சிதனா - மலேசியா “ஏய்... என்னப்பா நீ..? இன்னக்கி இருக்கிறவங்க நாளைக்கி இருப்போமானு எந்த “கேரண்டி”யும் இல்ல...! இதுல என்ன சண்டையும் ... உயிர் போற வரைக்கும் மூஞ்சில முழிக்க மாட்டேங்கற பகையும்...? எதையும்...மனசுலேயே வச்சிருந்தாத்தானே மன்னிப்புன்னு ஒரு சங்கதிய வேற நடுவுல இழுத்து விட்டுக்கிட்டு அலையனும்....அத... அத... அப்பப்ப மறந்திருவோமே..” எப்போதோ, யாரிடமோ, எந்த சந்தர்ப்பத்திலோ.. சொன்னது, இப்படி ஒரு ரூபம் கொண்டு, எதிர்வரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். “எனக்கு நீங்க அண்ணன் மொறையா வேணும்..” எதிரே வந்து நின்று கொண்டு புன் முறுவல் பூக்கிறது அவன் விதி! “சொல்றது போல செய்யறது அவ்வளவு சுலபம் இல்லடா செல்லம்...” என்று அவன் மனதே எள்ளி நகையாட, வந்தவனை ஏறிட்டான்! இவனை வார்த்தெடுத்தபின், அதே அச்சில், பிரம்மன் அவனையும் வார்த்திருக்க வேண்டும்! எத்தனையோ ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கும் முகம்தான். புதியவன் ஒன்றும் இல்லை; பக்கத்து கம்பம்தான்! ஆனால், என்றுமில்லா திருநாளாக இன்று மட்டும் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? அதுவும் உறவு முறையெல்லாம் சொல்லிக்கொண்டு!

அதுவும் ஓட்டுக்குள் சுருங்கிப்போன நத்தையாய், தன் வாழ்க்கையை குசினிக்கு என்று தாரை வார்த்துக்கொண்ட அம்மாவின் முந்தானையையே பற்றிக் கொண்டு வளர்ந்தவன், யாரிடமும் அதிகமாய் பேச ஆசைப்படாதவன், சிறிய நட்பு வட்டத்தோடு தனது வயதுக்கே உரிய சிரிப்பும் பேச்சும் நின்று விட பிரயாசைப் படுபவன், முக்கியமாய் எந்த வம்புக்கும் போகாதவன். இவனிடம் ஏன்.... அந்தக் குடும்பத்து பையன் வலிய வந்து பேச ஆசைப்படுகிறான்?

“பெரியவங்க சண்டையும் மனஸ்தாபமும் பெரியவங்களோடு போகட்டுமே! சின்னப் பிள்ளைங்க.... அடுத்த தலைமுறை நாம... நமக்கு எதுக்கு அந்தப் பாவ மூட்டை? அதை இறக்கி வச்சிட்டு சொந்த பந்தமா இருந்துட்டுப் போலாமே!”

அட! இவனை விட இன்னமும் சீரிய சிந்தனைக்காரனாக இருக்கிறானே.... சின்னவன்!

ஆனால், சீரிய சிந்தனை என்பது வேறு, மன்னிக்கும் மனசு என்பது வேறுதானே! தலைவலியும்  காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது மாதிரி!

பிரச்சனை இப்போது அதுவல்ல!

இவ்வளவு காலமும் இல்லாத அன்பும் கரிசனமும் திடீரென்று இப்போது ஏன்?

ஒருவேளை, தகப்பன் அற்ற பிள்ளையாகவே வளர்ந்தவன், இப்போது தாயையும் இழந்த பிள்ளையாய் நிற்கிறானே என்பதால் ஏற்பட்ட அனுதாபமா? அதனால்தான் இந்த தூதா?

“ஏன் எதுவுமே பேசமாட்டேன்கிறீங்க? எங்கிட்ட, எப்பவும் பேசவே கூடாதுன்னு ஏதாவது முடிவா? ஆனா..! நாங்க ஒரு தப்பும் பண்ணலயே..”

