எழுத்தாளர் நாகூர் ரூமி[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த சிறுகதைகள் சில ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அவ்வப்போது பதிவுகள் இதழில் வெளியான படைப்புகள் இவ்விதம் மீள்பிரசுரம் செய்யப்படும். - பதிவுகள்]  மூன்றாவது நாளாக சிவநேசன் வீட்டுக்கு தூரமாகிப் போயிருந்தான். முதல் நாள் நடந்தது இன்னும் பிசுபிசுவென மனம் பூரா ஒட்டிக்கொண்டிருந்தது. ஆபீஸ¤க்குக் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். கொடியில் வெறுப்போடு அதற்கு முதல் நாள் கழட்டி எறியப்பட்ட குழாயை எடுத்து, லுங்கியைத் தூக்கி தன் வலது காலை அதன் வலது காலுக்குள் செலுத்த முயன்று கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. அடி வயிற்றில் திடீரென்று ஒரு இடி.  ஒன்றும் புரியவில்லை. அது அடிவயிறென்றே முதலில் அவன் நினைக்கவில்லை. வலது பக்க இடுப்புப் பகுதியில் வலிப்பதாகத்தான் நினைத்தான்.

 "அம்மா" என்று அவனையறியாமல் கீழே உட்கார்ந்துவிட்டான். அப்பென் டிசைடிஸாக இருக்குமோ? உள்ளேயே வெடித்துவிட்டதோ? ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ வெடித்துச் சிதறிய உணர்வுதான் இருந்தது. இதுவரை அப்படிப்பட்ட ஒரு வலி அவனுக்கு வந்ததேயில்லை. வேற்று கிரகத்து வேதனயாகத் தெரிந்தது அது.

அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு குழாயை பாதி மாட்டிய காலுடன் தரையில் உட்கார்ந்து விட்டான்.

அவன் போட்ட 'அம்மா' ரொம்ப புதுசாகவும் சற்று ராட்சசத்தனமாகவும் இருந்ததை உள்ளுணர்வால் உணர்ந்து கொண்ட பார்வதி

சமையல் கட்டிலிருந்து ஓடோடி வந்தாள்.

"என்னங்க? என்னாச்சு?" பதறினாள். எப்போதும் போல. அப்படி தரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவன் உட்கார்ந்து அவளும் பார்த்ததில்லை. கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள்.

"சனியனே என்னன்னு தெரியலடி. நீ வேறெ உயிரெ வாங்காதெ" அவன் வழக்கம்போல பதில் சொன்னான். வயிற்றுப் பகுதியைப் பிடித்துக்கொண்டே. அப்போதுதான் அவள் கவனித்தாள். 

அடிவயிற்றுப் பகுதியில் 'அந்த' இடத்தில் லுங்கி பூராவும் ரத்தக்கறையாக இருந்தது.

எய்ட்ஸ் வந்த புள்ளிராஜாவாக தன் கணவன் மாறிவிட்டானா என்ற சந்தேகத்துடன், "என்னங்க, இது என்னங்க?" என்று அவன் கவனத்தை அந்தப்பகுதிக்குத் திருப்பினாள்.

"எங்கெயாவது அடி பட்டுச்சா?"

அப்போதுதான் அவனும் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

"சனியனெ, தெரியலெ. நீ வேறெ. அடிபட்டுச்சா கிடிபட்டுச்சான்னு. அதெல்லாம் ஒன்னுமில்ல. இது என்னன்னு பாரு"

அவள் அவனை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று பார்த்தாள்.

அதுதான். 

வெள்ளை வெள்ளையாக, திப்பி திப்பியாக, ரத்தக் கட்டிகளுடன் இருந்தது. உறுதியாகிவிட்டது. இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. வியப்பும் மௌனமும் இருவர் கண்களிலும் முகத்திலும் வந்து குடியேறிக்கொண்டன. சிவநேசனுக்கு வியர்த்துக் கொட்டியது.

ஆள்மாறாட்டம் மாதிரி பால் மாறாட்டமா? பம்பாய்க்குப் போகாமல், ஊசி ஏதும் போடாமல், அறுவை ஏதும் செய்யாமல் என்ன இது? இது உண்மைதானா என்று சந்தேகமாக இருந்தது. இது சாத்தியமா?! பரமஹம்சரைத்தான் கேட்க வேண்டும். அவரும் இப்போது இல்லை. ஒரே குருதியாகவும் குழப்பமாகவும் குத்தலாகவும் இருந்தது.

பார்வதி அறையைச் சாத்தி வைத்தாள். பிள்ளைகள் பார்க்காதவாறு செய்தாள். என்றுமில்லாமல் திடீரென்று அப்பா ஆபீஸ¤க்குப் போகாமல் 'உட்கார்ந்து'விட்டதன் ரகசியம் புரியாமல் வளர்ந்த பிள்ளைகள் குழம்பினர்.

