ஆய்வுக்கட்டுரை வாசிப்போம்!முன்னுரை:
இலக்கியமென்பது அறிவுறுத்தல், இன்புறுத்தல் ஆகிய இருபெரும் பணிகளைச் செய்யவேண்டும். இவ்விருபெரும் பணிகளைச் செய்யும் இலக்கியங்கள்தாம் வாழ்வாங்கு வாழ்கின்றன. பேராசிரியர் சூ. இன்னாசி அவர்கள் எழுதிய “திருத்தொண்டர் காப்பியம்” என்ற இலக்கியமும் அங்ஙனமே வாழ்வாங்கு வாழும் வகையில் உள்ளது. அவரது இக்காப்பியத்தில் பல இடங்களில் பெண்ணியம் சிறப்பிக்கப் பெறுகிறது. பெண் சிறந்தால் நாடு சிறக்கும். பெண்மையை சிறப்பு செய்ய தமிழ்க்கவிஞர்கள் பலர் பா இயற்றியிருந்தாலும், பெண்மை பெருமைப்பட வேண்டும் என்ற நன்நோக்கில், பேராசிரியர் முனைவர்.   சூ. இன்னாசி அவர்கள், “திருத்தொண்டர் காப்பியம்” என்னும் தம் காப்பியத்தில் “பெண்ணலம்” பீடுற்ற நிலையை அரிய பல உண்மைகள் வாயிலாக அழகாக, நயம்பட எடுத்துரைக்கின்றார்.

முனைவர் சூ. இன்னாசியின் பிறப்பு:
பேராசிரியர் சூ.இன்னாசி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சூசைபிள்ளை, லூர்தம்மாள் இணையருக்கு 1934 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 13ஆம் நாள் பிறந்தார். திருமயம், தேவகோட்டை ஆகிய ஊர்களின் பள்ளிகளில் பயின்று 1951இல் பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றார். பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியையும் முடித்து 1953இல் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். பணியாற்றிக் கொண்டே வித்துவான், தமிழ் இளங்கலை, முதுகலை போன்ற பட்டங்களையும் பெற்றார்.

கல்லூரிப்பணி:
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணி நியமனம் பெற்று முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 1983ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கிறித்தவத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர்-தலைவராகப் பணியமர்த்தப் பெற்றார். 1993 வரை அங்குப் பணிபுரிந்தார். ஆசிரியர், ஆய்வாளர், படைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர். சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆளுமைகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பேராசிரியர் தமிழ்ப் புலத்தில் ஆய்வு செய்து முதுமுனைவர் (டி.லிட்) பட்டமும் பெற்றார்.

பேராசிரியரின் சிறப்புகள்:
பேராசிரியரின் மேற்பார்வையில் 35 பேர் முனைவர் பட்டமும், 40 பேர் இளமுனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். எண்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்களை தாமே முன்னின்று நடத்தியுள்ளார். பேராசிரியர் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். கவிதை(40) இலக்கணமும் மொழியியலும் (4) இலக்கியம்(13) நாடகம் (9) புதினம்(1) பதிப்பியல்(2) ஆங்கிலம் (11) ஆகியவற்றோடு இவரின் பன்னிரு நூல்களைப் பல்கலைக் கழகங்களும் ஆறு நூல்களை ஆய்வு நிறுவனங்களும் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளன. 4135 பாடல்களை கொண்ட திருத்தொண்டர் காப்பியத்தைப் படைத்து, திருத்தக்கதேவர், சேக்கிழார், கம்பர் ஆகிய காப்பியப் புலவர்கள் வரிசையில் இவரும் இணைந்து சிறக்கின்றார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், இசுரேல், பாலத்தீனம், சோர்டான் ஆகிய நாடுகளுக்கு ஆய்வுக்காகவும், இலக்கியப் பணிக்காகவும் பன்முறை சென்று வந்தவர் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்மை:
அடக்கம், பொறுமை, தியாகம், பிறர்நலம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்று பெண்மை எனப்படும்1. பெண் பிறப்பு, பெண்மைக்குரிய நலம், பெண்ணின் தன்மை, பெண்ணின்பம், அமைதித்தன்மை, பிறையெனுநுதலின் பெண்மை எனப்படும்2.

