எழுத்தாளர் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பில் ஜான் டிரிங்வாட்டரின் 'ஆப்ரஹாம் லிங்கன்' அறிவியல் அறிஞர் ஜெயபாரதன்எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் ஆப்ரஹாம் லிங்கன். அதற்கு முக்கிய காரணம் சிறு வயதிலிருந்தே பாடப்புத்தகங்களில் அவரைப்பற்றிப் படித்ததனாலேற்பட்ட பிம்பமாக இருக்கலாம். வறிய சூழலில் , விறகு வெட்டி, தெருவிளக்கில் பாடங்கள் படித்துப் படிப்படியாக முன்னேறி அமெரிக்க ஜனாதிபதியாகியவர் என்று படித்தது, அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களின் விடுதலைக்காக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டதுடன், அதன் காரணமாகவே அமெரிக்காவின் தென் மாநிலத்தைச்சேர்ந்த தீவிரவாத எண்ணம் மிக்க நாடகக் கலைஞனான வில்லியம் பூத்தினால் சுட்டுகொல்லப்பட்டு , தன் கொள்கைக்காகத் தன் உயிரையே தந்தவர் என்று அறிந்தது போன்ற காரணங்களினால் சிறு வயதிலிருந்தே ஆப்ரஹாம் லிங்கன் எனக்குப் பிடித்த அமெரிக்க அரசியல் தலைவர்களிலொருவராக விளங்கி வருகின்றார்.

ஆப்ரஹாம் லிங்கனைப்பற்றியொரு நூலினை அண்மையில் வாசித்தேன். அதுவோர் அபுனைவல்ல. வரலாறுப்புனைவு: ஒரு நாடகம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஜான் டிரின்ன்க்வாட்டர் (John Drinkwater) ஆங்கிலத்தில் எழுதி பல தடவைகள் பல்வேறு நகரங்களில் மேடையேறிய புகழ் பெற்ற நாடகமான 'ஆப்ரகாம் லிங்கன்' என்னும் நாடகத்தின் மொழிபெயர்ப்பான இந்த நூலினைத் தமிழில் தந்திருப்பவர் எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்களே.

இந்நாடகம் திண்ணை இணைய இதழில் தொடராக வெளிவந்து தமிழகத்தில் தாரிணி பதிப்பக வெளியீடாக (மே 2014)  வெளிவந்துள்ளது. இப்பிரதியினைப் பற்றிய எனது கருத்துகளைக் கூறுவதற்கு முன்னர் திரு.ஜெயபாரதனைப்பற்றிச் சிறிது கூறுவதும் அவசியமானதே. மதுரையில் பிறந்த இவர் சென்னைப்பல்கலைக்கழகத்தில் இயந்திரவியற்பொறியியற் துறையில் பட்டம் பெற்ற இவர் இந்தியாவிலும், கனடாவிலும் அணு மின்சக்தி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றபின் முழுமூச்சாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு நாடகம், புனைகதை, கவிதை , மொழிபெயர்ப்பு மற்றும் அறிவியல் பிரிவுகளில் காத்திரமான பங்களிப்பினைச் செய்து வருபவர்.

இவரை நான் முதலில் அறிந்து கொண்டது அல்லது இவருடன் அறிமுகமானது இணையம் வாயிலாகத்தான். ஆரம்பகால இணைய இதழ்களிலொன்று 'அம்பலம்'. 'அமுதசுரபி' ஆசிரியரான எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் அப்பொழுது 'அம்பலம்' இணைய இதழின் ஆசிரியராக விளங்கினார். 'அம்பலம்' இணைய இதழ் வெளியிட்ட சிறப்பிதழ்களிலொன்று 'தகவல் தொழில் நுட்பச்சிறப்பிதழ்'. அதில் எனது கட்டுரையொன்றும் வெளிவந்துள்ளது. ஜெயபாரதன் அவர்களின் கட்டுரையொன்றும் வெளியாகியிருந்தது. அச்சிறப்பிதழ் மூலம் நான் நடத்திவரும் 'பதிவுகள்' இணைய இதழ் பற்றி அறிந்துகொண்ட ஜெயபாரதன் அவர்கள் என்னுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டதுடன் 'பதிவுகள்' இணைய இதழுக்குக் கதை, கவிதை மற்றும் அறிவியற் கட்டுரைகள் எனப் பன்முக இலக்கியப்பங்களிப்பு செய்தவர். மேலும் தனது படைப்புகள் நூலுருப்பெறும்போதெல்லாம் மறக்காமல் வெளியான இணைய இதழ்களின் விபரங்களையும் குறிப்பிட்டு நன்றி கூறிட மறக்காதவர்.

இவர் தாகூரின் 'கீதாஞ்சலி'யை மட்டுமல்லாமல் , நாடக மேதை பெர்னாட்ஷாவின் நாடகங்கள் சிலவற்றையும் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றார். அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மனின் 'புல்லின் இதழ்கள்' கவிதைகளையும் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றார்.

