1. நா.பா.வின் 'குறிஞ்சி மலர்' - நிலவைப் பிடித்துச் - சிறு கறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதிந்த முகம்,

நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்'நா.பார்த்தசாரதிஎன் பதின்ம வயதுகளில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் நாவல்களை நான் இரசித்து வாசித்திருக்கின்றேன். அவர் தமிழ்ப்பண்டிதராதலால், பழந்தமிழ் இலக்கியத்தில் அவருக்குள்ள புலமையினை அவரது படைப்புகளினூடு உணர முடியும். சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எனத்தமிழரின் பல்வகை இலக்கியப்படைப்புகளின் தாக்கங்களும் அவற்றினூடு விரவிக்கிடக்கும்.

பாத்திரப்படைப்பு, மொழி ஆகியவற்றுக்காக அவரது படைப்புகளை நான் என் பதின்ம வயதுகளில் விரும்பி வாசித்திருக்கின்றேன். அவரது படைப்புகளில் வரும் மாந்தர்களெல்லாரும் , சாதாரண மானிடர்களை விட ஒரு படி மேலானவர்கள்; இலட்சிய நோக்கு மிக்கவர்கள்; குறிஞ்சி மலர், பொன் விலங்கு நாவல்களில் வரும் அரவிந்தன், பூரணி, சத்தியமூர்த்தி போன்றவர்கள். இது பற்றி அவரிடமே ஒருவர் கேள்வி கேட்டிருந்தபோது அதற்கு அவர் அவ்விதமான பாத்திரங்களை வைத்து எழுதுவதிலென்ன தவறு என்று கேட்டதை எங்கோ வாசித்திருக்கின்றேன்.

அவரது நாவல்கள் அதிகமானவற்றில் முடிவு அவலச்சுவையிலிருக்கும். [ இவரைப்போன்ற இன்னுமொருவர் அக்காலகட்டத்தில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர் ஜெகசிற்பியன். அவரது படைப்புகளும் பெரும்பாலும் துன்பத்திலேயே முடிவுறும்.]

எழுத்தாளர் நா.பா.வும் நல்ல கவிஞர்களிலொருவர். மணிவண்ணன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். அப்பெயரிலேயே ஆரம்பத்தில் கல்கியில் நாவல்களையும் படைத்து புகழடைந்தவவர் அவர்.

அவரது நாவலான குறிஞ்சி மலரில் நாயகனான அரவிந்தன் அவ்வப்போது தன் மனதிற்குகந்த நாயகியான பூரணியைப்பற்றி எழுதிய கவிதை வரிகள் ஆங்காங்கே நாவலில் வரும். அவரது படைப்புகளை விரும்பி வாசித்த காலகட்டத்தில் இவ்விதமாக குறிஞ்சி மலர் நாவலில் ஆங்காங்கே காணப்படும் அரவிந்தனின் கவிதை வரிகளையும் விரும்பி வாசித்ததை இப்பொழுதும் நினைத்துப்பார்க்கின்றேன்.

குறிஞ்சி மலர் நாவலில் நாயகி பூரணி பற்றி நாயகன் அரவிந்தன் எழுதிய கவிதைகள் நயம் மிக்கவை; சுவை மிக்கவை. கீழுள்ள வரிகளை வாசித்துப்பாருங்கள். புரிந்து கொள்வீர்கள்.

பொன்காட்டும் நிறம்காட்டிப்
பூக்காட்டும் விழிகாட்டிப்
பண்காட்டும் மொழிகாட்டிப்
பையவே நடைகாட்டி
மின்காட்டும் இடைகாட்டி
முகில்காட்டும் குழல்காட்டி
நன்பாட்டுப்பொருள்நயம்போல்
நகைக்கின்றாய் நகைக்கின்றாய்
பண்பாட்டுப் பெருமையெலாம்
பயன்காட்டி நகைக்கின்றாய்.


நிலவைப் பிடித்துச் - சிறு
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதிந்த முகம்,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச்- சிறு
நளினம் தெளித்த விழி.

தரளம் மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவளம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெளியைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த் எழில்.


[குறிஞ்சி மலர் நாவலில் வரும் அரவிந்தனின் வரிகள்]

"நிலவைப் பிடித்துச் - சிறு
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதிந்த முகம்,"


நிலவுக்குக்கூட களங்கமுண்டு. ஆனால் பூரணியென்ற நிலவோ களங்கமற்ற நிலவு! அற்புதமான கற்பனை.

* மேலும் சில குறிப்புகள்....

'மணிபல்லவம்' என்னும் இவரது சரித்திர நாவலும் தமிழில் வெளிவந்த சரித்திர நாவல்களில் முக்கிய நாவல்களிலொன்றாக நான் கருதுகின்றேன். அதற்குக்காரணம் சிலப்பதிகாரம் எவ்விதம் சங்க காலத்து மாந்தரை மையமாக வைத்துப் புனையப்பட்டதோ அவ்விதமே இச்சரித்திர நாவலும் சங்க காலத்து மானுடர்களை பாத்திரங்களாகக்கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப்புதினம்.

