எழுத்தாளர் செ.கதிர்காமநாதன்இன்று 3600 கிங்ஸ்டன் வீதியில் அமைந்திருக்கும் 'ஸ்கார்பரோக் கிராமச்சமுக' நிலையத்தில் கலாச்சாரப்பேரவை, கரவெட்டி மற்றும் தேடகம் - கனடா ஆகியவற்றின் ஆதரவில் வெளியிடப்பட்ட அமரர் 'செ.கதிர்காமநாதன் படைப்புகள்' என்னும் நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். நிகழ்வுடன் கூடவே 'காலம்' செல்வம் அவர்களின் 'வாழும் தமிழ்' புத்தகக்கண்காட்சியும் நடைபெற்றது.

செல்லும்போது சிறிது தாமதமாகிவிட்டது. நிகழ்வு எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர் அ.கந்தசாமி உரையாற்றிக்கொண்டிருந்தார். தனக்கேயுரிய கவித்துவ மொழியில் அவரது உரை அமைந்திருந்தது. அவர் தனதுரையில் செ.கதிர்காமநாதனின் குடும்பச்சூழல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். செ.க.வே முதன் முறையாக பிறநாட்டுப்பாத்திரங்களை வைத்துப் புனைகதை எழுதியவராக அவர் தனதுரையில் குறிப்பிட்டார். அதற்குதாரணமாக செ.க.வின் 'வியட்நாம் உனது தேவைதைகளின் தேவவாக்கு' என்னும் சிறுகதையினைச் சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் செ.கதிர்காமநாதனின் தமக்கையாரான இந்திராணி மகேந்திரநாதன் அவர்கள் தனது தம்பி பற்றிய உணர்வுகளைப்பகிர்ந்து கொண்டார். மிகவும் மெதுவான குரலில் அவரது உரை அமைந்திருந்ததால் பலருக்கும் ஒழுங்காகக் கேட்டிருக்குமோ என்று சந்தேகமாயிருந்தது. அவர் தனதுரையில் இளமைக்கால வாழ்வு, இலக்கிய முயற்சிகள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைத்தார்.

அவரைத்தொடர்ந்து எழுத்தாளர் 'அலை' யேசுராசா அவர்கள் செ.கதிர்காமநாதனின் புனைகதைகள் பற்றி, மொழிபெயர்ப்புக் கதைகள் பற்றி விரிவாகவே எடுத்துரைத்தார். செ.கதிர்காமநாதன் நல்லதொரு வாசகராகவும், எழுத்தாளராகவுமிருந்ததாலேயே தரமான பிறமொழி ஆக்கங்களையெல்லாம் அவரால் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க முடிந்தது என்பதைச்சுட்டிக்காட்டினார். அவரைத்தொடர்ந்து நூல் வெளியீட்டுக்குத் தேடகம் (கனடா)வுடன் இணைந்து ஒத்துழைத்த கரவெட்டி கலாச்சாரப் பேரவையினைச்சேர்ந்த அம்பிகைபாலன் செ.கதிர்காமநாதன் பற்றிய தனதுரையினை ஆற்றினார்.

அடுத்து முனைவர் பார்வதி கந்தசாமியின் உரை அமைந்திருந்தது. அவர் தனதுரையில் செ.கதிர்காமநாதனின் படைப்புகளில் வெளிப்படும் பெண்ணியக்கூறுகளை விதந்துரைத்தார். அத்துடன் அவர் தனது வேலை அனுபவங்களையும் அவ்வப்போது எடுத்துரைத்து, அவற்றினை செ.க.வின் படைப்புகளுடன் ஒப்புநோக்கித் தனது கருத்துகளை முன் வைத்தார். உரையினோரிடத்தில் பெண்ணியவாதியாக அறியப்பட்ட அவர் 'கற்பழிப்பு' என்ற சொல்லினைப் பாவித்தது ஆச்சரியமாகவிருந்தது. தவறுதலாகப் பாவித்து விட்டாரென்று எண்ணுகின்றேன்.

நிகழ்வில் செ.கதிர்காமநாதனின் சட்டமிடப்பட்ட உருவப்படமொன்றினை மார்க் அவர்கள் தேடகம் சார்பில்  செ.க.வின் சகோதரிக்கு வழங்கினார். அதனைத்தொடர்ந்து செ.க.வின் சகோதரர் ரவி நன்றியுரையும், தொடர்ந்து மார்க் அவர்களின் தேடகம் சார்பில் நன்றியுரையும் நடைபெற்றது.

