சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -வட மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியிருக்கின்றன. செப்தெம்பர் 21 இல் தேர்தல் நடைபெற இருக்கிறது. வடக்கில் ஒரு நியாயமான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே மக்களாட்சி முறைமையில் நம்பிக்கையுள்ள மக்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அங்கிருந்து வரும் செய்திகள் ஒரு நியாயமான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெறும் சாத்தியத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. இது பல விதத்திலும் எதிர்பார்க்கப்பட்டதே. மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கட்சியோடு மட்டும் அல்லாமல் சிங்கள இராணுவத்தோடும் போட்டியிட வேண்டியுள்ளது. சிங்கள இராணுவம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இன்னொரு அரசியல் சக்தியாக களம் இறங்கியுள்ளது. பிந்திக் கிடைத்த செய்தியின் படி கிளிநொச்சியில் ததேகூ இன் ஆதரவாளர்களுக்கு இராணுவம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் கட்சி சார்ந்த அரசியல் செயற்பாடுகளுக்கும் இராணுவத்தினர் தடைகளைப் போட்டு  வருகின்றனர் என ததேகூ இன் நாடாளுமன்ற   உறுப்பினர்  சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக ததேகூ சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற குருகுலராசா, பசுபதிப்பிள்ளை போன்றோரின் வெற்றிவாய்ப்புக்கள் உறுதியாகியுள்ள நிலையில் அவர்களுக்காகப் பரப்புரை  செய்கின்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்களை இராணுவம் தடுக்கின்றது.

அதது போல் இராணுவம் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை நிர்ப்பந்தித்து வருகின்றது. 2011 இல் நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலின் போது ததேகூ வேட்பாளர், ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. முதன்முறையாக அளவெட்டியில் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கலந்துரையாடலின் போது 50 க்கும் மேற்பட்ட இராணுவ சீருடை தரித்தவர்கள் ஏ.கே. 47 துப்பாக்கிகள், மண்வெட்டிப் பிடிகள், இரும்புக் கம்பிகள் சகிதம் தாக்குதல் நடத்தினார்கள். அது தொடர்பாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு பற்றி இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  கிளிநொச்சியில் ததேகூ க்கு ஆதரவாக  பரப்புரையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டார்கள். கிளிநொச்சியில் கூட்டமைப்பின் கூட்டங்களுக்குச் செல்லவிடாமல் மக்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினார்கள். கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளும் இடங்களைச் சுற்றி அளவுக்கு அதிகமாக வழமைக்கு மாறாக இராணுவத்தினரும் காவல்துறையினரும்  குவிக்கப்பட்டார்கள்.

வல்வெட்டித்துறையில் கூட்டணி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தேர்தல் அலுவலகம் தாக்கி நொருக்கப்பட்டது.  தென்மராட்சி மிருசுவில், தவசிக்குளத்தில் கூட்டமைப்பு ஆதரவாளர் கந்தையா அசோகலிங்கம் என்பவரின் வீட்டின் முன் மலர்வளையம் வைக்கப்பட்டு, மதிலில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்  மீது கழிவு ஒயில் ஊற்றப்பட்டது. வலி.மேற்கில் கூட்டணி வேட்பாளரான திருமதி நாகரஞ்சினி அய்ங்கரன் என்பவரின் வீட்டின் மீது கற்களையும் கண்ணாடிப் போத்தல்களையும் வீசித் தாக்கப்பட்டது.  அவரது வீட்டு மதிலில் ஒட்டப் பட்டிருந்த சுவரொட்டிகள்  மீது கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது. சில ததேகூ வேட்பாளர்களின் வீட்டு முற்றத்தில் மர்ம நபர்கள் தார் அடைத்த பைகளை வீசியும் சாராயப் போத்தல்கள்  மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டன. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இரண்டு வேட்பாளரின் வீட்டில்  நாயின் துண்டிக்கப்பட்ட தலை வேட்பாளரின் வீட்டுப் படலையில்  செருகி வைக்கப்பட்டது. அதே போல் மலக்கழிவு நிறைந்த பரலை வீசுவது, வீட்டு வாசலில் மலர் வளையம் வைப்பது,  சுவரொட்டிகளிலும் வீட்டு மதிலிலும் கழிவுகளையும் கழிவு எண்ணெய்யும் ஊற்றி அலங்கோலப்படுத்துவது போன்ற திருவிளையாடல்கள் அரங்கேறின.

