சண்முகநாதன் வாசுதேவன்"சோகங்கள் கதையாகிச் சோர்வு எனை வாட்டும்போது
தாகமெனைத்தழுவுவதால் நாடுகிறேன் போதையினை
பாவங்கள் சுமையாகிப் பலவீனம் சேரும்போது
பாவி நான் தேடுகின்றேன் மரணத்தின் தேவனை
கடந்தவைகள் மறந்தபோது காலங்கள் சென்றபோது
காசுபணம் சேரும்போது - மீண்டும்
கல்லறையால் எழும்புகிறேன்
சில்லறையாய் மாறுகிறேன்"

இப்படி ஒரு கவிதையை 03-07 - 1975 ஆம் திகதி எழுதிய கவிஞன் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டான். ஈழத்து கவிஞி சிவரமணி, தமிழகக்கவிஞர் ஆத்மநாம் வரிசையில் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு மறைந்த எனது இனிய நண்பன் சண்முகநாதன் வாசுதேவன் எங்களைவிட்டுப்பிரிந்து 24 வருடங்களாகின்றன.

காலமும் கணங்களும் தொடரில் நான் இதுவரையில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி எழுதியிருக்கின்றேன். அவர்களில் சிலர் அற்பாயுளிலும் சிலர் முதுமைக்காலத்திலும் மறைந்தவர்கள். எனினும் நான் எழுதியவர்களின் வரிசையில் தற்கொலை செய்துகொண்டு அற்பாயுளில் மறைந்தவர் பற்றியும் எழுதநேர்ந்திருக்கிறது. தூக்குக்கயிற்றை முத்தமிடுகின்ற அந்தக்கணம் அவன் ஒரு செக்கண்ட் யோசித்திருப்பானேயானால் அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கிய, வானொலி ஊடகப்பணிகளில் மேலும் பல புதிய உச்சங்களைத் தொட்டிருப்பான்.

மெல்பன் கலைவட்டம் மொனாஷ் பல்கலைக்கழகத்தில், "பெற்றோர் பிள்ளைகள் உறவு" என்ற தொனிப்பொருளில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி அரைநாள் பகல்பொழுது கருத்தரங்கினை நடத்தியது. அதில் கட்டுரை சமர்ப்பிப்பதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த காலைவேளையில் எனதும் வாசுதேவனதும் நண்பரான இலங்கையில் முன்னர் ஆசிரியப்பணியிலிருந்த சம்பந்தன் தகவல் தந்தார். 1993 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் மலரவிருந்த 1994 புத்தாண்டிற்காக வாசுதேவனின் நண்பர்கள் ஒன்றுகூடல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். வாசுவும் டிசம்பர் 31 ஆம் திகதியன்று மதியம் அந்த மண்டபத்திற்குச்சென்று ஏற்பாடுகளை கவனித்தான். அலங்கார வேலைகளிலும் ஈடுபட்டான். ஆனால், புத்தாண்டு மலர்ந்த வேளையில் அவன் தனது உயிரைத் துறந்தான்.

குடும்பப்பிரச்சினைகள் இருந்தால் பேசித்தீர்த்திருக்கலாம். மன அழுத்தம் வந்திருப்பின், நல்ல நண்பர்களிடம் சென்றிருக்கலாம். வீட்டில் எவருமே இல்லாத சூழ்நிலையில் அவனைத்தேடி உறவாட வந்தவன் காலன் மாத்திரமே. வறுமையிலும் துயரத்திலும் ஏமாற்றத்திலும் நோய் பீடித்திருந்த வேளையிலும், " காலா வா... உன்னை காலால் எட்டி உதைக்கின்றேன்" என்று கம்பீரமாக எழுந்து நின்று சொன்னவன் பாரதி. தான் பணியாற்றிய இலங்கை வானொலியிலும் பிறிஸ்பேர்ண் தமிழ் ஒலி வானொலியிலும் அந்த பாரதியின் நினைவாக பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் வாசுதேவனுக்கு அந்தக்கணத்தில் பாரதி நினைவுக்கு வரவில்லையா...?

