எழுத்தாளர் அன்புமணி (இராசையா நாகலிங்கம்) இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவரும், சிறந்த சஞ்சிகையாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி நின்றவருமான அன்புமணி (இராசையா நாகலிங்கம்) அவர்கள் இயற்கை எய்திய செய்தி மனதை உலுக்கி நின்றது. இப்போது தான் பேசினோம். அதற்குள்... மனம் கவலை கொள்கிறது. சிறுகதையாளனாக, நாவலாசிரியனாக, கட்டுரையாளனாக, விமர்சகராக, நாடக ஆசிரியராக, நடிகனாக, நாடக இயக்குனராக, இதழாசிரியனாக, நல்ல நேர்காணலாளராக, நண்பனாக வலம் வந்தவர். 06/03/1935இல் ராசையா/தங்கமணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். தமிழின் மீதான அளப்பரிய ஈடுபாடே அவரின் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களாக வைத்து அழகு பார்த்தார். மட்டக்களப்பு ஆரையம்பதி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, ஆரையம்பதி சிறி இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியை முடித்தபின் காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பயின்றார்.அந்த நாளைய கல்வித் தராதரக்(எஸ்.எஸ்.சி) கல்வியை கற்று முடித்தவர் லிகிதராக,உதவி அரசாங்க அதிபராக,உள்துறை உதவி செயலாளராகவும், சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி அவர்களின் செயலாளராகவும் பணி புரிந்தார். இவரின் படைப்புக்களை மலர், தினகரன், கல்கி, செங்கதிர், ஞானம், தாரகை, வீரகேசரி, சாளரம், வெளிச்சம், தொண்டன்,     எனப் பல அச்சு ஊடகங்களும், ஒலி/ஒளி  ஊடகங்களும் தாங்கி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.செங்கதிரின் வளர்ச்சியிலும் ஊக்குசக்தியாக இருந்திருக்கிறார். மனித நேயம் மிக்கவர்.எப்போது நான் தொலைபேசியில் அழைத்தாலும் அன்பாக பேசி என்னைக் கவர்வார்.ஆரம்பத்தில் 'மலர்' எனும் இலக்கிய சஞ்சிகையை நடத்தினார்.பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.இலக்கிய அனுபவம்,ஆளுமை மிக்கவர்.செ.யோகநாதனின் 'தோழமை என்றொரு சொல்' மலர் வெளியீடாகவே வெளிவந்தது.

தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் இவரது நேர்காணல் பார்த்தது ஞாபகம். மட்டக்களப்பு எழுத்தாளர்களை ஒன்று சேர்த்த பெருமையும் உண்டு. அமரர்.ரி.பாக்கியநாயகம் அவர்களின் மீது அபிமானம் கொண்டிருந்தார். மட்டக்களப்பு எழுத்தாளர் இணையத்தின் 2008இல் 'தமிழியல் விருது' பெற்றமை அவரின் தொடர்ச்சியான இலக்கிய வெளிப்பாட்டிற்கான உயர்விருதாக அமைந்தமை சிறப்பாகும். ஆரையம்பதி பல எழுத்தாளர்களை கண்டுள்ளது. நவம், ஆரையம்பதி. தங்கராசு, மலர்ச்செல்வன் எனப் பலரைக் குறிப்பிடலாம்.இப்படிப் பலரை உள்ளடக்கிய மக்கள் அன்புமணியின் மணிவிழாவை கொண்டாடிச் சிறப்பித்தனர். இவரின் நாடகங்களில் நமது பாதை, என் அண்ணா, சூழ்ச்சிவலை, திரைகடல், குகைக்கோயில், விண்ணுலகில் விபுலானந்தா, அமரவாழ்வு, ஆத்ம திருப்தி, நமது பாதை எனப் பல.. அவற்றுள் திரைகடல் தீபம் நாடகம் அவருக்குப் பரிசினைப்பெற்றுத் தந்த நாடகமாகும்.

இலங்கை நீதிஅமைச்சு சமாதான நீதவானாக்கி பெருமை சேர்த்தது. விஷ்வசேது இலக்கியவிருது டென்மார்க் பாலம் அமைப்பினரால் வழங்கி உலகளவில் பேசப்பட்ட எழுத்தாளர். மேலும், மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவை 'இலக்கியச்சுடர்'(2003) விருதினையும், காத்தான்குடி சமாதானப்பேரவை 'சமாதானக்காவலர்' பட்டத்தினையும் வழங்கிக் கௌரவித்தனர்.  கூடவே, தமிழ்மணி விருது(1992), ஆளுனர் விருது(2001), கலாபூஷணம் விருது(2002), எழுத்தியல் விருது எனப் பல விருதுகளும் சிறப்பாய் அமைந்தன எனலாம்.

