- முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், அறிவியல் மற்றும் மனிதவளத் துறை, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி. -“மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தோடு இலக்கியக் கோட்பாடுகள் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இயற்கையோடு போராடி, இயற்கையை அடக்கி ஆளும் ஆற்றலைப் பெறும் போது, இயற்கையின் மத்தியில் இயற்கையை விடவும் உயர்வு பெற்ற மனிதன் காட்சி தருகிறான். இயற்கையோடு போராடி, உற்பத்தித் திறனைப் பெருக்கி, பொருளாதார வளர்ச்சியை எந்த அளவிற்குத் தன்னைச் சுற்றியுள்ள புறச்சூழல்களையும் மனிதன்; கட்டுபடுத்தி ஆளத் தொடங்கி விடுகிறான். இதனால், உழைக்கும் திறத்தோடும் உற்பத்திப் பெருக்கதோடும் பொருளாதார வளர்ச்சியோடும் பண்பாட்டு நிலைகள் பின்னிப் பிணைக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம்”1 என்பார் ஜி.ஜான்சாமுவேல். இதனைச் சமுதாய இருப்பு என்பர் மார்க்சியவாதிகள்.

சமுதாய இருப்பு குறித்து தி.சு.நடராஜன் கூறும் பொழுது, “சமுதாய அமைப்பினைத் தமக்குள் செயல்பாட்டுறவுடைய இரண்டு கட்டுமானங்களாக மார்க்சியம் பகுத்துணர்கிறது. இவ்விரண்டு கட்டுமானங்களுள், அடிக்கட்டுமானம் என்பது பொருளியல் வாழ்க்கையின் அனுகூலங்களால் பெற்ற பொருளாதார உற்பத்தியுறவுகளைக் குறிக்கும். இது சமுதாய இருப்பு என்பதாகும். இத்தகைய வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு அதன் மேல் மட்டத்தில் அமைந்துள்ள கருத்தோட்டங்கள், சமயங்கள், அரசுகள், மரபுகள், அழகியல்கள் முதலியவற்றின் ஒட்டு மொத்தத்தைக் குறிப்பிடுவது, “சமுதாய உணர்வு நிலை” என்பதாகும். இதுவே சமுதாய அமைப்பின் மேல் கட்டுமானம் இது, தனக்குள் ஒன்றைனையொன்று சார்ந்துள்ள பல உள்கட்டுமானங்களைக் கொண்டி ருக்கிறது.”2 என்பார்.

மேற்கண்ட கூற்றுகள் மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படைத் திறன்களை விளக்குவதாகவுள்ளன. இலக்கியத்தின் மேல்கட்டுமானங்களை விட, அவற்றின் கருத்திற்கே முக்கியத்துவம் மார்க்சியத்தில் வழங்கப் பெறுகின்றன.

தமிழ்ச் சிற்றிதழ்களில் மார்க்சியக் கவிதைகள் எழுதப் பெற்றிருக்கின்றன. அவைகள் சமூகப் பொருளதார ஏற்றத் தாழ்வுகளைக் கூறுவதாகவும், ஏழ்மை நிலையினைச் சுட்டிக் காட்டுவதாகவும், அரசியல்வாதிகளின் போலித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.

சிற்றிதழ்க் கவிதைகளில் சமூக ஏற்றத்தாழ்வுகள்
“இலக்கியம் என்பது காலங்காலமாகக் கலாச்சாரத்தின் வாழ்க்கை முறையின், வாழ்நிலைகளின் சமூக எதிர்பார்ப்புகளின், கட்டுகளின் பிரதிபலிப்பாக இருந்திருக்கிறது”3 என்பார் சாப்ராபேகம். “இலக்கியம் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி, சமுதாயத்தின் நலன்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டே இருக்கும்”4 என்பதைக் கொண்டு இலக்கியத்தில் சமூகம் ஒன்றியிருக்கும் தன்மையினை அறிந்து கொள்ள முடிகின்றது. சமூக ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப் பெற்ற கவிஞன் தன் ஆற்றொணாத் துயரத்தைத் தம் கவிதையில் பதிவு செய்கின்றான். அவ்வாறான கவிதையாக,

“சமரச வார்த்தைகளின்
களிம்புகளை நிராகரித்த
எங்கள் கோபம்
சமத்துவ தீர்வுகளுக்காய்
இன்னும் எரிகிறது.
கனமாய் விழும்
எங்கள் எழுத்துக்கள்
உங்கள் பாறை
மனசுகளை
உடைத்துப் போடும்
கவனமாயிருங்கள்”5

