்தி சங்கர்: நன்றி, வணக்கம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R