நான் தொகுத்த இலக்கியப்பூக்கள் தொகுப்பிற்காக

     -தமிழ்மணி.சிவ.விவேகானந்த முதலியார் வாழ்க்கை வரலாறு
     -நூற்றியெட்டு நாவல்களை எழுதிய பவளசுந்தரத்தம்மா
     -அரையூர் அழகேசமுதலியார்
     -ஆரையூர் அமரன்

ஆகிய கட்டுரைகளத் தந்துதவினார். அக் கட்டுரைகள் நூலுக்குப் பெருமை சேர்த்த அதே வேளையில் அவரின் எழுத்தின் ஆளிமையையும் பார்க்கக் கிடைத்தது.

இவர் இல்லத்தரசி(1989), வரலாற்றுச் சுவடுகள்(1992), ஒரு தந்தையின் கதை(1989), ஒரு மகளின் கதை(1995), தமிழ் இலக்கிய ஆய்வு(2007), எட்டுத்தொகை, பத்துப்பாட்டு(2007) பதினென்கீழ்க்கணக்கு(2007) நூல்களை வெளியிட்டுள்ளார். கூடவே, தங்கேஸ்வரி கதிர்காமர், எஸ்.பிரான்ஸிஸ், ஆரையூர்.இளவல், வித்துவான்.ச.பூபாலபிள்ளை, வித்துவான்.அ.சரவணமுத்தன் ஆகியோரின் வெளிவருவற்கு உதவியும் உள்ளார்.

ஈழத்து எழுத்தாளர் பட்டியலை தொகுக்க முற்பட்டபோது விருப்பமாக தனது தகவலைத் தந்துவியது இன்றும் மறக்கமுடியாது. யுத்த சூழலிலும் எனது வேண்டுகொளை ஏற்று உதவியது வாழ்நாளில் நினைத்தபடியே இருக்கத் தோன்றும். இல்லை என்பது நிஜம். அதுவே யதார்த்தம். 78 வயதிலும் இலக்கியப்பணியை செவ்வனே செய்த மனிதன் விபத்தில் சிக்கியதும், பின் மரணமானது செய்தியாயினும் அது பெரிய இழப்பாகும். அவரின் இலக்கியம் என்றும் நம்முடன் பேசிக்கொண்டே இருக்கும்

13/01/2014


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து... எழுத்தாளர் அன்புமணி

- எழுத்தாளர் அன்புமணி ஜனவரி 12, 2014 அன்று காலமானார். அவரது மறைவையொட்டி , விக்கிபீடியாவில் அவரைப் பற்றி வெளிவந்த குறிப்புகளை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்-

எழுத்தாளர் அன்புமணி (இராசையா நாகலிங்கம்) அன்புமணி என அறியப்படும் இராசையா நாகலிங்கம் (மார்ச் 6, 1935 - சனவரி 12, 2014) ஈழத்து எழுத்தாளரும், கல்விமானும், ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியும், நாடகக் கலைஞருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம், வைரமுத்து இராசையா, பொன்னர் தங்கப்பிள்ளை ஆகியோரின் புதல்வராவார். மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியையும், இடைநிலை, உயர்தரக்கல்வியை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பெற்றார். இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியான இவரின் மனைவி பார்வதி நாகலிங்கம். இவர் இளைப்பாறிய ஆசிரியை. பிள்ளைகள்: அன்புச்செல்வன், அருட்செல்வன், சிவச்செல்வன், தீரச்செல்வன, பொன்மனச் செல்வன், பூவண்ண செல்வன்.

தொழில் துறைகள்
1952 இல் கல்வித்திணைக்கள எழுத்தராகத் தனது பணியை ஆரம்பித்து 1981ல் இலங்கை நிர்வாக சேவைப் போட்டி சோதனையில் சித்தியடைந்து, களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட். கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து ஆளுநர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேசுவரி கதிராமனின் செயலாளராக பணியாற்றினார்.

இலக்கியத்துறை
இராசையா நாகலிங்கம் ‘அன்புமணி’ எனும் புனைப்பெயரிலே அறிமுகமானவர். இவரின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் கல்கி இதழில் 1954 இல் பிரசுரமானது. அன்றிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் மற்றும் இலங்கை வானொலி போன்றவற்றிலும் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன. அன்புமணி, அருள்மணி, தமிழ்மணி ஆகிய பெயர்களிலும் எழுதியுள்ளார்.