எனும் இக்கவிதையைக் கூறலாம். எழுத்தினாலும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டி, முயற்சிகள் செய்கின்றோம். கவனமாயிருங்கள் எனக் கவிஞரின் எச்சரிக்கை அமைகின்றது. “ஒரு மனிதன் எந்த அளவிற்கு வாழ்க்கையோடும் புற உலகோடும் வரலாற்றின் முற்போக்குச் சக்திகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றானோ, அந்த அளவிற்கு அவனது முருகியல் உணர்வுகளும் வளம் பெற்றதாகக் காட்சி தரும். இந்நிலையில் நின்று நோக்குவோமென்றால் கலை என்பது புற உலகின் பிரதிப்பலிப்பாக அமைவதைத் தெளிவாக விளக்கிக் கொள்ள முடியும்.”143 பா.தனராஜ் தம் கவிதையொன்றில், சமூக ஏற்றத்தாழ்வைக் ‘காப்பிழை’ என்கின்றார். ஏழை பணக்காரன் நிலை குறித்துக் கூறும் பொழுது,

 

“ஓ….பிரம்மாவே
உன் படைப்பின் 
விசித்திரம் பார்
வட்ட தொந்திக்காரன்
வயிறு முட்ட தின்றதால் 
குனிய முடிவதில்லை.
ஓட்டிய வயிறுக்காரன் 
கூனிக் குறுகியதால்
நிமிர முடியவில்லை”6

என்கின்றார். கூனிவு - நிமிர்வு என்பது பணக்காரன் - ஏழை எனும் ஏற்றத்தாழ்வின் அல்லது இயலாமையின் வெளிப்பாட்டுக் குறியீடாய் அமைந்துள்ளன. இவ்வெளிப்பாட்டினைப் போல் 

சு.இலக்குமணசுவாமி தம் கவிதையில், வறுமைக் கோட்டினைப் புராணக் கதை மரபோடு இணைத்துக் கருத்தினை வெளிபடுத்தி உள்ளார். அவ்வாறு அமைந்த கவிதையாக,

“பட்டினிக்கு மறுபெயர்
ஏழைக்குக் கிடைத்த
நல் விருது
பணக்காரர்கள்
பராரிகளுக்குப் போட்ட
இராமாயணக் கோடு”7

இக்கவிதை அமைந்துள்ளது. இராமன் செய்வதும், செய்யப் போவதும் தவறு எனத் தெரிந்திருந்தும், தன் இயலாமையால் செயல்படாதுக் கூனிக் குறுகிக் ‘கோடு’ போட்ட பொழுது இருந்தவன் இலக்குவனன். அதனைப் போல் ஏழ்மையானவர்களைச் செயல்பட விடாதுத் தடுத்து நிறுத்துபவர்களாகப் பணக்காரர்களாக இருக்கின்றனர் என்கின்றார் கவிஞர். இதே கருத்தை,

“பாதகம் செய்பவர் தம்மை
மோதி மிதிக்க வேண்டிய கோபம்
பொறுமைச் சிறையில் பூட்டப்பட்டதால்
வறுமைச் சிறையில்
ஆயுள் கைதி நான்”8

எனும் கவிதையும் கூறி இருக்கின்றது. ‘முரண்பாடுகள்’ எனும் தலைப்பிலமைந்த கவிதை, சமூகத்தில் வாழ்வின் அடிப்படையில் ஏமாற்றப்படும் சூழ்நிலைக்கு ஏழ்மை தள்ளப்பட்டுள்ளதை விவரிக்கின்றது. அக்கவிதை,

“சிறிய வரியைச்
செலுத்தாத உழவன் வீடிழப்பான்.
கோடிக்கு மேல்
வரிப்பாக்கி இருந்தால்
சலுகை கிடைக்கும்”9

இதுவாகும். சிற்றிதழ்க் கவிஞர்கள் யதார்த்தமாகச் சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பதிவு செய்துள்ளனர். இவை மார்க்சியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன. சமூகத்தின் மேல் மட்டத்திலுள்ளக் கருத்தோட்டங்களை முன்வைப்பதாக இக்கவிதைகள் அமைந்துள்ளன.