வாசுதேவன் எழுதியிருக்கும் பல கவிதைகள் இன்னமும் அவனுடைய அழகான கையெழுத்தில் என்வசம் இருக்கின்றன. மெல்லிய ரோஸ் வண்ணக் காகிதங்களில் எழுதிய கவிதைகளை - அவற்றை எழுதிய திகதிகளுடன் பதிவுசெய்துவைத்திருக்கின்றான். பெரும்பாலான கவிதைகள் சோகரஸம் பொதிந்தவை.

1970 களில் இலங்கை வானொலி கலையகத்தில்தான் வாசுவை முதல் முதலில் சந்தித்தேன். எனக்கு இவனை அறிமுகப்படுத்தியவர் நண்பர் வி. என். மதியழகன். அவர் அச்சமயத்தில் இளைஞர்களுக்கான சங்கநாதம் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். நண்பர் கே. எஸ். சிவகுமாரனும் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த காலம். அவரது ஏற்பாட்டில் குறிப்பிட்ட சங்கநாதம் நிகழ்ச்சியில் மதியழகன் எனக்கும் ஒரு வாய்ப்புத்தந்தார். வாசுதேவன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்றவாறு அவ்வப்போது வானொலி கலையகத்திற்கு வருகைதந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றான்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் வானொலி கலையகத்தில் நாடகக்கலைஞர்கள் தேர்வுக்காக விளம்பரம் ஒலிபரப்பப்பட்டபோது நானும் விண்ணப்பித்தேன். ஆண்கள், பெண்கள் பலர் வந்திருந்தனர். அனைவரும் இளம்தலைமுறையினர்தான். வாசுவும் வந்திருந்தான். நேர்முகத்தேர்வு வித்தியாசமாக நடந்தது. கலையகத்தின் உள்ளே ஒவ்வொருவராக அழைக்கப்பட்டோம். எனது முறையும் வந்தது. அழைத்துவந்து விட்டவர் அந்த அறையின் ஓரமாக நின்றுகொண்டார். ஒரு ஒலிவாங்கி தொங்கிக்கொண்டிருந்தது. அதன் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டேன். எனக்கு ஒரு நாடகப்பிரதி தரப்பட்டது. ஒரு அறையிலிருந்து குரல் வந்து, எனது பெயரைக்கேட்டு உறுதிசெய்துகொண்டபின்னர், அந்தப்பிரதியை ஏற்ற இறக்கங்களுடன் நவரசமும் பிரதிபலிக்கத்தக்க குரலில் வாசிக்கச்சொன்னது. அது ஆண்குரல். ஏற்கனவே நான் வானொலியில் அடிக்கடி கேட்டகுரல்தான். அவர்தான் கே.எம். வாசகர். நானும் என்னால் முடிந்தளவு பேசிவிட்டு வந்தேன். அந்தத்தேர்வில் நான் தெரிவாகவில்லை என்பதை பின்னர்தான் அறிந்துகொண்டேன். எனினும் வாசு தெரிவுசெய்யப்பட்டான் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், அவனது குரல்வளம் அருமையானது. வானொலி ஊடகத்திற்கே பொருத்தமான குரலைப்பெற்றிருந்த பாக்கியசாலி.

அதன் பின்னர் மதியழகன் சங்கநாதம் நிகழ்ச்சிக்கு அவ்வப்போது அழைப்பார். அவ்வேளைகளில் வாசுவும் உடனிருப்பான். நானும் கதைகள் எழுதிக்கொண்டிருந்தமையால் அவனுக்கு என்மீது நல்ல பிரியம். எமது நீர்கொழும்பு இலக்கிய வட்டத்திற்காகவே ஒரு சங்கநாதம் நிகழ்ச்சியை மதியழகன் ஒழுங்குசெய்து அழைத்திருந்தார்.
என்னிடம் தமிழ் கற்ற தமிழ் இலக்கிய அபிமானி வண. பண்டிதர் ரத்னவன்ஸ தேரோ, மற்றும் இலக்கிய வட்டத்தின் சில உறுப்பினர்களையும் வானொலி கலையகத்திற்கு தயார்படுத்தி அழைத்துச்சென்றேன். மதியழகன் ரத்னவன்ஸ தேரோவை தமிழில் பேட்டிகண்டார். என்னிடத்தில் நீர்கொழும்பு இலக்கிய வட்டம் குறித்த பணிகளை வாசுதேவன் பேட்டிகண்டார்.