பெண்ணென்னும் குலவிளக்கு:
“குலவிளக்கு” என்னும் தலைப்பின்கீழ் 306 முதல் 313 முடிய 8 பாடல்களில்

“குலத்திற்கே அவள்முதல்வி குடும்பச் செல்வி
கூறுபல தெய்வங்களின் வடிவ மாவாள்” (பா.எ.306)

காப்பியத் தலைவி பார்கவி நாயர்குலத்திற்கே குடும்பச்செல்வியாகவும், எல்லா பெண் தெய்வங்களின் வடிவமாகவும் திகழ்வதாகவும்,

“மலையாளக் குலவிளக்காய் ஆன தையல்
மானமிகு தமிழ்மரபைப் போற்றும் பெண்ணாள்
கலைமகளும் திருமகளும் கைகள் கோத்துக்
களிநடனம் புரிந்தொருங்காம் தெய்வம் போன்றாள்” (பா.எ.307)

மலையாள குலவிளக்கானப் பார்கவி மானமுடைய தமிழ்ப்பெண்ணாகவும், கலைமகள், திருமகளின் வடிவமான தெய்வமாகவும் திகழ்வதாக ஆசிரியர் கூறுகிறார். பார்கவியின் குணம் பளிங்கினையொத்த தூய்மை உடையதாகவும், கார்மழையையொத்து வரையாது வழங்கும் வள்ளல் குலத்தில் தோன்றிய பெண்ணாகவும் விளங்கி குலப்பெருமைக் காத்தாள் என  “பார்கவியாம் நாயர்மகள் பளிங்கின் தூயாள்” (பா.எ.305) என்ற பாடல் வரிகளால் அழகுபட ஆசிரியர் கூறுகிறார்.

அழகு
செய்கின்ற நற்செயல்களிலும், பார்க்கின்ற கண்ணியப் பார்வையிலும் தான் அழகு இருக்குமே தவிர வெளிப்புறப்பார்வையழகு மட்டுமே அழகாகாது. அந்த வகையில் காப்பியப் பெண்மணி பல்வேறு இடங்களில் நெஞ்சில் உரமிக்கவளாக, அறிவு முதிர்ச்சி கொண்டவளாக, எண்ணத்தில் தெளிவு கொண்டவளாக, கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவளாக, கணவனுக்கு நல்லுரை பகர்பவளாக, சுற்றத்தாரின் நலம் பேணுபவளாக, சோம்பலற்றவளாக, காதல் மனம் கொண்டவளாக, சமயப்பற்று மேலோங்கியவளாக ஆங்காங்கே அழகுடன் மிளிர்கிறாள்.

அழகென்றால் அதற்கான விளக்கம் நீதான்
அன்பென்றால் அதற்கான எழுத்தே நீதான் (பா.எ.592)

எனப் பெண்மையின் வனப்பு மாண்புற விளக்கப்பட்டுள்ளது ‘பொழிலுறு படலத்தில்”. “தலைவியானவள்-சிந்தைக்குக் குளிரூட்டும் செஞ்சொற் கோவையாகவும், இளமைத் திறங்காட்டும் தென்றல் பாவையாகவும், மந்தைக்கே வழிகாட்டும் மனையின் முதல்வியாகவும். மாண்பின் உரைகல்லாய்த் திகழ்கின்றாள். அதுமட்டுமா? தந்தைக்கே அறம் கூறும் சிலம்புச் செல்வியாகவும், தாயர்க்கே நெறிகாட்டும் தமிழ்த்தாய் ஒளவையாகவும், நம் முந்தையராம் முனிவரெல்லாம் சொல்லிவைத்த மூதுரைகளின் படிவாழ்ந்த முதன்மைப் பெண்ணாகவும் தலைவி திகழ்கிறாள் என்பதை,

சிந்தைக்கே குளிரூட்டும் செஞ்சொற் கோவை
சீரிளமைத் திறங்காட்டும் தென்றல் பாவை
மந்தைக்கே வழிகாட்டும் மனையின் முதல்வி
மாண்புக்கே உரைகல்லாய்த் திகழும் தலைவி
தந்தைக்கே அறங்கூறும் சிலம்புச் செல்வி
தாயர்க்கே நெறிகாட்டும் தமிழ்த்தாய் ஒளவை
முந்தையராம் முனிவரெலாம் சொல்லி வைத்த
மூதுரைகள்படி வாழ்ந்த முதன்மைப் பெண்ணாள் (பா.எ. 441)

என்று கூறுகிறார். அன்ன நடையும், அரம்பை அழகும், கருமேகக் கூந்தலும், சுழி போன்ற கொண்டையும், கெண்டை விழியும், விற்போல் வளைந்த நெற்றியும், வானவில் போன்ற விற்புருவமும், அறிவை மயக்கும் நிறமும், அணிகலன் அணிந்த இரதி போல தலைவி தலைவனுக்குத் தோன்றுகிறாள். அவளுடைய அழகு பாடல் 631 முதல் 644 வரையிலும் தலைவனின் புகழ் மொழிகளாகவும், 645 முதல் 656 வரையிலான பாடல்கள் முயக்க மொழிகளாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.

உன்குழல் சுருள்களின் அழகில் பட்டே
உலகாள் அரசனும் சிறைப்பட நேரும்
அன்பிற் குரிய அரசிள மகளே!
அழகே! அழகே! எத்துணை அழகே! (பா.எ.414)
அன்பே! இன்ப மகளே! எத்துணை
அழகே எத்துணைக் கவர்ச்சி ஆனாய் (பா.எ. 415)

 

என்பன அவற்றுள் சிலவாம்.