வறுமைச் சூழல்
வறுமைச் சூழலற்ற உலகினைக் காணவே மார்க்சியம் விரும்புகிறது. அதற்கான வழி முறைகளைக் காணவும், செயல்படுத்திடவும் முனைகிறது. சமூகத்தில் மனித இனத்தில் வாழ்வாதாரச் சூழல்களைச் சரிசமமாக்கிட வறுமைச் சூழலை வென்றெடுக்கும் போராட்டக் குணங்களை அது ஏற்படுத்துகின்றது. இக்கருத்தாக்கங்கள் இலக்கியங்களில் பதிவு செய்யப் பெறுகின்றன. இதனை ‘ஞானி’ குறிப்படும் போது, “இலக்கியம் எதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். தன் சமகாலப் பொருளியல் சூழலைச் சரிவரப் புரிந்து கொள்வதன் மூலமே எதார்த்த வாழ்வை வைத்து இலக்கியம் படைக்க முடியும். சமூகத்தில் அனைத்துமே மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்களை இலக்கியவாதி அவற்றை விரிந்த அளவில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். இறுதியில் மக்களின் விடுதலை தான் இலக்கியத்தின் குறிக்கோளாக இருக்க முடியும்.” 10 என்பார்.

வறுமைச் சூழல் என்பது சமூகத்தின் மறுமலர்ச்சியை ஏற்படச் செய்யாது அழித்தொழிக்கும். இதனைச் சிற்றிதழ் எழுத்தாளர்கள் தம் கவிதைகளில் எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளனர். குடும்பத்தில் வறுமை காரணமாக ஏற்படும் இயலாமைத் துன்பங்களை,

“‘தம்பிக்குப்
பரிட்சை அட்டையைக் கொடு
உனக்கு வேண்டாம்
நீ
பெரியவள்’

அம்மா அலறினாள்.

‘அப்போ
தாவணி வாங்கித் தா’

அமைதியானாள்
அம்மா”11

இக்கவிதை சிறு குறும்படம் போலக் காட்சிப்படுத்தப் பெற்றுள்ளது. வீட்டில் கிழிந்த ஆடைகளோடும் தேர்விற்கான பரிட்சை அட்டை இல்லாமலும் இருக்கும் வறுமைச் சூழ்நிலைச் சுட்டிக் காட்டப்படுகின்றது. என்.வாஞ்சிநாதன் எனும் கவிஞர் தேசியவலிமை எனும் இதழில் ‘பசிவலை’ எனும் தலைப்பில் மீனவர்களின் வறுமைச் சூழ்நிலையைப் புனைந்திருப்பார். அக்கவிதையில்,

“பொன்விழா தேசத்தில்
அங்கே…… அவன்
வலை வீசி தேடுவது
கடலில் மீன்களல்ல!
பானையில்
கஞ்சிப் பருக்கைகள்!”12


என்பார். கடலில் அவனால் பிடிக்கப்படும் மீன்கள் தான் அவனது வறுமையினைப் போக்கும். எனவே அவனுக்குக் கடலில் தேடுவது பருக்கைகளாக இருக்கின்றன. பானை கடலுக்கும், மீன்கள் கஞ்சிப் பருக்கைகளாகவும் குறியீடாகக் காட்டப் பெற்றுள்ளன. வறுமையினால் வாழ்வில், கோபம் தலைக்கேறி முரண்பாடுகளான எண்ணத்தைத் தமக்குள் ஏற்படுத்துகின்றன என்கின்றார் சி. விநாயகமூர்த்தி. ‘கோபம்’ எனும் தலைப்பிலான அவர் தம் கவிதையில்,

“அவசரம் அவசரமாய்
அலுவலகம் புறப்படும் நாளில்,
தாமதமாய் வருகிறது பேரூந்து
ஒட்டுநர் மீது பாய்கிறது கோபம்
………
முகூர்த்தம் நோக்கி
மூத்தமகள் காத்திருக்கையில்,
அடுத்த பெண்ணும் வயசுக்கு வந்து
அக்காவை மீறி வளர்கையில்
இயலாமையில் இதயம் நொந்து”
13

எனப் புலம்புகின்றார். செய்ய வேண்டிய கடமைகளைக் கூடச் செய்யமுடியாததாக ஆக்கி விடுகின்றது வறுமை. விழாவின் பொழுது, பந்திக்கு வேகமாக அனைவரும் எழுந்து செல்கின்றனர். அப்போது கவிஞர்,

“பந்திக்கு முந்தாதீர்
பசியோடு பல பேர்
பலவீனமாக”14

என்கின்றார். வறுமையின் கொடுமைகள் சிற்றிதழ் எழுத்தாளர்களால் சிறந்த நிலையில் பதிவு செய்யப் பெற்றிருக்கின்றன. சிற்றிதழ்ப் படைப்பாளர்கள் சமூகத்தில் வறுமையற்ற சூழ்நிலை உருவாக வேண்டும் என எண்ணும் போக்கை இக்கவிதைகள் பறைசாற்றுவதாக உள்ளன.