"மெடிகல் லீவு சொல்லிடவாங்க?" மெதுவாகக் கேட்டாள்.

"என்ன எழவு லீவாவது சந்தானத்துக்கு ·போன் பண்ணி சொல்லிடு"

தற்காலிகமாக ஒரு துணியைக் கொடுத்து வைக்கச் சொல்லியிருந்தாள். பாட்டி வைத்தியம். அவனும் வேறுவழியின்றி அவள் தொலைபேசச் சென்ற இடைவெளியில் அதை வைத்துக்கொண்டான். அவனுக்கே வெட்கமாக இருந்தது. சனியன், இதை வைத்துக்கொண்டு எப்படி வேலை செய்ய முடியும்? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. பார்வதி வந்து பார்த்துவிட்டு ஒழுங்காக வைத்துவிட்டாள்.

ரொம்ப களைப்பாக வந்தது. கால்களெல்லாம் வலியெடுத்தன. யாரோ அடித்துப் போட்டமாதிரி இருந்தது. அனிச்சையாக தன் கால்களைத் தானே பிடித்து விட்டுக்கொண்டான். மஸாஜ் செய்வது மாதிரி. அப்போது அவனுக்கு பார்வதியின் நினைவு வந்தது. அவளும் இப்படித்தான் அந்த ஏழு நாட்களும் செய்து கொண்டிருப்பாள்.

"சனியனே எப்பப்பாரு ஒரே மஸாஜ்தானா? ஊர் ஒலஹத்துல யாருக்கும் வர்றதில்லையா? போய் காப்பியெப் போடு" 

பார்வதி ஒன்றும் சொல்வதில்லை.

திடீரென்று மறுபடியும் இடி இடித்தது. 

"அம்மா" என்று மறுபடியும் வயிற்றைப் பிடித்துக்கொண்டான். படுக்கையில் புரண்டான். முடியவில்லை. வலி உயிர் போய்விடும் போலிருந்தது. பார்வதி மறுபடி வந்தபோதும் அவன் புரண்டு கொண்டிருந்தான். ஆனால் அவள் முன்னெச்சரிக்கையாக மாத்திரைகள்கொண்டுவந்திருந்தாள்.

"அம்மா வலிக்கிதே" மறுபடி கத்தினான். விட்டு விட்டு வலித்தது.

"இதெப் போட்டுக்குங்க. கொஞ்ச நேரத்துல வலி கொறையும்" என்று சொல்லி ஒரு அனுபவமிக்க கைனகாலஜிஸ்ட்டின் தோரணையில் ஒரு காப்ஸ¥லையும் தண்ணீர் டம்ளரையும் கொடுத்தாள்.

ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான். அந்த நாட்களில் பார்வதியின் வேதனையைக் குறைப்பதற்காக டாக்டர் வசந்தா 'ப்ரிஸ்க்ரைப்' பண்ணிய ஸ்பாஸ்மோ ப்ராக்ஸிவான் காப்ஸ்யூல்தான். சிவப்பு காப்ஸ்யூல். அதுவும் சிவப்பாகத்தானா இருக்க வேண்டும்? ஒன்றும் சொல்லாமல் போட்டுக் கொண்டான். எத்தனையோ முறை அவள் சொல்லிவிட்டும் அவன் வாங்க மறந்துபோகும் காப்ஸ்யூல்.

மறுநாளும் ஆபீஸ¤க்குப் போகமுடியவில்லை. வேதனை அதிகரித்திருந்தது. ரத்தப் போக்கும் அதிகமாக இருந்தது. அதோடு சில நிமிஷங்கள் இருந்தது வலி இப்போது சில மணி நேரங்கள் என மாறிவிட்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் தான் பார்வதியாகவும் பார்வதி மீசையுடன் கூடிய தானாகவும் மாறப்போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஒருவகையான ஆச்சரியமும் எதிர்பார்ப்பும்கூட அவனிடம் வளர ஆரம்பித்தது.

மூன்றாவது நாள் அவனுக்கு ஓரளவு பழகிப் போயிருந்தது. அந்த மாத்திரை வேலை செய்யத்தான் செய்தது. வலி குறைந்த மாதிரி இருந்தது. ஐந்தாம் நாள்தான் ரத்தப்போக்கு குறைந்தது இடியுடன் கூடிய மழை விட்டு தூரல் ஆரம்பித்திருந்தது.

அடிக்கடி யாருமில்லாதபோது லுங்கியை உயர்த்திப் பார்த்துக்கொண்டான். எல்லாம் எப்போதும்போல சரியாகத்தான் இருந்தது.

மழையையும் அடிவயிற்று இடியையும் தவிர. அது ஒன்றுதான் புதுசு. அவனுக்கு ஆச்சரியம் கூடியது. சரி என்னதான் ஆகிறது பார்ப்போமே என்று ஆறாம் நாள் குளிர் விட்டுப் போனது.

