- கவிஞர் மஹாகவியின் பிறந்த தினம் ஜனவரி 9. அதனையொட்டிய பதிவிது.-

கண்மணியாள் காதை -- மஹாகவி -கவிஞர் மஹாகவி -
'காவியத்துக்கு ஒரு மஹாகவி' என்று அழைக்கப்படக்காரணமாக இருந்த காவியம் மஹாகவியின் 'கண்மணியாள் காதை' காவியம். அவலச்சுவை மிக்க காவியம். தீண்டாமைக்கொடுமையினை விபரிக்கும் குறுங்காவியமிது. கவிஞர் 'சடங்கு' என்று 'விவேகி'யில் எழுதிய தனது குறுங்காவியத்தின்  நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியம் 'கண்மணியாள் காதை' . குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. இக்காவியம் முதலில் அன்னை வெளியீட்டகம் (யாழ்ப்பாணம்) என்னும் பதிப்பகத்தால் நவம்பர் 1968இல் நூலாக வெளிவந்தது. மேலும் 'கண்மணியாள் காதை' தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினரால் வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி 'ஈழநாடு' பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த 'தேனி'யின் விமர்சனம்  'காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி' என்ற தலைப்புடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி 'கண்மணியாள் காதை'யும் எனக்கு மிகவும் பிடித்த காவியங்களிலொன்று. அதில்வரும் 'கண்மணி', 'செல்லையன்' ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது அதன் பெயரும், பாடு பொருளும், காவியத்தில் வரும் சில கவிதை வரிகளும் சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான 'காரிருள்' காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும்.  அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:

"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!" என்றோர் கதை வந்ததுண்டு -
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
'ஈழத் தமிழகம்' என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!"
என்ற ஒரு கதை சொல்வதுண்டு -
"ஏறி உய்ர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!" என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!

---
ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர்
அகழ்கின் றார் தம் நிலத்தினைத் தானே!

--

காவிய நாயகியான கண்மணியாள் பற்றி வரும் வரிகள்:

பெண் ணிருக்கும் அழகை யெல்லாம்
பேணி வைத்த பொற் குடமாம்.
விண்ணவர்க்கும் எட்டாது
விளைந்திருக்கும் நிலத் தமுதாம்.

கண் ணிமிர்த்தி அவள் பார்த்தால்,
கண்டவர்கள் மறப்ப தில்லை.
மண் மிதித்தம் மயில் நடந்தால்,
மண் கூடச் சிலிர்ப்ப துண்டு.

திங்கள் அவள் முகமளவு.
செழுங் கூந்தல் மழை யளவு.
தங்கம் அவள் நிறமளவு.
தயிர் அவளின் மொழியளவு.

கொங்கை இரு செம்பளவு.
கொடி இடையோர் பிடியளவு.
பொங்கும் அவள் அங்கம் ஒரு
பொல்லாத பாம்பளவு!

செல்லையன் தனது வயலில் துலா மிதிக்கின்றான். கண்மணியாளோ நாற்று நடுகின்றாள். அவர்களுக்கிடையில் நிகழும் உரையாடலைக் கீழுள்ள  வரிகள் புலப்படுத்தும்.  செல்லையனுக்கும் , கண்மணியாளுக்குமிடையில் நிலவும் காதலை விபரிக்கும் வரிகள் இவை.

"நாற்றுப் பிடி எடுத்து
நாற்று நட்டு நான் இருக்க,
நாற்றுப் பிடி பிடியில்
நழுவுவது தான் எதற்கு?"

"சேற்றில் சதிர் மிதித்துச்
சின்ன இடை நீ வளைக்க,
நேற்றுச் சிரித்தபடி
நின்றவள் நி னைப்பெனக்கு!"

"நேற்றுச் சிரித்துவிட்டு
நின்றவள் நி னைப்பிருந்தால்,
காற்றிற் பறந்து விடும்
கதை விடுதல் தான் எதற்கு?"

"காற்றில் பறந்து வரும்
காவியத்தோ டாவி செல்ல,
ஏற்றத் துலா நடந்தே
இளைக்கும் உடல் இங்கெனக்கு!"

"ஏற்றத் துலாவினிலே
ஏறி நிற்கும் மன்னவர்க்குச்
சேற்றிற் கிடக்கும் ஒரு
சிறிய மலர் ஏன்? எதற்கு?"

"சேற்றிற் கிடைக்கும் அத்
திரு மலரோ இல்லை யென்றால்,
சோற்றைப் பிற கெதற்கு?
சொல்லடி இப் போதெனக்கு!"