தமிழ் இலக்கிய உலகுக்கு இவரது மொழிபெயர்ப்புகளும், அறிவியற் கட்டுரைகளும் வளமூட்டியிருக்கின்றன. இவரது மொழிபெயர்ப்பில் வெளியான 'ஆப்ரஹாம் லிங்கன்' நாடகத்தை அண்மையில்தான் வாசிக்க முடிந்தது. நூல் என்னிடம் நீண்ட காலமாக இருந்தபோதும் ஆறுதலாக வாசிப்பதற்குரிய சந்தர்ப்பம் அண்மையில்தான் கிடைத்தது. அதற்கொரு காரணம் என்னிடம் குவிந்து கிடக்கும் நூற்குவியலுக்குள் மறைந்திருந்த இந்நூல் அண்மையில்தான் மீண்டும் என் கண்களில் பட்டது என்பதுதான்.

ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பு மூல நூலினை வாசிப்பது போன்ற உணர்வினையே தந்ததெனலாம். ஆப்ரஹாம் லிங்கனின் ஆளுமையின் முக்கிய பக்கத்தினை வெளிப்படுத்தும் அருமையான நாடகப்பிரதியென்பதை வாசிக்கும்போது உணர்ந்திட முடிந்தது. நாடகம் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து கறுப்பின மக்களின் விடுதலை பற்றிய முரண்களின் விளைவாகப் பிரிந்து சென்ற தென் மாநிலங்களுக்கும், வட மாநிலங்களுக்குமிடையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தக்காலச் செயற்பாடுகளை, அதன் நடாத்திய அன்றைய ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கனின் திடமான ஆளுமையினைச் சிறப்பாக விபரிக்கின்றது.

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் ஐக்கிய அமெரிக்காவினை வலியுறுத்தியும், கறுப்பின மக்களின் அடிமைத்தனத்துக்கான விடுதலையினையும் வேண்டி ஆப்ரஹாம் லிங்கனால் முன்னெடுக்கப்பட்ட போரினை விபரிக்கும் நாடகம் பல தகவல்களையும் வெளிப்படுத்துகின்றது. தம் விடுதலைக்காகக் குரல்கொடுத்துப் போராடிய கறுப்பின அரசியற் செயற்பாட்டாளர்களுக்குக் கிடைக்கும் தூக்குத்தண்டனையைப்பற்றி நூல் கூறுகின்றது. வடமாநிலங்களின் சார்பில் தென்மாநிலங்களுக்கெதிரான நடைபெற்ற யுத்தத்தில் வட மாநிலங்களுக்காகப்போராடிய படையில் சேர்ந்து போராடிய கறுப்பின வீரர்கள், தென் மாநிலப்படையினரிடம் அகப்பட்டுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அடையும் இன்னல்களை நூல் வெளிப்படுத்துகின்றது. கறுப்பின அடிமைகள் மரத்தில் கட்டித்தொங்கவிடப்பட்டு, முள்ளாணித்தகட்டினால் தோலுரிக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாவதை நூல் வெளிப்படுத்துகின்றது.

உள்நாட்டு யுத்தத்தில் தென்மாநிலப் படையினரின் கையோங்கியிருந்த சமயத்திலெல்லாம் தளர்ந்து விடாமல், உறுதியுடன் யுத்தத்தினை வழி நடாத்தி, வடமாநிலப்படைகளுக்கு வெற்றியைத்தேடித்தந்த ஆப்ரஹாம் லிங்கன், யுத்தம் முடிவுக்கு வந்த நான்கு நாள்களிலேயே , லிங்கனின் கறுப்பின மக்களுக்கான விடுதலைக்கொள்கையினால் ஆத்திரமடைந்த அதற்கு மாறான எண்ணம் கொண்ட ஜான் வில்கிஸ் பூத் என்னும் நாடக நடிகனால் , நாடக அரங்கொன்றில் வைத்துத் தலையில் சுடப்பட்டு இறப்பது துயரகரமானது.

ஆப்ரஹாம் லிங்கனின் ஆளுமையை நன்கு வெளிப்படுத்தும், அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தினை ஆவணப்படுத்தும் இந்நாடகப்பிரதி  முக்கியமான நாடகப்பிரதிகளிலொன்று. இதனை நன்கு தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ள ஜெயபாரதனின் பங்களிப்பும் பாராட்டுதற்குரியது. ஏனெனில் இவரது மொழிபெயர்ப்புகள் அனைத்துமே தமிழ் மொழிக்கு , இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. அதனால்தான் ஜெயபாரதனின் எழுத்துப்பங்களிப்பும் முக்கியமானது.