இதில் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. இது தொடருமா?  அப்படித் தொடர்ந்தால் அதன் விளைவுகளைப் பற்றிக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. எப்படி இதைத்தீர்ப்பது? டாக்டரிடம் காண்பிப்பதா? அதன் பிறகு தொலைக்காட்சிகள், தினசரிகள், வாராந்தரிகளில் ·போட்டோவுடன் கட்டுரை வரும். இந்தியாடுடே தமிழின் அட்டைப்படத்தை அலங்கரிக்க வேண்டிவரும். "ஒன்பதாகிப்போன உலகின் எட்டாவது அதிசயம்" என்று தலைப்பு போடுவார்கள். அதன் பிறகு நிலைமை என்னவாகும்?

எப்படி ஆபீஸ் போவது? ஆபீஸை விடு. எப்படி வெளியில் போவது? எப்படி குழந்தைகளை சந்திப்பது தினமும்? சொந்தக்காரர்களை? நண்பர்களை?

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்றாகத்தான் இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வாழ்க்கையைத் தொடர முடியாது என்பது புரிந்தது. ஒரு வாரம் கழித்தும் மழை தொடர்ந்தால் அல்லது அடுத்த மாதமும் இதே நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்து யோசித்துப் பார்த்தான். தற்கொலை செய்துகொள்வதுதான் வழி என்பதாகத் தோன்றியது.

"என்ன சனியன் இது?" என்று தன்மீதே ஒரு வெறுப்பு தோன்றியது சிவநேசனுக்கு. அந்த 'சனியன்' அவனோடு கூடப்பிறந்த செல்லச் சனியன். அவனை எப்போதுமே அது விட்டுப்பிரிவதில்லை. 

எல்லாக் கேள்விகளையும் அழிப்பதாக எட்டாவது நாள் இருந்தது. மழை சுத்தமாக நின்று நிலம் குளிர்ந்து போனது. குளித்துவிட்டு அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன்னையே பரிசோதித்துப் பார்த்துக் கொண்டான். மறுபடியும் சுத்தமான ஆண்பிள்ளையாகிவிட்டதாகத்தான் தோன்றியது. 'அந்த ஏழு நாட்க'ளுக்கான எந்த அடையாளமும் இல்லை. சந்தோஷமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. வழக்கம் போல ஆபீஸ¤க்குக் கிளம்பினான். வருவது வரட்டும். ஆனால் தொடர்ந்து வந்த நாட்கள் அவன் பயம் தேவையற்றது என்பதை அவனுக்குப் புரியவைத்தது.

பார்வதி அவனுக்குக் காபி கொடுக்கும்போதுதான் கவனித்தான்.

"ஒடம்பு சரியில்லாயா பாரா?"

பார்வதியின் புருவங்கள் அகன்று மேல் நோக்கி வளைந்தன. அவன் 'பாரா'ன்னு அவளை அழைத்து எத்தனை வருஷங்களாகிவிட்டது! கல்யாணமான புதிதில் அழைத்தது! மறுபடியும் அதே கரிசனம், அதே தொனியுடன் பாரா!

"என்ன பாரா, பதிலையே காணோம்?"

"ஆமாங்க. இன்னிக்கிதான்..." சந்தோஷத்தால் அவளால் தொடர்ந்து சொல்லி முடிக்கக்கூட முடியவில்லை.

"ரெஸ்ட் எடுத்துக்க. ஒன்னும் சமைக்க வேணாம். நா வரும்போது ஒனக்கு ஸ்பாஸ்மோ வாங்கி வந்துர்றேன்"

அவள் கன்னத்தை தடவிவிட்டு கெஞ்சுவது போலச் சொல்லிவிட்டுப் போனான். 

நாகூர் ரூமி:
எழுத்தாளர் நாகூர் ரூமி1980களிலிருந்து எழுதிவரும் நாகூர் ரூமி தமிழ் இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவர்களிலொருவர். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை வாய்ந்த இவர் ஆங்கிலக் கவி மில்டனின்  'இழந்த சொர்க்கம்' மற்றும் கம்பனின் 'இராமாயணம்' பற்றிய ஆய்வுகளுக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.  தற்போது ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்து வரும் இவர் தமிழிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என பல படைப்புகளை மொழி பெயர்த்திருக்கின்றார். இதுவரையில் இவரது பத்து நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது படைப்புகள் பல கணையாழி, சுபமங்களா, புதிய பார்வை, மணிவிளக்கு, மணிச்சுடர், குமுதம், குங்குமம், முஸ்லீம் முரசு எனப் பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 'நதியின் கால்கள்' (கவிதைகள்), 'குட்டியாப்பா' (கதைகள்), 'கனவுகளின் விளக்கம்' (சிக்மண்ட் ·ப்ராய்ட், தமிழாக்கம்) போன்ற நூல்கள் வெளிவந்துள்ளன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் பெப்ருவரி 2004; இதழ் 50


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R