“நெய்திட்ட நூலை விட
தைத்திட்ட நூல் அதிகம்
ஏழையின் உடை”15

“வண்டியில் தீவண மூட்டைகள்
வயிற்றுப் பசியோடு….
இழுத்தன மாடுகள்”16

“அழித்து விடாதே மழையே
சாலையோர ஓவியன்
பசித்த வயிறு”17

எனும் கவிதைகள் வறுமைச் சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மானுட சமூகம் மட்டுமல்லாது, பிற உயிர்களும் மானுட சமூகத்தின் ஏழ்மையினால் பாதிக்கப்படுகின்றன என்பதை இக்கவிதைகள் எடுத்துரைக்கின்றன.

அரசியல் கவிதைகள்
தற்கால அரசியல் சூழல் தூய்மையற்ற ஒன்றாகவும், தன்னலமானதாகவும், சமூக மேன்மை கருதாததாகவும் அமைந்திருப்பதாகச் சிற்றிதழ்க் கவிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்து அதனைக் கவிதையாக வடித்துள்ளதை உணர முடிகின்றது. மார்க்சியக் கவிதைகளில், பெரும்பாலான கவிதைகள் அரசியல் பின்புலம் மாறிச் சமூகம் மேன்மைப்பட வேண்டும் என்பதையே தெரிவிக்கின்றன. சமூகச் சீரழிவிற்கு மிகப் பெரிய காரணியாக அமைந்திருப்பது அரசியல் தான் என்கிறது இவ்வகைக் கவிதைகள்.

இன்று நிலவும் அரசியல் குறித்து அறிஞர் கூறும் பொழுது, “வர்க்க வேறுபாட்டை ஒரு வசதியாகக் கருதும் மனப்பான்மை உள்ள அரசியல், அடிப்படைப் பிரச்சனைகள், ஆழப் பிரச்சனைகள், அவசரப் பிரச்சனைகள், அன்றாடப் பிரச்சனைகள் என்று மக்கள் பிரச்சனைகளைப் பற்றிய கவலை இருப்பதில்லை. மாறாக, தனது கௌரவம், தனது பதவி, தனது செல்வம், தனது வளர்ச்சி, தனது கட்சி என்ற ஒரு சுயநலமே வேரூன்றி வருகிறது”18 என்கின்றார். இத்தகு சூழ்நிலைகள் மாற்றம் பெற மார்க்சியலாளர்கள் விரும்புகின்றனர்.

நம் நாட்டுப் பொருள்களுக்குச் நம் நாட்டுச் சந்தையில் மதிப்பில்லாமல் போகச் செய்து விடுமளவிற்குத் ‘தாராளமயமாக்கல்’ எனும் அரசின் கொள்கை உள்ளது. இதனால் பாதிக்கப்படுபவர் ஏழை எளிய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள். இதனை கருத்தில் கொண்ட கவிஞர்,

“நம் நாட்டு
ஆட்சியாளர்களுக்குத் தான்
இறையா (ஆ)ண்மை கிடையாது.
அதனால் தானே
இந்தியப் பொருளாதார
தாம்பத்தியத்திற்குள்
அன்னிய நாட்டானுக்கு
அழைப்பு விடுகிறான்.”19

என்கின்றார். கவிதையால் ‘இறையாண்மை’ எனும் வார்த்தையில், ஆட்சியாளர்கள் ஆண்மையற்றவர்கள் எனும் பொருள்படும்படி அடைப்புக்குறிக்குள் ‘இறையா(ஆ)ண்மை என எழுதியுள்ளார். இந்தியப் பாராம்பரியத்தில், தாம்பத்திய உறவு ரகசியமானது, புனிதமானது, என்று எண்ணப்படுகிறது. அதைக் கெடுக்கும் வண்ணம் பிறன் ஒருவனை ஊடுறுவ விடுவது கேவலம் எனப் பொருள்படும்படித் தாராளமயமாக்கலை எதிர்க்கிறது இக்கவிதை,

ஆட்சியாளர்கள், ஆட்சி எனும் அரசு கட்டிலில் சரிவர அமர்ந்து மக்கள் பணி செய்யாது வாழ்கின்றனர். சட்டசபையில் மக்கள் பிரச்சனையைப் பேசாது, குழுச் சண்டை போடும் அரசியல்வாதிகளைப் பார்த்துக் கவிஞர் ‘குரங்குகள்’ என வசை பாடுகின்றார். அக்கவிதை,

“குரங்கிலிருந்து பிறந்தவன்
மனிதன் என்றான் ஒரு அறிஞன்
சந்தேகம் இருந்தால்
……..

