க.நா.சு- வெங்கட் சாமிநாதன் -ஆனால் அந்த நாட்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் நிறைந்த நாட்கள். க.நா.சுவின் எழுத்துக்களை தமிழ் பத்திரிகைகளிலோ ஆங்கிலப் பத்திரிகைகளிலோ பார்க்கும் போது நான் அடைந்த உற்சாகம்  சொல்லித்தீராது. அவர் எழுத்து மாத்திரம் அல்ல. தில்லியில் எனக்குப் பார்க்கக் கிடைத்து வந்த நாடகம், சினிமா, நாட்டிய நிகழ்ச்சிகள். மற்ற மொழிக்காரர்கள் பங்கு கொள்ளும் கருத்தரங்குகள் எல்லாம் தமிழை ஆக்கிரமித்திருந்த வெகுஜன கலாச்சாரத்தை நிராகரிப்பதாகவும், இதற்கு எதிரான க.நா.சு. வின் எழுத்தையும் குரலையுமே எதிரொலிப்பதாகவும் இருந்தது. அதை நான் ஒவ்வொரு கணமும் அனுபவித்து வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். சுற்றிலும் கவிந்திருக்கும் இருட்டிலிருந்து வெளிச்சத்தில் கால் வைத்து முன் செல்லும் அனுபவம் அது. மிக முக்கியமான காலகட்டத்தில், தமிழ் இலக்கியம் ஒரு புதிய பாதையில் பயணிப்பதான உணர்வு. இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல, பரவலாக, என்னைப் போல தனித் தனி நபர்களாக தமிழ் நாட்டில் பல இடங்களிலிருந்தும் வெளித்தெரிவதையும் காணமுடிந்தது.

க.நா.சு. வின் இந்த எதிர்ப்புக்குரல், விமரிசனக் குரல், QUEST, THOUGHT, போன்ற வார, அல்லது இருமாத பத்திரிகைகளில் தான் ஆரம்பத்தில் வெளிவந்தன. இவற்றோடு TRIVENI என்னும் மாதப் பத்திரிகையிலும் சாகித்ய அகாடமியின் Indian Literature என்னும் மாதப் பத்திரிகையிலும் அவர் கட்டுரைகளைப் பார்த்திருக்கிறேன். இவை எல்லாம் ஒன்றும் ஒரு பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கிவிடும் சக்தியுடைய வெகுஜனப் பத்திரிகைகள் அல்ல. வாரப் பத்திரிகையான THOUGHT மாத்திரம் ஒரு அரசியல் பத்திரிகையானாலும் நிறைய பக்கங்களை சினிமா, கலை, இலக்கியம் ஆகிய துறைகளின் விமர்சனத்துக்கும் ஒதுக்கியது. மற்றவற்றின் தாக்கத்தைப் பற்றி எனக்குச் சொல்லத் தெரிய வில்லை. ஆனால் THOUGT என்ற வாரப் பத்திரிகையில் வெளிவந்த அவரது கட்டுரைகள் மிகுந்த பாதிப்பைத் தமிழ் நாட்டில் ஏற்படுத்தின. குடும்பத்துக்குள் அடங்கியிருக்க வேண்டிய விஷயங்கள் தெருவுக்கு வந்துவிட்டால் அவமானமும் கையாலாகாத ஆத்திரமும் பீறிட்டு வந்து விடுவதில்லையா? அப்படித்தான், தமிழ் நாட்டுக்குள் தமிழில் ஒரு சில அதிகம் விற்பனையாகாத பத்திரிகைகளில் தமிழ் இலக்கியப் பிரபலங்கள் பற்றி வெளிவரும் பாதகமான அபிப்ராயங்களைப் பற்றிக் கவலைப் படாதவர்கள், ஒரு சில ஆயிரங்கள் விற்பனையாகும் ஆங்கில வாரப் பத்திரிகையில் அது பேசப்பட்டால் குய்யோ முறையோ என்று பிரலாபிக்கத் தொடங்கிவிடுவதை நான் வேடிக்கையுடன் கவனித்து வந்தேன். வீட்டு அசிங்கங்கள் வீட்டோடு இருக்க வேண்டும். வெளிலே பேசலாமா? கூடாதே? முற்போக்குகளுக்கு பதில் தயாராக இருந்தது. THOUGHT, QUEST எல்லாம் அமெரிக்க, சிஐஏ ஏஜெண்ட் என்று உடனே கண்டுபிடித்தார்கள். தீர்ந்தது பிரசினை.