இப்புதினத்தினூடு சங்க காலத்து மானுடர் வாழ்ந்த சமூகம் பற்றி, அக்காலகட்டத்தே அமைந்திருந்த நகரங்களின் அமைப்பு முறை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள முடியும்.

 

எழுத்தாளர் தேவகாந்தனுக்கு மிகவும் பிடித்த நா.பா.வின் படைப்புகளில் 'மணிபல்லவம்' முதன்மையானது. அடிக்கடி அவர் இந்நாவலைச் சிலாகித்துப்பேசுவதுண்டு.


2. பூங்குழலி - அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?

கல்கிபூங்குழலிஎழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் புனைவதிலும் வல்லவர்கள். அது மட்டுமல்ல இருவருமே தம் நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கேற்பக் கவிதைகள் எழுதி, தம் நாவல்களில் இணைப்பதில் வல்லவர்கள். கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஓடக்காரப்பெண் பூங்குழலியின் உணர்வுகளை மையமாக வைத்துக் கவிதையொன்று எழுதியிருப்பார். அந்தக் கவிதை ஒரு முறை வாசித்தாலும் வாசிப்பவர் நெஞ்சினை விட்டு அகலாத தன்மை மிக்கது.

'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்னும் அவரது கவிதையானது ஓடக்காரப்பெண் பூங்குழலியின் சோகம் ததும்பிய நிலையினைத்தெரிவிப்பது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அந்தக்கட்டத்தினையும், அந்தக்கவிதை வரிகளையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஒரு படைப்பானது இது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிச்சிறந்து விளங்குகின்றது.

அந்தப்பாடலும், அது பற்றி நாவலில் வரும் கல்கியின் வர்ணனையையும் இங்கு, தற்போது நீங்கள் வாசிக்கலாம். அது கீழே:

- "பூங்குழலிு படகில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு பாடினாள். அவளுடைய கானத்தைக் கேட்பதற்காகவே கடலும் அலை அடங்கி ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல் மெள்ள மெள்ளத் தவழ்ந்து வந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களும் இலை அசையாமல் நின்று அவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன போலும்! வானமும், பூமியும் அந்தக் கானத்தைக் கேட்டு மதிமயங்கி அசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்தக் கானத்தை முன்னிட்டே மூலைக் கடலை அடைந்து முழுகி மறையாமல் தயங்கி நிற்கின்றான் போலும்.

தேனில் குழைத்து, வானில் மிதந்து வந்த அப்பாடலைச் சற்றுச் செவி கொடுத்துச் கேட்கலாம்.

"அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே

வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"

அந்த இளமங்கையின் உள்ளத்தில் அப்படி என்ன சோகம் குடி கொண்டிருக்குமோ, தெரியாது! அவளுடைய தீங்குரலில் அப்படி என்ன இன்ப வேதனை கலந்திருக்குமோ, தெரியாது! அல்லது அப்பாடலில் சொற்களோடு ஒருவேளை கண்ணீரைக் கலந்துதான் பாடலை அமைத்துவிட்டார்களோ, அதுவும் நாம் அறியோம். ஆனால் அந்தப் பாடலை அவள் பாடுவதைக் கேட்கும் போது நமக்கு நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சி ஏனோ உண்டாகிறது." -

அண்மையில் வானதி பதிப்பக வெளிவந்த 'கல்கி பாடல்கள்' நூல் அவரது பாடல்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 'கல்கி பாடல்கள்' நூலில் கவிதையின் முழு வரிகளுமுள்ளன. ஆனால் கல்கி பொன்னியின் செல்வன் நாவலில் அவர் பாடலின் சில வரிகளையே அவ்வப்போது பாவித்திருப்பதாக நினைவு. அந் நூலிலுள்ள பாடலின் முழு வரிகளும் கீழே:

"அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே.
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே.

வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?

அலை கடல் கொந்தளிக்கையிலே
அகக் கடல்தான் களிப்பது மேன்?
நிலமகளும் துடிக்கையிலே
நெஞ்சக்ந் தான் துள்ளுவதேன்.

இடிஇடித்து எண் திசையும்
வெடி படும் இவ் வேளையிலே
நடனக் கலை வல்லவர்போல்
நாட்டியந்தான் ஆடுவதேன்.

'மீரா' திரைப்படத்தில் எம்.எஸ்.சுப்புலக்சுமி பாடுவதாக வரும் புகழ் பெற்ற பாடல் 'காற்றினிலே வரும் கீதம்'. இதனை எழுதியவர் கல்கி. ஆனால் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெற்றிருக்கவில்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

**********
\


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R