நாடக ஆசிரியர் கிரீஸ் கர்னாட்இந்திய நாடகத் துறையில் முக்கிய ஆளுமைகளிலொருவர் கிரீஸ் கர்னாட். அவரது மறைவு பற்றிய செய்தியைத்தாங்கிய பல பதிவுகள் முகநூலில் நேற்று பதிவு செய்யப்பட்டன. இவர் இந்திய சினிமாவின் வெற்றிகரமான நடிகர்களிலொருவரும் கூட. இலங்கைத்தமிழ் நாடகத்துறையின் முக்கிய ஆளுமைகளிலொருவரான க.பாலேந்திரா அவர்கள் எண்பதுகளில் தினகரனில் கிரீஸ் கர்னாட் பற்றி எழுதிய 'நாடக ஆசிரியர் கிறீஸ் கர்னாட்' என்னும் கட்டுரையைப் பதிவு செய்திருந்தார். அக்கட்டுரையை அமரர் கிரீஸ் கர்னாட் அவர்களை நினைவு கூரும்பொருட்டு இங்கு நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றோம். - பதிவுகள்-.


நாடக ஆசிரியர் கிரீஸ் கர்னாட்

-க. பாலேந்திரா -

இந்தியத் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கன்னட மொழி ஆக்கங்கள், தற்போது தனித்துவம் பெற்று விளங்குகின்றன. “சம்ஸ்காரா”, “காடு”, “கடசிராத்தா”, “சோமனதுடி” போன்ற திரைப்படங்கள் பலசர்வதேச விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவை. நாடகங்களில் “துக்ளக்” “யயாதி', “காகன்ன” “கோட்டே”, “ஹயவதனா” போன்றவை பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு அகில இந்திய புகழ்பெற்றவைகளாக விளங்குகின்றன. நாடகத்தில் அறுபதுகளில் ஆரம்பித்த இந்தத்தீவிர இயக்கம் பிறகு திரைப்படத் துறையைப் பாதித்து விட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் இவற்றின் பாதிப்புக்கள் ஏற்பட ஏனோ கஷ்டமாக இருக்கிறது.

புதிய கோணம்

இப்படைப்புகளில் பொதுவாக இந்தியாவின் பண்டைக் கலாசாரப் பின்னணியில் கிராமிய கலைவடிவங்களினதும் புராண இதிகாசங்களினதும் செல்வாக்கு அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். மேற்குறிப்பிடப்பட்ட நாடக திரைப்பட ஆக்கங்கள் அனைத்துக்கும் மூலகர்த்தாக்கள், கிரீஸ் கர்னாட், பி. வி. காரந்த், ஆனந்தமூர்த்தி போன்ற ஆங்கிலக் கல்வியறிவுள்ள புத்தி ஜீவிகள்தான், மேலைத் தேசங்களில் பெற்ற கலை அனுபவங்களோடு தத்துவச் சிந்தனைகளோடு திரும்பிவரும் இவர்கள் கிராமங்களிலும், ஏட்டுச் சுவடிகளிலும் மறைந்து கிடக்கும் பழமைகளைக் கண்டெடுத்து துலக்கிக் காட்டும் போது அவை ஒரு புதிய கோணத்தில் சிறந்த கலாவடிவங்களாக எமக்குக் கிட்டுகின்றன. கிரீஸ் கர்னாட் இவர்களில் முக்கியமானவர். நாடகாசிரியராக அறிமுகமான இவர், சிறந்த மேடை, திரைப்பட நடிகனாக, நாடகத் திரைப்பட தயாரிப்பாளனாக, சிறந்த மொழிபெயர்ப்பாளனாக இப்படி பல துறைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

கிரீஸ் கர்னாட் கன்னடத்தில் எழுதுகிறபோதும் கொங்கணி மொழிதான் இவரது முதல்மொழி. ஆங்கிலம், மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளிலும் சமதையான ஆளுமையுடையவர். தன்னுடைய ஆக்கங்களை கன்னடத்தில்தான் நெருடல் இல்லாமல் வெளிப்படுத்த முடிகிறதாகக் கூறுகிறார் இவர். கன்னடம் அவருடைய சிறு பிராயத்து மொழி. ஆங்கிலத்திலும் எழுதும் இவர், சிறுவயதில் தான் ஒரு ஆங்கிலக் கவிஞனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர். தனது கன்னட மொழி ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். இதைவிட வேறு நாடகங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தயாரிக்கிறார்.