“ஊருக்கு மத்தியில் ஓடுன ஆறா எங்கம்மாவ நெனைச்சி, எவனோ அள்ளி குடிச்சிட்டு, அந்த ஆத்துலேயே துப்புன எச்சி நான்! எங்கிட்ட உனக்கென்ன பேச்சு வேண்டிக் கெடக்கு? வழியில போறவன கூப்பிட்டு வச்சி சீண்ட வந்தியா...?”

அவனுள் பதுங்கிக் கிடந்த விஷம் உச்சந்தலையில் “சுரீர்” என்று ஏறியதுதான்! நாக்கின் வழி கீழிறங்கி எதிராளியைத் தாக்கவும் தயார்தான்! ஆனால், தோளில் கூட கையைப் போடாமல், கக்கத்தில் வந்து ஒண்டிக் கொள்ள  நினைக்கும் ஒருவனை எப்படி புண்படுத்துவது?

“வேணாம் ... நீங்கள்லாம் என்கிட்ட பேச வேணாம்.... இத்தனை வருஷமா எப்படி இருந்தீங்களோ, அப்படியே தூரமா இருந்துடுங்க.. என்கிட்ட வரவேணாம்..!”

“இல்ல ....நீங்கதானே சொன்னீங்க...இன்னைக்கி இருக்கிறவன், நாளைக்கி இருக்கிறது நிச்சியமில்லாதப்ப ... எதுக்கு சண்டையும் பகையும்னு..?”

“அது... அது.......”

பேச முடியாமல் தொண்டை அடைத்தது..! பிறந்ததிலிருந்து, வாழ்ந்திருந்த வாழ்க்கையிலிருந்து சட்டென்று எப்படி தன்னை மீட்டுக் கொள்வது.. அது ஏழ்மையான வாழ்வாயிருந்தாலும் சரி, அல்லது அவமானப்பட்டு கூனி குறுகி போன இழி நிலையாகவே இருந்த போதிலும் சரி! பதினைந்து வயதிருக்குமா, அந்த உண்மை தெரிய வந்த போது? ஆமாம்! அவ்வளவுதான் இருக்கும் அவனுக்கு வயசு அப்போது! இரண்டாவது அண்ணன் கல்யாணம் முடிந்து வீட்டிற்கு புது அண்ணி வந்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
அது கொஞ்சம் தகராற்றில் நடந்து முடிந்த கல்யாணம்! அந்த வீட்டுப் பெண் வேண்டாம் என்று கிழவனும் கிழவியும் முரண்டு பண்ண, ‘எந்த வீட்டுப் பொண்ணா இருந்தா என்னா, என் மனசுக்கு பிடிச்சிருக்கு, நான் கட்டிக்கிறேன்”.. என்று மகனும் மல்யுத்தம் பண்ணியதில் மகன் ஜெயித்து, நடந்த கல்யாணம் அது! தன்னை மருமகளாக்கிக் கொள்வதை மறுத்தார்களே என்ற காட்டம் அவளுள்ளும் இருந்திருக்கலாம். தாத்தாவை “அப்பா” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தவனை கைநீட்டி அழைத்தாள்! புதிதாய் வந்த அண்ணி, தன்னிடம் இத்தனை அன்பாய் இருக்கிறாளே என்று, சிரித்த முகமாய் வந்தவன் நெஞ்சில் அவள்தான் முதலில் நெருப்பை அள்ளிக் கொட்டினாள்!

“பெரிய பையந்தான நீ? யார எப்படி கூப்பிடறதுன்னு தெரியாதா? தாத்தாவ, யாராவது அப்பான்னு கூப்பிடுவாங்களா? மாமாவ போயி அண்ணன்னு கூப்பிடாதே...! முக்கியமா என்னை அண்ணின்னு சொல்லாதே... மாமன் பொண்டாட்டி அத்தை..!”