இப்படியான தாக்குதல்கள் அனைத்துமே அரசின் அனுசரணையுடனும் ஆசீர்வாதத்துடனும்  இடம்பெற்றன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என 'கபே' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்திருந்தார். இப்போது மீண்டும்  இப்படியான கோழைத்தனமான, அநாகரிகமான, அருவருகத்தக்க தாக்குதல் கலாசாரம்  வட மாகாண சபைத் தேர்தலில் ஆளும்கட்சியின் கைக்கூலிகளால் அரங்கேற்றப்படுகின்றன.  ததேகூ இன் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அய்ங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளதுடன், வீட்டு வாசலின் முன்பாக பூசணிக்காய் வெட்டி வைத்துள்ளார்கள். இந்தச் சம்பவம் கடந்த ஓகஸ்ட் 30 நள்ளிரவு யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் நடந்தது.  ததேகூ இன்  தேர்தல் பரப்புரைகளை முடக்குவது, வேட்பாளர்களையும்  ஆதரவாளர்களையும் பயமுறுத்துவது, வாக்காளர்களை அச்சுறுத்துவது  போன்ற உளவியல்   போரை  நடத்துவது  அவர்களின்  நோக்கமாக இருக்கிறது.

ததேகூ மட்டுமல்ல வேறு எதிர்க்கட்சி வேட்பாளர்களும் தாக்கப்படுகிறார்கள். அய்க்கிய  தேசியக் கட்சியின் வடமாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனின் காரைநகரில் உள்ள அலுவலகம் மீது  கழிவு ஒயில் வீசி தாக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 26 ஆம் நாள்  இந்த வேட்பாளரின் காரைநகர் தேர்தல் அலுவலகம் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரவி கருணாநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அது அன்று இரவு இனந்தெரியாதோரால் சிறு தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. மீண்டும் அடுத்த நாள்  இரவு கழிவு ஒயில் வீசி தாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 17 ஆம் நாள்  நெடுந்தீவுக்கு தேர்தல் பரப்புரை செய்யச் சென்ற ததேகூ இன் ஆதரவாளர்கள்  இபிடிபி கும்பலினால் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதன் விளைவாக சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். இந்தத் தாக்குதலுக்கு   நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமை தாங்கினார்கள். பிரதேச சபைக்குச் சொந்தமான வண்டிகள் இத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இபிடிபி வேட்பாளர் ஒருவரின் தந்தையார் இந்தத் தாக்குதலின் போது கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இருக்கிறார். வழக்கம் போல இபிடிபி  இதனை மறுத்துள்ளது. கொலை, கொள்ளை, அடிதடியில் ஈடுபடும் இபிடிபி உறுப்பினர்கள் பிடிபடும் போது அவர்களுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்றோ அல்லது பிடிபட்டவர்கள் இபிடிபி இன் முன்னாள் உறுப்பினர்கள் என்றோ சொல்லி இபிடிபி தப்பித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

ததேகூ இன் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு சிங்கள இராணுவம் அவர்களது வீடுகளுக்குச் சென்று  அவர்களை மிரட்டியிருந்தது.  அவர்களது அரசியல் நடவடிக்கைகள் பற்றிக் கேட்டிருந்தது. இதில் அனந்தி எழிலனும் ஒருவர். இதே பாணியில் மன்னாரில் ததேகூ  இன் வேட்பாளர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் மிரட்டப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளுக்குச் சென்ற புலனாய்வுப் பிரிவினர்  அவர்கள் பற்றியும் அவர்களது குடும்பம் பற்றியும் தகவல் திரட்டியுள்ளனர். இராணுவம் சில வேட்பாளர்கள் சார்பாக நேரடியாகத் தேர்தல் பரப்புரை செய்துவருகிறது. இராணுவம் யாழ்ப்பாணத்தில் வாக்காளர்களுக்கு வீட்டு கட்டுமானப் பொருட்கள் வழங்கும் பெரிய பெரிய விளம்பரத்தட்டிகளை வைத்திருந்தது. அதனை அகற்றப் போன தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இராணுவத்தினால் மிரட்டப்பட்டனர். இராணுவத்தின் இப்படியான தலையீடுகள், அத்துமீறல்கள் சனநாயக விழுமியங்களுக்கு எதிரானது. மக்களது பேச்சுச் சுதந்திரம், வாக்களிக்கும் சுதந்திரத்துக்கு விரோதமானது. சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டின் கீழ்  தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்பட வேண்டும்.

சாவகச்சேரியில் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அங்கஜனது தந்தை இராமநாதன் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார். பெரிய போராட்டத்தின் பின்னர்  காலம் தாழ்த்தி அவரைக்  காவல்துறை கைது செய்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் போதும் இராமநாதன்  மீது இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே  இராமநாதன்  யாழ்ப்பாணத்தில் வைத்து ததேகூ இன் வேட்பாளர் தம்பிராசாவின் வாகனத்தை அடித்து உடைத்து அவரையும் தாக்கியுள்ளார். இராமநாதனை கைது செய்யுமாறு கோரி  யாழ்ப்பாண செயலகத்தின் முன்  சத்தியாக்கிரகம் இருந்த தம்பிராசாவை காவல்துறை கண்டு கொள்ளவே இல்லை.  இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மகிந்த இராசபக்சேயின் சர்வாதிகார ஆட்சியில்  காவல்துறை அரசின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.  