வெளியிட்ட நூல்கள்

இவரின் ஏழு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இல்லத்தரசி (சிறுகதை) 1980 - உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை) 1992 - உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
ஒரு தந்தையின் கதை (நாவல்) 1989 - உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
ஒரு மகளின் கதை (குறுநாவல்) 1995 - அன்பு வெளியீடு
தமிழ் இலக்கிய ஆய்வு 2007 - சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
எட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்கள் 2007 - சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
பதினெண் கீழ்கணக்கு நூல்கள் 2007 - சென்னை, மணிமேகலைப் பிரசுரம்

அன்பு வெளியீட்டகம்
அன்புமணியின் இலக்கியப் பணியில் தன்னுடைய நூல்களை மாத்திரம் வெளியிடுவதில் கரிசனைக் காட்டாது பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், வெளியீட்டுக்கும் இவர் உதவியுள்ளார். இவரின் அன்பு வெளியீட்டகம் மூலம் வெளியிட்டுள்ள சில நூல்களின் விபரங்கள் வருமாறு:

மகோன் வரலாறு – தங்கேஸ்வரி
குள கோபடன் தரிசனம் - தங்கேஸ்வரி
நூறு வருட மட்டு நகர் அனுபவங்கள் - ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
மட்டக்களப்பில் ஒரு மாமனிதர் ஜோசெப்வாஸ் - ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
வாழ்க்கைச் சுவடுகள் (சுயசரிதம்) - ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
நீருபூத்த நெருப்பு (நாடகங்கள்)- ஆரையூர் இலவர்
கனடாவிலுள்ள ‘ரிப்னெக்ஸ்’ பதிப்பகத்தின் மூலமாக இலங்கையில் வரலாற்றுப் புகழ்பெற்ற பல முக்கிய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடுவதிலும் இவரின் பங்களிப்பு காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் கனடாவில் பதிப்பித்துள்ள சில நூல்களின் விபரம் வருமாறு:-

சீ. மந்தினி புராணம் - வித்துவான் ச. பூபாலலிங்கம்
மாமங்கேஸ்வர பதிகம் - வித்துவான் அ. சரவணமுத்தன்
சனிபுராணம் - வித்துவான் அ. சரவணமுத்தன்

மலர் இதழ்
இவர் 'மலர்' என்ற இலக்கிய இதழை 1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை வெளியிட்டார். ஈழத்து இதழியல் வரலாற்றில், 'மலர்' கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பல இளம் எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டிருக்கின்றது

நாடகப் பணி[தொகு]பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். அதே போல பாடசாலைக் காலத்தில் ஓரரங்க நாடகங்களிலும் இவர் நடித்துப் புகழ் பெற்றார். ஆரையம்பதியில் 1952ஆம் ஆண்டில் ‘மனோகரா’ எனும் பொது மேடை நாடகத்தின் முலம் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். ‘அமரவாழ்வு’, ‘ஏமாற்றம்’, 'பிடியுங்கள் கலப்பையை’ போன்ற ஓரரங்க நாடகங்கள் இவரால் தயாரித்து, நடித்து, மேடையேற்றப்பட்ட நாடகங்களாகும்.

1962ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ‘தரைகடல் தீபம்’ எனும் நாடகப் பிரதியாக்கத்திற்கு 'சாகித்தியமண்டலப்' பரிசு கிடைத்தது. பின்பு இந்நாடகம் பல இடங்களில் மேடையேற்றப்பட்டது. அதே போல இவரின் ‘சூழ்ச்சிவலை’ எனும் மேடை நாடகமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இலங்கை வானொலியில்
1962ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் அவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டு ‘நமது பாதை’ எனும் தொடர் நாடகம் 3 மாதங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகியது. அன்புமணி' ஒரு நாடக விமர்சகருமாவார். பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் பல நாடகப் போட்டிகளில் நடுவராகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கௌரவங்களும், விருதுகளும்
‘தமிழ்மணி’ - இந்து சமய விவகார அமைச்சு - 1992
வடக்கு, கிழக்கு ஆளுனர் விருது - 2001
‘கலாபூசணம்’ – 2002
'பல்கலை வித்தகர்' - சிந்தனைவட்டம் 2008
இவை தவிர பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட இலக்கியச் சங்கங்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தியும், கௌரவப் பட்டங்கள் வழங்கியும் கௌரவித்துள்ளன.

http://ta.wikipedia.org/s/3vb


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R