நான் எழுதியிருந்த நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன சிறுகதையை ( மல்லிகையில் வெளியானது) நாடகப்பிரதியாக்கியிருந்தேன். அதன் பாத்திரங்கள் வசனங்களை எவ்வாறு ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று பேசவேண்டும் என்ற ஒத்திகையை வாசு நடத்தினான். மூன்று பாத்திரங்கள் கொண்ட கதையது. ஒரு கடற்றொழிலாளியின் சிறிய குடும்பம். தாய், தந்தை, மகன். தந்தை கடலுக்குச்செல்பவர். மகன் படிக்கிறான். தனது மகன் தந்தையைப்போன்று உயிரைப்பணயம் வைத்து கடல் தொழில் செய்யக்கூடாது, தொடர்ந்து படித்து நல்ல உத்தியோகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதுதான் தாயின் கனவு. தந்தையோ வீட்டிலிருந்து கள்ளும் அருந்தும் போதைக்கு அடிமையானவர். படித்துக்கொண்டிருக்கும் மகனை அழைத்து கடைக்குச்சென்று பீடி வாங்கிவருமாறு சொல்கிறார். தாய் அதனைத்தடுக்கிறார். அதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. " உன்னட மவன், ஸ்கோல்ல என்னத்தை படிச்சுக்கிழிச்சப்போறான்...? அவனையும் கடத்தொழிலுக்கு அனுப்பு" என்று குடிவெறியில் தந்தை கத்துகிறார். இறுதியில் ஒரு நாள் நோய் வந்து தந்தை படுக்கையில் விழுகிறார். குடும்பத்தை காப்பாற்ற மகன் வலையைத்தூக்குகிறான். தாயின் நம்பிக்கை நிராசையாகிறது. நீர்கொழும்பு கடற்றொழிலாளரின் உரையாடலில் ( பிரதேச மொழிவழக்கு) எழுதப்பட்ட கதையது. நீர்கொழும்பைச் சேர்ந்த ரட்ணராஜ், தில்லைநாயகி ஆகியோரும் பாடசாலை மாணவனாக சண்முகராசா என்பவரும் நடித்தனர். அந்த நிகழ்ச்சி சிறப்பாக வந்தமைக்கு மதியழகனும் வாசுதேவனும்தான் முக்கிய காரணம். அவர்கள் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பில் அனுபவம் மிக்கவர்கள். அந்த நாடகப்பிரதிக்காக எனக்கு இருபது ரூபா சன்மானமும் கிடைத்தது. அதுவே நான் எனது எழுத்துக்காக முதல் முதலில் பெற்ற சன்மானம். அந்தப்பணத்தை பல நாட்களாக செலவுசெய்யாமல் வைத்திருந்தேன்.

தொலைக்காட்சி இல்லாத அக்காலத்தில் இலங்கை வானொலி கலையகத்தின் ஊடாக இலங்கை, இந்திய நேயர்களை பெரிதும் கவர்ந்தவர்கள் பலர் பற்றியும் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். நண்பர் சில்லையூர் செல்வராசன் மக்கள் வங்கியின் நிகழ்ச்சிக்காக ஒலிபரப்பிய அவரது தணியாத தாகம் தொடர் நாடகத்தில் குமார் என்ற பாத்திரம் ஏற்று திறம்பட நடித்தவன்தான் வாசுதேவன். குறிப்பிட்ட பாத்திரம் இருவேறு குணஇயல்புகளை சித்திரிக்கும் வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் நடித்த அனைத்துக்கலைஞர்களும் சில்லையூரின் வசனங்களுக்கு உயிர்கொடுத்தவர்கள். குமார் பாத்திரத்தில் தோன்றிய வாசு, தனது உணர்ச்சிகரமான நடிப்பினால் நேயர்களை பெரிதும் கவர்ந்து அசத்தியிருந்தான்.