“முத்தமிழாள்” என்னும் தலைப்பில் தலைவி தலைவனுக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்தமிழாய் காட்சித் தருவதை ஆசிரியர் 657 முதல் 665 வரை உள்ள  பாடல்களில் விளக்கிக்கூறுகிறார்

“இயற்றமிழ்! என்றணைத்தான் எழுந்து சென்றே” (பா.எ.657)
“இசையமுதே! என்றவளின் இடையைத் தொட்டான்” (பா.எ.659)
“நாடகத்தின் பிறப்பிடமே! நங்காய் என்றான்” (பா.எ.661) என்ற பாடல் வரிகளால் தெளிவுப்படுத்துகின்றார்.

பெருமை:
ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும் என்றார் பாரதி. அந்த வகையில் எல்லா நிலையிலும் பெண்ணைப் போற்றும் பேராசிரியர் பெண்மையைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ‘மனைவியர் மீது குற்றமிலை’ என்னும் பகுதியில் பெண்மையைப் போற்றியுரைக்கின்றார். அன்புடைய வாழ்வில் அவலம் நேராத வண்ணம், நல்லபல அறிவுரைகளைத் தருவதாகவும், என்பையும் தர நினைக்கும் பெண்டிர்க்கு இணையே இல்லை என்று உரைக்கின்றார். ஆணை மதித்துப் போற்றும் குணம் கொண்டோர் பெண்களென்றும், குடும்ப உறவில் என்றும் விரிசலைக் காணாத, கணவரின் புகழுக்காகப் பெரிதும் துணையாயிருப்பர் என்பதையும் வலியுறுத்துகிறார்.

“என்பெனினும் நமக்காக ஈதல் செய்ய
எண்ணுபவர் அவரென்றால் மிகையே யில்லை (பா.எ. - 1905)
நாவிருக்கும் வரைநீரே யூறு மாப்போல்
நம்முறவில் அவரென்றும் விரிசல் காணார்”
பூவிருக்கும் வரைதேனே இருத்தல் வேண்டும்
புகழ்பெறுதற் கவர்துணையாய் என்றும் இருப்பர் (பா.எ. - 1906)

ஓவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பதை நினைவுபடுத்தும் வகையில் இப்பகுதி உள்ளது.

இக்காப்பியத்தில் “பெண்ணலம்” தலைப்பிற்கு மணிமகுடமாய் அமைந்தது ஞானப்பூப்படலம். கதைத் தலைவி ‘பார்கவி’ அருள் நீராட்டுப் பெற்று ‘ஞானப்பூ’ (தெரேசாள்) என்ற பெயர் பெற்று சிறப்பித்தது குறித்துக் கூறும் பகுதியாக உள்ளது. கடல் என்றால் நீர் இருக்க வேண்டும், பகலென்றால் நல்லிரவு இருக்க வேண்டும். அதுபோல் நல்ல காரிகை என்றால் கணவன் மனம் ஒத்து, அவர் செயல் இணைந்து, இல்வாழ்வு நடத்த வேண்டும். அவ்வகையில் தன் கணவன் கொண்ட மறை தானும் ஏற்றாள் பார்கவி என்ற ஞானப்பூ.

“தன்கணவன் கொண்டமறை தானும் ஏற்றாள்
ஊர்நீங்கிப் புதியமறை பற்றிக் கொண்டாள்
உற்றபெயர் ‘ஞானப்பூ’ என்றே ஆனாள்”? (பா.எ. - 2838)

இதில் பெருமைப்பட்ட பெண்மை தெளிவாகத் தெரிகிறது.

மென்மை:
பெண்கள் எத்தனை வலிமை கொண்டவர்களாக இருந்தாலும் பெண்மைக்கே உரித்தான மென்மையும் மேலோங்கியே காட்டப்படுகின்றது இக்காப்பியத்தில்.
“அன்னை மரி புலம்பல்” என்ற பகுதியில் மென்மையான பெண்மையின் உள்ளம் எப்படிப் புழுங்குகிறது என்பதைப் படிக்கும்போது கண்ணில் நீர் பெருகும். கிறித்து அடையும் கொடுமையைக் காண முடியாத அன்னை மனம் - கண்ணீரைக் குருதியாகச் சொரிகிறது. என்னையவர் எது செய்யினும் பொறுப்பேன் ஆனால் என் வயிற்று மைந்தனுக்கு இன்னல் செய்தால் எப்படிப் பொறுப்பது? தலையினில் வழிந்தோடும் குருதி கண்டு, தலையிலிடி விழுந்தது போல் அதிர்ச்சி கொண்டாள். மலையினிலே குறுக்கைதனைச் சுமப்பதற்கு, மைந்தன் பட்டதுன்பம் கண்டு அயர்ந்தாள். சிலையாகிச் சில சமயம் நிற்பாள். கொலைக்களத்திற்கு உடன் போகும் நிலைக்கு ஆளாகும் கொடுமையினை எண்ணியவள் அரற்றலானாள். மைந்தனின் கொடுமைகண்ட அவள் மனம், கண் வலிக்க, மெய்துடிக்க, துண்டு துண்டாய் அவளுடல் வெட்டுப்பட்டுத் துள்ளுகின்ற மீன்போல் தவித்து நிற்கின்றது. இதனை,