க.நா.சு. வும் இலக்கிய வட்டம் என்று ஒரு தனி பத்திரிகை தொடங்கினார். சரஸ்வதி பத்திரிகை யில் தொடங்கியது எழுத்திலும் இலக்கிய வட்டத்திலும் தொடர்ந்தது. மிக ஆச்சரியமும் மகிழ்வும் தரும் ஒரு விளைவு, அன்று வரை வெளித்தெரியாத, எழுதுவதற்கு வாய்ப்பில்லாத, ஒரு புதிய தலைமுறை, புதிய எழுச்சியுடன், பார்வையுடன் எழுந்தது. தமிழ் எழுத்தில், கவிதை, விமர்சனம் , நாவல், சிறுகதை என பல இலக்கிய வடிவங்களிலும் ஒரு புதிய தலைமுறை, பெரும் கூட்டமாக என்று தான் சொல்ல வேண்டும், தெரிய வந்தனர். க.நா.சுவும் அவரைத் தொடர்ந்து சி.சு. செல்லப்பாவும் பின்னர் அவர்களைத் தொடர்ந்து இன்னும் பலரும் இப்புதிய குரலை எழுப்பாதிருந்தால், இது சாத்தியப் பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். ஒரு சிறு வட்டத்துக்குள்ளாவது விமர்சனம் என்று தமிழுக்கு பழக்கமில்லாத ஒரு புது துறை வேர்கொண்டது. அதன் முதல் விதை க.நா.சு விதைத்தது தான். அந்த முதல் நாற்றங்காலுக்கு  சொந்தக் காரர்கள், முதன்மையாக க.நா.சு.வும் சி.சு.செல்லாப்பாவும் தான். தங்கள் படைப்பு ஈடுபாட்டைச் சற்று ஒதுக்கி, சக எழுத்தாளர்களின் பகையையும் பொருட்படுத்தாது, விமர்சனத்தில் ஈடு பட்டது, “நமக்கு ஏன் வம்பு?” என்னும் பாரம்பரிய தமிழ் மரபார்ந்த சிந்தனைக்கு எதிரான செயல் இது. எனக்குத் தெரிந்து இரண்டாயிரம் வருஷ நீட்சி கொண்ட ஒரு மரபுக்கு எதிரான செயல் இது. இதை ஒப்புக்கொள்ளாதவர்கள், சங்கப் பாடல்களின் கவித்வ நயத்தைப் பற்றி அல்லது கம்பனின் பாடல்களின் கவித்வத்தைப் பற்றி, இதன் நயம் இதைவிடக் குறைந்தது, அல்லது மேலானது என்ற தராதரம் பற்றி யாரும் பேசியிருக் கிறார்களா என்று சுட்டிக் காட்டலாம். விருத்தியுரைத்திருக்கலாம் வியாக்கியானங்கள் செய்திருக்கலாம். ஆனால் எதன் கவித்வ வெற்றி அல்லது தோல்வி பற்றிப் பேசியிருக்கிறார்களா?  க.நா.சு. அன்று நாவலில் மூன்று பேர்தான், சிறுகதையில் ஒரு எட்டுப் பேர்தான் வெற்றிபெற்றவர்கள். சிறு கதை என்ற உருவம் புதுமைப் பித்தனுக்கு அவருடைய  அனேக கதைகளில் வசப்படுவதில்லை. ஆனால் கு.ப.ரா வுக்கோ அவரது  எல்லாக் கதைகளிலும் உருவம் சிறப்பாக அமைந்து விடுகிறது. என்று சொல்லிச் செல்வது போல, ஞான சம்பந்தரைப் பற்றியோ திருவரங்கக்கலம்பகம் பற்றியோ, குமரேச சதகம் பற்றியோ அல்லது வேறு எந்த பழம் இலக்கியம் பற்றியோ ஏதும் யாரும் எங்கும் எழுதிவிடவில்லை.. நான் எதையும் மிகைப் படுத்திச் சொல்லவில்லை. நான் உணர்ந்ததைச் சொன்னேன். மாறுபடுபவர்கள் தம் கட்சியைச் சொல்லலாம்.