வெளிறிப் போய் பார்த்த பையனிடம்.. இன்னமும் ஓதினாள்!

“உங்க பெரியக்கா இருக்காங்களே.. அவங்க உனக்கு அக்கா இல்ல! அவங்கத்தான் உன்ன பெத்த அம்மா! உன் அப்பா யாருனு அவங்கக்கிட்ட போயி கேளு! எனக்குத் தெரியுந்தான் யாரு உங்கப்பானு! ஆனா... அத நான் சொல்லக்கூடாது! உங்கம்மா சொல்லனும்.. அதான் மொற! போ... போய் கேளு... போ!”

இதில் அவளுக்கென்ன சந்தோஷம் என்றால், ஒன்றுமில்லைதான்! சும்மா.. மன அரிப்பு..! சொறிந்துக் கொண்டாள்! அவ்வளவே! ஆனால், அந்த இரண்டும் கெட்டான் வயதில் இந்த பிள்ளையின் மன நிலையின் துடிப்பு?  அந்த பாதிப்பு? இரண்டு நாளாய், மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு பேச மாட்டேன், சாப்பிட மாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருந்த பிள்ளையின் முக வாட்டம் எதனால் என்பதே அறியாமல், பெற்றவள் திண்டாடிக் கொண்டிருக்க, அந்த சிறுவன், இனியும் தாங்க முடியாது என்பவனாய் நேரே தன் தாத்தாவிடம் போய் கேட்டான்..

”தாத்தா எப்படி அப்பா ஆகலாம்..?”

மொத்த குடும்பமும் ஆடித்தான் போனது..! எத்தனையோ அடி வாங்கிய கிழவனுக்கும் கிழவிக்குமே வாயடைத்துப் போனது.
பெற்றவள்தான், இன்னமும் கூட ரத்தம் கசியும் தன் மனப் புண்ணின் வலியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மகனை அழைத்து விவரித்தாள்! ஏதோ, சொல்ல விரும்பாத காரணத்தால், அவன் அப்பாவுக்கு தன்னையும், தன் பிள்ளையான அவனையும் பிடிக்காமல் போய்விட்ட காரணத்தால்தான், தாத்தா பாட்டி வீட்டிலேயே வளர வேண்டிய சூழ்நிலை, அவர்களை அம்மா அப்பா என்று கூப்பிட வேண்டிய காலக் கொடுமை என்று விளக்கினாள். சமாதானம் ஆகவே இல்லை, அந்த பிஞ்சு மனது! மற்ற யாரை கேட்டாலும், அதைப்பற்றி ஒற்றை வார்த்தை பேசவே விரும்பாமல் முகம் திருப்பிக் கொண்டு போக, பக்கத்து வீட்டு “சுருட்டு தாத்தா” தான் நடந்த கதையைச் சொன்னார். டியுசனுக்குப் போக.. தொங்கிப் போன முகத்துடன் பஸ்ஸுக்குக் காத்திருந்தவனுக்கு, சமாதானமாக இருக்கும் என்று நினைத்துச் சொன்னாரோ, அல்லது உண்மையை எத்தனை நாளைக்கு மூடி மறைப்பது என்று நினைத்து சொன்னாரோ தெரியாது, ஆனால், உண்மை விளம்பி என்னவோ அவர்தான்!