“அன்னைமரி பட்டதுவோ அதனின் மேலாம்
அவள்கண்ணீர் குருதியெனச் சொரிந்த தென்பார்”
என்னையவர் எதுசெயினும் பொறுப்பேன் ஆனால்
என்வயிற்று மணியவர்க்கா இன்னல் என்பாள் (பா.எ. - 1953)

தலையினிலே வடித்திருந்த குருதி கண்டே
தலையிலிடி விழுந்ததுபோல் அதிர்ச்சி கொண்டாள்
சிலையாகிச் சிலசமயம் நிற்பாள் மீண்டும்
சீவனுற்ற உணர்வாலே திகைத்து நிற்பாள் (பா.எ. - 1954)
துண்டுதுண்டாய் என்னுடலே வெட்டுப் பட்டுத்
துள்ளுகின்ற மீன்போல தவித்து நிற்க (பா.எ. - 1958).

இயேசுபிரானின் குருதி வழியும் முகத்தைப் பார்க்க முடியாமல் பெண்கள் துடித்தனர். அவர்களின் கரங்கள் ஓடிச் சென்று குருதி துடைக்க முன்வந்தன என்பதை

வழிநெடுகக் கண்ட பெண்கள் வாய்புலம்பி
வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு (பா.எ. - 1950)

“அவருள்ளே ஒருபெண்ணே முன்னர் வந்தாள்
அவர்முகத்தைத் துடைப்பதற்கே முந்தி நின்றாள்” (பா.எ. - 1951)

என்று கூறுகிறார்.

அன்னை மரியினை,

ஏங்குமனம் தாங்குகின்ற நிலையில் இல்லை
அனலன்ன பெருமூச்சை அயிர்த்து நின்றாள்
அவள்சுற்றிச் சிலபெண்கள் நின்றிருந்தார் (பா.எ. - 1967)

இங்ஙனம், பெற்ற தாயின் மனப்புலம்பலையும், இயேசு கிறித்துவின் இன்னலைக் காண முடியா பெண்டிரின் மென்மை நிலையையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் பேராசிரியர்.

காதல்:
காதலனை நினைந்துருகும் பெண்ணின் எண்ண அலைகளைப் பாடல் எண் (442 முதல் 449) வரை மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார். 455-ஆம் பாடலில், தலைவன் மனத்தில் தலைவியின் தோற்றமானது, இருள்கிழிக்கும் மின்னலெனவும், குறளின் அறக்கருத்தை ஒத்த திருவடி நடை அன்னமெனவும் இருந்தன. பூக்காடு போன்ற அவளுறுப்பின் அழகால், குருகுலத்தில் பயிலாத இன்பக் கல்விக் குருவாக அவள் இடம் பிடித்தாள் என்று வர்ணிக்கின்றார்.

“கருங்குயிலின் நிறமொத்த இருளின் ஊடே
கண்பறிக்கும் மின்னலென எதிரில் நின்றாள்
திருக்குறளின் அறக்கருத்தை ஒத்தாற் போன்ற
திருவடியால் நடைபயின்ற அன்னம் போன்றாள்
திருமகளே ஒருபூவில் வீற்றி ருக்க
திருவுடலின் அனைத்துறுப்பும் பூக்கா டானாள்
குருகுலத்தில் பயிலாத இன்பக் கல்வி
குருவாக அவனுளத்தில் இடம் பிடித்தாள்” (பா.எ. - 455).

இருவரும் மாறிமாறி இதயம் புக்கே
இவனவளாய் அவளிவனாய் ஆகி விட்டார் (பா.எ. - 457)

என்றுபாடுகிறார். பெண்ணின் காதல் உள்ளத்தை, காதலனுடன் மனம் ஒருமித்துப் போதலை, இரண்டறக் கலக்கும் இன்ப நிலையை 457, 458 ஆம் பாடல்களில் விளக்குகிறார். காதல் மீதுரத் தலைவியின் அழகைப் பெருமிதத்துடன் எடுத்துரைக்கின்ற பகுதியாக

“அழகியெனில் அவள்தானே அழகி யாவாள்
அன்னமயிற் கடுத்ததொரு நிலையில் ஆவாள்
குழலழகில் குமிழ்ச்சிரிப்பில் குளிரும் நெற்றிக்
கூன்பிறையில் கூடுதற்காம் குன்றி ரண்டில்
மழலையுறு மொழிமயக்கில் மயிலின் நடையில்
மான்வழியில் மையலுறும் பார்வை தன்னில்
தொழற்குரிய தெய்வமெனச் சொன்னால் அவளோ
தொல்பாவ மனுக்கலத்தில் தோன்றி விட்டாள் (பா.எ. - 459)

என்னும் பாடல் அமைகிறது. காதலில் கூடல் சுவையினை பாடல் 464 முதல் 484 வரை மிகவும் அற்புதமாகக் கூறியிருக்கின்றார்.