விமர்சனத்தின் மூலம் தான் ஒரு எழுத்தின் இலக்கியத் தரம் உணரப்படும். ஆனால் எவ்வளவு தான் விரிவாக ஒரு எழுத்தின் குணங்கள் விமர்சிக்கப்பட்டாலும், அவ்வளவையும் மீறி எழும் ஒரு இலக்கியத் தரமான எழுத்து. விமர்சனம் ரசனையிலிருந்து எழுவதே தவிர எந்தக் கோட்பாட்டின் வழியிலும் எழுவதில்லை. ஆனால் எந்த கோட்பாட்டின் வழியிலும் விமர்சனங்கள் எழுதப்படலாம். அவ்வளவுக்கும் விமர்சனத்தில் இடம் உண்டு. ஏனெனில் ஒரு இலக்கியப் படைப்பு தரும் அனுபவம் முழுதை யும் எந்த விமர்சனமும் சொல்லித் தீர்த்து விடமுடியாது. என்றெல்லாம் பேசிய முதல் குரல் க.நா.சு வினது தான்.

செல்லப்பா தான் என்னை எழுத்துக்கும்  எழுத்து பத்திரிகைக்கும் இழுத்து வந்தவர் என்று சொல்ல வேண்டும். முதலில் எனக்குத் தெரியவந்த அதிகம் பல பத்திரிகைகளிலும் நான் படித்து உற்சாகம பெற்றது க.நா.சு வால் தான். ஆனால் நான் எழுத்து பத்திரிகையில் எழுதத் தொடங்கிய சமயம் க.நா.சு.வுக்கு எழுத்து பத்திரிகையுடனும் சி.சு. செல்லப்பாவின் விமர்சனத்துடனும் அபிப்ராய பேதங்கள் கொண்டிருந்த சமயம். அந்த சமயத்தில் க.நா.சு தொடங்கிய விமர்சன எழுத்துக்கு பெரும் பங்களிப்பை புதிய தலைமுறையிலிருந்து பலரை அறிமுகப்படுத்தியது எழுத்து பத்திரிகை தான். ஆனால் க.நா.சு அதை அங்கீகரிக்க வில்லை. முக்கியமாக விமர்சனத்திற்கும் புதுக்கவிதைக்கும் எழுத்து மூலம் சேர்ந்த புதிய தலைமுறை வளம் மிக முக்கியமானது. அந்த வளம் புதிய தலைமுறையிலிருந்து புதியவர்களிடமிருந்து வருதல் மிக விசேஷமானது. புதியவர்கள் தான் புதிதாகத் தோற்றம் கொண்டுள்ள மரபை முன்னெடுத்துச் செல்வார்கள்..

எழுத்து மூலம் தெரியவந்தவர்களை அவர் அங்கீகரிக்காத போதிலும் அவரது பத்திரிகை இலக்கிய வட்டத்துக்கு எழுதக்கேட்டு க.நா.சு.விடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழ் இலக்கிய சாதனை (1947 – 1964) பற்றி எழுதச்சொல்லி. .. நானும் எழுதினேன். அந்த நீண்ட கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் க.நா.சு. சி.சு. செல்லப்பா, லா.ச.ரா. போன்றோரின் எழுத்துக்களை சீரிய இலக்கிய சிருஷ்டிகளாக நான் ஏற்றுக்கொண்டாலும், அவை நிகழ் காலத்தில் கால்பதிப்பவைகளாக இல்லை,(க.நா.சு. வின் ஒரு நாள் தவிர) என்றும் எல்லாமே பழம் மதிப்புகளையே திரும்பச் சொல்வதாக இருப்பதாகவும், ஜெயகாந்தன் ஒருத்தர் தான் நிகழ் காலத்தைப் பதிவு செய்வதாகவும் அதிலும் அவர் அதீத உணர்ச்சிகளை எழுப்புவதாகவும் சொல்வது எதையும் உரத்துச் சொல்வதாகவும் எழுதியிருந்தேன். இன்று நான் எழுதுவதாக இருந்தால், பழம் மதிப்புகளை திரும்பச் சொன்னால் என்ன? என்று கேட்பேன். ஆனால் அன்று அப்படி எழுதத் தோன்றியது. எழுதினேன். இருந்த போதிலும் க.நா.சு அதைப் பிரசுரித்தது மாத்திரம் அல்லாமல், “ஆமாம். அதனால் என்ன?” அதில் என்ன தப்பு? என்று தான் கேட்டாரே ஒழிய அவரோ சி.சு.செல்லப்பாவோ அதன் காரணமாக என்னோடு விரோதம் கொள்ளவில்லை எனபதைச் சொல்ல வேண்டும். இதை அவரது தனிப்பட்ட குணம் என்பதற்கும் மேல், அவரது விமரிசன கொள்கையையும் இது சார்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். வேறோரிடத்தில் அவர் சொன்னதை இங்கு சொல்வதென்றால், இந்த இரண்டு பார்வைகள் மாத்திரமல்ல, மூன்றாவது பார்வைக்கு, ஏன் முன்னூறாவது பார்வைக்கும் விமர்சனத்தில் இடம் உண்டு. ஏனெனில் இலக்கியம் இந்த முன்னூறு பார்வைகளுக்கும் இடம் கொடுக்கும். அவ்வளவு பார்வைகளையும் மீறியும் இருக்கும். என்பார். இத்தகைய கருத்துக்களும் பார்வைகளும், அவற்றின் பரிமாற்றமும் தமிழில் க.நா.சுவுக்கு முன்னர் இருந்ததில்லை. யாரும் சொன்னதில்லை. யாருக்கும் இத்தகைய சிந்தனைகள் இருந்ததில்லை. வெற்றுப் பாராட்டுக்கள், அல்லது பொருளுரைத்தல் அல்லது மௌனமே தமிழ் இலக்கியம் அறிந்தது இதையும் ஒரு புதிய விமர்சன மரபு தோற்றம் கொண்டுள்ளதற்கு சாட்சியமாகக் கொள்ள வேண்டும். எந்த விமர்சனத்தையும் சகஜமாக, இன்னொரு அபிப்ராயமாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தைச் சொல்லும் மரபு தோற்றம் கொண்டுள்ளதே தவிர அது வேரூன்றியதாகக் கொள்ள முடியாது. இன்றும் கூட.

இதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 1966-ல் ஒரு நாள் காலை என் தில்லி நண்பர் ராஜாமணி ஒரு வீட்டின் மாடியில்  குடி இருந்த என் அறைக்கு வந்து, “நேற்று சாயந்திரம் க.நா.சு.வும் நானும் இங்கு வந்து ரொம்ப நேரம் உனக்காகக் காத்திருந்தோம். அறை பூட்டிக்கிடந்தது. வெளியில் உள்ள செமெண்ட் பெஞ்சில் உடகார்ந்து காத்திருந்தோம். நான் வெளியே போய் கடலை வாங்கிவந்தேன் கொரித்துக்கொண்டே காத்திருந்தோம். மணி எட்டுக்கு மேல் ஆய்விட்டது. சரி நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று போய்விட்டோம்” என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. க.நா.சு வந்திருக்கிறார், அவர் என் அறைக்கு முன்னால் மணிக்கணக்கில் கடலை கொரித்துக் கொண்டு காத்திருந்தார் என்றெல்லாம் கேட்க. அவர் கரோல் பாகிலேயே ஒரு பர்லாங் தூரத்தில் அவரது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பதாகச் சொன்னான். அந்நாட்களில் நான்  என் அறைக்குத் திரும்ப இரவு வெகு நேரமாகிவிடும். பத்து பதினோரு மணிக்குத் தான் திரும்புவேன். “சரி வா. உடனே போகலாம். அவர் தங்கியிருக்கும் வீட்டைக் காண்பி” என்று அவனை அழைத்துக் கொண்டு க.நா.சு. வைப் பார்க்கச் சென்றேன்.

அப்போது தான் க.நா.சு. இலக்கியவட்டத்தில் அவரதும் செல்லப்பாவினதும் எழுத்துக்கள் பழம் மதிப்புகள் திரும்பச் சொல்வது பற்றி நான் எழுதியதற்கு, “அதனால் என்ன? அதுவும் ஒரு பார்வை என்று அவர் விரித்துச் சொன்னது. நேரில் க.நா.சு. வோடு பேசுவதற்கு ஈடான ஒரு சுவாரஸ்யமும் சிந்தனையைத் தூண்டி விசாலிக்கும் அனுபவம் என்று வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை எனக்கு. எழுத்துக்களில் சுருக்கமாக, ”விவாதிப்பதில் எனக்கு விருப்பமிருப்பதில்லை, அதில் விவாதம் தான் வளரும்” என்று சொல்பவர் நேர்ப்பேச்சில் நிறையவே விவாதிப்பார். ஆனால் தன் கருத்தை வலிந்து திணிக்கமாட்டார். நாம் ஒரு மாற்றுக் கருத்தைச் சொன்னால், அதை மறுக்காது, “அப்படியும் சொல்லலாம்” என்று தான் சொல்வார். ஏனெனில் அவர் விமர்சனப் பார்வையில், அவர் அனேகம் முறை திரும்பத் திரும்பச் சொன்னது போல், எல்லா பார்வைகளுக்கும் இடம் உண்டு.