இடையில் நடைபெற்ற சிறப்புப்பிரதிகள் வழங்கும் நிகழ்வில் நிகழ்வுக்குத் தலைமை வகித்த பா.அ.ஜயகரன் 'பதிவுகள்' ஆசிரியர் வ.ந.கிரிதரன் என்று என்னையும் அழைத்துச் சிறிது தர்மசங்கடத்துக்குள்ளாகி விட்டார். முன் கூட்டியே என் அனுமதி பெறாத நிலையில் அவர் அவ்விதம் அழைத்தது உண்மையிலேயே ஆச்சரியத்தினையே ஏற்படுத்தியது. இது போன்ற நிகழ்வுகளுக்கு முன் அனுமதியின்றி யாரையும் அழைப்பது தவிர்க்கப்பட வேண்டும். தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்தி விடுவதைத்தவிர்ப்பது நல்லது.

நிகழ்வில் கனடாக்கலை, இலக்கியவாதிகள் பலரைக்காண முடிந்தது. எழுத்தாளர்களான நவம், தேவகாந்தன், அகில், த.சிவபாலு, முனைவர் பார்வதி கந்தசாமி, மணி வேலுப்பிள்ளை, முனைவர் இ.பாலசுந்தரம், முன்னாள் வீரகேசரி ஆசிரியர் ஆ.சிவனேசச்செல்வன், ப.வி.ஶ்ரீகாந்தன், கற்சுறா, கருணா, தேடகம் மயில், தேடகம் குமரன், தேடகம் அருள், சிவவதனி பிரபாகரன் , டானியல் ஜீவா, முருகதாஸ், ஞானம் இலம்பேட், டிலிப்குமார் (தாய்வீடு ஆசிரியர்) , ''தேடகம்' ராதா எனப்பலரைக் காண முடிந்தது.

தேடகம் (கனடா) அமைப்பு கனடாத்தமிழ் இலக்கியத்துக்கும், ஈழத்தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்க்கும் வகையில் பங்களித்து வருவது பாராட்டுதற்குரியது. கவிஞர் சேரன், கவிஞர் ஜெயபாலன் போன்றோரின் கவிதைத்தொகுதிகளை மற்றும் பா.அ.ஜயகரனின் நாடகப்பிரதியினை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. 'தேடல்' என்னும் கலை, இலக்கிய சஞ்சிகையினை வெளியிட்டுள்ளது. நவீன நாடகங்கள் பலவற்றை மேடையேற்றியதுடன், அவ்விதமான நாடகங்களின் தொடக்கப் புள்ளியாகவும் தேடகம் விளங்குகின்றது. குறிப்பாகத் 'டொராண்டோ'வில் மேடையேறிய முதலாவது நவீனத் நாடகம் நானறிந்த வரையில் 'நிரபராதிகளின் காலம்' நாடகமே.

நிகழ்வின் இடையில் இலண்டனிலிருந்து தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டு இங்கு வருகை தந்திருக்கும் கவிஞர் தேவஅபிராவுடன் சில நிமிடங்கள் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. முகநூல் மூலமும், 'பதிவுகள்' இணைய இதழ் மூலமும், அவரது படைப்புகள் மூலமும் அறிந்திருக்கும் கவிஞர் தேவஅபிராவுடனான முதற் சந்திப்பு இதுவே.

அமரர் 'செ.கதிர்காமநாதன் படைப்புகள்' போன்று ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளின் படைப்புகள் எதிர்காலத்தில் வெளிவருவதற்கு இந்த நூல் முன்மாதிரியாக விளங்கிட வேண்டுமென்பதென் விருப்பம். இவ்வகையான வெளியீடுகள் படைப்புகளை ஆவணப்படுத்துவதுடன், எழுத்தாளர்களை நினைவு கூர வைப்பதுடன், இன்றைய தலைமுறைக்கும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும் மீண்டும் இவ்விதப்படைப்பாளிகளையும், அவர்தம் படைப்புகளையும் அறிமுகப்படுத்தும் பணியினையும் செய்கின்றன. அது பாராட்டுதற்குரியது. இதற்காகத் தமிழர் வகைதுறை வள நிலையத்தினைப்பாராட்டலாம்.

அமரர் செ.கதிர்காமநாதனின் மொழிபெயர்ப்பு நாவலான 'நான் சாக மாட்டேன்' மற்றும் 'மூவர் கதைகள்' தொகுப்பினை (செ.யோகநாதன், நீர்வை பொன்னையன் ஆகியோருடன் இணைந்து எழுதிய கதைகள்) 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம்:

நான் சாகமாட்டேன் - http://noolaham.net/project/180/17902/17902.pdf
மூவர் கதைகள் - http://noolaham.net/project/135/13431/13431.pdf

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R