கற்பு:
பெண்ணுக்கு அலங்காரம் கற்பு.  உயிரைப்போல் கற்பைக் காக்க வேண்டும். நிலைத்த நல்ல குணங்களால் தன்னைத்தான் காத்துக் கொள்வதுதான் கற்பாகும். இதனால் தான் கற்புக்கு ‘நிறை’ என்று பெயர் வைத்தனர். கற்பு நெறிவழுவாமல் தானும், தன்னைச் சாhந்;தோரும் நலம் பல பெற்று மகிழ்வுடன் வாழ நினைக்கும் குணமே பெண்மை குணம் என்பதைத் திருமணப்படலம் முழுக்க உரைக்கின்றார் பேராசிரியர் இன்னாசி அவர்கள். நாயகனும், நாயகியும் அன்றில் பறவைகளாய் வலம்வர நாயகனின் அன்பாலும், அரவணைப்பாலும் நாயகி மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறாள் என்பதை,

“கனங்குழையால் மகிழ்வெள்ளம் தனில்மி தந்தாள்
கண்டவர்கள் தாமதனில் நீந்த லானார்” (பா.எ. -544)

என்று விளக்குகின்றார். கற்பின் வலிமைக்குக் கீழ்க்கண்ட வரிகள் பெருமை சேர்க்கின்றன.

“சிலம்புமகள் கற்புக்கே விளக்க மாகிக் (பா.எ. - 306)

“கற்புக்கு நீஅரசி பண்பால் என்பேன்” (பா.எ. - 641)

“தமிழகத்துக் கற்புநெறி தானும் சார்ந்து” (பா.எ.-537)

“கற்பினுக்கே அணிகலம்நீ என்றான் அவனே (பா.எ. -680)

“ஈனமிகு தீப்பார்வை பார்ப்போர் நோக்கி
ஈட்டி விழி தனைப்பாய்ச்சும் புலியாய் ஆனாள் (பா.எ.-311)

“கார்குழலின் நிறம்விளங்கக் கற்பு விளங்க
கண்ணியவள் ….” (பாடல் -308)

இவ்வாறு காப்பியப் பெண்மணி கற்பின் சிகரமாய் வாழ்ந்ததாக ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார்.

இல்வாழ்க்கை:
இல்வாழ்க்கையில், இருமனம் ஒத்து உயர்வான சிறப்பைப் பெறுகிறது என்கின்றார் பேராசிரியர். இல்வாழ்க்கையைப் போற்றும் தன்மை “இல் வாழ்வு” பகுதியில் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

“மனமொத்தார் உடலொத்தார் மகிழ்வும் ஒத்தார்”
தினமுழுதும் நொடியாகப் பொழுது கழியத்
தீராத இன்பத்தை வழங்கல் ஒத்தார்
சினந்தவிர்ப்பில் குணமொத்தார் செய்கை ஒத்தார்
சீர்சிறப்பு புன்சிரிப்பாம் அனைத்தும் ஒத்தார் (பா.எ. -576)

கணவனவன் மனைவியவள் இவரைப் போலக்
கண்டிலமே இல்லின்பம் என்று நோவர் (பா.எ.-583)

கணவன் தான் எடுத்த முடிவினை வெளிப்படுத்தாமல், மனைவியின் எண்ணத்தைக் கேட்க நினைக்கும் போது, மனைவியே கணவன் உள்ளத்தைப் புரிந்து கொண்டு, அவன் சொல்லாதிருந்தும் அவனது உள்ளக்கருத்தினைத் தானே உணர்ந்து கொண்டவளாய் அவனைச் சோதிக்காமல், நல்லோர் சொல் நன்மைக்கே, நிறைவேற்றுவீர் உம் விருப்பத்தை என்று, உள்ளக்குறிப்பை உணர்ந்து, கணவன் விருப்பம் நிறைவேற்றும் நல்மனைவியாக காட்சி தருகின்றார்.

எண்ணத்தை ஒருமுகமாய் அமைத்துக் கொண்டான்
இல்லாளின் எண்ணமதைக் கேட்க எண்ண
இல்லாளே இவனுளத்தைப் புரிந்து கொண்டாள்
சொல்லாமல்     அவன்கருத்தை உணர்ந்து கொண்டே
சோதிக்க நினைக்காமல் தானே சொன்னாள்
நல்லோர்கள் சொல்வதெலாம் நன்மைக் கேதான்
நாளைக்கே பணியேற்க விரைவீர் என்றாள்! (பா.எ. - 881)

இதில் தலைவியின் மூத்தோர் சொல் மதிக்கும் மனப்பான்மைத் தெளிவுறத் தெரிகிறது.