“ஏலே.. வெடப்பயலே...எதுக்குடா... வீட்டுல இத்தன ஆர்ப்பாட்டம் பண்றவன்? உங்கம்மாக்காரி மாதிரி ஒரு பொம்பள கெடைக்க மாட்டாடா லேசுல! அவ இஷ்டப்பட்டவனுக்குத்தான் உன்னைப் பெத்தா! ஆனா, அந்த பச்ச மண்ணு மனசுல இருந்த நெனப்பு மாதிரி, அந்த பாவி மவனுக்கு இல்லியே! உன்னை வயித்துலக் குடுத்துட்டு, உங்கம்மாவ ஏமாத்தப் பார்த்தான் அவன்னு தெரிஞ்சதுமே, நியாயம் கேட்டுச்சு, கம்பத்து சனமே “ஆத்து தண்ணி நாலு பேருக்கும் பொதுவானதுதான... நாலு பேரு அள்ளி குடிச்ச மாதிரி நானும் குடிச்சேன்” னுட்டான் பாவி! உன் தாத்தா பாட்டியில இருந்து, மாமன்காரனுங்க வரை, எத்தனையோ பேரு தலை கீழா நின்னு பார்த்துட்டாங்க... அவளுக்கும் ஒரு நல்ல காரியம் பண்ணி வச்சிடனும்னு! ஹூஹூம்..! விரிச்ச முந்தானை ஒருத்தனுக்குத்தான்னு உறுதியா நின்னுட்டா!
அப்பேர் கொண்ட நல்லவ வயித்துல பிள்ளையா வந்து பொறந்துட்டு எதுக்குடா அந்த குடி கெடுத்தவன பத்தி கேட்டு, இருக்கிற மனுச மக்க உயிர வாங்கிற? போடா..! போயி ஒழுங்கா படிச்சி ஆத்தாக்காரிக்கு ஒத்தாசையா இருக்கப் பாரு! ஒன்னக் கொண்டாவது அவ மனசு குளுந்துட்டுப் போறா...!”

அம்மா எந்த அளவு ஏமாற்றப் பட்டாள் என்று அறிந்தபோது அதிர்ந்து போனது அவன் மனசு! களி மண்ணாய் கிடந்த அந்த பிஞ்சு, அம்மா மடியில் கரைந்துதான் போனது. சுய பச்சாதாபத்தால் நெஞ்சுக் கூட்டுக்குள்ளேயே நொந்துப் போய் கிடந்தவள், திடீர் நெஞ்சு வலியால், இரண்டு வருஷத்துக்கு முன்னால் காலமாகும் வரை, அவனுக்கு எல்லாமே அம்மாதான்! அவன் அம்மாவும் கூட, உண்மையான காதலியாக மட்டுமல்லாது, நல்லா தாயாகவும் இருந்தாள்! யாரையும் மனம் நோக பேசக்கூடாது, புண்படுத்தக்கூடாது; முக்கியமாக தெரிந்தே தவறு செய்யக்கூடாது என்று தன் வாழ்வின் அனுபவங்களை, மகனுக்கு அன்பு பாடமாகப் போதித்து விட்டுத்தான் போனாள்! அப்படி வளர்ந்த பிள்ளையால், எளிதில் யாரையும் புண்படுத்த முடியுமா;  என்னதான் தாங்க முடியாத கோபம் கொப்பளித்து நின்றாலும்?! ஆனால், எதிரில் நிற்பவன் பாம்பு இல்லையே! இவனது பூஞ்சை மனதை, இன்னும் கொஞ்சம் பலவீனப்படுத்த வந்த அன்பு சகோதரன் ஆயிற்றே!

“அண்ணே..!”

“ஆ..! ஆங்..?”

தட்டுத் தடுமாறி நிதானத்துக்கு வந்தான்!

“எ... என்ன..?”

“இன்னைக்கி இருக்கிறவங்க.. நாளைக்கி இருப்பாங்கன்னு நிச்சியமா சொல்ல முடியாது....”

“என்ன சொல்ற நீ...”

“இப்பவோ அப்பவோன்னு கெடக்கிறாங்க..! மன்னிக்க வேண்டியவங்க யாரும் இப்ப உயிரோட இல்ல! நீங்களாவது ... ஒரு தடவ வந்து மொகத்தப் பார்த்துட்டு, மனப்பூர்வமா மன்னிச்சிட்டதா ஒரு வார்த்த சொல்லிடுங்களேன்...!”

“யார?”

“நம்ப அப்பாவ..!”    

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R