எனக்கு மிகவும் ஆச்சரியம் தரும் விடயமென்னவென்றால்.. குடியரசுக்கட்சியினரென்றால் அக்கட்சியினர் குடிவரவாளர்களுக்கு எதிரானவர்கள், வெள்ளையினத்துக்குச்சார்பானவர்கள், வேறு மத, மொழி மக்களைச்சந்தேகக் கண்கொண்டு பார்ப்பவர்கள், இனத்துவேசம் மிக்கவர்கள் என்று பொதுவான ஒரு பிம்பம் இக்காலத்திலுள்ளது. ஆனால் குடியரசுக்கட்சியினைச்சேர்ந்த ஒருவர், கறுப்பின மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதை முக்கிய நோக்காக வைத்து , அதற்கு எதிராகப்பிரிந்து சென்ற தென்மாநிலபடைகளுடன் மோதி, மீண்டும் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர் என்பது எனக்கு எப்பொழுதுமே ஆச்சரியத்தைத்தருவது. இந்நாடகப்பிரதி அந்தக் குடியரசுக்கட்சியைச்சேர்ந்த அமெரிக்க ஜனாதிபதியான் ஆப்ரஹாம் லிங்கனின் ஆளுமையை நன்கு வெளிப்படுத்துகின்றது.

இந்நாடகத்திலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகின்றேன் நாடகத்தின் மொழிபெயர்ப்புச் சிறப்பினைக் காட்டுவதற்காக:

1. “பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்” “கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்.” “நான் அடிமை யாக வாழ விரும்பாதவன். அதைப்போல் அடிமைகளுக்கு அதிகாரியாக இருக்கவும் நான் விரும்பாதவன்.” “எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், சமமாகவும் படைக்கப் பட்டவர் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லாத காலம் வரும்வரை, விடுதலை ஒளிவிளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும் !” “நேர்மையான வினைகளைத் தவறான வழியில் செய்யக் கூடாது ! அமெரிக்க ஐக்கிய இணைப்புப் போராட்டத்தில், அப்படிச் செய்வதும் தவறான வினைபோல் குற்றமானது !” ஆப்ரஹாம் லிங்கன்

2. ஆப்ரஹாம் லிங்கன் :மேரி ! என் கருத்தைக் கேள் ! இந்த தேசத்தில் அடிமைகள் என்று ஓரினத்தைச் சில மாநிலத்தார் வைத்துக் கொண்டு சிறையில் வைத்திருப்பது நியாயமற்ற ஈனச் செயல் ! அதற்கோர் முடிவை நான் காண வேண்டும். அடிமைகள் எனப்படுவோருக்கு விடுதலை கொடுத்து உரிமைகள் அளிக்க வேண்டும். அதற்குச் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள், எல்லைகள், வரம்புகள், தண்டனைகள் யாவும் அமைக்க வேண்டும். தெற்கு மாநிலங்கள் நிச்சயம் அதற்கு ஒப்புதல் அளிக்கா ! அவை யாவும் ஒன்று சேர்ந்து யூனியனை எதிர்க்கும் ! ஐக்கியக் கூட்டிலிருந்து அவை பிரிந்து போகக் துணிந்து நிற்கும் ! அதை நான் அனுமதிக்க முடியாது ! ஐக்கியம் அறுந்தால் அமெரிக்க முறிந்து போய்விடும் ! உடைந்து போனவற்றை இணைக்கப் குருதி வெள்ளம் கொட்ட வேண்டிய திருக்கும் ! அந்தப் போராட்டத்தில் என்னுயிருக்கும் ஆபத்து எழலாம் !

3. ஆப்ரஹாம் லிங்கன்: யார் என்னைக் கேலி செய்தாலும் நான் தாங்கிக் கொள்ள முடியும் ! அதற்குக் கடவுள் எனக்களித்த பயிற்சி இருக்கிறது ! ஆனால் இந்த அடிமைத்தன வாழ்வு இருக்கிறதே அது கொடிய சிறை ! ஆயுள் தணடனை அது ! ஆறாத மனக்காயம் அது ! கசப்பான உயிர் வாழ்க்கை அது ! ஆழமாய்ப் புரையோடிய அதிகாரப் பிணி அது ! அதை நான் அறிவேன் ! இந்தப் போராட்டத்தில் எனக்குள்ளது ஒரே சிந்தனைதான் ! அதில் எந்த மாறாட்டமும் இல்லை எனக்கு ! என் தீர்மானத்தை யார் எதிர்ப்பினும் நான் துறக்க மாட்டேன் ! எவர் எதிர்ப்பினும் நில்லேன் ! அஞ்சேன் ! அடிமைத்தன ஒழிப்பு சட்ட ரீதியாக வருவதற்கு நான் என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் துணிவேன் !

இந்த மொழிபெயர்ப்பு நாடகத்தினை ஜெயபாரதனின் இணையத்தளத்திலும் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: https://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R