சுற்றம் தழுவுதல்
நல்லறமாம் இல்லறத்தின் அடித்தளமே அன்பு மனம் தான். தனிக்குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள நினைக்கும் தலைவி, அதற்காக பெற்றோரைக் கைவிட நினைக்கவில்லை. தாய், தந்தை, மாமன், மாமி என்று பேதமற்ற முறையில் பேணிக்காக்க முன் வருகின்றாள். சுற்றம் சூழ வாழ விரும்புகிறாள். கூட்டுக் குடும்பம் இன்பவாழ்விற்குத் தடையாக இருக்குமோ என்ற ஐயத்தால், சற்றே தொலைவில்  தனித்தனியாய் இருக்க விரும்புகின்றாள். அப்படி தனித்து இருந்தாலும், தாமும், தம் உறவினர் மூலமும் அடிக்கடி அவர்களைப் பார்த்து வரும் எண்ணத்தையும், உதவும் மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறாள். இதனைத்தான் கீழ்க்கண்ட வரிகள் உணர்த்துகின்றன.

“உற்றார்கள் பார்த்துவர உதவி செய்வோம்
உள்ளன்பாய்    அடிக்கடி போய்ப் பார்ப்போம் (பா.எ. -607)

“சுற்றஞ்சூழ் வாழ்வுதனை விரும்பு கின்றேன்” (பா.எ.-610)
“என்பெற்றோர் உம்பெற்றோர் என்ற பேதம்
எள்ளவும் என்னிடத்தில் இருந்த தில்லை” (பா.எ.-616)

இவ்வரிகளால் பெண் கணவனுடன் அனைத்திலும் ஒத்துப்போகும் தன்மையையும், பெற்றோரை தெய்வம் என்று போற்றி திருப்பணிகள் செய்யத் தவறவில்லை என்றும், நம்மை ஆளாக்கிய அவர்களுக்காக எந்நாளும் கடன் ஆற்ற ஒருபொழுதும் தான் கலங்கியவள் இல்லை என்பதை உரைக்கிறாள்.

“அறத்திற்கே தவறிழைக்க விரும்பு கில்லேன்
மாண்புடைய பெற்றோரை மறத்தல் செய்யேன்
திறத்தாலே அவர்தெய்வம் என்றே எண்ணி
கடனாற்ற ஒருபொழுதும் கலங்கி நில்லேன்” (பா.எ.-618)

“அமிழ்தாம் நீ என்னோடென் சுற்றம் எல்லாம்
அரவணைத்து மகிழ்வளிக்கும் தென்ற லானாய்” (பா.எ.-687)

இங்ஙனம் இல்லறம் சிறக்க பெண்மை வாழ்கிறாள்.

கணவரைப் பேணல்:
நன் மனைவி எப்படி இருக்க வேண்டும், இருந்தால் கணவனின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை “நல்ல மனைவி” என்ற தலைப்;பில்,

“நல்ல மனைவி நாடும் சொத்து
நாயகன் வாழ்வு மகிழ்வாய்க் கழியும்
வல்ல துணிவு கொண்டவ ளானால்
வாழ்வும் அவனுக் கிரு மடங்காகும். (பா.எ.-1314)

என்ற பாடல் வரிகளில் கூறியுள்ளார். கணவன் பிற சமயம் தழுவியபோதும், கணவனின் உண்மைப் பண்பை எடுத்துரைக்கும் நல்ல மனைவியாக, கணவனைப் போற்றும் பண்பு கொண்டவளாகத் தலைவி திகழ்கிறாள்.

குறிப்பறிதல்:
“கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்-எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி” (குறள் -701)

என்கிறது குறள். ஒருவன் ஒன்றும் கூறாமல் இருக்கும்போது, அவன் முகத்தைப் பார்த்து உள்ளக் கருத்தினை அறிய வல்லவன், எக்காலத்தும் நீங்காத நீரைக் கொண்ட கால் சூழ்ந்த உலகிற்கு அணியாவான். இதனை நோக்கும் போது தலைவி தலைவன் குறிப்பறிந்து செயல்படும் நிலை நினைவிற்கு வருகின்றது.

“சொல்லாமல் அவன்கருத்தை உணர்ந்து கொண்டே
சோதிக்க நினைக்காமல் தானே சொன்னாள்” (பா.எ.-881)

என்னும் பாடல் வரிகளால் தலைவி தவைனின் உளக்கருத்தை அறிந்த நிலையை ஆசிரியர் விளக்கியுள்ளார்.