தில்லியில் அவர் இருந்த முதல் மூன்று நான்கு வருடங்களில் நான் ஒவ்வொரு நாளும் அவரோடு மணிக்கணக்கில் கழித்த நாட்கள்தான். அந்த ஆரம்ப நாட்கள் ஒன்றில், நானும் அவரும் ஒரு ஹோட்டலில் காலை உணவின் போது அவர் சொன்னது, “எழுத்துவின் சாதனை என்று சொல்லப்போனால், இரண்டு புதியவர்களை அறிமுகப்படுத்தியது.  வெ.சாமிநாதன், தருமு சிவராமூ என்ற இந்த இரண்டு பேர்” என்றார். அது எழுத்துவோடும் செல்லப்பாவோடும் அவர் முரண்பட்டுக் கொண்டிருந்த காலம். இதை அவர் எழுத்தில் வெளியிட்ட தில்லை. உண்மையில் இப்போது நினைத்துப் பார்த்தால், இளம் தலைமுறையினர் பலரைப் பற்றி அவர் அபிப்ராயம் ஏதும் சொன்னதில்லை. மிகச் சிலவான விதி விலக்குகள் உண்டு தான்

ஞானக்கூத்தன் பற்றி அவர் மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார். அதற்குக்காரணம் எழுத்து பத்திரிகையில் தெரிய வந்தவர் அல்ல அவர் என்பதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அவர் சிலாகித்து எழுதியவர்கள் அவர்கள் செல்லப்பாவோடு கொண்டுள்ள உறவைப் பொருத்தோ என்றும் எனக்குத் தோன்றியதுண்டு. நகுலன், சுந்தர ராம்சாமி, வே மாலி (எழுத்தில் தெரிய வந்த சி.மணி அவருக்கு ஏற்பாக இருந்ததில்லை) என அவரது தேர்வுகள் எனக்கு ஆச்சர்யம் தந்ததுண்டு. பின்னாட்களில் சுந்தர ராமசாமி எழுதிய க.நா.சு நினைவுகளில் அப்துல் ரஹ்மானின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைக்கூட விரோதம் பாராட்டாது திருத்திக் கொடுத்திருக்கிறார், அ[ப்துல் ரஹ்மானே விரும்பிக் கேட்டுக்கொண்டதன் பேரில் தான்) பிரம்ம ராஜனின் கவிதைகளைப் பற்றி திருவனந்தபுரத்தில் பேசியும் இருக்கிறார் (சுந்தர ராம சாமி கேட்டுக்கொண்டதன் பேரில் தான்) என்றாலும் தருமு சிவராமூ, சி.மணி போன்று பேசப்பட வேண்டியவர் பற்றி ஏதும் வெளியில் கருத்துச் சொல்லாதவர் என்று பார்க்கும் போது இதெல்லாம் புரிவதில்லைதான்.

சொல்லவில்லை என்பதனால் அவருக்கு கருத்து ஏதும் இல்லை, சொல்லத் தயங்குபவர் என்பதும் இல்லை. நேர்ப் பேச்சில் அவரோடு எது பற்றியும் எவ்வளவும் விவாதம் செய்யலாம். தயங்காமல் பேசுவார். நகுலனின் குருக்ஷேத்திரம் தொகுப்பில் ஷண்முக சுப்பையாவின் ஏகப்பட்ட கவிதைகள் பிரசுரமாகி யிருந்தது. அதில் ஒன்று தான் கவிதை என்று சொல்லத் தகுந்தது. “ஷண்முக சுப்பையாவின் Collected Works என்றால் அவ்வளவையும் பிரசுரிப்பதில் நியாயம் இருக்கலாம். ஆனால் இதில்…. “என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது, ”அவரோட Collected Poems- ஸே அவ்வளவு தான்யா. அதுக்கு மேலே எதுவும் இல்லை,” என்றார். சிரித்துக்கொண்டே. கணையாழியில் அசோகமித்திரனின் கதை ஒன்று வந்திருந்தது. கதையின் தலைப்பு நினைவில் இல்லை. கதை அப்பா தன் சின்ன பையனோடு  படுத்திருந்த பாய் காலையில் பார்த்தால் நனைந்திருக்கும், பையனுக்கு என்ன சிகித்சை செய்தும் இது தொடர்கிறது. அதைப் பற்றிப் பேச்சு வந்தது.  “அந்த bed wetting கதை தானே, அதில் என்ன இருக்கு?” என்று உதறித் தள்ளும் பாவனையில் சொன்னார் க.நா.சு. “ You finish reading the story with a chuckle” என்றேன். “But that is a cheap chuckle”  என்றார் உடனே, மறுபடியும் dismissive-ஆக. இன்னொரு முறை, அசோகமித்திரன், ந. முத்துசாமி பற்றிப் பேசும் போது, “அசோகமித்திரன் 15 வருஷம் முன்னாலே என்ன எழுதினானோ அதையே தானேய்யா இப்பவும் எழுதீண்டிருக்கான்?. ஆனா, முத்துசாமியைப் பாரும். He is an artist. He is growing. என்று சொன்னார். இதை அவர் எங்கும் எழுதியிருக்கிறாரா, தெரியாது.