வடபகுதியில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டமை நீதியான தேர்தலுக்கு பாரதூரமான அச்சுறுத்தல் எனவும் இரண்டு சாதாரண நபர்கள் துப்பாக்கி எடுத்து மேற்கொண்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் மிகவும் ஆபத்தான நிலைமை என்றும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில்  வேட்பாளர் ஒருவர் துப்பாக்கி காண்பிக்கப்பட்டு மிரட்டப்பட்டமை, சாவகச்சேரியில் வேட்பாளர் ஒருவரின் இரண்டு ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமை ஆகிய இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த  சம்பவங்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மனங்களில் பயப் பீதியை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத  செயல்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க  இப்படியான அடாவடித்தனங்கள், பயமுறுத்தல்கள்,  தாக்குதல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இன்னொரு புறம் அரசு பட்டதாரிகளுக்கு வேலை, முன்னாள் பெண் போராளிகள் (45) இராணுவத்தில் சேர்ப்பு 24 மணிநேர மின்சார இணைப்பு, கிளிநொச்சி மட்டும் யாழ்தேவி தொடர்வண்டி  வருகை போன்ற "தானங்களை"  செய்து வருகிறது. இது மாட்டுக்கு புண்ணாக்குக் காட்டுவது போன்றது. தமிழ்மக்கள் இதற்கெல்லாம் பழக்கப்பட்டு விட்டார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. பயமுறுத்தி அடிபணிய வைக்கவும்  முடியாது.

சென்ற தேர்தல்களைவிட தமிழ் வாக்காளர்கள் மாகாண சபைத் தேர்தலில் தங்கள் வாக்குகளைத் தவறாது பயன்படுத்த வேண்டும். ததேகூ க்கு மாபெரும் வெற்றியை - மூன்றில் இரண்டு பங்கு இருக்கைகளை - ஈட்டிக் கொடுப்பதன் மூலம் பன்னாட்டு சமூகத்துக்கு உறைப்பான செய்தியைச் சொல்லலாம். குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, அய்க்கிய இராச்சியம், அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நல்ல செய்தியைச் சொல்லலாம்.

ததேகூ இன் அமோக வெற்றி வடக்கையும் கிழக்கையும் துரிதகெதியில் சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல், நில அபகரிப்பு போன்ற இன சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ள மகிந்த இராசபக்சேக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அவரது சிங்கள - பவுத்த  பேரினவாத அரசின் முகமூடியைக் கிழித்து அவரது உண்மைத் தோற்றத்தைக்  வெளிக்காட்ட  உதவ வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை புறக்கணியுங்கள் என்று மாரித் தவக்கைகள் போல் கத்தும் மக்கள் தேசிய முன்னணியின் முகத்திலும் கரி பூச வேண்டும். இலங்கைக்கு ஒரு வார காலம் வருகை தந்த அய்நா மனிதவுரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை மகிந்த அரசின் பொய்ப் பரப்புரைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

வடக்கில் வசந்தம் வீசுகிறது, கோடி கோடியாக செலவழித்து  வீதிகள், பாலங்கள் கட்டியிருக்கிறோம்,  இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தியுள்ளோம், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இப்போது தமிழ் மக்கள் நிம்மதியாக வாழுகிறார்கள் என்ற மகிந்த இராசபக்சேயின் பரப்புரையை நவநீதம் பிள்ளை தவிடுபொடி ஆக்கியுள்ளார்:

இலங்கையின் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் சுமுகமான சனநாயக சூழலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்விடயங்களிலிருந்து தூரச் சென்று சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடுகளும் சமிக்ஞைகளுமே காணப்படுகின்றன.

இறுதிப் போரில்  பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள ரீதியான முன்னேற்றங்களை இன்னும் அடையவில்லை. இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் உள ரீதியான முன்னேற்றம் காணப்படவில்லை. பன்னாட்டு குற்றச்சாட்டுகள் குறித்த உள்ளக விசாரணையில் உண்மைத்தன்மை இல்லை. போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை இன்றேல்  பன்னாட்டு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை.  பள்ளிவாசல், தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளமை குறித்து உரிய விசாரணை அவசியம். அரசியல் கைதிகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை.

செப்தெம்பர் 21 தமிழ்மக்கள் சிங்கள - புவத்த  பேரினவாதி மகிந்த இராசபக்சே அவர்களோடு கணக்குத் தீர்க்கும் நாள்! செப்தெம்பர் 21 இல் தமிழ்மக்கள் வழங்கப் போகும்  வரலாற்றுப் புகழ்மிக்க தீர்ப்புக்குப்  பன்னாட்டு சமூகம் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறது!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R