கல்வி:
அறியாமை அச்சத்தின் வேர்: அச்சமே அடிமைத்தனத்தின் மூலவித்து. அடிமைத்தனம் அகல, அறியாமை விலகப் பெண்கல்வி துணை நிற்கிறது. கல்வி அறிவு இல்லாத பெண்களே துன்பங்களுக்கு ஆட்படுகின்றனர். குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவதற்கும், பெற்ற மக்களைப் பேணி வளர்த்தலுக்கும், உலகத்து மக்களை நன்கு காப்பதற்கும், தீமையை விலக்கி, கயமை நீக்கி, அறியாமை போக்கி, அறிவைப் புலப்படுத்துகின்ற கல்வியைக் காப்பதற்கும் பெண்கல்வி சிறப்பிடம் பெறுகிறது. காப்பியம் முழுதும் பெண்மை பெற்ற உயர்விற்கு அவளது கல்வியறிவே காரணம் என்று கூறலாம். தலைவி மட்டுமல்லாது, பிற பாத்திரப் படைப்பு மாதர்களும் கல்வியில் சிறந்தனர் என்பதும் மறைமுகமாகத் தெரியும் உண்மை. கல்வி கற்ற பெண்ணால் மட்டுமே குடும்பத்தைப் பிள்ளைகளைப் பேணி வளர்க்க முடியும். மைந்தர்களை நற்பண்புடையோராய்த் திகழவைக்க முடியும். இதைத்தான் நாட்டில் பெண்கல்வி அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளதை

“பெண்கல்வி நம்நாட்டில் அதிக மாகும்
பேராளர் தூண்டலினால் அறிவு மாகும்” (பா.எ.-757)

என்ற பாடல்வரிகள் விளக்குகின்றது.

ஞானம்:
நல்ல ஞானமுடைய பெண்ணாகத் தலைவி பல இடங்களில் திகழ்கிறாள். மனைவியாய், கணவனுக்கு ஏற்ற நேரத்தில், ஏற்றதை உரைக்கும் நன்மந்திரியாய்த் திகழ்ந்து பெருமை சேர்க்கிறாள் என்பதை

“ஏற்றுமொழி, தூற்றுமொழி இரண்டும் ஒன்றாய்
எண்ணுகின்ற  உளம்வேண்டும் என்றாள் மனைவி” (பா.எ.-846)

என்ற பாடல் வரிகளில் தெளிவுப்படுத்துகிறார். தன் கணவன் வீரத்தைக் குறைவாக எடைபோடாமலும், உயர்ந்த இடத்தில் உயர்த்திப் பார்க்கும் நோக்குடனும் அறிவுரை பகர்கின்றாள். பலர் போற்றும் போற்றுதலுக்கு மயங்காமலும், தூற்றுதலுக்குத் துன்பப்படாமலும், ஏற்றுமொழி, தூற்றுமொழி இரண்டினையும் ஒன்றாய்க் கருதுகின்ற உள்ளம் வேண்டும் என்கின்றாள். வேலையென்று சேர்ந்துவிட்டால் கடிதுழைத்து வெற்றி காண்பதே வீரர்க்;கழகு. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டால், பாலைவனத்தையும், பசுஞ்சோலையாக மாற்றுவது தான் நம் கடமை என்று எடுத்துரைக்கின்றாள். இதிலிருந்து அவளது ஞானத்தின் மேன்மை தெரிகிறது.

“வேலையெனச் சேர்ந்து விட்டால் கடிதுழைத்து
வெற்றி காணல் வீரர்க்காம் அழகே யாகும்.
பாலைவனம் என்றாலும் பொறுப்பை ஏற்றால்
பைஞ்சோலை யாக்கிடுதல் கடமை என்றாள் (பா.எ.-862).

அஞ்சாமை:

கற்றார் அவையிடையே அஞ்சாது சென்று பேச வல்லவர் மிகச் சிலரே. அங்ஙனம் இத்தலைவி அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரப் பெண்மணியாகத் திகழ்கிறாள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்ற கருத்திற்கொப்ப கதைத் தலைவி ஒவ்வொரு சூழலிலும் கணவனுக்கு நன்மொழிகள் கூறும் பாவையாகத் தோன்றுகின்றாள். கணவன் தனக்குக் கிடைத்த நன்மையும், நல்வாய்ப்பும் தலைவியைக் கரம் பிடித்த காரணந்தான் என்று கூறினாலும், புகழ்ச்சிக்கு மயங்கா வண்ணம் ‘நேரம்-காலம்’ வாய்க்கப் பெற்றால் நன்மை தானாய் வந்தடையும் என்று அவைதனில் கூறுகிறாள்.

“பனையதனில் காகம்வரத் தானே வீழ்ந்த
பழம்போன்ற திதுவாகும் வேறொன் றில்லை
வினைவலராய்ப் பணியதனில் பேரைப் பெற்று
வினைத்திட்பம் உடையனெனக் காட்டும் என்றாள்”. (பா.எ.-845)

“அவருள்ளே ஒரு பெண்ணே முன்னர் வந்தாள்
அவர்முகத்தைத் துடைப்பதற்கே முந்தி நின்றாள்” (பா.எ.1951)

என்னும் பாடல்வரிகளில் இயேசுவின் வியர்வை  நிறைந்த முகத்தைத் துடைக்க படைவீரர்கள் கூடியுள்ள இடத்தில், பெண்ணொருத்தி அஞ்சாமல் சென்றக் காட்சியைக்கூறி பெண்மையின் வீரத்தை எடுத்துக்காட்டுகிறார்.