சட்டசபைக்குச் சென்றால்
முழுச் சந்தேகம் தீரும்”20

என்பதாகும். ‘ஆட்சி மாற்றம்’ என்பது நாட்டிற்குத்தான். ‘ஆட்சியாளர்கள்’ மாறினால் சமூகம் மேம்படும் என மாற்றி ஓட்டளித்தவர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை வே. சுவாமிநாதன் ‘ஆட்சி’ எனும் தலைப்பில்,

“குப்பைகள் எடுக்கப்பட்டு,
குப்பைகள் கொட்டப்பட்டது.
நாற்றம் மட்டும் நிரந்தரம்”21

இவ்வாறு கூறுகின்றார். தூய்மையற்றவர்களாகவே அரசியல்வாதிகள் அமைந்து விடுகின்றனர் என்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது. ஆட்சியாளரை மக்கள் தேர்ந்தெடுக்கும் முறையைக் கேலி செய்து,

“மன்னரைத் தேர்ந்தெடுக்க
மாலையொன்றை
யானையின் (துதிக்) கையில்
கொடுத்தனராம்
அன்று…..
நாட்டை ஆள
மிருகம் மனிதனைத்
தேர்ந்தெடுத்தது.
இன்று…
மனிதர்கள்
மிருகங்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்”22

இக்கவிதையைப் பாரதிநேதா எழுதியுள்ளார். மக்களிடமும் நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் திறன் குறைந்துள்ளதாகக் கருதுகிறார் கவிஞர். புரட்சி மனப்பான்மை வெளிப்பட்டால் தவிரச் சமூகத்தை மாற்றியமைக்க முடியாது என்பதை மார்க்சியவாதிகள் கூறுகின்றனர். மார்க்சியம் (ஆயசஒளைஅ) குறித்து விக்கிப்பீடியா விளக்கம் தரும் பொழுது, “மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாகக் கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றிப் பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படை சித்தாந்தமாக அமைகிறது”23 என்கும். புரட்சிக்களுக்கான விதைகளைக் கவிதைகள் மக்கள் மனதில் விதைக்கின்றன. கவிஞனின் புரட்சி மனப்போக்கைப் பல்வேறு கவிதைகளில் காண முடிகின்றது. இளங்கம்பனின் ‘அதனால்’ எனும் கவிதை இதனை,

“அழிக்க வேண்டிய
அபத்தங்கள்
அன்றாடம் அதிகமாகிக்
கொண்டே வருகின்றன.
அதனால்
நான் ஓர் தீப்பந்தமாகவாவது
இருக்க வேண்டி 
முயல்கின்றேன்”24

இவ்வாறு விளக்கி நிற்கின்றது. மேலும், ‘மனிதநேயமடல்’ சிற்றிதழில் வெளிவந்த கவிதையிலும் இப்போக்கைக் காணமுடிகின்றது. அக்கவிதை,

“பொறுக்குமோ
நெஞ்சம் இனியும்….
பொங்காதோ ஜன சமுத்திரம்…….
அறுவை சிகிச்சை
அதிரடி நடவடிக்கை –
இவையே…..
சத்தியம் காக்கும்
சாத்தியக் கூறுகள்”25
இதுவாகும்.

முடிவுரை:
மார்க்சியக் கவிதைகள், உருவத்தில் நேரடியான பொருள் தருவதையும், எளிமையான வார்த்தைப் பயன்பாடு, சுருக்கமாகக் கூறும் முறைகளைப் பின்பற்றுகின்றன. உள்ளடக்கம் மட்டுமே இக்கவிதைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. உள்ளடக்கமே உருவத்தைத் தீர்மானிக்கின்றன. சமீப காலக் கவிதைகளான ஹைக்கூ, சென்றியூ வடிவத்தில் மிகுதியாக மார்க்சியக் கவிதைகள் எழுதப் பெற்றிருக்கின்றன. உருவமும், உள்ளடக்கமும் கவிதையின் இருபக்கங்கள். இரண்டும் முக்கியமே என்ற அடிப்படையில் சிற்றிதழ்க் கவிதைகள் வெளிப்படுத்தப் பெற்றிருக்கின்றன.

சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வறுமைச் சூழல், சாதியக் கொடுமைகள், அரசியல் போக்குகள், ஆகியவற்றைத் தமது உள்ளடக்கமாக மார்க்சியக் கவிதைகள் எழுதப் பெற்றிருப்பதை நன்கு அறிய முடிகின்றது.


அடிக்குறிப்புகள்
1. ஜி. ஜான் சாமுவேல், ‘இலக்கியத்தில் சமுதாயப் பார்வை’, ப.121
2. தி.சு. நடராஜன், ‘திறனாய்வுக் கலை’, ப.170
3. சாப்ராபேகம், ‘சமூக வழி இலக்கிய தரிசனம்’, ப.47
4. தங்க.மணியன், ‘பத்திரிக்கைத் தமிழ்’, ப.1
5. மு. முருகேஷ், ‘ஓடம்’, சூன்-97, ப.2
6. ஜி. ஜான் சாமுவேல், ‘இலக்கியத்தில் சமுதாயப் பார்வை’, ப.85
7. பா. தனராஜ், கவிதா தேவி, சன.பிப்.97, ப.1
8. சு. இலக்குமண சுவாமி, ‘மனித நேய மடல்’, டிசம்பர்-99, ப.13
9. சி விநாயகம் மூர்த்தி, ‘ஓடம்’, ஜீன்-97, ப.8
10. சி விநாயகம் மூர்த்தி, ‘ஓடம்’, நவம்.97,ப.3
11. ஞானி, ‘மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்’, ப.85
12. ஆர்.எஸ். ‘சுந்தரசுகன்’, திசம்பர்-98, ப.6
13. என். வாஞ்சிநாதன், ‘தேசிய வலிமை’, மார்ச்-98, ப.11
14. சி. விநாயக மூர்த்தி, ‘ஓடம்’, ஜீன்-97, ப.8
15. முகிலரசு, ‘கவிக்காவேரி’, ஆகஸ்.செப்.97, ப.4
16. இரா. இரவி, ‘மனித நேய மடல்’, செப்.99, ப.10
17. நீடா.சி. இளஞ்செழியன், ‘கவிக்காவேரி’, மார்ச்-97, ப.பின்அட்டை
18. ஜெ.பி. கிருஷ், ‘கல்வெட்டு பேசுகிறது’, செப்.அக்.97, ப.13
19. டாக்.மு.பி. பாலசுப்பிரமணியன், ‘வாணிதாசன் கவிதைகள்-ஓர் ஆய்வு’, ப.24
20. ருத்ரபாரதி, ‘தேசிய வலிமை’, ஜன.99, ப.7
21. எஸ். அறிவுமணி, ‘கண்ணியம்’, மே-99, ப.9
22. வே. சுவாமிநாதன், ‘தேசிய வலிமை’, ஜீன்-98, ப.8
23. பாரதி நேதா. ‘தேசிய வலிமை’இ செப்.அக்.97, ப.19
24. ta.wikipedia.org/wiki மார்க்சியம் பார்வை நாள்: 12.3.12
25. இளங்கம்பன், ‘கல்வெட்டுப் பேசுகிறது’இ நவம்.97, ப.10
26. வெற்றிமணி, ‘மனித நேய மடல்’, பிப்.99, ப.29

உசாத்துணை நூல்கள் :
1. சஃப்ராபேகம்.மு.இர “சமூக வழி இலக்கிய தரிசனம்”
14.கற்பக விநாயகர் தெரு
மீனாட்சி நகர்
மதுரை-8 (மு.ப. 1992)

2.தங்கமணியன்    “பத்திரிகைத் தமிழ்”
ஓப்பரவு அச்சகம்
சென்னை (1978)

.3.ஜான்சாமுவேல்.ஜி    “இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”
ஹோம்லாண்ட் பதிப்பகம்   
23. திருமலைநகர் இணைப்பு
பெருங்குடி சென்னை-96.
(மு.ப.நவம்-1984)

4.ஜெயமோகன்    “நவீன தமிழிலக்கிய அறிமுகம்”
உயிர்மை பதிப்பகம்
11ஃ29சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம் சென்னை-18.

5..ஞானி    “மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்”
காவ்யா பதிப்பகம்
16-17-வது குறுக்குத் தெரு
இந்திரா நகர்
பெங்களுர். (மு.ப. டிசம்.2001)

6 .www.ta.wikipedia.com


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R