பாதல் சர்க்காரின் “ஏபங் இந்திரஜித்” (முகமில்லாத மனிதர்கள்) நாடகத்தை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தயாரித்துள்ளார். ஆரம்பத்தில் தனது நாடகங்களைக் காட்சிப் பிரிவுகளாக மட்டுமே எழுதிய அவர் இந்த நாடகத்தைத் தயாரித்ததன் பின்னர்தான் - மேடையில் எல்லைப்பாடுகளை வென்று வெகு இலாவகமாக பாதல் சர்க்கார் பயன்படுத்துவதைப் பார்த்ததன் பின்னர்தான்- தானும் அப்படி எழுத வேண்டும் என்று விரும்புகிறார். இப்படி இவர் மற்றப்படைப்பாளிகளை வெளிப்படையாகப் பாராட்டத் தயங்குவதில்லை.

தத்துவ சிந்தனை

“நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அவற்றை வெட்கப்படாமல் கடன் வாங்க நான் தயங்குவதில்லை” என்று வெளிப்படையாகக் கூறும் இவரில், காமு, அறொ, பெக்கற், ஷேக்ஸ்பியர், பேர்னாட் சோ, ஐஸ்சன்ரைன் ஆகியோரின் பாதிப்புகளைக் காணலாம். குறியீடுகளும் கவித்துவமும் கலந்து இந்தியாவின் பண்டைப் புராணங்களிலும், உபநிடதங்களிலுமிருந்து கூட சில விஷயங்களை எடுத்து நவீனப் படுத்தி எழுதுகிறார்.

தத்துவச் சிந்தனையைப் பொறுத்தளவில் இவரது ஆரம்ப படைப்புக்களில் - உதாரணமாக இவரது “யயாதி” என்ற நாடகத்தில்- இருப்புவாதச் சாயல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கர்னாட் தானே ஒரு நாடகத் தயாரிப்பாளனாக இருந்தபோதும் தனது நாடகங்களைத் தான் தயாரிப்பதில்லை. தயாரிப்பாளர்கள் சுதந்திரத்துக்கு விட்டுவிடுகிறார். அதில் தலையிடுவதில்லை. தனது நாடகங்களின் வெவ்வேறுபட்ட தயாரிப்புக்களைப் பார்த்து எல்லாவற்றையும் தான் இரசிப்பதாகவே கூறியுள்ளார். இவரது மிகப் பிரபலமான “துக்ளக்” நாடகம் பல மொழிகளிலும் பலராலும், பலவிதத்திலும் தயாரித்து மேடையேற்றப்பட்டுப் பெரும் வரவேற்பை இன்றும் பெற்று வருகிறது.

கன்னடத்தில் நல்ல சரித்திர நாடகங்கள் இல்லையா? என்ற குறை இருந்தபோது ஒரு சவாலாகவே தான் 1964 இல் இந்த நாடகத்தை எழுதியதாகக் கூறியிருக்கிறார். எழுதும் போது இது மேடையேற்றப்படும் என்று தான் எண்ணவில்லையாம். ஆம் தயாரிப்புக்குக் கூட ஒரு சவால் இந்த நாடகம். ஹிந்தியில் டில்லி தேசிய நாடகப் பள்ளி சார்பில் அதன் இயக்குநர் அல்காசி அதனைத் தயாரித்து மேடையேற்றியபோது பல காட்சிகளுக்கு “ரிக்கற்” இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரும்பவேண்டியிருந்ததாம்.

சமகால நோக்கு

“துக்ளக்” 14ஆம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான மன்னன். அவனது வாழ்க்கை மிகவும் நாடகத்தன்மையுடையது எனக் கருதிய கர்னாட் ஒன்றரை வருடங்கள் அவனைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இந்த நாடகத்தை எழுதியுள்ளார். எப்படியோ “சோ” மூலம் “துக்ளக்” என்ற பெயர் எமது தமிழ் இரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது. கிரீஸ் கர்னாட் போன்ற நாடகாசிரியர்கள் தமிழுக்கு அறிமுகப் படுத்தப்படுவது அவசியம். பாதல் சர்க்கார், மோகன் ராகேஷ் ; ஆகியோர் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டார்கள். இவர்களைப் பற்றி கிரீஸ் கர்னாட், சமகால வாழ்க்கையைக் காட்டுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான் என்றும், தனது நாடகங்களில் ஒரு சிருங்காரம் இருப்பதாகவும் கூறுகிறார். என்றாலும் இவரது நாடகங்களில் சமகால வாழ்க்கை பற்றிய நோக்கு இருப்பது மறுக்க முடியாதது.

நன்றி: தினகரன்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R