முற்போக்குச் சிந்தனை:
மூடநம்பிக்கையினை ஒழிப்பவளாகத் தலைவி தோன்றுகிறாள். சோதிடத்தைத் தொழிலாகக் கொண்டோரெல்லாம் சோம்பல் வளர்க்கின்ற கூட்டத்தார். பாதிக்கப்பட்டோரை முதலாக வைத்துப் பணம் பறிக்கும் வணிக முறைத் தொழிலாளர்கள் என்பதை

“சோதிடத்தைத் தொழிலாகக் கொண்டோர் எல்லாம்
சோம்பலைத்தான் வளர்க்கின்ற கூட்டத் தாராம்
பாதிக்கப் பட்டோரை முதலாய் வைத்துப்
பணம்பறிக்கும் வணிகமுறைத் தொழிலோர் ஆவர்
தேதிக்கும், நாளுக்கும் பலன்கு றித்துத்
தெருவினிலே நிற்கவைக்கும் தொழிலோர் ஆவர்
நீதிநெறி வேண்டாமல் தெய்வம் வந்து
நிதிகொட்டும் என்றெல்லாம் சொல்லும் தொழிலோர் (பாஎ.-2780)

“சோதிடங்கள் சகுணங்கள் சூனி யங்கள்
சொல்கின்ற மந்திரங்கள் தந்தி ரங்கள்
வீதியிலே கிளிவைத்தக் கூறு கின்ற
ஒன்றுமிலாப் பொய்ப்புனைவாம் கதைகள் என்போம்” (பா.எ.2781)

என்ற பாடல் வரிகளால் ஆசிரியர் கூறுகிறார். ‘பாவம் போக்கும் வழி’ என்ற பகுதியில், தலைவியின் நற்சிந்தனைக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

முடிவுரை:
பாரதியார் “பெண்கள் இந்நாட்டின் கண்கள்”    என்கிறார். “விழுந்தால் மரம், இல்லையேல் உரம்” என்று நற்பண்புகளைப் பெற்றவர்கள் பெண்கள். பெண் அன்பின் அடிப்படையில் தாயாகவும், பாசத்தின் அடிப்படையில் சகோதரியாகவும், பகிர்வின் அடிப்படையில் தோழியாகவும், அரவணைப்பின் அடிப்படையில் நிர்வாக தலைவியாகவும், புதிய உயிர்களை உலகுக்குக் கொடுப்பதன் அடிப்படையில் தெய்வமாகவும் கொண்டு இவ்வுலகில் வலம் வருபவள் பெண். அத்துணைப் பண்புகளையும், மொத்தமாய் பெற்ற பெண்களை ஆசிரியர் சூ.இன்னாசி காப்பியம் முழுவதும் படைத்துள்ளதை கண்டு இன்புற்றோம். காப்பியத்தில் மூழ்கிப் “பெண்ணலம்” என்ற சிறுமுத்தினைக் கண்டோம். பெண்மையின் அத்துணைச் சிறப்புகளையும் உள்ளடக்கி, ஆங்காங்கே மிளிர விட்டு, அரியதொரு காப்பியத்தைத் தந்தருளிய பேராசிரியர் இன்னாசி அவர்களின் தமிழ்த்தொண்டினை நாம் மறவாமல் காக்க என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.

சான்றெண் விளக்கம்
1.    பெண்ணின் பெருமை திரு.வி.க. ப.-2.
2.    தமிழ் லெக்ஸிகன் ஏழட.5 ப.2860 செ.ப.கழகம்.

பார்வை நூல்கள்
முதன்மை நூல்:
திருத்தொண்டர் காப்பியம் முனைவர். சூ. இன்னாசி, காவ்யா பதிப்பகம், சென்னை – 600 024.

துணை நூல்கள்
1.    கிறித்தவச் சிற்றிலக்கியங்களில் வாழ்வியல் மதிப்பீடுகள் - அருள்திரு. முனைவர். சி.மணிவளன், சே.ச. கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார்   
தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி-2.
2.    இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவ இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள்      - தமிழாய்வுத் துறை மற்றும் கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார்   
தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி-2.    
3.    கிறித்தவ இலக்கிய மாண்பு    :     தமிழ்மாமணி முனைவர். பா.வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், 3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை – 627002.
4.    திருத்தொண்டர் காப்பியத்திறன்    :     தொகுப்பாசிரியர். சண்முகசுந்தரம் காவ்யா பதிப்பகம், சென்னை – 600 024.

கட்டுரையாளர்: *- ம. ரூபிஅனன்ஸியா, முனைவர் பட்ட ஆய்வாளர், புனித சிலுவைத் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி - 2 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R