மேற்படி காவியத்தின் முடிவு துயரகரமானது. செல்லையன் ஊர் இளைஞர்களுடன் கூடி, கலட்டியான தரையை உழைப்பால் பண்படுத்தி, அங்கு அவ்வூரின் தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்களைக் குடி அமர்த்துகின்றான். தந்தையின் எதிர்ப்பையும் மீறி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கண்மணியாள்மீது காதல் கொண்டு, அவளையே திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்குகின்றான். இவ்விதமாகக் காதலர்கள் தம் மணவாழ்வைத் தொடங்கும் சமயத்தில் நீண்டகாலமாகக் கண்மணியாளின் அழகில் ஆசை வைத்திருந்த சந்திக்கடை முதலாளி, அடியாட்களை அனுப்பி, செல்லையனைக் கொலை செய்து, கண்மணியாளைக் கவர்ந்து சென்று, தன் ஆசைக்கு இணங்க வைக்க முயல்கின்றான். அப்பொழுது அங்கிருந்து தப்பிச் செல்லும் கண்மணியாளின் நிலையைக் கவிஞர் இவ்விதம் விபரிப்பார்:

ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
சேலையின் முன்றானை காற்றினிலே
செல்ல, இடை மின் நுடங்க,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
பால் முகத்தின் மேல் வியர்வை
பாய, விழி நீர் பெருக,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...

இவ்விதம் ஓடுமவள் முத்துமாரியம்மன் ஆலயத்தை அடைகின்றாள்.  அவளுக்கேற்பட்ட அநீதிக்கெதிராகக் கவிஞர் மாரியம்மனிடம் நீதி கேட்கின்றார்.

மாரியம்மன் வாசல் வழி
வந்தாளே கண்மணியாள்.
ஊரின் ஒரு புறத்தே
உறங்கினையோ மாரியம்மா?
நல்லான் ஓர் நல்லவளை
நாடுவது நாத்திகமோ?
எல்லாரும் ஒத்த குலம்
என்று சொன்னால் ஏற்காதோ?

ஏழை இருக்க நிலம்
ஈதலும் ஓர் ஏமாற்றோ?
வேள்வி மறுப்பதுவும்
வேண்டாத வெஞ் செயலோ?
பாழை விளைத்திடுதல்
பாதகமோ, பேசடியே!
கூடி உழைத்தல்
கொடுமை என்றோ கூறுகிறாய்?

ஏடி, முத்து மாரியம்மா,
எடுத்தொரு சொல் சொல்லடியோ!
'மெல்லியலார்' வாழ
விடாயோ பெருமாட்டி?
சொல்லடியே என் தாயே,
சுறுக்காகச் சொல்லடியோ!
புல் லிதழே பிய்ந்து
புயற் காற்றிற் போனது போல்-

ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...

ஓடும் கண்மணியாள் தனது கணவனின் கொலையுண்ட உடலைக் காண்கின்றாள்:

காதலனைக் கண்டு கொண் டாளே!
முலை
மீ த றைந்தாள்; நிலம் மீ து ருண்டாள்.
சிறு
மாது கண் செந் நீர் வழிந் தாளே!
ஒரு
சேதி, கீழ்ப் புற வானில் ஞாயிறு
நீதி காண எழுந்ததே!
இருள்
சாதி போலே போய் ஒ ழிந்ததே!
"ஒளி
வாழ்க!" என்றும், "இருள் வீழ்க!" என்றும்,
கிளை
மீது சேவல் கூவு கின்றதே!

இவ்விதமாகச் செல்லும் மெற்படி குறுங்காவியம் பின்வருமாறு முடியும்:

ஒத்துழைத்தால், ஒன்று பட்டால்,
உயர்வு பல காட்டி நின்றால்,
ஒத்தவர் தாம் யாரும் என்றே
ஒருத்தியின் மேல் அன்பு வைத்தால்,
பித்தரின் கைக் கோடரி போய்ப்
பிளந் தெறிய, நல்லவர்கள்
செத்திடத் தான் வேண்டுவதோ?
செக முடையோர், செப்புவிரே!

இலங்கையிலிருந்து வெளிவந்த தமிழ்க் காப்பியங்களில் மஹாகவியின் 'கண்மணியாள் காதை'க்குமோரிடமுண்டு. இக்காவியத்தை முழுமையாகப்படிக்க விரும்பினால் 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு: http://noolaham.net/project/01/44/44.htm

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R