.எதற்கானாலும், எங்கானாலும் நாங்கள் இருவரும் சேர்ந்தே போவோம். மாக்ஸ்ம்யூல்லர் பவனின் சினிமாவானாலும், எங்கோ ஒரு கோடியில் பான்ஸாய் எக்ஸிபிஷன ஆனாலும், ரவீந்திர பவனில், ஸ்ரீதரானி காலரியில் எந்த ஓவியக் கண்காட்சி யானாலும். சினிமாவில் அவருக்கு சிரத்தை இருந்ததில்லை. மங்கி வரும் கண்பார்வை காரணமாகவும் இருக்கலாம். நானும் அவரும் மாக்ஸ்ம்யூல்லர் பவனில் சேர்ந்து பார்த்த கார்டியாக் படத்தைப் பற்றி நான் எழுதியிருந்ததை, பின்னால், அவர் என்னிடம் கோபம் கொண்டிருந்த காலத்தில், டைம் பத்திரிகையைப் பார்த்து எழுதினேன் என்றார். அப்போது ஜெர்மனியைத் தவிர வேறு எங்கும் திரையிடப் பட்டிராத படம் அது, தில்லியில் மாக்ஸ்ம்யூல்லர் பவனில் நாங்கள் பார்த்தது. அவர் என்னிடம் கொண்டிருந்த கோபம் அவர் வீட்டினுள்ளும் பரவியிருந்தது, தெரிந்தது, “அவனோடு என்னத்துக்கு இன்னமும் சுத்தீண்டு” என்று உள்ளிருந்து எழுந்த குரல் பக்கத்து அடுத்த அறையில் இருந்த எனக்குக்கேட்டது. அதற்கு க.நா.சு. “உனக்கு என்னத்துக்கு இதெல்லாம். இதிலே தலையிடாதே, எங்கிட்ட விட்டுடு. இது என் விஷயம்” என்று பதில் தந்ததும் எனக்குக் கேட்டது. அவர் என்னுடன் கோபம் கொண்டிருந்த காலத்தில் தான் அவர் தொகுத்த Tamil Short Stories- க்கு மூன்று கதைகள் நானே தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தும் கொடுக்க வேண்டும் என்று அவர் தொலைபேசியில் அழைத்து என்னைக் கேட்டுக்கொண்டதும். அதில் அப்போது என்னுடன் பேசாதிருந்த அம்பையின் கதையும் (அம்மா ஒரு கொலை செய்தாள்) என்னுடன் தீராப் பகை கொண்டு வசைமாரி பொழிந்து கொண்டிருந்த தருமு சிவராமுவின் ( சந்திப்பு ) கதையும் அடக்கம். மூன்றாவது (மாமியின் வீடு) சி.சு. செல்லப்பாவின் கதை. என் தேர்விலும் மொழிபெயர்ப்பிலும் க.நா.சு.வுக்கு நம்பிக்கை இருந்தது.

ஒரு நாள் ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டியில் American and European Studies பேராசிரியராக அப்போது இருந்த வெங்கட ரமணி சொன்னார், க.நா.சு வைப் பார்க்கப் போயிருந்தேன். தி.ஜானகிராமன், இந்திரா பார்த்த சாரதி இப்படி நிறையப் பேர் இருந்தார்கள்,  என்றும், உங்களைப் பத்தியும் பேச்சு வந்தது” என்றும் சொன்னார். ”இருக்காதே, KNS and myself are not in good terms these days.”  என்றேன். அதற்கு அவர், “அப்படியா? ஆச்சரியம் தான். ஆனால், ஒரு கட்டத்தில் க.நா.சு. யார் சொன்னதையோ மறுக்கும் முகமாக, உங்கள் பாலையும் வாழையும் புத்தகத்தை எடுத்து எல்லோரும் பார்க்கக் காட்டி, “ I will say this is a contemporary classic” என்று கொஞ்சம் அழுத்தி உரத்துச் சொன்னாரே!” என்றார். ”அப்படியெல்லாம் சில சமயம் சொல்லி இருக்கிறார் தான். ஆனால் இதையெல்லாம் அவர் எழுதுவ தில்லை,” என்றேன்.