பிரதி சனிக்கிழமை தோறும் வாசுவும் இளைஞர்களுக்கான சங்கநாதம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினான். அதனை நிறைவு செய்யும் போது, " இனிவரும் சனிமாலை சந்திக்கும் வரை இங்கித வந்தனங்கள் தந்து விடைபெறுவது சண்முகநாதன் வாசுதேவன்" என்று முடிப்பான்.

வானொலி கலையகத்தில் நடிக்கவரும் சாரதாவை அவன் காதலித்து மணந்துகொண்டான். சாரதா வீணைக்கலைஞருமாவார். கொழும்பு நிகழ்ச்சிகளிலும் கவிஞர் ஈழவாணன் வீட்டிலும் வாசுவை அவ்வப்போது சந்திப்பேன்.

எனது மற்றும் ஒரு சிறுகதையை கே. எம். வாசகருக்கு சிபாரிசு செய்து வானொலியில் ஒலிபரப்புவதற்கும் வாசு ஏற்பாடு செய்தான். அதில் மரைக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன் ஆகியோரும் நடித்தனர்.

இலங்கையில் ஆதன முகாமைத்துவ பட்டதாரியாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியிருக்கும் வாசு, இலங்கை வானொலிக்காக நாடகங்கள், உரைச்சித்திரங்கள் பல எழுதியவன். இவற்றில் வாலிப வட்டம், இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சங்கநாதம் என்பன குறிப்பிடத்தகுந்தன.

இவை தவிர பல நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளனாக விளங்கியவன். ஶ்ரீமாவோ பண்டார நாயக்காவின் பதவிக்காலத்தில் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு கொழும்பில் நடந்தபோது, அதில் கலந்துகொண்ட ஒவ்வொரு நாடுகளையும் பற்றிய விவரணக்குறிப்புகளை தொகுத்து தினமும் ஒலிபரப்புச்செய்தான். 1984 ஆம் ஆண்டு மலேசியாவில் ஆசிய பசுபிக் ஒலிபரப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடந்த குடிசனத் தொகைத் தொடர்பு நிகழ்ச்சி முகாமைத்துவ பயிற்சி நெறிக்கும் சென்று திரும்பினான்.

இலங்கையில் என்னுடன் நெருக்கமாக இருந்த வாசு, எனக்கு முன்பே அவுஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்தான். ஆனால் எங்கிருக்கிறான் என்பதை அறியமுடியாதிருந்தேன். நான் மெல்பனுக்கு வந்த பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் (அமரர்) கந்தசாமியின் புதல்வர் வாகீசன் என்ற பொறியிலாளர் பிறிஸ்பேர்ணிலிருந்து தமது தொழில் நிமித்தம் வந்தபோது எனது வீட்டில் சில நாட்கள் நின்றார். அவர் மூலமாக மீண்டும் வாசுவுடன் எனக்கு தொடர்பாடல் கிட்டியது. அச்சமயம் வாசு பிறிஸ்பேர்ணில் குடும்பத்துடன் இருந்தவாறு "பிறிஸ்பேர்ண் தமிழ் ஒலி" சமூக வானொலியையும் கவனித்துக்கொண்டிருந்தான். எனது சில சிறுகதைகளையும் தனது மதுராமான குரலில் ஒலிபரப்பியிருக்கின்றான். ஆசி. கந்தராஜாவும் இந்த வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பவர். எனக்கு அனுப்பியிருந்த பிறிஸ்பேர்ண் தமிழ் ஒலி நிகழ்சிகள் பதிவுசெய்யப்பட்ட கஸட்டுகளை இன்றளவும் பேணிப்பாதுகாத்துவைத்துள்ளேன். அவனது குரல் இன்றும் என்னோடு வாழ்கிறது.