கசடதபற பத்திரிகையில் அசோகமித்திரனுக்கும் எனக்கும் (இடையே கசப்பான பரிமாறல்கள் நடந்த போது, I don’t like these things” அவ்வளவு தான் நான் சொல்வேன்” என்றார் க.நா.சு.என்னிடம்.  எனக்கு அதிலிருந்து அவரிடம் ஒரு கசப்பே ஏற்பட்டுவிட்டது. ஆனால், ஒரு விவாதத்தில் பேசிக்கொண்டி ருக்கும் போது, “Ashokamitran was no doubt being nasty then” என்று சொன்னதாக அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்

இதே போல பட்டும் படாமலும் தான் எங்கள் உறவு இருந்து வந்தது. அவர் சென்னையில் இருந்த போது என் நாடகம் பற்றிய கட்டுரைத் தொகுப்பை ( அன்றைய வரட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை) அவராகவே எங்கோ கேட்டு வாங்கி தினமணி யில் எழுதியிருந்தார். சுயவெறுப்பு விருப்பு தாண்டிய மதிப்புரை அது. ”சிந்தனையைத் தூண்டுகிற புஸ்தகங்கள் தமிழில் குறைவாக்வே இன்னமும் வெளிவருகின்றன. அதுவும் புதுச் சிந்தனை என்றால் பலரும் ஓடிவிடுகிறார்கள். சிந்தனைக்கு பல விஷயங்களை அள்ளித் தருகிற வெங்கட் சாமிநாதனின் நூல் பாராட்டப்படவேண்டிய ஒன்று.”

வேறொரு இடத்தில் (Financial Express 23.9.1984)  ”என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டுமளவுக்கு நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்”

அப்படி எரிச்சலூட்டும் நண்பர்கள் யார் யாராக இருக்கக் கூடும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த நண்பர்கள் சூழ்ந்திருக்கும் போது அங்கு நிலவியிருக்கக் கூடும் சுதந்திர சம்பாஷணையின் மூச்சைத்திணற வைத்திருக்கும் புகை மூட்டத்தைப் பற்றியும்  நான் சொல்ல வேண்டியதில்லை.

இதைப் பற்றி க.நா.சு.வே ஒரு முறை வேடிக்கையாகக் குறிப்பிட்டார். “என்னய்யா இது, ஒருத்தன் வரான். உள்ளே இருக்கறவனைப் பாத்துட்டு “நான் அப்பறம் வரேன்”னுட்டுப் போயிடறான். அவன் இருந்தா இவனுக்கு வர இஷடமில்லே, இவன் இருந்தா அவனுக்கு வர இஷ்டமிருக்கறதில்லே” அவன் இவன் என்று க.நா.சு. குறிப்பிடுவது ஏதோ இரண்டு பேரை மாத்திரமில்லை. அந்த எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் இரண்டு பேரை எனக்குத் தெரியும். சா. கந்தசாமி, தருமு சிவராமூ. இன்னும் யார் யாரோ எனக்குத் தெரியாது .

”என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டுமளவுக்கு நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்” என்றும்,  பாலையும் வாழையும் புத்தகத்தைக் கையிலெடுத்து, “இதை நான் காண்டெம்பரரி க்ளாசிக் என்று சொல்வேன்” என்றும உரத்த குரலில் சொல்ல வேண்டி வந்ததென்றால், அந்த நண்பர்கள் தரும் சூழல் என்னவாக இருந்திருக்கும், அது எனக்கு எதிராக எவ்வளவு காட்டம் நிறைந்ததாக இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம்.

1980 களின் கடைசி வருடங்கள் ஒன்றில் சாகித்ய அகாடமி புதுமைப்பித்தன் பற்றி  ஒரு கருத்தரங்கு நடத்தியது. பின்னர் ஒரு முறை கணையாழி நடத்திய மாதக் கூட்டம் ஒன்றில் நான் அனுபவம் வெளிப்பாடு நவீன ஓவியம் என்று ஒரு நீண்ட கட்டுரை வாசித்தேன். அது பின்னர் ஞானரதம் இதழிலும் தொடராக வெளிவந்தது.  அது தி.ஜானகிராமன் நவீன ஓவியம் பற்றியும் பிக்காசோ பற்றியும் சொன்ன ஒரு அபிப்ராயத்தை முன் வைத்து பல்துறைகளையும் சார்ந்த என் பார்வையை முன் வைத்திருந்தேன். அப்போதூ சிகாகோவிலிருந்து ஏ.கே. ராமானுஜனும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தார். “நவீன ஓவியம் பற்றி இப்படி ஒரு பாமரத்தனமான அபிப்ராயத்தை யார் சொன்னார்?” என்று என்.எஸ் ஜகன்னாதன் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார். தி.ஜானகிராமனும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். அவர் தான் அப்படிச் சொன்னது என்று நான் எப்படிச் சொல்வேன்? ராமானுஜன் அந்தப் பேச்சை வெகுவாகப் பாராட்டினார். ஆனால் கூட்டத்தில் இருந்த மற்றவர்கள் திரும்பத் திரும்ப என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தினார்கள். அன்று க.நா.சு தான் “அங்கு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு நான் சொன்னதுக்கும் மேல் என் தரப்பில் என்னைச் சார்ந்து பேசினார். கடைசியில் சிரித்துக்கொண்டே “He got his opportunity. He rode everyone of his hobby horses” என்று  நான் பல துறைகளையும் சார்ந்து பேசியதை கிண்டலாகவும் பாராட்டாகவும் பேசினார். அப்போதும் சரி, புதுமைப் பித்தன் கருத்தரங்கிலும் சரி, நான் சொன்ன பதிலுக்கும் மேல் நிறைய என் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இடை புகுந்து பேசினார்.

அப்படித்தான் அவர் தில்லி வந்ததிலிருந்து எங்கள் நெருக்கம் இருந்தது. அவர் வந்த ஒரு சில வாரங்களிலேயே 1967-ல் எனக்கு பரோடாவிலிருந்து ENLITE என்ற பத்திரிகையிலிருந்து தமிழ் புத்தகங்களைப் பற்றி எழுதச் சொல்லி கடிதம் வந்தது. திடீரென்று என் புகழ் பரோடா வரைக்கும் எப்படி பரவியது? என்று ஆச்சரியப்பட்டு க.நா.சுவிடம் அது பற்றிச் சொன்னேன். “நான் தான்யா சொன்னேன். ரண்டு மூணு பேர் சொல்லியிருக்கேன். அசோக மித்திரனுக்கும், நகுலனுக்கும். என்றார். இங்கிலீஷ் லேன்னா எழுதணும்? என்றேன். “எழுதுய்யா, எல்லாம் எழுதலாம். நம்ம இங்கிலீஷும் இங்கிலீஷ் தான்.” என்றார். சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதை  பற்றித் தான் நான் முதலில் எழுதியது. பின்னர் க.நா.சு வே தனக்கு விமர்சனம் எழுத வந்த புத்தகங்களையும் எனக்குக் கொடுத்தார். வாசக வட்டம் வெளியிட்ட புத்தகங்கள், அவரிடமிருந்தவை அவ்வளவையும் பற்றி நான் எழுதினேன்.

அப்படித்தான் நான் இங்கிலீஷில் எழுதுவது ஆரம்பித்தது. அது தான் கசடதபற எனக்குக் கதவடைத்த போது எனக்குக் கைகொடுத்தது. THOUGHT – தில்லி ஆங்கில வாரப்பத்திரிகைக்கும் இலக்கியச் சிறுபத்திரிகை என்று சொல்லிகொண்டிருக்கும் சென்னை கசடதபறவின் அ-இலக்கிய கச்சடாக் காரியங்களுக்கும் என்ன சம்பந்தம்? கசடதபற எனக்கு மறுத்த சுதந்திரத்தை  THOUGHT எனக்குத் தந்தது. வெட்கக் கேடான விஷயம் தான். கசடதபற வெட்கப்பட்டதாக எனக்குச் செய்தியில்லை. THOUGHT பத்திரிகையில் நான் நிறையவே எழுதினேன். அது வெளியிட்ட தமிழ் Literary Supplement=க்கும் நிறைய தமிழ்க் கதைகளை மொழி பெயர்த்துக்கொடுத்தேன். இந்தப் பயணத்திற்கும் எனக்கு முதலில் வழிகாட்டியாக இருந்தது க.நா.சு. தான்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R