நண்பர் சிவநாதனின் ஏற்பாட்டில் மெல்பன் பார்க்வில் பல்கலைக்கழக கல்லூரிமண்டபத்தில் 1989 ஆம் ஆண்டு நடந்த கலைமகள் விழாவில் வாசுதேவனின் தலைமையில் கவியரங்கு நடத்தினோம். தலைப்பு: " வித்தகம் பேசி வீண்காலம் போக்காமல் விந்தைப்பணி செய்வோம் வாரீர்" இதில் நானும் நண்பர் மாவை நித்தியானந்தன், அருண் விஜயராணி ஆகியோரும் கலந்துகொண்டோம்.  எனது கவிதை இவ்வாறு ஆரம்பித்தது:

" என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் கேட்டோம்
பாரதியின் தீந்தமிழ் இலக்கியத்தில்
'தணியாத தாகத்தை ' தவறாது கேட்டோம்
ஈழமணித்திருநாட்டின் வானொலியில்,
தணியாத தாகத்தை தணித்தபின்னே,
கடல் சூழ்கண்டமதில்,
வாழையும்- முருங்கையும் - கனிதரும் மரங்களும் செழித்து வாழும் "ராணியின் பூமியில்" ஆமாம், குவின்ஸ்லாந்து மாநிலத்தில்
" தமிழ் ஒலி" பரப்பும் எனதருமை நண்பா, வாசுதேவா,
உன்வரவுக்கும் - உன் தலைமைக்கும் வாழ்த்துக்கூறி செப்பிடுவேன் என்கவிதை."

குறிப்பிட்ட கலைமகள் விழாவில் வாசுவும் - சாரதாவும் இணைந்து ஒரு ஓரங்க நாடகமும் நடித்தனர். சாரதாவின வீணை இசையும் இடம்பெற்றது. அதன்பின்னர் எனது வீட்டில் நடந்த ஒரு மாலைநேர இலக்கியச்சந்திப்பிலும் வாசு கலந்துகொண்டான். எப்பொழுதும் என்னை " மச்சான்" என்றுதான் விளிப்பான். இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் இந்த " மச்சான்" உறவு தொடர்ந்தது. 1990 ஆம் ஆண்டு மெல்பனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு வந்தசமயம், எனது வீட்டுக்கு வந்து இரவு தங்கினான். நடுச்சாமம் வரையில் தாகசாந்தி செய்தவாறே கலை, இலக்கியம் பேசினான். அன்று அவனது வாயில் " மச்சான்" என்ற சொல் பல தடவை உதிர்ந்தது. மறுநாள் காலையில் தேநீர் தயாரித்து எடுத்துக்கொண்டு, அவனை தட்டித்துயில் எழுப்பி நீட்டியபோது, காலை வணக்கம் சொல்லியவாறே, "காலையில் இதனையா அருந்துவது...?" எனக்கேட்டவாறு தனது பேக்கிலிருந்து ஒரு விஸ்கி போத்தலை எடுத்து எனது தேநீர் கப்பிற்கு சீயஸ் எனச்சொல்லிக்கொண்டு அருந்தினான்.

" ஏன்டா... இப்படி... உடல் நலத்தை கெடுத்துக்கொள்கிறாய்...? " என்று கண்டித்தேன்.

" மனிதர்களைவிட மது நல்லது, மேன்மையானது" என்று கவிதை பொழிந்தான்.

பிறிஸ்பேர்ண் சென்றபின்னரும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடுவான். புது வருடம் பிறக்கும்போது புத்தாண்டு வாழ்த்தை மறக்காமல் முதலில் சொல்வதும் வாசுதான். 1994 ஆம் ஆண்டு பிறந்தபோது அவன் வாழ்த்துக்கூறவில்லை. நானும் மறந்திருந்தேன். அந்த ஆண்டு மலர்ந்தவேளையில் வாசுவின் உயிர் அவனது உடல்கூட்டை விட்டு பறந்திருக்கிறது.

இழப்புகளில் அதிர்ச்சி, அவமானம், ஆச்சரியம் என்பன கலந்திருக்கும். உயிரிழப்பு இயல்பானது. ஆனால், எவ்வாறு அது நேர்ந்துவிடும் என்பதை சொல்ல முடியாதுதான்.
எப்படியோ எவருக்கும் உயிரிழப்பு நிச்சயமானது...! நினைவுகள் நிரந்தரமானது. வாசுதேவன், வாயுவாக கடந்துசென்றான். அந்த "மச்சான்" என்னை கடக்காமல் நினைவுகளாக வாழ்கின்றான்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R